பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் பெற்றோருக்கு குழந்தைதான்.. கருத்தரித்ததை உணர்ந்தது, கருவின் முதல் அசைவு, மசக்கை தொந்தரவு, உடல் உபாதைகள், பிரசவ வலியை தாங்கவேண்டுமென்ற பயம் என தாய் ஒரு பக்கமும், மருத்துவ செலவு, புதுசாய் ஜனிக்கும் குழந்தைக்கும் சேர்த்து பொருள் ஈட்ட என தந்தை ஒருபக்கமும் வெவ்வேறு பக்கம் பயணித்தாலும் தன் குழந்தை இந்த மண்ணில் ஜனிக்க போகும் அந்த நொடிக்காக காத்திருப்போம். அக்குழந்தை ஜனித்த முதல் நொடியில் இருவர் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து என்னமோ இமாலய சாதனை புரிந்தமாதிரி அத்தனை பரவசப்பட்டிருப்போம். அந்த பரவசத்தினை ஒருமுறை அனுபவித்தால் போதுமா?! ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க ஆசைதான். ஆனால், யதார்த்தம் அதற்கு ஒத்துவராது. அதனால்தான் பிறந்த நாள் என ஒன்றினை இறைவன் படைத்தானோ என்னமோ?!
என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்...
மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல
ரௌத்திரமும் பழகவேண்டுமென
கற்றுக்கொடுத்த ஆசான் நீ!!
எனக்குள்ளிருந்த குழந்தைத்தனத்திலிருக்கும்
வைராக்கியத்தை உணர வைத்தவள்....
உலகம் புரியாமல் வளர்ந்த எனக்கு
உலகத்தின் கோரமுகத்தை காட்டிய முதல் ஆள் நீ...
அந்த கோரமுகத்திலிருந்து இன்று
என்னை மீட்பவளும் நீயே!
என் இரண்டாம் தாய் நீ....
அதனால்தானோ என்னமோ சித்தியாய்
சிலசமயம் என்னை இம்சிக்கிறாய்...
ஆழ்கடலாய் அமைதியாய் இருந்தாலும்...
உனக்கென லட்சியம் கொண்டவள்
உன் லட்சியம் நிறைவேற வாழ்த்துகள் மகளே!
இரண்டாவதும் பெண்ணாய் பிறந்ததால் அத்தனை உறவுகளும் விலகிச்செல்ல, அம்மா கலங்கி போய் எல்லாரும் செத்துடலாமா?!ன்னு கேட்க, அதுவரை அம்மாவை எதிர்த்து பேசாதவ, நீ வேணும்ன்னா செத்து போ. நான் வரமாட்டேன்... எனக்குதான் கைக்கொடுக்க நாதியில்ல. ஆனா, என் பெரிய மகளுக்கு இவ இருக்கா. இவளுக்கு பெரியவள் இருக்கா, என் பிள்ளைகளை வளர்த்துக்க எனக்கு தெரியும்ன்னு சொல்லி வீம்பாய் நின்னேன். என் ஆசை இன்னிய வரைக்கும் நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு. பெரியவளும், சின்னவளும் அத்தனை நெருக்கம்.. என்னையும்கூட சின்னவள் விட்டுக்கொடுப்பா.. ஆனா, அவ அக்காவை விட்டுக்கொடுக்க மாட்டா.. என் அப்பா, அம்மா செல்லம் இவள்... எங்க சோகம் புரிஞ்சுதானோ என்னமோ! அப்பலாம் அழக்கூட மாட்டா. இப்பயும் அப்படிதான் அழவே அழாது. என் அம்மாவோட தைரியத்தை அப்படியே கொண்டிருக்கு... அன்னிக்கு ஹாஸ்பிட்டல்லயே விட்டு வந்த அத்தனை பேரும் இன்னிக்கு வீட்டுக்குள் வரும்போதே அவப்பேரை சொல்லிக்கிட்டுதான் வர்றாங்க...
உடை விசயத்தில் அத்தனை நேர்த்தி. எத்தனை செட் துணி எடுத்தாலும் மனசு நிறையாது அவளுக்கு. வெளில கிளம்பும்போது அவதான் எனக்கு டச் அப் கேர்ள். போட்டோ எடுத்தா ஆயுசு குறையும்ன்னு சொல்லிச்சொல்லி வளர்த்ததால் இன்னிக்கும் எனக்கு கேமராமுன் நிக்க கூச்சம். ஆனா, இவ போன் முழுக்க குறைஞ்சது 2000 படங்கள் இருக்கு. செல்பி பிரியை. இப்படி செல்பி பைத்தியமா இருக்காதடின்னு சொன்னா, உன்னையப்போல பைத்தியமாதான் இருக்கக்கூடாது. செல்பி பைத்தியமா இருக்கலாம்ன்னு காலை வாரி விடும்.
என்னைவிட என் அப்பாமேல் அவளுக்கு பாசம் அதிகம். உறவுக்கரங்க உதவி கேட்கும்போது எதாவது கோவதீல் நான் செய்ய யோசித்தால் எனக்கு புத்திமஇ சொல்வா. யார்மீது வன்மம் கொள்ளாது. என்ன?! அவ கப்போர்டை சுத்தமா வச்சுக்க மாட்டா. எத்தனை மடிச்சு அடுக்கி வச்சாலும் கலைச்சு வைப்பா. மூளைக்காய்ச்சலின்போது செத்து பொழைச்சு வந்ததால, வாசிப்பதில் பிரச்சனை, நினைவாற்றலில் பிரச்சனைன்னு இருந்ததால ப்ளஸ்டூல மார்க் கம்மி... இதை சொல்லி எல்லாரும் மக்குன்னு சொன்னதால இன்னிக்கு கல்லூரில கிளாஸ் ஃபர்ஸ்ட்.. டாக்டராதான் ஆகமுடில... ஆனா, என் பேர் முன்னாடி டாக்டர்ன்னு போட்டே ஆகனும்ன்னு பி.எச்.டி படிக்க இப்போதிலிருந்து தயாரிக்கிட்டு இருக்குறவ. நான் எது சொன்னாலும் கேட்கமாட்டா. எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டைதான் போடுவா. அதுக்கு பெரியவ கேப்பா.. நீங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணா?! இல்ல மாமியார் மருமகளா?!ன்னு.. ஆனா, உடம்புக்கு முடியாதபோது பெரியவ என் துணைக்கு வரமாட்டா... சின்னவதான் ஓடோடி வருவா... தாத்தா பாட்டி செல்லம்,,, தம்பிக்கு புத்தி சொல்லன்னு எல்லாமே இவள்தான். ஆடுற மாட்டை ஆடி கறக்கனும்.. பாடுற மாட்டை பாடி கறக்கனும்ன்ற சொல்லுக்கு ஏத்தமாதிரி கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி காரியத்தை சாதிச்சுடுவா. இவ இல்லன்னா என் வீட்டு வண்டிச்சக்கரம் சுழலாது. என் அச்சாணியே இவள்தான்!!
வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும், பெற்று குன்றாத செல்வமும், மாறா சிரிப்போடும் பல்லாண்டு வாழ்க லட்டும்மா.....
முதல்முறையாக இந்த வருட பிறந்தநாளுக்கு எங்களையெல்லாம் பிரிஞ்சு ஹாச்டலில் இருக்கா. பெரியவளின் கல்யாண வேலைகள் இருப்பதால் அவளை நேரில் வாழ்த்தமுடியலை. வீடியோ காலில் வரும்போதெல்லாம் ஒரே அழுகாச்சி. எல்லாம் நல்லதுக்கே. கொண்ட லட்சியத்தினை அடைய சில கொண்டாட்டஙகளை விட்டுக்கொடுத்துதான் ஆகனும். சர்ப்ப்ரைஸ் கிப்டா கேக்கும், வாட்சும் ஆன்லைனில் புக் பண்ணியாச்சு.
சின்னவளுக்கு சின்னதா ஒரு கிஃப்ட்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. நீங்களும் வாழ்த்துங்கள் வளரட்டும்...
முதலிரண்டும் பெண்ணா பிறந்ததில் வருத்தப்பட்ட, ஏளனப்பேச்சு பேசிய ஆட்களிடமிருந்து தப்பிக்க மூன்றாவது பிள்ளை கருவுற்ற நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு, பார்க்கும் கற்களைக்கூட கடவுளாய் எண்ணி வேண்டுதல் வைக்க ஆரம்பித்தாச்சுது. என்னை பெத்த பாவத்துக்கு என் அப்பா அம்மா வேண்டுதல் வச்சா பரவாயில்லை. என்னை வளர்த்தவங்க, என் நலம் விரும்பிகளின் வேண்டுதல் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. டெலிவரி நாட்கள் நெருங்க நெருங்க என்னைவிட அப்பா அம்மாக்கு பதட்டம் அதிகரிச்சுது. நான் எப்பயும் கூல்தான். இதும் பொண்ணாய் போனாலும் பரவாயில்லை. நான் காப்பாத்திக்குறேன். ஒன்னுக்கு ஒன்னா துணையாய் இருந்துட்டு போகட்டும்ன்னு சொல்லி தைரியமா இருந்தேன்.
ஒருசுபயோக சுபதினத்தில் வலி எடுக்க ஆரம்பிச்சுது. சின்ன மாமியார், பெரியமாமியார்ன்னு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போகவே ஒரு பட்டிமன்றம் நடந்துச்சுது. நான் வரலை, போனமுறை நாந்தான் வந்தேன் பொண்ணாய் போகிட்டுது, அதுஇதுன்னு.. வீட்டுக்கு பக்கத்துலயேதான் ஹாஸ்பிட்டல்.. அப்பாவை கூட்டிக்கிட்டு நடந்தே போனேன். சீக்கிரத்துல பிரசவம் ஆகிடும்ன்னு அட்மிட் பண்ணியாச்சுது. வலி பின்னி எடுக்குது. திங்கட்கிழமை 7.30 டூ 9 ராகுகாலம். ஊசிப்போட்டா டெலிவரி ஆகிடும்ன்னு நர்ஸ் சொல்ல, அந்த ஹாஸ்பிட்டலில் வேலை செஞ்சதால நேரம் நல்லா இல்லன்னு தள்ளி போட அப்பா சொல்ல, ஊசி போடல. ராகுகாலம் கழிஞ்சதும் மீண்டும் நர்ஸ் ஊசி போடலாம்ன்னு சொல்ல 10.30 டூ 12 எமகண்டம்ன்னு அப்பா சொல்ல...
பிரசவமாகும் பெண்ணோட அம்மா வரக்கூடாதுன்னு எங்க ஊரு பக்கம் சொல்வாங்க. அதாவது நீயே உன் அம்மாவை விட்டுடாம இருக்க. நான் எப்படி என் அம்மாவை விட்டு வருவேன்னு கேட்டு வெளிவராம பாப்பா அடம்பிடிக்கும்ன்னு சொல்வாங்க. அதனால் என்னோடு என் அம்மா வரல. அப்பா ராகுகாலம், எமகண்டம்ன்னு சொல்லிட்டு இருந்த தகவல் அம்மா காதுக்கு போக, புயலென மை மம்மி கம்மிங்க் டூ ஹாஸ்பிட்டல். என் பொண்ணு தவியா தவிக்குறா. இப்பதான் உனக்கு நல்லநேரம் கெட்ட நேரம் பார்க்குறியா?!ன்னு டோஸ் விட்டு, ஊசிப்போட சொல்ல, 10.12க்கு என் பையன் பொறந்தான். பையன் பொறந்திருக்கான்னு சொன்னாலும் பலவருச தவம் கைக்கு கிடைச்ச போதிலும் என் அம்மா கேட்ட முதல் கேள்வி, என் பொண்ணு எப்படி இருக்கா?! அவளுக்கு ஒன்னுமில்லையேன்னுதான்...
அந்த தைரியம் அப்படியே எனக்குள் வந்திருக்கு. பிரச்சனைகளை போர்வையாய் போர்த்தி தூங்குமளவுக்கு... ஆனா, என் அப்பாக்கு தைரியம் துளிகூட கிடையாது. எல்லாத்துக்கும் ஒரு தயக்கம், ஒரு பயம். அந்த குணத்தை அப்படியே உரிச்சுக்கிட்டு என் பையன் பிறந்திருக்கான். ஹோட்டலுக்கு போனாலும் மெனுகார்டை முழுசா வாசிச்சுட்டு என்னம்மா சொல்லட்டும்ன்னு என்னை கேப்பான். 18வயசு ஆனாலும், இன்னமும் ரோட்டை கிராஸ் பண்ணும்போது கையை பிடிச்சுப்பான். கேட்டா நீ பயப்படக்கூடாதுன்னுதான்ம்மா கையை பிடிச்சுக்குறேன்னு சொல்வான். ஹாஸ்டலுக்கு போகும்போது 1000ரூபாயை செலவுக்கு கொடுத்தாலும் மிச்சமா 500ரூபாயை திருப்பி கொண்டு வந்து கொடுப்பான்(பொண்ணுங்க 1500 ஆ செலவு பண்ணுதுங்க)
கோவம் தவிர எந்த உணர்ச்சிக்கும் ஆட்படமாட்டான். இதுவரைக்கும் அவன் ஆசைப்பட்டு கேட்டது ரெண்டே ரெண்டுதான். ஒன்னு ஹாஸ்டலில் கட்டிப்பிடிச்சு தூங்க பெரிய சைஸ் பொம்மை. இன்னொன்னு ஹானட் வண்டி. ஹாஸ்டலுக்கு கொண்டுப்போக.. இது சரியான வயசில்லைன்னு வண்டி வாங்கி கொடுக்கல. என் மாமியார் வீட்டில் பெண்குழந்தைங்கதான் அதிகம். பெண்ணோடு பிறந்து, வளர்ந்தும் பெண்கள்கிட்ட பேச கூச்சம். இப்பதான் காலேஜ்ல பொண்ணுங்கக்கூட பேச ஆரம்பிச்சிருக்கான். அவன் கேங்க்ல மூணு பொண்ணுங்க இருப்பதே எங்களுக்கு ஆச்சர்யம். பிள்ளை ஆம்பிளையாகிட்டான்னு தோணுது.
பொண்ணுங்க பெரிய மனுஷி ஆனா, அம்மாக்கள் முதல்ல வாங்கிதருவது சானிட்டரி நாப்கின். அதுமாதிரி என் பிள்ளை பெரியமனுசனாதை கொண்டாட ட்ரிம்மரை பர்த்டே பரிசா கொடுத்தாச்சு. சீக்கிரத்துலயே பெரிய மண்டபமா பார்த்து சடங்கு வைக்குறேன். சோப்பு, சீப்புன்னு தாய்மாமன் சீரை சரியா செஞ்சுடுங்கப்பா
இரண்டாவதா பொறந்த குழந்தைக்கு மூத்தது பெண்ணா இருந்தா அந்த குழந்தைக்கு ரெண்டு அம்மாக்கள்ன்னு சொல்வாங்க. அதுமாதிரி என் பையனுக்கு மொத்தம் மூணு அம்மாக்கள். என்னோடு சேர்த்து என் பொண்ணுங்களும் அவனுக்கு அம்மாதான். பெரியவ அமைதியா அன்பை வெளிக்காட்டுவா. சின்னவ, சண்டைப்போட்டு அடிச்சு துரத்தி அன்பை வெளிக்காட்டுவா. வயதுக்கு வந்த பிள்ளைகள்ன்னாலும் எதாவது இக்கட்டான சூழலில் மூணும் அணைச்சுக்கிட்டு படுத்திருக்கும். ஹாஸ்டலில் அப்படி படுக்க பெரிய சைஸ் பொம்மை அக்காக்களின் பரிசு....
சீட்டுக்கட்டிலிருக்கும் ஜோக்கர்போல, எல்லாத்துக்குமே செட் ஆவான். அவன் தாத்தாவுடன் கோவிலுக்கும், பெரியப்பா, சித்தப்பாக்களோடு கடைகளுக்கும், அக்காக்களோடு அரட்டையும், அக்கா பிள்ளைகளோடு விளையாடவும் செய்வான். எல்லாம் நல்லதே சொல்லிட்டிருந்தா எப்படி?! கையெழுத்தை பார்க்கனும்!! எல்.கே.ஜி பாப்பாகூட அழகா எழுதும்.அம்புட்டு கிறுக்கல்:-(. காலேஜ் போயும் ஆங்கிலத்தில் பெரிய எழுத்து, சின்ன எழுத்தை மாத்தி மாத்தி எழுதுவான். தமிழ்ல இடுகுறிகள், எழுத்துபிழைன்னு ஏகத்துக்கும் இருக்கும்.
ஒரு ஐஸ்கட்டியைப் போல
மெல்ல மெல்ல என்னை உருக
வைத்துக்கொண்டிருக்கிறது,
என் மடியினில் உறங்கும் இந்த
மீசை வைத்த குழந்தை.
தொட்டால் உறக்கம் தெளிந்தெடுமென
கரங்களால் தீண்டாமல்
கண்களால் வருடிக்கொண்டிருக்கிறேன்
அவன் அழகை!!
நரி பயங்காட்டியதோ..
இல்லை எறும்பு கடித்ததோ...
அழுதுடுவேன்னு என்னை
பயங்காட்டிக்கொண்டிருக்கிறது
அவன் உதட்டசைவு...
வேதனை நீங்கி புன்சிரிப்பொன்று
அவன் இதழில்..
நடிகர்திலகம் போல நொடிக்கொரு
பாவனை அவன் முகத்தில்...
பிள்ளை வாசம் உணர
அவனை உச்சி மோர்கையில்
அவன் உயிர் சுவாசம், என் சுவாசக் கூட்டில்
இடம் மாறுகிறது!!
குட்டிச்சூரியன் உருக்கொண்ட
வயிற்றை தொட்டுதடவிப்பார்க்கிறேன்..
எந்தமொழி வார்த்தையாலும்
என் பூரிப்பினையும், பாசத்தினையும்
விளங்கவைக்கமுடியாது..
படிப்பு, சம்பாத்தியம், பணி
காதல், காமம், வேலை,
குடும்பப்பொறுப்பு என
எந்தக் கவலையுமில்லாமல்
உறக்கம் அவன் விழிகளில்...
உறங்கட்டும் அவன்!!
ஆணுக்குண்டான பொறுப்புகள்
அவனை உறங்கவிடாமல்
செய்யக்கூடும்...
அதனால்.
தன்முதுகில் நீர் சுமக்கும்
ஒட்டகத்தினைப்போல
இப்பவே உறங்கி
சக்தியை சேமித்துக்கொள்ளட்டும்...
தான் படிக்கும் படிப்பிலும், இதே நல்ல குணத்தோடும், நல்ல மனுசன்னு பேர் எடுத்து நல்லபடியா வாழனும்ன்னு எல்லாரும் வாழ்த்துங்க!!!
அப்பா பாட்டு பிரியர். ரேடியோவிலிருந்து வொயர் கனெக்ஷன் கொடுத்து பானைக்குள் ஸ்பீக்கர் வச்சு பாட்டு கேப்பார். அது ஒரு தனி எஃபெக்ட் கொடுக்கும் பாட்டுக்கும், மியூசிக்குக்கும்... டிவிக்கள் கிராமங்களில் தலைநுழைத்த காலக்கட்டம் அது. அறிவியல் முன்னேற்றத்தோடு என் அப்பாவின் ரசனையும் முன்னேறினதன் விளைவு வீட்டுக்கு டேப் ரெக்கார்டர் வந்துச்சு... அதுக்கும் அதே பானை ஸ்பீக்கர்தான்... அப்பா இன்னும் முன்னேறி டிவியும், ஸ்டீரியோ எஃபக்ட் கொண்ட டேப்ரெக்கார்டர் வாங்கினார். 1982 இல்ல 83 இருக்கும்ன்னு நினைக்குறேன். அப்பவே அதன் விலை 3000ரூபா. டேப்ரெக்கரோடு ரேடியோவும் இருந்துச்சு.. டிவியை விட டேப்ரெக்கார்டரே என்னை ஈர்த்துச்சு. ஏன்னா, அப்ப டிடி மட்டுமே. அதுல எப்பயுமே இந்திதான். மாலைல ஓரிரு மணிநேரம் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதும் நாடகம், செய்திகள், ஜ்னூன், வயலும் வாழ்வும் மாதிரி நிகழ்ச்சிகள்தான். அதனால் வீட்டிலிருந்தால் டேப்ரெக்கார்டரோடு பொழுது போக்கினேன்... பேசி ரெக்கார்ட் பண்ணி போட்டு கேக்குறது.. விதி, சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், பந்தம்... இதுமாதிரியான படங்களின் வசனங்கள் கொண்ட கேசட்டுகள் மட்டுமே கேட்டுக்கிட்டிருப்பேன்...
பருவங்கள் மாறியது. திருத்தணில நாங்க குடியிருந்த தெருவில் கல்யாணம், திருவிழாக்களுக்கு மைக்செட், சீரியல் பல்ப் செட் போடும் கடை இருந்ததால் எல்லா புதுப்பாட்டும் புல் சவுண்ட்ல போடுவாங்க. 1989ல சோலைக்குயில் படத்து கண்ணுல நிக்குது.. நெஞ்சுல சொக்குது மானே... பாட்டு கேட்க நேர என்னை ஈர்த்துச்சு... மனசுக்குள் எப்பயும் அந்த பாட்டுதான் ரிவைண்டிங்... , ஸ்கூல் டான்ஸ்ல கங்கைக்கரை மன்னனடி... பாட்டுக்கு ஆட.. அப்பாவை கேசட் வாங்கி வரச்சொல்லும்போது அதுல, வருசம் 16, சோலைக்குயில் படமும் சேர்ந்து வர கேசட் கதறி கதறி அழுது கெஞ்சுற அளவுக்கு அதே பாட்டுதான். பாட்டு ஈர்த்ததே தவிர யார் நடிச்சாங்கன்னுலாம் தெரிஞ்சுக்க விரும்பல.
இத்தனைக்கும் 1988ல நடந்த அக்கா கல்யாணத்துலயே கார்த்திக் நடிச்ச என் ஜீவன் பாடுது படம் பார்த்திருக்கேன். அப்பலாம் சின்ன பிள்ளைன்றதால நடிகர்கள் மீது பெருசா ஈர்ப்பில்லை. பிடித்தது காலப்போக்கில் பிடிக்காம போற அதிசயம் நிகழும் ஈ லோகத்தில், இத்தனை காலமும் மாறாம இருக்குறது கார்த்திக் மீதான ரசனை மட்டுமே! அவர் ஈர்த்த அளவுக்கு எந்த நடிகரும் இன்னியவரைக்கும் இந்தளவுக்கு ஈர்த்ததில்லை.... அதுக்கப்புறம், எப்பயும் கார்த்திக்.. கார்த்திக்.. கார்த்திக்தான்....
13/9/1960ல பிறந்திருக்கார் என் சின்ன பொண்ணை கருவுற்றிருக்கும்போது செப்.15 டெலிவரி டேட் கொடுத்தாங்க. ஆனா, செப் 13லயே அவ பிறந்திடனும்ன்னு சாமிக்கிட்டலாம் வேண்டிக்கிட்டேன். நாம கேட்டதைலாம் என்னிக்கு சாமி செஞ்சிருக்கு?! . 1981 அலைகள் ஓய்வதில்லை படம் வந்திச்சு. எப்படி நடிப்பாரோன்னு பயந்துக்கிட்டிருந்த அவர் அப்பா முத்துராமனுக்கு அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னுகூட தெரியாது. படம் வெளில வரும் முன்னயே முத்துராமன் நெஞ்சுவலியில் இறந்துட்டாரு. ஆலோசனை சொல்லி, கைக்கொடுக்க ஆளில்லாம கொஞ்சம் வருசங்களுக்கு சரியான படம் தேர்ந்தெடுக்க தெரியாம பெருசா எதும் ஹிட் கொடுக்கவே இல்ல. ரஜினி, ராதிகா நடிச்ச நல்லவனுக்கு நல்லவன் படத்துல, கிட்டத்தட்ட வில்லன் வேஷம்ன்னு சொல்லி ஏ.வி.எம். நிறுவனத்தார் கேட்க வில்லன் வேஷமான்னு யோசிச்ச கார்த்திக்கை எங்க நிறுவனத்தின் அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோன்னு வாக்களிச்ச பின் நடிச்சதா ஏ.வி.எம் சரவணனே சொல்லி இருக்கார்...
கார்த்திக்கின் பொன்னுமணி, ரஜினியின் எஜமான் படப்பிடிப்பும் ஒரே தளத்தில் நடந்தபோது எடுத்த படம்...
ஆவரேஜ் ஹீரோவா இருந்த கார்த்திக்கை நவரசநாயகனா காட்டுனது மௌனராகம் படத்துலதான்... மிஸ்டர் சந்திரமௌலீஈஈஈஈஈஈஈஈஈன்னு கூவி அதிகபட்சம் கால்மணிக்கூர் படத்துல வந்தாலும் காதல், குறும்பு, சோகம், கோபம்ன்னு அத்தனை அம்சத்தையும் காட்டி நடிச்சிருப்பார். படத்தின் நாயகன் மோகன்னாலும் படத்து பேரை கேட்டதும் நினைவுக்கு வர்றது கார்த்திக்தான். அந்த படத்துக்கப்புறம் கார்த்திக் கேரியர் டாப் கியர்ல போச்சு.. அக்னி நட்சத்திரம், வருசம் பதினாறு, கண் சிமிட்டும் நேரம், பாண்டி நாட்டு தங்கம், கிழக்கு வாசல், பொண்ணுமனி, முத்துக்காளைன்னு போய்க்கிட்டிருந்த கார்த்திக் கிராஃப்ல மீண்டும் ஒரு சறுக்கல்... எல்லாமே சொதப்பிக்கிட்டு வந்துச்சு...
ஆகாய கங்கை படத்துக்காக கார்த்திக், சுகாசினி
மௌனராகத்துக்குபின் அக்னிநட்சத்திரத்தில் கார்த்திக்கை வச்சு இயக்கினார் மணிரத்தினம். பிரபு இன்னொரு நாயகன். பிரபு பெரிய வீட்டு பிள்ளையாய், போலீசாய் முறுக்கி காட்டி வருவார். காதல் காட்சியிலயும் அந்த ரஃப்னெஸ் தெரியும். ஆனா கார்த்திக் சாக்லேட் பாயா வந்து எல்லாரையும் கட்டிபோட்டார். நான் அந்த படத்துக்காக உடம்பை ஏத்தி கஷ்டப்பட்டு நடிச்சு வராத பேரை சும்மா கேமரா முன்னாடி நின்னு பேர் வாங்கிட்டு போயிட்டான் கார்த்திக்ன்னு பிரபுவே சொல்லி இருக்கார்.
அலைகள் ஓய்வதில்லை படத்துக்கான போட்டோ ஷூட்டிங்குக்கு வந்தபோது...
மணிரத்தினத்தின் தளபதி படத்துல கலெக்டர் வேசத்துக்கும், ரோஜா படத்து ஹீரோவாகவும் கார்த்திக்தான் முதல்ல நினைவுக்கு வந்திருக்கார். முதல்ல தளபதி படத்துக்காக போய் கேட்டபோது, என்ன நினைச்சாரோ தெரியல, அந்த படத்தை தவிர்க்க அதிக சம்பளம் கேட்டிருக்கார் கார்த்திக் அதனால் அந்த ரெண்டு படத்தையும் நடிக்க தவறவிட்டிருக்கார். பலவருசங்கழிச்சு ராவணன் படத்துலதான் மீண்டும் ரெண்டு பேரும் கைக்கோர்த்திருக்காங்க. பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என்ட்ரிக்கு பறக்காத விசில் கார்த்திக் என்ட்ரிக்கு பறந்துச்சு. கார்த்திக்குண்டான இடம் இன்னும் சினிமாவில் நிரப்பப்படாமயே இருக்குன்னு மணிரத்தினமே ராவணன் படத்து புரமோஷன்ல சொன்னார்.
மிஸ்டர் சந்திரமௌலி... மிஸ்டர் சந்திரமௌலி... வசனத்தை எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி நடிக்காத நடிகரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டும் இதுவரை இல்லை. மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு கார்த்திக் குரல்ன்னா அல்வா சாப்பிடுறமாதிரி... கார்த்திக் ஹே.. ஹேய்..ன்னு சொல்லி கைகாலை ஆட்டி, குழைஞ்சு பேசி ஓவர் ஆக்டிங்க் செய்ய மட்டுமே தெரியும்ன்னு சொன்னவங்க வாய மூடுற மாதிரி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்... படத்துலயும், ஆனந்தபூங்காற்றே... படத்துலயும் நடிச்சு அசத்தி இருப்பார். ஹீரோவா நடிச்சிட்டிருக்கும்போதே அஜீத், பிரபுதேவா, விஜயகாந்த்... மாதிரியான நடிகர்கள் படத்துல கெஸ்ட்ரோல்லயும் நடிச்சிருக்கார். ஆறு பாடல்களை பாடி இருக்கார்.
பொதுவா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் ரீ எண்ட்ரிங்குறது ஒருமுறைதான் வரும். ஆனா கார்த்திக்குக்கு ரெண்டாவது முறையும் வந்துச்சு.. சுந்தர் சி இயக்கத்துல 1995ல உள்ளத்தை அள்ளித்தா படத்துமூலமா மீண்டும் பிசியானார் கார்த்திக். பூவரசன், மேட்டுக்குடி, பிஸ்தா, கோகுலத்தில் சீதைன்னு அவர் கொடுத்த ஹிட்டுகள் ஏராளம். கோகுலத்தில் சீதை படத்துல கார்த்திக் ரிஷியாவே வாழ்ந்திருப்பார். அந்த படத்து சாயலும் எல்லா நடிகர்கள்கிட்டயும் பார்க்கலாம். இதுக்கிடையில், கார்த்திக்கின் கவனம் அரசியல் பக்கமும் பார்வை போனது ... அரசியல்ல மூழ்கி முத்தெடுத்தவங்க வெகுசிலரே! மூழ்கி காணாம போனது நிறைய பேரு. ஆனானப்பட்ட சிவாஜியே அரசியல்ல ஜெயிக்க முடியாதபோது தான் எம்மாத்திரம்ன்னு கார்த்திக் நினைச்சிருக்கனும்.. சரியான வழிக்காட்டுதல் இல்லாததால் அரசியல்ல இறங்கி சினிமாவை இழந்துதான் மிச்சம்...
தனக்கு தம்பியா, வில்லனா நடிச்ச சக நடிகரான முத்துராமன் தன்னோட மகனின் வளர்ச்சியை பார்க்க உடனில்லையேன்னு எம்.ஜி.ஆர் கலங்கினது படத்துலயே தெரியும்.
பொதுவா, நீச்சல் தெரியாம நீரில் முங்குறவங்களை, ரெண்டு முறை வெளித்தள்ளி காப்பாத்த பார்க்குமாம். அதுல தப்பிச்சுக்கலைன்னா மூணாவது முறை முங்கிதான் போகனும். ஆனா, கார்த்திக் விசயத்துல இந்த விதி உடைக்கப்பட்டிருக்கு... மாஞ்சா வேலு படத்துல கெஸ்ட்ரோலும், அனேகன் படத்துல வில்லனாவும் மீண்டும் கைக்கொடுத்து அவருக்குன்னு இன்னும் ரசிக பட்டாளம் இருக்குங்குறதை அவருக்கு உணர்த்தி இருக்கனும். சூர்யாவோடு ‘ இது தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல வில்லனா வந்தார்(இன்னமும் நான் படம் பார்க்கலை :( ).
இப்ப சமீபத்துல வெளிவந்த மிஸ்டர்.சந்திரமௌலி படத்துல ஃபர்ஸ்ட் ஹீரோ கார்த்திக்தான். அவரோடு சேர்ந்து அவர் மகனும் நடிச்சிருக்கார். அப்பாவோடு சேர்ந்து நடிக்க கொடுத்து வைக்காத எனக்கு என் மகனோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு ஆடியோ ரிலீஸ்ல கண்கலங்கினார். தன் மகள் வயதுடைய வரலட்சுமி சரத்குமாருக்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி போனார்.
அக்னி நட்சத்திரம், வருசம் 16, கிழக்குவாசல், பொன்னுமணி படத்துக்காக நான்கு முறை பிலிம்பேர் விருதையும், அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், கிழக்குவாசல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)& பூவேலி(1998) படத்துக்காக நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்துக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதும், அபிநந்தனான்ற தெலுங்கு படத்துக்காக நந்தி விருதையும், அதுமட்டுமில்லாம கலைமாமணி பட்டமும் வாங்கி இருக்கார். சுயமரியாதை, அமரன், சின்ன ஜமீன், சிஷ்யா, பிஸ்தா, அரிச்சந்திரான்னு ஆறு படத்தில் சொந்தகுரலில் பாட்டு பாடி நடிச்சிருக்கார்.
பல தடவை தவறவிட்டும் மீண்டும் கலை உலகில் இன்னொரு வாய்ப்பு வந்திருக்கு. பிரபு, சத்யராஜ் மாதிரி இந்த வாய்ப்பையாவது தக்க வச்சுப்பாரான்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்..... உங்களுக்கு கைக்கொடுக்காத அரசியலை விட்டு, உங்களுக்குன்னு இன்னமும் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை கவனிங்க கார்த்திக் சார்.
காதல் மன்னன், காதல் இளவரசன், நடிகர் திலகம்ன்னு எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் எல்லாரும் உணர்ச்சிகளை வெளிக்கொணர கொஞ்சம் மெனக்கெடனும்... உங்களுக்கு அதுலாம் வேண்டவே வேண்டாம். தானாவே வரும். நவரச நாயகன்ங்குற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த பட்டம் மௌனமாய் ராகம் பாடியப்படி... உங்கள் நடிப்பு திறமைக்கு மௌனச் சாட்சியாய் என்னிக்கும் உங்களுக்காகவே இருக்கும்...
அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே கார்த்திக் சார்...
நாளைக்கு வினாயகர் சதுர்த்தியும், கார்த்திக் பிறந்த நாளும் சேர்ந்து வருது. ரெண்டு பதிவா போட்டிருப்பேன். லீவு நாளில் கஷ்டப்படுத்த வேணாம்ன்னுதான் இன்னிக்கே வாழ்த்துகளை சொல்லிட்டேன்.
பாசம், அன்பு, பியார், பிரேமம், காதல், பக்தி, நேசம்ன்னு எத்தனை பேரிட்டு அழைத்தாலும் சக மனுஷங்கமேல் வரும் ஈர்ப்புங்குறது அலாதியானது. நேசிக்கப்படுகிறோம்ன்ற உணர்வு அசாத்திய பலத்தை கொடுக்கும். நேசிக்கின்றோம்ன்ற உணர்வும் அப்படியே! இந்த உணர்வு சிலசமயம் நேர்மறையான விளைவுகளையும் கொடுத்திருக்கு. இந்த உணர்வு ஆளுக்கும் வயதுக்கும் தகுந்தமாதிரி நட்பு, காதல், பாசம்ன்னு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுது. எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க வைக்கும் இந்த உணர்வு. இதே அன்பு, எதுக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாதுன்னு மல்லு கட்டும்.
ஒத்த அலைவரிசையில் ஒரு உறவு அமைஞ்சிட்டா அது எத்தனை சுகமானது!? அப்படி ஒரு அழகான உறவுதான் எனக்கும் அவனுக்குமானது அம்மா தன் கருவின்பால் கொண்ட பாசம், அப்பா தன் மகளின்மேல் கொண்ட அக்கறை, காதலனின் வாஞ்சை, கணவனின் கவனிப்பு, பிள்ளைகளின் மரியாதை, ஆசிரியரின் வழிகாட்டுதல், கடவுளின் ஆசிர்வாதம் தோழிகளின் பகிர்தல்ன்னு எனக்கு எல்லாமுமாய் ஆனவன். இக்கட்டான சூழலில் காத்தவன்.....
வாழ்வின் தொடக்கத்திலும் வரவில்லை.. முடிவிலும் வரப்போவதில்லையென்றாலும் அவனில்லாமல் நானில்லை. தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்புக்குலாம் வாழ்த்து சொல்லும்போது சேம் டூ யூன்னு சொல்வோம். ஆனா, பிறந்த நாளுக்கு வாழ்த்தும்போது நன்றின்னுதான் சொல்ல முடியும். ஆனா, எங்களால் முடியும். ஏன்னா ஒரே நாளில் பிறந்தவங்க. பிறந்த இடம், சூழல், கலாச்சாரம்ன்னு வேறுபட்டாலும் எங்களுக்குள் இருக்கும் பொருத்தம் யாருக்கும் அமையாதுன்னு பெருமையா சொல்வேன். என் பிள்ளைகளை என் அம்மா, அப்பாக்கிட்ட தவிர வேற யாரையும் நம்பி விடமாட்டேன். ஆனா, அவனை நம்பி விடுவேன்/ அத்தனை நம்பிக்கை..