Friday, July 10, 2020

அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.

கடந்தவாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களுக்கு ஆன்மீக யாத்திரை சென்ற பட்டியலை பார்த்துக்கொண்டே வரும் போது சில கோவில்களின் படங்கள் எந்த இடத்தில சேமித்து வைத்திருந்தேன் என்று தெரியவில்லை அந்த குழப்பத்தில்,சரி என்று மொபைலில் சேமித்துவைத்திருந்த திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்ற படங்கள் கண்ணில்படவும் உடனே அந்த கோவிலை பற்றி போனவாரம்  பதிவு செய்துவிட்டேன்.அதற்கு முந்தைய வாரத்தில் நம்முடைய புண்ணியம் தேடி ஒருபயணம் பதிவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள சோழராஜா கோவிலில் தரிசனம் செய்தோம்.இந்தவாரம் நாம தரிசனம் செய்ய போறது.அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்,கிருஷ்ணன் கோவில்...

இந்த ஊருக்கு என்ன விசேஷம்னா கோவிலின் பெயரே இங்கு ஊர் பெயராக இருக்கிறது .நாம சோழராஜா கோவிலில் இருந்து பிரதான சாலை வழியாக வந்து .வடசேரி சந்திப்பின் வழியாக சென்றால் வடசேரி கனகமூலம் சந்தையிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது கிருஷ்னன் கோவில்அல்லது,வடக்குப்பக்கமாக செல்லும்சாலைவழியாக,திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் ராமவர்மா பெயரில் அமைந்துள்ள எஸ்.எம்.ஆர்.வி -என்னும் பள்ளிசெல்லும் சாலைவழியாக சென்றாலும் இந்த திருக்கோவிலை அடையலாம்.சிறிய கோவில் என்றாலும் பார்ப்பதற்கு மிகவும்அழகாகஇருக்கிறது...

இந்த திருக்கோவிலின் மூலவர் பாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் நின்ற நிலையில் தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்திருக்கிற கோலத்தில் அருள்பலிக்கிறார்.பொதுவாக இதுபோன்ற சிறிய கோவில்களுக்கு ஸ்தலவரலாறு என்றுபார்த்தோமானால் எல்லாமே செவிவழிசெய்தியாக மட்டும் இருக்கும்,ஆகையால் நிறைய தகவல்களை நம்மால் பெறமுடியாது.கி.பி. 13-ம் நு}ற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்ம மகாராஜா குருவாயூர் கிருஷ்ணனின் சிறந்த பக்தர்.ஒருமுறை கிருஷ்ணர் இவரது கனவில் கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக காட்சி தந்தார்.தனக்கு.அது மட்டுமன்றி தனக்கு கோயில் அமைய இருக்கும் இடத்தையும் குருவாயூரப்பனே கூறியுள்ளார். நாளை காலை சூரிய உதயத்தின் போது அருகே இருக்கும் கானகத்திற்கு செல் அடர்ந்த மரச்சோலைக்குள் சிறிய குளம் ஒன்றின் அருகே கருடன் இருப்பான்.அவ்விடமே எனக்கு கோயில் அமைய ஏற்ற இடம் என்று கூறியுள்ளார்.அதன்படி மறுநாள் காலை அவ்விடம் வந்த ஆதித்தவர்ம மகாராஜா கருடனை கண்ட இடத்திலேயே கோயில் எழுப்பினார். அதுதான் இப்பொழுது கோவில் அமைந்திருக்கும் இடம்.கனவில் கண்ட பாலகிருஷ்ணனின் உருவத்திலையே இந்த இடத்தில கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார் மகாராஜா.இந்த ஸ்தலசுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினார் ஆதித்தவர்ம மகாராஜா.

மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில்,இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும்.அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பாராம்.தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி,தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி,பால்பாயாசம்,உன்னியப்பம்,பால்,பழம்,அரிசிப்பொரி,வெண்ணெய்,அவல்,சர்க்கரை படைக்கின்றனர்.இந்த பூஜையில் கலந்து கொள்வது விஷேசம் என்று சொல்லப்படுகிறது.

மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும்.உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும்,உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர்.  சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது ராஜகோபால சுவாமியே தேரில் எழுந்தருளுவார்.வைகுண்ட ஏகாதசியன்றும் இவரே சொர்க்கவாசல் கடக்கிறார்.இத்தலத்து கிருஷ்ணர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால், இவரது பெயரில் இந்தக் கோயில் இருக்கும் இடம் கிருஷ்ணன்கோவில்என்றுஅழைக்கப்படுகிறது. 

திருக்கோவிலின் சுவர்களில் ஓவியங்கள் அழகாகவரையப்பட்டுள்ளன .மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடிமரத்தைச் சுற்றிலும்,அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.இங்கு கிருஷ்ணரே பிரதானம் என்பதால் கோஷ்ட மூர்த்திகள் இல்லை.பிரகாரத்திலுள்ள காவல்தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.சபரிமலையில் மண்டல பூஜை நடக்கும் நாளன்றும்,தை மாத பிறப்பன்றும் மட்டும் இந்த தண்டத்திற்கு விசேஷ பூஜை நடக்கும்.இங்கு சாஸ்தா சந்நதியும் உள்ளது.பங்குனி உத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லிமரமே தான் இங்கே ஸ்தல விருட்சமாக உள்ளது..இங்குள்ள கொன்றை மரத்தடியின் அருகில் நாகருடன், சிவலிங்கமும் இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் சிவலிங்கம் மற்றும்,நாகருக்கும் பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.இங்கு மூலவரின் வலப்புற வெளிப் பிரகாரத்தில் கன்னி விநாயகர் சன்னிதியும் உள்ளது. 

இந்த கோவிலின் தெப்பக்குளக்கரையில் அமைத்துள்ள,நாகரம்மன் கோவிலும்,அதைசுற்றியுள்ள நாகர்சிலைகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.இந்த நாகரம்மன் சிலைக்கும்,குளக்கரை நாகர் சிலைகளுக்கும், கொன்றை மரத்தடி நாகர் சிலைகளுக்கும் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து பால கிருஷ்ணனை வழிபட்டு வெண்ணெய் பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதோடு தெப்பக்குளத்தை கரையில் இருக்கும் அருள்மிகு விஜயகணபதி கோவிலும் அழகு,முக்கியமாக ஒவ்வொருஆண்டும் கொண்டாடப்படும் ,சித்திரை திருநாள் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தம்,கஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கடைசிநாளான பத்தாம் நாள் தெப்பத்திருவிழாவில்,சுவாமி தெப்பத்தில் எழுந்தருளும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும். .

இந்த திருக்கோவில் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு திருக்கோவிலிருந்து உங்களை சந்திக்கிறேன் 

.நன்றி வீடியோ :இணையதளம்.

 நட்புடன்

ராஜி 

9 comments:

 1. படங்களுடன் தகவல் அருமை. தொடரட்டும் தங்கள் பணி.

  நமது வலைத்திரட்டி: வலை ஓலை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

   Delete
 2. சிறிய கோவிலாய் இருந்தாலும்  கோவிலும், அருகே நீர் நிறைந்த குளமும் பார்க்கவே ரம்யமாய் இருக்கிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோவில் என்கிற பெயரில் ஒரு ஊர் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானுங்க அண்ணா,மூர்த்தி சிறிதாயிலும் கீர்த்தி பெரிது என்பார்கள்,உன்னிகிருஷ்ணன் மூர்த்தி சிறியதாக இருந்தாலும்,கண்கவர் அழகில் மனதை மயக்குகிறார்...

   Delete
 3. என் நண்பரின் ஊர் இது. கோவில் பற்றி அறிந்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நம் எல்லோருக்கும் இந்த இடம் புதியதுதானுங்க அண்ணா..நீங்கள் அறிந்துகொண்டீர்கள்,நான் நேரில் போய் தெரிந்து கொண்டேன்,இனி அடுத்து டில்லி பக்கம் ஒரு ரவுண்டு அடிக்கலாம்ன்னு இருக்கிறேன்.நான் ஊருக்குவாரேன்னு சொன்னவுடனே,அப்படியே எஸ்கேப் ஆகிடாதீங்க அண்ணா ..

   Delete
 4. காணொளியும் அருமையாக இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அண்ணா..இது கடந்தவருடம் நடந்த தெப்பத்திருவிழாவில் எடுத்த வீடியோவை ஒரு பக்தர் பதிவிட்டிருந்தார்..நான் அதிலிருந்து சுட்டுட்டேன்.அடுத்தவருடம் நேரில் போய் பதிவு செய்யணும்னு,எனக்காக உன்னி கிருஷ்ணனிடம் வேண்டிக்கோங்க....

   Delete
  2. கண்ணன் ரெம்ப அழகு காண கண்கோடி வேண்டும்

   Delete