Friday, June 20, 2014

திருக்கடையூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

    இருபது ப்ளஸ் வயதில்  திருமணம் அமைய பெற்றோர், உற்றோர், பதவி,  அதிர்ஷ்டம், பணம்ன்னு  ஆயிரம் காரணிகள் இருக்கலாம். ஆனா, அதே துணையுடன் அறுபது, எழுபது, என்பது, நூறு வயதில் நடைபெறும் திருமணத்திற்கு கடவுள் அருள் மட்டும்தான் காரணமாய் இருக்கும். அதனால்தான், அப்படிப்பட்ட திருமணங்களை சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனா, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்,திருக்கடையூர்லதான் நடத்துறாங்க. ஆனா, வீட்டில் செய்வதுதான் இன்னும் சிறப்புன்னு சொல்றாங்க. 


சமீபத்தில் என் அப்பா, அம்மா அறுபதாம் திருமணத்துக்கு போனபோதுதான் அந்தத் திருத்தலம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். 

மயிலாடுதுறை - நாகப்பட்டினம் சாலையில் உள்ளது திருக்கடவூர் என்கிற திருக்கடையூர். கடம்ன்னா பானை, கலம்! கடை=கடைதல் என இரண்டு பொருள் சொல்வாங்க. ரெண்டுமே சரிதான்!பாற்கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்! நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எது?!இறைவன்தான் அந்தக் கொள்கலம். நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை இன்பம் தேவைப்படும்போது மட்டும் அந்தக் கொள்கலன் நமக்கு தேவைப்படுகிறது. அவரவர் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்றவாறு அமுதத்தை வழங்குபவர்தான் சிவப்பெருமான். அப்பெருமானேதன்வந்திரி பெருமான் மற்றும் மோகினி கைகளில்  கொள்கலமாய் அமிர்தக்கடமாய் வந்தான்.  அந்தக் கொள்கலமே பின்னர் லிங்கமாய் மாறியது. அதனால்தான் அவனுக்கு அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் வந்தது.   

திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம் செய்துக்கொள்ள காரணம் இங்குதான் மார்க்கண்டேயனுக்காக சிவப்பெருமான் எமனை வென்றது.  அதனால், இது சிரஞ்சீவி தலம். என்றும் சிரஞ்சீவி, சுமங்கலியாய் தம்பதிகள் இருக்கனும்ன்னுதான் இங்கு வந்து செஞ்சுக்குறாங்க.  அறுபதாம் திருமணம் மட்டும்தான் இங்க செய்துக்கனும்ன்னு இல்ல. 

கணவரின் 59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி
60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி
79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்! ஆகியவற்றை இங்கு செய்துக்கொள்ளலாம்.

இத்திருத்தலத்தில் இரண்டு ஈஸ்வரன்கள், ஈஸ்வரிகள். ஒன்று, அமிர்தகலசமாய் வந்த அமிர்தகடேஸ்வரர்-அபிராமி.  மற்றொருவர் எமனை  வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை. அண்ட சராசரமே அஞ்சி நடுங்கும் எமனைக் கொல்லுமிடத்தில்  அம்பிகை எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!! 

மிருகண்டு முனிவர் ஒரு சிறந்த சிவ பக்தர். குழந்தைச் செல்வம் இல்லாது வருந்தி வாழ்ந்து வந்தார். அவரும், அவரது மனைவி மருத்துவமதியும் சிவ பெருமானை நோக்கி, குழந்தை வரம் பெற கடும் தவம் செய்தனர். தவத்தை மெச்சிய சிவ பெருமான் அவர்கள் முன் தோன்றி, " முனிவரே யாம் உமக்கு குழந்தை வரம் அருள்கிறோம். மந்த புத்தி கொண்ட 100 ஆயுள் வாழும் குழந்தை வேண்டுமா? அல்லது 16 அகவைகளே வாழப் போகும் ஞானக் குழந்தை வேண்டுமா?" எனக் கேட்டார். முனிவர் ஞானக் குழந்தைதான் வேண்டும் எனக் கேட்க, மருத்துவமதி ஆண் மகவை ஈன்றெடுத்தாள். மார்கண்டேயர் எனப் பெயர் கொண்டு வளர்ந்தது அக் குழந்தை. குழந்தையின் அறிவும், ஆற்றலும் பெற்றோரை ஆனந்தப்படுத்தியது. அதே சமயம் கவலையும் கொண்டனர். உண்மையை மார்கண்டேயரிடம் கூறினர். சற்றும் கலங்காத மார்கண்டேயரோ பெற்றோரிடம் தான் வாழப் போகும் 16 வயது வரை ஒவ்வொரு தலமாக சென்று சிவனை வணங்குவோம் என்று கூறி 16 வது வயதில் 108 வது தலமாக திருக்கடவூரை வந்தடைந்தனர்.16 வயது முடியும் நாள் வந்தது. மார்கண்டேயர் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு அமிர்தகடேஸ்வரரை தரிசித்துக் கொண்டிருந்தார். யமதர்மன் அங்கு வந்தான். பயந்து போன மார்கண்டேயர் அமிர்தகடேஸ்வரரை கட்டி அணைத்தார். யமன் பாசக் கயிற்றை விசினான். கயிறு லிங்கத்தின் மீது வீழ்ந்தது. லிங்கம் இரண்டாக பிளந்து கால சம்ஹார மூர்த்தியாக தோன்றினார் சிவ பெருமான். யமனை தனது இடது காலால் எட்டி உதைத்தார். தன் பக்தனுக்கு " என்றும் பதினாறு" என்ற சிரஞ்சீவி வரம் அருளி மறைந்தார். இந்த கால சம்கார மூர்த்தி மகா மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். பின்னர் பூமி தேவியின் வேண்டுதளுக்கிணங்க யமனை அனுக்கிரகித்தார்.

மொத்தம் ஐந்து பிரகாரங்களை கொண்டு 11 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து பெரும் கோவிலாக காட்சி தருகின்றது இத் திருத்தலம்.  கோவிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகளை கொண்டுள்ளது. உட் கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டுள்ளது. இத்தலத்தில் நவக்கிரக சந்நதி கிடையாது.  


ஒரு திருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு தன் தேவியர் இருவருடன் காட்சி தரும் இத்தல முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார். சோம வாரங்களில் சுவாமிக்கும், பௌர்ணமி, அமாவாசை திதிகளில் அம்பாளுக்கும், சனிக்கிழமைகளில் காலசம்கார மூர்த்திக்கும் விஷேச பூஜைகள் நடைபெறுகிறது. அம்பாள் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலம் வந்து அமிர்தகடேஸ்வரரையும், அம்பாளையும், கால சம்ஹார மூர்த்தியையும் வழிபட எம பயம் நீங்கி நல் ஆயுள் பெறலாம். ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தையும், மந்திரத்தையும் இங்கு ஜெபிப்பது மிகச் சிறந்த பலன்களை தரும். பிறந்த நாள் அல்லது நட்சத்திரத்தில் இங்கு வந்து ஆயுஷ் ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.

தேவாரம் பாடிய மூவருமே பாடிய 44 தலங்களுல் இதுவும் ஒன்று. திருநாவுக்கரசரால் மூன்று பதிகமும், சம்பந்தர் மற்றும் சுந்தரரால் தலா ஒரு பதிகமும் பாடப்பெற்றது. இத்தலம். அபிராமி பட்டரால் அபிராமி அந்தாதி இயற்றப்பட்டது இத்தலத்தில்தான். சிவ பெருமான் வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் அட்ட வீரட்டான தலங்கள் என்றழைக்கபடுகின்றன. திருக்கடையூர் அவற்றில் ஒன்று. அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலிய நாயனாரும் முக்தி அடைந்த திருத்தலம் இது. 14 சைவ சிந்தாந்த சாஸ்திரங்களில் இரண்டாவதாக போற்றப்படும் திருக்களிற்றுப்படியாரை இயற்றிய உய்ய வந்த தேவ நாயனார் அவதரித்தது இங்குதான். அகஸ்தியரும், துர்க்கையும், வாசுகியும் வழிபட்டது இத்திருத்தலம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும்.

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் சக்தி நெறியும், யோக சித்தியும் பயின்று அதன் விளைவாக சதா சர்வ காலமும் அம்பாளை நினைத்து அவளை துதித்த வண்ணம் பித்தர் போல் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அச்சமயம் தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் கோயிலுக்கு வந்தார். சித்தர் போல் அம்ர்ந்திருக்கும் பட்டரை கண்டு அவரை பற்றி கேட்க, அங்கிருந்தவர்கள் பட்டரை பித்தர் என்று கூறினர். அம்பாளை தரிசித்து முடித்து செல்லும் பொழுது பட்டரிடம் சென்று மன்னர், "இன்று என்ன திதி?" எனக் கேட்க, அம்பாளின் ஞாபகத்தில் இருந்த பட்டர் கேள்வியை சரியாக காதில் வாங்கி கொள்ளாமல் "இன்று பௌர்ணமி" என்றார். ஆனால் அன்றோ அமாவாசை. அதிர்ந்த மன்னர், "இன்று பௌர்ணமி என்றால், உம்மால் முழு நிலவை காண்பிக்க முடியுமா?" என்று கேட்டார். அம்பிகையின் நினைவிலிருந்து மீளாத பட்டர் " அம்பாளின் அருள் இருந்தால் நிச்சயம் முழு நிலவை காட்ட முடியும்" என்றார். மன்னரும் " இன்றிரவு முழு நிலவை காட்டும்" எனக் கூறி காவலர்களை அங்கு விட்டுச் சென்றார்

மயக்கத்திலிருந்து மீண்ட பட்டர் நடந்த அனைத்தையும் கேட்டு வருத்தமானார். அம்பிகையே தன்னை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி, அம்பிகை சந்நதியின் முன், நூறு ஆரங்கள் கொண்ட உறி ஒன்றை கட்டி , உறியின் கீழ் நெருப்பு மூட்டி உறியில் அமர்ந்தார். அம்பிகையை தலை வணங்கி அந்தாதி பாடலானார். அந்தாதி என்றால் முதல் பாடலின் முடிவு என்று பொருள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 100 ஆரங்கள் கொண்டிருந்த உறியின் ஒவ்வொரு ஆரமாக அறுத்துக் கொண்டே வந்தார். கதிரவன் மறைந்தான். இருள் சூழ்ந்தது. " விழிக்கே அருளுண்டு " என்ற 79 வது பாடலை முடித்த பொழுது அம்பிகை தோன்றினாள். தனது தடாங்கம் ஒன்றை வானில் எறிந்தாள். அது வட்ட மதியின் உருவாய் பல கோடி நிலவின் ஒளியை பிரதிபலித்தது. பட்டருக்கு அருள் புரிந்த அன்னை பட்டரை மீதமுள்ள பாடல்களையும் பாடி முடிக்குமாறு கூறி மறைந்தாள். பட்டரும் 100 பாடல்களையும் பாடி முடித்தார். இந்த 100 பாடல்களின் தொகுப்பே " அபிராமி அந்தாதி " என்றழைக்கபடுகின்றது. ஒவ்வொரு பாடலுக்கும் குறிப்பிட்ட பலன்களை தருவதாய் பாடப்பட்டுள்ளது இந்த பாசுரங்கள். நடந்த அனைத்தையும் அறிந்த சரபோஜி மன்னர் அன்னையின் பக்தனை பழித்ததற்காக மனம் வருந்தி பட்டரிடம் பிழை பொறுக்க வேண்டிக்கொண்டார். தன் பக்தனுக்காக, அவன் சொன்ன பொய்யை மெய்யாக்கிய தலம் இது. 


அவர்வர் வசதிக்கேற்ப இங்கு யாகங்கள், பூஜைகள் , புணஸ்காரங்கல் நடைப்பெறுகின்றது. எங்கும் பணம் விளையாடுவதை காண முடிகிறது. அதேப்போல இவ்வூர் முழுக்க சின்னதும்,பெரியதுமான மண்டபங்கள் இருக்கு.  வீடுகளிலும் நம் பட்ஜட்டுக்கேற்ப சமையல் செய்து தர்றாங்க. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செல்வது அலைச்சலை குறைக்கும்.

10 comments:

 1. திருக்கடையூர் தலம் பற்றிய சிறப்பான தகவல்களை அறிய முடிந்தது! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அருமையான விளக்கங்கள் நன்றாக தொகுத்துள்ளீர்கள் ..வாழ்த்துக்கள

  ReplyDelete
 3. நிறைய தகவல்..அருமை ராஜி.
  உங்கள் பெற்றோருக்கு என் வணக்கங்கள்..

  ReplyDelete
 4. நல்ல உபயோகமான தகவல்கள் . நன்றி

  ReplyDelete
 5. திருக்கடையூர் தளம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி சகோ.
  என் தாய் மற்றும் தந்தை வழியை சேர்ந்த சொந்தங்களில் சிலர் தங்களுடைய 59வது பிறந்த நாளை இத்தலத்தில் தான் கொண்டாடியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 6. திருக்கடையூர் தலம் பற்றிய சிறப்பான தகவல்கள். ஒரே ஒரு முறை சென்றதுண்டு.

  ReplyDelete
 7. அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்

  முன்னொருகாலத்தில் தஞ்சாவூரில்- திருக்கடையூர் என்ற கோவில்இருந்தது.அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்தக்கோவிலில் உதவியாளராக இருந்தார்.அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமிஅம்மன் மீது அளவற்ற பக்தி.

  !ஒரு நாள். . .அப்பகுதியை ஆண்ட மன்னன்அந்தக்கோவிலுக்கு வந்தான்.அன்று அமாவாசை.அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமிபட்டரிடம் இன்று என்ன தேதி(திதி)? என்று கேட்டான்.அவர் எப்போதும் அன்னைஅபிராமியம்மன் நினைவாகவே இருந்ததால் அன்று அமாவாசை என்பதை மறந்து பவுர்ணமிஎனக்கூறிவிட்டார்.
  மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவுவந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள்.அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரைசிரச்சேதம்(தலையை வெட்டிவிடுதல்) செய்துவிடுங்கள் எனஉத்தரவிட்டுப்போய்விட்டார்.

  மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள்அபிராமிபட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணரவைத்தனர்.அவருக்கு உயிர்பயம்வந்துவிட்டது.

  அபிராமி பட்டர் அபிராமி அம்மனைச் சரணைடந்து அவளை நினைத்து கண்ணீர்பெருகப் பாடினார். இரவு வந்தது. பௌர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்துஅபிராமிபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.அபிராமி பட்டர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்.அபிராமி அம்மனுக்கு நன்றி கூறினார்.இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவதுஎன்னவென்றால்,25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமிகள்வரும்.அதாவது, பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழற்சி ஒருமுறை மட்டும்உடையும்.

  இதன் மூலம் இனி ஒரு விஷயமும் தெளிவடைகிறது நமது தமிழ் பண்பாட்டின் தொன்மை இது ஒரு பெரியவர் வாய்வழியாக சொன்ன விஷயம் உண்மை எந்த அளவு இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தட்டும்

  ReplyDelete
 8. திருக்கடையூர் தலம் அறிந்துகொண்டோம்.

  உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. திருக்கடையூர் சென்று வழிபட நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அருள்மிகு அமிர்தகடேசுவரர், அருள்மிகு அபிராமி அம்மை பற்றிய புராண நிகழ்வுகளையும் அறியமுடிகிறது. அபிராமிபட்டருக்காக இறைவி தடாங்கத்தை வீசி பக்தனின் இறைத்தன்மையை நிரூபித்தது குறித்து அறிந்தது சிலிர்ப்பை உண்டாக்கியது. நன்றி.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர், தமிழாய்வுத்துறை
  அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete
 10. திருக்கடையூர் சென்று வழிபட நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அருள்மிகு அமிர்தகடேசுவரர், அருள்மிகு அபிராமி அம்மை பற்றிய புராண நிகழ்வுகளையும் அறியமுடிகிறது. அபிராமிபட்டருக்காக இறைவி தடாங்கத்தை வீசி பக்தனின் இறைத்தன்மையை நிரூபித்தது குறித்து அறிந்தது சிலிர்ப்பை உண்டாக்கியது. நன்றி.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர், தமிழாய்வுத்துறை
  அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete