Wednesday, July 01, 2020

பாரீஸ் கார்னர் கதை தெரியுமா?! - மௌன சாட்சிகள்

அடிக்கடி கேள்விப்பட்டு, பார்த்து பழகிய நமக்கு தெரிந்த இடங்கள்தான், ஆனா அந்த ஊரை பற்றி எதுவுமே நமக்கு தெரியாது. ஒவ்வொரு ஊரின் பின்னும் ஒரு கதை இருக்கும். வீரம், காதல், தியாகம், பழி உணர்ச்சின்னு எதாவது ஒரு உணர்வே  அந்த கதையின் ஆதாரமாய் இருக்கும். அந்த காதைகளை தன்னுள் கொண்டு  கட்டிடங்கள், கோவில்கள், அரண்மனைகள் அவற்றின் மௌன சாட்சிகளாய் நம் முன்னே இருந்தாலும், இந்த அவசர உலகில் நமக்கு அதெல்லாம் தெரிஞ்சுக்கக்கூட நேரமில்லாம, விருப்பமில்லாம  எதை எதையோத் தேடி, ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு ஓடியும் கிடைக்கவேண்டிய நிம்மதி நம் காலடியில் மிதிபட்டுக் கிடப்பதைக்கூட அறியாமல் இருக்கும் அற்ப மானிடராய் இருக்கிறோம்.  இந்த அவசர காலக்கட்டங்களில் அனைவரும் தெரிந்துக் கொள்ளமுடியாத பல  கதைகளைத் தன்னுள் கொண்டிருக்கும் இடங்களை மௌன சாட்சிகள் மூலம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்னைக்கு நாமப் பார்க்கப் போறது பழைய மெட்ராஸ் பிரெசிடென்சில இருந்த சில முக்கியமான இடங்களை....

சென்னை இல்லன்னா தமிழகம் இல்லை. ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், பழமையான வழிபாட்டு தலங்கள், குடிசைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், அநாகரீகத்தின் புகலிடம், புயல், வெள்ளம், சமீபத்தைய கொரோனா... என  காலச்சக்கரத்துல சிக்கி,  சின்னாபின்னமாகி  இருக்கும் இன்றைய சென்னை ஒருகாலத்தில் எப்படி இருந்துச்சுன்னு பார்க்கலாம்.. வாங்க!

மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்டது நம் சென்னை.  அதன் நானூறு வருட வரலாற்றைப் பார்த்தோம்னா, நமக்கு நிறைய விஷயங்கள் புரியாத புதிராகவே இருக்கும். பழைய சென்னைப்பட்டிணத்தைப் பார்த்தோம்னா அதற்கு அதிக பெருமைகள் இருக்கு. ஒரு சாதாரண மீன்பிடிக் கிராமமாகத் தோன்றி இன்று இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக விளங்கும் சென்னை நகர் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதிதான் இப்போது சென்னை என்று அழைக்கப்படும் 'மெட்ராஸ்' உருவானது. சென்னையில், ஐரோப்பியர்கள் வந்து குடியேறத் தொடங்கிய பின்னரே அது நகரமாக வளர ஆரம்பித்தது.  

இங்கு, முதலில் குடியேறியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இவர்கள் 1552-ம் ஆண்டு சென்னையின் ஒரு பகுதியாகவும், கடற்கரை பகுதியாகவும் இருந்த சாந்தோமில் குடியேறி வணிகம் செஞ்சு வந்தாங்க. தற்போது உயர்நீதிமன்றக் கட்டடம் இருக்கும் இடத்தில்தான் சென்னக்கேசவர் கோயில் இருந்தது. அந்த கோயிலைச் சுற்றி ஒரு குப்பம் இருந்தது. அதற்கு 'சென்ன கேசவப்புரம்'ன்னு பேரு.

1639 ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஃபிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது. சென்னப்பட்டினத்துக்கு தெற்கே உள்ள ஊர் 'மதராசு' என்று அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஆங்கிலேயர்கள் ஒன்று சேர்த்து 'மெட்ராஸ்' என்றும் தமிழர்கள் 'சென்னப்பட்டினம்' என்றும் அழைத்தனர். மக்களின் கலாச்சாரமாகட்டும், பழக்கவழக்கங்களாகட்டும் நிறைய மாறுதல்களை சந்தித்து இன்று சென்னையாய் மாறி இருக்கு.

சென்னை வரும்போது சில பஸ்கள் பாரீஸ் என் பெயர் பலகை தாங்கி ஓடும். அப்பக்கூட நினைச்சுப் பார்த்தது உண்டு ஏதோ பாரீஸ் நாட்டுக்காரங்க அங்கே வசிச்சிருக்காங்கப்போலன்னு... அதான் பாரீஸ் கார்னர்ன்னு சொல்றாங்கன்னு நினைச்சுக்குவேன். அந்தக் கதையெல்லாம் அப்போ.  இப்பதான் எல்லா விசயங்களையும் ஆராய்ந்து பார்க்கிற பதிவர் ஆகிட்டேன் இல்ல ..அதனால ஏன் இந்த இடத்துக்கு இந்தப் பெயர் வந்ததுன்னு அலசி ஆராய்ஞ்சதால வந்ததுதான் இன்றைய மௌன சாட்சிகள் பதிவு. வாங்க பதிவுக்குள் போகலாம்....,

சென்னை நகரத்தில மிகவும் பிரபலமான ஜங்ஷன்களில் ஒன்றுதான் இந்த பாரீஸ் கார்னர். இது ஒரு வெளிநாட்டின் பெயராக தோன்றினாலும் மெட்ராஸ், சென்னையாக மாறியபோதுக்கூட இதன் பேரு மாறலை. இன்னுமும் பாரீஸ் கார்னர்தான். இது 1895 ம் ஆண்டுகளில் ட்ராம் வண்டிகள் ஓடத்தொடங்கிய காலங்களிலையே மிகவும் பிரதான ஜங்ஷனாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ்காரங்க இந்தியாவை கைப்பற்றி அரசாட்சி புரிந்தபோது இங்கிலாந்துவேல்ஸ்அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துலிருந்து நிறைய பேர் வியாபாரத்திற்காகவும், பிழைப்பு தேடியும் இந்தியாவிற்கு வந்தாங்க. அப்படி வந்தவர்களில் ஒருவர்தான்  தாமஸ் பாரி (1768-1824) இவர் ஒரு வெல்ஷ் வணிகர். இந்தியாவின் செல்வச் செழிப்பை அறிந்து இங்கே வியாபாரம் செய்வதற்காக 1780ல் சென்னைக்கு வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், 17 ஜூலை 1788லதான் தாமஸ் பாரி அவங்க நாட்டு பொருட்களை வியாபாரம் செய்யும் தொழில்  மற்றும் வங்கியையும் தொடங்கினார்.

பாரி ஒரு பெரியத் தோட்டத்தில்  பல்லடியன் பாணி கட்டிட அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தன்னுடையத் தங்கும் இடத்தையும்  அலுவலகத்தையும் தொடங்கினார். இதற்குப் பெயர் பாரி லேன் என பெயரிடப்பட்டது.

இதில் தரைத்தளங்களில் குடோனும், முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகளில் அலுவலகங்களும் இயங்கினதாம். காலப்போக்கில் பல அடுக்கு மாடிகள் கட்டப்பட்டதாம்.  பாரி அந்த சமயதில் எல்லா வித வாணிகங்களுக்கும் உரிமை பெற்று இருந்தாராம். ஏன்னா அந்த சமயம் மதராஸ பிரெசிடென்சில 11 எழுத்தாளர்களும், 87 துருப்புகளும், 110 கடற்படை வீரர்களும், 11 அறுவை சிகிச்சை நிபுணர்களும் மட்டுமே இருந்தார்களாம். இது வெறும் பிரிட்டிஷ்காரர்களின் எண்ணிக்கை மட்டுமே.

அந்தக் காலகட்டத்தில்தான் அவருடைய மைத்துனர் கில்பர்ட் ராஸ் என்பவரது நண்பரான தாமஸ் சேஸ் என்பவருடன் சேர்ந்து முதலீடு செய்து வியாபாரம் செய்யத் தொடங்கினார். இந்த தாமஸ் சேஸ் அப்போதையக் கிழக்கிந்திய இந்திய கம்பெனியின்  ஏஜென்டாக இருந்தார். ஆனால் அவர்களுடைய முக்கியமான வணிகம் வங்கி தொழிலாக இருந்தது. அதன்பிறகு, இவர் ஜென் மெடோஸ்ஸில் கணக்காளராகவும், செயலாளராகவும் பணியாற்றினார். அப்ப, வெளியே கொடுக்கப்பட்டப் பணத்திற்கு 12% மற்றும் 1 6 % கமிசனாகவும் வாங்கப்பட்டதாம். இதன் முக்கியமானப் பங்குதாரர்களில் இளவரசர்களும், கிழக்கிந்திய கம்பெனியும்  இருந்ததாம். இதன் கமிசன் அதிகமாகவும் மேலும் பணத்திற்கான அத்தாட்சியோ. பாதுக்காப்போ ஏதும் சரியாக இல்லாத நிலையில் அவருக்கு நல்ல லாபகரமானதாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்தச்சமயத்தில் கிடைத்த லாபகரமான தொடக்கத்திற்குப்பிறகு பாரி தன்னுடைய சொந்த நிறுவனத்தை 1792ல் தொடங்கினார். அதன்பிறகு இவரது நிறுவனம் திப்புவுடன் நடந்த சண்டை காரணமாக கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிக தேவைக்கைகாக நிறைய பணம் கொடுக்கப்பட வேண்டியதாகிவிட்டது..அதன்பிறகு பாரி 1794  ல் மேரி பியர்ஸ் என்னும் விதவையை மணந்தார். இவரது திருமண வாழ்க்கை 1807 வரை அமைதியாகவே சென்றது. அதன்பிறகு ஏற்பட்ட தன்னுடைய குழந்தைகளின் இழப்பிற்கு பிறகு அவரது மனைவி இங்கிலாந்து திரும்பிவிட்டார். இந்த காலக்கட்டங்களில் அவரது நிறுவனம் லாபகரமாக இயங்கவில்லை 
 இது 1860களில் எடுக்கப்பட்ட பாரிஸ்சின் புகைப்படம். அதன்பிறகு இவரால் மெட்ராஸ் நகரத் தெருக்களில் கேளிக்கை மற்றும் நிகழ்சிகள் நடத்தபட்டன. இந்தச் சமயத்தில் லார்ட் கிளைவ் தனியாருக்கான வியாபாரத்தை நிறுத்தி அவர்கள் எல்லோரையும் கோட்டையில் இருந்து வெளியேற்றினார்.  இந்தச் சமயத்தில்தான் பாரி தன்னுடைய நிறுவனத்தை வெளியிடத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டார். இப்பொழுது இருக்கிற இந்த இடம் அப்பொழுது பிரபலமாக இல்லை. கரடுமுரடான கற்கள் நிறைந்த கடற்கரை ஒருபக்கம், மற்றொரு பக்கம் நம் ஆட்கள் வசிக்கும் பிளாக் டவுனும், இதிலிருந்து கொஞ்ச தொலைவில் பிரிட்டிஷ்காரர்கள் வசிக்கும் வொயிட்ஸ் டவுனும் இருந்தது. இந்த இடத்தைப் பாரி கையகப்படுத்தினார். அதற்குமுன் இந்த இடம்  வாலாஜா நவாபின் மகள் பேகம் மல்லிகுநிசா என்பவரிடம் இருந்தது. ஒரு ஓரமாக இருந்த அந்த இடம் கார்னர் என அழைக்கப்பட்டது. பாரியின் வருகைக்குப் பிறகு அது பாரிஸ் கார்னர் என அழைக்கப்பட்டது.

சென்னை எத்தனை மாறினாலும் பாரீஸ்கார்னர் அந்த காலத்து பெருசுங்க மாதிரி பழமைக்கும், புதுமைக்கும் இடைப்பட்டு பழம்பெருமை பேசிக்கிட்டிருக்கு.. 

நன்றியுடன்,
‘ராஜி

6 comments:

 1. எல்லா விசயங்களையும் ஆராய்ந்து பார்க்கிற பதிவராகி எவ்வளவோ நாளாச்சே...! அது சரி, இப்படி சுருக்கமா முடிச்சா எப்படி...?

  ReplyDelete
 2. எப்பவோ படித்த விவரங்கள்..   சுவாரஸ்யம்.

  ReplyDelete
 3. சென்னையைப் பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்ட பதிவு. ஆய்வுக்கட்டுரையைப் போல சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 4. அரிய தகவல்களைக் கொண்ட பதிவு
  நன்றி சகோதரி

  ReplyDelete
 5. வாசித்திருக்கிறேன் ராஜி. இப்ப மீண்டும் இங்கு தெரிந்து கொண்டேன். நல்ல தகவல்கள்.

  கீதா

  ReplyDelete
 6. //இப்பதான் எல்லா விசயங்களையும் ஆராய்ந்து பார்க்கிற பதிவர் ஆகிட்டேன்//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  அடியாத்தி எம்பூடடு விசயம் பிரமிப்பாக இருக்கிறது சகோ.

  அப்படியே நம்ம தேவகோட்டை வரலாறும் எழுதுங்களேன்...

  ReplyDelete