Sunday, December 06, 2020

என் உதிரத்தில் உதிர்த்த மூன்றாவது உயிருக்கு இன்று பிறந்த நாள்...

பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் பெற்றோருக்கு குழந்தைதான்.. கருத்தரித்ததை உணர்ந்தது, கருவின் முதல் அசைவு, மசக்கை தொந்தரவு, உடல் உபாதைகள், பிரசவ வலியை தாங்கவேண்டுமென்ற பயம் என தாய் ஒரு பக்கமும், மருத்துவ செலவு, புதுசாய் ஜனிக்கும் குழந்தைக்கும் சேர்த்து பொருள் ஈட்ட என தந்தை ஒருபக்கமும் வெவ்வேறு பக்கம் பயணித்தாலும் தன் குழந்தை இந்த மண்ணில் ஜனிக்க போகும் அந்த நொடிக்காக காத்திருப்போம்.  அக்குழந்தை ஜனித்த முதல் நொடியில் இருவர் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து என்னமோ இமாலய சாதனை புரிந்தமாதிரி அத்தனை பரவசப்பட்டிருப்போம். அந்த பரவசத்தினை ஒருமுறை அனுபவித்தால் போதுமா?! ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க ஆசைதான். ஆனால், யதார்த்தம் அதற்கு ஒத்துவராது. அதனால்தான் பிறந்த நாள் என ஒன்றினை இறைவன் படைத்தானோ என்னமோ?!

1999ல் நான் அனுபவித்த அந்த பரவசத்தை மீண்டும் அனுபவிக்க இதோ வந்துவிட்டது மற்றொரு நாள்.. ஆம்! எனது மகனாருக்கு இன்று பிறந்த நாள்...  அறிவுரை கூறுவதில் என் ஆசான், அவ்வப்போது அளவளாவுவதில் என் தோழன்,  என்னை தேற்றுவதில் அன்னை, கண்டிப்பதில் தந்தை, சினங்கொண்டால் என் எதிரி, பயந்து வந்து காலை கட்டிக்கொள்ளும் சிறு குழந்தை.. மொத்தத்தில் என் யாதுமானவன்....

தத்தி, தத்தி நடந்த பாலகன் பருவம் கடந்து, சிட்டாய் பறந்த சிறுவன் பருவம்  கடந்து, இளைஞனாய் உருவெடுக்கும் செல்ல மகனுக்கு சில வரிகள்...

இனிவரும் காலங்கள் பொறுப்புமிகுந்தது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் வித்தையினை நீ கற்றுக்கொள்ள வேண்டும்..   எளிவயவருக்கு நிலவாக, கயவர்களுக்கு சுட்டெரிக்கும் சூரியனாக,  உனை உயர்த்தி, ஊர் உயர்த்து... மாதா, பிதா, குரு, தெய்வம்கூட வரமுடியா இடங்களில் தன்னம்பிக்கை, தைரியம் கொண்டு களமிறங்கு.. இறையருள் உனக்குண்டு..

ஏற்றாந்தாழ்வு கண்டு என்றும் அஞ்சாதே! நட்பில் தொலைந்துபோகும் காலக்கட்டமிது.. நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனங்கொள், கூடவே வரும் சுற்றத்தாரிடமும், நிழலாய் தொடரும் எதிரிகள்மீதும் ஒரு கண் வை.. இருபது வயதை கடந்ததில் பெருஞ்சாதனை ஏதுமில்லை மகனே! இனிவரும் காலங்களில் சாதிக்க இந்த இருபது ஆண்டுகளை படிக்கல்லாய் மாற்று.. பெற்ற வயிறு குளிர்ந்திருக்க, பெரும்புகழ் சேர்த்து ஊர்மெச்ச, பார் போற்ற வாழ்ந்திட நற்றிமிழில் வாழ்த்துகிறேன்...


என் உதிரத்தில் உருவான மூன்றாவது உயிரிவன்..

அம்மாவுக்கு வலிக்குமென சேட்டைகள் செய்யாமல் வளர்ந்தவன் இவன்!!

மண்ணை தொட்ட நாள் முதல், 

எங்கள் அனைவரின் உயிரானவன்...

வாடும் பயிரை கண்டபோதெல்லாம் வாடும் 

வள்ளலாரைப்போல, எங்கள் கண்களில் கண்ணீரை 

கண்டால் வாடுபவன்... அவன் முகம்பார்த்து 

எங்கள் கண்ணீரும்  காயும்.... நீ வயதில் சிறியவன்தான்

ஆனால் குணத்தால் உயர்ந்தவன்!!


சிறுவயதில் பூச்சிகளின் பின்னால் சுற்றுவாய்!

பூச்சிகளுக்கு உன்னை பிடித்ததா?! 

அல்லது

 உனக்கு பூச்சிகளை பிடித்ததாவென இன்றுவரை தெரியாது..

கரையான் புற்று உனக்கு சஞ்சீவி மலை!!


அறியாவயதில் அடிபட்ட கையில் தையல் இடும்போதும்

அழுகையில்லை.. அம்மாவென்று அலறவில்லை..

சிறு முனகலுமில்லை... ஆர்பாட்டமில்லாமல்

வண்டு துளைத்த கர்ண்னனாய்  அமைதியாய் 

வலி தாங்கினாய்!!


கடைவீதியில் பிடிவாதமாய் அழும் குழந்தைகளை கண்டு

எதற்கும் அடம்பிடிக்காத உன்னை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்..

நேற்றுதான் செவிலியரிடமிருந்து கையில் வாங்கியதாய் நினைவு!!

இன்று கால்பந்து ஆடச்செல்லும் இளைஞனாய் வளர்ந்து நிற்கிறாய்!!

கைப்பிடித்து நான் நடைப்பழக சொல்லிக்கொடுத்த குழந்தையா 

இன்று என்னை உட்கார வைத்து கார் ஓட்டுகிறது?!


பெற்றோருக்கு மட்டுமல்ல! அக்காக்களுக்கும் செல்லம் நீ!!

செல்லம் மட்டுமில்லை.. சமயத்தில் தாயாய், தந்தையாய்,

ஆசானாய், பாதுகாவலனாய், செவிலியனாய் பல்முகம் காட்டுகின்றாய்..

என்னதான் பொறுப்பாய் நடந்தாலும் 

அக்கா மகனுக்கு நிகராக சேயாய் மாறி குறும்புத்தனம் புரிகின்றாய்!! 


துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நிறைந்திருக்க,

பாசமும் பண்பும் இணைந்திருக்க,

பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க

வாழ்த்துகிறேன், என் கண்ணே!

பல்லாண்டு நீ வாழி என்று

வாழ்த்தும் உன் அன்னை...

நன்றியுடன்,

ராஜி

5 comments:

 1. உங்கள் மகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். பல வெற்றிகள் உங்கள் மகனை வந்தடையட்டும்.

  ReplyDelete
 2. தங்களின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. உங்கள் மகன் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.  வாழ்க வளமுடனும், நலமுடனும்.

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி... நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

  ReplyDelete