Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Monday, May 13, 2019

தி.நகர் உருவான கதை - ஐஞ்சுவை அவியல்

மாமா! வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம் வாங்கனும்.  பஜாருக்கு போகலாமா? 
என்னென்ன பொருள்கள் வாங்கனும்ன்னு சொன்னா  அதுக்கேத்தமாதிரி பிளான் பண்ணலாம்.
நம்ம ஊரிலும் டி.நகர் மாதிரி ஒரு இடம் இருந்தால் நல்லா இருக்கும்ல!
No photo description available.

ம்ம்ம் நல்லாதான் இருக்கும். இன்னிக்கு குண்டூசி முதல் வைர நகைகள் வரை வீட்டுக்கு, ஆபீசுக்கு, கட்டுமான பொருட்கள்ன்னு பாகுபாடில்லாம எல்லாமே கிடைக்கும்,  ஜன நெரிசலா இருக்கும் டி.நகர்  எனப்படும் தியாகராய நகர் முதல்ல  “லாங் லேக்” என சொல்லப்பட்ட நீள் தடாகமாக இருந்ததுன்னு சொன்னா நம்புவியா?!
அப்படியா?! பள்ளிக்கரணை, செம்பரப்பாக்கம், போரூர்லாம்தான் ஏரில உருவானதுன்னு பார்த்தா, டி. நகரும் அப்படி உருவானதுதானா?!
ஆமா, 1911-ம் வருசத்துல பிரிட்டீஷ் அரசு, வணிக நோக்கத்துக்காகவும், நிர்வாகப் போக்குவரத்து வசதிக்காகவும் மாம்பலம் ரயில் நிலையத்தை அமைத்த பிறகுதான் தியாகராய நகர் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. 1920-ம் ஆண்டில் பிரிட்டீஷ் அரசு மதராஸ் மாகாணத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், “மதராஸ் டவுன் ப்ளானிங் ஆக்ட்-1920“ எனும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டம்தான் நாம் இன்று பார்க்கும் இந்த தியாகராயய நகரின் வளர்ச்சிக்கான ஆரம்பப் புள்ளி.
1923 சென்னையை ஆட்சி செய்துக்கொண்டிருந்த நீதிக்கட்சியின் தலைவர்தான் பிட்டி தியாகராயர். கட்சிக்கு இவர் தலைவராக இருந்தாலும், முதல்வர் பதவியை ஏற்க மறுத்த இவருக்குச் சிறப்பு செய்யும் வகையில், அப்போதைய முதல்வராக இருந்த பனகல் அரசர்தான் இந்த இடத்துக்கு தியாகராயர் நகர்ன்னு பேர் வச்சார். நீதிக்கட்சியை சேர்ந்தவரும் சமூகப் போராளியுமான சௌந்தரபாண்டியனார் நினைவாகவே சென்னை நகரின் முக்கியக் கடைவீதிகள் இருக்கும் பாண்டி பஜார் பகுதிக்கு அந்தப்பெயர் சூட்டப்பட்டது. கடைத்தெருவின் நுழைவு வாயிலில், அவரது சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பனகல் அரசர் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். அவரது நினைவாக தியாகராய நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றது. நீதிகட்சியின் பொருளாளராகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர் இருந்தவர் கோபதி நாராயணசாமி செட்டி. இவர் பெயரை தாங்கி நிற்கும் சாலையே G.N Chetty சாலை.

இன்னிக்கு உஸ்மான் ரோடுன்னு சொல்லப்படும் இடத்துக்கான பெயர்க்காரணம் நீதிக்கட்சி ஆட்சி செய்தபோது அந்த அமைச்சரவையில் முகம்மது உஸ்மான் இடம்பெற்றிருந்தார். 1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் *சென்னை மாஜிஸ்திரேட், *சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், சென்னை நகர செரீப், சென்னை மாநகராட்சி தலைவர், சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், 1942 - 1946 பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்து வந்தார். 1925 - இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாக காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார். இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கைன்னே சொல்லப்பட்டது. இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மானை யுனானி மருத்துவர்ன்னு மரியாதையாய் சொல்வாங்க. முகம்மது உஸ்மானை சிறப்பிக்கவே உஸ்மான் ரோடு என பெயர் சூட்டப்பட்டது.

ஜூலை 1916, பிராமணர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கி படிக்க விடுதிகள் கொடுக்க மறுத்த காலத்தில், திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் விடுதி தொடங்கி மாணவர் தங்கி படிப்பதற்கு டாக்டர். நடேசன் துணை புரிந்தார். உணவு விடுதியோடு, நூலகமும் அங்கே அமைத்து தந்தார். வாரந்தோறும் நடேசனாரின் தோட்டத்தில் திராவிடர் சங்கத்தின் சார்பில், பார்ப்பனரல்லாதார் இன எழுச்சிக் கூட்டங்களும், இலக்கியக் கூட்டங்களும், இரவு நேரங்களில் முதியோர் கல்வியும் நடத்தப்பட்டது. அவரது சேவையினை பாராட்டி 18.09.08 அன்று டாக்டர் நடேசனார் அஞ்சல் தலை கலைஞரால் வெளியிடபட்டது. அவரது பெயரில் உருவானதுதான் நடேசன் சாலை...
டாக்டர் டி.எம் நாயர் ஒரு புரட்சி வீரர்; சுயமரியாதைகாரர், அவரை ஒரு "திராவிட லெனின்" என சொல்லலாம்ன்னு பெரியாரே சொல்லி இருக்கார். இவர் நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவர். நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் நடேசனார் என்றாலும், நீதிக்கட்சியை வழிநடத்தியவர் டி.எம் நாயரே!. Justice பத்திரிக்கையின் ஆசிரியர், அயோத்திதாச பண்டிதரால் பாராட்டு பெற்றவர் இப்படி பல சிறப்புகளை பெற்ற இவரது பெயரை தாங்கி நிற்பதே டாக்டர் நாயர் சாலை.
Image result for அபிபுல்லா சாலை

சென்னை மாகாண ஆளுனரின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர்தான் நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா . அவரின் பெயரை கொண்டுதான் சென்னை தியாகராய நகர் பகுதியின் பிரதான சாலைக்கு இவரின் பெயரின் ஒரு பகுதியினை பெயராய் வைத்து ஹபிபுல்லா சாலைன்னு அழைக்கப்படுது. சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு முழுமையாக பணிவாய்ப்பு கிட்டும்வரை பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு பணிவாய்ப்பும் வழங்கப்படக்கூடாது என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தவவர், 1925ல் சென்னை மாநகராட்சி தலைவராய் இருந்த திரு. தணிகாசலம். அவர்களது பெயரில் தணிகாசலம் தெரு அழைக்கப்படுது. 1920 -சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியல் சமூக உறுப்பினர், சட்டமன்றத்தில் நீதிகட்சியின் துனைதலைவர், 1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆதிதிராவிடர் என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வந்தவர். அவரது பெயரில் அழைக்கப்படுவதே எம்.சி.ராஜா சாலை..
ஏன் மாமா! அவங்க கட்சிக்காரங்க பேரையே டி.நகர் முழுக்க வச்சுக்கிட்டாங்க போல!
ம்ஹூம், இப்படி பெரிய பெரிய ஆட்களின் பெயரினை மட்டுமில்லாம, நம்மளை மாதிரி சாமானிய ஆட்களின் பேரையும் வச்சிருக்காங்க. ஜி.என்.செட்டி ரோடில் ஓட்டல் விருதுநகர்ன்னு இருக்கு. அதுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும் தெருக்களான நாதமுனி தெரு, கோவிந்து தெருன்னு ரெண்டு தெரு இருக்கும். இந்த ரெண்டு தெருவும், தியாகராய நகர் உருவான காலத்தில், வேலையில் இருந்த நேரத்தில் இறந்துப்போன கடைநிலை ஊழியர்களின் பெயர்களில் உருவானது. இன்றைக்கு பிரம்மாண்டமாய் ஜன நெரிசலுடன், மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் தியாகராய நகரின் கதையாகும்.
இன்னிக்கு இருக்க மாதிரி சமூக வலைத்தளங்களும் ,படமெடுக்கும் கலாச்சாரமும் அன்னிக்கு இருந்திருந்தால் இதுலாம் நம்ம பசங்களுக்கு தெரிய வரும். இல்லன்னா, அந்தந்த இடத்தின் பாரம்பரியம் மறக்கப்பட்டுடும்தானே மாமா?!
ஆமா! இன்னிக்கு எல்லாமே படமெடுத்துக்குறோம். முதன்முதலாய் செல்பி எப்ப எடுத்தாங்கன்னு தெரியுமா?!
2000ஆண்டுக்கு அப்புறம்தான் கேமரா செல்போன் வந்துச்சு. அப்ப அதுக்கப்புறம்தான் இந்த செல்பி வந்திருக்கும்,..
ம்ஹூம். 1920ல எடுத்த இந்த படம்தான் முதல் செல்பின்னும், முதல் க்ரூப் செல்பின்னும் அதிகாரப்பூர்வமா சொல்லி இருக்காங்க.
நிமிசத்துக்கு நிமிசம் எதாவது ஒரு விபத்து நடக்குது.  நாம வண்டில எத்தனைக்கு எத்தனை வேகமா போறோமோ! அத்தனைக்கு அத்தனை நம்ம குடும்பத்தை விட்டு விலகிப்போறதை இந்த வீடியோ சொல்லாமல் சொல்லுது.. இதை பார்த்துட்டு வண்டில ஸ்பீடா போறதை குறைச்சுக்க புள்ள!!
உன்னைய மாதிரி ஒரு கூறுக்கெட்ட டாக்டரை கட்டுன என்னைய மாதிரி ஒரு பொண்டாட்டி அவசரத்துக்கு பூண்டு உரிச்சு கொடுக்க சொன்னா அந்தாளு எப்படி பூண்டு உரிக்கிறார்ன்னு பாரு மாமா... பார்த்துட்டு கொஞ்சமாச்சும் புத்தியோடு நடந்துக்க..

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, September 20, 2017

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - மௌனச்சாட்சிகள்


சென்னை .. இந்த பேருக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன். பறக்கும் ரயில், பளபளக்கும் ஹோட்டல், வானுக்கு போட்டி போடும் கட்டிடங்கள், அல்ட்ரா மாடர்ன் பெண்கள், அப்பா, அம்மா முதற்கொண்டு நிம்மதி தவிர கிடைக்காத பொருள் ஏதுமில்ல. கல்வி, மருத்துவம், கலை, பொழுதுபோக்குன்னு வாழ்க்கைக்கு தேவையான அத்தனை அம்சமும் இங்கு கிடைக்கும். எல்லா தொழிலுக்கும் வாய்ப்புண்டு. உண்மை, கடின உழைப்பு இருந்தா சென்னைல பொழைச்சுக்கலாம். அதனாலதான்,   கெட்டும் பட்டணம் போய் சேருன்னு சொன்னாங்க போல. ஆனா பாருங்க.. இன்னிக்கு பட்டணம் வந்து கெட்டுப்போனவங்கதான் அதிகம்.  

முடிவெது?! தொடக்கமெது?!ன்னு   பிரம்மாண்டமாய் உருவெடுத்திருக்கும் சென்னை,  ஒருக்காலத்தில் சிறுசிறு கிராமங்களாகத்தான் இருந்தது அப்போல்லாம் அடையாறுக்கும், மயிலாப்பூருக்கும் இடையில் ஊர்களே கிடையாது.  வெறும் வயல்வெளிகளும், தோட்டங்களும்தான் இருந்தது. அடையாறிலிருந்து மயிலாப்பூர் கிராமத்திற்கு செல்ல ஒரு நீண்ட பாதை மட்டுமே இருந்ததாம். இன்று, அங்கு கஸ்தூரிபாய் மாடி ரயில்வே இருக்கும் பாதையில் மக்கள் நடமாடக்கூட இடம் இல்லாத அளவு கூட்டம். ஆனா, அன்று அது மிகப்பெரிய ஓடை!! பெரிய வயல் வரப்புக்களை கொண்ட வயல்வெளி. அந்த வயல்வெளிகளுக்கு தண்ணீர், இன்றைய IITயின் உள்இருக்கும் மிகப்பெரிய குளத்தில் இருந்துதான் தண்ணீர் பாசனம் நடந்ததாம். இன்று அந்த குளம் IIT  யில் இருக்கிறது. அக்குளத்தில் தண்ணீரும் இல்லை. தண்ணீர் இருந்தாலும் அதை பாய்ச்ச  வயல்வெளிகளும் இல்லை ... :-(



கோடம்பாக்கத்தில் 1953-1954-களில், காலக்கட்டங்களில் சொற்பமான தியேட்டர்களே  இருந்தன.  மவுண்ட் ரோட்டின் மையப்பகுதியில் கெயிட்டி, கேஸினோசித்ராநியூகுளோப்வெலிங்டன்நியூ எல்பின்ஸ்டன்,மிட்லேண்ட், ஓடியன்,பிளாஸா,பாரகன்.   திருவல்லிக்கேணியில் ஸ்டா ர், பிராட்வேயில் பிராட்வே,பிரபாத்,மினர்வாவால்டாக்ஸ் ரோட்டில் ரீகல்.  தங்கசாலையில் கிரவுன்,கிருஷ்ணாஸ்ரீமுருகன் டாக்கீஸ்.  வண்ணாரப்பேட்டையில் பாரத், மகாராணி,மகாராஜாபுரசைவாக்கத்தில் ராக்ஸி கெல்லிஸில் உமாஅயனாவரத்தில் சயானி மயிலாப்பூரில் கபாலி, காமதேனுதியாகராயநகரில் பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்குச் சொந்தமான ராஜகுமாரிசைதாப்பேட்டையில் நூர்ஜஹான்இவைகள் எல்லாம் இப்பொழுது இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லை. ன்று இரண்டு விடுபடலாம் . அதுவும் உறுதியாக தெரியவில்லை .
       (Rare photographs of Arni in southern India portraits of the Jaghiredar of Arni and his family,)

சென்னை கிராமம் நூற்றாண்டுகள் பழமை கொண்டது. ,.    வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இனி இதிலிருந்த கிராமங்கள் எப்படி உருத்தெரியாமல் போனதோ அதேபோல் அந்த கிராம்களின் பெயர்களும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டன.

மதராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட சென்னையை ஆட்சி செய்ய இங்கிலாந்து அரசால் கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மதராஸ் கவர்னராக இருந்தார். அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே, வெள்ளையர்களுக்கு உதவி வேலைகளைச் செய்ய அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி ஜார்ஜ் டவுனாக உருவானது. பிறகு கோல்கொண்டா சுல்தானின் நிர்வாகத்தில் இருந்த திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர் ஆகிய கிராமங்களை விலைக்கு வாங்கி நகரின் எல்லையை விரிவுபடுத்தினார் கவர்னர் யேல். கோட்டைக்குள் இருந்த குதிரை லாயத்தால் சுகாதாரப் பிரச்சினை எழுந்தது. இதனால் குதிரைகளை மேய்க்க ‘பிளாக் டவுன்’ அதாவது கறுப்பர்கள் நகரம் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கே போதிய மேய்ச்சல் நிலம் இல்லை. மேய்ச்சல் நிலமும் நீர்வளம் நிறைந்த பகுதியைத் தேடியபோது, கண்களில் பட்டது ஆற்றுக்கரையில்(அடையாறு) இருந்த திருப்புலியூர். அதுதான் இன்றைய கோடம்பாக்கம்.

ஆடு மாடுகளை நம்பி வாழும் ஆயர்குடி மக்கள் இங்கே அதிகம் வாழ்ந்தனர். கர்நாடக நவாபுகளின் ஆதிக்கத்தில் இருந்த இந்தப்பகுதி, அவர்களது குதிரைப்படை லாயமாகவும் இருந்தது. நவாபுகளிடமிருந்து முதல்தரமான குதிரைகளை வாங்கிய யேல் நிர்வாகம், புலியூருக்குத் தனது குதிரைகளின் லாயத்தை மாற்றியது. நவாபுகள் தங்கள் குதிரைப்படை லாயத்தை உருது மொழியில் ‘ கோடா பாக்’ என்று அழைத்தனர்.கோடா பாக் என்பதற்குக் குதிரைகளின் தோட்டம் என்பது பொருள். கோடா பாக் காலப்போக்கில் கோடம்பாக்கம் என்று மருவியதாகச் சொல்கிறார்கள் சென்னை வரலாற்றை ஆய்வுசெய்தவர்கள். 
கோடம்பாக்கத்திற்கு இன்னொரு விளக்கமும் உள்ளது.  'கோடா' என்ற உருதுச் சொல்லுக்கு 'குதிரை' என்றும், 'பாக்' என்பதற்கு 'இடம்' என்றும் பொருள். கோடா+பாக் = 'கோடாபாக்' என்ற தமிழ் உச்சரிப்புச் சொல் திரிந்து நாளடைவில் 'கோடம்பாக்கம்' என்று ஆகிவிட்டது.  அதிருக்கட்டும். குதிரைக்கும் கோடம்பாக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?.

அது என்னவென்றால், ஆங்கிலேயரின் சென்னை வருகைக்கு முற்காலத்தில், ஆற்காட்டை ஆண்டு வந்த 'நவாப்' என்னும் முஸ்லிம் அரசர்கள், மேற்குத் திசையிலிருந்து கிழக்கே உள்ள சென்னப்ப நாயக்கன் பட்டினத்திற்கு தம் பரிவாரங்களுடன் வருவார்கள். அப்போழுதெல்லாம் நீண்ட தூரம் பயணித்து வந்த குதிரைகளிலிருந்து இறங்கி, இந்த இடத்தில் இளைப்பாறி ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அவர்களைச் சுமந்து ஓடிவந்த குதிரைகளுக்கும் போதிய ஓய்வு கொடுப்பார்கள். அவ்வாறு தமது குதிரைகளை நிறுத்தி வைத்து ஓய்வும், உணவும் கொடுத்த அந்தக் குறிப்பிட்ட  சிற்றூர்தான் நாளடைவில் 'கோடா பாக்' என்றும், பிறகு 'கோடம்பாக்கம்' என்றும் வழங்கலாயிற்று என்று அதன் வரலாறு கூறுகின்றது.

கோடம்பாக்கத்தைச் சார்ந்து இருக்கின்ற 'சாலிக்கிராமம்' என்பதும் காரணப்பெயர்தான். எப்படி என்றால் 'சாலிகன்', 'சாலியன்' என்ற சொல்லுக்கு 'கைத்தறி நெசவாளன்' என்று பொருள். ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் 'சாலியர்' குடும்பங்கள் நிறைந்திருந்து, நெசவுத் தொழில் நடைபெற்று வந்தது. இதனால் 'சாலிக்கிராமம்' என்னும் பெயர் உண்டானது. இங்கு நேர்த்தி மிக்க புடவைகள் நெய்யப்பட்டன.  60 ஆண்டுகளுக்கு முன்பு, 'கோடம்பாக்கம் புடவை' புகழ் பெற்றிருந்தது. ஒருமுறை உடுத்திய பெண்கள் அதை விரும்பி உடுத்தியதால் அதனால் சென்னை வந்து செல்பவர்கள் , நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நிறைய புடவை வாங்கி இருக்கிறேன் செல்வர். இன்றைக்கு கோடம்பாக்கமும், அதைச்சார்ந்த சாலிகிராமமும் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட அந்த அழகிய வண்ணவண்ண புடவைகள் மட்டும் இல்லை.


ஆங்கிலேய  வாணிபக் கழகத்தின் துணிமணிகளை வெளுப்பதற்கும், துவைப்பதற்கும், சாயம் போடுவதற்கும் பல சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார்கள்) பெத்தநாயக்கபேட்டைக்கு வடப்புறத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய திறந்தவெளியும், பெருமளவு நீரும் கிடைக்காததால், கறுப்பர் பட்டினம் அழைக்கப்பட்ட  ஜார்ஜ் டவுன் வடக்கில் சென்று குடியேற வேண்டியதாயிற்று. அவர்களுக்கு இந்த இடம் வசதியாக மாறிப்போய் விட்டதால், அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த  இந்தப் பகுதிக்கு வண்ணாரப்பேட்டை ன்னு பேர் வந்து இன்னிக்கு வாஷர்மேன்பேட்டையாகிட்டுது. 


தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்திருப்பதால், திரு +வேர்+காடு திருவேற்காடு எனப்பேர் உண்டாச்சு. இன்றைய கோயம்பேடு அமைந்திருக்கும் பகுதியில் முன்னொரு காலத்தில்   கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைவனின் நாமத்தை துதித்ததால் அந்நாரைக்கு முக்தி கிடைத்ததாம். அதனால, அந்த நாரையின் பெயரால் 'கோயட்டிபுரம்' ன்னு அழைக்கப்பட்டு, பின் அது 'கோட்டிபுரம்' என்றாகி நாளடைவில் 'கோயம்பேடு' என அழைக்கப்படுது.


பதினேழாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் தொண்டியிலிருந்து வந்த   இஸ்லாமிய துறவியான குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவர்   சென்னையின் "லெப்பை காடு" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர்வாசிகள் அவரை "தொண்டி ஆவர் நாயகன்" எனப்பொருள்படும்படி "தொண்டியார்" என   அழைத்தனர். பின்னர், காலப்போக்கில் லெப்பைக்காடு,  தொண்டியார்பேட்டை என்று அழைக்கப்பட்டு இப்போது தண்டையார்பேட்டை என இன்று அழைக்கப்படுது. 

ஒருக்காலத்தில் வில்வ மரங்கள்  நிறைந்த  பகுதியாக இருந்தது. வில்வம்=மாவிலம்=மாம்பலம் எனப் பெயர் பெற்றது. "மயிலை மேல் அம்பலம்" அதாவது, மயிலையின் மேற்குப் பகுதியில் இவ்விடம் அமைந்திருப்பதால் மேல் அம்பலம் பிந்நாளில் "மேற்கு மாம்பலம்" என மாறியதாக சொல்லப்படுது.   குரோம் லெதர் ஃபேக்டரி இருந்ததால் அப்பகுதியில் வசித்த மக்கள் இந்த இடத்தை குரோம்பேட்டைன்னு அழைக்க ஆரம்பித்தனர். ஒருக்காலத்தில் அல்லி மலர்கள் பூத்து குலுங்கும் நீர்த்தடங்களை கொண்டிருந்ததால் திரு+அல்லி+கேணி = திருவல்லிக்கேணி என அழைக்கப்படுது.  பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் என்றழைக்கப்படும் திராவிட கட்சியின்  மூத்த தலைவரும், சிறந்த தொழிலதிபருமாய் இருந்த இவரின்  நினைவாக டி.நகர் அழைக்கப்படுது.
இன்றைய சென்னையை அன்னிக்கே தோலுரித்து காட்டிய கண்ணதாசன் பாடல்வரிகளும், அதுக்குண்டான லிங்கும்... 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக 
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும் 
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே 
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே?
வெட்டவெளி நிலமில்லையே? 
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே?
அடி சக்கே..

வைக்கேலாலே கன்னுக் குட்டி 
மாடு எப்போ போட்டுது?
கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது?
வைக்கேலாலே கன்னுக் குட்டி 
மாடு எப்போ போட்டுது?
கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது?
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே? - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே?
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு 
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு 
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

தேராட்டாம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே 
எங்க ஏரோட்டோம் நின்னு போனா 
உங்க காரோட்டோம் என்னவாகும்?
ஹே..ஹே..

காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே?
காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே?
கெட்டுப்போன புள்ளிகளா 
வாழப் பட்டணத்தில் வந்தீகளா?
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ..

என்னதான் பேர் மாறினாலும், நாகரீகம், பழக்க வழக்கங்கள் மாறினாலும், அந்த இடத்துக்குண்டான பெருமை மறக்கப்பட்டாலும், ஊர்ப்பேர் மூலமா தன் பெருமையை பறைச்சாற்றியபடி  மௌனச்சாட்சியாய் இருக்கு.  அபா! மூச்சு வாங்குது. மிச்சம் மீதி ஊர்ப்பெயர்க்காரணத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்....  ஒரு ஜோடா ப்ளீச்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472220










நன்றியுடன்,
ராஜி.

Wednesday, August 23, 2017

மெட்ராசை சுத்திக்காட்டப்போறேன்... மெரினாவில் வீடு கட்டப்போறேன்... மௌனச்சாட்சிகள்


நாகர்கோவில்ல நாகர்கோவில்காரங்க இருப்பாங்க. மதுரைல மதுரைக்காரய்ங்க இருப்பாங்க.. தூத்துக்குடில தூத்திக்குடிக்காரங்க மட்டும்தான் இருப்பாங்க. ஆனா, சென்னைல எல்லா ஊர்க்காரங்களும் இருப்பாங்க. சென்னைக்கு பல முகம், பல மொழி, பல கலாச்சாரம்ன்னு ஒரு படத்துல சொல்வாங்க. அது உண்மைதான். பல ஊர்க்காரய்ங்க மட்டுமில்ல பல நாட்டுக்காரங்களும் இருக்காய்ங்க. குடிசைக்கூட இல்லாம பிளாட்பாரத்துல தூங்கும் மக்கள் ஒருபக்கம்.... அரண்மனை போல வீடிருந்தும் பொழுது போகாம அதே பிளாட்ஃபார்ம் பக்கம் உலாவும் மக்கள் மறுபக்கம்.  ஹைடெக் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு பக்கம், கால்வாய், குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கவர்ல செஞ்ச வீடுகள் மறுபக்கம்.. சர்வதேச உணவுகள் விற்கும் உயர்தர ஹோட்டல்கள் ஒருபுறம்,  பாரம்பரிய உணவான களி, கூழை விற்கும் தள்ளுவண்டி கடை மறுபக்கம்....  சாமி, பூதம் இல்லன்னு சொல்லி விஞ்ஞான போக்கில் போகும் மக்கள் ஒருபக்கம், அலகு குத்துறது, குறி பார்க்குறது, சாமியார் ஆசிரமம்ன்னு மூடநம்பிக்கைகள் மறுபக்கம். லிவிங்க் டூ கெதர்ல வாழும் வாழ்க்கை ஒருபக்கம்... கூட்டுகுடும்பம் மறுபக்கம்... ஹோலி பண்டிகை ஒரு பக்கம்... ஓணம் பண்டிகை மறுபக்கம்... நெதர்லாந்துக்காரன் ஒரு பக்கம்ன்னா... ஆப்பிரிக்காக்காரி இன்னொரு பக்கம்... சர்வதேச விமான நிலையம், சர்ச், கோவில், தியேட்டர், மருத்துவமனைகள், கல்வி, கலை,  தொழிற்சாலைகள்ன்னு எல்லா  துறையினருக்கும் சென்னைதான் மையப்புள்ளி...
தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை, தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அரசியல், மருத்துவம், சுற்றுலா பொருளாதாரம்ன்னு பலவிதத்தில் முக்கிய பங்கு வகிக்குது.   ஆங்கிலேயர்கள் காலூன்ற  அடித்தளமிட்டது சென்னைதான். சோழ, பல்லவ, விஜய நகர பேரரசுகளுக்கும் முக்கிய இடமா சென்னை  இருந்திருக்கு.  இத்தனை சிறப்பு வாய்ந்த சென்னை இன்னிக்கு ஆரம்பம் எது முடிவெதுன்னு தெரியாம இருந்தாலும் ஒருகாலத்தில் ஒரு சிறு கிராமமாதான் இருந்திருக்கு. இன்னிக்கு கால்வைக்க இடமில்லாம ஜன நடமாட்டம் மிக்கதா இருக்கும் சென்னை சொற்ப மக்கள் வாழ்ந்த இடமாவும் இருந்திருக்கு. 

1639 ம் ஆண்டு ஆக 22ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோதன் ஆகியோர் இணைந்து ஐய்யப்பன், வேங்கடப்பன்ன்றவங்கக்கிட்ட இப்பத்திய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கினாங்க. அந்த இடத்துக்கு  தங்களோட அப்பா பேரான  சென்னப்பநாயக்கன் பேருல இருக்கனும்ன்னு கேட்டதால சென்னை பட்டனம்ன்னு பேர் உண்டாச்சு. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய பிறகுதான் சென்னை பிரம்மாண்டமாய் வளர ஆரம்பிச்சது. அப்படி வளர்ந்த நகரம் திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், திருவொற்றியூர்,  திருவான்மியூர் மாதிரியான நூற்றாண்டு புகழ்வாய்ந்த ஊர்களையும் இணைச்சுக்கிட்டது.  1688ல இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால்  நகராட்சியாய் அறிவிக்கப்பட்டது., இந்தியாவின் முதல் நகராட்சி அப்போதைய சென்னை பட்டனம். அதேப்போல, இந்தியாவின் முதல் மாநகராட்சி இப்போதைய சென்னை. லண்டன் மாநகராட்சிக்கு அடுத்து இப்போதைய சென்னை அந்த இடத்தை தட்டிக்கிட்டு போச்சு. 


சென்னை பட்டினம்  பின்னாளில் ஆங்கிலேயர்களால் மதராசப்பட்டினமானது. சென்னை மட்டுமல்ல அப்போதைய மதராசப்பட்டினத்தில் தமிழ்நாட்டோடு இன்னும் பல மாநிலத்தின் இடங்கள் சேர்ந்திருந்தது. 1969ல மொழிவாரியாக எல்லை பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனியாய் பிரிந்து வந்தது.   இந்திய சுதந்திரத்திற்குபின் சென்னை மாகாணமானது. அதன்பின் 1956ல    மதராஸ்ன்னு பேர் வைக்கப்பட்டு இப்ப சென்னையா விஸ்வரூபமெடுத்து நிக்குது.  இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த சென்னைக்கு இந்த வாரம் பொறந்த வாரமாம். அதனால, சென்னை தினம்ன்னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நம்ம பங்குக்கு சின்னதா ஒரு பங்களிப்பு. 
அன்றைய பாரீஸ் கார்னர்



சென்னைன்னா நமக்கு நினைவுக்கு வர்றதுல மெரினா பீச்சும் ஒன்னு. உலகத்துல நீளமான பீச்சுல இதும் ஒண்ணுன்னாலும் உலகின் நீளமான பீச்சுல மெரினாக்கு இரண்டாவது இடம்.  கிட்டத்தட்ட 13கிமீ தூரம் நீண்டுக்கிட்டிருக்கும். பேரும் புகழோடும் இருக்கும் இந்த மெரினா பீச் அன்னிக்கு களிமண் பகுதியா இருந்துச்சுன்னா ஆச்சர்யமா இருக்கும். ஆனா பாருங்க. அதான் உண்மை. 1880ல ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப்தான் முதன்முதலில் அழகாக வடிவமைத்தார் `1881 ம் ஆண்டு சென்னை துறைமுகம் உருவாச்சு.  1884ல மெரினான்னு பேர் வச்சாங்க.  மேல படத்துல இருக்கும் மெரினா பீச் லைட் அவுஸ் பத்தி ஒரு பதிவு ஏற்கனவே போட்டிருக்கு. கொஞ்சம் சிரமம் பார்க்காம போய்ட்டு வந்திருங்க.  

அடையாறுங்குற ஆறு கடலில் கலக்கும் பகுதியின் வடக்கு பகுதியும், சாந்தோம் சர்ச்சுக்கும் இடைப்பட்ட பகுதியே சாந்தோம் பீச்.  சாந்தோம் சர்ச் என்னும் புனித தோமையார் தேவாலயம் இங்கதான் இருக்கு. இந்த இடம் மீனவமக்கள் நிறைந்த பகுதியாகும். இங்க மீன் விற்பனை களைக்கட்டும்.
 பெசண்ட் நகர்  பீச்ன்னு சொல்லப்படும் எட்வர்ட் எலியட் பீச்தான் மெரினாவின் கடைசி முனை.  காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த எட்வர்ட் எலியட்ன்ற  ஆங்கில அதிகாரியின் நினைவாக இந்த பீச் அழைக்கப்படுது. மெரினா பீசுலயே இந்த பீச் ரொம்ப சுத்தமா இருக்குமாம்!  நீரில் மூழ்க ஒருவரை காப்பாறறி தன் உயிரை இழந்த  டச்சு மாலுமியான கார்ல் இசுபிட்   நினைவாக  இங்க ஒரு நினைவு சின்னம் இருக்கு. இங்கதான் அஷ்டலட்சுமி கோவில், ஆரோக்கியமாதா கோவில், அறுபடைவீடு கோவிலும் இருக்கு.  அஷ்டலட்சுமி கோவில் நம்ம பிளாக்குல வந்திருக்கு. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திருங்க. 

இன்னிக்கு சென்னைல புதுசு புதுசா கட்டிங்கள் பல வந்தாலும் 200, 300 வருட கட்டிடங்களும் சென்னைல இன்னும் இருக்கு. அதுல ஒரு சிலது பார்ப்போம்..   1892 ல ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி   இண்போ- சர்ச்சியனிக் கட்டடக்கலையின்படி கட்டப்பட்டது இன்றைய உயர்நீதிமன்ற வளாகம். இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம்ன்ற பெருமை கொண்டது இக்கட்டிடம்.  மிக உயரமான கூம்புகளால் நிற்கும் அழகிய கட்டிடம் இது.  முழுக்க முழுக்க  சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்டது.  ஆரம்ப காலங்களில் இந்த கட்டிடம் கலங்கரை விளக்கமாவும் இருந்திருக்கு.  சென்னைமீது எம்டன் கப்பல் வீசியதில் அந்த லைட் அவுஸ்  சேதமாகிட்டதால இன்றைய லைட் அவுஸ் கட்டப்பட்டது. இதற்கான நினைவுக்கல் ஒன்னு வச்சிருந்தாங்க. இப்ப இருக்கா?! இல்லியான்னு தெரில.
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் இடமான தலைமைச்செயலகம்  இருக்கும் கட்டிடத்தோட பேரு புனித ஜார்ஜ் கோட்டை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். 1644  ஏப்ரல் 23ம் நாளில்தான் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.  சுத்திலும் அகழி சூழ்ந்த இக்கட்டிடத்தின் சுவர்களும், கதவுகளும் இதன் பழமையை பறைச்சாற்றுது. காலமாற்றத்தில் எத்தனை மாற்றம் இக்கட்டிடத்தில் செய்தாலும்  பழமை மாறாம இருப்பது ஆச்சர்யமே!
எனக்கு சென்னைன்னா ரொம்ப பிடிக்கும். அங்க படிக்கனும்ன்னு நினைச்சேன்.  அங்கதான் வாக்கப்படனும்ன்னு  நினைச்சேன்..  அங்கதான் செட்டில் ஆகனும்ன்னு நினைச்சேன். ஆனா எதும் நடக்கல. பார்க்கலாம் எதிர்காலத்துலயாவது செட்டில் ஆகுறேனான்னு. சென்னைமேல் இருந்த மோகத்தால் சென்னை பத்தி எழுதிய பதிவு இன்னிக்கு உதவுது. வரிசையா பார்த்துட்டு வந்திருங்க /.... சென்னை தின கொண்டாட்டம் ஆக 20 முதல் 27 வரை கொண்டாடப்படுது. அதுக்காக தமிழக அரசு சார்பா பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், மாரத்தான் ஓட்டம், விளையாட்டு போட்டி, பேச்சு போட்டின்னு நிறைய போட்டிகள் களைக்கட்டுது. 






அண்ணா சமாதி

தி மெயில் கட்டிடம்...

ஹாப்பி பொறந்த டே டூ சென்னை

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470106
நன்றியுடன்,
ராஜி

Friday, November 06, 2015

அஷ்டலட்சுமி திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம்.  அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தாராம்.  அதன்படி சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைமாநகர் ன்ற இடத்துல, வங்க கடற்கரையோரம் 1974 ம் ஆண்டு இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டதாம்.  பெரும்பாலும் திருத்தலங்கள்லாம் ஆறுகள்,  குளங்கள் , கிணறுகள் இவைகளே தீர்த்தங்களா காணப்படும்.  ஆனா,  இக்கோவில் வங்க கடலையே தீர்த்தமாக (புஷ்கரணியாக) கொண்டிருக்கு. இது இக்கோவிலின் சிறப்பாகும். சரி, இனி கோவிலினுள் போகலாம் வாங்க ...,,


இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.  45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கு.  தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு.  அஷ்டலக்ஷ்மியின் சன்னதி விமானத்தில் ஒன்பது சக்திகள் அமைந்துள்ளன. அதேப்போன்று தரைப்பகுதி சக்கரமாகவும், மொத்த அமைப்பு மேருவாகவும், தரிசனத்திற்கு மேலே சென்று இறங்கிவரும் பாதை ”ஓம்” வடிவமாகவும் கட்டப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு .
   

மாகாலக்ஷ்மி சன்னதியை தரிசனம் செய்துட்டு வரும்போது 18 படிக்கட்டுகள் இருக்கு.  அவை 18 தத்துவங்களை நமக்கு உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.  சிற்ப ஆகமசாஸ்திரப்படி அவை குறுகலாக 28 அங்குல அளவு கொடுத்து அமைக்கப்பட்டிருக்கு.  மேலே ஏறிச் சென்றால் முதல் தளத்தின் கிழக்கே கஜலக்ஷ்மியையும், தெற்கே சந்தானலக்ஷ்மியையும், மேற்கே விஜயலக்ஷ்மியையும், வடக்கே வித்யாலக்ஷ்மியையும் ஆகிய நான்கு லக்ஷ்மிகளின் தரிசனம் மட்டுமே கிடைக்கும். அடுத்தடுத்த படிகளில் மேலே ஏறிச்சென்றால் இரண்டாம் தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள தனலட்சுமி தாயாரைத் தரிசிக்கலாம்.


தனலட்சுமி தாயாரைத் தரிசனம் செய்துவிட்டு மண்டபம் வழியேக் கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்யலட்சுமி, வடக்கே தைரியலட்சுமியையும் தரிசிக்கலாம்.  இந்த கோவில் ஓம் எனும் எழுத்தின் வடிவில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு ”ஓம்”காரதலம்ன்னு  அழைக்கப்படுது.   வற்றாத வங்கக்கடல் எப்போதும் ஓம் என்றே முழங்கிக் கொண்டு இருக்கிறது. இதனாலும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படலாம். 





நாம் மேலே ஏறி செல்லும் போது திருக்கோவிலின் தென்கிழக்கு பகுதியில் மஹாலட்சுமி திருமாலுக்கு மாலையிடும் காட்சியும், அருகில் பரமேஸ்வரன், பிரம்மா,இந்திரன், சூர்யன், சந்திரன், நாரதர், அக்னி, சுகர், வருணன், வாயு துர்வாசர், வசிஷ்டர் அனைவரும் இந்த மங்களகரமான காட்சியை பார்ப்பது கலையுணர்வுடன் வடிவமைத்திருப்பது காணத்தக்கது. தென்கிழக்கு பகுதியிலுள்ள வைகுண்ட தரிசனகாட்சி அழகான கூர்ம பீடத்தின் மேல் எட்டு இதழ்கள் 4 வீதம் கொண்ட பத்ம பீடத்தில் சாமரம் வீசுகின்றனர்.


ஆதிசேஷன் படுக்கையின் மேல் சங்கு, சக்கரம், கதை இவைகளுடன் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் திருமால் காட்சியளிக்கிறார் . ஒருபுறம் வைந்தேயரும், ஒரு புறம் விஸ்வக்சேனர் ,இந்திரர், சனகர் , சனந்தனர், சனாதனர் போன்றோரும் வைகுண்ட நாதனை தரிசனம் செய்யும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கு.  வடமேற்கு பகுதியில் அத்வைதம் அளித்த சங்கரரும், விஷிச்டத்வைதம் நிறுவிய ராமனுசஜரும், துவைததை நிறுவிய மத்வாச்சரியரும்கூட வீற்றிருக்கின்றனர். திருகோவிலின் வடமேற்கு பகுதியில் விஜயலக்ஷ்மியை தரிசனம் செய்து விட்டு வித்யாலக்ஷ்மியை தரிசிக்க வரும் வழியில் சித்ரவேலைபாட்டில் கல்விக்கடவுளான, லட்சுமிஹயகிரீவரும், அவரை துதிக்கும் நிகமார்ந்த மாகா தேசிகனையும் காணலாம்.

அடுத்தாற்போல் லட்சுமி உடனுறை வராக மூர்த்தியையும் தரிசிக்கலாம். கஜலட்சுமி சன்னதியில் தரிசனம் முடிந்த பின், பதினெட்டுப் படிகள் மேலே ஏறி இரண்டாம் தளத்திலுள்ள தனலட்சுமி சன்னதிக்கு செல்லும் வழியில் நிகமார்ந்த தேசிகன் திதி கொள்வதையும், திருமகள் காட்சித் தந்து பிரம்மச்சாரிக்கு பொன்மாரி பொழிவதையும் விவரிக்கும் கதை சிற்பங்கள்  காணப்படுது.  தனலட்சுமி சன்னதியின் முன்பு பெரும் வட்டமான மாடத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் மகாலட்சுமி திருவுருவமும் , தனலட்சுமியை சுற்றி வரும்போது தென்புறம் தட்சிணாமூர்த்தியும் மேற்குப்புறம் அனந்தசயன பெருமாள் திருவுருவமும், பாதசேவை செய்யும் அலைமகளும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும் காட்சித் தருகின்றனர். 


பிரதான கர்ப்பக் கிரகம் 10 அடி அகலத்தில் 14 அடி உயரம் உடையது. கருங்கல் சுவரால் மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கு. மூலவர் மகாலட்சுமி தாயார் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய வரத  முத்திரைகளுடன் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீனிவாசர்
 என்னும் பெயரோடு மகா விஷ்ணு அருள்புரிகிறார். மகாலக்ஷ்மியும் மஹா விஷ்ணுவும் திருமணக்கோலத்தில் நின்ற வண்ணம் உள்ளதால் எப்பொழுதும் மகாலக்ஷ்மிக்கு 9 கஜம் பட்டுப்புடவையும் மகா விஷ்ணுவிற்கு 10 முழ வேட்டியும் கட்டப்படுது.


இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். வில்வ மரம் லட்சுமிக்கு உகந்தது, அதில் லட்சுமி வாசம் செய்கிறாள் என சொல்வதுண்டு. வில்வத்தின் வேர் முதல் நுனி வரை லட்சுமி குடி இருப்பதாக ஐதீகம்.


இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வழிபாட்டு முறை பஞ்சராத்திர ஆகமம்.



இக்கோவிலில் மேலும் விஷ்ணுவின் தசாவதாரச் சன்னிதி, கமல விநாயகர் சன்னிதி, குருவாயூரப்பன் சன்னிதி, சக்கரத்தாழ்வார்- யோக நரசிம்மர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி, கருடாழ்வார் சன்னிதியும் அமைந்திருக்கு.


குழந்தை தாய்ப்பாலுக்கு பின் திட தான்ய உணவை முதன் முதலாக உட்கொள்ள தொடங்க, ஒரு நல்ல நாளில் இக்கோவிலில் இருக்கும் குருவாயூரப்பன் சன்னிதியில் பூஜை புணஸ்காரம் செய்து , திருமஞ்சனத் தீர்த்தத்தை தருகின்றனர்.  மேலும் திருப்பவித்ர உற்சவம், மார்கழிதிங்கள், கோகுலாஷ்டமி, தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை விழாக்கள்ல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுதாம்.



அஷ்ட லட்சுமிகளும், ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் கோவில் கொண்டிருப்பது உலகத்திலேயே வேறெங்கும் கிடையாதாம்.  ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது.


திருமண தோஷம் போக லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண யோகம் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கும், நோய் குணமாக ஆதிலட்சுமிக்கும், செல்வம் வேண்டி தனலட்சுமிக்கும், கல்வி செல்வம் பெற வித்யாலட்சுமிக்கும், மனத்தைரியம் பெற தைரியலட்சுமிக்கும் பூஜை செய்து அம்மனின் அருள் பெறுகின்றனர்.


வேறொருக் கோவில் பற்றிய அறிய புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் மீண்டும் சந்திப்போம். நன்றி! வணக்கம்.

இது ஒரு மீள் பதிவு