Showing posts with label பழனி. Show all posts
Showing posts with label பழனி. Show all posts

Thursday, November 03, 2016

மூன்றாவது படைவீடு பழனி - பக்தி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.மலைகளில் மருந்து கிடைப்பது  இயற்கை. ஆனா ஒரு மலையே மருந்தாய் அமைந்தது அபூர்வம்...  அந்த அபூர்வ மலையே திருஆவினன்குடி என்றும் பழனி என்றும் அழைக்கப்படுது
 பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுது. இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியது
திரு - லட்சுமி
ஆ - காமதேனு
இனன் - சூரியன்
கு - பூமாதேவி
டி - அக்கினிதேவன்
இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று.இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பொதினி என்ற பெயரே நாளடைவில் பழனி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.
திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன. கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.
முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.
பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தப்படியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். 
இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியிலேயே நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருள்புரியவும் பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார்.இடும்பன் வழி தெரியாது தவித்துக் கொண்டு நின்றான். முருகப்பெருமான் இடும்பனைத் திருவாவினன் குடிக்கே அழைத்து வந்து சற்று இளைப்பாறி விட்டுப் போகும்படி கூறினார். அவ்வண்ணமே இடும்பனும் காவடியை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினான். மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. அதன் காரணத்தை ஆராய்ந்தான் இடும்பன்.
அப்போது சிறுவன் ஒருவன் கோவணத்தாண்டியாய் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றின்மீது நிற்பதைக் கண்டான் இடும்பன். அச்சிறுவனை நோக்கி மலையை விட்டுக் கீழிறங்கும்படிக் கட்டளையிட்டான் இடும்பன்.ஆனால் அச்சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென்று உரிமை கொண்டாட, இதனால் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.பின்னர் இடும்பன் மனைவியான இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடி வந்து வேண்டிக் கொள்ளவே, அவர்களுக்காகவே சிறுவனாக வந்த முருகன் மனமிறங்குவது போன்று இடும்பனை உயிர்ப்பித்தார்.
இடும்பனது சீலத்தையும் குருபக்தியையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு இடும்பனைப் போன்று, சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களையெல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோர்க்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார்.அன்றுமுதல் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.
மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப் பாதையிலுள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்லுதல் வேண்டும். இடும்பன் சிறந்த வரப்பிரசாதியாய் விளங்கி அருள்புரிகின்றார். இச்சிவகிரியின் உச்சியில்தான் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படும் முருகன் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர்.இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.
இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு. என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும். திருவாவினன்குடி கோயிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.

இம்மலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும்.மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.
மூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார். ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்.மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், "நவபாஷாணம்" எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும்.
இப்படை வீட்டில் முருகப்பெருமான் அபிஷேகப் பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை.அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. தண்டாயுதபாணி சுவாமியை மொட்டையாண்டியாகப் படங்களில் சித்தரித்திருந்தாலும், இப்பெருமான் சடாமுடியுடனே விளங்குகின்றார் என்பதனை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.
ஆதியில் போக சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிப்பட்டு வந்த ஞான தண்டாயுதபாணியின் கோயில் முதன்முதலில் சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக இத்தலத்தில் வழிபட கேரள மக்கள் மிகவும் அதிகமாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.சபரிமலை ஐயப்ப சுவாமியைச் சென்று தரிசித்து வருபவர்களும், குருவாயூரப்பனைத் தரிசித்து வருபவர்களும் பழனிக்குச் சென்று பழனி ஆண்டவனையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற வழக்கமும் நிலவி வருகிறது.
 இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்தப் பெருமானை ஞான தண்டாயுதபாணி வடிவில் வணங்கி, தரிசனம் செய்து ஞானமும், அருளும் பெறுவோமாக!

வழித்தடம்: இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.இனி வேறு படைவீட்டில் இருந்து சந்திக்கலாம்.நன்றி.

Friday, December 02, 2011

பழம் நீயப்பா! பழனியப்பா! -மூன்றாம் படைவீடு


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படைவீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை, பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.
தல அறிமுகம்:
மூலவர்:குழந்தை பாலதண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி
தல விருட்சம்: நெல்லி மரம்
தீர்த்தம்: சண்முக நதி
புராணகால பெயர்கள் :திருஆவினன்குடி, தென்பொதிகை
ஊர்:பழநி 
மாவட்டம்: திண்டுக்கல்,  
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்: அருணகிரிநாதர் திருப்புகழ் , நக்கீரர்

தல சிறப்பு:
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

                 
பெயர் காரணம்:
பழனி என்பது இங்குள்ளா மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்ற அழைக்கப்படுகிறது. சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை “ஞானப் பழம் நீ” என அழைத்த்தால், “பழம் நீ” என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே “பழனி” ஆகிவிட்டது.இதேப்போல மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்கு கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். எந்த பற்றும் அற்ற ஆண்டி கோலத்தில் காணப்பட்டார். மகனின் நிலையறிந்த சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு, “பழம் நீ” என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி “பழனி” என்றழக்கப்பட்டது என இக்கோயில் தல வரலாறு கூறுகிறது.
தல பெருமை
தண்டாயுதபாணி சிறப்பு: விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.
                   
இடும்பன் வரலாறு:
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்து போரிட்டு வீழ்ந்தான். இடும்பனின் மனைவியும், அகத்திய முனிவரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து,அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். 
மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார்."தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.

சித்தர் போகர் :
இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர்.சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும்.சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.
               
முருகன் கையில் அருணகிரியார்!:
மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன் காட்சி தருகிறார்.

தம்பியை காத்த அண்ணன்: 
சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.
மூன்றாம் படை வீடு:
முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருஆவினன்குடி சிறப்பு:
குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், "திருஆவினன்குடி' என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம்.இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.
பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.

முருகனுக்கு அன்னாபிஷேகம்:
பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

முதல் வணக்கம் இடும்பனுக்கே...!:
 தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.
இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

தைப்பூச விழா சிறப்பு: 
தைப்பூசத்திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள். இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது.
தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.
                        
எப்போதும் அபிஷேகம்:
இந்த படைவீட்டில் அவர் அபிஷேக பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்றா திருத்தலங்களைப்போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல்  இரவு பூஜை வரை பன்னீர் சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என கருதப்படுகின்றன.
 தண்டாயுத பாணி சுவாமியை மொட்டை ஆண்டி கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும் இவர் சடாமுடியுடன் தான் விளங்குகிறார் என்பதை அபிஷேக காலங்களில் உணரலாம்.
                    
பங்குதாரராக முருகப்பெருமான் : மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக்கொண்டுள்ளனர்.தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கூடுதல் தகவல்கள்:
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் முக்கிய தலம்.
அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார்
தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம்.
அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம்.
தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது.
பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது.
மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம்.
தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான்.

திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு. வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் செல்ல ”மலை ரயில்” வசதியும், “ரோப் கார்” வசதியும் உண்டு.
           



கோயில் திறந்திருக்கும் நேரம்
 காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்:


அருள்மிகு பெருவுடையார் கோவில் - மானூர்
அருள்மிகு இடுமபன் கோவில் - பழனி
அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சனேயர் கோவில்- மேட்டுப்பட்டி. சின்னாளபட்டி,
அருள்மிகு மாரியம்மன் கோவில்- நத்தம்

அருள்மிகு பத்மகிரீஸ்வரர்(காளஹஸ்தீஸ்வரர்)கோவில் திண்டீச்சுரம்

டிஸ்கி: முதல் படைவீடான திருப்பரங்குன்றம் பற்றி அறிய.., 
இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் பற்றி அறிய..,
நன்றி: படங்களுக்காக கூகுளுக்கும், மேலதிக தகவல்களுக்காக தினமலர் ஆன்மீக மலருக்கும் நன்றி உரித்தாகுக.