நீலப்போர்வையாய் விரிந்திருக்கும் வானம். அதில் நாயகனாய் ஒரே ஒரு சூரியன், சூரியனுக்கு நாயகியாய் ஒரு நிலா, துணை நடிகர்களாய் ஒரு நூறு நட்சத்திரங்கள், நம் நல்லது கெட்டதுக்கு பழிபோட ஒன்பது கிரகங்கள், பஞ்சுப்பொதியாய் மேகம், அவை மோதிக்கொள்ளும்போது உண்டாகும் இடி, மின்னல்.. மழைநேரத்துல வரும் அழகான வானவில்.. இது மட்டும்தான் நமக்கு தெரிஞ்ச வானம் என்கிற விண்வெளி. ஆனா, இதுமட்டுமில்லை விண்வெளி.
பூமியிலிருந்து 100கிமீ தூரத்திலிருந்து விண்வெளி ஆரம்பிக்குது. விண்வெளி கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதியே விண்வெளின்னு சொல்லப்படுது. நம்ம கண்ணுக்கு தெரியாத பல நூறு கோள்களும் விண்வெளியில் அடக்கம். பலவிதமான சமூக தேவைகளுக்கான விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பது பூமி என்கிற இந்த கிரகத்தில் வசிக்கும் நம்மிடம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கு. விண்வெளி பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், விண்வெளி ஆராய்ச்சியினை ஊக்கப்படுத்தவுமென 70உலக நாடுகள் சேர்ந்து அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ’உலக விண்வெளி’ வாரமாக கொண்டாடுகின்றனர்.
1957ம் ஆண்டு அக்டோபர் மாசம் 4-ம் தேதி மனிதனால் உண்டாக்கப்பட்ட முதல் செயற்கை விண்கலமான ’ஸ்புட்னிக்-1’ விண்ணில் ஏவப்பட்டது. 1967ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மாநிலங்களின் செயல்பாடுகளைக் காணுதல் மற்றும் சந்திரன் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட புற விண்வெளிகளை அமைத்திக்கான நடவடிக்கைக்காக பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பமானது. இது இரண்டையும் நினைவில் கொண்டே இந்த நாளினை விண்வெளி வாரமா கொண்டாட 1999ல் முடிவெடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் ’உலக விண்வெளி வார’ கொண்டாட்டத்திற்காக உலக விண்வெளி வார கழகம் ’விண்வெளியில் புதிய உலகத்தை ஆராய்தல்’ என்பதையும் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மௌனசாட்சிகளில் இன்னிக்கு பார்க்கப்போறது ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையமான வைனு பாப்பு வானாய்வகத்தை பத்தி பார்க்க போறோம். இது வேலூர் மாவட்டத்தில் காவலூர் என்ற இடத்தில் இருக்கு.
ஒரு வானியல் ஆராய்ச்சி மையத்தினை எங்க வேணும்ன்னாலும் அமைச்சிட முடியாது. அதுக்குன்னு சரியான சூழல் வேணும். வான்வெளியை கூர்ந்து நோக்க சிறிது உயரமான இடமாகவும், வருடத்துக்கு பல நாட்கள் மேகமூட்டமில்லாமலும், நகர வெளிச்சத்தால் பாதிக்கப்படாமலும் அவ்விடம் இருக்கனும். பத்து பொருத்தமும் பக்காவா வேலூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் அமைஞ்சுது.
காவலூர் வானியல் ஆய்வு மையம் நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு. இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 725 மீட்டர் உயரத்திலிருக்கு. தீர்க்கரேகையாக 78 ° 49.6 கிழக்கும் 'அட்சரேகையாக 12 ° 34.6 வடக்குமா இவ்விடம் அமைஞ்சிருக்கு. இந்த ஆய்வகம் நகர விளக்குகள் மற்றும் தொழில்துறை பகுதிகளின் சத்தத்திலிருந்தும், நகர விளக்குகள், வாகனங்களின் வெளிச்சத்திலிருந்தும் தேவையான அளவில் தொலைவிலிருந்து விலகி இருக்குது. பூமத்தியரேகைக்கு நெருக்கமாகவும் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு அரைவட்டங்களையும் சமமாக கவனிக்க இயலும் என்ற காரணத்தாலேயே இவ்விடம் தேர்வு செய்யப்பட்டது. கூடுதலாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இவ்விடத்தின் தீர்க்கரேகை செல்வதால் இங்கிருந்து தெற்கு வான்பொருட்களை கவனிக்கும் வானியல் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியா மேகநாத் சாஹா, சுப்ரமணியன் சந்திரசேகர் மாதிரியான அற்புதமான விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகளை உலகுக்கு அளித்துள்ளது. ஆனாலும், விண்வெளியைக் கண்காணிக்கும் வானாய்வில் இந்தியா இன்னமும் போதிய திறனின்றி உள்ளது”. அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுநர் ஹார்லோ ஷாப்லே (1885- 1972) என 1947இல் சொன்னார், விண்வெளியை நவீனத் தொலைநோக்கிகளால் ஆராயும் வசதிகளும், அதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இந்தியாவில் இல்லை என்பதையே அவர் அப்படி சுட்டிக்காட்டினார்.
அவரது மனக்குறை வெகு விரைவில் நீங்கியது மட்டுமில்லாம, உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்படியாக ஆசியாவிலேயே மிகப் பெரிய வானாய்வுத் தொலைநோக்கியை தமிழகத்தில் நிறுவப்பட்டு 1986ம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. இங்கிருக்கும் 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கிதான் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்
2.34மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி இருக்கும் பிளாட்பார்ம்..
உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்படி ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் ஆய்வகத்தை உருவாக்க காரணமான விஞ்ஞானியின் பெயர் வைணு பாப்பு. இவர் கேரளத்தின் தலச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட, தீயா சமூகத்தைச் சேர்ந்த சுனன்னா பாப்பு, ஆந்திர மாநிலத்தின் நிஜாமையா வானாய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். சுனன்னா பாப்புவின் மகனாக, ஆகஸ்ட் 10, 1927, ஆக. 10 சென்னையில் வைணு பாப்பு பிறந்தார். வைணு பாப்புவின் முழு பெயர் மனாலி கல்லட் வைணு பாப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்ற பாப்பு, கல்வி உதவித்தொகை பெற்று இங்கிலாந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். அப்போது தனது சக ஆராய்ச்சியாளர்களான பார்ட் போக், கார்டன் நியூகிர்க் ஆகியோருடன் இணைந்து, ஒரு புதிய வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ‘பாப்பு- போக்- நியூகிர்க்’ வால்நட்சத்திரம் என பெயரிடப்பட்டது (Bappu-Bok-Newkirk comet- 1949). அதற்காக, பசிபிக் வானியல் சங்கத்தின் டோனோ வால்நட்சத்திரப் பதக்கம் பெற்றார்.
1952ல பிஎச்.டி. பட்டம் பெற்றவுடன், கார்னெகி மதிப்பூதியம் பெற்று, அமெரிக்காவின் பாலோமர் வானாய்வகத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோது, அமெரிக்க விஞ்ஞானி ஓலின் சாடோக் வில்சனுடன் இணைந்து, விண்மீன்களிடையிலான தொலைவைக் கண்டறியும் தேற்றத்தை உருவாக்கினர். விண்மீன்களுக்கு இடையிலான விண்ணிடைத் தொலைவுகளை அளவிட அவற்றின் ஒளிக்கதிர் மாறுபாடு உதவும் என்பதை அவர்கள் நிரூபித்ததால், அது ‘வில்சன்- பாப்பு விளைவு’ (Wilson- Bappu effect) என்றே அழைக்கப்படுது.
1953-இல் வைணு பாப்பு நாடு திரும்பினார். உத்தரப்பிரதேச அரசின் நைனிடால் வானாய்வகத்தை மேம்படுத்தும் பணி பாப்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வானாய்வகத்தின் இயக்குநராக விளங்கிய பாப்பு அதை அபிவிருத்தி செய்தார் (1954- 1960) 1960-இல் தமிழகத்தில் கொடைக்கானலிலிருந்த வானாய்வகத்தின் இயக்குநராக பாப்பு நியமிக்கப்பட்டார். அங்கு சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண தொலைநோக்கி மட்டுமே இருந்தது. அதையும் நவீனப்படுத்தினார் பாப்பு.
அப்ப, இரவிலும் துல்லியாமாக வான்வெளியை ஆராய புவியியல் ரீதியாக மிகப் பொருத்தமான இடத்தை அவர் பல்லாண்டுகளாகத் தேடினார். அது உயரமான இடமாக இருப்பதுடன், மேகமூட்டமில்லாத இடமாகவும், சூழல் பாதிக்கப்படாத- ஒளி மாசு அற்ற பகுதியாகவும் இருந்தால் மட்டுமே, வானிலுள்ள பொருள்களை மிகத் துல்லியமாக உற்றுநோக்கிக் கண்காணிக்க முடியும். தனது நீண்ட நெடிய தேடுதலின் விளைவாக, ஜவ்வாது மலையிலுள்ள காவலூர் என்ற இடத்தைக் கண்டறிந்தார் பாப்பு.
I2.3 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி.
தான் கண்டெடுத்த காவலூரில் அரசின் உதவியுடன் ஒரு வானாய்வகத்தை பாப்பு நிறுவினார் (1968). ஆரம்பத்தில் 38 செ.மீ. விட்டமுடைய தொலைநோக்கியுடன் காவலூர் வானாய்வகம் தனது பணியைத் துவக்கியது. வியாழன் கிரகத்தில் ஏற்படும் மாறுபாடுகளை ஆராய, 1971-இல் 61 செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி இங்கு நிறுவப்பட்டது. இவை இரண்டுமே பாப்புவின் மேற்பார்வையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.
மூன்றாவதாக, நிறங்களைப் பிரிக்கும் மேகநிற மானியுடன் கூடிய, நுட்பமான மின்னணுவியல் தொலைநோக்கி 100 செ.மீ. விட்டத்தில் 1972-இல் நிறுவப்பட்டது. இந்தத் தொலைநோக்கிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கி உலகின் கவனத்தை ஈர்த்தது. வியாழன் கிரகத்தின் நிலவான கானிமீடுக்கு வளிமண்டலம் இருப்பதை 1971-இல் காவலூர் வானாய்வகம் கண்டுபிடித்தது. யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வளையம் இருப்பதையும் 1977-இல் பாப்பு தலைமையிலான விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.
இவ்வளவு செய்தும் வைணு பாப்புக்கு திருப்தி ஏற்படலை. வானை அளக்கும் மிகத் துல்லியமான மிகப்பெரிய அதிநவீன தொலைநோக்கியுடன் கூடிய வானாய்வகம் அமைப்பது அவரது கனவாக இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே (1786) வானியல் ஆய்வுகள் இந்தியாவில் தொடங்கி இருந்தாலும், வானாய்வு நிறுவனங்களும் அதற்குத் தகுதி படைத்த வல்லுநர்களும் வளர்ச்சி பெறவில்லை. இந்நிலையை மாற்ற விரும்பிய வைணு பாப்பு, அரசிடம் நிதியுதவி பெற்று, சுய அதிகாரம் கொண்ட இந்திய வானியற்பியல் கழகத்தை (Indian Institute of Astrophysics- IIA) ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக 1971-இல் பெங்களூரில் நிறுவினார். வானியலில் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் இங்கு துவக்கப்பட்டது. தவிர, இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், கொடைக்கானல், காவலூர், ஹன்லே (லடாக்), கௌரிபிதனூர் (பெங்களூரு) ஆகிய இடங்களிலுள்ள வானாய்வகங்கள் செயல்படுது. நாட்டின் பிரதான ஆராய்ச்சி மையங்களுள் இதுவும் ஒன்று.
பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்டு இந்திய வானியற்பியல் கழகம் இயங்கியபோதும், காவலூரையே தனது பணிக்களமாகக் கொண்டு, தீவிர ஆய்வுகளில் பாப்பு ஈடுபட்டார். தனது பெருங்கனவான மாபெரும் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அவர் தீவிரமாக உழைத்தார். அவரது முயற்சியின் பலனாக, 2.34 மீட்டர் விட்டமுடைய அதி நவீன தொலைநோக்கி காவலூரில் 1985-இல் நிறுவப்பட்டது. 1986-இல் அது செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், தனது கனவு நிறைவேறும்முன், 1982, ஆக. 19ல் வைணு பாப்பு மறைந்தார். அவரது சிறப்பை உணர்ந்த அரசு, காவலூர் வானாய்வகத்துக்கும், புதிய தொலைநோக்கிக்கும் வைணு பாப்புவின் பெரையே சூட்டி கௌரவித்தது (Vainu Bappu Observatory).
சுமார் 40கி.மீ. தொலைவிலும் இருக்கும் 25 பைசா நாணயத்தையும் மிகத் துல்லியமாகக் காணக்கூடிய அளவுக்கு திறன் படைத்தது இந்த தொலைநோக்கி. இதன்மூலம், உலக அளவில் பிரமாண்டமான வானியல் தொலைநோக்கிகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. பல புதிய வானியல் நிகழ்வுகள் இதன்மூலம் கண்டறியப்பட்டது.
பெல்ஜியம் அறிவியல் கழகம், அமெரிக்க வானியல் சங்கம் ஆகியவற்றின் கௌரவ உறுப்பினராக பாப்பு இருந்தார். சர்வதேச வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும் (1967- 1973), தலைவராகவும் (1979- 1982) வைணு பாப்பு செயல்பட்டுள்ளார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1970), பத்மபூஷண் விருது (1981) ஆகியவற்றை இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது. இந்தியாவின் வானியல் ஆய்வில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய வைணு பாப்புவால், வானையும் அளக்கும் திறமை நமக்கு வாய்த்தது.
2.3மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி..
1மீ தொலைநோக்கியின் உதவியுடன் 1972 வியாழன் கோளின் நிலாவான கானிமீடிற்கு வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 1977 - யுரேனசு கோளைச் சுற்றி வளையம் இருப்பது பட்டாச்சார்யா, குப்புசாமியால் கண்டுபிடிக்கப்பட்டு வைணு பாப்புவினால் தந்தியனுப்பப்பட்டு அனைத்துலக வானியல் சங்கம் - ஐ ஏ யூ-வினால் பதிவு செய்யப்பட்டது .
45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் 1988 பிப்ரவரி 17ல் ஒரு சிறுகோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா கண்டுபிடித்த இருபதாம் நூற்றாண்டின் முதல் (சிறிய) கோள் அதுவே. அதற்கு, கணித மேதை ராமானுஜன் நினைவாக 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது .
சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் இருப்பதை 1984ல்தான்காவலூரிலிருந்து முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குது என பார்வையாளர்களுக்கு காட்டப்படும். வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ பார்வையாளர் தொலைநோக்கி மூலம் இரவு நேரத்தில் வானத்தினை பார்க்க அனுமதிக்கப்படும்.
சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 200கிமீ தூரத்தில் இருக்கு. வாணியம்பாடி வரை ரயில்ல போகலாம். அல்லது பேருந்து மூலமாகவும் போகலாம். வேலூர், ஓசூரிலிருந்துலாம் நேரடி பேருந்து இருக்கு. இல்லன்னா, தின்பண்டம், அண்டா குண்டா, அடுக்குச்சட்டி, உடைகள், மோதிரம், செயின், பழங்கள்ன்னு சீரோடு வந்து நம்ம வீட்டில் விருந்து சாப்பிட்டு மறுசீராய் உடை, பழம், தேங்காய்லாம் வாங்கிட்டு காவலூர் போகலாம்.
தான் உள்ளவரை இந்தியர்களின் அறிவுத்திறமையையும், வைணு பாப்புவின் அயராத உழைப்பினையும் மௌனமாய் உலக அரங்கில் பறைச்சாற்றும் வைணு பாப்பு வானாய்வகத்தை பார்க்க எப்போ வர்றீங்க சகோஸ்?!
நன்றியுடன்,
ராஜி.
//வைணு பாப்புவின் அயராத உழைப்பினையும் மௌனமாய் உலக அரங்கில் பறைச்சாற்றும் வைணு பாப்பு வானாய்வகத்தை பார்க்க எப்போ வர்றீங்க சகோஸ்?!//
ReplyDeleteவந்துட்டாப் போச்சு!
வெல்கம்... வெல்கம்....
Deleteவீட்டில் விருந்து வைக்கும் முன்பே மொய்ப்பணத்தைக் கண்டால் மயக்கம் வருதே...
ReplyDeleteஇருந்தாலும் என்னால முடிந்த தேவகோட்டை சீடையை வாங்கிட்டு வர்றேன்.
மொய்ப்பணமா?! நான் கேக்கவே இல்லியே!
Deleteசீடைலாம் பல்லு இருக்கவுங்க சாப்பிடுறது. நான் எப்படியாம்?!
இந்த ஆய்வகத்தைப் பார்க்கவேண்டும் என்ற நெடுநாள் ஆசை இப்பதிவு மூலமாக நிறைவேறியது. நேரில் பார்க்கும் ஆவல் மிகுந்தது.
ReplyDeleteஒருமுறை நேரில் வாங்கப்பா. ஜவ்வாது மலை ஆலங்காயம் பக்கமா இருக்கு. நல்ல கிளைமேட். அங்கயே தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஹோட்டல் ஒன்னு இருக்கு.
Deleteமிகச் சிறப்பான பகிர்வு அக்கா....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteமனம்விழைகிறது வந்து காண ஆனால் உடல் சொல்கிறது உன்னால் முடியாது என்று
ReplyDeleteமுடியாததுன்னு எதுமே இல்லப்பா. உங்களை மாதிரியான சீனியர் சிட்டிசன்களுக்குன்னு வீல் சேர் வசதி இருக்கு.
Delete