Wednesday, October 09, 2013

வட்டக் கோட்டை - மௌனச் சாட்சிகள்

கோட்டைகள் பெரும்பாலும் தரை மட்டத்தில் இருக்கும், இல்லாட்டி மலைமேல, காட்டுக்குள்ள இருக்கும். ஆனா, நீர் சூழ்ந்த இடத்தில் இருக்கும் கோட்டைகளை விரல் விட்டு எண்ணிடலாம். அதுலயும் கடல் நீர் சூழ்ந்த இடத்தில் பிரம்மாண்டமான கோட்டை கட்டி, சுனாமி, பேரலை , உப்பு காத்துக்குலாம் தப்பி இன்னிக்கும் அந்த கால வரலாற்று சுவடுகளை தாங்கி நிக்குதுன்னா ஆச்சர்யமான விசயம்தானே! அப்படிப்பட்ட ஒரு கடல் சூழ் கோட்டையான வட்டக் கோட்டையைதான் இன்னிக்கு நாம பார்க்க போறது. 

இதுதான் அந்த கோட்டை கூகிள் மேப் வழியா பார்த்தா கோட்டை ஆரம்பிக்கும் பகுதி நிலமாகவும் , முடியும் பகுதி நீராகவும் காணப்படும்.வாங்க அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைக்கு போகலாம்.


நாம இப்ப நிக்கிற இடம் கோட்டையின் நுழைவாயில்.  பிரம்மாண்டமான கருங்கல் சுவர்களால் பாதுகாப்பா கட்டப்பட்ட இந்த கோட்டைக்குள் போகலாம்.  அதுக்கு முன்னாடி இந்த கோட்டை அமைவிடம் பத்தி சொல்லிடுறேன்.  இது கன்னியாகுமரியில் கடலோரம் அமைந்துள்ள ஒரு கோட்டை.  இந்த கோட்டை கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில இருக்கு. கொட்டாரம்ன்ற ஊருல இருந்து போனா இங்க ஈசியா வந்துடலாம் திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களை கண்காணிக்கவும். மேலும் கடல் மார்க்கமா அன்னியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் படைவீடுகளுடன் இந்தக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டது. நுழைவு வாயிலில் திருவிதாங்கூர் அரசின் சின்னமான யானை சிலைகள் நம்மை வரவரவேற்பது போல இருக்கு.  வாங்க கோட்டைக்குள்ள போலாம்...,

இந்தக் கோட்டையானது ஒரு காலத்தில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கடற்படை டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவர் வேணாடு திருவிதாங்கூர் படையுடன் 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் போரில் மோதி தோல்வியுற்றபின் அவர்கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார். பின் விடுதலை செய்யப்பட்டு காலப்போக்கில் அவர் திருவிதாங்கூர் அரசரின் நம்பிக்கைக்கு உரியவராகி திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.  அவர்தான் செங்கற்கோட்டையா இருந்த இந்தக் கோட்டையை அவருடைய மேற்பார்வையில் கற்கோட்டையா மாற்றி கட்டினார். (அவர்தம் வரலாற்றை அறிய..., டி லனாய் கோட்டை, உதயகிரி..,)


இது கோட்டையின் உள்பகுதி இங்க தெரியுற இந்த குளம் போன்ற நீர்தேக்கமும்,  அருகில் ஒரு கிணறும் இருக்கு பார்த்தீங்களா!?  அதுதான் இங்கே தங்கி இருந்த ராணுவ அதிகாரிகளுக்கும் படைகளுக்கும் தண்ணீர் தேவைகளுக்கு உபயோகப்படுத்தி இருக்காங்க.

இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் கிடைத்ததாம்.        இந்த நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து இந்த கிணறு பயன்படுத்தாமல் வெறும் காட்சி பொருளாவே காணப்படுது.

கோட்டையினுள் தூண்களுடன் கூடிய மண்டப அமைப்பு சுவர்களுக்கு இணையான மேற்கூரைகளுடன் நான்குபுறமும் காணப்படுது.  மேலும் கண்காணிப்பு மேடைகளும் நான்கு புறமும் இருக்கு. கோட்டையினுள் ஓய்வு அறை,ஆயுதசாலை முதலியவைகளும் முன்பு காணப்பட்டனவாம்.

கடலில் முத்துகுளிபவர்களுக்கும்,  கடல்வழி வியாபாரத்திற்கும் இங்க தங்கிருந்த படைகள் உதவியாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட்டதாம் . உள்கொத்தளம் உறுதியான கருங்கற்களால் அமைக்கப்பட்டு பீரங்கிகள் கோட்டையின் மேல் பாகத்திற்கு கொண்டு செல்ல கருங்கற்களால் ஆன சாய்தளமும் அமைக்கப்பட்டிருக்கு. 

 3.5 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் இக்கோட்டை சுவர் எழுப்பப்பட்டிருக்கு.

இந்தக்கோட்டையின் சில பாகங்கள் கடலுக்குள் அமைந்திருக்கு. கடலரிப்பை தாங்கும் வண்ணம் பெரிய பெரிய கருங்கற்களால் ஆன பாறைகள் கோட்டையை சுற்றி அரணாக போடப்பட்டிருக்கு.

கோட்டையின் இருபக்கமும் சுற்றுலா வருபவர்கள் கோட்டையை சுற்றி உள்ள கடற்கரையில் ஆனந்தமாக நீராடிகொண்டு இருக்காங்க.

உள்ளே இருந்து பார்க்கும் கோட்டையின் வளைந்த வட்டவடிவிலான சுவர்கள் பின்னணியில் மலைகள் அழகாக காட்சியளிக்குது.

அழகாய் வடிவமைக்கப்பட்ட உட்புறம்...,

கோட்டையினுள் இருந்து பார்க்கும் போது கடல் பரப்பு அழகாக தெரியுது. இந்த இடத்தில்தான் தளபதி டி லானாய் நின்று அதிகாரம் செய்து இருப்பார், அந்த இடத்தில் நாமும் நிற்கிறோம்ன்னு நினைக்கும் போதே உடல் புல்லரிக்குது.

மேலும் இந்த கோட்டையை சுற்றி கடற்கரை ஓரத்தில் காணப்படும் கறுப்பு நிறத்தில் அமைந்த மணல்,மிகவும் அதிசயம்.  சுனாமி பேரலைகள் தாகத்தில் கோட்டை சுவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையாம்.  ஆனால் தண்ணீர் சுற்றி வந்து கோட்டைக்குள்ளே இருந்த தென்னைமரம் போன்றவற்றை அடித்து சென்றுவிட்டதாம்.

நுழைவாயிலின் பக்கத்தில் கோட்டையின் ஆயுத கிடங்கிலிருந்து எடுக்கப்பட்ட பீரங்கி குண்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு.

இங்கே காணப்படும் ஓய்வு மண்டபங்கள் அனைத்திலும் மேற்கூரையில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்குறதால, இந்த கோட்டை பாண்டியர்கள் வசம் 12 ம் நூற்றாண்டில் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்களால் நம்பபடுது. 

1809 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்தப்போது இந்த கோட்டையை அழிக்காமல் விட்டுட்டாங்க. கோட்டை தங்கள் வசம் வந்ததும் கோட்டைடைகளை அழித்து ஆமணக்கு விதைகள் விதைத்து மண்ணோடு மண்ணாக்கி விடுதை வழக்கமாக கொண்டிருந்தாங்க ஆங்கிலேயர்கள்.  அதிலிருந்தெல்லாம் தப்பி இன்று கம்பீரமாக காட்சியளிக்குது இந்த கோட்டை. கோட்டையின் பராமரிப்பு இப்ப இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சித் துறையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கு. அவர்கள் நன்கு பரமறிக்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கோட்டை திறந்திருக்கும். இப்ப அனுமதி இலவசம்ன்னாலும் சிறிது நாட்களுக்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் ன்னு அங்கிருந்த அதிகாரி சொன்னார், 

யார் கண்டது!? இந்த நேரம் நுழைவுக்கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து இருக்கலாம்.  மீண்டும் அடுத்த வாரம் வேறொரு மௌனச்சாட்சியின் நிழலிலிருந்து சந்திக்கலாம்!

20 comments:

 1. பள்ளி சிறுவர்களை சுற்றுலா அழைத்து செல்ல உகந்த இடம் பதிவும் படமும் மிக அருமை. பயனுள்ள தகவல்கள்

  ReplyDelete
 2. அறிய தகவல்கள், அற்புதமான புகைப் படங்கள்.. நன்றி சகோ..

  ReplyDelete
 3. கறுப்பு நிறத்தில் அமைந்த மணல் மிகவும் வியக்க வைத்தது...! படங்கள் மிகவும் அருமை...

  துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

  ReplyDelete
 4. ராணுவ வீரர்களின் ஓய்வெடுக்க அமர்ந்திருக்கும் மண்டபத்தில் நானும் நண்பனும் மல்லாந்து தூங்கி கொண்டபோதுதான் நான் அந்த மீன் சின்னத்தை கண்டேன், பல பதிவுகளிலும் நண்பர்களுக்கும் இதை நான் சொல்வது உண்டு, நிச்சயமாக இது பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான்.

  ReplyDelete
 5. முப்படைகளையும் சமாளிக்கவே இந்த கோட்டை - கடல்வழி தாக்குதலும் அப்போது இருந்துள்ளது.

  ReplyDelete
 6. நானும் நண்பர்களும் அடிக்கடி இங்கே போவது உண்டு, ராணுவ வீரர்கள் ஓய்வெடுக்கும் மண்டபத்தில் படுத்தால் ஏசி போல கூலாக இருக்கும் உள்ளே....வெளியே சூடாக இருந்தாலும் உள்ளே குளிமையாக இருக்கும்.

  ReplyDelete
 7. முன்பு அங்கேநான் சென்று இருந்தபோது கடல் காற்று தந்த சுகத்தை ,இன்று உங்கள் பதிவிலும் உணர்ந்தேன் !
  த.ம.4

  ReplyDelete
 8. அரிய வரலாற்றுத் தகவல்களுடன் அழகிய கட்டுரை!

  ReplyDelete
 9. சிறப்பான இடத்தை பதிவிட்டமைக்கு வாழ்த்துகள் அக்கா....குமரியில் படித்தப்ப பலமுறை இங்கு வந்துள்ளேன்..முதன் முதலாய் காதலியை அழைத்து வந்த போது மீனவ படகில் கடலில் போனது சிலிர்ப்பானது.....கோட்டையின் இடது பக்கம் அரை கிலோமிட்டர் வரை நடக்கலாம் கடலில்..ஆழமே இருக்காது...

  ReplyDelete
 10. அருமையான தகவல்கள் அருமையான பதிவு ..

  ReplyDelete
 11. படங்களும் தகவல்களும் மிகச்சிறப்பு! அருமையாக தொகுத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 12. சிறப்பான பதிவு. படங்கள் சிலிர்க்க வைக்கிறது. அருமை. நன்றி அக்கா

  ReplyDelete
 13. படங்களுடன் கூடிய மிக நல்ல வரலாற்று பதிவு.
  அருமையாக உள்ளது தோழி.

  ReplyDelete
 14. எங்கேயிருந்து பிடிக்கிறீங்க இந்த அரிய செய்திகளையெல்லாம். புகைப்படங்களும் அருமை!

  ReplyDelete
 15. கோட்டையின் அமைதியும் விஸ்தாரமும்
  மனதிற்குள் மகிழ்வினை பிறப்பிக்கும்..
  அற்புதமான இடம்..
  பலமுறை கண்டு ரசித்த இடம்...

  ReplyDelete
 16. பாண்டியர்கள் விழிஞம் துறைமுகத்தையும், கேரளத்தின் கொல்லம் வரை பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இன்றளவு கூட கொல்லம், பத்தணம்திட்டை, திருவனந்தபுரத்தில் உள்ள மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், மொழி வழக்கு, பண்பாடுகள் ஏனைய கேரளத்தை விடவும் வித்தியாசமாய் இருப்பதன் காரணம் அதுவே, பாண்டியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஆய், வேணாடு குறுநில அரசர்களின் வழித் தோன்றலாககே பிற்கால திருவாங்கூர் மன்னர்கள். 17-ம் நூற்றாண்டு வரை அரசவை மொழியாக தமிழும், பாண்டிய எழுத்திலான மலையாண்மை எனப்படும் வட்டெழுதுக்களும் திருவாங்கூரில் பயன்பட்டது. ஆகையால் வட்டக் கோட்டை பாண்டியர்கள் உருவாக்கப்பட்டு இருத்தல் வேண்டும், அதன் பின்னர் வேணாடு - திருவாங்கூர் அரசுக்குள் வந்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 17. இதைபடிக்கும் போதே பார்க்ககூடிய ஆவலை ஏற்படுத்திட்டீங்க...நிச்சயமா இந்த இடத்தை பார்க்கபோகிறேன்...நல்ல தொகுப்பு

  ReplyDelete
 18. வட்டக்கோட்டை பற்றி அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 19. புதிய கோட்டை யைஅறிமுகம்செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 20. வட்டக் கோட்டையில் ஒரு வேப்ப மரத்தின் இலைகள் கசப்பதில்லை. இதுவும் ஓர் அதிசயமே...

  ReplyDelete