Sunday, September 15, 2019

எங்க வீட்டு தேவதைக்கு பிறந்த நாள்

உயிர்வலி கண்ட அந்த
ஐந்து மணிநேரப் போராட்டம்..
நெஞ்சுக்கூட்டுக்குள் யாரோ
கைவைத்து அழுத்தியது போன்ற ஒரு உணர்வு...

செத்துவிடலாம் எனத் தோன்றிய 
அவநம்பிக்கைக்கையின் இருளுக்கு
உன்முகம் பார்க்கப்போகும் துடிப்பு ஒன்றே
ஒளிக்கீற்று...

உன் அழுகைச்சத்தம் கேட்ட அந்த நொடி
பட்ட துன்பமெல்லாம் பறந்துப்போக
மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ...
என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்...

மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல
ரௌத்திரமும் பழகவேண்டுமென
கற்றுக்கொடுத்த ஆசான் நீ!! 
எனக்குள்ளிருந்த குழந்தைத்தனத்திலிருக்கும்
வைராக்கியத்தை உணர வைத்தவள்....

உலகம் புரியாமல் வளர்ந்த எனக்கு
உலகத்தின் கோரமுகத்தை காட்டிய முதல் ஆள் நீ...
அந்த கோரமுகத்திலிருந்து இன்று
என்னை மீட்பவளும் நீயே!

என் இரண்டாம் தாய் நீ....
அதனால்தானோ என்னமோ சித்தியாய்
சிலசமயம் என்னை இம்சிக்கிறாய்...
ஆழ்கடலாய் அமைதியாய் இருந்தாலும்...
உனக்கென லட்சியம் கொண்டவள்
உன் லட்சியம் நிறைவேற வாழ்த்துகள் மகளே!

இரண்டாவதும் பெண்ணாய் பிறந்ததால் அத்தனை உறவுகளும் விலகிச்செல்ல, அம்மா கலங்கி போய் எல்லாரும் செத்துடலாமா?!ன்னு கேட்க, அதுவரை அம்மாவை எதிர்த்து பேசாதவ, நீ வேணும்ன்னா செத்து போ. நான் வரமாட்டேன்... எனக்குதான் கைக்கொடுக்க நாதியில்ல. ஆனா, என் பெரிய மகளுக்கு  இவ இருக்கா. இவளுக்கு பெரியவள் இருக்கா, என் பிள்ளைகளை வளர்த்துக்க எனக்கு தெரியும்ன்னு சொல்லி வீம்பாய் நின்னேன். என் ஆசை இன்னிய வரைக்கும் நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு. பெரியவளும், சின்னவளும் அத்தனை நெருக்கம்.. என்னையும்கூட சின்னவள் விட்டுக்கொடுப்பா.. ஆனா, அவ அக்காவை விட்டுக்கொடுக்க மாட்டா..  என் அப்பா, அம்மா செல்லம் இவள்... எங்க சோகம் புரிஞ்சுதானோ என்னமோ! அப்பலாம் அழக்கூட மாட்டா. இப்பயும் அப்படிதான் அழவே அழாது. என் அம்மாவோட தைரியத்தை அப்படியே கொண்டிருக்கு... அன்னிக்கு ஹாஸ்பிட்டல்லயே விட்டு வந்த அத்தனை பேரும் இன்னிக்கு வீட்டுக்குள் வரும்போதே  அவப்பேரை சொல்லிக்கிட்டுதான் வர்றாங்க...
உடை விசயத்தில் அத்தனை நேர்த்தி.  எத்தனை செட் துணி எடுத்தாலும் மனசு நிறையாது அவளுக்கு.  வெளில கிளம்பும்போது அவதான் எனக்கு டச் அப் கேர்ள். போட்டோ எடுத்தா ஆயுசு குறையும்ன்னு சொல்லிச்சொல்லி வளர்த்ததால் இன்னிக்கும் எனக்கு கேமராமுன் நிக்க கூச்சம். ஆனா, இவ போன் முழுக்க குறைஞ்சது 2000 படங்கள் இருக்கு. செல்பி பிரியை. இப்படி செல்பி பைத்தியமா இருக்காதடின்னு சொன்னா, உன்னையப்போல பைத்தியமாதான் இருக்கக்கூடாது. செல்பி பைத்தியமா இருக்கலாம்ன்னு காலை வாரி விடும். 


என்னைவிட என் அப்பாமேல் அவளுக்கு பாசம் அதிகம்.  உறவுக்கரங்க உதவி கேட்கும்போது எதாவது கோவதீல் நான் செய்ய யோசித்தால் எனக்கு புத்திமஇ சொல்வா. யார்மீது வன்மம் கொள்ளாது. என்ன?! அவ கப்போர்டை சுத்தமா வச்சுக்க மாட்டா. எத்தனை மடிச்சு அடுக்கி வச்சாலும் கலைச்சு வைப்பா. மூளைக்காய்ச்சலின்போது செத்து பொழைச்சு வந்ததால, வாசிப்பதில் பிரச்சனை, நினைவாற்றலில் பிரச்சனைன்னு இருந்ததால ப்ளஸ்டூல மார்க் கம்மி... இதை சொல்லி எல்லாரும் மக்குன்னு சொன்னதால இன்னிக்கு கல்லூரில கிளாஸ் ஃபர்ஸ்ட்..  டாக்டராதான் ஆகமுடில... ஆனா, என் பேர் முன்னாடி டாக்டர்ன்னு போட்டே ஆகனும்ன்னு  பி.எச்.டி படிக்க இப்போதிலிருந்து தயாரிக்கிட்டு இருக்குறவ.  நான் எது சொன்னாலும் கேட்கமாட்டா. எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டைதான் போடுவா. அதுக்கு பெரியவ கேப்பா.. நீங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணா?! இல்ல மாமியார் மருமகளா?!ன்னு.. ஆனா, உடம்புக்கு முடியாதபோது பெரியவ என் துணைக்கு வரமாட்டா... சின்னவதான் ஓடோடி வருவா... தாத்தா பாட்டி செல்லம்,,, தம்பிக்கு புத்தி சொல்லன்னு எல்லாமே இவள்தான். ஆடுற மாட்டை ஆடி கறக்கனும்.. பாடுற மாட்டை பாடி கறக்கனும்ன்ற சொல்லுக்கு ஏத்தமாதிரி கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி காரியத்தை சாதிச்சுடுவா. இவ இல்லன்னா என் வீட்டு வண்டிச்சக்கரம் சுழலாது. என் அச்சாணியே இவள்தான்!!

வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும், பெற்று குன்றாத செல்வமும், மாறா சிரிப்போடும் பல்லாண்டு வாழ்க லட்டும்மா.....
முதல்முறையாக இந்த வருட பிறந்தநாளுக்கு எங்களையெல்லாம் பிரிஞ்சு ஹாச்டலில் இருக்கா. பெரியவளின் கல்யாண வேலைகள் இருப்பதால் அவளை நேரில் வாழ்த்தமுடியலை. வீடியோ காலில் வரும்போதெல்லாம் ஒரே அழுகாச்சி. எல்லாம் நல்லதுக்கே. கொண்ட லட்சியத்தினை அடைய சில கொண்டாட்டஙகளை விட்டுக்கொடுத்துதான் ஆகனும். சர்ப்ப்ரைஸ் கிப்டா கேக்கும், வாட்சும் ஆன்லைனில் புக் பண்ணியாச்சு. 

சின்னவளுக்கு சின்னதா ஒரு கிஃப்ட்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. நீங்களும் வாழ்த்துங்கள் வளரட்டும்...

நன்றியுடன்,
ராஜி.

10 comments:

 1. மருமகள் எல்லா நலனும் பெற்று வாழ எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. உங்கள் மகள் எல்லா நலனும் பெற்று சிறப்புடன் வாழ எங்களது வாழ்த்துகளும்.

  ReplyDelete
 3. எனக்கும் இரண்டும் பெண்தான். பெண் குழந்தைகள்தான் என்றைக்கும் பெற்றோர் மீது கடைசி வரை பாசத்துடன் இருப்பார்கள். அதிலும் கடைக்குட்டிகள் இன்னும் அதிகமாக பாசத்தை காட்டுவார்கள்.

  மகளுக்கு இனி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 5. படிக்க மறக்காதீர்கள்
  நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
  http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

  ReplyDelete
 6. மாமாவின் அன்பு என்றும் உண்டு...

  ReplyDelete
 7. உங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 8. மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவ விரும்பும் இலக்கை அடைய இறைவன் துணை நிற்பார்.

  ReplyDelete
 9. இனிய வாழ்துகள்.

  ReplyDelete
 10. கொண்ட லட்சியத்தினை அடைய சில கொண்டாட்டஙகளை விட்டுக்கொடுத்துதான் ஆகனும்....

  ம்ம்ம்

  பாப்பாவின் பிறந்த நாளுக்கும் ...அவங்க லட்சியம் வெற்றிய அடையவும் வாழ்த்துக்கள் ராஜி க்கா

  ReplyDelete