Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, February 14, 2019

ஆதலினால் காதல் செய்வீர் - காதலர் தின பதிவு

காதல் ன்ற ஒற்றை வார்த்தைக்கு சுகமானது, அற்புதமானது, தெய்வீகமானது, கொடுமையானதுன்னு   எத்தனையோ அர்த்தங்களை அனுபவப்பூர்வமாய் மணிக்கணக்கில் சொல்லலாம்.  பக்கம் பக்கமாக எழுதலாம்.கவிதை வடிக்கலாம். ஒப்பாரி வைக்கலாம். குடிச்சுட்டு புலம்பலாம்.   அட, எதும் செய்ய வாய்ப்பில்லைன்னா தனிமையில் உக்காந்து மனசுக்குள்ளயே காதலை ரசிக்கலாம், போற்றலாம், தூத்தலாம்.  வளர்க்கலாம். காதலை பத்தி சொல்ல ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கதை இருக்கும். உலகம் உருவாக, இயங்க இறைவன், பஞ்சபூதங்கள்ன்னு ஆயிரம் காரணங்களை முன்வைத்தாலும், இறைவனுக்கு சற்றும் குறைவில்லாதது காதல். காதலும் கடவுளும் வேறில்லை. இரண்டுக்குமே உருவமில்லை. இரண்டையுமே உணரமுடியுமே தவிர கண்ணுக்கு அகப்படாது. இரண்டுமே நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கை பொய்த்துபோனால் கடவுளுக்கும், காதலுக்கும் வேலையே இல்ல.  இரண்டுமே வழித்துணையாக காலம் முழுக்க வரும்.சிலசமயம் காலையும் வாரிவிடும்.  ரெண்டுமே பொல்லாதது.
February 14 2013 Lovers Day Best Greetings Wallpapers Gifts. feb 14 valentines day wallpapers images tamil lover day stills online. best love quotes for lover day 2013 #borabora #bora #bora #quotes

காதலை பத்தி புதுசா நான் எதும் சொல்லிடப்போறதில்லை.   ஆனா, காதலர் தினத்தன்னிக்கு இப்படியொரு பதிவு போடலைன்னா தெய்வக்குத்தமாகிடுமேன்னுதான்... நான் ஒன்னும் எனக்காக சாப்பிடல.. என்னைய பார்க்க வச்சு சாப்பிட்டா உனக்கு வயித்து வலிக்குமேன்னு முதல்மரியாதை சிவாஜி வசனம் மாதிரிதான் இது. நான் எனக்காக பதிவு போடலீங்கோ!! மனித உயிர் தோன்றியபோதே காதலும் தோன்றிவிட்டது. ஆதிமனிதன் கடித்த ஆப்பிளில் ஒட்டியிருந்த எச்சிலிலிருந்து காதல் பிறந்தது. அது ஆதாம், ஏவாள் உடல்சேர்க்கை. இன்னிக்கும் காதலின் முக்கிய நோக்கம் உடல்சேர்க்கைன்னு சொல்வாங்க. ஆண் தன்னோட அன்பை வெளிப்படுத்த ஆயிரம் விசயமிருக்கு. ஆனா, பெண் தன்னோட அன்பை வெளிப்படுத்த சமையல், செக்ஸ்ன்னு இரண்டே விசயங்கள்தான் இருக்கு. சாப்பாட்டை யாருக்கும் கொடுக்கலாம். ஆனா, உடலை மனசுக்கு பிடிச்சவனை, நம்பிக்கையானவனுக்கு மட்டுமே முழுக்க கொடுப்பாள். அதனால் காதலில் காமம் தப்பில்லை.  காமத்துக்காகதான் காதல்ன்னாதான் தப்பு. 
valentine day wishes in Tamil

ஆணும், பெண்ணும் பகிர்ந்துக்கொள்வது மட்டும் காதல்ன்னு நம்ம புத்தியில் பதிய வச்சிருக்காங்க. காதல்ன்னா அன்பு, அன்பு ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு வடிவமெடுக்கும், ஆசிரியர் மாணவர்களுக்கிடையே அக்கறை-மரியாதையாய் உருவெடுக்கும், கடவுளுக்கும், பக்தனுக்குமான அன்பு பக்தியாய் மாறும். இப்படி காதல் பல அவதாரமெடுக்கும்.  வாலண்டைன்ஸ் டே, காதலர் தினம், அன்பர்கள் தினம்ன்னு சொல்லப்படும் இந்நாளில் அன்புக்கொண்ட யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லலாம். ஆனா காதலிக்குறவங்க மட்டுமே இந்நாளை கொண்டாடனும்ன்னு சங்கத்தில் முடிவெடுத்துட்டதால் இந்த நாளை பற்றிய தகவல்கள் சிலதை பார்ப்போம்.
Image may contain: 3 people
இந்நாளுக்கான காரணமாய் பல கதைகள் சொன்னாலும், மிக முக்கியமானது 270ம் ஆண்டில் ரோமப்பேரரசை (Roman Empire) ஆண்டு வந்த அரசன், தனது போர் வீரர்கள் திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், போரின்போது குடும்பத்துக்காக சரிவர போரிடமாட்டார்கள் என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் பண்ணிக்க விடலை. ஆனால், பிஷப் வேலன்டைன் (Bishop Valentine) என்பவர் அரசனின் ஆணைக்கெதிராக திருட்டுத்தனமாக பல போர் வீரர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்த நடவடிக்கை அரசனுக்குத் தெரியவந்ததும், வேலன்டைன் சிறையில் அடைக்கப்பட்டு அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும், சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ்  எவ்வளவோ முயன்றாள். இதை அறிந்த சிறைத்தலைவன்  தன் மகளை வீட்டுச்சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள் சிதைந்தது. உருக்குலைந்து போனாள் அஸ்டோரியஸ். அஸ்டோரியஸக்கு அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று செய்தி சுமந்து வந்தது. 
விழி இருந்தும் 
வழி இல்லாமல் 
 மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து 
பார்க்க வழி இழந்து,
 நீ மன வலி தாங்காது
 கதறும் ஒலி கேட்டும்,
 உனை மீட்க வழி தெரியாமல் 
மக்களுக்காக பலியாடாய் போகிறேன்;
 நீ ஒளியாய் வாழு! 
பிறருக்கு வழியாய் இரு!! 
சந்தோஷ ஒளி
 உன் கண்களில்மிளிறும்!! 
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து („From your Valentine“) என எழுதிவிட்டு, February 14ம் தேதி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றி கொல்லப்பட்டார் அவர் இறந்த நாளில் காதலர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள. „From your Valentine“ என்கிற வசனத்தை,  காதலர்கள் தங்கள் கடிதங்களில் பயன்படுத்த ஆரம்பிக்க, அதுவே காதலர்தின  தினத்தின் முதல் வாழ்த்து அட்டையானது. 
Two little lovers sitting in a tree decor - 25+ Valentine's Day Home Decor Ideas - NoBiggie.net


சொர்க்கத்தின் அரசனுக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ  பேரழகி. ஒருநாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத்தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கிவர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும்தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்தநாள்தான் சீனர்களின் காதலர் தினமாய் கொண்டாடப்படுது.

valentines Pallet art, and super cute valentines mantle


பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப்படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வேண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப்படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இவ்விழாவை கொண்டாடாமல் விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்க, ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண்டைன்நாள் என அறிவித்தார்ன்னும் ஒரு கதை இருக்கு.
Image may contain: flower
கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில்  கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப்போல பிரியத்திற்குரியவர்களின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை  இந்நாளில் வைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்பவர்களை ஜேக் என  அழைத்தனர்.ஸ்வீடன் நாட்டில் “அனைத்து இதயங்களின் தினம்” ன்ற பேரில் கொண்டாடுறாங்க. போர்ச்சுக்கல் நாட்டில் காதலர் தினத்தை “நமோரோடோஸ் டயாடாஸ்”ன்னு சொல்றாங்க. இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினமாம்! ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் ன்னு சொல்றாங்க.  
தனியாய் காதலர் தினம் கொண்டாட்டம்..

பின்லாந்தின் வேலண்டைன்ஸ் டே கொஞ்சம் வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்தநாளை ‘ஸ்டேவான்பாபியா’ன்னு சொல்றாங்க. அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என அர்த்தம்.  நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை கொண்டாடுறாங்க. நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்தநாளை கொண்டாடுறாங்க. எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள்லாம் ஒரு இடத்தில் கூடி இந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடுவாங்க. பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ்ன்னு சொல்றாங்க. பிரேசில் நாட்டுக்காரங்களுக்கு மட்டும் காதலர் தினம்ன்னு  தனியாக  வேறு ஒருநாள் உண்டு. அது ஜூன் 2 ம் தேதி அந்தநாளில் காதலர் தினத்தை கொண்டாடுறாங்க.

லகம் பூராக 35.000.000 இதயம் வடிவ சாக்லெட் பெட்டிகள் விற்கப்படுதாம். அமெரிக்காவில் மட்டும்  1.000.000.000 டாலர்களுக்கு சாக்லெட் இந்நாளில் விற்கப்படுமாம். வேலன்டைன்ஸ் டேன்னு சொல்லப்படும் பிப்ரவரி 14ல் விற்கப்படும் மலர்களில் 73% பூக்கள் ஆண்களாலும்,  27 % பூக்கள் பெண்களாலும் வாங்கப்படுதாம். 189.000.000 ரோஜாக்கள் அமெரிக்காவில் மட்டுமே விற்கப்படுதாம். அதே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு 145.000.000 வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுதாம். அதிலும் அதிகான வாழ்த்து அட்டைகள் யாரால் அனுப்பப்படுதுன்னு பார்த்தா, ஆசிரியர்களால், மாணவர்களுக்கு  அனுப்பப்படுதாம்!! . நாய், பூனை..ன்னு வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிக்கும் வாழ்த்து அட்டைகள் கொடுக்குறாங்கன்னா பார்த்துக்கோங்க.
Image may contain: 1 person, sitting

காதல் நிபந்தனைகளுக்குட்படாதது.  காதலில் பயணிக்க தோற்றமும் அழகும், உடல்வலிவும் மட்டுமே போதாது. புரிதலும், அர்ப்பணிப்புமே காதலுக்கு முக்கியமானது.  அழகானதொரு உணர்வு. நீ பேசினாலே போதும், எனக்காக நீ இருப்பாய் என்ற நம்பிக்கையொன்றை மட்டுமே எதிர்பார்க்கும். அந்த நம்பிக்கையில் எதையும் எதிர்க்கொள்ளும் தைரியத்தையும், பொறுமையையும் காதல் தரும். நிபந்தனையற்ற காதலை, அன்பை செலுத்துங்கள். நீங்கள் பதிலுக்கு என்ன பெற்றாலும் அன்பை மட்டுமே செலுத்த பழகுங்கள். நாளடைவில் உலகமே அன்பால் வசப்படும்.  ஆதலால் காதல் செய்வீர்!


காதலிப்போருக்கும், காதலிலிருந்து மீண்டோருக்கும், காதல்ன்னா என்னன்னே தெரியாத மண்டுகளுக்கும் காதலர் தின வாழ்த்துகள்.

நன்றியுடன்.
ராஜி

Thursday, January 31, 2019

உனக்காக பொறந்தேனே! எனதழகா!


பதின்ம வயது காதலை முன்னெடுத்து சினிமாவாக்கி கல்லாக்கட்டிய தமிழ் சினிமா உலகம் வயது முதிர்ந்தவனின் காதலை புறந்தள்ளியது. முதல் மரியாதை படம் வந்தபோது பெருத்த விமர்சனம் எழுந்தது. அடப்பாவிகளா! காதல் என்ன நேரம், காலம், சூழல் பார்த்தா வரும்?!  சினிமாவுக்கே அப்படின்னா, வாழ்வியலில் சொல்லவே வேண்டாம்.  40 வயசாகிட்டுதா?! காதல், காமம், ஊடல், கூடல், கெஞ்சல், கொஞ்சல்லாம் மூட்டை கட்டி வச்சிடனும். என்ன இந்த வயசில் இப்படி சின்ன புள்ள மாதிரி நடந்துக்குதுங்க. இங்கிதம் தெரியாம, கிருஷ்ணா! ராமா!ன்னு இல்லாமன்னு விமர்சனம் வரும்.

ஒரு பெண்ணை எந்த ஆணாலும் தோல்வி அடைய செய்யமுடியாது. ஆனா, அவளை ஈசியா வெற்றிக்கொள்ளமுடியும். இந்த சூட்சுமத்தை புரிஞ்சவன் வாழ்க்கையில் ஜெயித்தவனாகிறான். பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது  பணம், நகை, காமம், சொத்து, மரியாதையை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. அதையும்தாண்டி அன்பு, அக்கறையை எதிர்பார்க்கிறாள்.

இந்த பாட்டு முழுக்க அந்த அன்பும் அக்கறை காதலாகும் தருணத்தை அழகா சொல்லி இருப்பார். நிமிர்த்தி இருக்கும் அரிவாள்மனையை எல்லா ஆணும்தான் தினத்துக்கு பார்த்திருப்பாங்க. அந்த பக்கமா போகும் எத்தனை ஆண் அதை மனைவி, மகள், அம்மா, சகோதரி காலில் படக்கூடாதுன்னு சாய்ச்சி வச்சிருப்பீங்க!  இரவில் அவசர அவசரமா மனைவியின் ஆடை அவிழ்க்கும் எத்தனை ஆண்,  மறுநாள் காலை துவைச்சி கட்டியிருக்கும் புடவையை தொட்டிருப்பாங்க?! அந்த மூணு நாட்களிலும் எத்தனை ஆண்கள் ஒருவாய் காப்பி தண்ணி வச்சி கொடுத்திருப்பாங்க.  ஆனா, இதுலாம்தான் அன்னியோன்யத்தை கூட்டும்ன்னு சொல்லாம சொல்லும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மகாநதில கொச்சின் ஹனீபாகூட வந்து கமலை மயக்கி பணத்தை பிடுங்கும் நெகட்டிவ் கேரக்டரில் வந்த துளசிதான் இந்த பாட்டின்  நாயகி. பத்து ரூபா கொடுத்தா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கும் ஜெயகிருஷ்ணாதான் நாயகன். முதிர்காதலை அழகா சொல்லிச்செல்லும் பாட்டு. கேட்டு பாருங்க. பார்த்துக்கிட்டும் கேக்கலாம். நல்லா இருக்கும். மனசில் காதல் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன் !
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன ?

போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்
ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில
பச்சைய குத்தி வச்சேன்
இதுதாண்டி ரதம்
இதலதான் நிதம்

உன்னத்தான் உட்காரவச்சிநா ராசாத்தி ராசனா
ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு

நேந்து தான் சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு !
ஆத்தோரம்… காத்தாடும்…
காத்தோடு… நாத்தாடும்…
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில
கேட்குதா என் தோடு !
உனக்காக புறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
பாடல்: எனக்காக பொறந்தாயே எனதழகி
படம் :பண்ணையாரும் பாத்மினியும்
இசை :ஜஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர் : வாலி 

பாடியவர்கள் : எஸ்.பி.சரண்,அனு ஆனந்த்

நன்றியுடன்,
ராஜி

Thursday, January 04, 2018

நள தமயந்தி காதல் கதை - தெரிந்த கதை தெரியாத உண்மை

டிசம்பர் 19ந்தேதி சனிப்பெயர்ச்சி வந்தாலும் வந்தது. சனிபகவான் பத்தி பலகதைகள், பல அனுமாங்கள், பல பரிகாரங்கள்னு தின, வார, மாத ஏடுகள் தொடங்கி தொலைக்காட்சி வரை அல்லோகலப்பட்டது. சனிபகவானை நினைச்சாலோ, அவர் பெயரை உச்சரிச்சாலோ நம்ம வீட்டுக்கு வந்திடுவார்ன்னு எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். ஆனா, சனிபகவானால் ஆட்கொள்ளப்பட்டு, பின்னாளில் அவனாலே விடுவிக்கப்பட்டு இழந்த நாடும் நகரம், மனைவின்னு சந்தோசமாய் வாழ்ந்த நள மகராஜன் கதையை படிச்சாலோ இல்ல கேட்டாலோ  சனியின் ஆதிக்கம் குறையும். அப்படி கேட்பவருக்கும், படிப்பவர்களுக்கும் அவர்கள் கேட்கும் வரத்தை கொடுப்பதாய் சனிபகவான் நள மகராஜனுக்கு வாக்கு கொடுத்திருக்கார்.  சனிபகவான், நளமகராஜனுக்கு அப்படியொரு வாக்களிக்க என்ன காரணம்ங்குறதைதான்  இன்னிக்கு பதிவில் பார்க்க போறோம்.
மகாபாரத்தின் வரும்  கிளைக்கதை கதைகளில்  நளன், தமயந்தியின் காதல் கதையும் ஒன்று. வடநாட்டில் நைஷதம் என்ற பெயரில், ஸ்ரீஹர்ஷர் என்பவரால் எழுதப்பட்டது இக்கதை. இங்க நம்மூர்ல தமிழில் புகழேந்திப் புலவரின் நளவெண்பாஎன்னும் நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேமாதிரி, வடமொழியிலிருந்த நைஷதம் நூலிலிருந்து அதிவீரராம பாண்டியர்நைடதம் என்ற பெயரில் மொழிப்பெயர்த்திருக்கிறார். எந்த மொழியினாலும் சரி, இந்த கதை சொல்லப்பட்டிருக்கும் விதமே அழகானது. ஒருவரையொருவர் காணாமல் காதலித்து, பல இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணம் செஞ்சிக்கிட்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செல்வச்செழிப்பையும் இழந்து, காட்டுக்குத் துரத்தப்பட்டு, கணவனும்மனைவியும் ஒருவரையொருவர் பிரிந்து, ஆளுக்கொரு திக்கு சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாமல் வாடி, பிள்ளைகளை நினைத்து உருகி, கட்டக்கடைசியில் சேர்ந்து, நாடு நகரத்தையும் பெற்று சந்தோசமாய் வாழ்ந்தாங்க.  ஆன்மீகம், சோகம், காதல், ஏக்கம், தவிப்புன்னு எல்லாத்தையும் சரிவர சேர்ந்த கதைதான் இந்த நளதமயந்தி கதை.
இந்த கதை நகரும் விதமே அலாதியானது. மஹாபாரத கதை நடந்துக்கிட்டிருந்த நேரம். சூதில் நாடு நகரம், தம்பி, மனைவியை இழந்து, பின்னர் 12 வருட வனவாசம், 1 வருட அஞ்சாத வாசம் செய்ய ஒப்புக்கொண்டு காட்டில் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு மகிழ்ச்சியோடு ஒற்றுமையாய் பாண்டவர்கள் வாழ்ந்து வந்த காலம். அந்த நேரத்தில் அங்கு வந்த பிருஹதஸ்வர் என்ற முனிவர், தருமனிடம், மகனே!   இந்நிலையை கண்டு வருந்தாதே. இதைவிட கொடுமையான நிலையை அயோத்யா மன்னன் நளன் அடைந்திருக்கிறான்.  அவனுடைய கதையை கேட்டால் நீ பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமில்லை எனக்கூறி நளதமயந்தி கதையை சொல்ல ஆரம்பித்தார்.  

 முன்னொரு காலத்தில் அயோத்தியை ஆண்ட நிஷாத மன்னனுக்கு நளன் மற்றும் குவரா என்ற இருமகன்கள் இருந்தனர்.  இதேப்போல், விதர்ப்ப நாட்டை பீமன் என்றொரு அரசன் சீரும் சிறப்புமாக ஆண்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே ஒரு ஏக்கம் இருந்தது. அது என்னன்னா, அவனுக்கு பிள்ளை இல்லை.  இதனால், அவன் மட்டுமல்லாது, அவனோடு சேர்ந்து அவன் மனைவியும், அவன் நாட்டு மக்களும் மனம் நொந்திருந்தனர்.  இந்த சமயத்தில்தான் அவனைக்காண தமனர் என்ற பிரம்ம ரிஷி வந்தார். அவரிடம் தன் மனக்குறையை கூறினான்.  முனிவரும் அவனுக்கு அழகான ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறப்பார்கள் என மன்னனுக்கு வரமளித்தார். சிலகாலம் சென்றதும், பீமமன்னனுக்கு தமயந்தி, தமன், தாந்தன் மற்றும் தமனன் என நான்கு குழந்தைகள் பிறந்தனர். நால்வரும் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறப்புடன் வளர்ந்து வந்தனர். 
இதே நேரத்தில்,  நளனும் பூவுலகில் இருக்கும் மன்மதனோ என்று கூறும் அளவுக்கு அழகானவனாகவும், கல்வி, கேள்வி, சண்டை பயிற்சிகள் உள்ளிட்ட சகலகலைகளிலும்  வித்தகனாக திகழ்ந்தான். தமயந்தியும், தேவலோக பெண்ணைப்போல அழகில் ஈடு இணையில்லாதவளாக வளர்ந்தாள். விதிவசத்தால், இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் என இருவரும் அறிமுகமாகி,   இருவரும் நேரில் பார்க்காமலே தங்களுக்குள் அன்பை வளர்த்துக்கொண்டனர். இந்த சமயத்தில் நளன் தன்னுடைய அந்தப்புரத்தில் இருந்த அழகான அன்னப்பறவை ஒன்றினை தமயந்தியிடம் தூதாக அனுப்பினான். அன்னமும் நளனின் காதலை சுமந்து சென்றது. தமயந்தி அன்னத்திடம் தன்னுடைய காதலையும் சொல்லி நளனுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை சொல் அன்னமே எனத் திருப்பி தூது அனுப்பினாள். இதே நேரத்தில் பருவ வயதையடைந்த தன் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க ஆசைப்பட்டார் தமயந்தியின் தந்தை. மகளுக்குண்டான சிறந்த வரனை அவளே தேர்ந்தெடுக்க வேண்டி, சுயவரத்துக்கு நாள் குறித்து,  எல்லா  தேசத்திற்கும் தூது அனுப்பினார். எட்டு திக்குமிலிருந்து மன்னர்கள் விதர்ப்ப நாட்டிற்கு சுயம்வரத்திக்காக சென்று கொண்டிருந்த வேளையில், நாரதர், பூலோகத்தில் உள்ள தமயந்தியின் சிறப்புகளையும் அவளுக்கு நடக்கவிருக்கும் சுயம்வரத்தையும் பற்றி  தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் .
தமயந்தியின் அழகினை கேள்வியுற்றான்   இந்திரன். இந்திரன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக். எத்தனை பட்டும் அவனுக்கு புத்தி வந்ததில்லை. அதனால் தமயந்தியை அடையும் நோக்கில், அவனும்   சுயம்வரத்திற்கு புறப்பட்டான். அங்கே நளனும் சுயம்வரத்தில் கலந்துகொள்ள தேரில் ஏறி விதர்ப்ப நாட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான். நளன்மீது தமயந்தி காதல் கொண்டிருப்பதை அறிந்த இந்திரனின் குறுக்குபுத்தி வேலை செய்ய, நளனைப்போல உருமாறி சுயம்வரம் நடக்கும் இடத்துக்கு  சென்றான். சுயம்வர ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடந்து கொண்டிருந்தது. எல்லா மன்னர்களும் சபைகளில் நிரம்பி வழிந்தனர்.  தமயந்தியின் அழகைக் கண்டு தேவர்களும் வியந்து பார்த்தனர். நளனும் அங்கே வருகை புரிந்திருந்தான். நளனின் உருவந்தை அன்னத்தின் துணையுடன் கேட்டறிந்த தமயந்தி சுயம்வர மாலையோடு சபைக்குள் நுழைந்தாள். நளனை அவள் கண்கள் தேடின.  அங்கே நளன்  அழகே வடிவாக மாறனோ இல்லை பூவுலகிற்கு வந்திருக்கும் கந்தர்வனோ என்று சொல்லுமளவு அழகே வடிவாக கம்பீரமாக இருந்தான். ஆனால், அவனருகே அவனைப்போல் தோற்றம் கொண்ட ஐந்துபேர் இருப்பதைக்கண்டு தமயந்தி குழம்பி போனாள். உண்மைக்காதல் என்றும் தோற்காது அல்லவா?! தன்னுடைய சமயோசித புத்தியால் சிந்திக்க தொடங்கினாள் ...
!கருணையே வடிவான அந்த மகேஸ்வரனை வேண்டினாள். இறைவா என்னுடைய காதலுக்கும், உண்மையான அன்பிற்கும் எந்தவித களங்கமும் வராமல் காத்தருள்க என வேண்டினாள். அப்பொழுதுதான் அந்த மகேஸ்வரன் அவளுடைய பிரார்த்தனையை எண்ணி, மனிதருக்கும் தேவருக்கும் உள்ள . துக்குணங்களை ஆராந்து பார் என தமயந்தியின் மனதில் உதிக்க செய்தார் . தமயந்தியும் சுதாரித்துக்கொண்டு மணமகனை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் செய்து கொண்டே வந்தாள். நேரம் செல்ல செல்ல நளன் கழுத்தில் சூடியிருந்த பூமாலை வாடத்தொடங்கியது. அதேபோல் தேர் ஏறி வந்ததால் சிறிது களைப்புற்றவனாக காணப்பட்டான். ஆனால் தேவர்கள் அனைவரும் ,வாடாத மலர்மாலைகளுடன் ,மூடாத இமைகளுடன் ,சிறிதுகூட பொலிவு கலையாமல் இருந்தனர் .தமயந்தி இதைப் புரிந்துக்கொண்டு, மனிதஉருவில் இருக்கும் தேவர்களை கண்டறிந்தாள். சரியாக நளனின் கழுத்தில் மாலை அணிவித்தாள். தேவர்களும் , இந்திரனும் சபையில் நாணி நின்றனர்.
இருந்தாலும் ஒருவாறாக மனதை தேற்றிக்கொண்டு அவர்கள் நளனை பாராட்டி பல வரங்களை கொடுத்தனர். விரும்பிய நேரத்தில் தங்களை காணவும்,யமன் சமயற்கலையின் சூத்திரங்களையும் வரமாக கொடுத்து அவரவர் அவரவர் உலகங்களுக்கு திரும்பினார்கள். மற்ற மன்னர்களும் மணமக்களை வாழ்த்தி தங்கள் ராஜ்ஜியம் திரும்பினர்.  நளனும் தமயந்தியுடன் தன்னுடைய நாட்டிற்கு திரும்பினான். நாட்டுமக்களையும் பாதுகாத்து நீதிதவறாமல் அரசாண்டான். குடிமக்களும் நளனுடைய ஆட்சியில் எந்த மனக்குறையும் இன்றி சந்தோசமாக வாழ்ந்தனர். நளனும் தன்னுடைய காதல் மனைவியுடன் நந்தவனம், .அருவி , வனங்கள் என சென்று  காதல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான் . கதை இத்தோடு முடிஞ்சிருந்தா நளவெண்பா வந்திருக்காது.  சனிபகவான் வரமும் நளனுக்கு கிடைச்சிருக்காது.
இப்படி சந்தோசமா வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்த வேளையில், சுயம்வரத்தில் தோற்ற சனிபகவானுக்கு நளனின்மேல் தீராத பகை இருந்தது. அவனுக்கு நளனை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் அரித்துகொண்டிருந்தது.  ஆனால்  சாஸ்திரங்கள்  முழுவதும் கற்றறிந்த நளன் சிறு தவறு கூட இல்லாமல் அரசாட்சி புரிந்துவந்தான். இதனால் சனிபகவான், நளனின்  அரண்மனையிலேயே தங்கி தக்க  சந்தர்பத்திற்க்காக காத்துகொண்டு இருந்தான். ஒருமுறை நளன் மாலையில் சிறுநீர்கழித்து விட்டு கால்களை முழுமையாக அலம்பாமல் கை மற்றும் முன்கால்களை  மட்டும் நனைத்து சந்தியாவந்தனம் செய்து விட்டான். அந்த தவறுக்காகவே காத்திருந்த சனிபகவான், ஈரம்படாத கால் பகுதி வழியாக நளனை பிடித்தான். இந்த சூழ்நிலையில் நளன் புஷ்காரன் என்பவனுடன் சூதாட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அவனை பீடித்திருந்த சனிபகவான், நளனை தடுமாற செய்து அவனை சூதாட்டத்தில் மூழ்க வைத்து அவனை அனைத்தையும் இழக்க செய்தான்.
நிலைமை மோசமானதைக் கண்ட தமயந்தி, தன்னுடைய பணிப்பெண் பிருகத்சேனை மற்றும் தேரோட்டி  வார்ஷ்ணேயனை  அழைத்து தன்னுடைய  மகன் இந்திரேசனையும்,   மகள் இந்திரேசைனையயும் அவர்களிடம் ஒப்புவித்து, தன் தந்தையிடம் கொண்டுவிட்டு அவர்களை பாதுகாப்பாக வளர்க்க சொல் என கூறி வழியனுப்பி, கணவனின் துயரத்தில் பங்கெடுக்க ஆயத்தமானாள். எல்லாவற்றையும் இழந்த நளன் கடைசியில் வைப்பதற்கு பொருள் ஒன்றும் இல்லாததால், உன் மனைவி தமயந்தியை வைத்து சூதாடு என புஷ்காரன் எள்ளி நகையாடினான். நிலைமை விபரீதமாவதை  உணர்ந்த நளன் தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் துறந்து அறையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரண்மனையில் இருந்து வெளியேறினான். உடனே தமயந்தியும், தன்னுடைய ஆபரணங்களையும் கழற்றி வைத்துவிட்டு நளனுடன் சேர்ந்து  அரண்மனையை விட்டு வெளியேறினாள். நாட்டு மக்களும் நளனுக்கு வேலையோ அல்லது பொருள் உதவியோ செய்ய  புஷ்காரனுக்கு அஞ்சினர்.   

நகரத்தைவிட்டு வெகுதூரம் வந்த நளன், பசியின் கொடுமையால் காட்டிலிருக்கும் பழங்களையும் கிழங்குகளையும் உண்ண தொடங்கினான். இப்படி மூன்று நாட்கள் பசியும், பட்டினியுமாக நளனுடன் சேர்ந்து தமயந்தியும் கஷ்டப்பட்டாள். அவள் கஷ்டப்படுவதை கண்ட நளன், தமயந்தியை நோக்கி, நீ உன்னுடைய தந்தையின் நாட்டிற்கு சென்று தங்கி இரு. நாடு நகரத்தை மீட்டப்பிறகு திரும்பி வா. அதுவரை என்னுடன் இருந்து கஷ்டப்படாதே என கூறினான். இதைக்கேட்ட தமயந்தி, அன்பே!  உங்களை எப்படி இந்த கானகத்தில் தனியாக விட்டுச்செல்வேன்?! நீங்கள் படும் துயரத்திற்கு மருந்தாக உங்களுக்கு ஆறுதலாக உங்களுடனேயே இருப்பேன் என அவனைவிட்டு நீங்காமல் இருந்தாள். அரண்மனையில் பஞ்சு மெத்தையில் பட்டு பீதாம்பரத்தில் உறங்கியவர்கள் இன்று கல்லிலும் பாறை இடுக்குகளிலும் தங்கி  சொல்ல முடியாத துயரத்துடன் வாழ்ந்து வந்தனர். நளனின் துயரத்தைக் கண்டும் தன்னுடைய தந்தை நாட்டிற்கு செல்வோம் என நளனிடம் வேண்டினாள். எனக்கு அங்கு வருவதால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நாடிழந்த நிலையில் நான் அங்கு வர விரும்பவில்லை எனக்கூறினான் .
இப்படியாக அலைந்து திரிந்து, காட்டிலிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தைக் கண்டு அங்கு சென்று தங்கினர். அழுக்கு ஆடைகளை உடுத்தியிருந்த அவர்கள் மண் தரையில் புழுதிகளுக்கிடையே படுத்து உறங்கினர். அலைந்து திரிந்தமையாலும், பசியின் கொடுமையாலும்  தமயந்தி உடனே உறங்கிவிட்டாள். ஆனால் நளனோ உறங்காமல், அரண்மனையில் பிறந்து வளர்ந்து அனைத்து நல்ல குணங்களும் கொண்ட பத்தினி பெண்ணான இவள் எனக்காக பசியும் பட்டினியுமாய், புழுதி  தரையிலும் படுத்து, அழுக்கடைந்த ஆடைகளுடனும் துயரப்படுகிறாள். நான் இவளுடன் இருக்கும்வரை என்னைவிட்டு போகமாட்டாள். நான் இவளை இங்கேயே விட்டுச்சென்றால் அவளுடைய தந்தையிடம்  செல்ல வாய்ப்பிருக்கிறது என பலவாறு எண்ணி தூங்காமல் இருந்தான். கடைசியில், அவளை பிரிவது என்ற முடிவுக்கு வந்தான். சரி, நாம் இவளை இங்கே தனியாக விட்டுச் சென்றால், எவரேனும் தீங்கு செய்துவிடுவார்கள் என்ற பயம் இல்லாமல், பத்தினி பெண்களுக்கு அந்த பரமேஸ்வரனே காப்பு. அவனை மீறி யாரும் ஒரு தீங்கும் செய்து விடமுடியாது என முடிவுக்குவந்தான். போர்த்திக்கொள்ள  ஒரு துணிகூட இல்லாமல் அழுக்கு துணியுடன் தரையில் உறங்கும் இவளை, பாம்புகளும் கொடிய மிருகங்களும் நிறைந்த இந்த கானகத்தில் இருந்து எப்படி தந்தையிடம்  செல்வாள் என மண்டபத்தை விட்டு போவதும், பிறகு வந்து பார்ப்பதுமாக இருந்தான்.  சனிபகவான்,  அவன் உடம்பில் ஏறினாலும், காதல் அவனுள்ளே வேலைசெய்ய ஆரம்பித்தது.  அவளின் அறமே அவளைக்காக்கும். தேவாதி தேவர்களே! என் மனைவியை காத்து அருளுங்கள் என தூரத்தில் இருந்து புலம்பிக்கொண்டு அவளைவிட்டு நீங்கவும் முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் .
மனத்தால் அழுத நளன் அழுதுகொண்டே கடைசியில் அவளைவிட்டு நீங்கினான். பித்துபிடித்தவன்போல் அவளை  எண்ணியே கால்போன போக்கிலே சித்தம் கலங்கியவாறு நடந்தான். உறக்கம் விழித்த தமயந்தி அருகில் கைவைத்து தொட்டுப்பார்க்கும்போது நளனை காணவில்லை. பயத்தால் அலறினாள். என்னைவிட்டு போகமாட்டாய் . என் அன்பே ,புதருக்கு பின்னால் ஒளிந்து இருந்தால் என்  முன்னே வந்துவிடு.பசியால் இருக்கும்போது என்னைவிட்டு உன்னால் தனியாக இருக்கமுடியுமா?! அப்பொழுதும் என்னை அல்லவா நினைத்து இருப்பாய்! நீ எங்கே இருக்கிறாய் என பயத்தில் கண்ணுக்கு தெரிந்த திசையை நோக்கி ஓடி அவனை தேடினாள். என்  தலைவா! அரசே, அன்பே எங்கே இருக்கிறாய் என இறை தேடி மிருகங்கள் அலையும் அந்த காட்டுக்குள் கத்திகொண்டே நளனை தேடி ஓடினாள். அப்படி ஓடிவரும் போது, அங்கிருந்த ஒரு பெரிய மலைப்பாம்பு அவளை பிடித்து விழுங்க ஆரம்பித்தது. அப்பொழுதும் தனக்காக அழாமல், நீ பசித்திருக்கும் வேளையில் உனக்கு யார்  ஆதரவாக பேசுவார்கள்?! கள்ளமற்ற மனதை உடைய நீ எங்கு சென்று கஷ்டப்படுகிறாய் என  நளனுக்காக வருந்தினாள். பாம்பு  விழுங்க ஆரம்பித்ததும் பலவாறு கதறி நளனை அழைத்தாள் .

அவளுடைய சப்தத்தை கேட்டு, அங்கே வந்த வேடனொருவன் பாம்பை கொன்று அவளைமீட்டான். தமயந்தியின் அழகும், அவளுடைய கண்களும் உடல் வனப்பையும் கண்ட வேடன் அவள்மேல் காமமுற்றான்.  அவளை நெருங்கி தீண்டினான். இதைக்கண்டு கோபமுற்ற தமயந்தி, ஒ ..இறைவனே என் மன்னனைத்தவிர வேறு யாரையும் மனத்தால் கூட நினைத்தது இல்லை என்னை தீண்டுவது என்றால் அது என் கணவனாக மட்டுமே இருக்கவேண்டும். அவரை அல்லாது கெட்ட நோக்குடன் காமத்தீ கொண்டு நெருங்கும் இவனை, என்னுடைய பவித்திரம் என்றும் தீ இவனை சுட்டெரித்து இவனுடைய உயிரை எடுக்கட்டும் என்றாள், மறுகணமே வேடன், பத்தினி பெண்ணின் வார்த்தைகளுக்கு இருந்த வன்மையால் உயிரற்று நிலத்தில் வீழ்ந்தான். அந்த காட்டிற்குள் இருந்த மிருகங்களை கண்டு அஞ்சாமல் நளனை மட்டும் தேடிக்கொண்டே இருந்தாள். அப்பொழுது அங்கே சில குடில்களை இருப்பதைக்கண்டாள். பின்னர் அங்கிருந்த ஒரு அசோக மரத்தினடியில் அமர்ந்திருந்தாள் . பின் அங்கு வந்த வணிகர் கூட்டத்துடன் பக்கத்து நாட்டிற்கு சென்று அங்குள்ள ஒரு பெண்ணின் ஆதரவுடன் அங்கே வசிக்கலானாள்  .
நளன் குமுறிய மனதோடு காட்டில் கால்போன போக்கில் சென்று கொண்டு இருந்தான். அப்பொழுது அங்கே ஒரு இடத்தில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்தது. அப்பொழுது, அந்த தீயின் நடுவே இருந்து ஒரு அபயக்குரல் கேட்டது. நீதிதவறாத நள மன்னா! ,என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்று என குரல் கேட்டது. நளனும்  குரல்வந்த திசையை நோக்கி சென்றான். அங்கே கொடியவிஷம் .கொண்ட பாம்பு ஒன்று கதறியது. ஏ அரசனே! ,தவத்தில் சிறந்த நாரத முனிவரை, நான் அவமதித்ததால் அவர் என்னை இந்த தீயில் எரிந்து கொண்டிருக்குமாறு சாபம் கொடுத்துவிட்டார் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கேட்டபோது, இப்பூலகில் நீதிதவறாத நளமன்னன் வந்து உன்னை தீண்டும்போதுதான் உனக்கு விமோசனம் என்றார். ஆகையால் உன்னை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றி வெளியில் கொண்டுவிடு என கதறியது அந்த கொடிய நாகம். எல்லோரிடமும் இரக்கம் கொண்ட நளன், அந்த நாகத்தை தீயிலிருந்து எடுத்து தரையில் விட்டான் அப்பொழுது ,பாம்புக்கு பால் வார்த்தால், பால் விட்டவனையே அது கடிக்கும் என்பது போல அந்த நாகம் நளனை தீண்டியது .
உன் பேச்சை கேட்டு உனக்கு உதவியது என் தவறுதான். இருந்தாலும் ஆபத்திலிருப்பவரை காப்பது ஒரு மன்னனின் கடமை. அது நிறைவேற்றுவதில் என் உயிர் போவதில் எனக்கு மகிழ்ச்சியே! என நளன் கூறினான். அதற்கு  அந்த நாகம்,   மன்னா! எனது கொடிய விஷத்தால் உன்னுள் வாசம் செய்யும் சனிபகவான் பலவித தொல்லைகளை அனுபவிப்பான். அந்த தொல்லைகளை அனுபவிக்கவே அவனுக்கு சரியாய் இருக்கும். அவனால் உனக்கு எந்த தொல்லையும் இருக்காது எனக்கூறி.. மேலும் மக்கள் யாரும் உன்னை அடையாளம் காணாதவாறு உன் உடல் கொடூரமான .தோற்றத்தை அடையும் என்றும், மேலும் நீ அயோத்யா ராஜ்யத்தை அடைந்து, இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த அரசனான சூதாட்டத்தில் நிபுணன் ரிதுபர்ணனிடம் செல். நீ ஒரு தேரோட்டி உனது பெயர் பாஹூக்கா  என்று சொல்லி அறிமுகப்படுத்து. குதிரைகளை பற்றிய அபார ஞானம் கொண்ட நீ அவனிடம் தேரோட்டியாக சேர்ந்துவிடு. அவனுக்கு அஷ்வா ஹிரித்யாவின் நுட்பங்களை அவருக்கு கற்றுக் கொடு. சூதாடவும் செய். உன் சூதாட்ட திறமையைக் கண்டு அவன் உனக்கு நண்பனாவான்.அந்த பகடைமூலமாகவே உன் புகழ் உயர்ந்து, நீ இழந்த வாழ்க்கையையும், உன் மனைவி மக்களையும் திரும்ப அடைவாய் என்றுக்கூறி, உன்னை சார்ந்தவர்கள் உன்னை அடையாளம் காணவேண்டும் எனில் இந்த ஆடையை அணிந்து கொண்டால் உன் சுய உருவத்தை அடைவாய் என கூறி இரண்டு ஆடைகளை கொடுத்து மறைந்தது .

நளனும் அந்த நாகம் கூறியபடி,  அயோத்யா சென்று ரிதுபர்னாவிடம் நட்பு கொண்டு அங்கு வாசிக்கலானான். இந்த நிலையில் தமயந்தி என்ன ஆனாள்  என பார்க்கலாம்.  தமயந்தியின் தந்தை பீம அரசன் நாலா புறமும் ஆட்களை அனுப்பி தேடினான். கடைசியில் அவள் அச்சல்புரா ராஜ்யத்தில் இருப்பதைக்கண்ட வீரர்கள், அவளை தங்கள் நாட்டுக்கு கூட்டி சென்றனர் அங்கே தந்ததையை கண்ட தமயந்தி அழுது அவருடன் வசிக்கலானாள்.   நளனை குறித்த சிந்தனையில் எப்பொழுதும் இருந்தாள். மன்னனும் மிகவும் கவலை கொண்டவனாக, நளனைத் தேட , எல்லா ராஜ்யத்திற்கும் ஆட்களை அனுப்பினான். ஆனால், தமயந்தி நளனைக் காண ஒரு உபாயம் சொன்னாள். எல்லா ராஜ்யத்திற்கும் சென்று, மனைவியை, பாதி ஆடையுடனும்,  பசிபட்டினியாக தனிமையில் அலையவிட்டவனே! அவளுக்கு எவ்வளவு தீங்கு வந்திருக்கும்?! அவளைக் காக்கும் கடமையில் இருந்து தவறியது ஏனோ?!  தனிமையால் விட்டு சென்றது முறையாகுமா?! என செல்லுமிடமெல்லாம் கேளுங்கள். இதற்கு சரியான பதில் யார்  சொல்கிறார்கள் எனக் கேட்டு என்னிடம் சொல்லுங்கள் எனக்கூறி வீரர்களை அனுப்பினாள். அனைவரும் எட்டு திக்கு சென்றும், எதிர்படுபவர்களிடமெல்லாம் இக்கேள்வியை கேட்டும் யாரும் சரியான பதிலை சொல்லவில்லை .
அதேசமயம்  பர்ணாதன் என்ற அந்தணன் தமயந்திக்கு ஒரு சேதி அனுப்பினான். பெண்கள் குல தேவியே! அயோத்தி நகரை ஆண்டுவரும் பங்காசூரனின் மகன் ரிதுபர்ணா ஆட்சி செய்துவரும் நாட்டில் எல்லோர் முன்னும் சென்று நீங்கள் கூறியதை கூறினேன். யாரும் இதற்கு பதில் சொல்லவில்லை. அதேசமயம், அவனிடம் தேரோட்டியாக இருக்கும் குதிரையை பராமரிக்கும் பாஹூக்கா என்பவன் மட்டும் இதற்கு பதில் கூறினான். குட்டைகைகளுடன், கூன்விழுந்து காண சகியாத அவன்,, "எவ்வுளவு துன்பம் வந்தாலும்,  ,கற்புக்கரசிகளை அந்த மகேஸ்வரன் காப்பதோடு, அவர்களின் கற்பு தீ அவர்களையே பாதுகாக்கும். பசியால் வாடி வதங்கி, மண்தரையில், அழுக்கு ஆடைகளுடன் உறங்கும் தன்  மனைவியை காண சகியாத தலைவன் இறுதி முடிவாகவே அவளைவிட்டு விலகி செல்லும் முடிவினை எடுத்தான். இல்லையெனில் அவளும் அவனைவிட்டு நீங்கி இருக்க மாட்டான். அறம் சார்ந்த பெண்டிரை அரவம் கூட தீண்ட முடியாது. அது அவர்களை பாதுகாக்கும் அவளும் தன் இடம் சேர்வாள் என்றுதான், அந்த தலைவன் விட்டு சென்றான்.  அவன் எவ்வளவு கனத்த இதயத்துடன் இன்றும் வருத்தத்தோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.  தன் காதல் மனைவியை எண்ணி...என அவன் பதிலுரைத்தான்  என தமயந்தியிடம் கூறினார் 

இந்த பதிலை கேட்ட தமயந்தி, மிகவும் சந்தோஷமுற்றாள். நளனை கண்டுப்பிடித்த ஆனந்தத்தில் இறைவனுக்கு நன்றி கூறினாள் . அவர்கள் கூறிய தோற்றத்தை, குறித்து எண்ணியவள்  , இதில் ஏதோ சூது இருக்கிறது என எண்ணி ,ஒரு திட்டம் வகுக்கலானாள். உடனே தனது தூதுவனை அயோத்தி ராஜ்யத்திற்கு அனுப்பினாள். பீமமன்னனின் மகளான தமயந்திக்கு இரண்டாவதாக சுயம்வரம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். நளன் ,இருக்கிறானா?! இல்லையா?! என தெரியாததால் அவளுக்கு இந்த திருமண எற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சுயம்வரம் என்ற செய்தியை அயோத்யஅ நாட்டிற்கு கொண்டு செல்லுங்கள் என பணித்தாள். காலம் குறைவாக இருப்பதாலும், ஏற்கனவே தமயந்தியின் அழகை பற்றி கேள்விப்பட்ட மன்னன்  ரிதுபர்ணன் விரைந்து செல்வதற்காக தன்னுடைய தேரோட்டி  பாஹூக்கா என்னும் பெயரில் இருக்கும் நளனை  கூட்டிக்கொண்டு சுயம்வரத்திற்கு விரைந்தான் .
நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், காற்றைவிட வேகமாக சென்றான் அவனது வேகத்தைப்பார்த்த அயயோத்யா மன்னன் அந்த குதிரை செலுத்தும் கலையை முழுவதுமாக உபதேசிக்க கேட்டான். அதற்கு பதிலாக தான் சிறந்து விளங்கு, ம் சூதாட்ட கலையை உனக்கு உபதேசிக்கிறேன் என கூறினான் . இப்படி பேசியவாறு வேகமாக தேரை செலுத்தி தமயந்தியின் நாட்டிற்கு சென்றனர் . அந்த தேரின் ஒலி நளன் ஓட்டும் போது வரும் ஒலியை போன்று இருந்தது. ஆனால் நளனை காணவில்லை என்பதால் தனது தோழியான கேசினி என்பவளை அனுப்பி விசாரித்து வரச்சொன்னாள். நளனின் நடத்தைகள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்டு தேவ சக்திகளை போல் இருப்பதையும், அவன் செயல்களையும் விளக்கிய கேசினி அவனுடைய மக்களை அவனிடம் கேசினி மூலம் அனுப்பிவைத்தாள் . அவர்களை கண்டதும் வாரி உச்சிமுகந்த நளன், கண்ணீர்மல்க நின்றதையும் தமயந்தியிடம் கூறினாள் பணிப்பெண் கேசினி. 
வந்திருப்பது நளனே  என்று அறிந்துக்கொண்ட தமயந்தி, கடைசி ஆயுதமாக ,ஓ பாஹூக்கா என்னும் நாமம் கொண்டவரே! கடமையை உணர்ந்த ஒருவர் கானகத்தில் ,தனியே உறங்கி கொண்டிருந்த மனைவியை, துன்பத்திலும் துயரத்திலும் சிக்கவைத்து தனியே சென்றதை கேள்விப்பட்டு இருக்கிறீரா?! என்று கேட்டு ..மள .மள வென கண்ணீர் சிந்தினாள்  தமயந்தி.  இவையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நளன் அந்த நாகம் கொடுத்த ஆடையை  எடுத்து உடுத்தினதும் தன் சுயரூபத்திற்கு வந்தான். அவனைக்கண்ட தமயந்தி ஓடிச்சென்று கட்டியணைத்து அவன் மார்பில் சாய்ந்து அழுதாள். பிரிந்தவர் கூடினால் அங்கே பேச்சுக்கு இடமேது?! ஆனாலும், இவையனைத்தும் சனிபகவானலாயே  வந்தது என நடந்த அனைத்தும் கூறினான் .
12 வருஷகாலம் சனியின் பிடி முடிந்ததும் , நளனும் -தயமயந்தியும் ஒன்றாக சேர்ந்தனர். பீம அரசனின் படை கொண்டு தன்னுடைய நாட்டையும் பிடித்து நல்லாட்சி மீண்டும் செய்ய துவங்கினான்.  அப்பொழுது அங்கு வந்த ஒரு துறவி, நீதித்தவறாத உத்தமனான நீ  ஏன் இப்படி கொடுமைக்கு ஆளானாய் என்றால், போனப்பிறவியில், நீங்கள் இருவரும் இணைபிரியாத ஜோடிகளாக ராஜா ,ராணியாகத்தான் இருந்திருக்கிறீர்கள். அப்பொழுது அப்பாவியான ஒரு துறவியை 12 ஆண்டுகாலம் சிறையில் அடைத்தற்கான தண்டனை இது. ஒரு நிரபராதியை தண்டிப்பதும், குற்றம் செய்பவனை தப்பிக்கவிடுபவர்களும் அடுத்தபிறவில் இதே தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதி . ஆகையால்தான் இத்துன்பத்தை  அனுபவிக்க நேர்ந்தது என விளக்கினார் .இறை சக்தியின் முன்னே எதுவும் நிலை இல்லாதது என உணர்ந்துக்கொண்ட நளன், சிறிது காலம் நல்லாட்சி புரிந்து தன்மகனுக்கு முடிசூடி, பின்பு இறைவனை தேடி தமயந்தியுடன் நாடுவிட்டு ஆன்மீக ஞானத்தை தேடி சென்று ,சுகமாக வாழ்ந்தனர்.
 எல்லாம் சரி ராஜி, நளன் கதையை படிச்சாலோ இல்ல கேட்டாலோ சனிபகவானின் ஆதிக்கம் குறையும்ன்னு சனிபகவான் வாக்கு கொடுத்ததா சொன்னியே! அந்த பகுதி எங்க மறந்துட்டியான்னு என்னை குறை சொல்ல சனிபகவான் நளனின் சிறு தவறுக்கு காத்திருந்த மாதிரி இருப்பவங்களுக்கு பதில் இதோ..
ரிதுபர்ணா மன்னனும், நளனும் விரைந்து வந்துக்கொண்டிருந்தபோது திருநள்ளாற்றை கிராஸ் செஞ்சாங்க. போற வழிதானே! சனிபகவானுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போகலாம்ன்னு கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்த வேளையில் அவனை பிடித்திருந்த சனி முற்றிலும் நீங்கியது. அங்கிருந்து ஆலயத்துக்கு வந்த நளனிடம், உன்னிடம் யாம் சற்று விளையாடினோம்ன்னு கூலா சனிபகவான் சொல்லி, உனக்கு என்ன வரம் வேணும்ன்னு நளனை தாஜா பண்ண கேட்டார். நளனும், சுவாமி! இந்த நள தீர்த்தத்தில் நீராடினாலும், என் கதையை கேட்டாலும், படிச்சாலும், என்னை பற்றி, இக்குளத்தை பற்றி நினைச்சாலும் அவர்களை நீங்க வச்சு செய்யக்கூடாதுன்னு நளன் வேண்டிக்கிட்டான். அதுப்படியே சனிபகவானும் வரம் கொடுத்தார்.
இதானுங்க. நள தமயந்தி வரலாறு.  லைலா மஜ்னு, ரோமியோ ஜுலியட்,  அனார்க்கலி சலீம்ன்னு பிற நாட்டு காதல் கதைகளை கொண்டாடும் நம்ப பசங்க நள தமயந்தியை அந்தளவுக்கு கண்டுக்குறதில்லை. அது ஏன்னுதான் எனக்கு புரியல. உங்களுக்கு புரிஞ்சா எனக்கு பதில் சொல்லுங்க.

நன்றியுடன்
ராஜி.

Monday, November 13, 2017

7 வயது பெண்மீது காதல் கொண்ட மன்னன் - ஐஞ்சுவை அவியல்.

என்னங்க மேடம் யோசனை?!

நம்மாளுங்கக்கிட்ட சிக்கி இந்த காதல் சின்னா பின்னம் ஆகுதே! ஒருத்தன் புனிதம்ங்குறான், ஒருத்தி ஹம்பக்ன்னு சொல்றா. ஒருத்தர் ஹார்மோன் செய்யும் வேலைன்னு ஆளுக்காள் பிச்சி எடுக்குறாங்களே! அதான் யோசனையா இருக்கு மாமா. 

காதல்ங்குறது புனிதமும் இல்ல.  புண்ணாக்கும் இல்ல.  பசி, தூக்கம் போல அது ஒரு உணர்வு.  அதேமாதிரி ஆசிட் அடிக்கும் அளவுக்கு வெறிக்கொள்ளவும் வேணாம்.  தாடி வளர்த்து தண்ணி அடிக்குமளவுக்கு உன்னதமும் இல்ல. நிலா, பூமி, ஆகாயம்ன்னு கொண்டாடி தீர்க்க வேணாம். புடிச்சிருந்தா சேர்ந்து வாழலாம். இல்லியா?!  ஓகே பைன்னு சொல்லி பிரிஞ்சு போகும் அளவுக்கு பக்குவம் வரனும் நம்ப பசங்களுக்கு. அதேமாதிரி ரெண்டு பேரும் ஆசைப்பட்டாதான் அது காதல், ஒருத்தருக்கு மட்டும் வந்தா அது ஆசை. அந்த ஆசையை கொண்டாடி தீர்க்கனும். இல்ல அழிச்சுக்கனும். அதை விட்டு கைய கிழிச்சுக்குறது, தாடி வளர்த்துக்கிட்டு சுத்துறதுலாம் வேஸ்ட்.

கேரளாவை சேர்ந்த பிரியதர்ஷிணி கதையை பாரு. இந்த மாதிரி பைத்தியமாகுமளவுக்கு காதல் தேவையா?!

பூட்டான் இளவரசன் கேசர் டூர் போன இடத்துல  ஜெட்சன்ன்ற 7 வயது பெண்ணை பார்த்து காதல் வயப்பட்டிருக்கார்!!!!! ஜேட்சனின் அழகிலும், அறிவிலும், தன்னடக்கத்தையும் கண்டு அவள்மீது ஆசைப்பட்டு, நீ என் மனைவியாக வரனும்ன்னு ஆசைப்படுறேன். வளர்ந்து பெரிய பொண்ணாய் ஆனப்பின் உன்னையே கட்டிப்பேன்னு சொல்லி வந்தாராம். ஜெட்சனின் அப்பா, பூட்டான் நாட்டில் ஃபைலட்.  ஜெட்சன் பள்ளிப்படிப்பை  முடித்து,  மனோதத்துவம் மற்றும் கலைத்தொடர்பான பாடத்தை கல்லூரியில் படித்துக்கொண்டே, கலை, விளையாட்டு என அனைத்திலயும் சிறந்து விளங்கி வந்தார். இதற்கிடையில் கேசர் பூட்டான் மன்னனார். இவர்கள் இருவருக்கும் 2010ல் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. போன வருசம் இவங்களுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கு.  இவங்க கல்யாணம் முடிக்கும் வரை வெளி உலகுக்கு இவங்க லவ், டேட்டிங் போன மேட்டர்லாம் தெரியாது...

7 வயசு பொண்ணு மேல காதலா?! ஆச்சர்யம்தான். அதும் அழகு, அறிவு, தன்னடக்கம் பார்த்து வந்த காதல்ன்னு சொல்றதுலாம் நம்புற மாதிரி இல்ல. இருந்தாலும் வெளிநாடுங்குறதாலயும், கல்யாணம் ஆனதாலயும்  இதை ஏத்துக்குறேன்.

நாம ஒருத்தங்களை பெருசா நினைச்சுக்கிட்டு இருப்போம். ஆனா, அவங்க மனசுல நாம இருக்கோமா??! இல்ல வேற எந்த நினைப்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்?! அதுக்கு இந்த படம்தான் சிறந்த உதாரணம்....

சரி, போன வாரம் கேட்டதுக்கே நீ இன்னும் பதில் சொல்லல. இன்னிக்காவது சொல்றீயான்னு பார்க்கலாம்... இரண்டு இலக்கங்களைக் கொண்டு எழுதக்கூடிய மிகச் சிறிய முழு எண் என்ன?

யோசிச்சுக்கிட்டே இரு..  நான் வெளில போய் வரேன்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1477780
நன்றியுடன்,
ராஜி.

Tuesday, September 05, 2017

நாம் அனைவரும் ஆசிரியர்களே!

ஆசிரியர்ன்னா  புனிதம்ன்னு அர்த்தம். வருங்கால சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்குவது ஆசிரியர்கள்தான்.  அதனாலதான் ஆசிரியர்களை ஆண்டவனுக்கு சமமா வச்சிருக்கோம். .  ஒருசில இழி ஜென்மங்களால் அந்த ஆசிரிர் தொழிலுக்கே இழுக்குன்னாலும் குழந்தையின்மீது பெற்றோர்கள் காட்டும் அக்கறையைப்போலவே, தானும்,    அக்கறை காட்டும் ஆசிரியர்கள் இன்னிக்கும் நம்மோடு இருக்காங்க. பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் மட்டுமில்லாம நம்மோடவே இருக்கவுங்க, போனவங்களாலதான் வாழ்க்கைன்னா என்னன்னு நாம பாடத்தை கத்துக்குறோம்.  என் வாழ்க்கைல வந்த சில ஆசிரியர்களை பத்தி இன்னிக்கு பார்ப்போம். 

”ராமசாமி ஐயா”
தத்தக்க பித்தக்கன்னு நடக்கும் வயசில்,  பக்கத்து வீட்டு அண்ணாவோடு மஞ்சப்பையில், கைக்கு கிடைத்த குமுதம், கல்யாண பத்திரிகைகளை போட்டுக்கிட்டு போன என்னை ச்ச்சீ போன்னு விரட்டி அடிக்காம, வா தாயி!!ன்னு வகுப்புக்குள்ள கூட்டிக்கிட்டு போனவர்.


 “அப்பா”
பள்ளியில் சேர்த்ததும் தன் கடமை முடிந்தது என எண்ணாமல், பக்கத்தில் அமர்ந்து எழுத்துக்களையும், எண்களையும் கற்று தந்ததோடு விளையாட்டுக்கு கூட பொய் சொல்ல கூடாது, வழ வழன்னு குழைய கூடாது,  (மன்னிச்சு அப்பா! உன் பேச்சை மீறிட்டேன், நான் பிளாக்கராகிட்டேன்!!)

அம்மா”
எல்லாருக்குமே அப்பா தைரியத்தையும், அம்மா அன்பையும் சொல்லி தருவாங்க. ஆனா, வித்தியாசமா பெண்ணாய் பொறந்ததால அழனும்ன்னு அவசியமில்லை. தைரியமா இரு. எதிரியே வீடு தேடி வந்தாலும் அவமானப்படுத்தக்கூடாது,யாரையும் பசியோடு இருக்க விடக்கூடாது ன்னு கற்று தந்தவள்.  வைராக்கியம், ரோஷத்துக்கு சொந்தக்காரி. ஒரு ஆணால் வரும் தைரியத்தை விட, ஒரு பெண்ணால் வரும் தைரியத்துக்கு மதிப்பதிகம்ன்னு அடிக்கடி உணர வைப்பவள்.. 

”கமலா டீச்சர்”
அன்னையும், பிதாவும் மட்டுமில்ல நானும் கத்து தருவேன்ன்னு ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கைப்பிடிச்சு கத்து தந்தவள்.

மூர்த்தி சார்”
உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமில்லை, தேமாவும், புளிமாவும் சேர்ந்ததுதான் தமிழ்ன்னு சொல்லி தந்து, எதாவது தப்பா சொன்னால், காதை திருகி அப்புறம் பச்சை பச்சையாய் திட்டிப்புடுவேன்னு பயமுறித்தி வெண்டைக்காய், மாங்காய், சுண்டைக்கா, முருங்கைக்காய், பீர்க்கங்காய்ன்னு சொல்லி சிரிக்க வைத்து, தப்பு தப்பா எழுதிய என்னைக்கூட தமிழில் மாணவர் மன்றத்தேர்வில் முதல் வகுப்பில் தேற வைத்தவர்.

கணக்கு நாகரத்தினம் சார்”:
ஜியாமெண்ட்ரி பாக்சில் இருக்கும் காம்பஸ் வம்பு சண்டைக்கு வரும் கதிரேசனை குத்துறதுக்கு மட்டுமே யூஸ்ன்னு நினச்சுக்கிட்டு இருந்த என்னை, மகளாய் நினைத்து கிஸான் ஜாம் கொடுத்து, ஜியாமெண்ட்ரி வரைய கத்து கொடுத்து 81 மார்க் எடுக்க வைத்தவர்.


“வடிவேலு சார்”
9 வகுப்பில் அடி எடுத்து வைத்த முதல் நாள்..., கிளாசுக்குள் நுழைந்தவர், எங்கள் பேரை வரிசையா சொல்லிட்டு வர சொன்னார். என் பேரை சொல்லிட்டு அமைதியா உக்காந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது.  கடைசி பெஞ்ச் அரட்டை கேர்ள்ன்னு பேரெடுத்ததை நிரூபிக்கனுமேன்னு எங்க பேரையே கேட்டிட்டு இருக்கீங்களே! உங்க பேர் என்னன்னு கேட்டதுக்கு..,இங்க வா! இதோ என் பாக்கட்டுல இருக்குற பேட்ச்ல என் பேர் இருக்கு படின்னார். vadiveluன்னு இருந்துச்சு, என் நாக்குல இருந்த சனி பகவான் கதகளி ஆட வாடிவாலுன்னு படிச்சு தொலைச்சேன், அன்னில இருந்து ரொம்ப ரொம்ப டிரை பண்ணி ஆங்கிலத்தை எழுத்து கூட்டி படிக்க வச்ச புண்ணியவான். அதுக்கு அவர் எடுத்துக்கிட்ட காலம் மூணு வருசம்.

“மீனாட்சி டீச்சர்”
தமிழ் -தகராறு, ஆங்கிலம்- ஆகாது, புவியியல் -புரியாது, வரலாறு- வராது, கணக்கு - கசக்கும்ன்னு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு புது அகராதி போட்டு வச்சிருந்த என்னை நம்பி!!  அப்பா 11 வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப்பில் கொண்டு போய் போட அங்க விலங்கியல், இயற்பியல், வேதியியல்ன்னு விதம், விதமா, கலர் கலரா பூதங்கள் வந்து மிரட்டுச்சு. அதுலயும் விலங்கியல் பாடம் இருக்கே! ஐயோ! நைட் கனவுல கரப்பான் மூச்சி மல்லாந்து படுத்து வயித்தை காட்டும், சாப்பிட போனால் தவளை வந்து சாப்பாட்டு தட்டுல டான்ஸ் ஆடும். அட, போனா போகுது இதெல்லாம் மறக்கலாம்ன்னு டிவி பொட்டி முன்னாடி உக்காந்தா மண்புழு நெளியும், பிராக்டிக்கல் எக்சாம் காலை வரை கூட ரெக்கார்ட் முடிக்காம தில்லா நின்ன என்னை, விட்டா மறுபடியும் இதே கிளாசுல உக்காந்து நம்ம உயிரை வாங்குவான்னு முழு மார்க் போட்டு 12வது கிளாசோடு மூட்டை முடிச்சு கட்டி அனுப்பியவர்.

ரவி சார்:
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு எம்ப்ராய்டரி, பொம்மைகள், வொயர் கூட பின்ன கத்து கொடுத்தவர்,ஒரே வாரிசானதால் பொத்தி பொத்தி வளர்த்ததால், வேகமா நடக்கவே பயப்படும் என்னை விளையாட்டுக்களில் கலந்துக்க வைத்தவர்.

நட்புகள்:
பள்ளிக்கூடத்துல பாடம் மட்டுமல்ல, குறும்புத்தனம், சண்டை, அழுகை, சமாதானம், பகிர்தலும் கூட கத்துக்கலாம்ன்னு கத்துக்கொடுத்த மாலதி, சுஜாதா, செல்வி, தெய்வநாயகி, நசீமா, ஜெயலட்சுமி, உமா, கமலகண்ணன், வில்வநாதன், அருணகிரி, கார்த்தி....,

லவ்ஸ்:
பதின்ம வயதில் பாடமும், நட்பும், குறும்புத்தனமும் மட்டுமல்ல, காதலும் கூட வரும்ன்னு சொல்லி தந்த செல்ல இம்சை. 

வூட்டுக்காரர்:
ஏழுக்கழுதை வயசாச்சு! இன்னும் பொறுப்பில்லாம இருக்காளேன்னு பொறுப்பா வாழ்க்கை பாடத்தை கத்து தரும் தியாகி!!

மூத்த பெண்: 
தாய்மையை கற்று தந்தவள், கூடவே, இலவச இணைப்பாக கம்ப்யூட்டரையும்...,

இளைய மகள்: 
அச்சச்சோ! ரெண்டாவதும் பெண்ணாகிடுச்சே!ன்னு ஒதுக்கிய சொந்தங்களையும், அதைலாம் எதிர்த்து போராட வேண்டி இருக்கும்ன்னு உலகத்தை பற்றி கற்று கொடுக்க ஆரம்பித்தவள்.

கடைக்குட்டி:
தொலைத்த என் குழந்தை தனத்தையும், குறும்புத் தனத்தையும் மீண்டும் நினைவு படுத்திய என் ஆசான்.

பதிவர்கள்:
எல்லாவற்றையும் கற்று தர ஆளிருந்த எனக்கு சகோதர பாசத்தை காட்ட ஆளில்லாமல் தவித்த காலங்களில் சகோதர பாசத்தை அறிய வைத்தவர்கள்.

முகம் அறியாத ஆசான்கள்:
பிள்ளை பேறு முடிந்த பதினைந்தாவது நாளே ரெண்டாவது மாடிக்கு கற்களை சுமந்து உழைப்பை கற்று தந்த கட்டிட தொழிலாளி.., 

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நேரத்திலும் கவனக்குறைவாய் தந்த அதிகமான நூறு ரூபாயை திருப்பி தந்த பால்கார ஐயா! 

கையில் காசில்லாம போய் ஒரு முழம் பூ கேட்டு பர்சை வீட்டுலயே வச்சுட்டு வந்ததை உணர்ந்து, கையில் வாங்கிய பூவை, வேணாம் பாட்டின்னு திருப்பி தர, வெள்ளிக்கிழமை அதுமா பூவை திருப்பி தராதம்மா, அப்பாலிக்கா வரும்போது காசு கொடுன்னு நம்பி கடன் கொடுத்ததள்ளாத வயதிலும் பூ விற்கும் பாட்டி.

கடையை காலி பண்ணிட்டு, கடைசியாய் இருந்த நாலு இட்டிலியை தட்டில் வைத்து சாப்பிட, அமரும்போது அக்கா வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்துட்டாங்க. அவங்க பையன் பசிக்கு அழுகுறான். வீட்டில் மாவு எதுமில்ல. டிஃபன் இருக்கான்னு கேக்க, 11 மணி ஆகியும், சாப்பிடாத போதும், எச்சில் விழுங்கியப் படியே தன் சாப்பாட்டை தரும் ஹோட்டல் கார அக்கா!!

இப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கை பாடத்தை கற்று தரும் அனைத்து விதமான ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.



அ, ஆ, இ, ஈ..... 1,2,3,.... A,B,C,D..... கத்துக்கொடுக்குறவங்க மட்டும் ஆசிரியர்கள் இல்ல. நாம சந்திக்கும் அத்தனை பேரும் நமக்கு ஆசிரியர்கள்தான். அன்பு, கோவம், பழி, துரோகம், பாசம், இரக்கம், பக்தின்னு அவரவருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு விசயத்தை கத்துக்கொடுத்துட்டுதான் போறாங்க.  அதனால, நமக்கே தெரியாம நமக்கு வாழ்க்கை பாடத்தை கத்து தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471043

நன்றியுடன்,
ராஜி.