Showing posts with label சீர். Show all posts
Showing posts with label சீர். Show all posts

Wednesday, March 27, 2013

மறந்துப்போன காதலனுக்கு கடிதம்

     உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி எழுதி , யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடிதத்தை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ள என்றா? அல்லது பாசத்துடன் என்றா? அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்.., 
    என்னை எப்படியடா மறந்தாய்? உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டு ஆண்டுகளா என்ன? நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.
       எனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடியெடுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது?
 
உன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ? என் மீதான உன் வேட்கை அதிகமானதா? பிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்து இருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின் விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும்!!??

  மீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,
அதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரிவோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,
   நீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் என் பிரிவை எண்ணி உன் கண்ணில் கண்ணீர் அரும்பியதே மற‌ந்துவிட்டாயா? பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா? 
  பின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்ற பின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,
 
பின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்!!??
   ஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்ப‌துகிலோ வெள்ளி, "புதுவண்டி" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்!!
 
     உன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் "ஓட்டி"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை "ஓட்டி" பழகியிருக்கிறேன் என்றாய்.., " 
   மெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,நீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் பொறாமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன் .நீ என் நிலை பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி....,
 
    "சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா? ,இதற்கு நீ என்னை அழித்தே  போட்டிருக்கலாம். 
இப்படிக்கு,
உன் பிரிவை எண்ணி வாடும்
உன் மிதிவண்டி
           

   சே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்.., 
    காலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந்த ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்கு அவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.
 
  அவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.
மருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு "இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றது நினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .
 
காலையில் முதல் வேலையா எழுந்து "ஷெட்டுல இருக்குற தன்னோட பழைய மிதிவண்டியை போய் பார்க்கனும்" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போனான்.



Monday, January 07, 2013

திருமணமாம்.., திருமணமாம்...,


                                              
ஒரு சில கல்யாணத்துல போனா, பொன்னூஞ்சல் ஆடுறது, பானைக்குள்ள மோதிரம் போட்டு எடுப்பது, அப்பளம் உடைக்குறது.., தாய் மாமன்கள் சுமக்க மால மாறி கொள்வது.., அப்படி வரும்போது சிக்காம இருக்க போக்கு காட்டுறதுன்னு சொந்தங்கள், நட்புகள், மணமக்கள்ன்னு சந்தோஷப்பட நிறைய விசயங்கள் இருக்கும்.

ஆனா, எங்க சமுதாய  திருமண சடங்குகளில்..,   எல்லாரும் ரசிக்கும்  இந்த சின்ன சின்ன  விளையாட்டுக்கள்  இல்லாம வெறும் .சடங்குகள் மட்டுமே இருக்கும். அது எனக்கு பெரிய குறையாவே இருக்கும்.

இந்த குறையை தீர்க்கத்தானோ என்னவோ.., திருமண சடங்குகள் முடிந்து ”மறுவீடு”ன்னு ஒரு நிகழ்ச்சி இருக்கும். முன்னலாம் திருமணம் முடிஞ்ச மூன்றாம் நாள், ஐந்தாம் நாள்ன்னு வச்ச இச்சடங்கு இப்போ, பசங்களுக்கு ஸ்கூல், பெரியவங்களுக்கு ஆஃபீஸ், போக்குவரத்துன்னு எல்லாத்தையும் மனசுல வெச்சு.., கல்யாணம் முடிஞ்ச மதியமே மண்டபத்துலயே வெச்சிடுறாங்க.

                                       
(சின்ன கவுண்டர் படத்துல வர்ற முத்துமணி மாலை.., பாட்டை மணமக்களை பாட சொன்னாங்க. என் நாத்தனார் வெக்கப்பட்டு பாடலை. ஆனா, மாப்பிள்ளை செமையா பாடி அசத்திட்டார்...,)

கல்யாண பொண்ணுக்கு ஸ்பூன் முதற்கொண்டு, ஃப்ரிட்ஜ், பீரோ, கட்டில், பித்தளை செம்பு சாமான்கள், வெள்ளி பொருட்கள்ன்னு அவங்கவங்க வசதிக்கு தகுந்த மாதிரி சீர் வரிசை வாங்குவாங்க. அப்படி வாங்குபோதே “அரை வரிசை”க்குன்னு தவலையோ, ஒரு டப்பாவோ, இல்ல ஒரு பக்கெட்டோ தங்கள் வசதிக்கு ஏத்த மாதிரி வாங்குவாங்க.

அது எதுக்குன்னா, தங்கள் வீட்டில் பிறந்து, கல்யாணம் கட்டிக்குடுத்து இருக்கும் கல்யாணப் பெண்ணின் மூத்த பெண்பிள்ளைகளுக்காக..,  அது எத்தனை தலைமுறை பெண் இருந்தாலும்.., கணவனையே இழந்திருந்தாலும்..,  அவங்களுக்கு மரியாதை செஞ்சுட்டுதான் கல்யாண பெண்ணுக்கு சீர் வரிசை கொடுப்பாங்க.

ஒரு பாத்திரத்துல, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழம்,  ஸ்வீட், காரம், பொருள்விளங்கா உருண்டை, அதிரசம், காரம்ன்னு போட்டு சீனியாரிட்டி படி குடுத்துட்டே வருவாங்க.  அந்த சீரையும் கல்யாண பொண்ணோட சகோதரகள்தான்  கால்ல விழுந்து கொடுக்கனும்ங்குறது சம்பிரதாயம். அப்போ சீர் கம்மியாருக்கு நான் வாங்க மாட்டேன்ன்னு அத்தை, அக்காக்கள்லாம் செல்லமா சண்டை போடுவாங்க(சில வீட்டில் நிஜமாவே நடக்குங்குறது வேற விஷயம்). அவங்களை சமாதான் படுத்துற மாதிரி சும்மாவே அலம்பல் பண்ணுவாங்க பசங்க.

போன மாசம் எங்க நாத்தனாருக்கு கல்யாணம். அப்போ எடுத்த போட்டோக்கள் சில...,


                                 
கல்யாண பொண்ணோட அத்தைக்கு ”அரைவரிசை சீர்” என் கொழுந்தனார் செய்யுறார்.
                                   
(கல்யாண பொண்ணோட அக்காக்கு மரியாதை.., உடன் பிறந்த சகோதரி இல்ல.., பெரியப்பா மகளுக்கும்கூட சீர்...,)

                                    
(தன் சித்த்தப்பா மகளுக்கு சீர் செய்யும்போது...,)



(கல்யாண பெண்ணுக்கு சீர் செய்யும்போது...,)

இதுதான் எங்க குடும்பம். என் மாமனாருக்கு சகோதரர்கள் 4 பேர். அவங்க பிள்ளைங்க, பொண்ணுங்க அவங்க எல்லாரோட பேரன் பேத்திகள்ன்னு இருக்குற இதுப்போல குரூப் ஃபோட்டோவை என் கல்யாணத்திலிருந்து இன்று வரை மிஸ் பண்ணதில்ல..., பெரிய ஃபேமிலிதான்னு கண்ணு வைக்காதீங்கப்பா. இதுலயே நம்ம தூயா மிஸ்ஸிங்க். என் கொழுந்தனார் மகன், இன்னும் ரெண்டு கொழுந்தனார், அவங்க மனைவிகள்ன்னு சிலர் மிஸ்ஸிங்.


எங்களுக்குள்ளயும், கோவம், சண்டைன்னு இருக்கும்.. ஆனா, இதுப்போல கல்யாணம், காதுகுத்து போன்ற வீட்டு விசேஷங்களில் அதெல்லாம் காணாம போய் எல்லாரும் செம கலகலப்பா இருப்போம். மச்சினன் மனைவிக்கு தலை பின்னிவிடும் ஓரகத்திகள், தம்பி மனைவிக்கு என்ன வேணும்ன்னு கேட்டு ஓடிபோய் கொண்டு வந்து தரும் கொழுந்தனார்கள், மருமகளை உக்கார வெச்சு பரிமாறும் மாமனார்கள்ன்னு எங்க வீட்டு விசேஷம்லாம் செமையா களை கட்டும். அதனாலயே நான் எந்த விசேசத்தையும் மிஸ் பண்றதில்லை. நான் என் புகுந்த வீட்டை ரொம்ப விரும்புறேன். இனி ஒரு முறை பெண்ணாய் பிறந்தாலும் இதே வீட்டில் வாழ்க்கப்படனும்ன்னு வேண்டிக்குறேன்.