Wednesday, September 06, 2017

சீனாவில் ஒரு பர்வதமலை ...மௌனச்சாட்சிகள்

  நேரிலோ அல்லது சினிமா, ஆங்கில சேனல்களிலோ  நீங்கள் பார்த்த பாலங்களிலோ அல்லது   மலைப்பாதைகளிலோ இன்னிக்கு நாம பார்க்கப்போற பாதைதான் மிகவும் அபாயகரமானதாக இருக்கும்ன்னு நினைக்குறேன்.  பார்க்கும்போதே நமக்கு கைகால் உதறுது. ஹுன் - ஷான் மலைகளுக்கிடையில் ஆகாயத்தில், அதும் மரத்தாலான பாதையில் ஒருத்தர் பயணம் செஞ்சிருக்கார்ன்னா எத்தனை தில் வேணும்?!  இந்த ஆபத்தான மரப்பாதை பழைய  சீனாவின் தலைநகராக இருந்த ஷீ - .ஆன் நகரத்தின் அருகிலுள்ள ஹுன்- ஷான் மலையில் இருக்கு இந்த பாதை. சரியா சொல்லப்போனா,  அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இதைப்பற்றி குறிப்பிடும்போது ஆகாயத்தில் ஒரு பாதைன்னே  சொல்றாங்க.
இந்த பாதையை பத்தி படிக்கும்போது   மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு நினைக்க தோணும்.  இந்த பாதையைவிட வேற  அபாயகரமான இடம் வேறெதுமில்லையா?!ன்னு நினைக்க தோணும். எனக்கும் அப்பிடிதான் தோணுச்சு. ஆனா,  இந்த பாதையை பத்தி    ஒரு ஆங்கில இணைய கட்டுரையை படித்தேன். பேட்ரிக் வாட்கின்ஸ் என்பவர் தன்னுடைய திகில் அனுபவத்தை அதில் எழுதியுள்ளார். என்னைப்போலவே  அவரும் இதெல்லாம் கட்டுக்கதைன்னுத்தான்  நினைச்சுக்கிட்டு போனாராம். பார்த்ததும் அப்படியே பயத்துல கைகால் எல்லாம் நடுநடுங்கி போனாராம்.  ஆகாயத்துல, ரெண்டு பலகையில, ஒத்தை சங்கிலிய பிடிச்சு நடந்தா எப்படி இருக்கும்?! மீண்டும் அதை கற்பனை செய்துக்கூட பார்க்கமுடியலன்னு பீதியில சொல்லுறாரு. அப்படி என்னதான் இருக்கும் இந்த மரப்பாதையில்?! தெரிஞ்சுக்கலாம். வாங்க! போய் பர்ர்க்கலாம்.....

நம்ம ஊர்  கொல்லிமலை, பர்வதமலை, வெள்ளியங்கிரி, சதுரகிரி மாதிரி சீனாவில் புண்ணிய யாத்திரைக்கென்றே புகழ்பெற்ற ஐந்து மலைகள் இருக்கு. அவை முறையே, கிழக்கு, மேற்குவடக்கு, தெற்குஇவை நான்கிற்கும் இடையில் அமைந்த நடுப்புறப்பகுதி என புவியியல் அமைப்புப்படி  அமைந்துள்ளது. அதில் மேற்கு பக்கமாக அமைந்துள்ள இந்த ஹுன் - ஷான் மலை மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த மலை அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்து பாரம்பரியமாக வணங்கிவந்த புனித மலையாகும். சீன வரலாற்றில் பல்வேறு மன்னர்களின் வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும்தியாகங்களுக்கும்  இந்த மலை பேர்போனது. 
பேட்ரிக் வாட்கின்ஸ் என்ன சொல்றாருன்னா, அவர் ஒருதடவை சீனா போயிருக்கும்போது    இந்த மலையை பற்றி கேள்விப்பட்டாராம். மூணு பலகையை சேர்த்து உருவாக்கிய பாதையில் மூவாயிரம் அடிக்கு மேலே நடந்து செல்லணும்ன்னு படிச்சபோது,  அதுபத்திதெரிஞ்சுக்க கூகுள்ல தேடி இருக்கார். ஆனா அவருக்கு போதுமான அளவு படம் கிடைக்கல. அதனால தானே அங்க போய் சாகசம் செய்து நிறைய படம்  எடுத்து ஊரு உலகத்துக்கு தெரியப்படுத்தலாம்ன்னு போயிருக்கார். இனி, அவர் வாமொழியா கேட்டாதான் இந்த பாலத்தின் பிரம்மாண்டம் நமக்கு புரியும்.    அப்படி என்னதான் இருக்குன்னு அவரோட இணைய பக்கத்துல போய் அங்கிருக்கும் படங்களை பார்த்தா எனக்கே மூச்சு நின்னுட்டுது. ஸ்டூல் மேல ஏறவே பயப்படும் ஆளு நானு :-( என்னையெல்லாம் இங்க கொண்டு போய் விட்டா பார்த்ததுமே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். ..
இதுல பயணிக்குறது உயிருக்கு ஆபத்தா இருந்தாலும்இந்த இடத்தை பற்றிய செய்திகள், போட்டோக்கள் பொதுமக்களுக்கு போய் சேரணும்கிற ஒரு வெறி இருந்ததால, அதுக்கு முன்னாடி என்பயமும், எனக்கிருக்கும் ஆபத்துகளும் எனக்கு சிறுசா தோணிச்சு.  சரிஉரலுக்குள்ளே தலையை விட்டாச்சு ,இனி உலக்கை தலையில விழுமேன்னு பயப்படமுடியுமா?! அந்த ஆண்டவன் மேலே பாரத்தை போட்டு அந்த மலைப்பாதை பயணம் தொடங்கும் தொடக்க பாதையில் நின்றுகொண்டிருந்தேன். தொடக்கமே ஒரு குகைப்போல இருக்கு. அங்கதான் நம்ம பைகள், மற்ற பொருட்களைலாம்  டோக்கன் போட்டு கொடுத்திட்டு போகணும். நான்  திகிலோடு  நின்னுகிட்டு இருக்கும்போதுஒரு பெண் தைரியமா என்னை தாண்டி போனாங்க. சரி,  இவங்க உள்ளூர்காரங்க போல! இவங்க பின்னாடியே போனா ஈஸியா போய்டலாம்ன்னு அவங்க பின்னாடி நின்னேன்.  ஆனா, அந்த புள்ளையோ  நீங்க முதலில போங்கன்னு வழி விட்டுட்டாங்க, பொம்பளை புள்ளை முன்னாடி பயப்படக்கூடாதுன்னு கண்ணுல  பயத்தை காட்டாம கெத்தா,   இனி எங்கே எல்லாம் விழபோறமோன்னு மனசுக்குள்ளே திகிலோடு பயணத்தை தொடங்கினேன். 
 நானே தத்தக்க பித்தக்கான்னு நடந்து போய்க்கிட்டிருக்கும்போது எவனோ சாப்பிட்டுப்போட்ட ஒரு பர்கர்ல தெரியாம காலைவச்சி ஒரு புள்ள வழுக்கி விழுந்திட்டா.  சூப்பர்மேன் கணக்கா பாய்ஞ்சு விழப்போன அவ  கையை நான் பிடிக்க, அவ என்னையும் சேர்த்து இழுத்துக்கிட்டு  விழுந்தா. தமிழ் சினிமாவுல ஹீரோ ஹீரோயின் இப்படி விழும்போது பின்னாடி லலலலலன்னு பாடுவாங்க, வயலின் கதறும். அப்படி எதாவது என்னை சுத்தி கேக்குதான்னு காதை தீட்டிக்கிட்டு கேட்டேன். ம்க்கூம், நமக்கு அப்படிலாம் நல்லது நடந்துட்டா எப்படின்னு மனசை தேத்திக்கிட்டு   சுதாரிச்சு எழும்போது, வடிவேலு கணக்கா கெத்தை விடாம முறைச்சுக்கிட்டே எழுந்தா அந்த பொண்ணு கண்ணுல தெரிஞ்ச பீதிய பார்த்து நான் அப்படியே ஷாக்காகிட்டேன்.  சரி முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு சொல்லுவாங்களே!  பாதையின் ஆரம்பத்தில விழுந்தால தப்பிச்சிட்டோம். பாதியில விழுந்தா நேரா பரலோகம்தான்னு நினைச்சு,  முதல் வேலையா உடல் எடையை தாங்கக்கூடிய அளவு உள்ள ஒரு கனமான பெல்ட் எடுத்துஅதன் நுனியில் உள்ள கொக்கி மூலம்,  பாதையில் இருக்கும் சங்கிலியில் பிணைத்து,  அதை எடுத்து உடலோடு கட்டிகிட்டேன்..
இந்த மாதிரி ஆகாயத்து பாதைல இருக்குற போட்டோக்கள் ஏன் நம் பார்வைக்கு வரலைன்ற நம் கேள்விக்கு அவனவன் உயிரை பிடிச்சுக்கிட்டு நடக்கவே கஷ்டப்படும்போது யார் போட்டோ எடுப்பாங்க??!! .அந்த பழையகாலத்து மரக்கட்டைகள் எந்தளவு உறுதியா இருக்கும்ன்னு  நினைப்பே  அதுல நடக்கும்போது ஹார்ட் பீட் எகிறவைக்குது. ஒரு செங்குத்து மலையின் குறுக்கே ஆகாயத்தில் துருப்பிடித்த சங்கிலியின் மீது நடக்குறதை யோசிச்சு பாருங்க... நான் கையில் இருக்கும் பெல்ட்டை பிடிச்சுக்கிட்டு மெதுவாக  நடப்பது மரணத்தின் விளிம்பில் இருந்தாலும், அந்த வெயிலிலும்மழையிலும் தாக்குப்பிடிக்கும் பழைய காலத்து கட்டைகளும்துருப்பிடித்த சங்கிலியும் நம்மளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மை மேலும் ,மேலும் முன்னேறி செல்ல தூண்டும். 
இங்கிருந்து பார்க்கும் பொழுது ,சூரியன் மலை உச்சியில் இருக்கிறதோ என்று எண்ணுமளவு இந்த மலை ஆகாயத்தை தொட்டு நிற்குது.  நான் இந்த மலைக்கு வருவதற்கு வழியில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. அந்த ஆகாய பாதையில் கவனமாகவும், அதேநேரம் வேகமாகவும் போகனும். ஏன்னா சூரியன் மறைந்தபிறகு 2,160மீ உயரமுள்ள அந்த மலையில் நடப்பது தற்கொலைக்கு சமமாகும். 
சில இடங்களில் மரபாலங்கள் இல்லாமல் வெறும் சங்கியிலியின் மேல் கம்பிகளின் துணைக்கொண்டு நடந்து கடக்கவேண்டும். அந்த அனுபவம் பயங்கர திகிலானது .
சில இடங்களில் அந்த சங்கிலிகள் கூட இல்லாமல் பாறைகளில் செலுத்தப்பட்ட ஓட்டைகளில் கவனமாக கால்களை வைத்து அடிமேல் அடி எடுத்து கடக்கவேண்டும். நான் அதில் நடந்துக்கிட்டே லேசா  திரும்பி பார்க்கும்போது ஒரு இளம்பெண் திகிலோடு முன்னேறிக்கொண்டு இருந்தார்.
ஒருவழியா ஆமைபோல நகர்ந்து மலை உச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். என் பின்னால்   ஒரு அழகான இளம் பெண் மலையேறி  வந்துகொண்டிருந்தார். பார்க்க கண்ண்க்கு குளிர்ச்சியா இருந்ததால சிரமம் தெரியல. 
அந்த வழியாக வருவோரின் சிலரது முகத்தில் இனி இந்தமலைப்பக்கமே தல வச்சுக்கூட படுக்கக்கூடாதுன்ற எண்ணம் கண்டிப்பா இருந்திருக்கும். ஏன்னா, எனக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. 
அதே பாதையில் சிலர் சந்தோஷமாகவும், தங்களது பெண்தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டு கம்பிகளின்மேல் கவனமாக கால்வைத்து நடந்தனர்.  அதையெல்லாம் பார்த்துகொண்டுவந்த என் கண்கள், திடீரென ஓரிடத்தில் அகல   திறந்து விரிந்தது. அங்க ஒரு பெண் இந்திய யோகிகள் செய்வதுபோல் ஆகாயத்தில் ஒற்றை காலுடன் நிற்பது போன்று கும்பிட்டு நின்றார். இது ஒரு புனிதமான மலையென்பதால் அவரும் பக்தி நிலையோடு வந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன் .
ஒருவழியாக ஆமைபோல் நகர்ந்து மலைஉச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது ,சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். 
என்னதான் இடுப்பில் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தாலும்,  அந்த பள்ளத்தை பார்க்கும்பொழுது கால்கள் கிடுகிடுவென நடுங்கின .ஒருவழியாக மலையின் சமதள பாதைக்கு வந்துவிட்டேன்ன்ற நினைப்பே போன உயிரை திரும்ப கொண்டு வந்தது. 
சூரியனும் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். பாதையும் ஓரளவு சமதள பாதையாக இருந்தது. உடலை இணைக்கும் பெல்ட் தேவைப்படல. அங்கே தூரத்தில் ஒரு கோவில் தென்பட்டது .. 
சிவப்பு ரிப்பன்களால் கட்டப்பட்ட திண்டுக்கல் பூட்டுகள் போல இந்த மலையின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. என்னுடைய இந்தியப்பயணத்தின் போது ஒருமுறை தமிழ்நாட்டுக்கு சென்றிந்தபோதுகோயம்பேட்டுக்கு அருகிலிருக்கும் திருவேற்காடு அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்க,  கோவில் கம்பிகளில் நிறைய பூட்டுகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. அங்கிருப்பவர்களிடம் கேட்டபோது மாமியார் ஓவரா பேசினாலோ  அல்லது பக்கத்துவீட்டுக்காரங்க அடிக்கடி நம்மகிட்ட சண்டை போட்டாலோ அவங்க வாயை அடைப்பதற்கு இங்கு வந்து பூட்டு காணிக்கை செய்து,ம் கம்பிகளில்  பூட்டிட்டு போவாங்களாம். வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கும்போது ,ஒரு வயசான அம்மா அங்கே ,பூட்டு போட்டுகொண்டு இருந்தார்.  இந்தவயதிலும் அவருக்கு மாமியார் தொல்லை இருக்குமான்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே என்கூட வந்த  கைடுக்கிட்ட அவர் ஏன் பூட்டை கோவில்ல மாட்டுறார்ன்னு கேட்க சொன்னேன். அவருடைய மருமகள் ரொம்ப வாய் பேசுறாங்களாம்.  அதுக்காக பூட்டுப்போட வந்தங்களாம்னு சொன்னார். எனக்கு ஆச்சர்யமாகவும்அதேசமயம் அந்த அம்மாவின் செயல் சிரிப்பை வரவைப்பதாக இருந்தாலும் இதையும் தாண்டி நம்பிக்கை என்ற பூட்டு வலுவானது என்பதை அந்த இந்திய பயணத்தில் நான் கண்டுகொண்டேன். 
அந்த பூட்டு சின்னம் அன்பை வெளிக்காட்டும் சின்னமாகவே அவர்களது வழக்கில் இருந்துள்ளது. தனது காதலன், காதலி, குழந்தைகள், அம்மா,அப்பா இவர்களுக்கு இடையே அன்பு மலரவும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கவும் செய்யப்படுகிற  வேண்டுகோளின் அடையாளம்தான் இந்த சிவப்பு பிரார்த்தனை ரிப்பன். இது பூட்டுகளோடு சேர்த்து கட்டப்படும்போது  அவர்களுடைய பிரார்த்தனை இறைவனிடத்தில் வைக்கப்படுறது என்பது அவர்களுடைய நம்பிக்கை.  மலை உச்சியை அடைந்தபோது இருட்டிவிட்டதால் நான் அங்கேயே தூங்கிவிட்டேன். வானம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அந்த இறைவனின் கைவண்ணத்தில் எல்லாமே அழகுதான் என எண்ணிக்கொண்டு தங்குவதற்கு இடம் இருக்கிறதா என தேடினேன். அங்கே  2 அறைகள் கொண்ட ஒரு ஹோட்டல் இருந்தது. விலையும் மிக அதிகம். நான் மலையேறி வந்ததால் பசியோடு இருந்தேன். அங்கு சுவையான நூடுல்ஸ் கிடைத்தது. அங்கிருக்கும் படுக்கைகள் எல்லாம் அழுக்காக இருந்தன.  கடுங்குளிரில் அதையெல்லாம் பார்க்கமுடியாது என எண்ணி உறங்க சென்றேன்.
இவ்வளவு கஷ்டத்திலும் இரவில் அந்த மலையின்மேல் தங்குவது நல்லது என எல்லோரிடமும் நான் சொல்வேன். காரணம், காலையில் சூரிய உதயம் மலைகளுக்கு மேலே இருந்து காண்பது அவ்வளவு அழகு. அதைஅப்படியே என் காமிராவுக்குள் பிடித்துவிட்டேன் உங்களுக்காக ...
சூரியனும் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தில் தன்னுடைய இளங்கதிர்களை பரவச்செய்து பனிமலைகளுக்கிடையில் மஞ்சள் பழமாய் மேலெழுந்தான். அங்கு மலையின்மேலே ஒரு அழகான கோவில் இருக்கிறது .
கற்களாலும், மரங்களினாலும் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிற ஒரு வழிபட்டுதலம். இயற்கைச்சூழலோடு அழகாக காட்சிதருகிறது. காலையில் சூரிய  உதயத்திற்கு பிறகு வந்த முதல் பயணி நானாகத்தான் இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.  கோவில் மிக அழகாக இருந்தது .
புத்த மதத்தை பின்பற்றும் சீன மக்கள்,  இங்கு தியான நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு பௌத்த தெய்வத்தை வந்து வணங்கி செல்கின்றனர். 
 .
குகையினுள் இருக்கும் இந்த தெய்வத்தை இங்குள்ள மக்கள் வந்து வணங்கி செல்கின்றனர்.  காலையில் மீண்டும் பக்தர்கள் வழிப்பட வருவதால் திரும்பி செல்லுவதற்கு கஷ்டமாக இருக்கலாம். நானும் மலையில் இருந்து மெல்ல  மெல்ல கீழே இறங்கத்தொடங்கினேன் . 
திரும்பி வரும் வழியில் சிலர் மும்மரமாக போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வைத்துக்கொள்வது நலம்.  ஏனெனில் அங்கே எதுவும் கிடைக்காது. அபாயகரமான மலையாக இருந்ததாலும் எனது பயணம் திரில்லாகவும் இனிமையாகவும் இருந்தது என  பேட்ரிக் வாட்கின்ஸ் தனது கட்டுரையில் சொல்லி முடிக்கிறார்.   நம்ம ஊர்ல இருக்கும் கொல்லிமலை, சதுரகிரி, பர்வதமலைக்கே நம்மாளுங்களுக்கு நாக்கு தள்ளுதே! இதுமாதிரியான இடங்களுக்கு போனால்?!

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471116

நன்றியுடன்,
ராஜி

16 comments:

 1. ​ஒரு வழியாக ஏறி முடித்ததும் அதே பாதையில் திரும்ப இங்க வேண்டும் என்றால்? இந்தப் பாதையில் நடப்பவர்கள் மிகுந்த தைரியம் உடையவர்கள். எனக்கு இவற்றைப் பார்க்கும்போதே முதுகுத்தண்டு சில்லிடும்! (சொல்லவே வேண்டியதில்லை, தம வாக்கு எப்போதும் உண்டு)​

  ReplyDelete
  Replies
  1. பர்வத மாலையிலும்,60 % மலைக்கு மேலே இதுபோலத்தான் இருக்கும் ,சீனாவின் இந்த மலையில் பாதுகாப்பு பெல்ட் அணிந்து செல்கிறார்கள் ,நம்முடைய பர்வதமலையில் பகவானின் நம்பிக்கை என்னும் பக்தி பட்டையை நெற்றியில் அணிந்து செல்கிறோம் அவ்வுளவுதான் ...

   Delete
 2. பிரமிக்க வைக்கும் பதிவு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. படிக்கும் போதே நமக்கும் அங்கேசெல்லவேண்டும் என்று தோன்றுகிறது ,ஆனால்போட்டோக்களை பார்த்தவுடன் ,ஆளைவிடுங்கடா சாமி ..ன்னு கும்பிடு போட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிட தோன்றுகிறது

   Delete
 3. படங்களும் சொல்லி சென்ற விதமும் குட் தம 4

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா ...இதுபோல் ஒரு இடத்திற்கு சென்று ,போட்டோ எடுத்து உங்கள் வீரத்தை அப்லோட் செய்யங்கள் ...

   Delete
 4. படங்களைப் பார்க்கும் பொழுதே உடல் சில்லிட்டுப்போகிறது

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் தான் ..என்ன செய்வது பேஸ்மெண்ட் வீக் ஆனாலும் பிலேடிங் ஸ்டராங் மாதிரி பில்ட் டப் கொடுக்கவேண்டியதா இருக்கு

   Delete
 5. இந்தப் பாலம் பற்றி முன்னரே படித்திருக்கிறேன்.

  சிறப்பாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா ..ஒருமுறை அங்கே சென்று ,ஒரு பயண கட்டுரை எழுதுங்களேன் ...

   Delete
 6. ஓட்டுப் பட்டையை காணவில்லை

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இந்தப்பதிவை எழுதிமுடித்து படங்களை பார்த்தவுடன் ,உயிரையே காணவில்லை ...அய்யா

   Delete
 7. பிரமிப்பு. நீங்க சொல்லுற மாதிரி இங்க இந்தியாவுல இருக்கறதுக்கே முழி பிதுங்குது இனிமே இந்த வயசுக்கு மேல அங்கெல்லாம் ஹும்...ஸோ படத்தோட உங்கள் விவரங்களையும் அறிந்துகொண்டோம்...அருமை..சொன்ன விதம்..

  கீதா: இந்தப் பாலம் பற்றி ஏற்கனவே வாசித்ததுண்டு. வடிவேலு, நம்ம சினிமா என்று நீங்கள் புகுத்தி இங்கிலிஷ் மனிதரையும் தமிழ்படம் பேச வைச்சு சொன்னது செம...ஹாஹாஹாஹா...

  ReplyDelete
  Replies
  1. முதலில் பர்வதமலை ...அங்கே சென்றால் முழி பிதுங்குதோ இல்லையோ ..முட்டி பிதுங்கிவிடும் ....ஒருமுறைதான் சென்று வாருங்களேன் ....

   Delete
  2. இங்கிலிஷ் படங்களை தமிழில் லோக்கல் சென்னை பாஷை பேச வைத்து விட்டார்கள் ,நான் பிளாக்வழியே டப் செய்துள்ளேன் ...ஹா ..ஹா ...நன்றி ...

   Delete
 8. படிக்கும்போது மெய்சிலிர்த்தது. க்ளிப்கேங்கர் நிலை. அப்பப்பா. வியப்பாகவும்கூட இருந்தது. நான் பார்த்த, படித்த பதிவுகளில் என்றும் என் நினைவில் நிற்கும் பதிவாகிவிட்டது. இறையருள் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete