Wednesday, December 13, 2017

சாத்தனூர் அணை உருவாக ஒரு பெண்தான் காரணம் - மௌனச்சாட்சிகள்.


லாங்க்.. லாங்க் அகோ... ஒன்ஸ் அப்பான் எ டைம்.. சாத்தனூர் போனது.. அப்ப வரண்டிருந்தது.. பின்ன நான் போற இடம் என்ன செழிப்பாவா இருக்கும்?!  சாத்தனூர் போய் வரனும்ன்னு கொஞ்ச நாளாய் ஆசை.. அயித்தானை கூப்பிட்டு.. அந்தாளு இந்தா.. அந்தான்னு நீட்டி முழக்க... நாட்கள் கடந்து போச்சு... போன மாசம் திடீர்ன்னு ஒருநாள் அக்கம் பக்கம் வீட்டினர்லாம் சாத்தனூர் போகலாமான்னு கேட்க பசங்களோடு கிளம்பியாச்சு. முறுக்கிக்கிட்டிருக்கும் ஆளை டீல்ல விட்டாச்சு.. முன்கூட்டியே பசங்க சொல்லிட்டாங்க சாப்பாடு மூட்டை கட்டிக்காதன்னு.. அதன்படியே கைவீசி கிளம்பியாச்சு. திருக்கோவிலூர் போய்ட்டு உலகளந்த பெருமாளுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு, அங்கிருந்து சாத்தனூர் டேம்க்கு வண்டியை விட்டாச்சு...

பிள்ளைங்கலாம் பெருசாகிட்டதால, வாட்ஸ் அப், பேஸ்புக்ன்னு இருக்க, குனிஞ்ச தலை நிமிராம போகும் எங்க தெரு அண்ணன், குட்டீசோடு சேர்ந்து ஆட்டம் போட.. வேன் களை கொஞ்சம் களை கட்டுச்சு.  அணையை நெருங்க, நெருங்க நீரின் குளிர்ச்சி காற்றில் பரவி வரவேற்க ஆரம்பிச்சுது. மெயின்ரோடிலிருந்து அணைக்கு போகும் தனிப்பாதையில் வண்டி திரும்பியது.... மரங்கள், செடிகள், வயல்வெளிகள்ன்னு பார்க்கவே கண்ணுக்கு இதமாவும், மனசுக்கு புத்துணர்ச்சியாவும் இருந்துச்சு. வேன், பஸ், டூவீலர்ன்னு வாகனத்துக்கேற்ப நுழைவு கட்டணம் வசூலிக்கிறாங்க. டாட்டா ஏஸ் மாதிரியான சரக்கு ஏற்றி செல்லும் தனியார் வாகனத்துக்கு அணைக்குள் செல்ல அனுமதி இல்லை. கேட்டோடவே நிறுத்திடுறாங்க.
அணையின் மேல் மட்டம் வரை நம்ம வண்டில போய்க்கலாம்..  அங்க வரை, சிப்ஸ், ஃப்ரூட் , இளநீர் கடைலாம் இருக்கு. நாங்க போனபோது மதியம் நேரம்ங்குறதால செம வெயில். வெயிலுக்கு இதமா பழங்களை உள்ள தள்ளியாகிட்டுது. மரம், செடி, கொடின்னு எங்கயும் பச்சை பசேல். மக்கள் உக்காந்து போட்டோ எடுக்க, சாப்பிட, ஓய்வெடுக்க, லவ் பண்ண.... மரத்துக்கடியில், நத்தை,  பூக்கள், வடிவில் சிமெண்டாலான இருக்கைகள் இருக்கு. 
அழகு மங்கை, குரங்கு, கரடி, ஆதாம், ஏவாள்ன்னு விதம் விதமான சிமெண்டாலான சிலைகள். முன்னலாம் சினிமா ஷூட்டிங்க் எடுக்க உதவிச்சு. குமரிக்கோட்டம் படத்துல வரும் ஒரு பாட்டு இங்க தான் படமாக்குனாங்க. ஹேய் இங்கதான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து டூயட் பாடுனாங்கன்னு சொல்லி இப்ப செல்பி எடுத்துக்குதுங்க. 
கடலோ என வியக்கும்படி பரந்து விரிந்த அணை. தமிழகத்திலிருக்கும் அணைகளிலேயே இதான் சிறிய அணைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.  மேலிருந்து பார்க்க பிரமிப்பா இருந்தாலும் அதிக நேரம் நின்னு நீரின் அழகை ரசிக்க முடில. காரணம்.. செம கப்ப்ப்ப்ப்ப்ப்பு... அதனால, சீக்கிரமே கீழிறங்கி வந்துட்டோம். 
முன்பொருமுறை போனபோது, இந்த கடைசில இருந்து அந்த கடைசி வரை போக அனுமதி உண்டு, இப்ப பாதுகாப்பு கருதி அனுமதி இல்ல.  படத்துல காட்டும் இடத்து மேல இருந்து நான் பார்த்திருக்கேன். நீரின் பிரவாகம் நம்மை தலை சுத்த வைக்கும். இப்ப அந்த கொடுப்பனை இல்ல. 
 நாம பறிச்சு விளையாண்டு அலுத்த,  இப்பத்திய பசங்க  அரிதாய் பார்க்கும் தாமரைப்பூ தடாகம்.. 
நீச்சல் குளம், குழந்தைகளுக்கு தனிப்பகுதியும், எருமைங்களுக்கு தனிப்பகுதின்னும் தனித்தனியா இருக்கு. அதென்ன எருமைகளுக்கு நீச்சல் குளமான்னு நீங்க திகைக்காதீங்க. பெரியவங்க குளிக்கத்தான் அந்த இடம். ஆனா, பாருங்க அங்க முழுக்க முழுக்க இளவட்ட பசங்கதான் ஆணும், பெண்ணுமாய் கும்மாளமடிக்குதுங்க. குடும்பத்தோடு வர்றவங்க கொஞ்சம் விலகிதான் போறாங்க. 
சாப்பாடு, மீன் வருவல், ஐஸ், பாப்கார்ன், சிப்ஸ், பழம், சரக்குன்னு எல்லாமே கிடைக்குது. ஆனா, விலைதான் கொஞ்சம் ஓவர்.
டேம் ஆச்சே, மீன் விலைலாம் குறைச்சலா இருக்கும். அதனால, நான் நிறைய சாப்பிடுவேன்,. எனக்கு ஹாஸ்டல்ல மீன் கிடைக்காதுன்னு வயத்தை காயப்போட்டு வந்த என் பிள்ளை, மீன் வருவல் விலைய விசாரிச்சா ஒரு பீஸ் முப்பது ரூபாயாம். சிக்கன சிகாமணி என் பிள்ளை வேணாம்ன்னு மறுக்க, வற்புறுத்தி  வாங்கி கொடுத்தேன். 
பசியெடுக்க ஆரம்பிச்சது. ஆளுக்கொரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு எங்க சாப்பிடலாம்ன்னு பார்த்துக்கிட்டிருக்கும்போது, என் பெரிய பொண்ணு, அவ கூட படிச்ச பசங்கலாம் போன இடம்ன்னு சொல்லி, கூட்டி போனாள். கல், மரம்ன்னு தாவி ஏறி,இறங்கி போனால், செமையான இடம்.  அணையிலிருந்து வழியும் தண்ணி சிறு நதியாய் ஓடும் இடம். அங்க உக்காந்து சாப்பிட்டோம்.  
சலசலத்து ஓடும் நீர், அதை தொட கீழிறங்கும் மரக்கிளை, மரக்கிளையிலிருந்து குதித்தோடும் குரங்கு, ஆணும் பெண்ணுமாய் இறங்கி கும்மாளம் போட,  ஒரு பக்கம் செல்பி.. அங்க இருக்கும் கல் எடுத்து அடுப்பு மூட்டி ஆங்காங்கு பிரியாணி, மீன்குழம்புன்னு சமைக்க..  அட்மாஸ்பியர் சூப்பர். 
ஆத்தா! மகமாயி! உன் புராணம் போதும். அணையின் வரலாற்றை சொல்லுன்னு முணகுறது இங்க கேக்குது.  அதனால, அணையின் வரலாறு... 

பெண்ணையாற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள அணைகளில் சாத்தனூர் அணை முக்கியமானது. இந்த அணை திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பேட்டை தாலுக்காவில் தென்பெண்ணையாற்றின் குறுக்காகா சென்ன கேசவ மலையில் கட்டப்பட்டிருக்கு.  முதல் ஐந்தாண்டு திட்டத்தில்  இந்த அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1958ல் கட்டி முடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.  பொதுவா திருவண்ணாமலை மாவட்டம் வறண்ட மாவட்டமாகும். அங்க இயற்கை சூழல் நிறைந்த மரங்கள், மலைகளோடு ஒரு அணை இருப்பது அதிசயத்திலும் அதிசயமே!
கல்வராயன் மலைக்கும், தென் மலைக்கும் இடையில் செங்கம் கணவாயை ஒட்டி இந்த அணை இருக்கு..  சாத்தனூர் என்னும் ஊருக்கு நான்கு மைல் தூரத்தில், பூண்டி மலைக் கணவாயின் இடையில் ஒரு நீர்த்தேக்கம் உண்டு. அணையின் நீளம் 2,583 அடி, உயரம் 143 அடி, 700 கோடி கன அடி தண்ணீர் தேக்கி நிற்கவைக்க முடியும். அணையைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும் மலைப்பிரதேசங்கள். இதனால் அணையில் நேரடியாக நீரை எடுத்துச்செல்லும் கால்வாய்களை வெட்ட முடியலை. நாலரை மைல் தூரத்துக்கு மற்றொரு கால்வாய் வெட்டப்பட்டு, மீண்டும் அணையில் நீரைச் சேமிப்பதற்கான ஏற்பாடு சாத்தனூர் அணையில் அமைக்கப்பட்டிருக்கு. 
இங்கிருந்து, பாசனத்துக்கான நீர், கால்வாய்கள் மூலம் அனுப்பப்படுது. 22 மைல் தூரத்துக்கு ஒரு கால்வாய் பிரிந்துசென்று செங்கம், திருவண்ணாமலை பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இதனால் 16 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதைப்போலவே, அணையிலிருந்து திருக்கோயிலூர் அணைக்கும் நீர் பங்கிட்டு அனுப்பப்படுது.  இதனால் திருக்கோயிலூர் வட்டத்தில் 3 ஆயிரத்து 138 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுது. சாத்தனூர் அணை கட்டும் திட்டத்தை ஆங்கிலேயர் ஆராய்ந்து அதற்கான திட்டத்தை 1903-ம் ஆண்டில் வகுத்தார்கள். ஆனால், அதனை அவர்களால் நிறைவேற்ற முடியலை. 1954-ம் ஆண்டில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அணையைக் கட்டத் தொடங்கினார்கள். 1959-ம் ஆண்டு அணை தொடங்கிவைக்கப்பட்டது. 

பொதுவா தமிழகத்தில் நடுகல்லுக்குக்கூட விழா உண்டு. அப்படி இருக்க, திருவண்ணாமலை மாவட்டத்தின் பசி, தாகம் தீர்க்கும் இந்த அணையினை சிறப்பிக்கவும் விழா உண்டு.  செங்கம் வட்டத்தில் காட்டுப் பகுதியில் பொரசப்பட்டு என்ற ஊரில் பெண்ணையாறு சிறுகுன்றுகளைப் பிளந்து கொண்டு செல்லுது.  அங்குள்ள மீப்பத்துறை என்ற இடத்தில், ஆடிமாதம் பெண்ணை ஆற்றுக்கு விழா எடுக்குறாங்க. விவசாயிகள் ஒன்றுகூடி, வேப்பமரம், புங்கமரம், நாவல்மரம் ஆகியவற்றின் விதைகளை காடுகளுக்குக் கொண்டுசென்று... பம்பை, உடுக்கை ஆகியவற்றை அடித்து விதைகளைக் காட்டில் புதைத்துவிட்டு வருவது இன்றும் வழக்கத்தில் உண்டு. இது,  தமிழ் மக்களின் இயற்கை நேயத்தின்  தொடர்ச்சியாக உணரப்படுகிறது. 
சாத்தனூர் அணையை ஒட்டிய செங்கம் பெண்ணையாற்றால் சிறப்புற்ற ஊர். மலைபடுகடாம் என்னும் சங்கப்பாடலில் செங்கண்மா என்றே இந்த ஊர் குறிப்பிடப்பட்டிருக்கு.  இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்த கணவாய், செங்கமா கணவாய் என்றே கூறப்படுகிறது. இந்த ஊர், பெரும்பாணாற்றுப் படையின் தலைவர் செங்கண் மாத்துவேள் என்பவரின் தலைநகரமாகவும் அமைந்திருக்கு. பெண்ணையாற்றின் நீரைப்போலவே கருணை கொண்டவர்கள், பெண்ணையாற்று மக்கள் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கு.  

பொதுவா, திருவண்ணாமலை ஆன்மீக சம்பந்தமாவே எல்லாராலும் பார்க்கப்படுறதால, இங்க இருக்கும் மத்த விசயங்கள் எடுபடாம போயிட்டுது. இந்த மண்ணிலும் பிறர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்திக்கொள்ளும் ஆட்கள் இருந்திருக்காங்க.  கருணையும் தொலைநோக்கு சிந்தனையும் ஆணுக்கு மட்டுமே சொந்தமானதில்லை. அது பெண்ணுக்கு உண்டானதுன்னு நிரூபிக்க   இந்த ஊரில் அம்மணி அம்மாள் அவதரித்தார்.  இந்த பேரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரங்களில் ஒன்றின் பெயர்தான் அம்மணி அம்மாள் கோபுரம்.  
சென்னை சமுத்திரம் ன்ற ஊர்  தென்பெண்ணை நீரால் வாழும் சாத்தனூர் அருகே அமைந்த செங்கத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் இருக்கு. இங்கதான் அம்மணி அம்மா 17 ம் ஆண்டு பிறந்தாங்க.  என்ன காரணம்ன்னு தெரில. இவங்க மண வாழ்க்கையை வெறுத்து துறவு வாழ்க்கைக்கு போய்ட்டாங்க. இவங்க, மைசூர் நாடு வரை போய் பல அரசர்கள், பாளையத்துக்காரர்கள், ஜமீந்தார்களை சந்திச்சு,  அவர்களிடம் பொருள் உதவி பெற்று திருவண்ணாமலைல ஒரு கோபுரத்தை கட்டினாங்க. அதனாலதான் அந்த கோபுரத்துக்கு அம்மா பெயரையே வச்சி இன்னிக்கும் அவங்க பேர் சொல்லி கொண்டாடுறாங்க. இவங்க பேரில் ஒரு சித்தர் பீடமும் திருவண்ணாமலையி இருக்கு. 
இந்த அணை தோன்றுவதற்கு முன்பே,  பெண்ணையாற்றின் கரையில் அம்மாப்பேட்டை என்னும் ஊரை இவர் நிர்மாணித்துள்ளார். அதுமட்டுமின்றி, இப்ப அணை இருக்கும் இடம் முன்பு அடர்ந்த காடாய் இருந்துள்ளதாம்.  இங்கு வசித்த புலி, கரடி, சிறுத்தை மாதிரியான மிருகங்கள் கோடைக்காலத்தில் தாகத்தால் தவிப்பதை கண்டு இங்கு குளம் ஒன்றை வெட்டி, அவைகளின் தாகத்தை தணிச்சிருக்காங்க.  அப்படி அம்மா வெட்டிய குளம் அம்மணி அம்மாள் குளம்ன்னும், அம்மா தியானம் செய்த பாறை ஒன்று  அம்மணி அம்மாள் பாறைன்னும் இந்த பகுதி மக்களால் கொண்டாடப்படுது. 

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலை பண்ணை இங்கிருக்கு. ரொம்ப வாசமாய்!!! இருக்கும்ன்னு சொன்னதால, நான் போகல. படத்தை கூகுள்ல சுட்டுக்கிட்டேன்.  பெண்ணையாற்றை   பெண்ணின் அழகிய கூந்தலின் கருமையைப்போலத் தென்பெண்ணையின் நுண்மைக் கரும் மணல் சங்கப்பாடல்ல புலவர்கள் சிலாகிச்சிருக்காங்க.  தென் பெண்ணை பாயும் லிப் பகுதி நெல் மிகுந்து விளையும் வளமிக்க பூமியாகும். செஞ்சாலி என்னும் தனித்த சிறப்புமிக்க நெல், பெண்ணை நதிக்குச் சொந்தமானது. நவீன விவசாய வாழ்க்கை, பலவற்றை அழித்துவிட்டது. அப்படி அழிந்துபோன நெல்மணிகளில் செஞ்சாலியும் ஒன்று. இருந்தாலும், இன்றும், திருவண்ணாமலை மாவட்டம், அதிலும் முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணிதான் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கு. 
கழிப்பறை வசதி இருக்கு.  இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். கூடவே, ஹோட்டல்களிலும் கவனம் செலுத்தலாம். தரமற்ற உணவுகள் விலை அதிகமா கிடைக்குது. அதேப்போல, செக்போஸ்ட்ல நுழைவு வரி வசூலிக்க இருக்கும் காவல்துறை, வரும் வண்டிகளை சோதனை இடலாம். குடிமகன்களால் நாங்க எந்த துன்பம் அனுபவிக்கலைன்னாலும் அங்கங்க, பாட்டில் உடைஞ்சிருக்கு. குழந்தைகள் தெரியாம காலை வச்சிட்டா காயப்படும்ல. அதான்..

வாய்ப்பு கிடைக்கும்போது சாத்தனூர் அணைக்கு வாங்க. வறண்ட பூமியில் பரந்து விரிந்திருக்கும் அணையையும், அது உருவாக காரணமான அம்மணி அம்மாவையும், அம்மணி அம்மாவின் கதையை சொன்ன நானும் அங்கதான் மௌனமாய் உங்களுக்காக காத்திருப்போம்.  அப்படி வரும்போது எங்களை நினைச்சுக்க மறக்காதீங்க. 


நன்றியுடன்,
ராஜி.

17 comments:

  1. அறியாத செய்தி...
    படங்களுடன் பகிர்வு சூப்பர்.
    அருமை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. நிறைய படங்கள், நிறைய தகவல்கள் என்று சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மகனின் ரெட்மீ நோட் 4 போனில் பிடிச்ச படங்கள்ண்ணே

      Delete
  3. "விவசாயிகள் ஒன்றுகூடி, வேப்பமரம், புங்கமரம், நாவல்மரம் ஆகியவற்றின் விதைகளை காடுகளுக்குக் கொண்டுசென்று... பம்பை, உடுக்கை ஆகியவற்றை அடித்து விதைகளைக் காட்டில் புதைத்துவிட்டு வருவது இன்றும் வழக்கத்தில் உண்டு." இந்த வரிகளை படிக்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது. படங்களுடன் புதிய செய்தி அருமை பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு தெரியாத பல நல்ல விசயங்கள் நாட்டில் நடந்துக்கிட்டுதான் இருக்கு சகோ

      Delete
  4. படங்களும், தகவல்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. படங்களும் பகிர்வும் வரலாற்றுச் செய்திகளும்அருமை சகோதரியாரே
    நேரில் சென்று வந்த உணர்வு
    நன்றி சகோதரியாரே
    தம ’+1

    ReplyDelete
    Replies
    1. வரும்போது சொல்லுங்கண்ணே. கூடவே வரேன்

      Delete
  6. படங்கள் அணை பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசிண்ணா

      Delete
  7. சாத்தனூர் அணைக்குச் சுற்றுலா சென்றுவந்ததுபோலிருந்தது. கூடவே அருமையான வரலாற்றுச் செய்திகள்.

    ReplyDelete
    Replies
    1. எங்க மாவட்டத்துல சுற்றுலா செல்ல இடங்கள் மிகக்குறைவு. அதில் சாத்தனூர் அணை முக்கியமானதுப்பா.

      Delete
  8. படித்துக்கொண்டு வரும்போது விஜய காந்த் நினைவு வந்தது, புள்ளி விவரங்களால் நான்சென்றதில்லை. படங்கள் அழகு. தகவல்கள் நிறைய வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. விவரம் சொல்லனும்ப்பா. இப்படி சொல்லக்கூடாது, ரகசியம்ன்னு சொல்லி சொல்லிதான் பல விசயங்கள் அடுத்த தலைமுறைக்கு போய் சேரல

      Delete
  9. ARUMAI AKKA NANUM TIRUVANNAMALAI THAN UNAMAIYAGAVE NENGA POTTA PATHIVU ARUMAIYA IRUNTHATHU

    ReplyDelete