Monday, July 22, 2019

மழை நீரை தெரியும்!! மறை நீரை தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! குழாய்ல தண்ணி சொட்டிக்கிட்டு இருக்கு. அதை கவனிக்காம நீ என்ன செஞ்சிக்கிட்டிருக்கே?! போன்ல பேஸ்புக் நோண்டிக்கிட்டு இருக்கியா?!

ஆமா, இப்ப அதுக்கென்ன?!

இப்படி தண்ணிய வீணடிச்சால் பிற்காலத்தில் தண்ணிக்கு கஷ்டப்படனும்ன்னு ஊரெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்துக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பேஸ்புக், ட்விட்டர்ன்னு எத்தனை யோசனைகளை சொல்லிக்கிட்டிருக்காங்க. அதுலாம் படிச்சும் இப்படி தண்ணியை வீணடிக்குறியே!

சென்னை மாதிரியான பெருநகரங்களில்தான் மாமா தண்ணி பற்றக்குறை. சென்னையில்கூட எல்லா இடத்திலும் தண்ணி வராம இல்ல. ஏதோ சில இடத்தில் அப்படி... அப்படியே தண்ணி இல்லாத இடத்தில்கூட வண்டிகளில் தண்ணி கொண்டு போய் கொடுக்குறாங்க. பத்து ரூபா கொடுத்தால் ஒரு லிட்டர் அம்மா குடிநீர் கிடைக்கும். 20 ரூபா கொடுத்தா ஒரு கேன் கிடைக்கப்போகுது. இதுக்கு போய் அலட்டிக்குறியே!

அடிப்பாவி, உன்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் என்ன செய்ய?! குளம், குட்டை, ஆறு, கிணறு, ஊரணின்னு இருக்குற தண்ணியை வரைமுறை இல்லாம பயன்படுத்துறது எப்படி?! 20 ரூபாய்க்கு தண்ணி வாங்கி பார்த்து பார்த்து செலவு செய்வது எப்படி?! எல்லோராலயும் இப்படி தண்ணியை காசு கொடுத்து வாங்க முடியுமா?! மனுஷங்க வாங்கிடுறோம்ன்னு வச்சிக்கிட்டாலும் மிருகங்கள், பறவைகள்லாம் எப்படி குடிக்கும்?!


தண்ணிக்கு விலைப்பட்டியல் வாசிக்குறியே! மறை நீர்ன்னு ஒன்னு இருக்கே! அதுக்கு என்ன விலைன்னு யோசிச்சியா?!

மறை நீரா?! மழை நீரா?! தமிழை கடிச்சு துப்பாம ஒழுங்கா பேசு மாமா

நீ தமிழ்ல புலியாவே இருந்துக்க. ஆனா, நான் கரெக்டாதான் சொல்றேன். மழை நீர் இல்ல. மறை நீர் அதாவது Virtual water. இதோட விலை என்னன்னு தெரியுமா?! ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீரே மறை நீர் என சொல்லப்படுது. அதாவது ஒரு பொருளை உருவாக்க தேவைப்படும் நீர்தான் மறை நீர்ன்னு சொல்லப்படுது. உதாரணத்துக்கு ஒரு தானியத்தை விளைவிக்க தண்ணி வேணும். . ஆனா, அது விளைந்து, அறுவடை செய்து முடித்ததும் அதை உருவாக்கப் பயன்பட்ட தண்ணி அதுல இருக்காது, ஆனா, தண்ணி செலவாகியிருக்கும்.  ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்ய 1600 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுது.

கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, அதை விளைவிக்காமல் ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, 1,600 கியு.மீ அளவுக்குத் தண்ணியை சேமிக்குதுன்னு அர்த்தம். ஒரு கிலோ பன்றி கறி உற்பத்திக்காக 5,988 லிட்டர் செலவாகும். சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம், அதனால், இறக்குமதி செய்கிறார்கள், காரணம் தண்ணியை சேமிக்க... அதேமாதிரிதான், சொட்டு நீர் பாசனத்துக்கு பேர்போன இஸ்ரேல் ஆரஞ்சு பழத்தை இறக்குமதி பண்ணுறாங்க. அவங்களால் அதை விளைவிக்க முடியாதுன்னு இல்ல. ஒரு கிலோ ஆரஞ்சு பழத்துக்கான மறைநீர் 550 லிட்டர் தேவைப்படும். இப்படிதான் பிராய்லர் கோழிக்கறி உற்பத்தி செய்ய 4325 லிட்டர் தண்ணி. ஒரு கிலோ கோழிக்கறி விலை என்ன?! தண்ணி, தீனி, காவல்ன்னு எல்லாத்துக்கும் கணக்கு போட்டால் நம்மால கோழிக்கறி திங்க முடியுமா?!


ராக்கெட், செல்போன், லாப்டாப்ன்னு அதிநவீன அறிவியல் சாதனங்கள் செய்யுமளவுக்கு அறிவு இருக்கவுங்களுக்கு பனியனும், டி.ஷர்ட்டும் தயாரிக்க தெரியாதா?! செய்ய மாட்டாங்க ஏன்னா, 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10000 லிட்டர் மறை நீர் தேவை. வாயை பிளக்க வைக்கும் பாலமும், கட்டிடமும் கட்டுறவங்களுக்கு ஆட்டு தோலிலிருந்து பேக், பெல்ட் தைக்க தெரியாதா?! ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை. அதனால், கமுக்கமா, அதையெல்லாம் வளர்ந்து வரும் நாடுகள்கிட்ட வாங்கிக்குவாங்க. நாமும் உலகத்திலேயே நம்மூர் பனியன்தான் அதிகமா சேல்ஸ் ஆகுதுன்னும், தோல் ஏற்றுமதியில் முதலிடம்ன்னு கெத்தா சொல்லிக்கிட்டு திரியுறோம். விளைவு, பாலாறு வறண்டு வேலூர் மாவட்டத்தின் வறட்சி. நாமக்கல், திருப்பூரில் 500 அடிக்கு போர் போட்டாலும் தண்ணி கிடைக்காத நிலை. பெப்சி, கோக் கம்பெனி வந்துச்சு,. தாமிரபரணி ஆறு வறண்டு போச்சுது.

ஒரு பொருள் உற்பத்தி செய்ய மூலதனம்லாம் கணக்கு போடும் நாம தண்ணிக்கு என்னிக்காவது கணக்கு போட்டிருக்கோமா?! இல்ல. ஏன்னா, தண்ணி இத்தனை நாள் இலவசமா கிடைச்சுட்டு வந்திருந்தது. அதனால் கணக்கிடலை. கண்ணை மூடிக்கிட்டு ஏற்றுமதி செய்யக்கூடாது என பொருளாதார வல்லுனர்கள் சொல்றாங்க. இப்படி கார் உதிரி கம்பெனிகள், செல்போன் பாகங்கள்..ன்னு பல தொழில்களை தமிழ்நாட்டில் காலூன்ற விட்டதன் விளைவு தண்ணி அதளபாதாளத்துக்கு போய் இருக்கு. எதையெல்லாம் பெருமையா நினைச்சோமோ அதுவே இப்ப, நமக்கு ஆபத்தாய் முடிஞ்சிருக்கு, இலவசமாய் வந்தால் எந்த பொருளுக்குமே மரியாதை இல்லைன்னு சொல்வாங்க. இனி தண்ணியை காசு கொடுத்து வாங்க போறோம். இனியாவது தண்ணிக்குண்டான மரியாதை கிடைக்குதான்னு பார்க்கலாம்..

அடுத்து எல்லார் வீட்டிலயும் ஆர்.ஓ சிஸ்டம்ன்னு தண்ணியை சுத்தம் செய்யும் மெஷின் ஒன்னை மாட்டி வச்சிருக்கோம். 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த டப்பா நிரம்ப கிட்டத்தட்ட 15லிட்டர் தண்ணி over flow வழியா வெளியேறும். வெத்து கௌரவத்துக்காக இந்த ஆர்.ஓ சிஸ்டத்தை எல்லார் வீட்டுலயும் வச்சி எல்லா தாது உப்புகளையும் தண்ணில இருந்து பிரிச்சு வீணாக்கிட்டு சக்கையான தண்ணியை சுத்தம், ருசின்ற பேரில் குடிச்சுக்கிட்டிருக்கோம், அதனால் எலும்பு பலவீனப்பட்டு போகுது. ஓவர் ப்ளோ வழியா வரும் தண்ணிய கெட்ட தண்ணின்னு வீணாக்கிடுறோம்.

அது ஒன்னும் கெட்ட தண்ணி இல்ல, அதும் நல்ல தண்ணிதான் RO systemல மொத்தம் 5 குழாய்கள் வழியாக அடுத்தடுத்து purification process நடந்து, கடைசியா டாங்க்ல வர தண்ணீரைத்தான் நாம குடிக்குறோம். Outflowல வர தண்ணிய வாஷ்பேஷின்ல விட்டுடுவோம். ஆனா அந்த outflow ஆகி வரும் தண்ணிகூட 4 purification process முடிச்சுட்டுதான் வரும். 5வது finest membrane வழியாக மட்டும் போகாது. அவ்வளவே! மண், அழுக்கு, மாதிரி பெரிய துகள்கள்லாம் ஆர்.ஓ சிஸ்டத்துக்கு வெளியே இருக்க பெரிய குழாய் வடிகட்டிதான் தண்ணிய உள்ளயே அனுப்பும். அடுத்த அளவு சிறு சிறு துகள்கள் எல்லாம் அடுத்தடுத்து உள்ள சுத்தப்படுத்தும் குழாய்கள் மூலம் சுத்தமாகிடும். கடைசில உள்ள membraneதான். தண்ணிக்கு ருசியை தரும். அந்த ருசி மட்டுமே outflowல வர தண்ணில இருக்காது. அதனால ஓவர் ஃஃப்ளோ வழியா வரும் தண்ணியவும் குடிக்கலாம். இப்படி ஐந்து லெவல் ஆர்.ஓ சிஸ்டம் இல்லன்னாலும் ரெண்டு லெவல் ஆர்.ஓ சிஸ்டமாவது இப்ப இருக்கும் வீடுகளில் இருக்கும். அதுல ஓவர் ஃப்ளோ ஆகி வரும் தண்ணி கொஞ்சம் உப்பு சுவையா இருக்கும். அதனால், அதை குடிக்க விரும்பலனா சமையலுக்கு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வீடு மொழுக, செடிக்கு, வண்டி கழுவ.. இப்படி பயன்படுத்தலாம். எது எப்படி இருந்தாலும் தண்ணிய மட்டும் வீணடிக்கக்கூடாது.. புரிஞ்சுதா புள்ள.
புரிஞ்சுது மாமா! தண்ணியோட முக்கியத்துவம் என்னன்னு சொல்ற மாதிரி ஒரு வீடியோவை ஃபேஸ்புக்ல பார்த்தேன். அப்ப புரில இப்ப புரிஞ்சுட்டுது. அதனால், நம்ம வீட்டில் தண்ணிய மிச்சம் பிடிக்கும் விதமா இன்னிக்கு ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திடலாம். வாயேன்... 

பார்த்தியா!? வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைத்த கதையாய் புத்தி சொன்ன எனக்கே வேட்டு வைக்குறியே! 

கடிச்சு இழுக்கும்போதே நூல் நூலாய் வர்ற மாதிரி  பீட்சா விளம்பரமும், ஆவி பறக்கும் இட்லி தோசைன்னு விளம்பரம் பண்றாங்க, வா மாமா சாப்பிட்டு பார்க்கலாம்.  
அடிப்பாவி விளம்பரத்துல வருவதெல்லாம் உண்மையா?! இதைப்பாரு...  இப்படிதான் விளம்பரம்லாம் எடுக்குறாங்க. இதை நம்பி போய் சாப்பிட்டு காசையும், ஆரோக்கியத்தையும் இழக்கனுமா?!

ம்க்கும், உன்னைலாம் இன்னமும்  நம்புறேன் பாரு எல்லாமே என் தப்புதான்,...

ஆமா புள்ள! எல்லாமே உன் தப்புதான்.. அப்படியே இதுல என்ன தப்புன்னு பார்த்து சொல்லு.... ஹோட்டலுக்கு கூட்டி போறேன்..
என்ன தப்புன்னு என்னால கண்டுபிடிக்க முடில. உங்களால முடியுதா சகோ’ஸ்?!

நன்றியுடன்,
ராஜி

7 comments:

 1. விளம்பரத்தால் வந்த ஆட்சியையே ஏத்துக்கிறோம்... இந்த விளம்பரம் எல்லாம் ஜுஜுபி...!

  அப்புறம் எத்தனையோ 'ஷேக்'குகளுடன் பழகி இருக்கிறேன்... இவர் யார் என்று தெரியவில்லை...

  ReplyDelete
 2. தண்ணீர் பற்றி படிக்கும்போது எதிர்காலம் என்ன ஆகுமோ என்று மனம் பதறுகிறது.

  எண்களில் தவறில்லை. ஆங்கிலத் தவறில்தான் தவறிருக்கிறது.

  ReplyDelete
 3. தண்ணீர் பற்றிப் படிக்கப் படிக்க எதிர்காலம் பயமுத்துகிறது

  ReplyDelete
 4. mistake la - s , t மாறி போச்சு ராஜி க்கா

  ReplyDelete
 5. purifier ல வர மிச்ச தண்ணி ய நான் வாஷிங்மெஷின் க்கு உபயோகப்படுத்திடுவேன் ...

  ReplyDelete
 6. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம். ஆர்.ஓ. மூலம் வீணடிக்கப்படும் தண்ணீர் நிறையவே. பல வீடுகளில் இது பற்றிய அக்கறை இல்லை.

  சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete