Thursday, November 07, 2013

எங்க வீட்டு தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளின்னாலே மனசுக்குள் ஒரு மகிழ்ச்சிதான். ஓயாத வேலை இருந்தாலும்கூட...., பதினஞ்சு நாளுக்கு முன்னாடியே எல்லோருக்கும் துணி எடுத்தாச்சு! தைக்க கொடுக்க வேண்டியதை தைக்க கொடுத்து வாங்கி வந்தாச்சு!! பொண்ணுங்களுக்கு அதுக்கு மேட்சா வளையல் பொட்டு, செயின் வாங்கி வந்த்தை பார்த்ததும் அப்புக்கு கோவம் எனக்கு ஒண்ணுமே வாங்கி வரலைன்னு!! நீங்களே சொல்லுங்க ஆம்பிள்ளை  பிள்ளைக்கு என்ன வாங்கி தர முடியும்?! அதனால, அவனுக்குண்டான ஷேரை கொடுத்தாச்சு. வழக்கம் போல அவனும் உண்டியல்ல போட்டாச்சு!

காலைல எழுந்ததும் முதல்ல மஞ்சப்பொடில பிள்ளையார் பிடிச்சு அவரை இலைல வச்சு குங்குமம், பூ, பழம் வச்சு.., அவர் எதிர்க்க ஒரு கிண்ணத்துல எண்ணெயும், இன்னொரு கிண்ணத்துல சீயக்காய் பொடியும் வச்சு படைச்சு.., பெண்பிள்ளைகளுக்குதான் முதலில் எண்ணெய் வைப்பது எங்க வீட்டு பழக்கம். எப்பவும் இந்த பாக்கியம் பெரியவ தூயாவுக்கு மிடைக்கும். இந்த வருசம் மேடத்துக்கு லீவ் கிடைக்காததால தீபாவளி மதியம் வந்ததால சின்னவ இனியாக்கு இந்த பாக்கியம் கிடைச்சது.

அக்கா ஸ்தானமும், எண்ணெயோடு கிடைக்கும் 100 ரூபாயை நினைச்சு  வாய் கொள்ளா சிரிப்போடு எண்ணெய் வச்சுக்கிட்டாலும், அக்காவை மிஸ் பண்ணுறதால அவ கண்ணு கலங்கி இருந்துச்சு! எனக்கும் மனசு லேசா கனக்க ஆரம்பிச்சது. அக்கா வராததால சம்பிராயத்துக்கு சில வெடிகளை கொளுத்திட்டு அவளுக்காக காத்திருந்தோம்.
இந்த வருச தீபாவளி சனிக்கிழமை வந்ததால நோ அசைவம். பிள்ளைகளும், அவரும் அம்மா வீட்டுல போய் நான் வெஜ் சாப்பிட்டு வந்துட்டாங்க. காலைல, இட்லி, வடை, ஸ்வீட்ன்னு செஞ்சு சாமிக்கு படைக்கனும். அடுத்து அதை அக்கம் பக்கம் வீட்டுக்காரங்களுக்கு கொடுக்கனும். அப்பும், சின்னவளும் கொண்டுப் போய் கொடுத்துட்டு வந்தாங்க.


லேசா அசந்திருக்கும் வேலைல ஒரு போன் கால். நீங்க ராஜிதானே! தீபாவளி வாழ்த்துகள்ன்னு ஒரு பெண்ணோட குரல். யாருன்னு தெரியாமயே நலம் விசாரிச்சேன். நான் சரவணன் வொய்ஃப். எந்த சரவணன்னு சொல்லுங்க பார்க்கலாம்ன்னு சொன்னாங்க. பொண்ணு வராத ஏக்கத்துல இருந்ததால, சட்டுன்னு மூளைக்கு உறைக்கலை. அப்புறம் அவங்களே பிளாக்கர் ஸ்கூல்பையன் வொய்ஃப்ன்னு சொன்னாங்க. அப்பவும், சும்மா சம்பிரதாயத்துக்கு பேசிட்டு போனை வச்சுட்டேன். அடுத்து ஆவியோட ஃபோன். தீபாவளி வாழ்த்துகள்ன்னு சொல்லி வந்துச்சு. அவர்கிட்டயும் ஏனோ தானோன்னு பேசிட்டு வச்சிட்டேன். பொண்ணு வீட்டிக்கு வந்ததும்தான் புத்திக்கு உறைச்சது..., ஸ்பை வொய்ஃப் பேரை கூட கேக்காதது. அப்புறம் ஃபோன் போட்டு சாரி அந்த தீபாவளி சாரி இல்லீங்க மன்னிப்பு கேட்டு பேரை கேட்டு வச்சாச்சு! இனி அடிக்கடி ஃபோன் போட்டு கலாய்க்கலாம்.

மதியமும் அம்மா வீட்டுல இருந்து எல்லோருக்கும் அசைவ சாப்பாடு வந்திட்டுது. அதனால இந்த வருசம் தீபாவளிக்கு வேலைகள் எனக்கு கொஞ்சம்தான். எங்க வீட்டுல மறு நாள் நோன்பு இருக்கு. அதனால, வீடு வாசல்லாம் கழுவி வச்சாச்சு!தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை அன்னிக்குதான் நோன்பு இருப்போம். கல்யாணம் ஆன பொண்ண்ணுங்க ஒரு பொழுது இருப்பாங்க. கர்ப்பினி பெண்களா இருந்தா இது விதி விலக்கு. முன்னலாம் எச்சில் கூட விழுங்க மாட்டாங்களாம். ஆனா, இப்ப, காஃபி, பழம்ன்னு சாப்பிட்டு விரதம் இருக்கோம்!!

சமையலோடு அதிரசம் செய்யனும். அம்மா வீட்டில், அக்கம் பக்கமிருக்குறவங்களுக்கு கொடுக்க முன் கூட்டியே அதிரசம் செஞ்சு வச்சுப்போம். நோன்புக்கு படைக்க மட்டும் கொஞ்சமா செய்வோம். அதனால, சீக்கிரம் வேலை ஆகிடும். ஆனா, மாமியார் வீட்டு சம்பிரதாயம்  முன்கூட்டியே செய்யும் பழக்கமில்லாததால நிறைய செய்யனும். அதனால பெண்டு நிமிறும்.


எங்க வீட்டுல "எண்ணி வைத்து செய்வது" வழக்கம். அதாவது நோன்பு சட்டிக்குள் 21அதிரசம், 21வெத்திலை, 21பாக்கு, 21 கொம்பு மஞ்சள், 21 நோன்பு கயிறு, கூடவே நோன்பு முடிச்சும் வச்சு படைப்பாங்க. இதையெல்லாம், இதுக்கே உண்டான பித்தளை நோன்பு சட்டில வச்சு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போய் அர்ச்சனை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து படைப்போம்.. 
போன வருசம் வரை அஞ்சு மகன், அஞ்சு மருமகள், பேரன் பேத்திகள், ரெண்டு தம்பிகள் குடும்பத்தோடு எங்க மாமனார் பூஜை செய்வார்.  வேலை காரணமா வெளில வந்து தங்கிட்ட அவங்கவங்க ஊருல நோன்பு எடுத்து, கொண்டாடுறொம். அது தூயாக்கு பிடிக்கலியாம். தனியா சாமி கும்பிடுறது என்னமோ போல இருக்கும்மா! அடுத்த வருசத்தில இருந்து எப்பவும் போல பெரியப்பா வீட்டுக்கு போய்டலாம்ன்னு சொல்றா! 

சிலர் வீட்டில் “அள்ளி வைச்சு செய்யுறது”ன்னு சொல்வாங்க. அதாவது அதிரசத்தை ரெண்டு கையாலயும் ரெண்டு தரம், மூணு தரம்ன்னு எடுத்து வைப்பாங்க. சிலர் வீட்டில் முறத்துல வச்சு படைப்பாங்க.

சாமி கும்பிட்டதும் நோன்புக்கயிறை கொடுப்பாங்க. ஆம்பிள்ளைங்க வலது கையிலயும், பெண்கள் கழுத்துலயும் கட்டிப்போம். நோன்பு முடிச்சை மூத்த பெண்பிள்ளைகளுக்கு கொடுப்போம். தலைக்கு வைக்கும் எண்ணெயை மிஸ் பண்ணிய தூயா நோன்பு முடிச்சை வாங்கிக்கிட்டா. சாப்பிட்டு முடிச்சதும் அக்கம் பக்கம் பலகாரம் கொடுத்துட்டு வருவோம்.


தீபாவளி முடிஞ்ச பின்னாடி சகோதரர்கள் வீட்டுல இருந்து சகோதரிகள் வீட்டுக்கு பலகாரம் கொண்டு போவாங்க. முன்னலாம் அன்னக்கூடை, தவளை, பக்கெட்டுல அதிரசம், முறுக்கு, வடை, இட்லி, தட்டை இருக்கும். அதை எங்க அம்மா வீட்டு பலகாரம்ன்னு ஊரெல்லாம் கொடுப்பாங்க. அப்படி பலகாரம் கொண்டு வரும் நாத்தனாருக்கு துணிகளும், கறிக்கஞ்சியும் சமைச்சு போட்டு பதில் அன்பு காட்டுவாங்க. கார்த்திகை மாசம் முடியும் வரை பஸ்சுல பார்த்தா சில்வர் தூக்கு, பிளாஸ்டிக் கூடை, சில்வர் டப்பான்னு பஸ்சுல இடம் அடைச்சுக்கிட்டு கண்டக்டர்கிட்டயும், கூட வரும் பயணிகள்கிட்டயும் திட்டு வாங்கிக்கிட்டு சகோதரிகள் வீட்டுக்கு போகும் சகோதரர்களை பார்க்கலாம்.

ஆனா, இப்ப ஸ்டைலா கடைல வாங்கின ஸ்வீட்டும், காரமும் அம்மா வீட்டிலிருந்து வருது. அதை அக்கம், பக்கம் மட்டும் கொடுத்திட்டு விட்டுடுறோம். என்னதான் வசதி, வாய்ப்புகள் வந்தாலும் எதையோ மிஸ் பண்ணுற உணர்வு இருக்கு.

16 comments:

 1. வணக்கம்
  நோன்பு சட்டிக்குள் என்ன பொருள் எத்தனை எண்ணிக்கை பற்றிய விபரம். ஏனைய விடயங்கள் பற்றி கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்

   Delete
 2. பல புதிய பழக்கங்கள் அறிந்து கொண்டேன்..அருமையான தீபாவளி..நன்றி ராஜி!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பண்டிகையும் வெவ்வேற மாதிரி வெவ்வேற ஊர்களில் கொண்டாடுறாங்க. எங்க ஊரு பழக்க வழக்கங்கள் பத்தி ஒரு பதிவு போடலாமின்னு இருக்கேன்!

   Delete
 3. இப்பக் கடையில் வாங்கி வந்துவிடுகிறது பட்சணமெல்லாம்.
  உண்மைதான்.வீட்டளவில் செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.

  இரண்டு மூன்று வகையாவது செய்கிறோம்.
  உங்கள் விரதம் அருமை. என்பள்ளித் தோழிகள் சிலசமயம் இடதுகைகளில் சரடு கட்டிக் கொண்டுவருவார்கள். சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள் ராஜி.

  ReplyDelete
  Replies
  1. சகோதரிகளுக்கு சீர் கொடுக்கனும்ன்னா நிறைய கொடுக்கனும். முன் போல யார் இப்ப செய்யுறது!? அதான் கடைல வாங்கிடுவாங்க. ரெண்டு மூணு சகோதரிகள் இருந்தா சமையல்காரரி கூட்டி வந்து செய்வாங்க.

   Delete
 4. வாவ்.... என் அம்மாவீட்டில் நடக்கும் தீபாவளியை
  அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்....!
  இந்தப் பதிவைப் படித்தபோது என் பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தேன்.
  கடைசியாக நீங்கள் சொன்ன வாக்கியம்...“என்ன தான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் எதையோ மிஸ் பண்ணுற உணர்வு தான் இருக்கிறது“ என்பது உண்மையிலும் உண்மையான வார்த்தை.

  இருந்தாலும் உங்களுக்கெல்லாம் அம்மா வீட்டிலிருந்து பிறகு மாமி வீடு என்று கொண்டாட்டங்கள் தொடர்வது தான்.
  ஆனால் எங்களுக்கு....?
  “சொர்க்கமே ஆனாலும் அது
  நம்மூரைப் போல வருமா...?“

  இன்றைய பதிவு என் சிறுவயது எவ்வளவு இன்பமாக இருந்தது
  என்பதை திரும்பிப் பார்த்து மகிழ வைத்தது.
  நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாய் நான் கொடுத்து வைத்தவள்தான் அருணா! என் வீட்டில் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளும் என் மாமியார் வீட்டிலும் இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா!

   Delete
 5. பேசாம எங்க வீட்டு பொண்ணை உங்க வீட்டுக்கு அனுப்பிடலாமுன்னு பார்குறேன் ஆனா அவளுக்கு ப்படியெல்லாம் பொறுமையா பூஜையை உட்கார்ந்து பார்க்குறது புடிக்காது நீங்க பூஜை முடிக்கிறதுக்குள்ள நீங்க பண்ணிய அதிரசத்தை எலிபோல சைலன்டா எடுத்து போய்டுவா அவளுக்கு அதிரசம் பிடிக்கும்,,

  ReplyDelete
  Replies
  1. அவள் எடுக்கவே வேணாம் நானே கொடுத்துடுவேன். சாமிக்கு படைக்க லேட்டாகி எங்க வீட்டு பசங்க பசிக்குதுன்னு கேட்டால் மாமியார், மாமனாருக்கு தெரியாம கொடுத்துடுவேன். பசங்க பசிக்கு முன் ஆச்சாரம் பெரிசில்லைன்றது என் கருத்து

   Delete
 6. நோன்பு அதிரசத்தின் ருசியே தனிதான்! எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி வையுங்களேன்! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 7. ரொம்ப அருமையா விவரிச்சு எழுதி இருக்கீங்க ராஜி !
  கோலங்கள் அழகு !

  ReplyDelete
 8. அமெரிக்காவுல தீபாவளி இப்படிதான் கொண்டாடுவாங்க... வார நாட்களில் தீபாவளி வந்தால் காலையில் எண்ணெய் வைச்சு குளிச்சுட்டு சாமிக்கு குட்மார்னிங்க் சொல்லிடு போய்டுவாங்க அதன் பின் வீக்கெண்டுல நண்பர்களை கூப்பிடுவாங்க... வார இறுதியில் வந்தால் மெதுவாக எழுந்திருச்சி குளித்து சாமி கும்பிட்டு கோயிலுக்கு போய்ட்டு வந்துட்டு தெரிந்தவர்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்துட்டு நண்பர்களை வீட்டிற்கு விரிந்துக்கு கூப்பிடுவார்கள் கம்பி மத்தாப்பூ வாங்கி கொளுதுவார்கள் அவர்களுக்கு சிறு குழந்தைகள் இருந்தால் மட்டும்.

  இந்த வருஷம் 2 வீட்டில் எங்களுக்கு விருந்து மதியம் ஒரு வீட்டிலும் இரவு ஒரு வீட்டிலும் ஆனா சரக்கு தராம என்னை ஏமாத்திவிட்டார்கள்.. தீபாவளி அன்று சரக்கு சாப்பிடக் கூடாது என்று சாஸ்திரமாம்.

  ReplyDelete
 9. அருமையாக விரிவாக எழுதியுள்ளீர்கள். நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 10. நல்ல விரிவான பதிவு, அப்படிடே எங்களையும் ஞாபகம் வச்சு எழுதியிருக்கீங்களே...

  ReplyDelete
 11. தீபாவளியின் மறுநாள் நோன்பு கொண்டாட்டம் எமக்கு புதிய கொண்டாட்டமாக இருக்கிறது. நம் வழக்கில் இல்லை.


  ReplyDelete