Friday, March 14, 2014

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ணியம் தேடி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் நாம இரண்டாம் நிலையில் இருக்கும் முக்கியமான ஐந்து இடங்களை போன வாரம் திவில் பார்த்தோம். பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துட்டா ,பதிவைத் தொடர வசதியாய் இருக்கும்.  கோவில் பற்றிய விரிவான வரலாற்று சம்பவங்களையும், பெருமைகளையும் பார்க்கலாம். இந்த வாரம் புண்ணியம் தேடி பதிவில் கிழக்கு வாசல் வழியே ராஜகோபுரம் தாண்டி அம்மன் வாசல்னு சொல்லபடுகிற அஷ்ட சக்தி மண்டபத்திற்கு செல்லலாம். வாங்க!

இதற்கு அஷ்ட சக்தி வாசல்ன்னு ஏன் சொல்றாங்கன்னா, இந்த மண்டபத்தில் அன்னை மீனாட்சியை எட்டு விதமான சக்திவடிவில் தரிசிக்கலாம். திருமலை நாயக்கரின் பட்டத்து ராணி ருத்ரபதி அம்மையாரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கவும், உணவு வழங்கவும் இந்த மண்டபத்தை பயன்படுத்தினார்கள். இந்த மண்டபத்தின் மேற்பக்கம் அன்னை மீனாட்சியின் திருவிளையாடல்கள் பத்தின சிற்பங்கள் இருக்கு.    இதில் மீனாட்சி அம்மனின் பிறப்புவாழ்க்கை,   மதுரையின் இளவரசியானது போன்றவை சிற்பங்களாக வடிவமைக்க பட்டுள்ளன.

அடுத்து வருவது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இது திருமலை நாயக்கரின் அமைச்சர்களில் முக்கியமான மீனாட்சி நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டதுனால இது மீனாட்சி நாயக்கர் மண்டபம்ன்னு சொல்றாங்க.  இந்த மண்டபம் ஆறுவரிசை தூண்களால் தாங்குகிற மாதிரி கட்டப்பட்டு இருக்கு. இதில் 110-க்கும் மேற்பட்ட யாளி-சிங்க உடலும் யானை முகமும் கொண்ட யாளி சிற்பங்கள் இருக்கு. இதுவா மீனாட்சி நாயக்கரின் சிலைன்னு கேட்காதீங்க ஒரு தகவலுக்கு இணைக்கப்பட்ட படம் அவ்வளவுதான். 

அடுத்து ஆடிவீதி, அதனை அடுத்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு மேற்கில் ஏழு அடுக்குகள் கொண்ட சித்ரா கோபுரம் இருக்கு.  உள்ளே இருக்கிற கோபுரங்களில் உயரமானதும், கலைநயம் கொண்டதும் இதுதான். இந்த கோபுரத்தில் கிட்டத்தட்ட 730 அழகிய சின்னஞ்சிறிய சிலைகள் இருக்கு. சித்ரா கோபுரம் வழியே சென்றால் வருவது முதலி மண்டபம். இதில் . சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா காடுகளின் முனிவர் ஒருவரது சிலை போன்றவை இருக்கு.

இனி உள்பக்கம் இருக்கும் இரண்டாம் நிலை சுற்றில் நாம பார்க்கபோறது
1. பொற்றாமரைக்குளம்
2. ராணி மங்கம்மாள் மண்டபம்
3. ஊஞ்சல் மண்டபம்
4. கிளிக்கூண்டு மண்டபம்

தெற்கு  வாசல் வழியா கோவிலுக்குள் வந்தோம்னா நேரே  இந்த 0x60 மீட்டர் அளவுள்ள பொற்றாமரைக் குளத்திற்கு  வந்திடலாம்.  இந்தக் குளத்தைச் சுற்றி நாலுபக்கமும் தூண்கள் கொண்ட பாதை இருக்கு. அதிலிருந்து இந்தக் குளத்தை முழுமையாகப் பார்க்கலாம். இந்த நடைப்பாதையை சுற்றி நிறைய படங்கள் வரையப்பட்டு இருக்கு.

குளத்துக் கரையில் உள்பக்கம் கிழக்கு நோக்கிய வகையில் ஒரு சிவலிங்கம் இருக்கு. அதை அழகாக அலங்கரிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டு இருந்தது. ஆனா அதனை பற்றிய தெளிவான வரலாறு கிடைக்கல. கோயிலுக்கு வர்றவங்க மாலை வேளையில இங்கே அமர்ந்து தண்ணீரில் தெரியும் நான்கு கோபுரங்களின் பிம்பங்களையும் பார்க்கலாம். இந்த குளத்தின் கீழ் பக்கமும் சிமன்ட் தளம் அமைச்சு இருகிறதனால குளத்துல மீன்கள் இல்லைன்னு நினைக்கிறேன்.

மேலும், இங்கே எந்த தாமரை மலரும் இல்லை. அதற்க்கு ஒரு கதை  சொல்லுவாங்க. இந்திரன் பூலோகம் வந்த போது இந்தக் குளத்தில் இருந்துதான் தாமரை மலரை பூஜைக்காக பறித்து வந்ததாக ஐதீகம். முன்னொருக் காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் செய்ததாம். அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் சும்மா இருந்த அந்த கொக்கை சீண்டி விளையாட்டினவாம். ஆனால் கொக்கு அதை கண்ண்டுக்காம கருமமே கண்ணாயினர் போல முக்தி அடையும் வழியை மட்டும் மனதில் கொண்டு தவம் செய்ததாம். பிறகு அது முக்தி அடைஞ்சவுடனே தனக்கு மாதிரி வேற யாருக்கும் தொந்தரவு இருக்க கூடாதுன்னு  "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " ன்னு இறைவனிடம் வரம் வாங்கிச்சுன்னும், அதனாலதான் இந்த குளத்தில வேறு எந்த உயரினமும் இல்லன்னும் ஒரு கதை உண்டு.

அடுத்து பார்க்கப்போறது ராணி மங்கம்மாள் மண்டபம். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், 15 ஆண்டுகாலம் மதுரையை சிறப்பாகவும், வீரமாகவும் ஆட்சி செய்தார் அவர் பின்னாளில் சதிகாரர்களால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார் எனபது வரலாறு. இந்தக் குளத்தில் இவர் கட்டிய ஒரு மாடம் இருக்கு. குறிப்பிட்ட சில விழாக்களின் போது மட்டும்  இறைவனும் இறைவியையும் இந்த மண்டபத்தில் வைத்திருப்பார்கள்.  மேல்கூரையில் மங்கம்மாள் அரசி, அவரது பேரன் சொக்கநாதர், தளபதி ராமய்யன் தளவாயின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் ராணி, அவரது அமைச்சர் ராமய்யன், அவரது பேரன் விஜயரங்கச் சொக்கநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. ராணி மங்கம்மாள் காலம் முதற்கொண்ட பல ஓவியங்கள் இம்மண்டபத்தில் உள்ளன.

ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எதிரே ஒரு மண்டபம் இருக்கு. அதன் விதானத்தில் ஒரு ஊஞ்சலும் இருக்கு. இதுதான் ஊஞ்சல் மண்டபம். இந்த இடத்தில்தான் மீனாட்சி-சுந்தரேசுவரர் விக்கிரகங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குக் கொண்டுவரப்பட்டு சம்பிரதாய ஊஞ்சலாட்டு நடத்தப்படுகிறது. தெய்வத்திருப்பாடல்கள் இசைக்க, மீனாட்சி அம்மாவும், சுந்தரேசுவரரும் ஊஞ்சலாடுவது பார்க்க நல்லா இருக்கும். இந்த சிலைகள் கூட 16ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தின் அருகில் உள்ள மேற்குக் கரையின் கூரையில் உள்ள தற்கால ஓவியங்களும், பக்கவாட்டில் உள்ள சுவற்றில் சிவனின் திருவிளையாடல்களை நினைவுப்படுத்தும் சிலைகளும் இருக்கு.

பொற்றாமரைக் குளத்திற்கு வடமேற்கில்இருக்கிறது. கிளிக்கூண்டு மண்டபம். இந்த மண்டபத்தில் 28 ஒரே கல்லினால் ஆன தூண்களும், அதில் இதிகாசங்களை நினைவுப்படுத்தும் பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன் இவங்களது சிலை உருவங்களும், அவர்களைத் தொடர்ந்து வரிசையாக  யாளி சிலைகளும் இருக்கு. இந்த சிலைகள் விஜயநகர மன்னர்கள் வடித்ததாகச் சொல்றாங்க.  இதுல என்ன விஷேஷம்னா கோவிலின் ஒவ்வொரு கூடத்திலும் குறைஞ்சது நான்கைந்து தூண்களாவது விஜயநகரக் கலைப்பாணியைச் நமக்கு உணர்த்துகிறது. இந்த மண்டபத்தின் தெற்கு மூலையில் விநாயகர் சன்னதி இருக்கு.

அடுத்து இரண்டாம் நிலை பிரகாரத்தில் முக்கியமாக நாமப் பார்க்கப் போறது அன்னை மீனாட்சி சன்னதி.  இந்த சன்னதி வாசலில் உள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கிவிட்டு சன்னதிக்கு செல்லும் போது அங்கே இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என ஒரு வாசகம் இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் அது தவறாக தோணும். ஆனா, உண்மையில் இந்த கோவிலின் அமைப்பு சக்கரத்தின் சக்தியிலயும், நம்பிக்கையின் அடிப்படையிலும், அதற்கு மேலே பவித்ரம் மிகவும் முக்கியம்.  சும்மா வேடிக்கை பார்க்க செல்பவர்களால் அங்கே நன்மை செய்யும் எண்ண அலைகளுக்கு தீமை உருவாகக்கூடும் என்பதற்காக வைக்கபட்டுள்ளதே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்ல.


இந்துக்களாக இருந்தாலும் யார் பயபக்தியும், பவித்ரமும் இல்லாமல் செல்கிறார்களோ அவர்களும் இந்துக்கள் அல்ல என விளக்கம் சொல்வார் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் அவர்கள். இங்கே உள்பிரகாரத்தில் தெற்குப் பக்கம் திருமலை நாயக்கரின் பெரிய சிலை வடிவம் இருக்கு இங்கே பெரியபுராண சிற்பங்கள் அறுபத்துமூவரின் காட்சிகள் எல்லாம் தரிசிக்கலாம்.

அடுத்து அம்மனைத் தரிசிக்கச் செல்லும் வரிசையில் நிற்கும் போது ஒரு பெண்மணி மீனாட்சியின் ஸ்தல புராணத்தை சொல்லிகொண்டு வந்தார் அவங்க சொன்னது மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தைப் பிறக்கவில்லை. அதனால மன்னன் வாரிசு வேண்டி பல யாகங்கள் செய்தான். அப்ப அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி வந்ததாம் . ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக இருந்ததாம். இதனால்  மலையத்வஜ பாண்டிய மன்னன் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது வானத்தில் ஒரு அசரீரி கேட்டது. மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று.

சிறிய வயதிலையே மிகவும் வீரம் மிக்க இளவரசியாக வளரத் தொடங்கினாள் மீனாட்சி. சின்னவயசிலேயே அரசுப் பொறுப்பை ஏற்று மதுரையை ஆட்சி புரிந்தாள். எல்லாத் தேவர்களையும் போரில் தோல்வியுற செய்தாள் மீனாட்சி.  கடைசியாக கைலாயம் சென்று சிவனைப் போருக்கு அழைத்தாள். அங்க இறைவனை கண்டவுடன் தன் மனதை அவரிடம் பரிகொடுத்தாள். அன்னை மீனாட்சி இறைவனை கண்டதும்  தன் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போதுதான் தான் யாருமல்ல, சிவனுடன் ஐக்கியமான பார்வதி தேவி என்பதை உணர்ந்தாள். அதன் பிறகு சிவன் மதுரையின் அரசனாக பூலோகத்திற்கு வருகிறார். மதுரையை சில காலம் ஆண்ட பின், மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் தெய்வங்களாக ஐக்கியமாகி மதுரையை ஆண்டு வருவதாக அந்த அம்மா சொன்னாங்க. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்படடு இப்பொழுது சென்றாலும் பார்க்கலாம்.
  
ஒருவழியாக மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால், திருமூர்த்தி நாயனார் வரலாறு சொல்லப்பட்டு இருக்கு. மதுரையில் உள்ள ஒரு வணிகர் குலத்தில் அவதரித்த திருமூர்த்தி நாயனார். அவர் இறைவனுக்கு தினமும் சந்தனக்காப்பு செய்து வணங்குவார்.அந்த சமயத்தில் மதுரையை கர்நாடக மன்னன் கைப்பற்றி ஆண்டுவந்தான். அவன் சமணர் பக்கம் சார்ந்து சிவனடியார்களுக்கு எல்லாம் தொல்லை கொடுத்தான்.  இவருக்கும் தீமை செய்தான்.

ஒரு சமயத்தில், இறைவனுக்கு சந்தன காப்பு செய்ய அவருக்கு சந்தனக் கட்டை கிடைக்காமல் செய்தான். ஆதிருமூர்த்தி நாயனாரும் மிகவும் மனம் வருந்தி தன் கையையே கல்லில் வைத்து தேய்த்தார். ரத்தமும் சதையுமாக நாற்புறமும் தெறிக்க அவர் வேதனயுடன் இறைவனுக்காக தன கையையே அரித்தபோது அவருடைய பக்தியை மெச்சி இறைவன் அவர்முன்னே தோன்றி அப்பனே இந்த பாண்டிய நாட்டின் அரசனாக ஆட்சி செய்து பின் என்னை வந்து சேர்வாயாக என கூறி மறைந்திருக்கிறா.


 அன்றிரவே மதுரையை ஆண்டு வந்த மன்னன் இறந்தான். வாரிசு இல்லாத காரணத்தால், பட்டத்து யானையின் கண்களை கட்டிக்கொண்டு அது யாருக்கு மாலை இடுகிறதோ அவரை மன்னனாக முடிவு செய்தபோது பட்டத்து யானை நேராக திருமூர்த்தி நாயனார் கோவிலில் இருந்தபோது அவருக்கு மாலை சார்த்தி தன் முதுகில் சுமந்து அரசவையை அடைந்தது. பின்னர், அவர் அரசனாகி இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்தார். திருமூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த கல் இந்தக்கல்தான் என சொல்கின்றனர். 

மீனாட்சியை தரிசனம் செய்யும் முன் பொற்றாமரை குளத்தின் தெற்கு கரையில் வீற்று இருக்கும் இந்த தீருநீறு விநாயகரை பத்தி முழுமையாக தெரியவில்லை. அருகம்புல் சார்த்தி முழுவதும் திருநீரினால் அபிஷேகம் செய்யபட்டு இருக்கிறார் இந்த குளக்கரை விநாயகர்.  வர்றவங்க எல்லாம் அந்த திருநீரை எடுத்து செல்கின்றனர். இதுபற்றிய விவரங்களும் தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லலாம். மீனாட்சி அம்மையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது சண்டிகேஸ்வரர் இருக்கிறார். அவரையும் தரிசனம் செய்யலாம். வாங்க! 

இனி நாம மீனாட்சி சன்னதி வழியாக இறைவன் சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் செல்லலாம். இந்த சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் முன் நாமப் பர்ர்க்கப் போற இடங்கள் நிறைய இருந்தாலும் இதில் 5 இடங்கள் முக்கியமா நாம தரிசனம் செய்யணும். அது...,
1.முக்குருணிப் பிள்ளையார்
2.சுந்தரேசுவரர் கோயில் பிரகாரங்கள்
3.எல்லாம் வல்ல சித்தர்
4.சாட்சிக்கிணறும் சாட்சி லிங்கமும்
5.வெள்ளியம்பலம்
இந்த வெண்தாமரை மலரை இறைவனின் பொற்பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு மீண்டும் அடுத்தவாரம் மேலே சொன்ன ஐந்து பிரகாரங்களையும், சுந்தரேஸ்வரர் சன்னதியையும் புண்ணியம் தேடிப் போறப் பதிவில் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்!

16 comments:

 1. உங்கள் பதிவின் மூலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் போது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமிர்தா!

   Delete
 2. அழகான படங்கள்... அருமையான விளக்கங்கள்... அசத்தல்...

  பாராட்டுக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அண்ணா!

   Delete
 3. அடடா என்னை முந்திக்கொண்டே போகிறாளே என் தங்கை இது
  நியாயமா தாயே?..! எனக்கும் கொஞ்சம் புண்ணியம் சேரும்படி வழியைக் காட்டு தாயே ! :))))) அருமையான படங்கள் படங்களைப் பார்க்கும் போதே மனமும் நிறைந்து விட்டது .அருமையான இப் பகிர்வு அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் ராஜி த .ம.4

  ReplyDelete
  Replies
  1. தங்கைக்கு புண்ணியம் கிடைத்தால் அக்காவுக்கும் பாதி உண்டு.

   Delete
 4. படங்களும் பதிவும் மிக் மிக அருமை.
  உங்களுடனே நானும் கோவிலைச்சுற்றிப் பார்த்தது போல் இருந்தது.

  சங்க காலத்தில் “திருக்குறள் “ ஓலைகளை வாக்குவாதத்தால் இந்த குளத்தில் இட, இது சமய சார்ப்பற்ற பாடல்கள் தாம் என்று இறைவனே
  பொற்றாமரை மலரில் வைத்துக் குளத்திலிருந்து வெளியே கொண்டுவந்ததாகப் பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. அந்த கதையும் கேள்விப் பட்டிருக்கேன் அருணா!

   Delete
 5. பட்டையைக் கிளப்பியிருக்கிறீர்கள்.
  மதுரை கோயில் எனக்கு என்றைக்குமே திகட்டாத ஒன்று. மன எழுச்சியைத் தரக்கூடியது. 10 வருடத்துக்கு முந்தைய எனது கட்டுரை இங்கே உள்ளது http://kadaisibench.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/

  மிகவும் பொறுமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு மெச்சத்தக்கது.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அருமையான தகவல்கள்.....

  பல வருடங்களுக்கு முன்னர் சென்றது. செல்ல வேண்டும் எனும் எண்ணமிருக்கிறது. அப்போது உங்கள் குறிப்புகள் பயன் தரும்.

  ReplyDelete
 7. அழகிய படங்களுடன் விரிவான விளக்கம்! 2005ல் கோயிலுக்கு சென்றிருக்கிறேன்! நிறைய நேரம் செலவிட முடியவில்லை! சந்தர்ப்பம் வாய்த்தால் மீண்டும் செல்ல வேண்டும்! நன்றி!

  ReplyDelete
 8. பல முறை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கி வந்திருக்கிறேன். ஆனால் கோயில் பற்றிய பல விவரங்களை இப்பதிவின்மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி

  ReplyDelete
 9. எத்தனை முறை சுற்றி வந்தாலும் கண்டது கொஞ்சம், காணாதது அதிகம்தான்.

  தொடர்கின்றேன்.

  என் இன்லாஸ் மதுரைக்காரவுஹதான்.

  ReplyDelete
 10. அறியாதன பல அறிந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete