Sunday, December 03, 2017

மாவளி சுத்தினா பாவம் போகுமா?!


தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு, ரம்ஜானுக்கு பிரியாணி, கிறிஸ்துமஸ்க்கு கேக் போல கார்த்திகை பண்டிகைக்கு எங்க ஊருல “மாவளி” தான் ஸ்பெஷல்.  தோட்டத்துல அரை அடி அகலம் ஒரு அடி ஆழம் அளவுக்கு குழி தோண்டுவாங்க. அப்படி தோண்டின பள்ளத்து ஈரம் போக அதுல கொஞ்சம் தவிடு தூவி, அதன்மேல் பனம்பூக்களை அடுக்கி, மேலேயும் கொஞ்சம் தவிடு தூவி, விறக‌டுப்பில் கனன்றுக்கிட்டிருக்கும் கட்டை நெருப்பில் ஒன்றிரண்டு எடுத்துட்டு வ‌ந்து அதுல தூவி விடுவாங்க. எல்லா பனை மரப்பூவும் மாவளி செய்ய பயன்படாது. ஒரு சில மரத்துல பூ பூக்கும். ஆனா, அது காயாகாது. அப்படிப்பட்ட மரத்தை ஆண் மரம்ன்னு சொல்லுவாங்க.  இது எல்லா வகை மரத்துலயும் உண்டு.  (இதை வச்சு கே.பாக்கியராஜ் இது நம்ம ஆளு படத்துல ஒரு விடுகதை வச்சு அதுக்கு பரிசுலாம் கொடுத்த கதை உண்டு). நெருப்பை ஊதக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்படி ஊதினா ஊமக்காத்தி ஆகிடும்ன்னு சொல்லுவாங்க. நெருப்பு கனன்றுக்கிட்டே இருக்கனுமாம். தீப்பிடித்து எறியக் கூடாது.   பனம்பூ எரிஞ்சுட்டா சாம்பல் ஆகிடும். அதை வச்சு மாவளி செய்ய முடியாதாம். பனம்பூ முழுசும் நெருப்பு மாதிரி வந்தவுடன் தோட்டத்தில் இருக்கும் பூவரசு இலைகளைப் பறித்து குழியை மூடி அதன்மேல் மண் போட்டு மூடிடுவாங்க.
சாயந்தரத்துக்குள்ள நெருப்பு ஆறிப்போயிருக்கும். மண், இலைலாம் தள்ளிட்டு பனம்பூ கரியை மட்டும் புதுப்பொண்டாட்டிப்போல பக்குவமா எடுத்து அம்மில வச்சு அரைப்பாங்க. அப்படி அரைச்சு வர்ற கரியை பழைய லுங்கித்துணில தேவையான அளவு சுருட்டி கட்டி வைப்பாங்க. கிருத்திகை, நாட்டுக்கிருதிகைன்னு ரெண்டு நாளைக்கு வர்ற மாதிரி வீட்டுல எத்தனை பசங்க இருக்காங்களோ அவங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணி வச்சுப்பாங்க.


பனை மட்டைகளை வெட்டி, கத்தியால சீவி, மூணு மட்டைகளுக்கிடையில் துணில வச்சு சுருட்டிய பனம்பூவை வச்சு மேலயும், கீழயும் வச்சு கட்டிடுவாங்க. தலைக்கு மேல சுத்துறதுக்கு வசதியா ஒரு கயிறும் கட்டி ரெடி பண்ணி வைப்பாங்க.  சாமிக்கு படைச்சு சாப்பிட்டப் பின் இந்த மாவளியை சுத்துறதுக்கு அப்பா ரெடி பண்ணித் தருவார். அந்த மருந்து மேல அடுப்புக் கரி வச்சு லேசா தீப்பிடிக்க வைப்பாங்க. இதுவும் எரியக்கூடாது. நெருப்பு கனன்றுதான் தீப்பிடிக்கனும். சாப்பாடே இறங்காது. மனசு முழுக்க மாவளி மேலதான் இருக்கும். ஒரு வழியா அப்பா மாவளியை ரெடிப் பண்ணித் தருவார்.  தலைக்கு மேல மாவளியை சுத்துசுத்துன்னு சுத்தும்போது, அதிலிருந்து நெருப்பு பொறிகள் கொட்டுறது பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கும். ஊர் முழுக்கவும் இதே காட்சிதான்!




அதுலயும் அக்காக்கள் சுத்தும்போது அண்ணாக்கள் அந்த பக்கம் போய்ட்டா போதும். அக்காக்கள் போடும் சீன் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா. சொல்லி மாளாது. எங்க தெருவுல யார் வீட்டு மாவளி நல்லா பொறி பறக்குதுன்னு மினி சர்வே எடுத்து வருவோம். அப்படி நல்லா செஞ்சவங்க வீட்டுக்கு போய் வாங்கி ரெண்டு மூணு சுத்து சுத்துவோம். அண்ணன்கள், மாமா, சித்தப்பா,அக்காக்கள்லாம் விதவிதமாக தலைக்குமேல், பக்கவாட்டுலன்னு விதவிதமா சுத்துவாங்க. கூடவே தங்களோட வீட்டு குழந்தைகளை வச்சும் சுத்துவாங்க. அதைப் பார்க்கும்போதே பொறாமையா இருக்கும்.   சில சமயம் மாவளி சுத்தும்போது கயிறு அறுந்து சுத்துறவங்க முதுகையும், பக்கத்துல நிக்குறவங்களையும் பதம் பார்க்குறதும் நடக்கும்.


சின்னவங்க முதற்கொண்டு பெரியவங்க வரை இந்த மாவளியை சுத்தனுமாம். அப்படி சுத்தினால் நம்மை பிடிச்சிருக்கும் கெட்டதுலாம் விலகிடும்ன்னு ஒரு ஐதீகம். சுத்தி முடிச்சதும் அந்த பனைமட்டைகளை வீட்டு கூரை மேல போட்டு வைப்பாங்க. காய்ஞ்சதும் அடுப்புல வச்சு எரிப்பாங்க. இந்த மகிழ்ச்சி கிடைக்க அடுத்த வருசம் வரை காத்திருக்கனும்!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி.

15 comments:

  1. புதிதாகக் கோபி படுகிறேன். எங்க ஊர்ப்பக்கம் பார்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் . 'கேள்விப்படுகிறேன்' என்று படிக்கவும்! 'கேள்வி 'என்று மட்டும் டைப் அடித்தால் 'கோபி' என்று வருகிறது!

      Delete
    2. சரி, திருத்தி படிச்சுக்குறேன்

      Delete
  2. ஒருமுறை இக்காட்சியினைப் பார்க்க வேண்டும்
    நன்றிசகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர்ப்பக்கமும் மாவளி சுத்துற பழக்கமில்லையா சகோ. இந்த மாவளி சுத்துனா கைல சிரங்கு, தொழுநோய் மாதிரியான சரும நோய் அண்டாதுன்னு சொல்வாங்க

      Delete
  3. இக்காலங்கள் மீண்டும் வருமா ?
    பெருமூச்சுதான் வருகிறது இப்பொழுது கிராமங்களில்கூட மறைந்து வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்பக்கம் இன்னமும் இருக்குண்ணே. ஆனா, மழைக்காரணமா இந்த வருசம்தான் வாங்கலை

      Delete
  4. புதிய தகவல் ராஜிக்கா...


    படிக்கவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. உனக்குமா இது புதுசு?!

      Delete
  5. மாவளி புதிதாய்க் கேட்கிறேன். உங்க பதிவு மூலம் தான் அறிய முடிகிறது...

    எங்க ஊர்ல சொக்கப் பானை வைப்பாங்க....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கோவை, சென்னை, சேலம், ஈரோடு, காஞ்சிப்புரம் மாதிரியான இடங்களில்கூட மாவளி இருக்கு. ஆனா, உங்க ஊரில்தான் இல்ல போல!

      Delete
  6. தெரியாது இதை பற்றி படங்களுடன் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே

      Delete
  7. நெய்வேலியில் இப்படி மாவளி சுத்தி இருக்கிறோம். எங்கள் வீட்டில் செய்ய மாட்டார்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் செய்வதை நானும் சுற்றி இருக்கிறேன். அது ஒரு கனாக்காலம்! இப்போதும் சுற்றுகிறார்களா?

    ReplyDelete
  8. மாவளி பற்றி இவ்வளவு விரிவாக தகவல் தந்தமைக்கு நன்றி.

    என் தந்தை அவருடைய சிறுவயதில் கார்த்திகை தீபத்தின்போது இவ்வாறு செய்வார்கள் என்று சொல்வார். நானும் சிறுவயதில் ஒருமுறை பார்த்த ஞாபகம். ஆனால் அது பணங்கூடில் கயறு கட்டி இவ்வாறு பொறி பறக்க சிலர் சுற்றியது போன்ற லேசான ஞாபகம்.

    காலப்போக்கில் பாரம்பரியமான பல சந்தோஷம் தரும் விஷயங்களை நாம் மறந்துகொண்டிருப்பது வருத்தமாக உள்ளது. சென்னை போன்ற நகரத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலானோருக்கு இதை பற்றி எதுவும் தெரியது என்றே நினைக்கிறேன். யாரவது பிரபலம் இதைப்பற்றி பேசி மாவளி சுற்றுவதுபோல் ஒரு வீடியோ வெளியிட்டால் மீண்டும் இந்த வழக்கம் சூடு பிடித்து மக்களிடையே பரவலாகும்.

    ReplyDelete