Friday, November 06, 2015

அஷ்டலட்சுமி திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம்.  அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தாராம்.  அதன்படி சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைமாநகர் ன்ற இடத்துல, வங்க கடற்கரையோரம் 1974 ம் ஆண்டு இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டதாம்.  பெரும்பாலும் திருத்தலங்கள்லாம் ஆறுகள்,  குளங்கள் , கிணறுகள் இவைகளே தீர்த்தங்களா காணப்படும்.  ஆனா,  இக்கோவில் வங்க கடலையே தீர்த்தமாக (புஷ்கரணியாக) கொண்டிருக்கு. இது இக்கோவிலின் சிறப்பாகும். சரி, இனி கோவிலினுள் போகலாம் வாங்க ...,,


இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.  45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கு.  தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு.  அஷ்டலக்ஷ்மியின் சன்னதி விமானத்தில் ஒன்பது சக்திகள் அமைந்துள்ளன. அதேப்போன்று தரைப்பகுதி சக்கரமாகவும், மொத்த அமைப்பு மேருவாகவும், தரிசனத்திற்கு மேலே சென்று இறங்கிவரும் பாதை ”ஓம்” வடிவமாகவும் கட்டப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு .
   

மாகாலக்ஷ்மி சன்னதியை தரிசனம் செய்துட்டு வரும்போது 18 படிக்கட்டுகள் இருக்கு.  அவை 18 தத்துவங்களை நமக்கு உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.  சிற்ப ஆகமசாஸ்திரப்படி அவை குறுகலாக 28 அங்குல அளவு கொடுத்து அமைக்கப்பட்டிருக்கு.  மேலே ஏறிச் சென்றால் முதல் தளத்தின் கிழக்கே கஜலக்ஷ்மியையும், தெற்கே சந்தானலக்ஷ்மியையும், மேற்கே விஜயலக்ஷ்மியையும், வடக்கே வித்யாலக்ஷ்மியையும் ஆகிய நான்கு லக்ஷ்மிகளின் தரிசனம் மட்டுமே கிடைக்கும். அடுத்தடுத்த படிகளில் மேலே ஏறிச்சென்றால் இரண்டாம் தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள தனலட்சுமி தாயாரைத் தரிசிக்கலாம்.


தனலட்சுமி தாயாரைத் தரிசனம் செய்துவிட்டு மண்டபம் வழியேக் கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்யலட்சுமி, வடக்கே தைரியலட்சுமியையும் தரிசிக்கலாம்.  இந்த கோவில் ஓம் எனும் எழுத்தின் வடிவில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு ”ஓம்”காரதலம்ன்னு  அழைக்கப்படுது.   வற்றாத வங்கக்கடல் எப்போதும் ஓம் என்றே முழங்கிக் கொண்டு இருக்கிறது. இதனாலும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படலாம். 





நாம் மேலே ஏறி செல்லும் போது திருக்கோவிலின் தென்கிழக்கு பகுதியில் மஹாலட்சுமி திருமாலுக்கு மாலையிடும் காட்சியும், அருகில் பரமேஸ்வரன், பிரம்மா,இந்திரன், சூர்யன், சந்திரன், நாரதர், அக்னி, சுகர், வருணன், வாயு துர்வாசர், வசிஷ்டர் அனைவரும் இந்த மங்களகரமான காட்சியை பார்ப்பது கலையுணர்வுடன் வடிவமைத்திருப்பது காணத்தக்கது. தென்கிழக்கு பகுதியிலுள்ள வைகுண்ட தரிசனகாட்சி அழகான கூர்ம பீடத்தின் மேல் எட்டு இதழ்கள் 4 வீதம் கொண்ட பத்ம பீடத்தில் சாமரம் வீசுகின்றனர்.


ஆதிசேஷன் படுக்கையின் மேல் சங்கு, சக்கரம், கதை இவைகளுடன் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் திருமால் காட்சியளிக்கிறார் . ஒருபுறம் வைந்தேயரும், ஒரு புறம் விஸ்வக்சேனர் ,இந்திரர், சனகர் , சனந்தனர், சனாதனர் போன்றோரும் வைகுண்ட நாதனை தரிசனம் செய்யும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கு.  வடமேற்கு பகுதியில் அத்வைதம் அளித்த சங்கரரும், விஷிச்டத்வைதம் நிறுவிய ராமனுசஜரும், துவைததை நிறுவிய மத்வாச்சரியரும்கூட வீற்றிருக்கின்றனர். திருகோவிலின் வடமேற்கு பகுதியில் விஜயலக்ஷ்மியை தரிசனம் செய்து விட்டு வித்யாலக்ஷ்மியை தரிசிக்க வரும் வழியில் சித்ரவேலைபாட்டில் கல்விக்கடவுளான, லட்சுமிஹயகிரீவரும், அவரை துதிக்கும் நிகமார்ந்த மாகா தேசிகனையும் காணலாம்.

அடுத்தாற்போல் லட்சுமி உடனுறை வராக மூர்த்தியையும் தரிசிக்கலாம். கஜலட்சுமி சன்னதியில் தரிசனம் முடிந்த பின், பதினெட்டுப் படிகள் மேலே ஏறி இரண்டாம் தளத்திலுள்ள தனலட்சுமி சன்னதிக்கு செல்லும் வழியில் நிகமார்ந்த தேசிகன் திதி கொள்வதையும், திருமகள் காட்சித் தந்து பிரம்மச்சாரிக்கு பொன்மாரி பொழிவதையும் விவரிக்கும் கதை சிற்பங்கள்  காணப்படுது.  தனலட்சுமி சன்னதியின் முன்பு பெரும் வட்டமான மாடத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் மகாலட்சுமி திருவுருவமும் , தனலட்சுமியை சுற்றி வரும்போது தென்புறம் தட்சிணாமூர்த்தியும் மேற்குப்புறம் அனந்தசயன பெருமாள் திருவுருவமும், பாதசேவை செய்யும் அலைமகளும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும் காட்சித் தருகின்றனர். 


பிரதான கர்ப்பக் கிரகம் 10 அடி அகலத்தில் 14 அடி உயரம் உடையது. கருங்கல் சுவரால் மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கு. மூலவர் மகாலட்சுமி தாயார் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய வரத  முத்திரைகளுடன் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீனிவாசர்
 என்னும் பெயரோடு மகா விஷ்ணு அருள்புரிகிறார். மகாலக்ஷ்மியும் மஹா விஷ்ணுவும் திருமணக்கோலத்தில் நின்ற வண்ணம் உள்ளதால் எப்பொழுதும் மகாலக்ஷ்மிக்கு 9 கஜம் பட்டுப்புடவையும் மகா விஷ்ணுவிற்கு 10 முழ வேட்டியும் கட்டப்படுது.


இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். வில்வ மரம் லட்சுமிக்கு உகந்தது, அதில் லட்சுமி வாசம் செய்கிறாள் என சொல்வதுண்டு. வில்வத்தின் வேர் முதல் நுனி வரை லட்சுமி குடி இருப்பதாக ஐதீகம்.


இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வழிபாட்டு முறை பஞ்சராத்திர ஆகமம்.



இக்கோவிலில் மேலும் விஷ்ணுவின் தசாவதாரச் சன்னிதி, கமல விநாயகர் சன்னிதி, குருவாயூரப்பன் சன்னிதி, சக்கரத்தாழ்வார்- யோக நரசிம்மர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி, கருடாழ்வார் சன்னிதியும் அமைந்திருக்கு.


குழந்தை தாய்ப்பாலுக்கு பின் திட தான்ய உணவை முதன் முதலாக உட்கொள்ள தொடங்க, ஒரு நல்ல நாளில் இக்கோவிலில் இருக்கும் குருவாயூரப்பன் சன்னிதியில் பூஜை புணஸ்காரம் செய்து , திருமஞ்சனத் தீர்த்தத்தை தருகின்றனர்.  மேலும் திருப்பவித்ர உற்சவம், மார்கழிதிங்கள், கோகுலாஷ்டமி, தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை விழாக்கள்ல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுதாம்.



அஷ்ட லட்சுமிகளும், ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் கோவில் கொண்டிருப்பது உலகத்திலேயே வேறெங்கும் கிடையாதாம்.  ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது.


திருமண தோஷம் போக லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண யோகம் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கும், நோய் குணமாக ஆதிலட்சுமிக்கும், செல்வம் வேண்டி தனலட்சுமிக்கும், கல்வி செல்வம் பெற வித்யாலட்சுமிக்கும், மனத்தைரியம் பெற தைரியலட்சுமிக்கும் பூஜை செய்து அம்மனின் அருள் பெறுகின்றனர்.


வேறொருக் கோவில் பற்றிய அறிய புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் மீண்டும் சந்திப்போம். நன்றி! வணக்கம்.

இது ஒரு மீள் பதிவு

Wednesday, November 04, 2015

இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!? - தெரிந்த கதை, தெரியாத உண்மை

இராமாயண நிகழ்வுகள் சம்பந்தமான  பதிவுகளை நம்முடைய தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம், இதில் லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்?, ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை,  இராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்களை  பார்த்தோம். அந்த வரிசையில் நாம் பார்க்க போவது..., ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான தகவல்கள்.  ராமாயணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியை பற்றி தெரியாதவர்களே கிடையாது எனலாம்,, மண்டோதரியை பற்றி குறிப்பிடுகையில், அவள் பேரழகி, தெய்வீக சக்தி கொண்டவள் ,மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று  மண்டோதரி குறிப்பிடப்படுகிறாள். பாவங்களைப் போக்கும் சக்தியைக் கொண்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகவும் இவள் கருதப்படுகிறாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ’மண்டோதரியினை” பற்றி சில சுவாரஷ்யமான தகவல்களை நம்முடைய தெரிந்த கதை< தெரியாத உண்மையில் பார்க்கலாம் ...
. 
இந்து சாஸ்திரங்களில் அசுரர்களின் சிற்பக்கலை வல்லுனராக  மயன் என்பவரைப் பற்றி சொல்லப்படுகிறது. இவரை மயா, மயாசுரன், என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த அசுரக்குல சிற்பி மயனின் ஒரே மகள்தான் மண்டோதர., இவரது பெயர் மந்தோதரி என்றுதான் முதலில் அழைக்கபட்டதாம். சிவன்பால் கொண்ட பேரன்பினால், தன் மகளையும் சிவ நாமத்தினால் அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்பதால் மந்தோதரி என்று பெயர் வைத்தானாம் மயன், ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் மந்தோதரி என்றால் மெல்லிடையாள் என்று கருத்து செல்கின்றனர். பிற்காலத்தில் சிறந்த சிவபக்தையாக திகழ்ந்த மண்டோதரி அழகியாகவும், செல்வ வளம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள்.
தனக்காக ஒரு நகரத்தை நிர்மாணிக்கும் பொருட்டு மயனை சந்திக்க வந்த இராவணன், அங்கே மண்டோதரியை கண்டதும் அவள் அழகில் மயங்கினான். அவ்வளவு பெரிய பேரழகியை தன்னுடைய மனைவியாக அடைய விருப்பபட்டு மயனிடம் தன் விருப்பத்தைக் கூறினான். மயனும்  அதற்கு மகிழ்ச்சியுடன்  சம்மதம் தெரிவித்தார். ஏனெனில், இராவணனுடைய பராக்கிரமம் உலகறிந்த ஒன்றாக இருந்தது. இராவணன் வீரமிக்க அரசனாக மட்டுமல்லாமல், சிறந்த சிவப்பக்தராகவும் இருந்தான். அதுப்போல மயனும் சிறந்த சிவபக்தன், சிவாய நம என்ற மந்திரத்தை தினமும் உச்சரிப்பவன், ஆகையால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.
ஆனால் மரபுவழி கதைகளில் இராவணன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாட  சென்றப்பொழுது ,வேட்டையை முடித்து சிறிது ஒய்வெடுத்தானாம். அப்பொழுது, இசைபிரியனான இராவணன் வீணையை மீட்டி பாடிய சிவகீதம், வீணையின் சப்த நாளங்களோடு சேர்ந்து, மண்டோதரியின் செவி வழியில் புகுந்தது, காமன் விடு தூதாக  கன்னி மனதை பறித்து காதல் வயப்படவைத்துவிட்டது எனவும், அவள் உடனே தந்தையே! இந்த இன்னிசை நாதம் எங்கே இருந்து வருகிறது என கேட்டாளாம், இசை வந்த திசை நோக்கி சென்ற மயன் அங்கே இராவணனை கண்டு அழைத்துவந்தாராம் மண்டோதரியின் அழகில் மயங்கிய ராவணன் ,மயனிடம் தன விருப்பத்தை சொன்னானாம், ஏற்கனவே, இராவணனை நன்கு அறிந்த மயன், இந்த திருமணத்திற்க்கு  உடனே சம்மதம் தெரிவித்து மண்டோதரியை இராவணனுக்கு மணமுடித்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

இருவருமே சிவப்பக்தர்களாகவும், இசையை ரசிப்பவர்கள் ஆகவும் இனிமையாக வாழ்ந்து வந்தார்கள். பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, தன்னுடைய கணவன் மேல் மிகவும் பக்தி கொண்டவளாக இருந்தாள். இவளுடைய பதிவிரதத்தின் காரணமாகத் தான் அசுரகுணம் கொண்ட இராவணன், பல்வேறு தவறான செயல்களைச் செய்தபோதும் அதற்கான தண்டனைகளில் இருந்து காப்பாற்றபட்டான். அந்தச் சமயத்தில் இராவணனுக்கு மண்டோதரியைத் தவிர, வேறு சில மனைவிகளும் இருந்தார்கள். ஆனாலும், அவன் மண்டோதரியிடமே அதிக அன்பும், பாசமாய் இருந்தான்.
இப்படி இருக்கையில் தன்னுடைய மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணிடம் இராவணன் மையல் கொண்டான். அவள் பெயர் வேதவதி. இதையெல்லாம் தெரிந்து கொண்ட மண்டோதரி அவனை நல்வழிபடுத்த பல அறிவுரைகளை எடுத்து கூறினாள். அப்பொழுதும் இராவணனுக்கு உண்மையானவளாகவும், நம்பிக்கைக்கு உரியவளாகவும் இருந்தாள் மண்டோதரி. இந்த வேதவதிதான் ராவணனுடைய அழிவுக்கு காரணமாக இருந்தாள் என கூறபடுகிறது. 

யார் இந்த வேதவதி? பிருகஸ்பதியின் புத்திரரான, பிரம்ம ரிஷி குஸத்வஜரின்குசத்துவ முனிவர், வேதம் ஓதிக்கொண்டிருக்கும் சமயத்தில் குழந்தை பிறந்ததால் அவளுக்கு 'வேதவதி' என்று பெயரிட்டு வளர்த்தார். அவள் வளர்ந்து பருவமடைந்தபோது, அவளது அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்துக் கொள்ள விரும்பினார்கள். முனிவரோ, தம் மகளுக்குத் தகுந்த வரன் திருமால்தான் என்று எண்ணினார். அவளை மணந்துக் கொள்ள விரும்பி சம்பு என்னும் அரக்கன் தன் விருப்பத்தைத் முனிவரிடம் தெரிவித்தான். முனிவர் அவனுக்குப் பெண் தர மறுத்ததால் இரவில் தூங்கிக் கொண்டிருந்த முனிவரை கொன்றுவிட்டான் சம்பு, இதனால், துக்கப்பட்டுத் வேதவதியின் தாயார் முனிவருடன் சிதை ஏறிவிட்டார். தனது  தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டி ஸ்ரீநாராயணரை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தாள் வேதவதி....,
அப்போது திக்விஜயம் மேற்கொண்ட இராவணன் காட்டில் தவம் செய்து வந்த வேதவதியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அவளை மணந்துக் கொள்ள ஆசைப்பட்டான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இராவணன், அவளை வலியத் தீண்டினான். அப்பொழுது வேதவதியோ  தான் விஷ்ணுவை மணாளனாக அடைய தவம்  செய்கிறேன், என்னைத் தீண்டாமல் விலகி செல்வாயாக, என சாந்தமுடன் கூறினாள். மதிமயங்கி இருந்த இராவணன், யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்துத் தூக்கினான் இராவணன், அப்பொழுது வேதவதி, தன் கையைத் தூக்கி அதை வாளாக மாற்றி தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டால், என் தபோவலிமையை  இழக்க வேண்டியதிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள்.

பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரில் அழகிய பெண்குழந்தையாய் அவதரித்தாள். அவளை,   தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான் இராவணான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் இராவணன் அவளைக் கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதைதான் ராவணனை கொல்ல அவதாரம் எடுத்து இருக்கிறாள் என மண்டோதரி இராவணனை எச்சரித்தாள் .
இதைவிட சுவாரஸ்யம் என்னனா சீதா தேவியின் தாய் மண்டோதரியா? இப்படியும் சில மரபு வழி கதைகள் உண்டு. வால்மீகி  ராமாயணத்தில் மண்டோதரியை சீதையின் தாயாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, ஆனால், அதன் பிறகு வந்த சில ராமாயண படைப்புக்களில் மண்டோதரியை சீதையின் தாயாகவோ அல்லது சீதையின் பிறப்பிற்குக் காரணமான பெண்ணாகவோ குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இராவணனின் அரண்மனையில், இராவணனால் கொல்லப்பட்ட முனிவர்களின் ரத்தத்தை ஒரு பெரிய பானையில் சேகரித்து வைத்திருந்தார்களாம், அதே சமயம், கிரிட்சமாடா என்ற முனிவர் இலட்சுமி தேவி தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தவம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் தர்ப்பை புல்லின் பாலை தன்னுடைய மந்திரங்களினால் சுத்திகரித்து வைத்திருந்தார். இலட்சுமி தேவி அதில் வாசம் செய்வாள் என முனிவரது நம்பிக்கை. ஒருமுறை அந்த முனிவரைக் காணச் சென்ற இராவணன் அந்த புண்ணியமான பாலை தன்னுடயை  ரத்தம் நிறைந்த பானைக்குள் ஊற்றிவிட்டான். இராவணனின் இந்த தகாதச் செயலைக் கண்டு மனம் வெறுத்த மண்டோதரி, மிகவும் கொடிய விஷமான அந்த ரத்தத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது, கிரிட்சமாட முனிவரின் தவ வலிமையால் காப்பாற்றப்பட்டு இலக்ஷ்மி தேவியின் அவதாரத்தை குழந்தையாக பெற்றேடுத்தாள் எனச் சொல்லப்படுகிறது. இராவணனிடம் இருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்ற அந்த குழந்தையை குருஷேத்திரத்திற்கு அருகில் அவர் புதைத்து வைத்தார். அந்த பெண் குழந்தையைக் கண்டெடுத்த ஜனகர் அவளுக்கு சீதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் எனவும் மரபுவழி கதைகளில் சொல்லபடுவதுண்டு.
ஆனால்,. வாசுதேவஹிந்தி, உத்தர புராணம் மற்றும் பிற சமண வகை இராமாயணங்களில் சீதையானவள் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த குழந்தையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மண்டோதரியை மணந்துக்கொள்ளும் விருப்பத்தை  மயனிடம் இராவணன் கேட்டுக்கொண்டபோது, இராவணனுடைய ஜாதகத்தை கணித்த மயன், இந்த தம்பதியருக்கு பிறக்கும் முதல் குழந்தை ராவணனின் வம்சத்தை அழித்துவிடும். ஆகவே, அந்தக் குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார் மயன், அவர் அறிவுரையைக் காதில் கேட்காத இராவணன், திருமணதிற்கு பிறகு மண்டோதரிக்குப் பிறந்த முதல் குழந்தையான சீதையை ஜனகரின் நகருக்கு அருகில் ஒரு கூடையில் வைத்து புதைத்து விட்டான் என்றும் சொல்லபடுகிறது.
இந்த இதிகாசத்தின் ஆதாரப் பூர்வமான எழுத்து வடிவங்கள் மட்டும் இன்றி செவிவழிக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் கூடத் தங்களுக்கு உரிய பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக கூறப்பட்டுள்ளது. உத்தர புராணத்தில், அஹகாபுரியின் இளவரசியான மணிவதியின் மீது இராவணன் தவறாக ஆசைக்கொண்டு இருந்தான், ஆகவே அவனை பழிவாங்கவே இராவணன் மற்றும் மண்டோதரிக்கு மகளாக பிறந்தாள் மணிவதி எனவும், அந்த குழந்தையால் இராவணனின் சாம்ராஜ்யம் பேரழிவை சந்திக்கும் என அரசவை ஜோதிடர்கள் குறிபிட்டதிதால இராவணன் அந்தக் குழந்தையைக் கொன்றுவிடுமாறு தன்னுடைய மெய்க்காவலனுக்கு உத்தரவிட்டதாகவும் ஆனால், அந்தக் காவலன் குழந்தையைக் கொல்லாமல், மிதிலாவில் பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து விட்டதாகவும் அங்கே ஜனகமகாராஜா  சீதையைக் கண்டெடுத்ததாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. 
சமணர்களின் இராமாயணக் கதைப்படி, சீதை இராவணனின் மகளாகப் பிறந்தார். எனினும், இராவணனின் சாம்ராஜ்யத்தை அந்தக் குழந்தை அழித்துவிடும் என்று சோதிடர்கள் கூறியதால்,  இராவணன் தன்னுடைய பணியாட்களை அழைத்து சீதையை தொலைதூரத்தில் உள்ள நிலப்பகுதிக்கு கொண்டுச் சென்று புதைத்து விடுமாறு கட்டளையிட்டார். அப்பொழுதுதான் சீதை ஜனகரால் கண்டெடுக்கப்பட்டாள் என்றும் கூறப்படுகிறது. மேலும், சமணர்களின் இராமயணத்தில், இராவணன், ஒரு தந்தையாக மட்டுமே சீதையின் மேல் அன்பு வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. மண்டோதரியின் வயிற்றில் சீதை பிறந்த போது, இராவணன் அளவிலா சந்தோஷத்தைக் கொண்டிருந்தார் எனவும், இந்தக் குழந்தை சாம்ராஜ்யத்தை அழித்து விடும் என்று சோதிடர்கள் அறிவுருத்தியதால், தன்னுடைய பணியாட்களிடம் சீதையைக் கொண்டு போய் தொலைதூரத்தில் விட்டு விடச் சொல்லியிருக்கிறார். ஆனால், விட்டுட்டு வந்த குழந்தை எங்கிருக்கிறாள் என்பதை அவ்வப்போது இராவணன் தன் ஒற்றர்கள் மூலம் தெரிந்துக்கொண்டு வந்துள்ளான் எனவும் ,சீதையை ஜனக மகராஜா இளவரசியாக தத்தெடுத்துக் கொண்டதை அறிந்தவுடன் இராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் எனவும், சீதைக்கு திருமணம் நடந்த சமயத்தில் கூட அந்த சுயம்வரத்தில் இராவணனும் கலந்து கொண்டான் எனவும், அங்கே அயோத்தி நகரத்தைச் சேர்ந்த ஆரிய இளவரசர் இராமர் சீதையை மணமுடித்ததைக் கண்டு இராவணன் மகிழ்ச்சியடைந்தான் எனவும்  இராமரை 14 ஆண்டுகள் காட்டுக்குள் வனவாசம் அனுப்பும் வரை அனைத்தும் நல்லபடியாகவே இருந்தது என சமணர்களின் இராமாயண குறிப்புகளில் சொல்லப்பட்டு இருகின்றன .
தொடர்ந்து சீதையை கண்காணித்து வந்த இராவணன் இராமர் வனவாசம் சென்று வனாந்திரங்களில் துன்பப்பட்டு வந்தபோது, சீதாதேவியும் இராமருடன் சேர்ந்து துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை இராவணன் அறிந்துகொண்டான், எனவே, தன்னுடைய மகளை கடத்திக் கொண்டு வருவதன் மூலமாக அவளுடைய துன்பத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று இராவணன் நினைத்தார் என்றும், ஆகையால்தான், சீதாதேவியை இராவணன் கடத்திக்கொண்டு வந்து இலங்கையில் வைத்தார். இதனை பழிவாங்கும் செயலாகப் புரிந்துக் கொண்ட இராமரும், லட்சுமணரும், இராவணனின் மீது போர் தொடுத்தனர் என்றும், ஆனால், இராவணன் செய்தது தன்னுடைய மகளை துன்பத்திலிருந்து பாதுகாக்கும் செயல்தான் எனவும், இராவணன் தூங்கும் போதும்கூட சீதையின் பெயரைச் சொன்னதால், அவனுடைய மனைவியான மண்டோதரியும் கூட தவறாக நினைத்துவிட்டாள் என சமண ராமாயண குறிப்புகள் கூறுகின்றன. சீதை இராவணனுடைய மகளா?! இல்லையா?! என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் இராவணனின் அழிவுக்குக் காரணம் சீதைதான் எனபது மட்டும் உண்மை.

இதேப்போல, நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும்,,கற்றுணர்ந்த இராவணனுக்கு பெண் பாவத்தை பற்றி தெரியும், ஆதலால் அவன் சீதையை கடத்தவில்லை, சீதை லட்சுமிதேவியின் அவதாரம். சிறந்த ஆட்சியாளனான, இராவணன் உலகத்தின் செல்வங்களைலாம் இலங்கைக்குக் கொண்டு சென்றுவிட்டான். அதேப்போல் உலக இயக்கமும் இலங்கையில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதற்காக சிவனையும் இலங்கைக்கு கொண்டு சென்ற போதுதான் அவன் விநாயகரால் தடுத்து நிறுத்தப்பட்டு தரையில் வைத்த சிவலிங்கத்தை எடுக்கமுடியாமல் தோல்வியுற்றான். அவன், உலகத்தின் செல்வதையும், உலகத்தின் இயக்கத்தையும், இலங்கைக்குக் கொண்டுச் சென்றால் அவனை யாருமே அழிக்கமுடியாத வல்லமை பெற்று இருப்பான், என இன்னொரு செவிவழி கதையும் உண்டு. 
இதைபோல் மரபுவழி கதைகளில் இன்னொரு ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு, பத்து திசைகளில் தேர் செலுத்தும் வல்லமை உடைய தசரதனுக்கும் கோசல நாட்டு அரசன் பானுமந்தன் மகள், கோசலைக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இதை நிச்சயம் செய்தவர், நம்முடைய கலகமுனி நாரதர்.  நாரதர் வந்தாலே கலகம் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இங்கும் அதுப்போலவே நாரதர் திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு, இராவணனிடம் வந்து இந்தத் திருமணம் நடந்தால் கோசலைக்கு பிறக்கும் பிள்ளையால் உனக்கு அழிவு நிச்சயம் என்று சொல்கின்றார். அதேவேளை, கோசலநாடு சென்று இராவணனால் இந்த திருமணம் நிறுத்தபடலாம் என்று பத்தவைத்து விட்டு போகிறார்.

உடனே தசரதன், பத்து கிரீடத்துக்கு அரசனான இராவணனோடு போர் புரிந்து வெற்றி பெறமுடியாது என,  கோசல நாட்டில் திருமணத்தை வைக்காமல் கடல் நடுவில் யாருக்கும் தெரியாமல் திருமணத்தை நடத்துகிறார். கோசலையை தேடி இராவணன் கோசல நாடு சென்று அங்கும் கோசலை இல்லாதது கண்டு தன் நாடு திரும்பினான். வரும் வழியில் கடல் நடுவில் ஒரு நகரத்தில் கோசலை இருப்பதை காண்கின்றான். பெண்களை வீரர்கள் தாக்கக் கூடாதது என்பதால் உயிருடனேயே கடத்தி வருகின்றான். தன் தேசம் வந்ததும் அவளைக் கொலை செய்யும்படி கட்டளை இடுகின்றான்.

ஆனால், எல்லா சாஸ்திரங்களையும் கற்ற மண்டோதரி, பெண்ணை கொலை செய்வது அழிவுக்கு ஒப்பானது ஆகும், என்று சொல்லி கோசலையை காப்பாற்றுகிறாள். ஆனால், தன் கணவன் உயிருக்கும் அவளுக்கு பிறக்கும் மகனால் ஆபத்து வர கூடாது என்பதற்காக தசரதனுக்கு புத்திர பாக்கியம் ஏற்படாதவாறு சாபம் இடுகின்றாள். விதியை மாற்றி அமைக்க விரும்பாத பார்வதி, பரமேஸ்வரர், .மண்டோதரிக்கும், இராவணனுக்கும்  பிறக்கும் பெண் குழந்தையாலேயே உங்களுக்கு அழிவு என்று சாபம் இடுகின்றார்கள். அதனால் தான் மண்டோதரிக்கும் இராவணனுக்கும் பிறக்கும் மூத்த பிள்ளையான சீதையை ஜனகன் வயல் பூமியில் கொண்டு போய் விட்டுவிட்டதாக மரபுவழி கதைகள் கூறுகின்றன.
மண்டோதரி-இராவணன் தம்பதிகளுக்கு மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான்  வனவாசம் சென்றிருந்த வேளையில் சீதாதேவியை கடத்தினான் இராவணன். மண்டோதரி சீதாதேவியை உடனடியாக இராமனிடம் திருப்பி அனுப்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தாள். ஆனால், இராவணன் எதையும் கேட்கவில்லை. சீதா தேவியின் தலையை துண்டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினான் இராவணன். ஆனால், ஒரு பெண்ணைக் கொலை செய்வதென்பது கொடும் பாவச்செயல். ஆகவே, சீதா தேவியை இராவணன் கொல்லக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு இராவணனின் கையைப் பிடித்து அந்த பாவச்செயலைத் தடுத்து நிறுத்தினாள் பேரழகியான மண்டோதரி. இது, இராவணனுக்கு அழிவைக் கொண்டு வரும் என்று மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள் என வால்மீகி ராமாயணத்தில் குறிபிடப்பட்டுள்ளது.
மண்டோதரி, சீதையை சாக்கி மற்றும் ரோகிணி ஆகிய கடவுளர்களுடன் ஒப்பிட்டு இராவணனிடம் முறையிட்டாள். மண்டோதரியை விட சீதாதேவி அழகில் குறைந்தவராக இருந்தாலும், இராமன் மீது சீதை கொண்டிருந்த பக்தியை மிகவும் மதித்திருந்தாள். சீதாதேவியைத் தேடிவந்த அனுமன் கூட இராவணனின் அந்தப்புரத்தில் மண்டோதரியைப் பார்த்தவுடன் இவர்தான் சீதாதேவி எனத் தவறாக எண்ணிக்கொண்டான் என வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. அமைதியான முறையில் சீதையை திரும்பப் பெறச் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர், இராமர் இலங்கையின் மீது  போர் தொடுப்பதை அறிவித்தார். இராமனுடனான இறுதிப் போருக்கு முன்னர்  கூட மண்டோதரி இராவணனிடம், சீதா தேவியை திரும்ப அனுப்புமாறு கேட்டுக்கொண்டாள், ஆனால், அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இறுதியாக, தன்னுடைய கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாக இறுதிக்கட்டப் போரில் இராவணனுக்குத் துணை நின்றாள். மேலும், இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டத்துடன் இருந்த, தன் மகன் மேகநாதனையும் கூட, இராமருடன் சண்டையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.
மேலும்  வால்மீகி இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், மண்டோதரியின் அழிவு சொல்லப்பட்டு இருக்கிறது. இராவணனுடைய அனைத்து மகன்களும், வீரர்களும் போரில் இறந்து விட்ட பின்னர், தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும்படியாக ஒரு அக்னி யாகத்தை நடத்த விரும்பினான் இராவணன். இதை அறிந்த  இராமர், உடனே அனுமனையும், வானர இளவரசரான அங்கதனையும் கொண்ட வானர வீரர்களின் படைகளை அனுப்பி அந்த யாகத்தைக் கலைக்க ஆணையிட்டார். இராவணனின் அரண்மனையில் பெரும் சேதத்தை வானரங்கள் ஏற்படுத்தினாலும், இராவணன் தன்னுடைய யாகத்தைத் தொடர்ந்து செய்து வந்தான். இந்தச் சமயத்தில், அங்கதன் மண்டோதரியின் தலைமுடியைப் பற்றி அவளை இராவணன் முன் இழுத்து வந்தான். மண்டோதரி தன்னைக் காப்பாற்றும் படியும், இதே செயலைத் தான் இராவணன், இராமனின் மனைவிக்கு செய்து கொண்டிருப்பதையும் நினைவுப்படுத்தினாள். இதனால், கோபமுற்ற இராவணன் தன்னுடைய யாகத்தை நிறுத்தி விட்டு, அங்கதனுடன் சண்டையிடுவதற்காக தன்னுடைய வாளால் பாய்ந்தான். பலம் பொருந்திய இராவணனை யார் எதிர்க்க முடியும்?!

 எனினும், வந்த காரியத்தை முடித்து விட்டத் திருப்தியுடன், மண்டோதரியை விட்டு விட்டு அங்கதன் தப்பிச் சென்றான். மண்டோதரி மீண்டும் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டாள், அப்பொழுதும் இராவணன் மறுத்து விட்டான்.
மண்டோதரி கணவனுடையை நன்மைக்காக இழக்கக்கூடாதவற்றை எல்லாம் வாழ்வில் இழக்கின்றாள். சீதையைத் தேடி வந்த அனுமன் கையால் தன் ஆசைமகன் அக்சயகுமாரன் இறந்தப்பொழுது கூட இராவணன் மேல் அவள் கோபம் கொள்ளவில்லை. இந்திரனை வென்று சிறைப் பிடித்து வந்த தன் வீர மகன் இந்திரஜித் லட்சுமணனால் கொல்லப்பட்டப்பொழுது கூட அவள் இராவணன் மீது கோபம்கொள்ளவில்லை. கணவன் வாழ்வுக்காகவே கடைசிவரை துணை இருந்த மண்டோதரி இன்னொரு பெண்ணுக்காக இரங்கி கோசலையை விடுத்ததால், தன்னால் உயிர்பிச்சை பெற்றுவாழ்ந்த கோசலைக்கு, யாகத்தின் மூலம் பிறந்த பிள்ளையால் தன் குலமே  அழிந்துவிட்டதை எண்ணி வருந்தினாள்.
இராவணனுக்கு எப்போதும் நல்வழிகளையே போதித்து வந்த மண்டோதரி, சீதாதேவியை சிறைப் பிடித்து வந்தது தவறு என்றும், சீதாதேவியைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது  எனவும் சீதாதேவியை விட்டுவிடுமாறு ராவணனுக்கு பலமுறை அறிவுறுத்தினாள். ஸ்ரீராமன் குறித்து எச்சரித்தும், மாரீசனின் வார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம்  என அறிவுரைக் கூறி பலமுறை  திருத்த முயன்றாள். மேலும், அறத்துடன் இணைந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் கூடத் துணை நிற்கும். ஆனால்,அறத்திலிருந்து விலகியவரை, உடன்பிறப்புகள் கூட  விலக்கி வைக்கும் என்பதை உணர்த்தினாள். அதேச்சமயம் இராமன் சாதாரண மனிதன் அல்ல என்றும், அவர் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் என்பதையும் மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள். ஆனால் பெண்ணாசைக் கொண்ட தனது கணவர் இராவணனை அழிக்கவே, இராமன் அவதாரம் எடுத்திருப்பதை மண்டோதரி உணர்ந்திருக்கவில்லை.
இராவணனுக்கும், இராமனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தில் இராமபாணம் பாய்ந்து இராவணன் மண்ணில் வீழ்ந்ததும், தனது கணவரின் உடல் மேல் விழுந்து கதறி அழுதாள். பலவாறு புலம்பி அழுது ஏக்கம் கொண்டு எழுந்து பொன் அணிகலன்கள் பொருந்தியிருக்கும்  இராவணனின் மார்பினைத் தன்னுடைய தளிர் போன்ற கைகளால் தழுவி  அவன் மீது வீழ்ந்து உயிர்நீத்தாள் மண்டோதரி. எண்ணற்ற சிறந்த நற்குணங்கள் கொண்டிருந்தும் தனது கணவரின் தீய குணத்தினால் மிகத் துயர முடிவை அடைந்தாள். இவள் சீதைக்கு நிகராக இருந்தாலும், மண்டோதரியின் நற்குணங்களை அறியாமல் போனது இராவணின் துரதிர்ஷ்டம். இது புராண இதிகாசக் கதையாக இருந்தாலும் தற்போதைய பல்வேறு சம்பவங்களுக்கும், பதில் அளிக்கும் விதத்திலேயே உள்ளது.
ஆனால் நாம் இராவணனை பற்றி நினைக்கும் போதே , ஒரு கொடுரமான அசுரன் பல்வேறு அநியாயங்கள் செய்தவன் பிறன்மனை கவர்ந்தவன் என அறியபட்டலும்,இராவணன் ஒரு சிறந்த கலைஞன், இசையை இரசிப்பதிலும், பாடுவதிலும், வீணையை மீட்டுவதிலும் இராவணனுக்கு இணையாக யாரும் இல்லை எனச் சொல்லலாம். மேலும், இராவணன் எதிர்காலம் அறிந்தவன் என்றும் சொல்லப்படுபவன். ஒருவேளை இராம, லட்சுமணன் வெறும் மனிதர்களாக இருந்தால், அவர்களை வெல்வது எனக்கு எளிது. ஆனால், அவர்கள் அவதாரங்களாக இருந்தால் அவர்களின் அம்புகளுக்கு பலியாகி முக்தி / மோட்சம் அடைவேன் என்றும் அறிந்திருந்தான் என்றும் சொல்லப்படுவதுண்டு. 
இராவணனுக்கு உண்மையிலேயே பத்து தலைகள் கிடையாது. இராவணனின் தந்தை வைச்ரவ மகரிஷி ஓர் அணிகலனை  இராவணனுக்கு பரிசளித்தார். அதை அணியும் போது, ஒளியின் எதிரொளியாக பத்து தலைகள் உள்ளது போலத் தெரியுமாம். உண்மையில் இராவணனுக்கு எண்ணற்ற தலைகள் இருக்கிறது என்பதை போன்ற தோற்றத்திற்கு இதுதான் காரணம்  என செவிவழி கதைகளில் சொல்லப்படுவதுண்டு. அதேப்போல் அட்புத்தா இராமாயணதில் (Adbhuta Ramayana), இராவணனுக்கு அண்ணன் ஒருவன் இருந்ததாகவும், அவன் பெயரும் இராவணன் தான் என்றும் அவன் ஆயிரம் தலை இராவணன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை. இராவணன் ஆயுர்வேத மருத்துவம் நன்கு கற்றுணர்ந்தவன் எனவும், அதைப்பற்றி பல புத்தகங்கள் எழுதியதாவும், மாமிசம் மற்றும் மாட்டிறைச்சி இவைகளை உண்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் 98 வகையான நோய்களை பற்றியும் இராவணன் ஒரு நூல் எழுதியுள்ளான் எனவும், மேலும் மண்டோதரி கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் கூட இராவணன் புத்தகம் எழுதியிருந்தானாம். எது எப்படியோ ஒரு நல்ல மனிதனும், அவன் மனைவியும் அவனின் தீய குணத்தால்  அவனும் அழிந்து அவன் குலமும் அழிந்து நாசமானது.

அடுத்த வாரம் நமது தெரிந்த கதை, தெரியாத உண்மையில் பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா?! என்ற அதிர்ச்சியான தகவலை பார்க்கலாம் .நன்றி

Friday, October 30, 2015

விஸ்வாமித்திரர் திருக்கோவில் விஜயாபதி -புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஹலோ சகோஸ்...,

எல்லோரும் நல்லா இருக்கீங்களா??!!

உங்களுக்குலாம் ஒரு நல்ல செய்தியையும், ஒரு கெட்ட செய்தியையும் சொல்லப்போறேன். முதல்ல நல்ல விசயம் என்னன்னா...... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகமா புண்ணியம் சேர்த்துட்டேன் போல!! அதான் கொஞ்ச நாளாய் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிட்டலை. ஆனா, நமக்கு புண்ணியம் கிடைக்கலைன்னாலும் மத்தவங்களுக்காவது கிடைக்கட்டும்ன்ற நல்ல எண்ணத்துல முன்ன்னாடி போய்ட்டு வந்த கோவில்களைப் பற்றியாவது
எழுதலாம்ன்னு சிஸ்டமை தூசி தட்டி டைப்பி பதிவிட்டாச்சு.

சரி, நல்ல விசயம்தான் ராஜி. அந்த கெட்ட விசயம்  என்னாச்சுன்னு  நீங்க ஆவலாய் கேக்குறது எனக்கு கேட்டுடுச்சு. அது என்னன்னு பதிவோட கடைசில சொல்றேன்.... இனி பதிவுக்குள் போகலாம்.....,

இராமாயண கால சிறப்பு பெற்றதும்,  நவக்கிரக பரிகார ஸ்தலங்களுள் ஒன்றான  கூடம்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற ஊரில் அருள்புரியும். அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலை பத்தி இப்பப் பதிவில் பார்க்கலாம்.  இக்கோவிலின் மிக முக்கியமான சிறப்பு என்னன்னா.., விஸ்வாமித்திரருக்கென தனிக்கோவில் தமிழகத்துலயே இங்குதான் இருக்கு.
கலியுகமான இக்காலத்தில் வாழும் நமக்கு நிமிடத்திற்கு நிமிடம் பிரச்சனைதான். என்றைக்கு பிரச்னை என்ற ஒன்று வந்ததோ அன்றே தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் செய்யப்படும் நவக்கலச அபிஷேகம் நவகிரகங்களின் தோஷங்களில் இருந்து விடுபடச் செய்கிறது .

விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். .ஆனால், விஸ்வாமித்திர மகரிஷி இழந்த தன் சக்தியை மீட்டெடுக்க வேண்டி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்த விஜயாபதி. கடற்கரை கிராமமான இந்த விஜயபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வழியாக சென்று. அங்கிருந்து ராதாபுரம் வழியாக சென்றால், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  கடற்கரை கிராமமான இந்த விஜயாபதி, கூடங்குள அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில் என்பது கூடுதல் தகவல்.
இதுதான் திருக்கோவிலின் முகப்பு, கோவிலினுள் நுழையும் முன்பு இந்த கோவிலின் சிறப்புகளையும், ஸ்தல வரலாற்றையும் பார்க்கலாம்....,

இராம, லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்திரனின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் சில அரக்கர்களை கொன்றனர். அதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதை தீர்க்க ஒரு யாகம் செய்ய இடம் தேடி அலைந்து, முடிவில் தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளியை பிரதிஷ்டை செய்தார்கள். பொதுவா இந்த மாதிரி பரிகாரங்கள், நீத்தார் கடன்லாம் கடலோரங்களில் தான்  நடத்தவேண்டும் எனபது மரபு. சிதம்பரம் அருகில் கடல் இல்லாததால இராம, இலட்சுமணனோடு தெற்கு நோக்கி வந்தார் விஸ்வாமித்ரர். பின்பு, அதேப்போல தில்லைவனம் இங்கே இருப்பதை கண்டார் .உடனே அங்குள்ள தில்லைவன தோப்பில் காளியை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக்கினார். பின்னர் ஹோமக்குண்ட விநாயகர், விஸ்வமிதிர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார்.  பின்னர் ஹோம குண்டம் வளர்த்து இராம, லட்சுமணனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார்.

ஹோமம் முடிந்த உடன் அருகில் உள்ள கடலில் குளித்து இருவரையும் அங்க பிரதட்சனை செய்ய வைத்து, தானும் அங்க பிரதட்சணம் செய்து இராம, லட்சுணனரின் தோஷத்தையும், தான் இழந்த சக்தியையும் மீட்ட இடம்தான் இது. இன்றும் அவர் குளித்த இடம் விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்று அழைக்கப்படுகிறது .
நாம பேசிட்டே இப்ப கோவிலின் உள்பக்கமா வந்துட்டோம், இதுதான் மூலவர் சன்னதி. முதலில் பலிபீடம், அதனை அடுத்து நந்தி. இவை ஒரே நேர்கோட்டில் விஸ்வாமித்திர மகாலிங்க  சுவாமியை நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.  சமீபத்துலதான் தரை பகுதிகள்லாம் டைல்ஸ் பாதிக்கப்பட்டு தூண்கள், சுவர்கள்லாம் மிகவும் சுத்தமாக காட்சியளிகின்றன. இந்த கோவிலின் பெருமை தெரிந்து பக்கதர்கள் நிறைய வர தொடக்கி விட்டனர்.   இக்கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னனா இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெறத் தகுதி பெற்றார்.
இது கோவிலின் உட்பிரகாரம். இங்கே செய்யும் பரிகாரங்கள் கண்கூடாக பலிக்கின்றது.  முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடம் இந்த விஜயாபதி என்றும் சொல்வார்கள்.  ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கிருக்கும் விஸ்வாமித்ர தீர்த்த கட்டத்தில் குளித்து, அருகில் இருக்கும் தில்லைக்காளி கோவிலில் பொங்கல் வைத்து வழிப்படுவர். அந்த வழிபாடு பலருக்கும், பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் உடனடியாக நிவாரணமும் கிடைத்து இருக்கிறது. இராமரும் லட்சுமணரும் தாடகையை வதம் செய்ததால் அவர்களுக்கு பிரம்மஹத்தி   தோஷம் பிடித்தது. அவர்களுக்காக விஸ்வாமித்ர மகரிஷி இங்கே யாகம் செய்தார், அவதார புருசர்களே ஆனாலும், அவர்களும் நவக்கிரக தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது போலும், யாகம் செய்து முடித்ததும் விஸ்வமித்திரர் வடநாடு சென்றுவிட்டார்அவர் தங்கிய இடம் இது என்பதால் இந்த இடம் விஸ்வாமித்திரர் பேரி என அழைக்கப்பட்டது. விஸ்வாமித்திரர் பிரதிஷ்டை செய்த சிலைகளைப் பற்றி கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் இங்கே கோவில்கட்டி தன்னுடைய மீன்சின்னத்தை இரட்டை மீன்களாக  கோவிலின் உள் முகப்பில் பொறித்தான்.  அதை இப்பொழுதும் நாம் காணலாம்....,     
விஜயாபதி மேலூர், விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன. ஒருக்காலத்தில் விஜயாபதி பெரிய ஊராக இருந்திருக்கிறது. தேரோடும் வீதி அக்ரகாரம், ஓதுவார் குடியிருப்புகள், அரண்மனை போன்ற வீடுகள் எல்லாம் இருந்திருக்கின்றன.  பல ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தின் முக்கியத் துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது. விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.

ஆகமொத்தம் இக்கோவிலும், கிராமமும் யுகங்கள் பல கடந்து இந்திருக்கின்றன. பின்னர் எக்காலத்திலோ அவையெல்லாம் அழிந்து விட்டன. தில்லைவன தோப்பும் அழிந்து விட்டது, இப்பொழுது இரண்டு தில்லை மரங்களுடன், இலங்கையை நோக்கி பார்த்தபடி தில்லைவன காளி மட்டும் கடற்கரை பக்கம் காவல் இருக்கிறாள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் தில்லை மரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.இந்த கோவிலுக்கு வருவது மூலம் ஒருவருடைய குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும்,  மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் எல்லாம் நடைபெறுகிறது. இன்றும் இங்கு விஸ்வாமித்திர மகரிஷி சூட்சுமமாக தவம்  செய்து வருகிறார்  என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

























இங்கு நடைப்பெறும் முக்கியமான பரிகாரம் என்னன்னா நவக்கலச பூஜை. பழையக் காலத்தில் ஒருவருக்கு தீட்சை கொடுப்பதற்கு முன்  புனிதப்படுத்துவது என்ற சடங்கு நடைப்பெறும். சோதிடமுறை பரிகாரங்களில் அருவிக்கரையிலோ இல்ல நதிக்கரையிலோ ஒன்பதுவிதமான கலசங்களில் ஒன்பதுவிதமான நறுமணப்பொருட்கள் வைத்து, அந்தந்த கிரகங்களுக்கு உகந்த வண்ணங்களும், பூக்களும் அந்த கலசங்களில் இடப்பட்டு எல்லாவித மந்திரங்களும் முக்கியமாக அந்தந்த கிரகங்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி அந்தக் கலச நீரை தலையில் ஊற்றுவார்கள். அதன்பின் நட்சத்திரங்களைக் கணக்கில் கொண்டு,  27 குடம் தூய்மையான இடத்தில் இருந்துக் கொண்டு வரப்பட்ட நீர் ஊற்றி, உடலையும், மனதையும்  நவகிரகங்களின் பாதிப்பில் இருந்து சுத்தபடுத்தி குருசிஷ்ய தீட்சைகளை கொடுப்பார்கள். காலப்போக்கில் இன்று இவை மறைந்துவிட்டன. ஆனால் அதே பரிகாரமுறை இந்த கோவிலில் இன்றும் செய்யப்படுவது மிகவும் சிறப்பு.  பல ஜோதிட வித்வான்கள் இங்கே வந்து பிரபலங்கள் சிலருக்கு இந்த நவக்கலச பூஜையை செய்து முடித்ததும், அதற்குண்டான பலன்களை அவர்கள் எட்டு நாட்களில் அனுபவித்ததும் இங்குள்ளவர்கள்  கண்கூடாக கண்டிருக்கிறார்கள்.
இதுதான் கோவிலின் உட்பிரகாரம்.  மூலவருக்கு நேர் எதிரே சந்திர சூரியரும், கோவிலின் நுழைவாயிலுக்கு வலப்பக்கத்தில் நவக்கிரகங்களும், வீற்றிருக்கின்றனர். நவக்கிரகப்பீடத்தை ஒட்டி ஒரு சிறிய தீர்த்தக்ணறு படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரத்தில் இருந்தாலும் உப்பிலாத தண்ணீர் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து கிடைக்கிறது. திருக்கோவிலில் நாம் நம்முடைய பெயரைப் பதிவு செய்தால் குறைந்த செலவில் நவக்கலச யாகம் செய்கின்றனர்.
சரி, இப்ப நவக்கலச பூஜை எப்படி நடத்தப்படுகிறது என பார்க்கலாம்... நவக்கலச பூஜை செய்யும் முன்பு, நாம் காலையில் நீராடி சுத்தமான உடைகளை உடுத்தி வரவேண்டும். வாய்ப்புள்ளவர்கள் தங்கள்  வீட்டில் இருந்து வெண்பொங்கலோ, இல்ல சர்க்கரை பொங்கலோ செய்து இங்கே இருக்கும் நாகர்களின் பீடத்தில் தங்களுடைய முன்னோர்களின் ஆன்ம விடுதலைக்கும், தங்களுடைய நவக்கிரக துன்பங்கள் தீரவும் முன்னோர்களையும், குலத்தெய்வங்களையும், விஸ்வாமித்திர மகரிஷியையும், இங்கிருக்கும் இறைவனையும், தாயாரையும் பிரார்த்தனை செய்து..., அவற்றை ஒரு இலையில் வைத்து காகங்களுக்கு படைக்கலாம்.

வாய்ப்பில்லாத  வெளியூர்  பக்தர்கள் ஒரு பிரட் மற்றும் பூந்தியினை சிறிய துண்டுகளாக்கி கலந்தும் படைக்கலாம். சிலர் காகங்கள் வரவில்லை நம் முன்னோர்கள் ஏற்று கொள்ளவில்லையோ என நினைக்கும் போது இங்கிருக்கும் சில பைரவர்கள் அதை சுவைக்க ஆரம்பித்துவிடுவார். அவற்றை உண்டப்பிறகு திருப்தியடைந்து அடுத்த நிலை பூஜைக்கு தயாராகிறார்கள்.  
இனி, இங்கே நடக்கும் பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம்...., ஒன்பது கலசங்களில் ஒன்பது விதமான பொருட்களை நிரப்புகின்றனர். அவை, பால்,  பன்னீர்,  இளநீர்,  மஞ்சள் பொடி,  சர்வோதயா ஸ்நானபொடி, வெட்டிவேர், சந்தனம்,  விபூதி, குங்குமம். இவற்றை ஒரு குடத்துக்கு ஒன்று வீதம் விட்டு நீர் கலந்து அந்தந்த கிரகங்களூக்குரிய குடங்களை   நவகிரகங்களைப்  போல் அதன் வரிசைப்படி மூன்று வரிசைகளாக வைக்கவேண்டும்.  பின்னர், நடுவில் இருக்கும் குடத்தின் மீது மட்டும் மாவிலையோடு, ஒரு தேங்காயை வைத்து, பரிவட்டம் கட்ட வேண்டும்.
இங்கு கலசங்களுக்கு நூல் சுற்றப்படுவதில்லை, ஜவ்வாதுவை எடுத்து குடங்களின் உள்ளும், புறமும் சிறிது தூவவேண்டும், யாருக்கு நவகிரக சாந்தி செய்யபடவேண்டுமோ அந்த நபரை அங்கே இருக்கும் கலசங்களின் முன்பு கிழக்கு பார்த்து இருக்குமாறு அமரச் செய்கிறார்கள். கலசங்களுக்கு சிறிது தள்ளி பட்டர் அமர்ந்து நவகிரக சாந்தி மந்திரங்களையும், குடங்களுக்குள் தெய்வங்களை வரவைக்க தெய்வ ஆகர்ஷன மந்திரங்களையும் ஓதுகின்றனர்.

எந்த எந்த நவகிரக மந்திரங்களை பட்டர் ஒதுகின்றாரோ  அந்தந்த நவக்கிரக ராசி குடங்களுக்கு அந்த நவகிரகங்களுக்குரிய நிறங்களில் உள்ள பூக்களை அந்தந்த கலசங்களில் மேல் இடவேண்டும். இப்படி எல்லா மந்திரங்களும் முடிந்தவுடன் கோவிலின் பின்பக்கம் இருக்கிற வில்வ மரத்தினடியில் பரிகாரம் செய்யும் நபரை உட்கார செய்து பட்டர் மந்திரம் சொல்லியப்படி ஒவ்வொரு குடமாக, ஒன்பது குடங்களையும் நவ அபிஷேகமாக பரிகார நபரின் தலையில் விடுகிறார். அதன் மூலம் சந்பந்தபட்ட நபரின் உடலும்,உள்ளமும் தூய்மை அடைந்து அவரை பிடித்த தோஷங்கள் யாவும் நிவாரணம் அடைகின்றன. அவர்களுக்கு ஏற்பட்ட தடைகளும்  நீங்குகின்றன  என்பது ஐதீகம்.
இதுதான் தாயார் சன்னதி, அகிலாண்டேஸ்வரி அம்பாள், நவக்கலச பூஜை செய்து முடித்தப்பிறகு மூலவருக்கும், தாயாருக்கும் அர்ச்சனை செய்யப்படுகிறது. பின் இங்க இருக்கும் மற்ற தெய்வங்களையும் தொழுதுவிட்டு கோவிலினுள் மூலவருக்கு நேர் பின்பக்கம் சக்திபீடம் என அழைப்படும் சன்னதி இருக்கிறது. இது இங்கே ஒரு சித்தர் ஜீவசமாதியானார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் வெளிப்புறம் இராஜேஸ்வரி பீடம் என எழுதப்பட்டு இருக்கு, சமாதியின் மேல் இருக்கும் பீடத்தில், திருப்பாதங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது விஸ்வாமித்திரருடைய சமாதியா இல்லை இங்கே தங்கி இருந்த வேறு சித்தரின் சமாதியா என இங்கிருக்கும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. ஆனால், சுற்றி இருக்கும் கிராம மக்கள் இந்த சமாதியினை கும்பிட்டுவந்தால், நிறைய அற்புதங்கள் நம் கண்கூடாகவே நடப்பதாக கூறுகிறார்கள்.  இந்த சமாதியில் வந்து தியானம் செய்பவர்களுக்கு, மெல்லிய தோற்றத்தில் நீண்ட ஜடாமுடியுடனும், கோவணத்துடனும், நல்ல ஆஜானுபவமாக ஏழு அடி உயரத்துடனும் காட்சி கொடுத்ததாகவும் பல பக்தர்கள் கூறுகிறார்கள்.
நாம பார்க்கிற இந்த சன்னதிதான் விஸ்வாமித்திரர் சன்னதி.  இந்த விஸ்வாமித்திரர் இந்தியாவின் பிரம்மரிஷிகளில் ஒருவர்.  இவர் குசநாபரின் மகன் கௌசிகன் என்னும் மன்னராவார்.  இவர் வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்.  இவர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின்படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது. அதில் விஸ்வாமித்திர முனிவரும் ஒருவர் அப்படிப்பட்ட விஸ்வாமித்திரரின் சன்னதி தான் இது. வாங்க உள்ளே செல்லலாம்...,
கடுமையான வெயில் காலங்களில் வெயில் தாக்காமல் இருப்பதற்காக தென்னை ஓலையால் பின்னப்பட்ட கீத்துகள் கொண்டு திறந்த இதன் மேற்பரப்பை வெயில் படாதவாறு அடைத்து கட்டியுள்ளனர். எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் விஸ்வாமித்திரருக்கு தனிக்கோவில் இல்லை. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. தெரிஞ்சுக்குறேன்...
நவக்கலச பூஜை செய்ய வருபவர்கள் இங்குள்ள விஸ்வாமித்திரர் சன்னதியிலும் ரோஜா மற்றும் மல்லிகை மாலைகள் கொண்டும்,  பழங்கள், இனிப்புகள் எல்லாம் தட்டில் வைத்து வழிப்பட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனையும் செய்கின்றார்கள். இங்கே ஒரு தனி அறை இருக்கிறது.  அதை பூட்டியே வைத்து உள்ளனர்.  குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அதை திறந்து பூஜை செய்வார்களாம். இங்க விஸ்வாமித்திர மகரிஷி அரூபமாக தவம் செய்து கொண்டு இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
இதுதான் விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த ஹோமகுண்டம் இருந்த இடம் என சொல்லப்படுகிறது. இப்பொழுது அவ்விடம் கிணறாக காட்சியளிக்கிறது. இந்த கிணற்றைத் தோண்டி பார்த்ததில் நிறைய சாம்பல்கள் கிடைத்தனவாம். ஆனால் அவையெல்லாம் கட்டியாகி பல அடுக்குகளாய் பாறைகள் போல இருகிவிட்டதாம், அவற்றை எல்லாம் மேலை நாட்டினர் சிலர் கொண்டு சென்று ஆராய்ச்சிகள் செய்ததாகவும் அதன் வயது இராமர் பாலத்தின் வயதை ஒத்ததாக இருக்கிறது எனவும் இங்கே உள்ளவர்களால் சொல்லப்படுகிறது. இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்! கடற்கரையிலிருந்து பார்த்தால் கூடங்குளம் அணுமின் நிலையம் தெரிகின்றது.
இந்த ஹோம குண்ட கிணற்றில் இருந்து சிலர் தீர்த்தம் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். சரி இனி நவக்கலச அபிஷேகம் முடிந்தவுடன் அதே ஈரத் துணியுடன் ஒரு பர்லாங்கு தொலைவில் உள்ள கடலுக்கு சென்று அங்கே விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்ற இடம் சென்று கடலில் குளிக்கவேண்டும். பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடல் மண்ணில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும் ,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் சிவ மந்திரம் ஜபித்தவாறே) உருள வேண்டும். அதன் பிறகு ,மீண்டும் கடலில் சென்று மூன்று முறை மூழ்கி எழவேண்டும். இப்படியாக மூன்று முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்த பின்னர், கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு, அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார். நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும். இங்கே ஈர ஆடைகளுடன் இருந்ததாலும் கூட்டத்தில் பெண்களும் இருந்ததாலும் கடற்கரையில் நடந்த பூஜைகளை படம் எடுக்கவில்லை .
இது ஹோமகுண்ட கிணறு. இதனுள்ளே  ஏதோ சிலைகள் தெரிகின்றன. சரி இனி கடற்கரை பூஜைகள பற்றிப் பார்க்கலாம். பின்னர் கடைசியாக உடலில் உள்ள மணல் போக நன்றாக குளிக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னன்னா இங்க அலைகள் மிகவும் அகோரமாக இருக்கும் பெண்கள் சிறுவர்கள் எல்லாம் தக்க துணையுடன் கடலில் நீராடுவது நலம், அதேப்போல அலைகள் அடிக்கிற வேகத்தில் சிலருக்கு கழுற்றில் இருக்கும் செயின் அடித்து சென்றுவிட்ட சம்பவங்களும் உண்டு. ஆகையால் செயின்களை பத்திரமாக கழற்றி வைத்தோ இல்லை பாதுகாப்பு செய்தோ நீராடவேண்டும். பின்னர் கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் நடந்துவர வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
இதுதான் ஹோமகுண்ட கணபதி சன்னதி. இனி தில்லைவன காளியம்மனுக்கு செய்யவேண்டிய பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம். இந்த தில்லைவன காளி அம்மனுக்கு மாலை ஐந்து மணிக்குதான் பூஜைகள் தொடர வேண்டும் என்பது ஐதீகம். ஒரு ரோஜா அல்லது செவ்வரளி மாலை, தேங்காய், பூ, பழம் வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம் என கொடுத்து நெய்தீபமேற்றி பரிகாரம் செய்யவேண்டிய நபருக்கு அர்ச்சனை செய்யவேண்டு. தில்லை வனகாளிக்கு கொய்யாபழம் 108 மற்றும்  108 ஒருரூபாய் நாணயங்கள் மற்றும் இனிப்புகள், எள்ளுருண்டை, பழங்களை வைத்து பூஜைகள் செய்யவேண்டும். பின்னர்அந்த பழங்களையும், நாணயங்களையும் எள்ளுருண்டைகள் சேர்த்து அங்கிருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துவிடவேண்டும். பின்னர் கோவிலில் பூஜைகள் செய்பவர்களுக்கு அவர்கள் மனம் சந்தோஷப்படும் அளவுக்கு தட்சணைகள் கொடுத்து தட்சினாதேவியை திருப்தி படுத்தவேண்டும்.
இந்த விஜயாபதி ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். அதனால் இங்கு பித்ரு தர்ப்பனமும் செய்யலாம்,  நவக்கலச பூஜையை பகல் 12 மணிக்கு மேல் இறங்கு பொழுதுதில்தான் செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறத.. நவக்கலச யாகம் முடிந்ததும் உடனே, வேறு எந்த கோவிலுக்கும், யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக தங்களுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்படிச் செய்வதால், நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும். இந்த தோஷங்களில் பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குலத்தெய்வ சாபம் நீங்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இங்கு செய்யப்படும் பூஜையின் பலனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்

1. தீராத கர்ம வியாதிகள், ஆயுள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்

போன்ற பிரச்சனைகள் நூறு சதவீதம் தீர்ந்து விடுகிறது என இங்கே பூஜை செய்தவர்கள் கூறுகின்றார்கள். எது எப்படியோ நாமும் ஒரு பழமையான வரலாற்று தொடர்புடைய திருக்கோவிலை தரிசித்த புண்ணியத்தோடு இலங்கை நோக்கி இருக்கும் தில்லைவனகாளியையும், விஸ்வாமித்ர மகரிஷியையும், மகாலிங்கேஸ்வரையும், அன்னை அகிலாண்டேஸ்வரியையும் தரிசித்துவிட்டு மீண்டும் புண்ணியம் தேடி பயணத்தில் மற்றுமொரு கோவிலில் இருந்து சந்திக்கலாம் .


ஹேய் ராஜி
நில்லு. அந்த கெட்ட சேதி என்னன்னு சொல்லிட்டு போம்மான்ற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு.
அந்த கெட்ட சேதி என்னன்னா  .....,
இனி,   அடிக்கடி இத்தளத்தில் பதிவுகள்  வரும்.....