Friday, September 20, 2019

ஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள்- பாண்டிச்சேரி சித்தர் சமாதிகள்.

புதுவை சித்தர்கள் வரிசையில்  சில சித்தர்களை பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இந்தவாரம் நாம பார்க்கப்போறது ஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள். பெரும்பாலும் சித்தர்கள் அவதரிக்கும்போதே அவர்களுடைய பாதைகளும், பயணங்களும் அந்த ஆதிபரம்பொருளால் தீர்மானிக்கப்பட்டவை. இதேப்போல்தான் சாதா மனிதர்களையாகிய நம் வாழ்க்கையையும் எப்படி வாழ்ந்து இறைவனை அடையவேண்டும் என்று கர்மவினை தீர்மானித்தாலும், உலகமாயையில் சிக்கிக்கொள்ளும் நம்மால் அறியமுடியாமல் போய்விடும். ஆனா, சித்தர்களெல்லாம் தங்கள் சித்தமெல்லாம் சிவனை மட்டுமே நினைப்பவர்கள். அவனது அன்பு வடிவில் திளைப்பவர்கள். அதனால் அவர்களுக்கு முக்காலமும் உணரமுடியும்அன்னையின்மீது பக்திகொண்ட நாராயணன் என்ற பக்தரின் கனவில் அன்னை பராசக்தி தோன்றி எனக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டுவாஉனக்கு வழிக்காட்ட குருவாய் சித்தன் ஒருவன் உன்னை தேடிவருவான் என்று கூறி மறைந்தாள். அவரும் அன்னைக்கு கோவில் எழுப்பினார். அன்னை அவரின் கனவில் சொன்னதுப்போல் சித்தர் ஒருவர் அந்த கோவிலை தேடிவந்தார்அவர்  அக்கோவிலுக்கு வந்து சேர்ந்த அன்றுமுதல் வைத்திக்குப்பம் என்னும் அந்த இடமே சித்தரின் ஆசியில் மக்கள் சுபீட்சமுடன் வாழ்ந்தனர்.
சரி, யார் இந்த அக்கா சுவாமிகள் எனப் பார்க்கலாமா?! இவரது பிறந்த வருடம் சரியாக தெரியவில்லை. ஆனா, 1800 களின் தொடக்கத்தில் இருந்து இவர்  அறியப்படுகிறார். இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வார்கோவிடை  என்னும் நகரத்தில் செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் மாசிலாமணி என்னும் கண்ணையன். தன்னுடைய சிறுவயதில் பணம், செல்வச்செழிப்பு இருந்தபோதிலும் சுகபோக வாழ்க்கைமீது நாட்டம் கொள்ளாமல் சதா சிவனை நினைத்தே வழிபாடு செய்வாராம். சிறு வயதில் தங்களுடைய மாடுகளை மேய்க்க செல்வது இவரது வழக்கம். அப்படி செல்லும்போது,  மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, தானே களிமண்ணால் பிள்ளையார் செய்து, காட்டில் கிடைக்கும் பூக்களால் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்து, பின்னர் கிடைக்கும் கனிகளைக்கொண்டு பூஜை செய்து மகிழ்வார். அப்படி பிள்ளையாரை வணங்கி வந்த ஒருநாளில், இவர் வணங்கி வரும் அதே பிள்ளையாரை ஒரு பெண் வணங்கினாள். கண்ணையனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் கையால் செய்து, தான் வணங்கி வரும் பிள்ளையாரை ஒரு பெண்ணும் வணங்குவதைக் கண்டு மகிழ்ச்சி பொங்க அந்த பெண்ணின் கையை பிடித்து பக்தியின் பரிசாக முத்தமிட்டார். அப்பெண் கோபங்கொண்டு உன் அக்கா வயதிருக்கும் என் கையை பிடித்து முத்தம் கொடுக்கிறாயா!? “ எனக்கோபித்து கடுமையாக பேசி அவ்விடம் விட்டு சென்றாள். அப்பெண் கோபமாய் பேசியதை சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதையே நினைத்து நினைத்து மருகினார். பெண் இன்பத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதற்காக வேண்டி எல்லா பெண்களையும் தன் சகோதரிகளாக கருதினார். எந்த பெண்ணைக் கண்டாலும் அக்கா” “அக்காஎன்றே கூப்பிடுவார். அதனால் எல்லோரும் இவரை "அக்கா சாமியார்என்றும்  பின்னாளில் அக்கா பரதேசி சாமியார் என்றும் அக்கா சித்தர் என்றும் அழைத்தனர். கடைசியில் குரு அக்கா சுவாமிகள்என்ற பெயரே கண்ணையனுக்கு நிலைத்து விட்டது.
ஆன்மீகத்தில் இருந்த நாட்டம் காரணமாக யோகநிலையை அடைய, ஒரு யோகியிடம் சென்று யோகமார்க்கங்களை பயின்றார். அப்பொழுது தன் குருவுக்கு ஏற்பட்ட தீவினையை அகற்றி தன் குருவுக்கே போதனை செய்து அவருக்கும் மிஞ்சி விளயங்கியதால், அவருடைய குரு இவரை சற்குருநாதர் என அழைத்தார். இறைவன் அருளால் நாம் ஒருபடி உயர்ந்தால் போதும். நம்முடைய பெருமையை உணரவைக்க இறைவன் பல சோதனைகளை நமக்கு வைப்பான். ஆனால் முடிவில் நம்மை காப்பாற்றி தன்னுள் அழைத்துக்கொள்வான். அதேப்போல் ஒரு சோதனை இவருக்கும் வந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பெரும் செல்வந்தர் சுவாமிகளின் பெருமையை நம்பாமல், கேலி செய்தார். சுவாமிகள் என்ன, அபிஷேகம் செய்து கொள்ளுமா!? ” என்று ஏளனம் செய்தார். சுவாமிகளும் சிரித்துக்கொண்டே ஓ தாராளமாக செய்யலாமேஎன்று பதிலளித்தார். சுவாமிகளை அமரச் செய்து, வேண்டுமென்றே அவர்மேல், சுடச்சுட அன்னத்தை வடித்துக் கொட்டினார்கள். சுவாமிகள் அமைதியாக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அன்னாபிஷேகம் முடிந்தது. சிறிது நேரம் கழித்து சாதத்தின் சூடு ஆறியதும், “சுவாமிகள் உடல் வெந்து சுடுகாயங்களுடன் பரலோகம் சென்றிருப்பார் என கேலி பேசியவாறு. அவர் மேலிருந்த சாதத்தை விலக்கிப் பார்த்தனர். சுவாமிகள் ஆடாமல், அசையாமல் யோகத்தில் இருந்ததைப் பார்த்து அவரின் சக்தியை உணர்ந்தனர். தங்கள் தவற்றை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் அன்னாபிஷேகம் செய்தவரின் பார்வை பறிபோய் விட்டது.
மீன்,மாமிசங்களை தன கையாலே தொடாத சற்குருநாதரிடம்ஒருநாள் அவரின் மேலதிகாரி மீனைவாங்கி துண்டுத்துண்டாக வெட்டி, தனது வீட்டில் கொண்டுபோய் கொடுத்துவர  சொன்னார். சற்குருநாதர் மனம் வருந்தி அதை, சாப்பிடுகின்ற ஒரு பெரியம்மாள் வீட்டில் கொடுத்து விட்டு வந்து விட்டார். அன்றிரவு, அம்மேலதிகாரி தன்னுடைய வீட்டிற்கு மீன் வராததைக் கண்டு கோபங்கொண்டு, சற்குருநாதரை தேடி அவர் இருப்பிடம் சென்றார். அங்கு சற்குருநாதர் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, மறுநாள் அவரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்து, வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் அதிகாரி சற்குருநாதரிடம் மீனைப் பற்றி விசாரித்தார். மீன் பத்திரமாக இருப்பதாகக் கூறி அப்பெரியம்மாளிடமிருந்து வெட்டிவைத்த துண்டு துண்டான மீனை வாங்கிக் கொண்டு வந்து காட்டினார். அதைக் கண்ட அதிகாரிக்கு கோபம் அதிகமானது. இரவு மீனை சாப்பிடவிடாமல் கெடுத்துவிட்டானே என்று கொதித்தார். மேலதிகாரியின் கையிலிருந்த செத்த மீன்கள் உயிர்பெற்று துள்ளிக் குதித்தன. அதைக்கண்ட மேலதிகாரி அதிர்ச்சியடைந்தார். உடனே சுவாமிகள், தம்முடைய உடுப்பைக் கழற்றி வைத்து விட்டு சந்நியாசிகளுக்கே உரித்தான கோமணத்தை (கவுபீணம்) அணிந்துக்கொண்டு, நள்ளிரவில் மேலதிகாரி வீட்டில் நடந்தவைகள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அரசாங்கத்திடம் சொல்லி, .“ நாளை சாகும் பிணங்கள் இன்று செத்த பிணத்தை தின்னும் மனிதரிடம் சேவகம் செய்ய விரும்பேன் என்று கூறிவிட்டு மறைநிரந்த வேதபுரி என்று அழைக்கப்பட்ட புதுவையை நோக்கி புறப்பட்டார்.
புதுவைக்கு வந்த சுவாமிகள் வாழைக்குளம் என்னும் பகுதியில் தங்கியிருந்து சிவத்தியானம் செய்து வந்தார். ஆத்ம சாதனையில் வெற்றியும் கண்டார். அப்பொழுது புதுவையில் ஆத்ம ஞானிகளின் பலர் இருந்து சாதனைகள்  பல செய்துவந்தனர். மண்ணை உருட்டிக்கொண்டே ஒரு சித்தர்  ஆத்ம சாதனை செய்தார். அவர் பெயர் மண்ணுருட்டி சுவாமிகள். அவரைபற்றியும் அடுத்தப்பதிவுகளில் பார்க்கலாம். காஞ்சிபுரத்தில் ஒரு சித்தர் இரு கைகளையும் மேலே தூக்கி ஆட்டிக்கொண்டே ஆத்ம சாதனை செய்து வந்தார். சற்குருநாதரோ  பனை ஓலையை மிக மெல்லியதாக கிழித்துக்கொண்டே ஆத்ம சாதனை செய்து வந்தார். சுவாமிகளுக்கு சாப்பாடு கொடுக்க பல அன்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.  யாராவது தங்கள் வீட்டில் சுவாமிகள் சாப்பிட வேண்டுமென்று விண்ணப்பித்தால், ஒரு ரூபாய் கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் சாப்பிடுவார். அந்த ஒரு ரூபாயை கொண்டு வந்து  சோலைத்தாண்டவ குப்பத்தில் வசித்த ஒரு அச்சுக்கூடத்தார் வீட்டில் கொடுப்பார். இப்படியாக பல மாதங்கள் கொடுத்து வந்தார். திடீரென்று ஒருநாள், ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு இன்றோடு முன்பட்ட கடன் தீர்ந்து விட்டது என்று சொல்லி சென்றார். சுவாமிகள் தன் ஊழ்வினையை எப்படி அழிப்பது என்று அறிந்திருந்தார்
சுவாமிகள் புதுவையில் அற்புதம் செய்வதறிந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்பார்வை பறிப்போன அந்த செல்வந்தரும் புதுவைக்கு புறப்பட்டு வந்தார். ஒவ்வொரு நிமிடமும், தான் செய்த பெரும் பிழையை நினைத்து நினைத்து வருந்தினார். இப்படியே சிலகாலம் சென்றது. ஒருநாள், சுவாமிகள் திடீரென்று அதோ தெரியும் திருமுருகனைப் பார்’’ என்று குருடரிடம் சொன்னார். “எனக்குதான் பார்வையில்லையே எப்படிப் பார்ப்பதுஎன்றார் அந்த குருடர்.நன்றாகப் பார் தெரியும் எனச் சுவாமிகள் சொல்ல, சுவாமிகள் சொன்னபடியே, அவர் சொன்ன திசையில்   ஆழ்ந்து நோக்க கண் பார்வை வந்த முருகன் திருவுருவம் தெரிந்தது. ஆத்ம ஞானிகள் சத்தியப் பொருள். அவர்களை கெடுக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள் என்பது கண்கூடான உண்மை. அதற்கு உதாரணமாக  ஒருநாள், தாசிகள் இருவர் சுவாமிகளை எப்படியாவது தங்கள் வலையில் விழவைத்து விடவேண்டும் என்று எண்ணி அவரிடம் நயவஞ்சகமாக பேசி புதுவை, மாதாக்கோவில் வீதியிலுள்ள தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.வீட்டின் கடைசி பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று அவர்மேல் கை வைக்க முயன்றனர். சுவாமிகள், சிரித்துக்கொண்டே வேகமாக வெளியே வர வீட்டின் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுந்தது.வீடே நாசமாகியது.
சுவாமிகள் முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் உள்ள குதிரைகுளத்திற்கும் செங்கேனியம்மன் கோவிலுக்கும் இடையே தமிழ் ப்ரமோதூக ஆண்டு ஆனி மாதம், ஆங்கில வருடம் 1872  ஜூன் மாதம் ஜீவ  சமாதி அடைந்து பரம்பொருளோடு ஐக்கியமானார். இவர் எல்லோரையும் அக்கா அக்கா என்று அழைப்பதை பார்த்தவர்கள் இவரை அக்கா சாமியார் என்றும், அக்கா பரதேசி  அழைத்தனர். அந்த சமாதியின்மேல், லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவாலயம் எழுப்பபட்டுள்ளது. சுவாமிகளின் சிஷ்யரான குரு நாராயண பரதேசி சுவாமிகளின் சமாதியும் அத்திருகோவிலினுள் இருக்கிறது. அந்தக்கோவில் அமைந்துள்ள தெருவிற்கு குரு அக்கா மடத்து வீதி எனப்பெயர். சுவாமிகள், தன் கையினால் செய்து பூஜித்து வந்த விநாயகர் புதுவைகந்தன் தியேட்டர் (வணிக வளாகம்) அருகில், 45 அடி ரோடு திருப்பத்தில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அந்த விநாயகரை சாலை விநாயகர்என அழைக்கிறார்கள். மண் பிள்ளையார் சிறுகச் சிறுக வளர்ந்து வருவதாக வயதான பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அனைத்து குணமும் கொண்டவரே போற்றி
காலங்கள் மூன்றையும் வென்றவரே போற்றி
தீவினையவும் தீர்ப்பவரே போற்றி
வெற்றிகள் பலவும் தருபவரே போற்றி
எண் இரு செல்வங்கள் அளிப்பவரே போற்றி
அருட்குரு அக்கா ஸ்வாமிகளே போற்றி போற்றி
நின்றன் புகழினை போற்றுகின்றோம்

நித்தம் நித்தம் உன்னை வணங்குகின்றோம்
ஜீவ சமாதிக்கோவில் முகப்பு வாயிலில் மூன்று கலசங்களுடன் கூடியதாகவும், தெய்வ பரிவாரங்களும் வீற்றிருக்கும் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தினுள் விநாயகர் ஞானகணபதியாகவும், பழனியாண்டவர் தண்டத்தினை  கையில் வைத்தபடி ஆண்டிக்கோலத்திலும்நடராஜர் சமேத சிவகாமியம்மனுடனும் காட்சிதரும் சன்னதிகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. நவகிரகங்கள் சந்நிதியும் இங்கு உள்ளன. சுவாமிகள் இங்கே முக்கியமாக மனோன்மனி அம்மையை வழிபட்டுவந்தாராம். ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்தார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் பலருக்கு வைத்தியங்களும் செய்துவந்தாராம். சுவாமிகள் இங்கே வைத்தியம் செய்துவந்தால் இந்த இடம் ஆரம்பத்தில் வைத்தியகுப்பம் என்றுதான் அழைக்கப்பட்டதாம். பின்னர் மருவி வைத்திக்குப்பம் என மாறிவிட்டது. சுவாமிகள் முதன்முதலில் புதுவைக்கு வந்து தங்கின இடம் இப்பொழுது அரசுப்பள்ளிக்கூடமாகவே இருக்கிறது. அந்த பள்ளிக்கு பெயரே அக்கா சுவாமிகள் அரசு நடுநிலை பள்ளி என்றே அழைக்கப்படுகிறதாம். இந்த ஜீவசமாதியில் வந்து மனதை ஒருநிலைப்படுத்தி வணங்கிவந்தால் சித்தரின் அருள் கிடைத்து துன்பங்கள் எல்லாம் விலகும் என்பது இங்கு வந்து வணங்கி செல்பவர்களின் அனுபவமாக இருக்கிறது. மீண்டும் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
நன்றிடன் 
ராஜி 

7 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  புதிய தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்வாராஷ்யமோ,புதிய தகவலோ இல்லைங்கண்ணா.ஆன்மீக அன்பர்கள் அடிக்கடி செல்லும் சித்தர் சமாதிகள் இவை.நம் கண்ணில் இப்பொழுதுதான் பட்டு இருக்கிறது.சித்தரின் அருட்பார்வை இன்றுதான் நமக்கு கிடைத்து இருக்கிறது போலும்.

      Delete
  2. பல அற்புதங்கள் செய்த சித்தர் சுவாமி பற்றி அறிந்தோம் குருவை மிஞ்சிய சீடன்.
    எங்கள் நாட்டிலும் பல சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.பன்னிரு சித்தர்கள்" என்றே புத்தகம் வந்திருக்கிறது.

    எங்கள் ஊரிலும் அருளம்பல சுவாமிகள் என்ற சித்தர் முன்னர் வாழ்ந்து வந்திருக்கிறார் . அவரும் கடலின் மேல் நடந்து சென்றிருக்கிறார். இந்தியா வந்து பல வருடங்கள் தங்கி இருந்திருக்கிறார்.பாரதியார் போற்றிய யாழ்பாணத்து சுவாமிகள் இவர். இவரின் ஜீவ சமாதியும் பருத்தித்துறை வியாபாரிமூலையில் அமைந்துள்ளது. மேலே லிங்கம் அமைத்து சிறிய கோயில் அமைத்துள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க மாதேவி,நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.பலசித்தர்கள் நமக்கு அருகில் இருந்தாலும் நமக்கு தான் தெரியவில்லை.நிச்சயமாக இறைவன் அருளும் நேரமும் கிடைத்தால் யாழ்ப்பாணத்து சித்தர் ஜீவ சமாதிக்கு சென்று அதுவும் பதிவாக எழுதுவேன்.

      Delete
    2. வாருங்கள்.உங்கள் ஆர்வத்துக்கு மகிழ்கிறோம்.வரும்போது அறியத்தாருங்கள்.

      Delete
  3. எத்தனை எத்தனை சித்தர்கள்....

    மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நிறைய சித்தர்கள் ஜீவசமாதிகள் இருக்கின்றன அண்ணா.நமக்கே தெரியாது.உள்ளூரில் இருப்பவர்களிடம் கேட்டு சென்றால் 3 நாட்கள் அங்கே தங்கி இருந்து தரிசிக்கும் அளவு சித்தர் சமாதிகள் இருக்கின்றன.எனக்கு தெரிந்த அளவு தொடர்ந்து பதிவு செய்கிறேன்.பதிவரை தொடர்கின்றமைக்கு நன்றி அண்ணா.

      Delete