Showing posts with label இட்லிப்பொடி. Show all posts
Showing posts with label இட்லிப்பொடி. Show all posts

Tuesday, January 21, 2014

இட்லிப்பொடி - கிச்சன் கார்னர்

ஆளுக்கு இத்தனைன்னு கணக்கு பண்ணிதான் இட்லி ஊத்துவேன். எப்பவாவது ஒரு சமயம் இட்லி மீந்துட்டா என்ன பண்ணுறதுன்னு கவலைப்பட வேணாம். ஸ்கூல்ல இருந்து பிள்ளைங்க வந்ததும், காலைல மீந்துப் போன இட்லியை சூடு பண்ணி கொஞ்சம் இட்லிப்பொடியும், நல்லெண்ணெயும் கொடுத்துட்டா போதும். இட்லி வச்சிருக்கும் பாத்திரம் நிமிசத்துல காணாம போய்டும். அதனால, எப்பவும் வீட்டுல இட்லிப்பொடி இருக்கும். 

தேவையானப் பொருட்கள்:
உளுத்தம்பருப்பு -   கப்
கடலைப்பருப்பு - 1/2கப்
வேர்கடலை - ஒரு கைப்பிடி
கொள்ளு - ஒரு கைப்பிடி
உடைச்ச கடலை - ஒரு கைப்பிடி
கருப்பு எள்ளு - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கைப்பிடி
உப்பு தேவைக்கேற்ப

உடைச்ச கடலை, உப்பு தவிர்த்து மற்றப் பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியா சிவக்க வறுத்து எடுத்துக்கோங்க. மிளகாயை வறுக்கும்போது நெடி வராம இருக்க கொஞ்சம் கல் உப்பு சேர்த்துக்கிட்டா நெடி வராது. அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வாணலி சூட்டுலயே கறிவேப்பிலையை போட்டு வச்சா ஈரம் போய் மொறுமொறுப்பாகிடும்.

வறுத்தப் பொருட்கள் சூடு ஆறினதும், உப்பு, உடைச்ச கடலைச் சேர்த்து மிக்சில நைசா அரைச்சுக்கோங்க. காத்துப் புகாத டப்பாவுல எடுத்து வச்சுக்கிட்டா ரெண்டு மாசம் வரை கெடாது.


தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் இட்லிப்பொடியோடு கொஞ்சம் நல்ல எண்ணெய் இல்லாட்டி நெய் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.

சூடான சாதம், இட்லி, தோசை, உப்புமாக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட நல்லா இருக்கும். பிடிக்காத சாம்பார் வச்சா சாதத்துல பொடிப் போட்டு நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவாங்க என் பசங்க. என் அப்பா சாதத்துல பொடிப் போட்டு பிசைஞ்சு ஆளுக்கொரு உருண்டை கொடுப்பார். அதோட ருசி எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாட்டுல கூட ருசித்ததில்ல!!

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோடு சந்திக்குறேன்.