Showing posts with label பனீர் பட்டர் மசாலா. Show all posts
Showing posts with label பனீர் பட்டர் மசாலா. Show all posts

Tuesday, October 30, 2018

பனீர் பட்டர் மசாலா - கிச்சன் கார்னர்


விளையாட்டு வீரர்கள், வளரும் குழந்தைகள்ன்னு புரத சத்தின்  தேவை இருக்கவங்களாம் சிக்கன், முட்டை, பாதாம், பருப்பு வகைகள்ன்னு எடுத்துப்பாங்க.  எல்லாருமே அசைவம் சாப்பிடுறதில்லையே. அதுமாதிரியான சைவப்பிரியர்களுக்கு கைக்கொடுப்பது பன்னீர் எனும் பனீர். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சை பழத்தை பிழிந்தா பால் திரிய ஆரம்பிக்கும் அதை மிக மெல்லிய துணியில் வடிகட்டி பதப்படுத்தினால் கிடைப்பது பனீர். பால் திரிந்தாலும் இதில் அதிகளவு புரதம், மங்கனீசியம்  பாஸ்பரஸ், புரதச்சத்துலாம் அதிகளவு இருக்கு. கார்போஹைட்ரைட் அளவு குறைச்சல்.சர்க்கரையின் அளவு ரொம்ப குறைச்சல்ன்றதால இதை நீரிழிவு நோய்க்காரங்களும் சாப்பிடலாம். கொழுப்பு சத்தும்  அதிகளவில் இருக்கு. அதும் நன்மை செய்யும் கொழுப்புசத்தில்லைங்குறது இதோட மைனஸ்.  இதோட இன்னொரு மைனஸ், மெதுவா ஜீரணிக்கும் தன்மை கொண்டது. 

100கிராமில்  பனீரில் 265 கலோரிகள் கிடைக்குது.  உடலுக்கு பலம் கிடைக்கும்.  பல் சிதைவு, ஈறு பிரச்சனைகள் மற்றும் மூட்டு பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் பனீர்  உதவுது.  இதை இரவு நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமா வச்சுக்கலாம். சாப்பிட்ட பின் 1 மணிநேரம் கழிச்சு தூங்கபோவதால் உடல் பருமனை குறைக்கலாம். பனீர் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்குது. இதயநோய்களிலிருந்தும் நம்மை காக்குது. இந்த பனீர்ல பலவகை உணவுகள் சமைக்கப்படுது. ஆனா, அதிகமா வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. இது எதிர்விளைவை உண்டாக்கும்ன்றதை நினைவில் வச்சுக்கனும்.

இன்னிக்கு, நம்ம பதிவில் பனீர் பட்டர் மசாலா செய்யுறது எப்படின்னு பார்க்கலாம். 
தேவையான பொருட்கள்..
பனீர்
பெல்லாரி வெங்காயம்
தக்காளி
வெண்ணை
பூண்டு
இஞ்சி
மிளகாய் தூள்
முந்திரி பருப்பு
எண்ணெய்
உப்பு

வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி பெருசு பெருசா வெட்டிக்கனும். தக்காளியையும் அப்படியே!. பூண்டை தோல் நீக்கிக்கனும், இஞ்சியையும் தோல் நீக்கி கழுவிக்கனும். 

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு சூடாக்கிக்கனும்..
வெண்ணெய் உருகினால் போதும். வெங்காயத்தை சேர்த்துக்கலாம். கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வெந்துரும்.
வெங்காயம் சிவக்கனும்ன்னு அவசியமில்லை. லேசா கண்ணாடி மாதிரி ஆனா போதும். வெட்டி வச்ச தக்காளியை சேர்த்துக்கலாம்.. அடுத்து பூண்டு பற்கள், இஞ்சியையும் சேர்த்து வதக்கிக்கனும்.
முந்திரி பருப்பையும் சேர்த்து வதக்கி அடுப்பை அணைச்சு, ஆறினதும் விழுதா அரைச்சுக்கனும். 

வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகினதும் அரைச்சு வச்சிருக்கும் விழுதை சேர்த்துக்கனும். 

காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகாய் பொடி சேர்த்துக்கனும். தனி மிளகாய் தூள் சேர்த்துக்கிட்டா நல்லா கலர் கொடுக்கும்.  கரம் மசாலாவையும், உப்பையும் சேர்த்து கிளறி தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்.  மசாலா கொதிக்குறதுக்குள் பனீரை துண்டு துண்டா நறுக்கி லேசா எண்ணெய்ல இல்ல வெண்ணெய்ல பொரிச்சுக்கனும். 

மிளகாய் தூள் வாசனை போகும்வரை கொதிச்சதும் பொரிச்சு வச்சிருக்கும் பனீரை சேர்த்து லேசா கொதிக்க விட்டு கொ.மல்லி இலைகளை தூவி இறக்கிக்கிடனும். உலர்ந்த வெந்தயக்கீரை அதானுங்க கஸ்தூரி மேத்தியை லேசா கசக்கி சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும்.  கடைசியா ப்ரெஸ் க்ரீம் சேர்த்துக்கலாம். கஸ்தூரி மேத்தியும், க்ரீமும் இல்லாததால் அதை நான் சேர்க்கல. 
என் பையனுக்கு பனீர் பிடிக்காததால் அவனுக்கு மட்டும்  கொதிக்கும் கிரேவியை தனியா கொஞ்சம் எடுத்து  முந்திரி பருப்பை வறுத்து சேர்த்துக்கிட்டேன். 
இது என் பையனுது நான் சுட்டுட்டேன். சாப்பிட இல்லீங்க. படத்துக்காக...

இது எங்களுக்கானது பனீர் பட்டர் மசாலா...  வெண்ணெய்தான் சேர்க்கனும்ன்னு இல்ல, எண்ணெயும் சேர்க்கலாம். வெண்ணெய் சேர்த்தா வாசம் நல்லா இருக்கும். அம்புட்டுதான்

பார்க்க நல்லா இருக்கா?!  

நன்றியுடன்,
ராஜி