Friday, February 03, 2017

ஆரோக்கியம் தரும் ரதசப்தமி வழிபாடு - புண்ணியம் தேடி...


கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, படிப்புக்காக, பணத்துக்காகன்னு ஆயிரம் விரதங்கள் இருக்கு. ஆனா, ஆரோக்கியத்துக்கு?!

அதுக்கும் நம் இந்து சமயத்துல இருக்கு...  நாம், நம் குடும்பம் ஆரோக்கியத்தோடு வாழ  ”ரத சப்தமி”ன்னு ஒரு விரதமிருக்கு.. தை மாதத்தில் இவ்விழா அனுஷ்டிக்கப்படுது.

எல்லா தெய்வத்துக்கும் ஜெயந்தி தினம் உண்டு.. சூரியனுக்கும் அப்படி ஒரு தினத்தை வைத்து கொண்டாடும் நாளே ”ரத சப்தமி” தை அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சூரியன் ஜெயந்தி கொண்டாடப்படுது. அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிதுசிறிதாய் கூட்டுகிறான்.

தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன்,  வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக்கொண்டாடப்படுது.



சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது.


ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான்; தன் ஒளிக்கிரணங்களின் சக்தியை கூட்டியும் குறைத்தும் பயணிக்கிறானென்று புராணங்கள் கூறுகின்றது.  அதனை அறிவியலும் ஏற்கிறது.


சித்திரை மாதத்தில் விஷ்ணு என்ற பெயரில் 1000 கதிர்களுடனும்...
வைகாசி மாதத்தில் அர்யமான் என்ற பெயரில் 1300 கதிர்களுடனும்.. 
ஆனி மாதத்தில் விஸ்வஸ் என்ற பெயரில் 1400 கதிர்களுடனும்...

ஆடி மாதத்தில் அம்சுமான் என்று 1500 கதிர்களுடனும்...
ஆவணி மாதத்தில் பர்ஜன் என்ற பெயரில் 1400 கதிர்களுடனும்...
 புரட்டாசி மாதத்தில் வருணன் என்ற பெயரில் 1300 கதிர்களுடனும்..
 ஐப்பசி மாதத்தில் இந்திரன் என்று பெயர் பெற்று 1200 கதிர்களுடனும்..
கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் பெற்று 1100 கதிர்களையும்..
மார்கழி மாதத்தில் நண்பனாக 1500  கதிர்களுடனும்....
தை மாதத்தில் பூஷாவான் என்ற பெயரில் 1000 கதிர்களுடனும்...
மாசி மாதத்தில் பகன் என்ற பெயரில் 1000 கதிர்களுடனும்...
பங்குனியில் துவஷ்டா என்ற பெயரில் 1100 கதிர்களால் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுகிறான்.
ரதசப்தமி விரதம் மிக எளிதானது.. சூரிய உதயத்தின்போது ஏதாவது ஒரு நீர்நிலைக்கு சென்று நீராட வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் இல்லத்திலேயே சிறிதளவாவது சூரிய ஒளி படும் இடத்தில் நீராட வேண்டும்.
தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, கால்களில் இரண்டு என மொத்தம் ஏழு எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள்பொடி, அட்சதையும், ஆண்கள் வெறும் அட்சதம் மட்டும் வைத்து நீராட வேண்டும். இவ்வாறு நீராடுவதால் உடல் ஆரோக்கியமும்   செல்வ வளமும் கிட்டும் என்பது ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே எருக்கம் இலை என மாறிவிட்டது. சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கம் இலைக்குண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும்.


இப்படி செய்வதால் நாம் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும், புண்ணிய பலன்கள் பெருகும். அன்றைய தினம் குளித்து முடித்து சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதற்குப்பின் நமக்கு தெரிந்த சூரிய துதிகளை சொல்ல வேண்டும்.

எந்த தெய்வத்தை வழிப்படுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்றது அர்க்கியம் விடுவது. எனவே “ரத சப்தமி”யன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. சூரிய பகவானுக்கு உகந்தது சர்க்கரை பொங்கல் நிவேதனம்.

பொங்கல் வைத்து அதன் சூடு ஆறும் முன் நிவேதனம் செய்திடல் வேண்டும். சூரியனுக்கு படைத்தப்பின் சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். “ரத சப்தமி”யன்று வீட்டுவாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்த கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதுண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் “ரத சப்தமி” பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச்செய்யும் எனவும் ஐதீகம்.. ரதசப்தமி தினத்தில் வழிப்படும்போது சூரியனை நோக்கி...

”ஓம் நமோ ஆதித் யாய... ஆயுள்ஆரோக்கியம்புத்திர் பலம் தேஹிமேசதா'' 

என்று சொல்லி வணங்கலாம்.
ஆயிரம் நாமங்கள் சொல்லி என்னை எவரொருவர் என்னைத் துதித்து வழிப்படுகிறார்களோ அவர்களின் எண்ணங்களை முழுமையா பூர்த்தி செய்வேன். ஆயிரம் நாமாவளி சொல்ல இயலாதவர்கள் இருபத்தியொரு நாமங்கள சொன்னாலும் போதும் என சூரிய பகவான் அருளிய இருபத்தியொரு நாமாவளி.


"ஓம் விகர்த்ததோ விவஸ்வாம்ஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாசஸ்ரீமாம்
லோக சாக்ஷி த்ரிலோகேச:கர்த்தா ஹர்த்தா 
தமிஸரஹ'தபனஸ் தாபனஸ் சைவ
 கசி:ஸப்தாஸ்வ வாஹன
கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மாச
ஸர்வ தேவ நமஸ்கிருத:"

மேற்கண்ட இருபத்தியொரு நாமாவளியை செபித்து உடல், மன ஆரோக்கியத்தோடும், செல்வ வளத்தோடும் பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம். 

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை வணக்கங்களுடன் விடைப்பெறுவது
ராஜி.

Sunday, January 29, 2017

கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர் - பக்தி

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்தவர் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்கிறார் என பார்க்கலாம். .இதில் ஒற்றுமை என்னவென்றால் ,வடநாட்டில் பிறந்த இராமகிருஷ்ணர் என்ன கருத்துக்களை சொல்கிறாரோ அதையேதான் சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன.
ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மம் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே அவன் இல்லை’, ‘அவன் இல்லைஎன்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் இல்லைஎன்ற பதிலோ ஆமாம்என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மத்தை கண்டவர் நிலையும் இதேபோல் தான் அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.
 ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். எங்கும் நிறைந்தவன் அவனே ,எதிலிருந்து ஆரம்பிப்பது .எதில் முடிப்பது .ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியாயிற்றே, இரண்டாவது மகன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.
இந்த எடுத்துக் காட்டுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்”-- என்று ஆனந்தக் கூத்தாடி நம்மை எல்லாம் உய்விக்க முயற்சி செய்கிறார்கள். சேரவாரும் ஜெகத்தீரே”-- என்று நம்மிடம் கெஞ்சுகின்றனர். அப்படியும் நாம் போகாவிட்டால் கடைவிரித்தேன் கொள்வரில்லையே”--- என்று வருத்தப் படுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம் காட்டும் உண்மை:

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்; கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான்..பகவத் கீதையில் பெருங் கடலை, சமுத்திரத்தை ‘’ஆபூர்யமாணம், அசலப் ப்ரதிஷ்டம்’’= எங்கும் நிறைந்தது, நிலைகுலையாதது என்று கிருஷ்ணன் கூறுவான் (2-70). ஆர்பரித்துத் துள்ளி ஓடும் பெரிய, பெரிய நதிகள் எல்லாம் கடலுக்குள் இறங்கியவுடன் சப்தம் ஒடுங்கி தன் நாமம் இழந்துவிடும். இது போல ஆசைகள் எல்லாம் ஒருவனுக்குள் ஒடுங்கவேண்டும். பின்னர் இறைவனைக் காண முடியும். என்று கூறுகிறார்
இதையே ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோஎன்று மாணிக்கவாசகர் பாடினார்.இதுபோன்ற சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. மீண்டும் ஒரு பக்தி பதிவினூடே சந்திக்கலாம் .நன்றி ..


Monday, December 12, 2016

திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?! - கார்த்திகை தீப ஸ்பெஷல்




தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் இந்த கார்த்திகை தீபத்திருவிழா ஒரு சிறிய தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுது. இன்று இந்த விழா மிகச்சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுது.  

திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சிப்புரத்தில் வாழ்தல் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, இந்த வரிசையில் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அத்தகைய வல்லமை கொண்டது இம்மலை.  நினைத்தவுடனே முக்தி அளிக்கமளவுக்கு கருணை கொண்டவர்தான் இங்கு குடிக்கொண்டிருக்கும் “அண்ணாமலையார்”. அவர் ஜோதிமயமாய் எழுந்தருளிய நாளான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில்  “தீபத்திருநாளாய்” கொண்டாடப்படுது.






ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற மமதைக்கொண்டு தங்கள் ஐயம் தீர்க்க சிவப்பெருமானிடம் வந்து நின்றனர். ”மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதிப்பிழம்பாய் உருவெடுத்து , சிவனின் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கிறீர்களோ , அவர்களே உயர்ந்தவர்” என அசரீரி ஒலித்தது.

சிவனின் அடியைக் காண விஷ்ணு வராக அவதாரம் கொண்டு பூமியை துளைத்துச் சென்றார். முடியைக்காண பிரம்மா பறவை உருக்கொண்டு விண்ணில் பறந்தார். யுகம் யுகமாய் பயணித்தும் அடியைக் காண முடியாமல் தன் தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டு சிவனிடம் சரணாகதி அடைந்தார். 

இதற்கிடையில், சிவனின் சடாமுடியிலிருந்து விழுந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த தாழம்பூவிடம் இன்னும் எவ்வளவு தூரம் எனக்கேட்க, இன்னும் பல யுகம் பயணிக்க வேண்டும் எனச் சொன்னது தாழம்பூ. அப்படியெனில் எனக்கொரு உதவி செய். ன் சிவனின் முடியை நான் கண்டதை நீ கண்டதாக சொல் என பூமிக்கு அழைத்து வந்து இருவரும் சிவனிடம் பொய்யுரைத்தனர். அதனால், கோவம்கொண்ட சிவன், இனி தன் பூஜைக்கு தாழம்பூ ஆகாது எனவும், பிரம்மாவுக்கு தனியான சந்நிதி இனி கிடையாது என சாபமிட்டார்.



தங்கள் தவறை உணர்ந்த மூவரும் சிவனிடம், எல்லோரும் வணங்கி வழிப்பட ஏற்ற உருவத்தை தாங்கள் எடுக்க வேண்டுமென வேண்டி நின்றனர். கோவம் தணிந்த சிவபெருமானும், மலையாக உருவெடுத்தார். அம்மலையே “திருவண்ணாமலை” ஆகும். அதனால்தான், மலையே லிங்கமாய் உருவகப்படுத்தி மக்கள் கிரிவலம் வருகிறார்கள் என புராணங்கள் சொல்கிறது.  அண்ணா என்றால் ”நெருங்கவே முடியாத” எனப்பொருள். பிரம்மா, விஷ்ணு இருவராலும் அடி, முடியை நெருங்கவே முடியாத மலையானதால் ”அண்ணாமலை” என அழைக்கப்படுது.


சிவப்பெருமானின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாய் மூட பூலோகம் முழுக்க இருள் பரவியது. அதனால கோவம் கொண்ட சிவன், தன்னை நீங்கி பூலோகம் சென்று தன்னை வழிப்பட்டு வரவேண்டுமென சாபமிட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்து மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்படுகிறாள். அங்கிருந்து திருவண்ணாமலை வந்து, கௌதம புத்தரின் வழிக்காட்டுதல்படி சிவபூஜை செய்து, “மடக்கு” என்றழைக்கப்படும் மண் பாத்திரத்தில் விளக்கேற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிப்படுகிறார். அம்மையாரின் பக்திக்கும், தவத்துக்கும் மனமிரங்கி ஈசானலிங்கத்தை நெருங்கும்போது இறைவன் ரிஷப வாகனத்தில் வந்து அம்மையை இடப்பாகமாக ஏற்றுக்கொள்கிறார். 

உலக மக்களையெல்லாம் காப்பவளாயிற்றே அன்னை! தன் மக்களுக்காக  “தாங்கள் எனக்கு மட்டும் காட்சியளித்தால் போதாது. அனைவருக்கும்  காட்சியளிக்க வேண்டுமென வரம் கேட்கின்றாள். ஆண்டுக்கு ஒருநாள் தான் இங்கு ஜோதி சொரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தர்சிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும் . அந்த நாளில் தன்னை தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியடையும் என அருள்கின்றார். இறைவன் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் நாளே கார்த்திக மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் மகாஜோதியாகும். 

திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைப்பெறும் இத்தீபத்திருநாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  அன்று அதிகாலை சுயம்புலிங்கமான அருணாச்சலேஸ்வரருக்கு “பரணி தீபம்” ஏற்றப்படுகிறது. மாலையில்  ஒருசில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிப்பார். மலைமீது தீபமேற்றிய பிறகே கோவிலில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் முழுவதும் வீடு, கோவில்களில் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அக்னியின் அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்துக்குண்டான பலனை அளிக்கவல்லது திருவிளக்கேற்றி வழிப்படுவது.  தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி, பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது விளக்கேற்றி வழிப்படலாம்.


அசுரனை அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 


புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ்லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனால, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து பஞ்சு திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வளர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கேத்துற பழக்கம் வந்துச்சாம்!!.


இனி விளக்கேத்துற முறைகள் பற்றி பார்ப்போம்..., 

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேத்தனும். பின்கதவு இல்லாதவர்கள் ஜன்னலையவது சார்த்திய பிறகே விளக்கேற்றனும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 

விளக்கேற்றும் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம். 

அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.



திருவிளக்கின் சிறப்பு:
தினமும் நாம வீட்டில் ஏத்தி கும்பிடும் காமாட்சி அம்மன் விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாம தடுக்குது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.


எண்ணெயின் பலன்:
எல்லா எண்ணெயிலும் விளக்கேற்ற முடியாது.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் கடனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.


 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 


திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றது.


இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் உகந்ததுன்னு பார்க்கலாம்..., 


விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய
ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலைதிருமேனி
திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைய் முழ
வதிரும் அண்ணாமலை தொழுவார் 
வினை வழுவாவண்ணமறுமே.


தென்னாடுடைய சிவனே போற்றி!..
எந்நாட்டவர்க்கும் இறவா போற்றி!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்...,
ராஜி.

Friday, December 09, 2016

நாயன்மார்கள் அறுபது பேரா?! அறுபத்தி மூவரா?! - புண்ணியம் தேடி...




நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப்பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரந்து பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை ”திருத்தொண்டர் புரணம்” என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.  மூவர் சிலைகள்  முடியா சிறிய சிவாலயங்களில் ”நால்வர்” என்றழைக்கப்படும்  “அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்” உருவச்சிலைகளாவது கண்டிப்பாய் இருக்கும். இந்த நால்வரும் “சைவ சமய் குரவர்” என்று அழைக்கப்படுகின்றனர். 



12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும், அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசராலும், ஏழாம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடலாகும். 

நாயன்மார்களில் சிலரே சமயநூல்களில் புலமை பெற்றவர்கள். மற்றவர்களெல்லாம் மிகச்சிறந்த பக்தர்கள் மட்டுமே! பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற  பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் மூலம் நமக்கு இறவன் உணர்த்துகின்ற பாடம்.




நாயன்மார்கள் வரிசையில் பெண்கள்:

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கி.பி 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மாயாரே பெண் நாயன்மார்களில் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் அம்மையாரின் இயற்பெயர் “புனிதவதி” ஆகும். இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பெண்நாயன்மார் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் “நின்றசீர் நெடுமாற நாயனார்” என்ற நாயன்மாரின் மனைவியான “மங்கையர்கரசி”யாவார். மூன்றாவது பெண் நாயன்மாராக இடம்பெற்றவர், திருநாவலூரை சேர்ந்த சடையனார்  என்ற நாயனாரின் மனைவி “இசைஞானி”. இவர்களின் மகன்தான் சுந்தரர். சைவ சமய குரவர்களில் ஒருவர்.



நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார்கள் மொத்தம் அறுபது. அறுபத்தி மூவர் அல்ல. சுவாமிமலைக்கு படி 60. தமிழ் ஆண்டுகள் 60, மனிதனுக்கு மணிவிழா செய்வது 60 வது ஆண்டு. ஒரு நாழிகைக்கு அறுவது வினாடி.ஒரு வினாடிக்கு அறுவது நொடி. இப்படி எல்லாமே ஆருபது என்ற கணக்கிலேதான் வரும். அறுபத்தி மூன்று என வராது.
சிவப்பெருமான் அடி எடுத்து கொடுத்து சுந்தரமூர்த்தி நாயன்மார்  பாடிய நாயன்மார்கள் மொத்தம் அற்பது  பேர்கள்தான்.

சுந்தரமூர்த்தி நாயன்மாரின் மறைவுக்கு பின் 100 ஆண்டுகள் கழித்து ”நம்பியாண்டார் நம்பி அடிகள்” சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அறுபது நாயன்மார்களை சற்று விரிவாய் பாடுகின்றார். அப்போது, நாயன்மாரை பற்றி பாடிய சுந்தரரையும், அவரப்பெற்ற சடையனாரையும், அவரின் அம்மா இசைஞானியாரையும் சேர்த்து அறுபத்தி மூவராக்கினார்.

நாயன்மார்கள் பிறந்த தலங்களை ”நாயன்மார் அவதார தலங்கள்” என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு தலங்கள் தமிழகத்தில் உள்ளது. மற்றவை பாண்டிச்சேரி(காரைக்கால்),ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற விகிதத்திலும், கேரள மாநிலத்தில் தலங்களும் உள்ளது.


நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான  முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொருவரும்..., சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்தியொருவரும், அடியாரை வழிப்பட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்தியொருவரும் ஆவர்.



நாயன்மார்களின் குலங்களும், அவர்களின் குரு பூஜை தினங்களும்...



1அதிபத்தர்பரதவர்
2அப்பூதியடிகள்அந்தணர்
3அமர்நீதி நாயனார்வணிகர்ஆனி பூரம்
4அரிவட்டாயர்வேளாளர்
5ஆனாய நாயனார்இடையர்
6இசைஞானியார்ஆதி சைவர்சித்திரை
7இடங்கழி நாயனார்செங்குந்தர் குல குறுநில மன்னர்[3][4]
8இயற்பகை நாயனார்வணிகர்
9இளையான்குடிமாறார்வேளாளர்
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்
11எறிபத்த நாயனார்
செங்குந்தர் [5][6]
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்ஆனி ரேவதி
13ஏனாதி நாதர்சான்றார்
14ஐயடிகள் காடவர்கோன்குறுநில மன்னர்
15கணநாதர்அந்தணர்
16கணம்புல்லர்
செங்குந்தர் [7][8]
17கண்ணப்பர்வேடர்
18கலிய நாயனார்செக்கார்
19கழறிற்ற்றிவார்அரசர்
20கழற்சிங்கர்குறுநில மன்னர்வைகாசி பரணி
21காரி நாயனார்
செங்குந்தர் [9][10]
22காரைக்கால் அம்மையார்வணிகர்
23குங்கிலியகலையனார்அந்தணர்
24குலச்சிறையார்மரபறியார்
25கூற்றுவர்
செங்குந்தர் குல குறுநில மன்னர் [11][12]
26கலிக்கம்ப நாயனார்வணிகர்
27கோச் செங்கட் சோழன்அரசன்
28கோட்புலி நாயனார்வேளாளர்
29சடைய நாயனார்ஆதி சைவர்
30சண்டேஸ்வர நாயனார்அந்தணர்
31சத்தி நாயனார்வேளாளர்
32சாக்கியர்வேளாளர்
33சிறப்புலி நாயனார்அந்தணர்
34சிறுதொண்டர்சாலியர்சித்திரை பரணி
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்ஆடிச் சுவாதி
36செருத்துணை நாயனார்வேளாளர்88
37சோமசிமாறர்அந்தணர்வைகாசி ஆயிலியம்
38தண்டியடிகள்
செங்குந்தர் [13][14]
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர்சித்திரை சுவாதி
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்வைகாசி மூலம்
41திருநாவுக்கரசர்வேளாளர்சித்திரை சதயம்
42திருநாளை போவார்புலையர்
43திருநீலகண்டர்குயவர்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்வைகாசி மூலம்
45திருநீலநக்க நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
46திருமூலர்இடையர்
47நமிநந்தியடிகள்அந்தணர்வைகாசி பூசம்
48நரசிங்க முனையர்
செங்குந்தர் குல குறுநில மன்னர் [15][16]
49நின்றசீர் நெடுமாறன்அரசர்
50நேச நாயனார்சாலியர்
51புகழ்சோழன்அரசர்
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்ஆனி ஆயிலியம்
53பூசலார்அந்தணர்
54பெருமிழலைக் குறும்பர்
செங்குந்தர்[17][18]
55மங்கையர்க்கரசியார்அரசர்சித்திரை ரோகிணி
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்
57முருக நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
58முனையடுவார் நாயனார்வேளாளர்
59மூர்க்க நாயனார்வேளாளர்
60மூர்த்தி நாயனார்வணிகர்
61மெய்ப்பொருள் நாயனார்
செங்குந்தர் குல குறுநில மன்னர்[19][20]
62வாயிலார் நாயனார்வேளாளர்
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்

இவை நாயன்மார்களின் பற்றிய பொதுவான தகவலாகும். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு நாயன்மார்களைப் பற்றி அகர வரிசையில் இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.



நாயன்மார்கள் வரிசையில் சேராத பெண்ணொருத்தி:

சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவ பெருமான் மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனத்தில் நினைத்ததையும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் கொடுக்கக் கூடிய அளவில் அளவில்லாத பக்தி உடையவர்.
       இப்படி இயற்பகையார் அடியார் பணி செய்து கொண்டு இருக்கும் காலத்தில் தூய வெண்ணீறு அணிந்த மேனியுடன் புறத்தில் காவி அணிந்து அகத்தில் காமம் அணிந்தவராகத் தம் இல்லம் வந்த அடியாரை வரவேற்று வணங்கி ஆசி பெறுகிறார்.
      அப்போது வந்த அடியவர் இயற்பகையாரிடம் “அடியார் வேண்டுபவர் வேண்டுவதை நீ தருவாய் என்று கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். நீ இசைவாயானால் எனக்கு வேண்டியதைக் கூறுவேன்” என்கிறார்.
    இயற்பகையார் “தாங்கள் கேட்பது எதுவாயினும் என்னிடம் உளது எனின் அது எம்பெருமானின் உடைமையாகும். எனவே நீவிர் விரும்பிய பொருளைக் கேட்டு அருள்க” என்கிறார்.
       “உன் மனைவியின் மீது பெருகிய காதலினால் அவளைக் கேட்டுப் பெற வந்துள்ளேன்” என்கிறார் அந்தக் காமத் துறவி. “காட்டுக்குப் போ” என்று கைகேயி கூறியவுடன் கம்ப நாடனின் காப்பியத் தலைவன் முகம் மலர்ந்ததைப் போல இயற்பகையார் முகம் மலர்ந்தது. “என்னிடம் உள்ளதொரு பொருளைக் கேட்டுள்ளீர்கள்” என்று உவகையுடன் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். தம் மனையாளைக் கரம் பிடித்து அடியார் முன்பு அழைத்து வந்து “முறைப்படி மணம் செய்து கொண்ட என் மனையின் விளக்கே! இந்தத் துறவியாருக்கு உன்னை நான் கொடுத்து விட்டேன்” என்று கூறிவிடுகிறார். மனையாளும் ஒப்பி விடுகிறார்.
         மனைவியைக் கொடுத்த மகிழ்வுடன் இயற்பகையார் அடியாரைப் பார்த்து “வேறு நான் செய்ய வேண்டுவது யாது?” என்று வினவுகிறார். “நான் உன் மனையாளுடன் இவ்வூரைக் கடந்து செல்லும் வரை நீ வழித்துணையாக உடன் வர வேண்டும்” என்கிறார் அடியார். இயற்பகையாரும் பொன்போல ஒளிரும் ஆடையையும் கச்சையையும் அணிந்து கையில் வாளையும் ஏந்திக் கொண்டு அம்மையாரையும் அடியவரையும் முன்னே போக விட்டு இவர் பின்னே காவலாகச் செல்கிறார்.
       உற்றார் உறவினர்கள் எல்லோரும் எதிர்வந்து தடுக்கின்றனர். தடுத்த அவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறார் இயற்பகையார். அடியவர் கூறிய இடம் வந்ததும் “சென்று வருகிறேன்” என்று கூறித் திரும்பியும் பார்க்காமல் வந்து விடுகிறார். அடியாராய் வந்த ஈசன் மனம் மகிழ்ந்து “இயற்பகையானே ஓலம்” என்று ஓலமிட்டு அழைக்கிறார். அப்போதும் இயற்பகையார் “இன்னும் உம்மைத் தடுப்பவர் உளர் எனின் அவரையும் என் வாளால் வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே வருகிறார். அங்கு அடியவரைக் காண வில்லை. மறைந்து விடுகிறார். வானத்தில் இறைவன் உமையாளுடன் காட்சி அளிக்கிறார்.


       இப்படித் தம் உரிமை மனையாளையும் சிறிதும் வருத்தமின்றி ஆண்டவனின் அடியாருக்குக் கொடுத்த இயற்பகை நாயனாரை,
இன்புறு தாரந் தன்னை ஈசனுக் கன்பர் என்றே
துன்புறா துதவும் தொண்டர் பெருமையைத் தொழுது  வாழ்த்தி
(பெரியபுராணம்: 439)
என்று போற்றுகிறார் சேக்கிழார். சேக்கிழாருக்குத் தொண்டர்தம் பெருமையை எழுத துணையாய் நின்ற திருத்தொண்டத் தொகையை இயற்றிய சுந்தரமூர்த்தி நயனார்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்(திருத்தொண்டத் தொகை)
என்று போற்றுகிறார்.
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே. (திருத்தொண்டர் திருவந்தாதி: 4)
என்று நம்பியாண்டார் நம்பி போற்றுகிறார். ஆனால் இந்த மூவரின் நூல்களில் எங்கும் இயற்பகையாரின் துணைவியார் எள் நுணியளவேனும் போற்றப் படவில்லை
கணவனின் சொல்லைத் தட்ட முடியாத்தால அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப்பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும், தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லைன்னு தெரியவில்லை. அவரது பெயரைக்கூட நம்மால் அறிந்துக்கொள்ள இயலாமல் போயிற்று. நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்த மங்கையர்க்கரசியாருக்குப் பாடியருளியதைப் போலவோ சுந்தரரைப் பெற்ற இசைஞானியாரைப் பாடியதைப் போலவோ ஓரிரு பாடல்களையாவது பாடி அடியார்களுள் ஒருவராக இந்த அம்மையாரையும் சேர்த்திருக்கலாம். இறைவனின் மனதை யாரறிவார்?!
பின் குறிப்பு: நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த முருகனடிமையான திருமுருக கிருபானந்த வாரியாரையும் நாயன்மார்களில் ஒருவரா சேர்க்கனும்ன்னு கோரிக்கை எழுந்துள்ளது. சில கோவில்களில் கிருபானந்த வாரியரின் சிலையையும் நாயன்மார்கள் வரிசையில் வைத்திருக்கின்றார்கள். அவரைப்பற்றியும் நாயன்மார்கள் வரிசையில் பார்ப்போம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!