Showing posts with label குழிப்பணியாரம். Show all posts
Showing posts with label குழிப்பணியாரம். Show all posts

Tuesday, March 26, 2019

பச்சைய்பயறு குழிபணியாரம் - கிச்சன் கார்னர்

லீவில் சின்னது வீட்டில் இருக்கு. முன்னலாம் ஸ்வீட்ன்னா விடாது. எல்லாத்தையும் சாப்பிடும். குண்டா இருக்கேடின்னு பிள்ளைக கிண்டல் செஞ்சதால உடம்பை குறைக்கிறேன்னு எந்த திண்பண்டத்தையும் தொடுவதில்லை.  அதுக்கு ஏற்கனவே ஹீமோகுளோபின் அளவு குறைச்சல். இந்த லீவில் அதை சமப்படுத்தனும்ன்னு முடிவு பண்ணி இருக்குறதால இனி அடிக்கடி பாரம்பரிய உணவினை கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணி நேத்து பச்சை பயறுவில் குழிப்பணியாரம் செய்து கொடுத்தேன். 

இதுமாதிரியான பண்டத்தையெல்லாம் சாப்பிட அத்தனை யோசிக்கும். சும்மா நானும் சாப்பிட்டேன்னு சொல்லிட்டு ஏமாத்திடும். அதிலும்இது  கொஞ்சம் கருப்பா இருந்துச்சா மருந்தை முழுங்குற மாதிரி முழுங்கினா.

தேவையான பொருட்கள்...
பச்சை பயறு - 100கிராம்
வெல்லம் - ருசிக்கேற்ப
ஏலக்காய் - 2
உப்பு - கொஞ்சம்
எண்ணெய்
ஆப்ப சோடா - கொஞ்சம்

பச்சை பயறினை குறைஞ்சது 5 மணிநேரம் ஊற வைக்கனும்..

வெல்லத்தினை பொடி செஞ்சுக்கனும்.. கருப்பட்டியா இருந்தா நல்லது.  வெல்லம் வெள்ளை வெளேர்ன்னு வாங்குறதை தவிர்க்கலாம். வெல்லம் வெள்ளையாக அதிகமா சுண்ணாம்பு சேர்ப்பாங்க. 
ஊரின பச்சைப்பயிறினை கழுவி அதில் வெல்லம், ஏலக்காய், ரெண்டு கல் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா அரைச்சுக்கனும்.  மாவு ரொம்ப தண்ணியா இருக்கக்கூடாது. கொஞ்சூண்டு ஆப்பசோடா சேர்த்துக்கனும். 
பணியார கல்லை சூடாக்கி லேசா எண்ணெய் தடவி மாவை ஊத்தி, மூடி போட்டு வேக வைக்கனும்.
 ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மூடி இன்னும் சில நிமிடங்கள் வேக வைக்கனும்... 
ரெண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து பரிமாறலாம். சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும். தேவைப்பட்டால் கொஞ்சம் பச்சரிசி மாவும் சேர்த்துக்கலாம், அரிசி மாவு  சேர்த்துக்கிட்டால் பணியாரம் மொறுமொறுன்னு இருக்கும். 

பச்சை பயறு உடலுக்கு குளிர்ச்சியும், வலுவும் கொடுக்கும். வெல்லத்துல இரும்பு சத்து இருக்கு. 

நன்றியுடன்,
ராஜி

Tuesday, October 03, 2017

குழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்

மாலைல பசங்களுக்கு கொடுக்க நல்லதொரு டிஃபன்.  காரமும் இனிப்பும் செய்யலாம். எங்காவது ஊருக்கு போகும்போது செஞ்சு எடுத்துக்கிட்டு போகலாம். தொட்டுக்க எதும் தேவையில்ல. அப்படியே சாப்பிடலாம் (ஆனா, நான் மட்டும் என் பசங்களுக்கு வேர்க்கடலை சட்னி இல்லன்னா காரச்சட்னி செஞ்சு கொடுப்பேனாம்!! )

தேவையான பொருட்கள்....
அரிசி - ஒரு டம்ப்ளர்(டம்ப்ளர் விளிம்புக்குள் அரிசி இருக்கனும்)
உளுந்து -  அரிசிக்கு மேல உளுந்து வைக்கனும்.. கைல பிடிக்க கூடாது. ஆனா கோபுரமா நிக்கனும்
உப்பு
உளுந்தம்பருப்பு,
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
ஆப்பசோடா

அரிசி, உளுந்தை ரெண்டு மணிநேரத்துக்கு மேல ஊற வச்சு, உப்பு போட்டு நைசா அரைச்சுக்கனும்.  அரைச்ச மாவை ஆறு மணிநேரம் புளிக்க விடனும்


வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.

காரத்துக்கு காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டுக்கனும்


பொடியா நறுக்கின வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கிக்கனும்...
புளிச்ச மாவுல வதக்குன வெங்காயம் சேர்த்து, ஆப்ப சோடாவும் சேர்த்து நல்லா கலக்கிக்கனும்..

குழிப்பணியார சட்டில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் மாவு ஊத்தி மூடி வச்சு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கனும். சூடா இருக்கும்போதே இட்லிப்பொடி தூவி சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.



மாவரைக்க என்னைப்போல சோம்பேறித்தனம் பட்டால்.. இருக்கவே இருக்கு இட்லி மாவு. நல்லா புளிச்சிருந்தா இப்படி செய்யலாம்...

இனிப்பு பணியாரத்துக்கும் இதே அளவு அரிசி உளுந்தும் போடனும். அரிசி அரைக்கும்போதே கொஞ்சம் உப்பு, வெல்லம் சேர்த்து அரைச்சுக்கனும்... ஆப்பசோடா தேவைப்பட்டா ஏலக்காய் பொடி சேர்த்து பணியாரம் சுடலாம்.... இப்பலாம் ஓட்ஸ், திணை, சாமை, குதிரைவாலின்னு விதம் விதமா பணியாரம் சுடுறாங்க. 

கேமரா உடைஞ்சிட்டதால... கடைசி படங்கள் கூகுள்ல சுட்டது...


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.