Showing posts with label பச்சை பயறு. Show all posts
Showing posts with label பச்சை பயறு. Show all posts

Tuesday, March 26, 2019

பச்சைய்பயறு குழிபணியாரம் - கிச்சன் கார்னர்

லீவில் சின்னது வீட்டில் இருக்கு. முன்னலாம் ஸ்வீட்ன்னா விடாது. எல்லாத்தையும் சாப்பிடும். குண்டா இருக்கேடின்னு பிள்ளைக கிண்டல் செஞ்சதால உடம்பை குறைக்கிறேன்னு எந்த திண்பண்டத்தையும் தொடுவதில்லை.  அதுக்கு ஏற்கனவே ஹீமோகுளோபின் அளவு குறைச்சல். இந்த லீவில் அதை சமப்படுத்தனும்ன்னு முடிவு பண்ணி இருக்குறதால இனி அடிக்கடி பாரம்பரிய உணவினை கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணி நேத்து பச்சை பயறுவில் குழிப்பணியாரம் செய்து கொடுத்தேன். 

இதுமாதிரியான பண்டத்தையெல்லாம் சாப்பிட அத்தனை யோசிக்கும். சும்மா நானும் சாப்பிட்டேன்னு சொல்லிட்டு ஏமாத்திடும். அதிலும்இது  கொஞ்சம் கருப்பா இருந்துச்சா மருந்தை முழுங்குற மாதிரி முழுங்கினா.

தேவையான பொருட்கள்...
பச்சை பயறு - 100கிராம்
வெல்லம் - ருசிக்கேற்ப
ஏலக்காய் - 2
உப்பு - கொஞ்சம்
எண்ணெய்
ஆப்ப சோடா - கொஞ்சம்

பச்சை பயறினை குறைஞ்சது 5 மணிநேரம் ஊற வைக்கனும்..

வெல்லத்தினை பொடி செஞ்சுக்கனும்.. கருப்பட்டியா இருந்தா நல்லது.  வெல்லம் வெள்ளை வெளேர்ன்னு வாங்குறதை தவிர்க்கலாம். வெல்லம் வெள்ளையாக அதிகமா சுண்ணாம்பு சேர்ப்பாங்க. 
ஊரின பச்சைப்பயிறினை கழுவி அதில் வெல்லம், ஏலக்காய், ரெண்டு கல் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா அரைச்சுக்கனும்.  மாவு ரொம்ப தண்ணியா இருக்கக்கூடாது. கொஞ்சூண்டு ஆப்பசோடா சேர்த்துக்கனும். 
பணியார கல்லை சூடாக்கி லேசா எண்ணெய் தடவி மாவை ஊத்தி, மூடி போட்டு வேக வைக்கனும்.
 ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மூடி இன்னும் சில நிமிடங்கள் வேக வைக்கனும்... 
ரெண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து பரிமாறலாம். சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும். தேவைப்பட்டால் கொஞ்சம் பச்சரிசி மாவும் சேர்த்துக்கலாம், அரிசி மாவு  சேர்த்துக்கிட்டால் பணியாரம் மொறுமொறுன்னு இருக்கும். 

பச்சை பயறு உடலுக்கு குளிர்ச்சியும், வலுவும் கொடுக்கும். வெல்லத்துல இரும்பு சத்து இருக்கு. 

நன்றியுடன்,
ராஜி

Tuesday, April 17, 2018

பச்சைப்பயறு குருமா - கிச்சன் கார்னர்

பட்டாணி குருமா, வெஜிடேபிள் குருமா, கடலைப்பருப்பு குருமா, பன்னீர் குருமா, முந்திரி குருமா, முட்டை குருமான்னு விதம் விதமா குருமா செஞ்சாலும் எதாவது நொள்ளை நொட்டை சொல்வாங்க.  அதனால, என்னடா புதுசா செய்யலாம்ன்னு யோசிக்கும்போது பச்சைப்பயறு கண்ணில் பட்டது.  என் மாமியார் பச்சைபயறுல சாம்பார் வைப்பாங்க. நாம ஏன் குருமா வைக்கக்கூடாதுன்னு யோசிச்சு செஞ்சு பார்த்தது. நல்லாவே இருந்துச்சு. இப்பலாம் பட்டாணி, சென்னாவில் செஞ்ச குருமாலாம் பசங்களுக்கு பிடிக்குறதில்லை. மென்னு தின்ன லேட்டாகுதாம்! இப்படி ஒரு சாக்கு சொல்லுதுங்க :-(

தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு
பெல்லாரி வெங்காயம்
தக்காளி
ப.மிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்’
உருளைக்கிழங்கு (காளிபிளவர், கேரட்ன்னு கையில் கிடைக்குறதை போட்டுக்கலாம். என் கைக்கு உருளைக்கிழங்குதான் கிடைச்சுது..)
பட்ட,லவங்கம், அன்னாசிப்பூ,
மிளகாய்தூள்
கடுகு
மஞ்சப்பொடி
எண்ணெய்
உப்பு
தேங்காய்
முந்திரி - நாலு 
பச்சைப்பயறை ரெண்டு மணிநேரம் ஊறவைக்கனும். பச்சைப்பயறை நல்லா கழுவி உப்பு போட்டு  வேக வைக்கனும். உருளைக்கிழங்கை வேக வைச்சுக்கனும்.   வெங்காயம் தக்காளியை கழுவி பொடிசா வெட்டிக்கனும்.  தேங்காய், முந்திரியை நல்லா நைசா அரைச்சுக்கனும்.
வாணலி சூடானதும் கடுகு போட்டு வெடிச்சதும் பட்டை, லவங்கம், அன்னாசி பூலாம் போட்டு பொரிந்ததும், கீறி வச்ச ப.மிளகாய் போடனும்.
வெங்காயம் போட்டு சேர்க்கனும்... 
உப்பு சேர்த்து வெங்காயம் சிவக்க வதக்கனும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கனும்..
புதினா கொ.மல்லி சேர்த்துக்கனும்...
தக்காளி சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கனும்..
மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்.
வேக வச்சிருக்கும் பச்சைபயறு, உருளையை சேர்த்துக்கனும்..


அரைச்சு வச்சிருக்கும் தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து நல்லா கொதிக்கவிடனும். தேவைப்பட்டா கரம் மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்துக்கலாம்.

இட்லி, தோசை, பூரிக்கு நல்லா இருக்கும். பச்சை பயறு உடலுக்கு குளிர்ச்சியை தரும். 

நன்றியுடன்
ராஜி.

Tuesday, December 05, 2017

சுய்யத்துக்கு ஏன் இந்த பேர் வந்திச்சு?! கிச்சன் கார்னர்

பள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.

எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க.  பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க  மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.

ரொம்ப மொக்கை போடாதே! என்னதான் செஞ்சு இருக்கே?!ன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வா!ன்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)

இன்னிக்கு செய்ய போறது ”சொய்யா உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கமும், சுய்யம்ன்னு மதுரை, நெல்லை, காரைக்குடி பக்கமும் சொல்லுற ஒரு பலகாரம்.  இதோட பெயர் காரணம் என்னன்னு நீண்ட நாள் ஆராய்ச்சி செஞ்சு கண்ட உண்மை என்னன்னா, இந்த உருண்டை கலவையை எண்ணெயில போடும்போது “சொய்ய்ய்ய்ய்ய்ய்”ன்னு சத்தம் வர்றதால இந்த பேர் வந்துச்சு.  யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! பேச்சு பேச்சாதான் இருக்கனும்.  சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை!!

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கிலோ
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
மைதா - 200 கிராம்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
உப்பு  - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


பச்சை பயறை வெறும் வாணலியில  பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும். 


அப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)


குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி  குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.

திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.


வெந்த பச்சை பயறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க.

 
ஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,

 உரல்ல  இல்லாட்டி மிக்சில கரகரப்பா  அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும்.

 
 அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.

 
 ஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி, அதுல தேவையான உப்பு சேர்த்துக்கோங்க.

ஆப்ப சோடாவயும் போட்டுக்கோங்க.

 தண்ணி கலந்து கட்டி இல்லாம  கரைச்சுக்கனும்.

 பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.

 
 அடுப்புல வாணலியை வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய வைங்க.

கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.


உருண்டை  ஃபுல்லா மாவு இருக்குற மாதிரி முக்கி எடுத்துக்கோங்க. கல்யாணம் ஆன புது பொண்ணு மாதிரி கையாளனும். இல்லன்னா, மைதா மாவு கரைசலில் பயத்தம்பருப்பு உருண்டை கரைஞ்சிடும்.


ரெண்டு பக்கமும்  பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.

சொய்யா உருண்டை ரெடி!! மைதா மாவு தண்ணியா இருந்தா மாமியாரும், மருமகளும் ஒன்னு சேராத மாதிரி பிரிஞ்சி வந்திடும், 

மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அத   குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும்.  .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம்  கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
நன்றியுடன்,
ராஜி.