வெள்ளரி இனத்தை சார்ந்த படர்கொடியாகும் இந்த பீர்க்கங்காய். இது மிக வெப்பமான பகுதிகளில் வளரக்கூடிய தன்மை கொண்டதாகும்.. பூ, இலை, காய்லாம் சமையலுக்கு உதவுது. இதோட நார் உடல் தேய்த்து குளிக்கவும், கைவினைப்பொருட்கள் செய்யவும் உதவுது. ஆசியா, ஆப்பிரிக்காவில் அதிகளவு விளையுது. Ribbed gourdன்னு ஆங்கிலத்துலயும், கடுகோஷ்டகி, திக்த கோஷ்டகி, ஷிரேபல்லி, ஜிங்கதோரீ, தோனா, பீர்க்கை, பீர்க்கங்காய்ன்னு இந்தியா முழுக்க பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுது.
ஆந்திராவில் பீர்க்கங்காயில் அரைக்குற காரசார துவையல், கேரளாவில் பருப்பும் பீர்க்கங்காயும் சேர்த்துச் செய்யுற கூட்டு, கர்நாடகாவில் பீர்க்கங்காய் பஜ்ஜி, மகாராஷ்டிராவில் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்த்துச் செய்கிற பீர்க்கங்காய் ஃப்ரைன்னு இந்தியா முழுக்க மட்டுமில்ல வியட்நாமில் சூப்பிலும், சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஸ்பெயின்லயும்கூட தினசரி சமையலில் பீர்க்கங்காயின் ஆதிக்கம் அதிகம்.
பீர்க்கங்காயில் உள்ள சத்துகள்....
உடல் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோவின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. செல்லுலோஸ் , நீர்ச்சத்து, பெப்டைட், ஆல்கலாயிட் ஆகிய இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுது. அதிகளவு பீட்டாகரோட்டின் இருக்கு. இத்தனை நல்ல சத்துகள் இருந்தாலும் குறைந்தளவு கலோரியை கொண்டுள்ளது.
பீர்க்கங்காயின் பயன்பாடு..
மலசிக்கலை போக்குது, மூலநோயை முற்றாக நீக்குது. ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. பார்வைக்கோளாறுகளை நீக்கி பார்வைத்திறனை அதிகரிக்க செய்யுது. ரத்தத்தை சுத்திகரிக்க பீர்க்கங்காய் உதவுறதால கல்லீரலின் ஆரோக்கியம் காக்கப்படுது. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலை சரிசெய்ய பீர்க்கங்காய் பெரிதும் உதவுது. மஞ்சள் காமாலைக்கு பீர்க்கங்காய் சாறு கொடுக்கப்படுது. இன்ஃபெக்ஷன் வராம தடுக்குது. எதிர்ப்பு சக்தியை அதிகளவு உண்டாக்குது... பீர்க்கங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளன்னு இருக்கும். வயிற்றில் அமிலச்சுரப்பை தடுத்து புண்கள் வராம தடுக்குது. சிறுநீர் கழிக்கும்போது உருவாகும் எரிச்சலை கட்டுப்படுத்துது. இதில் அதிகளவு நீர்சத்தும் குறைந்தளவு கொழுப்புசத்தும் , கலோரியும் இருக்குறதால எடையை குறைக்க உதவுது. பாதங்களை பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் பித்த வெடிப்பு நீங்கி பாதம் மென்மையடையும். பீர்க்கை நார்க்கொண்டு பூச்சாடி, போட்டோ ஃப்ரேம், கீச்செயின்னு அழகிய கைவினைப்பொருட்கள் செய்யவும் பயன்படுது.
பீர்க்கங்காயின் சதைப்பற்றை அரைத்து காயங்களின் மேல் பற்றாக போட்டால் ரத்தக்கசிவு நிக்கும். பீர்க்கங்காய் துண்டுகளோடு ரெண்டு டம்ப்ளர் நீரூற்றி கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து காலை, மாலைன்னு குடித்து வந்தால் வயிற்று பூச்சிகள் வெளியாகும். பீர்க்கங்காய் சாறுடன் போதிய அளவு வெல்லம் அல்லது தேன் கலந்து குடித்துவர ஆஸ்துமா நோய் நீங்கும். பீர்க்கங்காயின் இலையோடு பூண்டு சேர்த்து பற்றாய் போட்டுவர தொழுநோய் புண் ஆறும். பீர்க்கங்காய் துண்டுகளை வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சோறு வடித்த தண்ணியோடு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்துவர இளநரை சரியாவதோடு தலைமுடி பளப்பளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். பீர்க்கைக்கொடியின் வேரை காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என நீரில் கலக்கி குடித்தால் சிறுநீரகக்கல் கரைஞ்சு வெளியேறும். பீர்க்கை இலையினை அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட சீதப்பேதியும், வயிற்றுக்கடுப்பும் நீங்கும். இலையின் சாறை நாள்பட்ட புண்ணில் பூசிவர குணமாகும்
வெளிச்சத்தின் கீழ் இருட்டு இருக்குற மாதிரி அதிகளவு நன்மைகள் கொண்ட பீர்க்கங்காய் பித்தத்தையும், சீதளத்தையும் உண்டாக்கி, வாத கபத்தை தாறுமாறாய் எகிறும். அதனால, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட்டா போதும். இட்லி தோசைக்கு சாம்பார், கூட்டு, துவையல், சாதத்துக்கான சாம்பார்ன்னு விதம் விதமாய் செய்யலாம்..
இனி பீர்க்கங்காய் கூட்டு செய்யும் முறை...
பீர்க்கங்காய்,
பாசிப்பயறு,
கடலைப்பருப்பு,
வெங்காயம்,
தக்காளி,
பூண்டு,
காய்ந்த மிளகாய்,
மிளகாய் தூள்,
உப்பு,
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை கொத்தமல்லி..
தேங்காய் துருவல்.
பீர்க்கங்காயை தோல் நீக்கி கழுவி சின்ன சின்ன துண்டுகளாக்கி வச்சுக்கோங்க.. பீர்க்கங்காய் தோலை தூக்கி போட்டுடதீங்க.. அதை வச்சு துவையல் செய்யலாம்.. கடலைப்பருப்பு பாசிப்பருப்பை வேக வச்சுக்கோங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்க....
நசுக்கின பூண்டு சேருங்க...
.
பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்குங்க....
வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து நல்லா வேகவிடுங்க...
பீர்க்கங்காய் துண்டு சேர்த்து வதக்குங்க...
மிளகாய் தூள் சேர்க்கனும்...
மஞ்சப்பொடி சேர்த்து வதக்குங்க.....
காய் நல்லா வெந்ததும், வேக வெச்ச பருப்பு சேர்த்து தண்ணி சுண்டுற வரை கொதிக்க விடுங்க.
கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்தால் சுவையான கூட்டு ரெடி.என் அம்மா லேசா கரம் மசாலா தூள் சேர்ப்பாங்க. பசங்களுக்கு அந்த காம்பினேசன் பிடிக்காததால நான் சேர்க்கலை. தேவைப்பட்டா சேர்த்துக்கோங்க.
சூடான சாதத்துல நெய் விட்டு இந்த கூட்டு சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டா செமயா இருக்கும். அடிக்கடி பீர்க்கங்காய் சேர்த்துக்கிட்டா நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இங்க இருக்கு...
நன்றியுடன்,
ராஜி.



