Showing posts with label கோவில். Show all posts
Showing posts with label கோவில். Show all posts

Friday, November 06, 2015

அஷ்டலட்சுமி திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம்.  அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தாராம்.  அதன்படி சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைமாநகர் ன்ற இடத்துல, வங்க கடற்கரையோரம் 1974 ம் ஆண்டு இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டதாம்.  பெரும்பாலும் திருத்தலங்கள்லாம் ஆறுகள்,  குளங்கள் , கிணறுகள் இவைகளே தீர்த்தங்களா காணப்படும்.  ஆனா,  இக்கோவில் வங்க கடலையே தீர்த்தமாக (புஷ்கரணியாக) கொண்டிருக்கு. இது இக்கோவிலின் சிறப்பாகும். சரி, இனி கோவிலினுள் போகலாம் வாங்க ...,,


இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.  45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கு.  தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு.  அஷ்டலக்ஷ்மியின் சன்னதி விமானத்தில் ஒன்பது சக்திகள் அமைந்துள்ளன. அதேப்போன்று தரைப்பகுதி சக்கரமாகவும், மொத்த அமைப்பு மேருவாகவும், தரிசனத்திற்கு மேலே சென்று இறங்கிவரும் பாதை ”ஓம்” வடிவமாகவும் கட்டப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு .
   

மாகாலக்ஷ்மி சன்னதியை தரிசனம் செய்துட்டு வரும்போது 18 படிக்கட்டுகள் இருக்கு.  அவை 18 தத்துவங்களை நமக்கு உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.  சிற்ப ஆகமசாஸ்திரப்படி அவை குறுகலாக 28 அங்குல அளவு கொடுத்து அமைக்கப்பட்டிருக்கு.  மேலே ஏறிச் சென்றால் முதல் தளத்தின் கிழக்கே கஜலக்ஷ்மியையும், தெற்கே சந்தானலக்ஷ்மியையும், மேற்கே விஜயலக்ஷ்மியையும், வடக்கே வித்யாலக்ஷ்மியையும் ஆகிய நான்கு லக்ஷ்மிகளின் தரிசனம் மட்டுமே கிடைக்கும். அடுத்தடுத்த படிகளில் மேலே ஏறிச்சென்றால் இரண்டாம் தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள தனலட்சுமி தாயாரைத் தரிசிக்கலாம்.


தனலட்சுமி தாயாரைத் தரிசனம் செய்துவிட்டு மண்டபம் வழியேக் கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்யலட்சுமி, வடக்கே தைரியலட்சுமியையும் தரிசிக்கலாம்.  இந்த கோவில் ஓம் எனும் எழுத்தின் வடிவில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு ”ஓம்”காரதலம்ன்னு  அழைக்கப்படுது.   வற்றாத வங்கக்கடல் எப்போதும் ஓம் என்றே முழங்கிக் கொண்டு இருக்கிறது. இதனாலும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படலாம். 





நாம் மேலே ஏறி செல்லும் போது திருக்கோவிலின் தென்கிழக்கு பகுதியில் மஹாலட்சுமி திருமாலுக்கு மாலையிடும் காட்சியும், அருகில் பரமேஸ்வரன், பிரம்மா,இந்திரன், சூர்யன், சந்திரன், நாரதர், அக்னி, சுகர், வருணன், வாயு துர்வாசர், வசிஷ்டர் அனைவரும் இந்த மங்களகரமான காட்சியை பார்ப்பது கலையுணர்வுடன் வடிவமைத்திருப்பது காணத்தக்கது. தென்கிழக்கு பகுதியிலுள்ள வைகுண்ட தரிசனகாட்சி அழகான கூர்ம பீடத்தின் மேல் எட்டு இதழ்கள் 4 வீதம் கொண்ட பத்ம பீடத்தில் சாமரம் வீசுகின்றனர்.


ஆதிசேஷன் படுக்கையின் மேல் சங்கு, சக்கரம், கதை இவைகளுடன் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் திருமால் காட்சியளிக்கிறார் . ஒருபுறம் வைந்தேயரும், ஒரு புறம் விஸ்வக்சேனர் ,இந்திரர், சனகர் , சனந்தனர், சனாதனர் போன்றோரும் வைகுண்ட நாதனை தரிசனம் செய்யும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கு.  வடமேற்கு பகுதியில் அத்வைதம் அளித்த சங்கரரும், விஷிச்டத்வைதம் நிறுவிய ராமனுசஜரும், துவைததை நிறுவிய மத்வாச்சரியரும்கூட வீற்றிருக்கின்றனர். திருகோவிலின் வடமேற்கு பகுதியில் விஜயலக்ஷ்மியை தரிசனம் செய்து விட்டு வித்யாலக்ஷ்மியை தரிசிக்க வரும் வழியில் சித்ரவேலைபாட்டில் கல்விக்கடவுளான, லட்சுமிஹயகிரீவரும், அவரை துதிக்கும் நிகமார்ந்த மாகா தேசிகனையும் காணலாம்.

அடுத்தாற்போல் லட்சுமி உடனுறை வராக மூர்த்தியையும் தரிசிக்கலாம். கஜலட்சுமி சன்னதியில் தரிசனம் முடிந்த பின், பதினெட்டுப் படிகள் மேலே ஏறி இரண்டாம் தளத்திலுள்ள தனலட்சுமி சன்னதிக்கு செல்லும் வழியில் நிகமார்ந்த தேசிகன் திதி கொள்வதையும், திருமகள் காட்சித் தந்து பிரம்மச்சாரிக்கு பொன்மாரி பொழிவதையும் விவரிக்கும் கதை சிற்பங்கள்  காணப்படுது.  தனலட்சுமி சன்னதியின் முன்பு பெரும் வட்டமான மாடத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் மகாலட்சுமி திருவுருவமும் , தனலட்சுமியை சுற்றி வரும்போது தென்புறம் தட்சிணாமூர்த்தியும் மேற்குப்புறம் அனந்தசயன பெருமாள் திருவுருவமும், பாதசேவை செய்யும் அலைமகளும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும் காட்சித் தருகின்றனர். 


பிரதான கர்ப்பக் கிரகம் 10 அடி அகலத்தில் 14 அடி உயரம் உடையது. கருங்கல் சுவரால் மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கு. மூலவர் மகாலட்சுமி தாயார் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய வரத  முத்திரைகளுடன் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீனிவாசர்
 என்னும் பெயரோடு மகா விஷ்ணு அருள்புரிகிறார். மகாலக்ஷ்மியும் மஹா விஷ்ணுவும் திருமணக்கோலத்தில் நின்ற வண்ணம் உள்ளதால் எப்பொழுதும் மகாலக்ஷ்மிக்கு 9 கஜம் பட்டுப்புடவையும் மகா விஷ்ணுவிற்கு 10 முழ வேட்டியும் கட்டப்படுது.


இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். வில்வ மரம் லட்சுமிக்கு உகந்தது, அதில் லட்சுமி வாசம் செய்கிறாள் என சொல்வதுண்டு. வில்வத்தின் வேர் முதல் நுனி வரை லட்சுமி குடி இருப்பதாக ஐதீகம்.


இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வழிபாட்டு முறை பஞ்சராத்திர ஆகமம்.



இக்கோவிலில் மேலும் விஷ்ணுவின் தசாவதாரச் சன்னிதி, கமல விநாயகர் சன்னிதி, குருவாயூரப்பன் சன்னிதி, சக்கரத்தாழ்வார்- யோக நரசிம்மர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி, கருடாழ்வார் சன்னிதியும் அமைந்திருக்கு.


குழந்தை தாய்ப்பாலுக்கு பின் திட தான்ய உணவை முதன் முதலாக உட்கொள்ள தொடங்க, ஒரு நல்ல நாளில் இக்கோவிலில் இருக்கும் குருவாயூரப்பன் சன்னிதியில் பூஜை புணஸ்காரம் செய்து , திருமஞ்சனத் தீர்த்தத்தை தருகின்றனர்.  மேலும் திருப்பவித்ர உற்சவம், மார்கழிதிங்கள், கோகுலாஷ்டமி, தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை விழாக்கள்ல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுதாம்.



அஷ்ட லட்சுமிகளும், ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் கோவில் கொண்டிருப்பது உலகத்திலேயே வேறெங்கும் கிடையாதாம்.  ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது.


திருமண தோஷம் போக லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண யோகம் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கும், நோய் குணமாக ஆதிலட்சுமிக்கும், செல்வம் வேண்டி தனலட்சுமிக்கும், கல்வி செல்வம் பெற வித்யாலட்சுமிக்கும், மனத்தைரியம் பெற தைரியலட்சுமிக்கும் பூஜை செய்து அம்மனின் அருள் பெறுகின்றனர்.


வேறொருக் கோவில் பற்றிய அறிய புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் மீண்டும் சந்திப்போம். நன்றி! வணக்கம்.

இது ஒரு மீள் பதிவு

Friday, February 07, 2014

அருள்மிகு கரும்பழத்து கைலாசத்து மகாதேவர்- புண்ணியம்தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி ஒரு பயணத்துல இந்த வாரம் நாமப் பார்க்கப் போறது அருள்மிகு கரும்பழத்து கைலாசத்து மகாதேவர் ஆலயம். இந்த ஆலயம் வயல் பரப்பின் அருகே பசுமையாக அழகாகக் கட்சியளிகிறது. இந்த இடத்தின் பெயர் கருப்புகோட்டை என அழைக்கபடும், இந்த இடம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ரயில்வே நிலையத்தின் பின்புறம் இருக்கிறது. ஆனா, இதற்கு செல்லும் வழி நாகர்கோயில் புதுகிராமம் வழியாகவும், சுசிந்தரம் தேரூர் வழியாகவும் செல்ல வழி இருக்கிறது. வாங்க கோவிலுக்குள் போகலாம்...,

இந்த இடத்திற்குp பெயர்தான் கருப்புகோட்டையே தவிர இங்க எந்த கோட்டையும் இல்லை. ஆனா இங்க ராணுவமுகாம் இருந்ததாகவும், அகழ்வாராய்ச்சியில் பழைய காலத்து வாள் கிடைத்ததாகவும் சொல்லபடுகிறது. ஆனா, இந்த இடத்தை சுற்றிலும் கரும்பு காடாகத்தான் இருந்ததாம்.


இப்பகுதிகளில் கரும்புதான் பெரும்பாலும் பயிர் செய்யபட்டதாம். இதற்கு சாட்சியாக கரும்பிலிருந்துச் சர்க்கரையைப் பிரிக்கும் செக்கு அழிந்த நிலையில் இன்றும் இந்தப் பகுதிகளில் இருக்கு. கோவிலுக்கு பிரதான நுழைவு வாசல் கிழக்கு வாசலாக இருந்தாலும் கூட,  தெற்குத் திசையைத் தவிர எல்லாத் திசையிலயும் நுழைவு வாசல் இருக்கு.  


கோவிலுக்கு வெளியே நாகச் சிலைகளும், அதன் அருகில் விநாயகர் விக்கிரகமும் இருக்கு. வாங்க! முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்லலாம்!!

இக்கோவிலில் கிழக்கு நோக்கிய ஆவுடையார் திருக்கோலம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. திருக்கோவிலின் முன்பு, நந்தி மண்டபம் தனியேக் காணப்படுகிறது.  இந்தத் திருக்கோவிலின் கட்டிட அமைப்பு சோழர் கால அமைப்பு கொண்டதாகவும், ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. தஞ்சை பெரியகோவிலின் மாதிரி வடிவம் கொண்டது இக்கோவில். இங்கு தாயார் சன்னதி முதலில் இல்லாமல் இருந்துப் பிற்காலத்தில் கட்டப்பட்டது. ஆவுடையார் பெயர் அருள்மிகு கரும்பழத்து கைலாசத்து மகாதேவர். தாயார் பெயர் சிவகாமி அம்பாள் . 
   
இந்த நந்திமண்டபத்தின் பின்புறம் நேரே இருப்பது மூலவர் சன்னதி. இது மிகவும் பழமையானக் கோவில் என்றும் இந்திரன் வரும்போது அவனுக்கு இங்கே இருக்கும் தஷ்சிணாமூர்த்தி வழிகாட்டியதாகவும் இக்கோவிலுக்கு வரலாறு உண்டு .

இந்தக் கோவிலின் தூண்களில் நிறைய வளையங்கள் காணப்படுகிறது. இதுஎல்லாம் இந்த கோவிலின் வயதைக் குறிக்கும் ஆண்டு வளையங்கள் எனச் சொல்லப்படுது. இக்கோவில் உருவான வருடத்தைப் பற்றியக் குறிப்புகள் எனவும் சொல்லப்படுகிறது. இதன் உத்திரத்தின் பகுதியில் நிறைய உருவங்களின் தலை பகுதிகள் செதுக்கப்பட்டிருக்கு. அவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்தபல்வேறு சித்தர்கள் அங்கே வழிபாடு செய்ததன் நினைவாக பொறிக்கபட்டுள்ளதாம்.

இந்தத் திருக்கோவிலின் சிறப்பு என்னனா, எல்லாக் கோவில்களிலும் நவக்கிரக சன்னதி கீழேதான் இருக்கும். ஆனா, இக்கோவிலில் மட்டும் உத்திரத்தில் இருக்கிறது.  இது ஒரு பரிகார அமைப்பு என சொல்லபடுகிறது. இதற்குத் துணையாக 8 சித்தர்களும் நர்த்தன நாயகிகளும் நவக்கிரகங்களுக்குத் துணையாக இருக்கின்றனர்.

ஒன்பதாவதாக சுப்பிரமணியர் நவகிரகங்களுக்கு நாயகராக இருக்கிறார். மேலும் சுப்பிரமணியர் சித்தர்களின் முதன்மையானவர் எனவும் சொல்லபடுவதால் இங்கு எட்டு ராசிகளுக்கு எட்டு சித்தர்களையும், ஒன்பதாவதாக சுப்ரமணியரே இருந்து பரிகாரம் செய்வதாகவும் இது விசேஷ அமைப்பு எனவும் சொல்லபடுகிறது. மேலும் சிறப்பு அம்சமாக இந்த உதிரத்தில் இருக்கும் அமைப்புடைய நவக்கிரக சன்னதிக்கு நேர் கீழே நின்று மூலவரை தரிசிக்கும் போது நவக்கிரகங்களின் பார்வையும், மூலவரின் பார்வையும், அம்பாளின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில்  கிடைக்கும். இது வேறு எந்த கோவிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம்.

இரண்டுப் பிரகார அமைப்புக் கொண்டது இக்கோவில்.  உள்பக்கமும், வெளிபக்கமுமாக இதில் அந்தந்த தெய்வங்கள் இருக்கும் சன்னதிக்கு பின்புறம் இருக்கும் சுவரில் வேலைபாடுகள் மிக்க சில வரைபடங்கள் உள்ளன. அவற்றை பற்றியக் குறிப்புகள் தெரியவில்லை . சுவர்களிலெல்லாம் நிறைய சிற்ப வேலைபாடுகளுடன் அருமையாக காட்சியளிக்கிறது இந்த திருக்கோவில்.

அதேப்போல தட்சிணாமூர்த்திதியும் மதுரை போன்றப் பெரிய கோவில்களில் உள்ள அமைப்பு போல படியேறி சென்று கும்பிடும் அமைப்புடன் இருக்கிறது இது ஒரு விஷேச அமைப்பு என சொல்லபடுகிறது. 

அதுப்போல இங்க இருக்கிற தட்சிணாமூர்த்தி சன்னதியின் பக்கத்து சுவரில் மணிகள் கோர்த்தது போன்ற அமைப்பு காணபடுகிறது. இது இந்த கோவிலின் ஆண்டு கணக்கீடு என சொல்லபடுகிறது. பல்வேறு வகையான கணக்கீட்டு முறைகளும் இங்கே நடைமுறையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதற்கு இங்கே உள்ள கல்வெட்டுகள் சான்று என அங்கிருப்பவர்கள் சொன்னார்கள்.

வெளிப் பிரகாரத்தில் இருக்கும் விநாயகர் கன்னி விநாயகராகவும், உள் பிரகாரத்தில் பிரசன்ன விநாயகராகாவும் வீற்று இருந்து நமக்கு அருள் பாலிக்கிறார். 

கோவிலின் சுவர்களிலெல்லாம் நிறைய கல்வெட்டுகள் இருக்கு. கோவிலைப் பத்தின குறிப்புகள், முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எழுத்து முறைகளும் இந்தக் கால நடைமுறைக்கேற்ப எளிமையாக நாமேப் படித்துத் தெரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் இருகின்றன .

மூலவர் விமானத்தில் மகா விஷ்ணுவின் சிலைவடிவம் காணப்படுகிறது. இங்க சைவ வழிபாடும், வைணவ வழிபாடும் சேர்ந்தே இருந்திருக்கின்றது.
மூலவர் கோபுரத்தில் வைணவ குறியீடுகளும் குறிக்கப்பட்டிருக்கு.


மேலும், இக்கோவில் கோபுரத்தில் பிரம்மாவும் வீற்று இருக்கிறார். பக்கவாட்டு சுவர்களில் இங்கே வழிப்பட்ட சித்தர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  அதில் பாம்பு வடிவத்தில் சுருண்டு இருக்கும் சித்தரும், குரங்கு வடிவ சித்தரும் மிகவும் விசேஷமானவை.  தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வரும் சிவப்பெருமானுடைய நட்சத்திரமான திருவாதிரையில் நேரடியாக சூரியபகவான் மூலவரை தன்னுடைய கதிர்களால் வழிபடுகின்றான். அதில் திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாட்களுக்கு பாதியாகவும் நட்சத்திரம் அன்று முழுவதுமாகவும் அதன் பின்னால் வரும் இரண்டு நாட்களுக்கு சூரிய கதிர் பாதியாகவும் மூலவர் மேல் விழுவது மிகவும் அதிசயம். 
மேலும் மாசி மாதம் வரும் ஆயில்ய நட்சத்திரதன்றும் தன்னுடைய கதிர்களால் மூலவரை வழிபாடு செய்கிறான் ஆதவன். இந்த ஆயில்ய நட்சத்திரம் நாகதோஷத்திற்கானப் பரிகார நட்சத்திரம் என்பதால் இங்க நாக தோஷப் பரிகாரமும், திருமணத்தடை, குழந்தை பேரு,  தேகரட்சை போன்ற பரிகாரங்களும் செவ்வனே செய்யபடுகின்றன. மேலும் மூலவர் திருமேனி மேல்,  மருந்துகள் கலந்த பாத்திரத்தில் இருந்து சொட்டுச் சொட்டாக வடநாட்டு கோவிகளில் இருப்பது போல் விழுகிறது.   பிரகாரத்தின் உள்புறம் பைரவர் சன்னதியும் இருக்கு.

இங்கே தெரிவது ருதிராட்சமரம். இதன் பக்கத்தில் இருக்கும் இந்த மேடை 1000 வருஷங்களுக்கு முன் இங்கே ஒரு சித்தர் திருவாதிரை நட்சத்திரம் அன்று ஜீவ சமாதியான பீடம்.  இது கோவில் நிர்வாகம் பண்ணுகிரவர்களுக்கே தெரியவில்லை. பிரசன்னம் பார்த்ததில் இந்த விஷயங்கள் தெரியவந்ததிருக்கு. நாமும் அந்த சித்தர் சமாதியில் நமச்சிவாய மந்திரத்தை சிறிதுநேரம் மனதில் தியானிப்போம். நன்மைகள் எல்லாரையும் வந்து சேரட்டும்.
  
இங்க இருக்கிற கல்வெட்டைப் போல் ஏழு கல்வெட்டுக்கள் கோவிலை சுற்றி காணப்படுகின்றது.  அதில் எந்தெந்த விழாக்கள் இங்க கொண்டாட படுகின்றன!? மேலும் எதற்காக நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன!? விளக்கு எரிக்க எண்ணை வாங்க சில நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை எடுத்து கொள்ள சொல்லி இருக்கும் குறிப்பு.  அன்னதானம் செய்ய சில நிலங்களில் இருந்து வரும் வருமானங்களில் இருந்துவரும் நிலங்கள் பத்தின குறிப்புகள் இதில் குறிக்கபட்டுள்ளது.


மேலும் சமீபத்தில் மறைந்த திருவிதாங்கூரின் கடைசி மகராஜா கையில் ஒரு எந்திரம் வைத்து கொண்டு அவர்கள் ஆட்சியில் இருந்த முக்கியமான 41 கோவில்கள் பற்றிய குறிப்புகளோடு எல்லா தெய்வங்களின் ஆசிகளை பெறவேண்டி மூன்று வருடம் முன்பு யாத்திரை புறப்பட்டபோது எல்லா கோவில்களிலும் மூன்று நிமிடங்கள் மட்டும்தான் இருந்தாராம். இந்த சிவன் சன்னதியில் 15 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்திருந்தாராம். அதை இங்கே இருக்கும் மக்கள் சொல்லி மகிழ்கின்றனர்.  

கழுதைத் தேஞ்சுக் கட்டெறும்பு ஆனக் கதைப் போல இந்தத் திருக்கோவில் தெப்பகுளம் இப்பொழுது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி இந்த நிலையில் இருக்கிறது.  இந்தத் தீர்த்தக் குளத்தின் பெயர் நயினாமொழி தீர்த்தம்.


மேலும், இந்த திருக்கோவிலின் பெருமைகளை அறிந்துக் கொள்ள ஊர் பெரியவரான அழகப்பன் என்பவரையும் (98946 84301,04852 - 275899) கோவில் பூசாரி சந்திர சேகர் (98949 32161)என்பவரையும் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெற்று கொள்ளலாம்.

மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம் தேடி போறப் பயணத்தில் வேறு ஒரு கோவிலில் இருந்து சந்திக்கலாம்.

Friday, January 31, 2014

ஹரியும் சிவனும் ஒன்று!! - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன்.  அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும். 

அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.


புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை.  எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு   சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!

 

முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.


மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.


பலவாறு முயற்சிச் செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சிச் செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த  ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்ச்னை மைந்தன் ஆஞ்சினேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.


ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.


நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.

கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,


ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.

சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. 

இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான். 
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. 


ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.




நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு. 

நான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.

அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.



எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?

இனி, அடுத்த வாரம் வேற ஊர் கோவில் பத்திப் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்.