Showing posts with label மிளகாய். Show all posts
Showing posts with label மிளகாய். Show all posts

Tuesday, March 19, 2019

வீட்டிலேயே அரைக்கலாம் மிளகாய் தூள் - கிச்சன் கார்னர்

பாட்டியெல்லாம் கம்பு, கேழ்வரகுலாம் வீட்டிலேயே சுத்தம் செய்து அரைத்து மாவாக்கி,  நெல்லை குத்தி  அரிசியாக்கி, மிளகாய், மசாலாக்களை அம்மியில் அரைத்து சமையல் செய்தவரை உணவு ருசியாகவும், மனிதர்கள் ஆரோக்கியமாகவும் இருந்தனர். நெல்லை உள்ளூர் ரைஸ் மில்லில் கொடுத்து அரிசியாக்கி,  வாங்கி, கம்பு, கேழ்வரகு, மிளகாய்லாம் மெஷின்ல அரைச்சு,  மசாலாக்களை அம்மியில் அரைச்சவரைக்கும் உணவு ருசியாகவும், உடல் ஆரோக்கியமாவும் இருந்துச்சு..

வெள்ளை வெளேர்ன்னு பாலிஷ் ஆக்கப்பட்ட அரிசி, பாக்கெட்ல அடைக்கப்பட்ட கோதுமை மாவு, மிளகாய் தூள், ரெடிமேட் மசாலாக்கள் வாங்கி மிக்சி, கிரைண்டர்ன்னு நம்மலாம் மாறினப்பின் உணவு ருசியும் போச்சு, ஆரோக்கியமும் போய்க்கிட்டே இருக்கு.  இனிவரும் காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஹோட்டல் சாப்பாட்டையும் சாப்பிடப்போகும் வரும் தலையினரை நினைச்சால்தான் மனசு வலிக்குது. கொஞ்சம் மெனக்கெடலும், குடும்பத்தின்மீதான அக்கறையும் போதும். நாம் ஆரோக்கியமாய் வாழ! ஆனா, எல்லாமே ஈசியா கிடைக்கனும்ன்ற மனநிலை சாப்பாட்டுலயும் இருக்குறது வேதனைக்குரிய விசயம்.

பாக்கெட்ல அடைத்து விற்கப்படும் எல்லாத்துலயும் கலப்படம். இன்னிக்கு பார்க்கப்போற குழம்பு மிளகாய் தூளில் மரத்தூள், செங்கல் தூள் கலக்குறாங்க. தனி மிளகாய் தூளில் கலர் பொடி சேர்க்கிறாங்க. வீட்டில் அரைக்கும் மிளகாய் தூளை தண்ணியில் கரைச்சா கரைஞ்சுடும். வெளியில் வாங்கின மிளகாய் தூளை கரைக்கும்போது  மேல எதாவது மிதந்தால் அது மரத்தூள் சேர்க்கப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கலாம். அடியில் நின்னால் செங்கல் தூள், தண்ணீர் சிவப்பு கலரா மாறிட்டா கலர்பொடி கலந்திருக்குன்னு புரிஞ்சுக்கலாம். 

நம்மூரில்  மிளகாய் மட்டுமே அரைச்சு கறிக்குழம்பு, குருமா மாதிரியானவற்றில் சேர்க்க தனி மிளகாய் தூளையும், கூட்டு, குழம்பு, காரக்குழம்புல சேர்க்க குழம்பு மிளகாய் தூள்ன்னு ரெண்டு வகையா அரைச்சு வைப்பாங்க. பொதுவா ரெண்டுத்தையுமே  மிளகாய் தூள்ன்னுதான் சொல்வாங்க. சிலர் மட்டுமே குழம்பு தூளை குழம்பு மிளகாய் தூள்ன்னு சொல்வாங்க.  இனி, மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்களை பார்க்கலாம்..
இந்தமுறை மிளகாய் தூள் அரைக்க மிளகாய் காய வச்சிருக்கும்போது வெளியில் போய்ட்டேன். மாலையில் வீடு திரும்ப லேட்டானதால் பிள்ளைகளுக்கு போன் பண்ணி  மிளகாய் வாறி வச்சுடும்மான்னு சொன்னேன். வீட்டுக்கு வந்தால் எனக்கு செம திட்டு. மிளகாய் வாறும்போது தும்மல் வந்துச்சாம், கை, மூக்கெல்லாம் எரியுது.  கடையில் பாக்கெட் பண்ணி வைக்கும்போது ஏன் இப்படி மெனக்கெடுறேன்னு அலுத்துக்கிட்டா. அப்பதான் யோசனை வந்துச்சு பெரும்பான்மையான இனிவரும் தலைமுறை பிள்ளைக மனநிலை அப்படிதானே இருக்கும். அதனால், செல்பி, பேஸ்புக சமூக வலைத்தளம் வாயிலா  வாயிலா எதையெதையோ  பதிஞ்சு வைக்கிறோம். வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும் தேவையான சின்ன சின்ன  விசயங்களையும் இனி பதிஞ்சு வைக்கனும். ஒருவேளை, என் பிள்ளைகள் குடும்ப வாழ்க்கையில் நுழையும்போது இதை சொல்லித்தர நான் இல்லாம போயிட்டா...  அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சின்ன சின்ன விசயங்களை பதிஞ்சு வைக்கிறேன்.... 

தேவையான பொருட்கள்...
குண்டு மிளகாய் - 1கிலோ
தனியா - 1 கிலோ
கொம்பு மஞ்சள் - 100 கிராம்
பெருங்காயம் - 1 கட்டி
வெந்தயம் - 100கிராம்
சுக்கு -100கிராம்
துவரம்பருப்பு - 100கிராம்
கடலைப்பருப்பு - 100கிராம்
உ.பருப்பு - 100கிராம்
மிளகு - 25கிராம்
சீரகம் - 100 கிராம்
காய்ந்த கறிவேப்பிலை.



பருப்புகள் தவிர்த்து மிளகாய், தனியா, வெந்தயம் சுக்கு, மஞ்சள், பெருங்காயம்லாம் நல்லா வெயிலில் காய வச்சுக்கனும். மிளகாயை கையால் நசுக்கினால் அப்பளம் மாதிரி நொறுங்கனும். அதான் பதம்.
கட்டி பெருங்காயத்தினை கிள்ளி காய வைங்க.  என் மாமியார் வீட்டில் எண்ணெயில் வறுத்து சேர்ப்பாங்க
காய்ந்த கறிவேப்பிலையை வீணாக்காம சேமிச்சு வச்சு மிளகாய் தூள் அரைக்கும்போது சேர்த்துக்கலாம்,. இல்லன்னா புதுசா வாங்கி நிழல் உலர்த்தலா உலர்த்தியும் சேர்க்கலாம்.
பருப்பு வகைகளை பொன்னிறமா வறுத்துக்கனும்.. மிளகு, சீரகம் வறுத்துக்கனும். சிலர் வெயிலில் மிளகாயோடு சேர்த்து காய வைப்பாங்க. 

எல்லாத்தையும் கலந்து மெஷின்ல கொடுத்து அரைச்சுக்கனும். அரைச்சு வரும் மிளகாய் தூள் சூடா இருக்கும். அதை அங்க இருக்கும் மேடையிலோ அல்லது வீட்டில் வந்து பேப்பரிலோ கொட்டி நல்லா ஆற வச்சு பெரிய டப்பாவில் கொட்டி வச்சுக்கனும். தினத்துக்கு பயன்படுத்த சின்னதா ஒரு டப்பாவில் எடுத்து தனியா வச்சுக்கிடனும்.   மொத்த மிளகாய் தூள் டப்பாவை தினத்துக்கும் திறந்து மூடினால் வாசம் போய்டும். சமைக்கும் நம்ம கை ஈரம் பட்டால்  மிளகாய் தூள் கெட்டி தட்டும். அதனால் பெரிய டப்பாவில் சேமிச்சுக்கனும்...

டிப்ஸ்கள்...
1. மிளகாய் தூள் அரைக்க எப்பவுமே குண்டு மிளகாயை வாங்குவதே நல்லது. அதுதான் காரமா இருக்கும்.
2. சிலர் வீட்டில் மிளகாய் காம்பினை எடுத்துட்டு அரைப்பாங்க..
3. பருப்பு வகைகளும், மஞ்சளும் வீட்டுக்கு வீடு மாறுபடும். 
4. மிளகாய் தூள் சன்னமா அரைக்கலைன்னா பால் பொங்கி வர்றது மாதிரி குழம்பு பொங்கும். அதை வச்சு தூள் தரத்தினை தெரிஞ்சுக்கலாம்.
5. ஒரு கிலோ மிளகாய் வாங்கி அரைச்சு சேமிச்சுக்கிட்டா 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு நாலு மாசம் வரும்.
6. மிளகாய் தூள் அரைக்கும்போதே  தனித்தனியா தனியா(கொ.மல்லி விதை), மிளகாய் ஆகிய இரண்டையும் 1/4 கிலோ  காய வச்சு அரைச்சு வச்சுக்கிட்டா  பாக்கெட்ல வர்றதை வாங்க வேணாம். ‘
இதான் ஒரே கல்லுல மூணு மாங்கா அடிக்குறது..

அடுத்த வாரம் வடகம் செய்முறையோடு வரேன்..

நன்றியுடன்,
ராஜி

Tuesday, April 29, 2014

தக்காளி ஊறுகாய் - கிச்சன் கார்னர்

கோடைக்காலம் வந்தாலே  பொண்டுங்க, பொட்டு பொடுசுங்கலாம் ஊறுகாய், வத்தல்லாம் போடுற வேலைல இறங்கிடுவாங்க.  மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய்லாம் இப்போ விலைக் குறைவா கிடைக்கும். அதனால வத்தல் போட்டு சேமிச்சு வச்சு வருடம் முழுக்க பயன்படுத்திக்குவாங்க.  அதே நேரத்தில் தக்காளி, பூண்டு மாதிரியானலாம் விலைக் குறைவான நேரத்துல ஊறுகாய் செஞ்சு சாப்பிடுவாங்க. என்ன இதுலாம் பத்து இல்ல ஒரு மாசம்தான் தாங்கும்.  வருசம் முழுக்க சேமிச்சு வச்சுக்க முடியாது அதான் இதுல இருக்கும் மைனஸ் பாய்ண்ட்.

தேவையானப் பொருட்கள்:
நல்லா பழுத்த தக்காளி - 1 கிலோ
மிளகாய் பழம் அல்லது காய்ந்த மிளகாய் - 100கிராம்
புளி - 100கிராம்
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - 100 மிலி
பெருங்காயம் -  சிறிது
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது.
 தக்காளியை நல்லா கழுவி ஈரம் போக துடைச்சு நாலு துண்டா வெட்டி பீங்கான் ஜாடி இல்ல பிளாஸ்டிக் டப்பாவுல போட்டு உப்புப் போட்டு ஒரு நாள் முழுக்க ஊற விடுங்க. 

மறுநாள் காலைல ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல தக்காளியை மட்டும் காய வைங்க. தக்காள் ஜூஸை தனியா வெயிலில் வைங்க. 

தக்காளி நல்லா காய்ந்ததும் ட்வெயிலி வைத்த தக்காளி ஜூசில் தக்காளி, மிளகாய், புளி போட்டு ஊற வைங்க. ஊறினாதான் அரைக்க முடியும். இல்லன்னா நைசா அரையாது. தக்காளிலாம் ஊறினதும் உரலில் இல்ல மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க. தண்ணி பத்தலைன்னா ஆறின சுடுதண்ணி சேர்த்து அரைக்கலாம். 

ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகுப் போட்டு பொரிய விடுங்க. 

கடுகு பொரிந்ததும் தக்காளி, மிளகாய் அரைத்த விழுதைக் கொட்டி வதக்குங்க. 



எண்ணெயும், தக்காளி விழுதும் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க. ஊறுகாய் ஆறினதும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் பெருங்காயத்தை வறுத்து பொடிப் பண்ணி ஊறுகாய்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க. இப்படி ரெடியான ஊறுகாயை ஒரு நாள் முழுக்க வெயிலில் வைங்க.   

காரசாரமான  தக்காளி ஊறுகாய் ரெடி.காத்து புகாத மாதிரிலாம் டப்பாவுல வைக்காம லேசா திறந்து வச்சுக்கோங்க. இல்லாட்டி பூரணம் பிடிச்சுடும்.   (ரெடியான தக்காளி ஊறுகாய் படமெடுக்க மறந்துட்டேன்.  ஒரு வாரம் கழிச்சுதான் படமெடுக்காதது நினைவு வந்து மிச்சம் மீதியைதான் படமெடுத்தேன். அதான் காய்ஞ்சு போன மாதிரி இருக்கு.) 

மோர் சேர்த்த பழைய சாதம் , கூழ்க்குலாம் இந்த ஊறுகாய் மேட்ச் ஆகும். அடுத்த வாரம் என்ன செய்யலாம்!?

லீவுக்கு வரும் சொந்தக்காரங்க தலைத்தெறிச்சு ஓட வைக்குற மாதிரி பஜ்ஜி செய்யலாமா!?

Tuesday, January 21, 2014

இட்லிப்பொடி - கிச்சன் கார்னர்

ஆளுக்கு இத்தனைன்னு கணக்கு பண்ணிதான் இட்லி ஊத்துவேன். எப்பவாவது ஒரு சமயம் இட்லி மீந்துட்டா என்ன பண்ணுறதுன்னு கவலைப்பட வேணாம். ஸ்கூல்ல இருந்து பிள்ளைங்க வந்ததும், காலைல மீந்துப் போன இட்லியை சூடு பண்ணி கொஞ்சம் இட்லிப்பொடியும், நல்லெண்ணெயும் கொடுத்துட்டா போதும். இட்லி வச்சிருக்கும் பாத்திரம் நிமிசத்துல காணாம போய்டும். அதனால, எப்பவும் வீட்டுல இட்லிப்பொடி இருக்கும். 

தேவையானப் பொருட்கள்:
உளுத்தம்பருப்பு -   கப்
கடலைப்பருப்பு - 1/2கப்
வேர்கடலை - ஒரு கைப்பிடி
கொள்ளு - ஒரு கைப்பிடி
உடைச்ச கடலை - ஒரு கைப்பிடி
கருப்பு எள்ளு - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கைப்பிடி
உப்பு தேவைக்கேற்ப

உடைச்ச கடலை, உப்பு தவிர்த்து மற்றப் பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியா சிவக்க வறுத்து எடுத்துக்கோங்க. மிளகாயை வறுக்கும்போது நெடி வராம இருக்க கொஞ்சம் கல் உப்பு சேர்த்துக்கிட்டா நெடி வராது. அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வாணலி சூட்டுலயே கறிவேப்பிலையை போட்டு வச்சா ஈரம் போய் மொறுமொறுப்பாகிடும்.

வறுத்தப் பொருட்கள் சூடு ஆறினதும், உப்பு, உடைச்ச கடலைச் சேர்த்து மிக்சில நைசா அரைச்சுக்கோங்க. காத்துப் புகாத டப்பாவுல எடுத்து வச்சுக்கிட்டா ரெண்டு மாசம் வரை கெடாது.


தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் இட்லிப்பொடியோடு கொஞ்சம் நல்ல எண்ணெய் இல்லாட்டி நெய் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.

சூடான சாதம், இட்லி, தோசை, உப்புமாக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட நல்லா இருக்கும். பிடிக்காத சாம்பார் வச்சா சாதத்துல பொடிப் போட்டு நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவாங்க என் பசங்க. என் அப்பா சாதத்துல பொடிப் போட்டு பிசைஞ்சு ஆளுக்கொரு உருண்டை கொடுப்பார். அதோட ருசி எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாட்டுல கூட ருசித்ததில்ல!!

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோடு சந்திக்குறேன்.