Wednesday, February 05, 2020

காவலுக்கு கெட்டிக்காரன் இந்த கருப்பசாமி-சிறுதெய்வ வழிபாடு

மலையாள நம்பூதிரிங்க மாதிரி கொண்டை, தலையில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், முறுக்கிய மீசை, கையில் ஓங்கிய வீச்சரிவாள், மறுகையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழ வரும் இடுப்பு கச்சையுடன் நின்ற கோலத்தில், கருத்த தேகமும், குதிரைமீது அமர்ந்து மிரட்டும் விழிகளுடன் காட்சியளித்தாலும் துடியான காவல் தெய்வமாய் விளங்கும் கருப்பண்ண சாமியைதான் சிறுதெய்வ வழிபாடு தொடரில் பார்க்கப்போறோம். இவருக்கு பொய் , புரட்டு,  திருட்டு, ஏமாற்று வேலைகள்லாம் அறவே பிடிக்காது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவருக்கு எமனாகவும் இருப்பார். தென் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களின் காவல் தெய்வமாய் இவர் இருப்பார்.

கருப்பண்ணன் சாமிக்கு கருப்பு, கருப்பன், கருப்பசாமின்னும் பல பேர் இருக்கு. இடத்துக்கு தகுந்த மாதிரி சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, பதினெட்டாம்படி கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமின்னும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை, சிவன், பத்ரகாளி அம்சம்ன்னு சொல்லப்பட்டாலும் இவர் உருவாக சொல்லும் கதையோ ராமாயணத்தோடு ஒத்துப்போகுது.

ஸ்ரீராமருக்கும் சீதாதேவிக்கு லவன், குசன் என  இரு புதல்வர்கள்ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா,  சீதை குசனை கையோடு அழைத்துக்கொண்டு  ,  லவனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை வால்மீகி முனிவரிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டுவர ஆற்றங்கரைக்கூ சென்றாள். திரும்ப வரும்போது வால்மீகி முனிவர் அங்கு இல்லை அதனால், வால்மீகியிடம் சொல்லாமல் சீதை லவனை தூக்கிக்கொண்டு பர்ணசாலைக்கு வெளியே உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், லவனை காணாது, சீதை சபிப்பாளோ என பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கி சீதையிடம் அழைத்து சென்றார்.


அங்கு, சீதையுடன் லவன் இருப்பதை கண்டு திகைத்து, நடந்ததை சீதையிடம் சொல்ல, வால்மீகியும், சீதையும் செய்வதறியாது நின்றனர்.  மூன்று குழந்தைகளையும் சீதை கண்ணென காத்து வந்தாள். ராமர் சீதையை நாடி வந்ததும் நடந்ததை சொல்லி அவரிடம் உண்மையான லவன் யார் எனக்கேட்டு நின்றாள். 

தீக்குளித்து தன்னை நிரூபித்த சீதை, அப்படியே தன் மகன்களையும் நிரூபிக்க செய்ய சொன்னார்,  உண்மையான லவன் பிழைத்து வர, வால்மீகியால் உருவாக்கப்பட்ட லவன் மட்டும் யாகத்தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து லவனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என கருப்பண்ண சாமி பின்னாடி ஒரு கதை இருக்கு.


ஆதிகாலத்தில் வாழ்ந்த கருப்பண்ணன் என்ற மனிதன் வஞ்சகத்தால் வெட்டுப்பட அவனே கருப்பண்ண சாமின்னு இன்னொரு கதை சொல்லப்படுது. ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமின்னும் இன்னொரு கதை உலவுது. ஆகமொத்தம் எந்த கதையா இருந்தாலும், இவரின் வழிபாடு  பெரும்பாலும்,  இவர், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புறாங்க. எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர்.  படையலை ஏற்றுக்கொள்ளும் கருப்பண்ண சாமியும் கண்மூடாது பக்தர்களின் தேவையறிந்து அருள்பாலிக்கிறார்.

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி.  
சிறுதெய்வ வழிபாடு தொடரும்..
நன்றியுடன்,
ராஜி

4 comments:

  1. காவல்காரனுக்கு வணக்கம்...

    ReplyDelete
  2. கதை புதிது!  காவலுக்கு கெட்டிக்காரன் என்றொரு படம் உண்டு. அதில் எனக்குப் பிடித்த "சோலை இளங்குயில் யாரை எண்ணி இங்கு" என்றொரு பாடல் உண்டு!  அது நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
  3. கருப்பண்ணசாமி - புதிய கதை!

    ReplyDelete
  4. கருப்பண்ணசாமி அறிந்து கொண்டேன்.

    ReplyDelete