Showing posts with label கோலம். Show all posts
Showing posts with label கோலம். Show all posts

Saturday, January 19, 2019

பொங்கல் பண்டிகை பட்டபாடு - வீட்டிலும்.... வெளியிலும்....

எங்க வீட்டில் பொங்கிய பொங்கல்...

யூ ட்யூப், கூகுள், ஃப்ளிக்கர், ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பழைய கோல நோட்டு இதுலாம் பார்த்து, எந்த கோலம் போடலாம்ன்னு அலசி ஆராய்ஞ்சு சொந்தமா போட்ட கோலம். என்ன கரும்புதான் ஒன்னு பெருசாவும், இன்னொன்னு சிறுசாவும் போயிட்டுது :-( கலர் கொடுத்ததுலாம் பெரிய பொண்ணு. 

பொதுவாவே எனக்கு வரைய வராது. புள்ளி வச்ச கோலம்  நல்லாவே போட வரும். ஆனா, புள்ளியில்லாம மான், மயில் மாதிரிலாம் கோலம் போடனும்ன்னா சொதப்புவேன். அது என்னமோ தெரில இந்தமுறை மயில் மயில்மாதிரி வந்திட்டுது. கலர் சின்ன பொண்ணு கொடுத்துச்சு. 
மஞ்சக்காப்பு கட்டியாச்சு..
பிள்ளையார் வீடு கட்டியது என் பையன். கரும்பு, மஞ்சள், காய்கறிலாம் வச்சு முதல் படையல்..
முன்னலாம் வாசல்ல பொங்கல் வைப்போம். இப்ப மொட்டைமாடில வைக்குறோம். ஆற்றுமணலை கொட்டி, அதன்மேல் செங்கல் வச்சு களிமண் உருண்டை வச்சு அதுக்கு மேல் பொங்கபானை வைப்போம். அடுப்பு பத்தவச்சு பானை காய்ஞ்சுடுச்சான்னு நெல்மணி போட்டு பார்ப்போம்.   
அது வெடிச்சதும் பால் ஊத்துவோம். அது பொங்கினதும், அரிசி கழுவின தண்ணிய ஊத்தி தவிடு போட்டு தட்டு போட்டு மூடி துவரங்குச்சி கொண்டு எரிய விடுவோம். பொங்கல் மேற்கு பக்கமா வழிஞ்சது. 
பாலும், தண்ணியும் பொங்கி வந்ததும் அரிசியை போடுவோம். அரிசி பொங்கினதும், கடைக்கு போய் உப்பு வாங்கி வந்து பொங்கப்பானையில் சேர்ப்போம். உப்பு வாங்குறதுதான் முதல் செலவா இருக்கும்.

பொங்கல் வெந்ததும் இறக்கி வச்சிடுவோம்..
சாமிக்கு படைக்கும்போது செங்கல் தூளால் பிள்ளையார் வீடு, வாசல், பொங்கல் அடுப்புக்கு கோலம் போட்டு, பூசணி இலையில் பொங்கல், 9 தானியங்கள், 21காய்கறிகள் சேர்த்த குழம்பு,  பிடிகரணைக்குழம்பு, வெந்தயக்கீரை மசியல் செஞ்சு  சூரியனுக்கு படைச்சோம். 


மாடிக்கும், கீழுக்குமா நடந்ததால் எல்லாமே டயர்ட். அதனால் மாட்டு பொங்கலன்னிக்கு சிம்பிளா ஒரு கோலம். 

சாம்பார், பொரியல், வடை, கொழுக்கட்டை, சுய்யம்லாம் வச்சு படையல் போட்டாச்சு. புதுத்துணி வச்சும் படைச்சு உடுத்தி, அம்மா அப்பா, மாமனார், மாமியார், மச்சினர், மூத்தார், நாத்தனார் அவங்க பிள்ளைகளை பார்த்து பைசா கொடுத்து, வாங்கி..  கோவிலுக்கு போய் வந்தோம்.


இப்படியாக எங்க வீட்டு பொங்கல் பண்டிகை கடந்து போனது. 

இனி நெட்ல சுட்டது....
தங்கள் வீட்டு மாட்டை எப்படிலாம் அலங்காரம் செஞ்சிருக்காங்க பாருங்க, கொலுசு, செயின் மட்டுமில்லாம வாலில் அழகா ஜடை பிள்ளைகள், குஞ்சலம்லாம் வச்சி.. செமயா இருக்கு.
மல்லிகை பூ ஜடை வச்சு கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணி இருக்காங்க. 
கவிதை, கட்டுரை, சமையல், கோலம்ன்னு தன் மனசுல இருப்பதை வெளிப்படுத்தும் திறமை இயல்பாவே எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கு.  தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையால்  வரும் பாதிப்பு பத்தி பொங்கல் அன்னிக்கு ஒரு பொண்ணு கோலம் போட்டிருக்கு.
மாட்டு மடி பின்னாடி இருக்கு.
புரிஞ்சுதா?!
ஏசு, அல்லா, முருகன், ஈசன், புத்தர்ன்னு இருந்தாலும் இறைவன் ஒருவனே. அதில் மாற்றுக்கருத்தில்லை. இறைச்சி வச்சு ஈசனை வழிப்பட்டார் கண்ணப்பர். நெல்லிக்கனி ருசியா இருக்கான்னு கடிச்சு பார்த்து ராமருக்கு கொடுத்தாங்க சபரி. அவரவருக்கு தெரிஞ்சபடி கடவுள்மீதான பக்தியை வெளிப்படுத்தலாம். ஆனா, இந்த திணிப்பு ஏன்?! கேக் சாப்பிட்ட ஏசுவுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்?!
கோலத்தை பார்த்துட்டு மாடு தற்கொலை பண்ணிக்கக்கூடாதுன்னுதான் நான் மாடு கோலம் போடல. 

கரும்பினால் ஆன மாட்டுவண்டி//
அன்னாசி பழத்தால் ஆன பொங்கப்பானை..


கரும்பினால் ஆன பொங்கல்பானை... இதுலாம் ட்விட்டர், பேஸ்புக்ல சுட்டது..

நன்றியுடன்,
ராஜி

Friday, January 05, 2018

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்....

 விசேச நாட்களில் நிலைவாசல் தொடங்கி எல்லா வாசலுக்கும் மஞ்சள் பூசி குங்குமம் வைப்பாங்க. அது எதுக்குன்னா, கரையான் மாதிரியான பூச்சிகளால் வாசக்கால், கதவுலாம் அரிச்சுடக்கூடாதுன்னு. பெரியம்மை, சின்னம்மை மாதிரியான அம்மை கண்டவங்களை வேப்பிலை படுக்கையில் படுக்க வைப்பாங்க. இது எதுக்குன்னா, வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. அம்மை நோய் கண்டபோது கூழ் காய்ச்சு ஊத்துவாங்க. அம்மை நோய் வர முதல் காரணம் உடல் சூடு. அதை தணிக்கதான் கூழ், மோர், சின்ன வெங்காயம்ன்னு சாமிக்கு படைச்சு குடிக்க கொடுப்பாங்க. அதுமாதிரி, நம் முன்னோர்கள் அன்றாடம் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிச்ச ஒவ்வொரு விசயத்துக்கு பின்னும்   ஒவ்வொரு அர்த்தம் இருக்கு.  சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மற(றை)ந்துப் போயின.   மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும் நம்ம பொண்ணுங்க இன்னும் ஒதுக்கல. அறிவியல் காரணம் புரிஞ்சு செய்யுறாங்களோ இல்லியோ! ஆனா, வீடு அழகா இருக்கவாவது விதம் விதமா போடுதுங்க. ஆனா புள்ளி வச்சு கோலம் போடாம ரங்கோலின்னு கிறுக்கி வைக்குதுங்க.  எது எப்பையோ கோலம் போடுதுங்களா?! அதுவரைக்கும் சந்தோசம்.  கோலம் போடுறதால பலவித நன்மைகள் உண்டாகும். அதேநேரத்தில் கோலம் சிலரது வாழ்க்கையையே புரட்டிப்போடும். கோலத்தால் தீமையா?! எப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. கடைசில சொல்றேன்.


எல்லா நாட்களிலும்  எல்லா கோலத்தையும் போட்டுடக்கூடாது. பிறந்த குழந்தையை தொட்டில்ல போடுற அன்னிக்கும், முதன்முதல்ல வீட்டுக்கு கூப்பிட்டு வரும்போதும் தொட்டில் கோலம் போடனும்.  சுபிட்சத்தை வரவைக்க ஹிர்தய கோலம், கல்யாணம் செய்து வரும் புத்தம்புது தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம்ன்னு.. வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம்ன்னு விதம் விதமா இருக்கு. ஆனா, இறப்பு நடந்த வீடு, திவசம், அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் இடக்கூடாது.


கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை. தெய்வீக சக்தியை வரவைக்கும் யந்திரமுமாகும். யந்திரத்துக்கு அடிப்படை உருவம் முக்கோணம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அதுதான் யந்திரமாகும். அதுமாதிரி சரியான அளவில் உருவங்கள் ஒன்றிணையும் கோலமும் யந்திரத்துக்கு ஒப்பானது.   அதனாலேதான், கோலங்கள் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது. மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதும் அவசியம்ன்னு நம் முன்னோர்கள் சொல்வர். அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழுமாம். மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போது பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதுலாம் கோலம் கலையாமல் இருக்க உதவுது.  அதேநேரம், சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவச் செய்யுது. இதனால், உடலில் ரத்த ஓட்டம் சீராகுது. மேலும் அந்நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாம ஓரளவுக்கு சுத்தமான காத்து சுவாசிக்க கிடைக்கின்றது. இது நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பா வச்சிருக்க உதவுது.  குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுது.
புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுது. நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகும். மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. இதனாலதான் சாகும்வரைகூட சில அந்தக் காலத்து பாட்டிங்க கன்ணாடி போட்டதில்ல.   
அரிசிமாவுக்கொண்டு கோலம் போடுவது எறும்பு மாதிரியான சிறு பூச்சிகளுக்கும், குருவி மாதிரியான சிறு பறவைகளுக்கும் உணவாகுது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.
கோலம் போடுறதால ஐந்து குண நலன் நமக்கு கைவரும். அவை..

நேர மேலாண்மை..
என்னதான் திட்டமிட்டிருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு குதிரை கொம்புதான். ஆனா, ஏதோ ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் எழுந்திருக்க தவறமாட்டோம். அந்தக் காரணம் கோலமாக அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கோலத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனத் திட்டமிடும் வழக்கம் நம் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும்.
2. படைப்பாற்றல்
கோலம் போடுறது என்ன கவிதையா இல்ல கதை எழுதுறதா இதுல படைப்பாற்றல் வெளிப்படன்னு   நினைக்கலாம். உண்மையில் அவற்றைப் போலவே ஒரு கலைதான் கோலம் போடுவதும். கோலப் புத்தகம் பார்த்து போடுவது, இணையதளங்கள் உதவியோடு சில நாட்களையே தள்ள முடியும். ஒரு கட்டத்தில் நாமே புதிதான கோலம் போட்டால் என்ன யோசனை வரும். அப்போது இதுவரை நாம் போட்டிருக்காத கோலம் என யோசிக்க தொடங்கும்போது, உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளியையும் எழுப்பி விடுகிறீர்கள்.

3. சிக்கலைத் தீர்க்கும் பொறுமை ....
 32 புள்ளிகள் வைத்து, அதனையொட்டி நேர்புள்ளி, ஊடு புள்ளிகள் வைத்து முடிப்பதற்குள்ளேயே முக்கால் மணி நேரமாகியிருக்கும். அதற்கு அடுத்து, கவனமாக பூக்கோலம் அல்லது சிக்கு கோலமாக போடுவோம். அதற்கு முக்கால் மணிநேரம். இந்த ஒன்றரை மணிநேரத்தில் கவனமும் நிதானமும் இருந்தால் மட்டுமே உங்கள் மனதில் இருக்கும் கோலம் வாசலுக்கு வரும். இதுவே தினசரி செய்யும்போது அந்த கவனமும் நிதானமும் உங்களின் இயல்பு குணமாக மாறிவிடும். இது இரண்டும் இருந்தாலே எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்து விடலாம்.
முடிவெடுக்கும் திறன்...
இன்று இந்த பூக்கோலமா?! சிக்கு கோலமா என்ற முடிவு எடுக்கிற திறனைச் சொல்லலை. சிறப்புத் தினங்களுக்கு ரங்கோலி ஸ்டைலில் புதிதாக ஏதேனும் முடிவு செய்வோம். அதற்கு எந்த டிஸைன் எல்லோருக்கும் பிடிக்கனும், என்ன கலர் கொடுக்கலாம்.. அது பொருத்தமா இருக்குமான்னு முடிவு செய்யுறோமில்லையா அதைதான் சொல்றேன்.  இது உங்களுக்கு ரசனையை மட்டும் கொடுக்கலை. சரியான இடத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் திறனையும் கொடுக்கும். அது நீங்கள் ஜவுளி கடையில் புடவை தேர்வு செய்வதிலிருந்து அலுவலகத்தில் எடுக்கும் முடிவு வரை நீளும்.
5. போட்டி மனப்பான்மை
'நான் யாருக்கும் போட்டி இல்லை.. எனக்கு யாரும் போட்டி இல்லன்னு சினிமா டயலாக்குலாம் சொல்லாம நான் எந்த போட்டியை சொல்றேன்னு புரிஞ்சுக்கனும். ஆரோக்கியமான போட்டி சொல்றேன். 
நாம தினமும் கோலம் போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளிலும் கோலம் போட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு நல்ல பழக்கத்தை அவர்களும் தொடங்குவது நல்லதுதான். அவர்களைவிட சிறப்பான கோலம் போடும் மனநிலையை உங்களுக்கு தரும். இது, வேலை செய்யும் இடங்களிலும் பிரதிபலிக்கும். உங்களுக்கு பதவி உயர்வையும் பெற்றுத் தரும்
கோலம் தமிழ்நாட்டில்தான் கோலம் ஃபேமஸ், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இலங்கைலலாம் கோலமாவு கொண்டு கோலம் போடுவாங்க. கேரளாவில் பூக்களாலும், வட இந்தியாவில் கலர்பொடியைக் கொண்டும் கோலம் போடுவாங்க. இப்ப காலமாற்றத்தில் எல்லா இடத்திலும் எல்லா கோலமும் போடுறாங்க. முதன் முதலில் கோலப்புத்தகம் 1884ஆம் ஆண்டில் வெளிவந்தது.  
கோலமிடுவது தெய்வீக சக்தியையும், மங்கலத்தையும் நம் வீட்டுக்கு வரவைக்கும். அதனால, அந்த கோலத்தை போடுறதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளையில் போடனும். புது தண்ணி கொண்டு வாசல் தெளிக்கனும். முன்வாசலில் தெளித்த நீரில் மிச்சம் கொண்டு பின்வாசலிலும் தெளிக்கனும். கோலம் போட்டு முடிக்கும்போது தெற்கு பார்த்த மாதிரி முடியக்கூடாது. கோலம் போட்டு முடியும் திசையை வைத்து கூட அன்றைய பொழுது எப்படி போகும்ன்னு சொல்வாங்க.  கோலத்தில் செம்மண் காவி இழுப்பது மும்மூர்த்திகளை குறிக்குது. கோலத்தில் பூசணி, செம்பருத்தி பூ வைப்பது செல்வச்செழிப்பை உண்டாக்கும். செருப்பணிந்துக்கொண்டு கோலமிடக்கூடாது. ஆட்காட்டி விரலை நீக்கி பெருவிரல் நடுவிரல், மோதிரவிரல் கொண்டே கோலமிடனும்.  
ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை அல்லது சூரியன் கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம், செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் , வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம்,  சனிக்கிழமை பவளமல்லி கோலம், பவுர்ணமி அன்னிக்கு தாமரைப்பூ கோலம்,   வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை வீட்டுக்குள் விடாது. அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது. இடது கையால் கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்னுதான் கோலம் போடனும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போடனும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பத்த வைக்கனும். ஒருவேளை சமைக்குறது கணவனா இருந்தா என்ன பண்ணுறதுன்னு கேட்டா எங்கிட்ட நோ ஆன்சர். 

தமிழ் எழுத்துகள் தோன்றுவதற்கு முன்பே கோலமிடும் பழக்கம் உண்டாகிட்டுதாம். ஆரம்பத்தில் வெறும் கோடுகளைக்கொண்டுதான் கோலம் இருந்ததாம். கோலமிடப் பழகியபின் பூ, காய், கனி, பறவைன்னு உருவங்கள் வர ஆரம்பிச்சதாம். போருக்கு சென்று வந்த அரசர்களை ஆரத்தி கொண்டு வரவேற்று, அந்த ஆரத்தியை கோலத்தின் நடுவில் கொட்டியதாக சான்றுகள் உண்டு.  இனியும் நம்ம வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போடலாம். இரும்மா ராஜி! பொசுக்குன்னு ஓடாத. கோலம் வாழ்க்கையை புரட்டிப்போடனும்ன்னு சொன்னியே! அது எப்படின்னு சொல்லிட்டு போ, எங்க மண்டைய காய வைக்காதன்னு கேக்குறவங்களுக்கு...
அதிகாலையில் குளிச்சு முடிச்சு ஃப்ரெஷ்சா அழகா வரும் பெண்களை சைட்டடிக்க ஆண்கள் வருவாங்க. அவங்க அழகுல, சேட்டைல பொண்ணுங்க  மயங்கி  லவ்வாகி, வீட்டுக்கு தெரிஞ்சு வெட்டுக்குத்துன்னு போகுதுல்ல! அதைதான் சொன்னேன்.  அதனால, வெளில போனோமா! கோலம் போட்டமான்னு குனிஞ்ச தலை நிமிராம வீட்டுக்குள் வந்திடனும்..

 நன்றியுடன்,
ராஜி. 

Tuesday, December 26, 2017

திருப்பாவையின் முதல் எட்டு பாடல்களும் அதன் விளக்கமும்...

மார்கழி மாசம்ன்னாலே பஜனையும், கோலமும்தான் முக்கியம். அத்தோடு, திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும் முக்கியம். முப்பது பாடல்களை போட்டா பதிவு நீளும். அதனால ஒரு வாரத்துக்குண்டான திருப்பாவையும், அந்தந்த நாளில் நான் போட்ட கோலமும் வார இறுதியில் பதிவாக்கப்படும்.

மார்கழி 1ம் நாள்...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


முழு நிலவு நிறைந்த மார்கழி மாதத்தில் செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியின் அழகிய சிறுமிகளே ! அழகிய அணிகலன்களை அணிந்த அணங்குகளே ! எழுந்திருங்கள்.
இன்று முதல் நாம் அதிகாலையில் நீராடப் புறப்படுவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி ஆயர்பாடியில் வசிக்கும் தன்தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் கோதை நாச்சியார் .

மார்கழி 2ம் நாள்...

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்
இந்த உலகத்தில் வாழ்வதால் பாவை நோன்பு நோற்கப்பெரும் வாய்ப்பினை உடைய நாம் அனைவரும், பாவை நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் கேட்பீர்கள்...
பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள பரமனின் திருநாமத்தை எப்போதும் பாட வேண்டும், நெய் பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் விடியலில் நீராடவேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக்கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும் பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இட வேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

மார்கழி 3ம் நாள்...
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்.


விளக்கம்...
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி, நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.

மார்கழி 4ம் நாள்....


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

மார்கழி 5 ம் நாள்...


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

மாயச்செயல்கள் செய்பவனை, வடமதுரையின் மைந்தனை, தூய நீர்கொண்ட யமுனையின் கரையில் வாழ்பவனை, ஆயர் குலத்தின் மணிவிளக்கை, தன் தாயின் பெருமையை உலகறியச் செய்த தாமோதரனை, தூயவர்களாக வந்து நாம் மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், செய்த பிழைகளெல்லாம் தீயினில் எரியும் தூசென ஒழியும். ஆகையால் பாடுங்கள்

மார்கழி 6ம் நாள்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

மார்கழி 7ம் நாள்...
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்"
கீசு கீசு என்று ஆனைச் சாத்தன் (செம்போத்துப் ) பறவை தங்களுக்குள்ளே பேசும் பேச்சரவம் கேட்கவில்லையா பேய்ப் பெண்ணே? பகலாகியும் இன்னும் உறங்குகிறாயே? காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர்குலத்துப் பெண்கள் மத்தினால் ஓசையோடு தயிர் கடையும் அரவம் கேட்கலையோ? நீ இவர்களின் தலைவியான பெண்பிள்ளை ஆயிற்றே, நாராயணன் மூர்த்தி கேசவனைப் நாங்கள் பாடக் கேட்டும் நீ படுத்திருக்கிறாயே, ஒளியுடையவளே கதவைத் திறவாய்.. என்பாவாய்.

மார்கழி 8ம் நாள்...


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.
 கிழக்குத் திசையில்  வானம் வெளுத்துள்ளது. எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின. கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம். குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்.  குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்,  மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.
அடுத்த எட்டு பாடல்களை அடுத்த ஞாயிறு அன்னிக்கு பதிவு வரும்
ராஜி.