Showing posts with label எமன். கடிதம். Show all posts
Showing posts with label எமன். கடிதம். Show all posts

Monday, October 29, 2018

எமனின் நால்வகை கடிதங்கள் - ஐஞ்சுவை அவியல்

என்னடி!என்னிக்குமில்லாத அதிசயமா ரொம்ப நேரமா  கண்ணாடி முன் நின்னிட்டிருக்கே!? 

நரைமுடி அதிகமா இருக்கு மாமா! அதான் டை அடிக்கலாமா?! வேணாமான்னு பார்த்துக்கிட்டிருக்கேன்.

நாற்பது வயசுல நரைமுடி வர்றது சகஜம்தான், இதுக்கு பல காரணம் உண்டு. மரபுவழியா வர்றதுமுண்டு. பித்தம் அதிகமானாலும் நரைக்கும். ஓவர் டென்ஷன்லயும் முடி நரைக்கும். இப்பத்திய உணவுமுறை மாற்றங்கள், ஷாம்பு மாதிரியான செயற்கை ரசாயண  பொருட்கள், சுற்றுச்சூழல் பாதிப்புனாலயும் முடி நரைக்குது.


உன்னால ஏற்படும் டென்ஷனாலதான் முடி நரைக்குது போல! 

அடிப்பாவி1 என்னையே எல்லாத்துக்கும் குறை சொல்லு. நீ ஒழுங்கா முடியை பராமரிக்காம என்னைய ஏன் சொல்றே! வாரத்துக்கு ஒருநாளாவது எண்ணெய் தேய்ச்சு சீயக்காய் போட்டு தலைமுழுகனும். தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கனும். வெளில போகும்போது தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கனும். வீட்டுக்கு வந்ததும் தலைக்கு குளிக்கனும். அதிக காரமில்லாத மைல்ட் ஷாம்புவை யூஸ் பண்ணனும். 

சரி, இதுலாம் இனி சொல்லி என்ன பயன்?! அதான் நரைமுடி வந்திருச்சே மாமா! அதை கருப்பாக்க என்ன பண்ணலாம்ன்னு சொல்லு..

ஹேர்டை யூஸ் பண்ணுறது சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். டை பூசுன ஓரிரு நாளில் முடியின் அடியில் நரைமுடி தெரிஞ்சு அசிங்கப்படுத்தும். சிலருக்கு முடி காவி கலராகி அசிங்கப்படுத்தும்., அதனால், நாற்பது வயசு ஆனப்பின் நரைமுடி வர ஆரம்பிச்சா அதை அப்படியே விட்டா அதுவே நமக்கொரு அழகையும், மதிப்பையும் கொடுக்கும். ம்ஹும், எனக்கு முடி கருப்பாதான் இருக்கனும்ன்னு நினைக்குறவங்களும் சரி, சின்ன வயசுலயே முடி நரைக்க தொடங்குறவங்கலாம் இயற்கை முறையிலேயா முடியை கருப்பாக்கலாம்.

தேங்காய் எண்ணெயோடு சம அளவு எலுமிச்சை சாறெடுத்து தலைமுடியின் அடிவரை தடவி, மசாஜ் செய்து, அரைமணிநேரம் ஊற வச்சு அலசி வந்தா முடி கருமையாகும். அதேமாதிரி மருதாணி இலைகளை அரைச்சு பூசி வந்தாலும் முடி தன்னோட இயற்கை நிறத்தை பெறுவதோடு பளபளன்னும் பட்டுப்போல மென்மையாவும் இருக்கும். நெல்லிக்காய் வெட்டி காயவச்சி தே. எண்ணெயோடு போட்டு சூடேத்தி தடவி வந்தாலும் முடி கருப்பாகும். கறிவேப்பிலையை புளிச்ச தயிரோடு சேர்த்து அரைச்சு தலையில் தடவி வரலாம். வெந்தயத்தை ஊற வச்சு அரைச்சு தேய்க்கலாம்,. இல்லன்னா, முதல்நாள் நைட்டே ஊற வச்சு அந்த நீரை கொண்டும் அலசினா முடி படிப்படியா கருப்பாகும். நெய்யை, மண்டையில் படும்படி தேய்ச்சு அலசி வந்தாலும் நிறம் மாறும். தயிரில் ஊற வச்ச மிளகும் இளநரையை போக்கும். ஒரு கப் பிளாக் டீயில் ஒருஸ்பூன் உப்பு சேர்த்து மண்டையில் படும்படி தேய்ச்சு கழுவி வந்தாலும் இள நரை மறையும். 

நரைமுடிங்குறதை நினைச்சு வருத்தபடவேண்டியதில்லை. ஆனா, நமக்கு வயசாகிட்டு வருதுன்றதை புரிஞ்சு, நம்ம கடமையை சரிவர செய்யனும். ஏன்னா, நம் மரணத்தை உணர்த்தும் விதமா நால்வகை கடிதத்தை எழுதுறதா சொல்வாங்க. இது வயசாகி இறைந்து போறவங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். விபத்து மாதிரியான அகால மரணத்துக்கில்லை.  இதை உணர்த்தும் விதமா ஒரு கதை சொல்வாங்க.

அம்ரிதான்ற ஒரு ராஜாவுக்கு தன்னை மரணம் நெருங்கக்கூடாதுன்னு நினைச்சு எமதர்ம ராஜாவை நினைச்சு தவமிருந்தான்., சுவாமி! எனக்கு மரணமே நேரக்கூடாதுன்னு வரம் கேட்டான். பிறந்தவர் இறந்தே ஆகனும். அதனால் வேற வரம் கேள்ன்னு சொன்னாரு எமன். அதுக்கு அந்த அமிர்தா மரணம் என்னை நெருங்குவதை எச்சரிச்சு நீங்க எனக்கு கடிதம் போடனும்ன்னு சொன்னான். ஓகேன்னு எமனும் வரம் கொடுத்தார். அம்ரிதா தன் மனம்போன போக்கில் வாழ்ந்தான்.   வயசு ஆக, ஆக முடி நரைக்க ஆரம்பிச்சுது. அடுத்து பற்கள் ஒவ்வொன்னா விழ ஆரபிச்சுது. உங்களுக்கு வயசாகிட்டுது ராஜா. மரணம் உங்களை நெருங்குதுன்னு சொன்ன ராணியை அம்ரிதா கண்டிச்சான். பின் எப்பயும்போல, குடி, சூது, மாதுன்னு இருந்தான். ஒருநாளில் மூப்படைந்து நடக்க முடியாமல் போய்  உடல் முடங்கிபோனது. அனைவருமே அம்ரிதா இறக்கப் போகிறான் என நினைத்தனர். ஆனா, அப்போதும், அம்ரிதா தனக்கு மரணம் நெருங்க காலம் இருப்பதாக எண்ணி, சந்தோஷமாகவே இருந்தான். ஏன்னா, எமன் தனக்கு கடிதம் அனுப்புவார்ன்னு இறுமாப்பாவே இருந்தான். 

ஒருநாள் அவன்முன் எமன் வந்தான். நீ மரணிக்கும் நாள் வந்திடுச்சு. உன்னை அழைத்து போகவே வந்தேன்னு சொல்லி, அம்ரிதாமுன் நின்றான். அம்ரிதா அதிர்ச்சிக்குள்ளாகி எமனிடம், கடவுளே! நீங்க என்னை ஏமாற்றிவிட்டீர்கள், மரணம் என்னை நெருங்கும்முன் கடிதம் அனுப்புவேன் என எனக்கு வரமளித்து ஏமாற்றிவிட்டீர்கள் என எமனை கடிந்துக்கொண்டான். அப்போது, எமன் அம்ரிதாவிடம், "நீ உன் வாழ்க்கை முழுவதையும் பாவச்செயல்களில் ஈடுபடுத்தி, ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் காட்டாமல் இருந்துவிட்டாய். பின் எப்படி என்னுடைய கடிதம் உன்னை அடைந்ததை நீ உணர்ந்திருப்பாய்? நான் இதுவரை உனக்கு 4 கடிதங்களை அனுப்பினேன். அவை அனைத்தையும் நீ நிராகரித்துவிட்டாய்" என்றார். "நான்கு கடிதங்களா?என அம்ரிதா கேட்க, ஆமாம்,  தலைமுடி நரைத்தது நான் அனுப்பிய முதல் கடிதம்.  பற்கள் முழுவதையும் இழந்தது நான் அனுப்பிய 2வது கடிதம்.  பார்வைதிறன் குறைந்து போனது நான் அனுப்பிய மூன்றாவது கடிதம்.   உடல் முடங்கி போனது நான் அனுப்பிய நான்காவது கடிதம். இதை எதையுமே உணராமல் இருந்தது உன் தவறுன்னு சொல்லி அம்ரிதாவை தன்னோடு எமன் அழைத்து சென்றான்.  இந்த கதைமூலமா நாமளும் நமக்கு கடவுள் கொடுக்கும் எச்சரிக்கையை புரிஞ்சுக்கிட்டு தன்னோட வயசுக்குண்டான கடமைகளை சரிவர செஞ்சா முதுமையை சிறப்பா கழிக்கலாம். அதேப்போல, மரணத்தையும் தைரியமா எதிர்கொள்ளலாம். வயதாவதென்பது சாபமல்ல வரம்ன்னு புரிஞ்சு செயல்படனும். வயசுக்கு தக்க பெருந்தன்மையோடு நடந்து ஆன்மீகத்துல நாட்டம் கொள்ளனும். தியானம், யோகான்னு செஞ்சு ரிலாக்சா இருக்கனும்.
வயசாகிட்டாலே பெருந்தன்மை வந்துராது மாமா. அதேமாதிரி ஆன்மீகத்துல நாட்டமும், யோகா,தியானம்ன்னு  செஞ்சாலும்  புத்தி வேலை செஞ்சுடாது. அதுக்கு உதாரணம் நடிகர் சிவக்குமார்.  கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக்கிட்ட சிவக்குமார்,  செல்பி எடுத்த ஒரு பையனோட செல்போனை தட்டி விட்டுட்டார். இதுதான் இன்னிக்கு ஹாட் டாபிக். தெரியுமா மாமா?!

நடிகர்களும் மனுசங்களேன்னு புரிஞ்சுட்க்கிட்டு அவங்களை என்னமோ பெரிய அவதார புருசங்கமாதிரி பீல் பண்ணி செல்பி எடுக்குறது, பாலாபிஷேகம் செய்றது நாக்குல கற்பூரம் ஏத்துறதுன்னு அட்ராசிட்டி பண்ணா இப்படிதான். அவங்களும் ரத்தமும் சதையுமான மனுசங்கதானே!? எங்க போனாலும் பிரைவசி இல்லாம ஆட்கள் சூழ்ந்தால் கடுப்பாகத்தான் செய்வாங்க.

உங்க வாதம் சரிதான் மாமா. ஆனா, சிவக்குமார் விசயத்துல அப்படி ஒதுங்கி போக முடியாது. ஏன்னா, யோகா தியானம் செஞ்சா உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் கிளாஸ் எடுக்கிறார். சினம் சார்ந்தோரை கொல்லும்ன்னு டிவில பேசுறார். ராமாயணம், மகாபாரதத்தை புட்டு புட்டு வைக்குறார். அப்பேர்பட்டவர், தான் சொல்ற மாதிரி நடந்து காட்டனும். அதைவிட்டு இப்படி காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்கிட்டா ஊர் ஏசத்தான் செய்யும். புராணங்கள், இதிகாசங்களும், யோகா, தியானம்ன்னு எதும்  மாற்றத்தை கொண்டு வந்துராதுன்னு சிவக்குமார்தான் சரியான உதாரணம். உணர்ச்சிகளை அடக்கி வச்சா இப்படிதான் இடம் பொருள் ஏவல்ன்னு தெரியாம வெளிப்படும். அதைவிட சரிவிகிதமா  உணர்ச்சிகளை சமாளிக்க கத்துக்கனும்.

நீ சொல்றதும் ஒருவிதத்துல சரிதான். அந்த நேரத்துல என்ன நினைஇச்சாரோ! அது அவருக்கே வெளிச்சம். ரொம்ப பேசிட்டோம். இந்த மீமை பார்த்ததும்  என் சின்ன வயசு ஞாபகம் வந்துச்சு.  இன்னிக்கான கேள்வி .. GMT ( Greenwich Mean Time ) நேரத்திற்கும், IST ( Indian Standard Time ) நேரத்திற்கும் மணி அளவில் உள்ள வேறுபாடு எவ்வளவு.? யோசிச்சு சொல்லு. பார்க்கலாம்.
இதுலாம் ஈசி. இதுக்கு நான் எதுக்கு ?! எங்காளுங்க வந்து விடை சொல்வாங்க இருங்க.
என் மானத்தை வாங்கிடாதீங்க சகோஸ்

நன்றியுடன்,
ராஜி