Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Wednesday, June 26, 2013

அவன்..., அவள்..., அது...,



அவன்:
சிணுங்கும் தொலைப்பேசியை
செல்லமாய் காதோடு எடுத்தணைக்க.,
யாரோ எதற்கோ பேச!!
தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக .....,
அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்...,
அமிர்த சுவை தேடி, அள்ளி
காதுமடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தைகள்..,
"அடடே உனக்கு வந்திடுச்சா?
 மாத்தி பண்ணிட்டேனா"?ன் னு
துடிதுடிக்க, துண்டிக்கிறாய் இணைப்பை...,
கூடவே நம்பிக்கை நரம்பையும்....

அவள்:
சிணுங்கும் இதயத்தை
செல்லமாய் தட்டி, அமைதிப் படுத்தி,
நின்று, நிதானமிழந்து,
உன் எண் ஒத்தி
வேறு ஏதோ இணைப்பில் இருக்கும்
உன்னை தொட முடியாமல்துவண்டு..,
இன்னொரு முயற்சியில், இணைப்பில்.....,
ஏங்கித்தவிக்கும் , காதுமடலோடு
இனிக்கும் உன் குரல் தேட

பதட்டத்தில்
உதடு உதறி பொய்
உதிர்கிறது...,
"அடடே உனக்கு வந்திடுச்சா?
 மாத்தி பண்ணிட்டேனா"? னு
துவண்டு துண்டிக்கிறேன்
  இணைப்பை...,
தோல்வி வலையில்
இறுக பிணைந்தபடி!!??

Thursday, September 06, 2012

பிரியமான தோழி...,


பிரியமான தோழிக்கு...,

எப்படி இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய்?
எப்போது வருவாய்?
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன்னைப்பற்றி எழும் கேள்விகள் இவை...

உன் விரலோடு விரல் கோர்த்து
விளையாடிய வீதிகள்....,
இன்று, வெற்றிடமாய் தெரிகின்றன!!

உன் எச்சில் மருந்தால்
ஆறிப்போன காயங்களின் தழும்புகள்...,
இன்று,  வலியால் துடிக்கின்றன!!

உன்னோடு தோள் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன...

புன்னகை பூ பூத்து
நட்போடு நடைபோட்டோம்
புத்திகெட்ட சமுதாயம் நம்மை
பிரிக்குமென்றா எதிர்பார்த்தோம்?

அண்ணன் தங்கை வந்தாலே
அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
நண்பர்களாய் நடைபோடும் நம்மைமட்டும்
ஆசையோடவா பார்க்கப்போகிறது...

வீணர்களின் சொல்லுக்கு வெட்கப்பட்டு
விட்டில் பூச்சிபோல் துடிக்கவேண்டாமென
வெவ்வேறு திசை பிரிந்தோம்
வேரறுத்த நம் நட்போடு...

விவேகத்தோடு எடுத்த நம் முடிவு
நட்பிற்கு நல்லது என்றாலும்
வெவ்வேறு வேளைகளில்
என்னை ரணமாய் கொள்கிறது...

நீ எத்திசையில் இருந்தாலும்
நம் நட்பெனும் சுவாசக்காற்று
எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
சந்தித்துகொண்டு தான் இருக்கிறது...

கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
இதை எழுத துடங்கினேன்
துடைக்க உன் விரல் இல்லாதபோது நான் மட்டும் எப்படி?
என்று கண்ணீரும் வரமறுக்கிறது....

உன் நினைவில் நான் எழுதும்
இந்த இனிய வேளையில்
என் நினைவில் நீயும் இருப்பாய்
என்ற நம்பிக்கையோடு....