Showing posts with label புண்ணியம்தேடி ஒரு பயணம். Show all posts
Showing posts with label புண்ணியம்தேடி ஒரு பயணம். Show all posts

Friday, August 14, 2020

தழுவிய மகாதேவர்கோவில்- வடசேரி -புண்ணியம் தேடி ஒருபயணம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மகாதேவர் கோவில்கள் இருந்தாலும் அதில் தாணுலிங்கம்தழுவியலிங்கம்பூதலிங்கம் போன்ற ஆலயங்கள் இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவதலங்களாகும். தாணுலிங்கம்சிவதாணுபூதலிங்கம்ன்ற பேர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது இம்மாவட்டாத்தாரின் வழக்கம். 

Friday, January 31, 2014

ஹரியும் சிவனும் ஒன்று!! - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன்.  அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும். 

அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.


புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை.  எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு   சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!

 

முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.


மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.


பலவாறு முயற்சிச் செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சிச் செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த  ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்ச்னை மைந்தன் ஆஞ்சினேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.


ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.


நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.

கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,


ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.

சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. 

இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான். 
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. 


ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.




நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு. 

நான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.

அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.



எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?

இனி, அடுத்த வாரம் வேற ஊர் கோவில் பத்திப் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்.

Friday, January 03, 2014

திருப்பதி போனா திருப்பம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் ”திருப்பதி” ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சின்னமாகவும் உலக அளவில் புகழ் பெற்று விளங்குது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் , ஏழுமலைகளுக்கு இடையில் இருக்கும் ஒரு மலை உச்சியில் திருமலை யில் அமைந்திருக்கு. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். 

”திரு”ன்ற சொல்லுக்கு “எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட இறைச்சக்தி”ன்னு பொருள், ”பதி”ன்ற சொல்லுக்கு ”ஸ்தலம்”ன்னு பொருள். அதாவது, இறவன் குடிக்கொண்டிருக்கும் இடம்ன்னு பொருள் படும்படியா திருப்பதின்னு இத்தலத்திற்கு பேர் வந்திருக்கு.

வெங்கடேசப்பெருமாள் கோவில் அமைந்திருக்கும் மலைபகுதி திருமலைன்னும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்திருக்கும் மலையின் கீழ்ப்பகுதி திருப்பதின்னும் அழைக்கப்படுது. திருமலைன்னு அழைக்கப்படும் மலைப்பகுதி, உலகிலேயே இரண்டாவது பழமையான பாறை மலையமைப்பைக் கொண்டதாக புவிஅறிவியல் ரீதியாகக் கண்டறிப்பட்டிருக்கு.
 
திருப்பதிக் கோவில், யாரால, எப்போது கட்டப்பட்டதுன்னு ஆதாரம் ஏதுமில்லை. ஆனா, சங்கத் தமிழ் இலக்கியங்களில் திருமலையானது “திருவேங்கடம்”ன்ற பேரால் இடம் பெற்றிருக்கு.

இக்கோவில் தொண்டை மண்டல மன்னனா இருந்த “தொண்டைமான் இளந்திரையன்” என்பவரால் எழுப்பப்பட்டிருக்கலாம்ன்னு பல தமிழ்ப்புலவர்களின் பாடல்களிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஓரளவு கணிக்க முடிகிறது.

பின்னர் இக்கோவில் 4ம் நூற்றாண்டிலிருந்து பல தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கு. பல்லவ வம்சத்தைத் தொடர்ந்து சோழ வம்சம், விஜயநகர வம்சத்தவர்கள் பராமரிப்பில் இக்கோவில் இருந்து வந்திருக்கு.”திருவேங்டமலை” என்பது காலப்போக்கில் மாறி திருமலைன்ற பேர்ல நிலைத்து நின்று விட்டது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் ”புளிய மரம்”.

எல்லா இந்தியக் கோவில்களையும் போல இக்கோவிலும்,14ம் மற்றும் 15ம் ஆண்டுகளில் நிகந்த முஸ்லீம் ஊடுருவல் மற்றும் கொள்ளையிலிருந்து தப்பியது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது காலணிய ஆட்சியாளர்கள் இந்த கோவிலின் நடைமுறையில் தலையிடாமல் இருந்தனர்.

1933 ம் ஆண்டில் “மெட்ராஸ் பிரசிடென்சி” அரசாங்கம் ”திருமலா தேவஸ்தான கமிட்டி”ன்ற தன்னாட்சி குழுவை அமைத்து கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தது, அரசால் நியமிக்கப்படும் கமிஷ்னர் மூலம் இக்கோவில் நிர்மானிக்கப்படும் முறையை கொண்டு வந்தனர்.  ஆகம நெறிகளில் இந்த கமிட்டிக்கு அறிவுறை கூற ‘ஆகம ஆலோசனைக்குழு’ ஒன்றையும் உருவாக்கினாங்க. 

தினம் ஒரு பண்டிகைக் கொண்டாடினாலும் மே மாதத்தில் நடைபெறும் கங்கம்மா ஜாத்ரா, விஜயநகர திருவிழா, சந்திரகிரி கோட்டை திருவிழா மற்றும் ராயலசீமா நடனம் மற்றும் உணவுத்திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிளை கொண்டாடுறாங்க.


கோவில் வளாகத்திற்குள் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தைக்காரர்களுக்கு வசதியாக பேட்டரி கார் இயக்கப்படுது. அதுமட்டுமில்லாம, ஆங்காங்கு கழிப்பிட வசதியும் இருக்கு. 

மலைக்கோவில் மட்டுமில்லாமல் வராகஸ்வாமி கோவில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோவில், பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜா கோவில், சீனிவாசக் கோவில், பாபநாசம், ஆகாசக்கங்கை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவையும் பார்த்துட்டு வரலாம். கோவிலுக்குள் ஆண்கள் வேட்டி சட்டை, ஃபேண்ட் சட்டை, குர்தா போன்ற உடைகளும், பெண்கள் சேலை, சுடிதார், பாவாடைதாவணி போன்ற உடைகளிலும் மட்டுமே அனுமதி. செல்போன், கேமரா போன்றவை கோவிலுக்குள் அனுமதி இல்லை.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு,கொல்கத்தாவிலிருந்து விமானசேவையும், நிறைய ரயில் மற்றும் பேருந்து வசதியும் இருக்கு. சொந்த கார் இருந்தால் போகலாம். வாடகைகார் கொண்டுப்போவது பண விரயம். மேல் திருப்பதியில் எந்த இடத்திற்கும் போக வர இலவச பஸ் வசதி இருக்கு. இலவச தங்குமிடம் நிறைய இருக்கு. 50,100,250, 500 கட்டணம் அறைகளும் உண்டு. 100,520 ரூபாய் அறைகளில் சுடுதண்ணீர் வசதி இருக்கு.

பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலயே மொட்டை அடிக்கும் இடம் இருந்தாலும் அதுல க்யூல நின்னு மொட்டை அடிச்சுட்டு வருவதற்குள் எப்படியும் 3 இல்ல 4 மணி நேரம் ஆகிடும். ரூம் எடுத்து தங்கும் பக்தர்கள் வசதிக்கேற்ப அங்கயே மொட்டை அடிக்கும் இடம் இருக்கு. அங்க சீக்கிரம் அடிச்சுக்கிட்டு வந்துடலாம். இங்கு காணிக்கையாக தரப்படும் முடிகள் தர வாரியாக பிரிக்கப்பட்டு விக், சவுரி செய்யப் பயன்படுது. ரொம்பவும் சின்ன முடிகள்லாம் சாக்லேட் செய்ய மூலப்பொருள் தயாரிக்கப் பயன்படுது.


சில அதிசய தகவல்கள்:
கருங்கல்லில் செதுக்கப்பட்ட எல்லா சிலைகளிலும் சிற்பியின் உளிப்பட்ட இடம் தெரியும். ஆனா, திருப்பதி வெங்டாச்சலப்பதியின் சிலையில் அப்படிக் காண முடியாது. சிலையின் நகைகள்கூட பாலீஷ் போட்டதுப் போல பளப்பளக்குது.

கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 அடி உயரத்தில் இறைவனின் சிலை இருந்தாலும் 110பாரன்ஹீட் வெப்பத்திலேயே இருக்கு. அபிஷேகத்திற்கு முன் இறைவனின் நகைகளைக் கழட்டும்போது சூடாய் இருப்பதை அர்ச்சகர்கள் உணர்வர்.

ஹரியும் சிவனும் ஒன்று என்பது போல மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

காளி, பைரவர் போன்ற ருத்ர கடவுள்கள் மட்டுமில்லாமல் முருகன், விநாயகர் போன்ற சாத்வீக கடவுள்கள் கூட போர் ஆயுதங்கள் தாங்கி அருள் புரிகின்றனர். ஆனா, வெங்கடேசப் பெருமாள் மட்டும் நிராயுதபாணியாய் அருள் புரிகிறார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கம், வெள்ளி, வைர பொருட்கள் இருந்தாலும், நைவேத்தியத்துக்கு மண்சட்டியையே உபயோகிக்குறாங்க. தினமும் புது சட்டியிலேயே நைவேத்தியம் நடக்குது. நைவேத்தியப் பொருளான தயிர்சாதம், புளிச்சாதம், லட்டு, அதிரசம், வடைலாம் கோவிலின் குறிப்பிட்ட வாசல் தாண்டி வெளிவருவதில்லை. 
கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி செல்ல, கோவிலுக்கு சொந்தமான பஸ் உண்டு. பிரைவேட் ஜீப் வசதியும் உண்டு. சிலர் வேண்டுதல் காரணமாக கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரை நடந்து வருபவர்களும் உண்டு. அப்படி வருபவர்களுக்கு தனிப்பாதை உண்டு. அப்படிப்பட்ட பாதை ஒன்றைதான் மேல் படத்தில் காண்பது.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) கலக்குது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மை கூடுது. 
1180 கல்வெட்டுகள் கோவிலில் காணப்படுது. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளது.


இக்கோவில் ஆதிக்காலத்தில் முருகன் கோவிலாய் இருந்ததாகவும், அதை பெருமாள் கோவிலாய் மாறியதாகவும், அதனால்தான் இறைவனுக்கு பக்தர்கள் முன் அபிஷேகம் செய்யப்படுவதில்லைன்னும் ஒரு பேச்சு உலவுது. மேல இருக்கும் முருகன் மற்றும் ஏழுமையானின் படத்தில் இருக்கும் இடதுகையை  உற்றுப்பார்க்கும்போது புலப்படும்ன்னு தங்கள் வாதத்திற்கு ஆதாரம் காட்ட முனைகிறார்கள். 


திருப்பதி போகும்போது சோத்து மூட்டையை கட்டிக்கிட்டு சுமந்துக்கிட்டு போக வேணாம். ஏராளமான அன்ன சத்திரங்கள் இருக்கு. காலை 11 மணி முதல் இரவு 11 வரை இயங்குது. இரண்டு வகை பொறியல், சாம்பார், ரசம், மோர், சர்க்கரைப் பொங்கலுடன். அதுமட்டுமில்லாம நிறைய ஹோட்டல்களும் இயங்குது. அசைவ உணவு மேல் திருப்பதியில் இல்லை. புகை மற்றும் போதைப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டை மேல் படத்துல வச்சிருக்கேன். எல்லோரும் எடுத்துக்கோங்க. அடுத்த வாரம் புண்ணியம் தேடி வேற ஒரு கோவிலுக்கு போகலாம்.