Showing posts with label பகவதி அம்மன். Show all posts
Showing posts with label பகவதி அம்மன். Show all posts

Wednesday, September 04, 2019

வேட்டைக்குப்போகும் சுடலைமாட சாமி - சிறுதெய்வ வழிபாடு

தென்தமிழகத்தின் வழிப்பயணங்களில்  ஜன்னலில் நம்மை கடந்து செல்லும் காடு, மலை, மரம், மனிதர்களை கடப்பது போலவே ஊர் கடைசியில், வெட்டவெளியில் வலது கையில் வாளும், இடதுக்கையில் சூலமும், பின் இருக்கும் ஆறு கைகளில் மான்மழு, ஊன்றுகோல், உறுக்குத்தடி, கபாலம், திரிசூலம், வல்லாயுதம் ஏந்தி  சிவப்பேறிய கண்களுடனும், முறுக்குமீசையுடனும் வெள்ளைக்குதிரையில் அமர்ந்திருக்கும் காவல் தெய்வத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம்.  அவர் பெயர் சுடலைமாடன்.  அவரைப்பத்திதான் இன்றைய சிறுதெய்வ வழிபாட்டில் பார்க்கப்போறோம்.

சுடலை மாடன் பிறப்பிற்கு இரண்டு கதை சொல்லப்ப்படுது. ஒருமுறை அம்மையும், அப்பனும் பேசிக்கிட்டிருந்தாங்களாம். உலக உயிர்களுக்கு படியளக்கும் நேரம் வந்திட்டுது. நான் போய், அவரவர் விதிப்படி  எல்லாரும் பசியாற அவரவருக்கான உணவை சேரும்படி வழி செய்துட்டு வரேன்னு சொல்லி சிவன் கிளம்பினாராம். உடனே, பார்வதி தன் பக்கத்தில் போய்க்கிட்டிருந்த ஒரு எறும்பை பிடிச்சு ஒரு டப்பாக்குள் போட்டு அடைச்சு வச்சுக்கிட்டாங்க. போன வேலையை முடிச்சுட்டு டயர்டா வந்த சிவன்கிட்ட, என்னங்க போன காரியம் நல்லபடியா நடந்துச்சா?! எல்லா உயிர்களுக்கும் சாப்பாடு போய் சேர்ந்துச்சான்னு கேட்டாங்க. ம்ம்ம் எல்லா உயிர்களுக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்துட்டேன்னு சிவன் சொன்னாராம்.  அப்படியா! அப்ப இந்த டப்பாவில் இருக்கும் எறும்புக்கும் உணவு போய் சேர்ந்திருக்குமான்னு நக்கலா  கேட்டபடி டப்பாவை திறந்து பார்த்தால்,  எறும்பு டப்பாவில் ஒட்டிக்கிட்டிருந்த எதையோ சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சாம். பார்வதி தேவிக்கு தன் தவறு புரிந்தது. பரம்பொருளையே சந்தேகித்துவிட்டேன், என்னை மன்னியுங்கள்ன்னு பார்வதிதேவி சிவனை பணிந்தார். 

சிவனை பத்திதான் நமக்கு தெரியுமே! நெற்றிக்கண்ணை திறந்தாலும், குற்றம் குற்றமேன்னு திருவிளையாடல்லையே பார்த்திருக்கிறோமே! என் மனைவியே இருந்தாலும் என்னை சோதிச்சதால், பூலோகம் போய் வனப்பேச்சியாய் சுற்றித்திரின்னு சாபமிட்டார்.  பார்வதிதேவி கணவனை பிரியனுமேன்னு அழுதாங்க.    மயானத்திலிருந்தபடியே நீ என்னை நினைத்து தியானம் செய்.  உரியகாலம் வந்ததும் என்னை வந்தடைவாய்ன்னு சாப விமோசனம் தந்து பூமிக்கு பார்வதிதேவியை அனுப்பிட்டாங்க.  பார்வதிதேவியும் பூமிக்கு வந்து ஒரு மயானத்தில் வனபேச்சியம்மனாக அமர்ந்தாள்.  மனம் ஒன்றி ஈசனை எண்ணி தவம் புரிந்தாள்..

சிவன் வாக்களித்த நேரம் நெருங்கியது, பார்வதிதேவிமுன் தோன்றினார்.  அன்னையின் சாபத்தை நீக்கினார். "தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என சிவன் கேட்டார். பார்வதி தேவி, ஐயா! நமக்கு இரு புதல்வர்கள் இருக்காங்க. அதில் ஒன்னு கோவிச்சுக்கிட்டு பழனி மலையில் உக்காந்திருக்கு, இன்னொன்னு யானை முகத்தோடு முழுமுதற் கடவுள்ன்ற பேரில் பிசியா இருக்கு.  அவர்களை பிரிந்து வாழும் சூழல். நீங்களும், உலகை காக்கிறேன்னு அடிக்கடி காணாம போய்டுறீங்க! அதனால், எனக்கு துணையாக என்னோடு இருக்கமாதிரி அழகான ஒரு ஆம்பிள்ளை பிள்ளை வேணும்ன்னு கேட்டாங்க. 

உடனே, சிவன், பார்வதி!  அங்க பாரு! மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா?! அப்பிணம் கொழுந்துவிட்டு எரியும்போது,  நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து .உனக்கு ஓர் ஆண்குழந்தை கிடைக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயத்திற்கு வா!" என சொல்லி மறைஞ்சுட்டார்.  வனப்பேச்சியம்மனும் சிவன் சொன்னமாதிரி மயானத்தில் எரிஞ்சுக்கிட்டிருந்த பிணமொன்றின் அருகில் போனாங்க. பிணம் கொழுந்துவிட்டு எரியும் வேளை வந்ததும், அதன் அருகில் போய், தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் பிணத்தின் சதைகள் முத்துக்கள் போல் உருண்டு அன்னையின் மடியில் விழுந்தன. அப்படி விழுந்த சதைதுண்டுகள்  ஓர் சதைப் பிண்டமாக வனபேச்சியம்மாளின் மடியில் இணைந்தன. பிண்டத்திற்கு உயிர் இருக்கு.  ஆனா,  எந்த உறுப்புகளும் இல்லையேன்னு வனப்பேச்சியம்மன் கலங்கினாங்க. வனப்பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே!" என புலம்ப சிவன் அவள்முன்தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி பார்வதி தேவியிடம் கொடுக்கின்றார். 

முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என பேர் வச்சாங்க. பேர் வச்சா போதுமா?! சோறு வச்சியான்னு பின்னாடி பேசிடக்கூடாதுன்னு,  அமுதத்தையே  பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தாள்.  கொஞ்ச காலத்துக்கப்புறம் சுடலைமாடனோடு கயிலாயத்துக்கு போனாங்க.   முருகன், பிள்ளையார் இல்லாம, வெறிச்சோடி கிடந்த கயிலாயம் சுடலைமாடனின் வரவால், புதுப்பொலிவு கண்டது. என்னதான் ராஜா மாதிரி கயிலாயத்தில் இருந்தாலும், சுடலைமாடனின் வயிற்று பசி தீரலை.  ஒருநாள், தீராத பசியோடு சுடலைமாடன் படுத்திருந்தான்.  அவனுக்கு பசியினால் தூக்கம் வரலை.  அவன் பிறந்த  சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த வாசனை கயிலாயத்தின் சுடலை மாடனின் நாசிக்கு வந்து சேர்ந்தது. அன்னை ஊட்டும் அமுது நம்ம பசியை தீர்க்காது. நாம போய் அந்த பிணத்தை தின்று பசியை தீர்த்து வருவோம்ன்னு நினைச்சு கிளம்பினான்.  சுடலைமாடன் சுடுகாட்டுக்கு போய் எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்.

அம்மா தேடுவாங்கன்னு சுடலைமாடன் நல்ல பிள்ளையாய் கயிலாயம் திரும்பி அம்மாக்கு பக்கத்தில் படுத்திக்கிட்டார். இது வாடிக்கையானது. ஒருநாள், பக்கத்தில் படுத்திருக்கும் குழந்தையின்மீது பிணவாடை அடிப்பதை உணர்ந்தாள் பார்வதிதேவி. நடந்ததை ஞானதிருஷ்டியால் அறிந்தவள், குழந்தை வரம் கேட்டால், பிணத்தை தின்னும் குழந்தையை எனக்கு தந்துவிடிட்டீரேன்னு மீண்டும் சிவனிடம் முறையிட்டாள்.  பிணத்தை தின்றதால், சைவலோகமாய்  திகழும் கயிலாயத்தில் இனி சுடலைமாடன் இருப்பது தகாது. அதனால், சுடலையை அழைத்து, நீ பூலோகம் செல் என சிவன் சுடலைமாடனை பணித்தார்.

ஐயனே! என்னை உருவாக்கி வளர்த்தவரான தாங்களே  என்னை பூலோகத்திற்கு செல் என பணித்தால் நான் என்ன செய்வேன் என சுடலைமாடன் சிவனிடம்  முறையிட்டான். சுடலைமாடா!  நீ பூலோகம் செல்லும் காலம் வந்துவிட்டது. அதனால்தான், பிணத்தை உண்ணும் நிலை உனக்கு வந்தது. உனக்கான பணிகள் பூலோகத்தில் காத்திருக்கின்றது. நீ பூலோகம் சென்று அந்த பணிகளை கவனி என சிவன் பதில் சொன்னார்.  சரி, உங்கள் வாக்குப்படி நான் பூலோகம்  போகிறேன். ஆனால், தாங்கள் எனக்குக் கொடை கொடுத்து வரமளிக்க வேண்டும்" சுடலை விண்ணப்பித்தான்.  அப்படியா! உனக்கு எந்த மாதிரியான கொடை வேண்டும் என சிவன் கேட்க,  அதற்கு, ஐந்து வயது பாலகனான  சுடலை,  "எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் எனக்குப் படையல் இட வேண்டும். ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கல் அரிசி சோறும், ஒரு பரணில் சூலி ஆடுகளும், ஒரு பரணில் சூலி எருமைகளும், ஒரு பரணில் சூலி பன்றிகளுமாக, உயிர்ப்பலிகள் படையல் இடவேண்டும்."என்று கேட்டான். இதைக் கேட்டதும் கைலாயமே  அதிர்ந்தது. சைவத்தின் பிறப்பிடமான கயிலாயத்தில் அசைவப்படையலா?! அதும் சிவன் தரவேண்டுமென இந்த சிறுவன் கேட்டுவிட்டானே என முப்பத்து முக்கோடி தேவர்களும் திகைத்து நிற்க, அன்னையவள் பிணந்தின்னும் குழந்தையை வளர்த்ததை எண்ணி கூனிக்குறுகி நின்றாள். 

சிவன் சுடலைமாடனின் வேண்டுகோளுக்கு சம்மதித்தார். சைவதிருக்கோவிலான கயிலாயத்தில் அன்றைய தினம், சுடலைமாடனுக்கு அசைவப்படையல் சிவனின் மேற்பார்வையில் தயாரானது.  நாட்டிய மங்கைகள் நடனமாடினர். சுடலைமாடன் வந்தான். அசைவப்படையலை சிவன், சுடலைமாடனுக்கு படைக்க, அனைத்தையும் ஏற்க மறுத்த சுடலைமாடன், தனக்கு நரபலி கொடுக்க வேண்டுமென, சுடலைமாடன் கேட்க, ஈசனுக்கு கோவம் வந்தது. கோவத்தை அடக்க, காலை தரையில் தேய்க்க, தேவகணியன் தோன்றினான். தன் கையிலிருந்த மகுடியை இசைத்துக்கொண்டே நடனமாடினான். நடனம் உச்சக்கட்டத்தை எட்டும்போது தன் கையை கிழித்துக்கும்கொண்டும். நக்கை கடித்துக்கொண்டதாலும் ரத்தம் பெருக்கெடுத்தது.  அந்த ரத்தத்தையே பலியாய் சுடலைக்கு தேவகணியன் கொடுக்க, அதை நரபலியாய் சுடலைமாடன் ஏற்றுக்கொண்டு, மீண்டும் ஒரு வரத்தினை சிவனிடம் சுடலைமாடன் கேட்க, "ஓயாத பேய்களை அடக்கும் வரம் வேண்டும். தர்க்கம் செய்யும் பேய்களை நான் தடிக்கொண்டு ஓட்ட வேண்டும். நான் கொடுக்கும் மயான சாம்பலால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து போக வேண்டும். நல்லவர்கள் என்னைப் பணியாவிட்டாலும் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். கெட்டவர்கள் என் பாதம் பணிந்தாலும் அவர்களை நான் கருவறுக்க வரம் வேண்டும்" என்று சுடலைமாடன் வரம்  கேட்டான்.

மகனின் கோரிக்கை நியாயமானதென உணர்ந்த சிவன், நீ கேட்ட வரத்தினை தந்தேன் என வரமளித்து, சுடலையை கயிலாயத்தின் தெற்கு வாசல் வழியாய் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். சுடலைமாடனும் வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி சுடலைமாடசாமியாய் பூலோகம் வந்து சேர்ந்தார். திருக்கேதாரம் தொடங்கி அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.  வடநாட்டுப் புண்ணியதலங்களையெல்லாம் தரிசனம் செய்துவிட்டு  தென்னாடு நோக்கி வந்தார் சுடலைமாடசாமி.  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரையும், சிதம்பரத்து நடராஜரையும், திருவண்ணாமலை அண்ணாமலையாரையும் உட்பட அனைஅவரையும் தரிசித்துக்கொண்டே மலையாளதேசத்திற்கு சென்று புண்ணிய தலங்களை தரிசித்தார். அங்கு, பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரை என்ற ஊரை சுடலைமாடசாமி  வந்தடைந்தார். சுடலைமாட சுவாமி கொட்டாரக்கரை வந்து சேர்ந்த சமயத்தில் அங்கே கோயில் கொண்டிருந்த அன்னை பகவதிக்குத் திருவிழா. தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.. தேரிலே சிம்மக்கொடியைக் கண்டதும் தன் தாய்க்குத்தான் திருவிழா நடக்கிறது என்று அறிந்த சுடலைமாட சாமி  அன்னையிடம் அடைக்கலம் கேட்டு வணங்கி நின்றார். 

தேரின்மீதிருந்த அன்னை, கூட்டத்தோடு இருந்த சுடலைமாடசாமியை கவனிக்கவில்லை. அன்னையின் கவனத்தினை ஈர்க்கும்விதமாய், சுடலைமாடசாமி, ஒரே பாய்ச்சலாய் ஓடி தேர் முன் நின்றார். தேரின் அச்சு முறிந்தது. கோவிலின் கொடிமரத்தை உடைத்து, கோவில் கொடியை கிழித்தார். திருவிழா கூட்டத்தினுள் தேவதாசியின் நடனத்தை காமத்துடன் பார்த்துக்கொண்டிருருந்த ஒருவன் தலையை   பிடுங்கி எறிந்தார்.  அவனின் காமத்தை காசாக்கும் எண்ணத்துடன் இருந்த தேவதாசியின்மீது அந்த தலை பட்டதால் அவளும் இறந்தாள். அன்னையே கதியென இருந்த கோவில் பூசாரியையும் அடித்தார் சுடலைமாடசாமி. பூசாரி அன்னையிடம் முறையிட, அன்னை பகவதிக்கு பொறுக்கவில்லை. "யாருடா அது என் கோட்டைக்குள் அத்து மீறியது?" என்று கோபத்தோடு கிளம்பி வந்தாள்.

ருத்ரகோலத்தில் இருக்கும் தன்னை கண்டால், அன்னையின் கோபம் அதிகமாகும் என எண்ணிய சுடலைமாடசாமி ஏழு வயது பாலகனாக உருக்கொண்டு அன்னையின்முன் நடந்து வந்தார். பாலகனைக் கண்டதும் அன்னையின் தாய்மை பெருக்கெடுத்தது.  பாலகனை பக்கம் அழைத்து, யார்?! எந்த ஊர்?! பெற்றோர் யார் என விசாரித்தாள். கயிலாயத்தில் நடந்தவற்றையெல்லாம் சுடலைமாடன் பகவதி அம்மையிடம் சொல்ல,   எனக்கென யாருமில்லை தாயே! அதனால் உங்களை அடைக்கலம் கேட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கவே இப்படி செய்தேன் என சுடலைமாடன்சாமி கூறினார்.


யார் பெற்றால் என்ன?! என்னை அடைக்கலமென நாடி வந்ததால், நீ இனி என் மகன்.  நீ கேட்டவாறு உனக்கு அடைக்கலம் தந்தேன். முதலில் பசியாறு என பகவதி அம்மன் சுடலைமாட சாமியை அழைத்தாள். அன்னையே சிலகாலமாய்,  தங்கள் கோவிலை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன். இங்கு பச்சரிசி சாதம் தவிர வேறு எதும் இங்கு உமக்கு படையல் இடுவதில்லை.  இது என் பசியை தீர்க்காதே என்று சுடலைமாடசாமி சொல்ல,  உனக்கு வேறென்ன வேண்டுமென பகவதி அம்மை கேட்க, "ஒரு கோட்டைப் 
புழுங்கலரிசியில்  பொங்கி ஒரே படையலாக இடவேண்டும்" என சொன்னார்.  

யார் அன்னையும்  சுடலைமாடசாமி கேட்டபடி படையல் இட ஏற்பாடு செய்தாள். பகவதி அம்மையின் கோவிலின் ஈசான மூலையில் உள்ள, ஏழு கடாரம் தங்கத்தினை காவல் காக்கும் பொறுப்பினை சுடலைமாடசாமியிடம் தந்தாள். அன்றிலிருந்து, தங்கத்தினை காவல் காக்கும் பொறுப்பினை திறம்பட செய்துவந்தார் சுடலைமாடசாமி. கூடவே, கோவிலுக்கு வரும், கொடியவர்களை பலிக்கொள்ள ஆரம்பித்தார். இதைக் கண்ட பகவதிக்குப் பொறுக்கவில்லை "மகனே இங்க பார்... என்னை நாடி வருவோர் கெட்டோர்களென்றாலும், நல்லோர்களென்றாலும் அவர்களைக் காப்பது என் கடமை.. நீ அவர்களை வதம் செய்யக் கூடாது" என்று எச்சரித்தாள். இதைக் கேட்ட சுடலை மாடனோ "அம்மையே நீ தரும் சைவப் படையல் எனக்குப் போதவில்லை.. என்ன செய்வது?! என்னைப் படைத்த ஈசன் இப்படிப் படைத்து விட்டார்..  செவ்வாய் மற்றும் வெள்ளி  இரவுகளில் மயானத்தில் நான் வேட்டைக்குச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். அம்மையும் அனுமதி அளித்தாள். வ்வாறாக சுடலைமாடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்கு செல்வதோடு, அன்னையின் புதையலுக்கும் காவல் இருப்பதுமாக இருந்து வந்தார்.


கொட்டாரக்கரை பகவதி அம்மன் ஆலயத்தின் ஏழு கடாரம் தங்க புதையலுக்கு காவல் பொறுப்பிலிருந்தபோது,  கேரள தேசத்தில் நந்தம்புனலூர்ன்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு,  காளிப் பெரும்புலையன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு மந்திரவாதி. மந்திரத்தால் என்னவேண்டுமானாலும் செய்வான். அதனால், அவனுக்கு பயந்த மக்கள் அவனை அந்த ஊருக்கு தலைவனாக்கி வைத்திருந்தனர். ஊருக்கே தலைவனாய் இருந்தாலும், அவனுக்கு குழந்தைகள் ஏதுமில்லை. அது அவனுக்கு பெரும் கௌரவக்குறைச்சலாய் இருந்தது. தன் மனைவி புலக்கொடியாளை பாதளகண்டி ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சென்று ஒருமண்டலம் விரதம் இருந்து அம்மனை வணங்கி வரச்சொன்னான். புலக்கொடியாளும் அன்னையை நோக்கி கடும் விரதமிருந்தபோது, ஔவையார் நோன்பிருந்த வீட்டிலிருந்த ஒரு கொழுக்கட்டை மாவின் ஒரு துளியை காகமொன்று கவ்விக்கொண்டு விரதமிருந்த புலக்கொடியாள் மடியில் போட்டது. கேட்ட வரம் கிடைக்குமென மனநிம்மதியோடு வீடு திரும்பினாள் புலக்கொடியாள். அம்மன் அருளால், அழகிய  பெண் குழந்தையொன்றுக்கு தாயானாள். காளிப்புலையனின் குலதெய்வமான இசக்கியம்மன் நினைவாகவும், ஔவையார்  நோன்பு கொழுக்கட்டையின் மாவின் நினைவாகவும் மாவு+இசக்கி=மாவிசக்கி என பேர் வைத்து கண்ணின் மணியாய் காத்து வளர்த்து வந்தான். மாவிசக்கியும் படிப்பிலும், குணத்திலும்  சிறந்து விளங்கியதோடு யாரோடும் ஈடு சொல்லமுடியாத பேரழகியாய் திகழ்ந்தாள். மாவிசக்கி, சடங்காகி நின்றபோது, தன்னிடமிருந்த சொற்ப ஆபரணங்களை கொண்டு அழகுப்படுத்தி இருந்தாள் புலக்கொடியாள். மகளை கண்ட காளிப்புலையனுக்கு, தன் மகளை இன்னும் பல ஆபரணங்களைக்கொண்டு அழகுபார்க்க ஆசை வந்தது. 

உடனே, மந்திரக்கூடத்துகு  சென்று, காளியை வேண்டி அஞ்சனமை போட்டு   மிகுந்த தங்க நகைகள் எங்குள்ளது என பிரசன்னம் பார்த்தான். அதில்,  கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக இருப்பதை அறிந்தான். அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டான். ஆனால், காவலுக்கு சுடலைமாடன் இருப்பது அவனை யோசித்தான். செவ்வாய், வெள்ளிகளில் சுடலைமாடன் மயான வேட்டைக்கு கிளம்புவதை தெரிந்துக்கொண்ட சுடலைமாடன்,  கோவிலுக்குள் சென்று ஒரு கடாரம் தங்கத்தை கொள்ளையடித்து வீடு வந்து சேர்ந்தான். மயான வேட்டையிலிருந்து வந்த சுடலைமாடன்சாமிக்கு, ஒரு கடாரம் தங்கம் களவு போனதை அறிந்து கடும் கோபம் கொண்டார்.  அன்னை பகவதியிடம் சென்று, நடந்ததை சொல்லி, களவாடியது யார் என கேட்டார். அன்னையோ, எனக்கு நகை பெரிதல்ல. தங்கத்துக்கு ஆசைப்பட்ட எனது குழந்தை ஒருவன் கொண்டு சென்றான். அவனை மன்னித்துவிடு என சுடலைமாடசாமியை தேற்றினாள்.  சுடலைமாடசாமி பிடிவாதம் பிடிக்க, காளிப்புலையனை பற்றி அன்னை சொன்னாள்.  களவு போன தங்கத்தை மீட்டுவர அன்னையிடம்  அனுமதி கேட்டார் சுடலைமாடசாமி, மகனே! வேண்டாம். அவன் மிகப்பெரிய மந்திரவாதி.  உன்னை சிமிழ் ஒன்றில் அடைத்துவிடுவான் என எச்சரித்தாள். அம்மையே! நான் பரமசிவனிடம் வரம் வாங்கி வந்தவன். என்னை யாரும் ஒன்னும் செய்யமுடியாது. எனது காவலிலிருந்த தங்கத்தை கொள்ளை கொண்டவன் குடும்பத்தை பலிகொள்வேன் என பதமிட்டார். அப்போது தெரியும் மிகுந்த சக்திக்கொண்டது இந்த சுடலை மாயாண்டியா?! அல்லது அந்த மந்திரவாதியா?!என சொல்லி  ஆவேசமானார். இனி மகனை கட்டுப்படுத்த இயலாது என பகவதி அம்மனும் திருநீற்றைப்பூசி, வல்லயத்தை(ஈட்டி ) கையில் கொடுத்து ஆசி  வழங்கி அனுப்பி வைத்தாள். 

ஆவேசமாய் சென்ற சுடலைமாடன், மோசக்காரனை நாமும் வேசம் போட்டு மோசம் செய்வோமென பாம்பாட்டி வேடம் கொண்டு சில பாம்புகளை பிடித்து பெட்டியில் அடைத்துக்கொண்டு, நந்தப்புனலூர் வந்து சேர்ந்தார்.  பாம்புகளை காட்டி வித்தை காட்டினான். ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. ஆனால், காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. மாடியில் தலைக்கோதிக்கொண்டிருந்த மாவிசக்கியை கண்ட, சுடலைமாடன், இவளுக்காகத்தானே நகையை கொள்ளைக்கொண்டான். இவளை முதலில் பலிக்கொள்ள வேண்டுமென பண்டார ரூபங்கொண்டு, காளிப்புலையன் வீட்டுக்கு வந்து பிட்சை கேட்டார்.  மாவிசக்கியும் பிட்சையிட உணவினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள், அவள் கிழக்கு வாசலுக்கு வந்தால், வடக்கு வாசலுக்கு போனார் சுடலைமாடன், அவள் வடக்கு வாசலுக்கு வந்தால், மேற்கு வாசலில் நின்று போக்கு காட்டினார். கோவமடைந்த இசக்கி, கிழட்ட் பண்டாரமே! ஓரிடத்தில் நிற்க மாட்டாயா?! என கத்தினாள், நான் அன்னம் கேட்கவில்லை, உன் பெண் கேட்க வந்துள்ளேன் என சுடலைமாடன் சொல்ல, கிழட்டுப்பயலுக்கு நான் பொண்டாட்டியாக வேண்டுமா?! என் தந்தைக்கு தெரிந்தால் தலை துண்டாகும். இங்கிருந்து போய் தொலை என மிரட்டினாள் மாவிசக்க்.


சரி, அங்குமிங்கும் ஓடி, தாகமாய் உள்ளது. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா என சுடலைமாடன் சொல்ல,  தண்ணீரும் தரமுடியாது என மாவிசக்கி மறுக்க, உன்னை உன் தந்தையின்முன்னே கற்பழிப்பேன் என சபதம் செய்கிறார். நடந்ததை தந்தையிடம் சொல்கிறாள் மாவிசக்கி. தனது மகளிடமே வாலாட்டுபவன் யார் என அஞ்சனமைக்கொண்டு பார்க்க, அதில் எதுவும் தெரியவில்லை. மாந்திரீகத்தில் சிறந்து விளங்கும் தனக்கே ஒருவன் அகப்படவில்லையெனில் அவன் மிகுந்த சக்திகொண்டவனாய்தான் இருக்கவேண்டுமென முடிவெடுத்து, தன் மகள் மாவிசக்கிக்கு ஏழு அறைகளை அடுக்காக அமைத்து அதில் நடு அறையில்  மந்திரீக வளையம் அமைத்து அதன் நடுவே தனது மகளை அமரவைத்தான்.  சுடலைமாட சாமி பல்லி(எறும்பு எனவும் சொல்வதுண்டு) உருக்கொண்டு  அறையின் மேற்கூரையிலேறி அங்கிருந்து மந்திர வளையத்தினுள் இருந்த மாவிசக்கிமீது விழுந்து அவளே அறியாமல், அவளை கற்பழித்தார் சுடலைமாடசாமி. மறுநாள் காலையில் தன் நிலை உணர்ந்த மாவிசக்கி அழ, தனது மகளின் நிலைக்கண்ட, காளிப்புலையன் வந்தவன் மிகப்பெரிய சித்துக்காரன். அவனை எதிர்க்க முடியாது என உணர்ந்து வந்தவன் யாரென தனது ஏவல் தேவதைகளிடம் கேட்டான்.  அவைகளும் விடை தெரியாமல் விழித்தன. மாவிசக்கி கர்ப்பமானாள்.  கொள்ளைக்கொண்டவன் குடும்பத்தை பலிக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தார். 


நாட்கள் நகர்ந்தது. மாவிசக்கி நிறைமாத கர்ப்பிணியானாள். ஆலடிப்புதூரிலே காக்காச்சி மலை தாண்டி பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்தனர்.  அவர்கள் நிலத்தை பாழாக்கினால் புலையன் வருவான். அவனைப் பழிவாங்கலாம் என எண்ணிய சுடலைமாடசாமி, விவசாய நிலத்தை நாசம் செய்தார். காளிபுலையனிடம் விவசாயிகள் புகார் செய்தனர். சேதாரத்தை பார்வையிட கிளம்பிய காளிப்புலையனை அவன் மனைவி புலக்கொடியாள் , தான் கொடிய கனவு ஒன்று கண்டதாய் சொல்லி தடுத்தாள்.  மனைவியிடம், தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாது எனக்கூறி காக்காச்சி மலைக்கு போனான் காளிப்புலையன். அங்கு மைப்போட்டு பார்க்கும்போது, தானே அவன்முன் பிரசன்னமானார் சுடலைமாடசாமி. தான் யார் எனச்சொல்லி, என் அன்னையின் ஆலயத்துனுள் புகுந்து கொள்ளையடித்த உம்மை பழிவாங்கவே வந்தேன் என ஓங்கி ஓர் அடி அடித்தார் சுடலைமாடசாமி. கதிகலங்கிபோனான் புலையன். 

உமது வலிமை தெரியாமல் உமது காவலில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துவிட்டேன்.  என்னை மன்னித்து விடு என மன்றாடினான் காளிப்புலையன்.  இப்பொழுது தெரிகிறதா?! களவு கொடுத்தவனின் மனநிலை. எமது செல்வத்தை கொள்ளையடித்த வலி தெரியவே உமது மகளின் கற்பை சூரையாடினேன். உமது காவலில் இருந்த நிலத்தை பாழ்படுத்தினேன். யாருக்காக, நீ தங்கத்தை கொள்ளையடித்தாயோ அவளை பலிகொடுத்தால் உமக்கு மன்னிப்பு தருகிறேன். உன்னை மன்னிக்கிறேன் என சுடலைமாடசாமி சொல்ல, சரி, என் மகளை பலிக்கொடுக்க சம்மதிக்கிறேன். பதிலுக்கு நீ என் சிமிழுக்குள் அடைபடவேண்டுமென கோரிக்கை வைத்தான். சரி  என சம்மதித்தார் சுடலைமாடன், "ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம் வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில் செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே படையலாய் போட்டு சுடலைமாடசாமியை திருப்திப்படுத்த நினைத்தான் புலையன். படையலை ஏற்ற, சுடலைமாடசாமி, அடேய்! நான் கேட்ட உன் மகள் எங்கே என ஆவேசத்தோடு புலையனின் நெருங்கினான். மகளா?! உயிரா? என யோசித்த புலையன் உயிர் என முடிவெடுத்து, மகளை அழைத்து வந்து, கைகால்களை கட்டி வைத்து வயிற்றை கீற கத்தியை எடுத்தான்.




பெற்ற மகளென்றும் பாராது, பலிகொடுக்க துணிந்த நீ, . நான் மரித்து ஏழு நாட்களுக்குள் செத்துப் போவாய்." என்று சாபமிட்டு அழுதாள்.. மகளின் கதறலை காதில் வாங்காமல், வயிற்றை கீறி, கருவை வேரோடு பிடுங்கி, தலைவாழையிலையில் படையல் வைத்தான். படையலை ஏற்ற சுடலைமாடசாமி, புலையனின் சிமிழில் அடைந்தார். சுடலைமாடனை அடைத்துவிட்டோம். இனி, பகவதி அம்மன் கோவில் தங்கம் முழுக்க கொண்டு வந்துவிடலாம் என எண்ணினான் புலையன். மாடனை அடைத்த சிமிழை அருகிலிருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் எறிந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். புலக்கொடியாள் நீர் எடுக்க சென்ற புலக்கொடியாள், கணவனுக்கு சமைக்க நேரமானதால், அதிக தூரம் செல்ல முடியாது என யாரும் புழங்காத அந்த பாழடைந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

புலையனும் உணவு உண்ண அமர்ந்தான். குடிக்க தண்ணீரை செம்பில் நிரப்பி புலையன் அருகிள் வைத்தாள். தண்ணீர்  குடிக்க சொம்பை எடுத்த புலையன் கண்ணில் சிமிழ் பட்டது. ஐயோ! இந்த சிமிழ் இங்கு வந்தது எப்படி!? என திகைத்தபோது, புலக்கொடியாள் அவளும் திகைத்து, எப்படி வந்தது, என்ன இருக்கிறது என அறிய செம்பிலிருந்த சிமிழை எடுத்து திறந்தாள், சிமிழிலிருந்து ஆங்காரமாய் வெளிவந்த சுடலைமாடசாமி, மகளுக்காக கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்த மாபாதகன், தன் உயிர் காக்க, பெற்ற மகளையே பலிக்கொடுத்த பாவி, இனி நீ உயிரோடு இருக்கக்கூடாது என என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன் என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனையும், அவன் மனைவி புலக்கொடியாளையும் பலிக்கொண்டார்.



அன்னையின் ஆலயத்தில் களவாடிய ஒரு கடாரம் தங்கத்தோடு கொட்டாரக்கரை திரும்பி அன்னையிடம் சேர்ப்பித்தார். அன்னையே! இப்போது புரிகிறதா உனது மகனின் பராக்கிரமம்?! என பணிந்தார். திரவியங்களை மீட்டது சந்தோசம், உமது பராக்கிரமத்தினை மெச்சினோம். ஆனா, நீ இப்படிப் பழிவாங்குவதெல்லாம் கூடாதப்பா. தெய்வங்கள் மனிதர்களை ரட்சிக்க வேண்டும். இனி,  நீயும் வரங்கொடுக்கும் தெய்வமாக வேண்டும்" என்று அவனை ஆசீர்வதித்தாள். "அப்படியே செய்கிறேன் அன்னையே.. எனக்கு விடை கொடு" என்று சொல்லி அன்னையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொட்டாரக்கரையை விட்டுப் புறப்பட்டார். நேராக குற்றாலம் வந்து சேர்ந்தார். குற்றால அருவியில் குளித்து விட்டு திருக்குற்றால நாதரையும், அம்பிகையையும் வணங்கினார்... பின்னர் குற்றாலப்பதியிலேயே அருளும் தெய்வமாகி வரமருள ஆரம்பித்தார்.
ஊர்க்கடைசியில் அல்லது மயானத்துக்கு அருகில் சுடலைமாடனுக்கென கோவில் உண்டு. கோவில்ன்னா ஆகமவிதிப்படி ராஜகோபுரம், பள்ளியறை, கருவறை, மடப்பள்ளி என இருக்காது. மேற்கூரை இன்றி, வெட்டவெளியில் ஒரு பீடத்தின்மீது சுடலைமாடன் வீற்றிருப்பார். நித்திய பூஜைகள் என எதுவும் கிடையாது. சுடலைமாடனை குலதெய்வமாய் ஏற்றோர் வழிபாடு செய்தால் மட்டுமே உண்டு. மற்றபடி வருடத்திற்கு மூன்று நாட்கள் கொடைவிழா நடக்கும். வியாழக்கிழமை இரவில் குடியழைப்போடு விழா தொடங்கும். வெள்ளிக்கிழமை பலவித பட்சணங்கள், காய்கறிகள், பழங்கள், அசைவமென அன்னம் படைப்பு,  உச்சிகாலத்தில் தீபாராதனையும் நடக்கும்.
Image may contain: people standing and food

பலிகொடுத்த ஆடு, மாடு, பன்றியின் ரத்தம் கலந்த சாதம் ஒரு கலயத்தை ஒரு கையிலும், மறுகையில் தீவட்டியுடன்   மாலையில் சுவாமி மயானம் செல்வார். இதனை வேட்டைக்கு செல்லுதல் சொல்வாங்க. சாமி வேட்டைக்கு போகும்போது யாரும் எதிரில் வரக்கூடாது.  அப்படி எதிரில் வந்தால் மூன்று நாளுக்குள் மோட்சம் அடைவர் என நம்பிக்கை. கலயத்தில் இருக்கும் ரத்தச்சோற்றை ஊரின் நான்கு எல்லையில் வானத்தை நோக்கி சாமி ஆடுபவர் இறைப்பார். இதனால், தீய சக்திகள் ஊருக்குள் வராது என்பது நம்பிக்கை.  சாமி வேட்டைக்கு சென்று வந்த பின்னர் அருள்வாக்கு சொல்லுதல் நிகழும்.  அடுத்த நாள் சனிக்கிழமை பூப்படைப்பு தீபாராதனை, மாலையில் கணியன் கூத்துடன் விழா முடியும்.  கணியன் கூத்தில் கொடைவிழா நடத்துவபர்களின் குடும்பம் உட்பட, ஊரார், ஊரிலிருக்கும் ஆடு,மாடுகள் நலமோடு வாழவும், மழை பெய்து நிலவளம் செழிக்கவும் சுடலமாடனே வாழ்த்துவது போல இருக்கும்.  சுடலைமாடனின் படையலில் சுருட்டு, பிராந்தி,  அசைவம், பொரி, கடலை என கட்டாயம் இடம்பெறும். 

Image may contain: 1 person, outdoor


கோபம் தெறிக்கும் கண், வேல், வாள்ன்னு இருந்தாலும், தீயவர்களை மட்டுமே அழிக்கும் குணமுடையவன் இந்த சுடலைமாடன். பொருளை களவு கொடுத்தவர்கள், அநீதிக்கு ஆளானவர்கள் முறையிட்டால் ஓடோடி வருபவர். அவரை வணங்கும்போது சொல்லவேண்டிய மூலமந்திரம்..
"ஹரி ஓம் அகோரமாடா கெம்பிரமாடா 
ஆகாசமாடா பகவதி புத்திரா 
வீராதி வீரா வாவா ஐயும் கிலியும் சௌவும் 
நசி மசி வாவா சுவாகா"

மீண்டும் ஒரு சிறுதெய்வத்தின் கதையோடு சந்திப்போம்!!

நன்றியுடன்,
ராஜி.

Friday, May 31, 2019

நீலக்கடலின் ஓரத்தில் வீற்றிருக்கும் பகவதி அம்மை - புண்ணியம் தேடி..

கடந்த சிலவரங்களுக்கு முன் கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் பற்றி பார்த்தோம். கோடை விடுமுறையில் ஊர் சுற்ற போயிட்டதால் சரிவர வரமுடியல.  அதன் தொடர்ச்சியாய் இந்தவாரம் பதிவில் கன்னியாகுமரி பகவதி அம்மையை தரிசனம் செய்யப்போறோம். இந்தக்கோவிலின் வரலாற்று காலம் என்பது நாம் நினைப்பது மாதிரி 2000 வருசமோ இல்ல 3000  வருசமோ இல்லை. இது பல யுகங்கள் தாண்டியது. இதில் பலவாறானவை திரிபு கதைகளாகவே இருக்கு. ஆதிசக்தி அசுரனை வதம் செய்ய கன்னியாக நின்ற இடம் என்பதுவரை உண்மை. அதேசமயம் ஆதிபரம்பொருள் அன்னையை மானிடப்பிறவியாக பிறக்க வைத்து தர்மத்தை அழிக்கவைத்ததாக சில வரலாறுகளில் சொல்லப்பட்டாலும்,  செவிவழிக்கதைகளில் வேறுவிதமாக சொல்லப்படுகின்றது, அதனால் உண்மையான வரலாறு அந்த அம்மைக்குத்தான் தெரியும். எந்த அசுரர்களாலானும் அவர்களை நினைத்த மாத்திரத்திலேயே அழிக்கும் வல்லமை அந்த ஆதிசக்திக்கு உண்டு. யாரோ சொல்லிய கதைகளை சொல்வதைவிட அன்னையின் கோவிலுக்கு செல்லுவது எப்படி என்று மட்டும் நாமப் பார்க்கலாம்
இதுபற்றிய விரிவான உண்மையான கதைகள் திருவிளையாடல் புராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியில் குமரி முனைக்கு அப்பால் பனியால் உறைந்த பெரு நிலமொன்று இருந்தது என்றும், வேட்டையாடுதலே அங்கு வாழ்ந்தவர்களின் தொழிலாக இருந்தது என்றும், அந்த பனிநிலமே அவர்களது வாழ்வாதாராமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு மக்கள் பெருவாரியாக அந்த பனி நிலத்தில் குடியேற தொடங்கினர்.  பல நூறாண்டுகள் இப்படியே குடியேற்றம் தொடர்ந்தன. ஒருக்காலத்தில் கதிரவனின் வெப்பம் அதிகரித்தது பனி உருக ஆரம்பித்தது. புதுப்புது நதிகள் உருவாயின. நதிக்கரைகளில் மக்கள் ஆங்காங்கே நிரந்தமாய் குடியமர்ந்தனர். வெப்பத்தினால் பனி பெருநிலம் மெல்லமெல்ல உருகி கடலில் கரைந்தது. பல காலமாய் தாங்கள் கண்டு வந்ததும், தங்கள் மூதாதையர் வாழ்ந்த தென் பெருநிலம் கடலாய் கரைவதை கண்டு திகைத்து நின்றனர் இளைய தலைமுறையினர்.
A hypothetical map (believed to originate with Ernst Haeckel) depicting Lemuria as the cradle of humankind, from the lost continent. Circa 1876.

பனிபெருநிலம் அழிந்தபின் எஞ்சிய நிலத்தின் முனையில் எருது என்ற ஒரு மலை மட்டும் மிஞ்சியது. அந்த  மலையின் அடிவாரத்தில் இருந்த மக்கள்,  மீன் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்கினர். அவ்வூர் மூன்று புறமும் கடலால் சூழ்ந்து, வடக்கில் கடம்பவனம் எல்லையாக நின்றது. கடம்பவனத்தில் வாழ்ந்தது நாகர் இனம். கடம்பவனத்திற்கப்பால் இருந்தது மகேந்திரமலை, நாகராஜா கோவில் ஸ்தலவரலாற்றிலேகூட இந்த மகேந்திரகிரிமலையில் சுமார் 20000 வருடங்களுக்கு முன்னமே நாகர்கள் வசித்து வந்தனர் என்றும் அவர்கள் நகராஜாவை வழிபட்டுவந்தனர் என்றும் சொல்லப்பட்டிருக்கு.   அம்மலையில் வாழ்ந்தது மிகவும் மூத்தக்குடியான சூரர் இனம், அம்மலையின் கிழேக்கே இருந்தது மிக உயர்ந்த மலை பெருமலை என்றும் மேருமலை என்றும் அழைக்கப்படும் மலை, தெய்வங்கள் வாழ்வதாய் நம்பபடும் மலை. மகேந்திரமலையில் உருவாகி ஓடியது பஃறுளி ஆறு, கடம்பவனத்தில் உருவாகி மீனவர் நிலம் வழியாக கடலில் கலந்தது குமரியாறு. இப்படித்தான் குமாரியின் வரலாறு ஆரம்பிக்கிறது.
A hypothetical rendering of Lemuria from 1893.Edouard Riou/New York Public Library

எருது மலை அடிவாரத்திலிருந்த மீனவபழங்குடியின் ஊர் முழுதும் மணல் பரவி இருந்ததால் அவ்வூர் மணலூர் என்று அழைக்கப்பட்டது. மழை என்பதை அவ்வூர்மக்கள் கண்டு ஆண்டு நான்காகியது. கடலே ஆவியாவிடும் என்ற நிலை ஏற்பட்டது. மரங்கள் மெல்ல தன் அடையாளங்களை இழந்தது. இலைகளில்லாமல் வெறும் தண்டு மட்டுமே நின்றது. மீனவர்கள் ,தங்கள் தெய்வத்திற்கு மீன்களையும், முத்துக்களையும் காணிக்கையாய் தந்து மழைக்கு வேண்டிக்கொண்டனர். இதிலிருந்தே வழிபாடுகள் தொடங்குகிறது. லெமூரிய கண்டம் கடல் கோளால் அழிந்தபோது கன்னியாகுமரி கடற்கரையின் எல்லையானது என்பது மட்டும் சங்க இலக்கியங்களின்மூலம் அறியமுடிகிறது. இப்ப இருக்கிற இந்த கோவில் பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது என்பது மட்டும் தெளிவான வரலாறாக இருக்கிறது .
நாம கன்னியாகுமரி போகும்போது இந்த அம்மையை மட்டும் தரிசிக்காம அங்குள்ள தியாக சௌந்தரி, பால சௌந்தரி, காலபைரவர் போன்ற சந்நிதிகளிலும்,பரசுராமர் பிரதிஷ்டை செய்த விநாயகர் கோவில்லயும் வழிபட்டு, பின் இந்த அம்மையை தரிசித்தல் உத்தமம். கன்னியாகுமரியிலே பாலசௌந்தரி, தியாக சௌந்தரி என இரு தோழியர் சூழ வாலைகுமாரி அன்னை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள். இதுவே கன்னியாகுமரியின் சிறப்பு. காமாட்சியும் மீனாட்சியும் விசாலாட்சியும் அபிராமியும் கன்னியாகுமரியும் காந்திமதியும், கற்பகாம்பாளும் ஒன்றுதான்!! கன்னியாகவே, குழந்தையாகவே கோவில் கொண்டிருக்கிறாள் கன்னியாகுமரியிலே.  மற்ற எங்கும் சிவமும் சக்தியுமாகதானே காட்சி தருவது வழக்கம். கன்னியாகுமரியிலோ முழுக்க சக்திமயம். ஆதி சக்தியே! அகிலலோக அன்னை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள். அதுதான் இந்த கோவிலின் தனித்தன்மை.
       கன்னியாகுமரி கடல் 1915ம் வருடத்திய புகைப்படம்

இந்தக்கோவிலை பற்றி நிறைய பார்த்துவிட்டோம். இருந்தாலும், இந்த கோவிலின் வரலாறு செவிவழிக்கதைகள்மூலம் நிறைய இடங்களில் இந்த அம்மனை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகாலம் துவங்கியது முதல் இந்த ஸ்தலத்து பகவதி அம்மனை வழிபட்டதாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களிலும் இந்த அம்மனை பற்றியம் வழிபாடுபற்றியும்  கூறப்பட்டுள்ளது
                               The Kanyakumari's View with Kumari Amman Temple in 1925.

1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரஹம்சருக்கு பகவதி அம்மைதேவி ஆசி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் ஒரு குழு அமைத்து இந்த ஸ்தலத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள். இதில் சுவாமி பிரமானந்தா (1863-1922) (Brahmananda), நிர்மலானந்தா (1963-1938) (Nirmalananda) ஆகியோர் இக்காலகட்டங்களில் இங்கு வந்து தேவிக்கு பணிவிடை செய்துள்ளனர். பின்னர் 1935-35ம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து தேவிக்கு பூசை செய்துவந்தனர்.
The Kanyakumari Temple and the twin Vivekananda Rock situated to its south-east, at the confluence of three seas.
அப்படி வந்த பெண்களில் ஏழுபெண்கள் குழு மூலம் 1948ல் இங்கு 
சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கேரளாவில் பாலக்காடு, ஒட்டப்பாளையம் போன்ற  இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. பெரிபிளசு இவரது காலம்  (கி.பி. 60-80) (Periplus) இவர் தனது பயண குறிப்புகளில் தேவி கன்னியாகுமரி அம்மன் பற்றியும், பிரம்மச்சர்யம் பற்றியும், அன்னையின் வழிபாடு பற்றியும் எழுதி இருக்கிறார். இந்த இடம்  பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் பரவ வம்ச அரசர்களின் ஆட்சியில், திருவிதாங்கூர் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1947 இந்தியாவின் சுதந்திரத்திற்குப்பின் இந்திய சமஸ்தானத்துடன் இணைந்தது.
இதுதான் வடக்குபக்க வாயில். இந்த வாசலே இப்பொழுது பிரதான நுழைவாயிலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திருக்கோவிலுக்கு மூன்று பக்க வழிகளிலிருந்தும் செல்லலாம். ஆனால் எல்லாவழிகளும் இந்த வடக்கு  வாசலில் வந்துதான் சேருகின்றன. இதுதான் பிரதான நுழைவாயில். இதன் பக்கத்திலதான் செருப்பு பாதுகாப்பு இடமும், சில கடைகளும் இருக்கு.  ஊசி, மணி, பாசி வியாபாரிகள் நம்மை விடமாட்டார்கள். இதைவிட பெரிய கொடுமை என்னன்னா நரிக்குறவர்கள் ஒரு புலிநகம்ன்னும், நரிப்பல்லுன்னும் ஒன்னை வச்சுக்கிட்டு வச்சி அதுக்கு யானைவிலை சொல்லுவாங்க. வன அதிகாரிகளுக்கு தெரியாம வச்சிருக்கிறம்பாங்க. வெளியே தெரிஞ்ச பிரச்சனைன்னு நம்ம அவசரப்படுத்துவாங்க. நம்ம மூஞ்சியில்தான் ஏமாளினு நெத்தியிலையே எழுதி ஒட்டிருக்கே! ஆனா நாம அறிவாளிப்பிள்ளைன்னு அவங்களுக்கு தெரியல! அது பிளாஸ்டிக்கானல் ஆனது. விரல்,ரோமங்கள் கூட பைபர் மூலம் தத்ரூபமாக இணைச்சு இருக்கிறாங்க ,யாரும் இவங்ககிட்ட ஏமாறவேண்டாம் .
எங்க ஊர்லையே நரிக்கொம்புன்னு ஒண்ணை காட்டி இதை பர்ஸ்ல வச்சா பணம் வருன்னு தலையில கட்டிட்டாங்க. நாமளும் பர்ஸில் பணம் சேர்ந்தா சரின்னு வாங்கிவச்சுட்டேன். .அதன் பிறகுதான் ஒருநாள் யோசிச்சேன் நரிக்கு ஏது கொம்புன்னு இதை ஏன் சொல்லுறேன்னா இது ஒரு ஏமாத்து வேலை. எந்த மிருகத்தின் உடல்பாகங்களையும் பர்சில் வைக்கக்கூடாது. அந்த மிருகத்தை வேட்டையடித்தான் அதை எடுத்திருப்பாங். அப்ப அது கொல்லப்படும்போது அதன் வலியும், வேதனையும் அந்த உறுப்புகளின் பதிவுகள் இருக்கும். நாம் அதை உபயோக படுத்தினா எதிர்மறையான எண்ணங்களை நமக்குள்ளே நாமே ஏற்படுத்திக்கொள்ள வழிவகுத்துவிடும் . அதுமட்டுமில்லாம கிருமித்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
இது கோவிலின் வடக்கு வாசல். இதுவழியாகத்தான் நாம அம்மையை தரிசிக்க செல்லவேண்டும். இங்க சாதாரணநாட்களில் கூட்டமில்லாமல் தரிசனம் செய்யலாம் . மத்தபடி கட்டண தரிசனமாக 20 ரூபாய் வசூலிக்கிறாங்க. நம்மளுடைய ஈரத்துணிகள், உடைமைகள் போன்றவைகளை ,கோவிலினுள்ளே 5 ரூபாய் கட்டணத்தில் பாதுகாத்துவைப்பார்கள். மொபைல் கேமரா கட்டாயம் உபயோகப்படுத்தக்கூடாது .
இந்த கோவிலில் நம்மூர்காரர்களை விட, வடஇந்திய மக்களும், மலையாள தேசத்து மக்களும்தான் நிறைய தரிசனம் பண்றாங்க. கோவில் முழுக்க முழுக்க மலையாள தேசத்துமுறையிலையே ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆண்கள் மேல்ச்சட்டை அணியத்தடை. ஏன்னா திருவிதாங்கூர் மகாராஜாக்கள் வந்து இந்த அம்மையை வணங்கும்போது இடுப்பில் மட்டும்  முண்டு உடுத்து எளிமையாக வழிபடுவார்களாம்.  அதையே மக்களும் பின்பற்றி இந்த மேல்ச்சட்டை அனுமதியின்மை பழக்கம் கேரளா கோவில்களில் வந்தது என்று சொல்லப்படுகிறது.
கோவிலினுள் கூட்டம் அதிகமா இருந்தா சுற்றி போகும் வழியாக செல்ல விடுவார்கள். இல்லையெனில் நேரடியாக சென்றுவிடலாம். 20  ரூபாய் டிக்கெட்டும் தர்மதரிசன வரிசையும் கொடிமரத்திற்கு முன்னர் வந்து இணைகிறது. எப்படி இருந்தாலும் தள்ளுமுள்ளு தரிசனம்தான் பக்தர்கள் செய்கின்றனர். இதில் ஐயப்ப மலை சீசனில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
சரி,  கோவிலை நன்றாக சுற்றிப்பார்க்கலாம் என தரிசன கூட்டத்தில் சென்றோம். நேரடியாக அம்மையை போய் பார்ப்பதற்கு பதிலாக,கால்கடுக்க நின்று கோவிலின் அழகை ரசித்து செல்வதே நல்லது. குறுக்கு வழியில் செல்வோருக்கு அம்மன் உடனியாக அருள்புரிவான் என்பதெல்லாம் இல்லை. பக்தரின் மனக்குறைகள் அம்மனுக்கு தெரிந்தே அருள் புரிபவள் இந்த பகவதி அம்மை. இந்த வழியானது கட்டண தரிசனம் செல்லும் வழி. நாங்கள் சென்ற நேரம் கட்டண தரிசனத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது,
ஒருவழியாக சுற்றிவந்து கொடிமரத்திற்கருகே வந்துவிட்டோம். அதுவரை நேராக வந்துகொண்டிருந்த கும்பல் சில வடஇந்தியர்களால் தள்ளுமுள்ளு வரிசையாகிவிட்டது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை ஏன்னா பல ஊர்களுக்கும் போகவேண்டியது இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில தரிசனத்தை முடித்துவிடவேண்டும் என்ற அவசரம். இங்க கோவிலில் பணிபுரியும் அனைவரும் பல மொழிகளை சரளமாக பேசி கூட்டத்தை ஒழுங்கு படித்திக்கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது.
கொடிமரத்தை தாண்டி பிரகாரத்தினுள் நுழையும்போது அங்கே அணையா விளக்கு இருக்கிறது. அதற்கு நல்ல எண்ணெய் வாங்கிவிடுவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டினர். அர்ச்சனை சீட்டுகள் , குங்கும பிரசாதங்கள் எல்லாம் இங்க விற்பனை செய்கின்றனர். அதையும் தாண்டி ஒரு நிலை வாசலை கடந்து அம்மையை தரிசனம் செய்யவேண்டும். இதோ அம்மையை கண்டுவிட்டோம். ஒரு குமரிப்பெண் எப்படி தாவணி அணிந்து இருப்பாளோ!(இப்பத்திய குமரிகள்லாம் லெக்கிங்க்ஸ், ஜீன்ஸ் மிடி போடுதுங்க) அதேப்போல் சந்தன காப்பு அலங்காரத்தில் மூக்குத்தி மின்ன அழகு சொரூபிணியாக காட்சி கொடுக்கிறாள். அங்கே நம்பூதிரிகள் பிரசாதத்தை நம் கையில் படாமல் கொடுக்கின்றனர் .தட்டில் காசு போட்டவருக்கும் போடாதவருக்கும் இலைபிரசாதம் கொடுக்கப்படுகிறது. ஒருவழியாக பிரசாதத்தை வாங்கிக்கொண்டு பிரகாரம் சுற்ற ஆரம்பித்தோம். மூலையில் கன்னிமூல கணபதி அருள்புரிகிறார்
உள்பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது பாலசௌந்தரி சந்நிதி இருக்கிறது. அங்கு பக்தர்கள் நெய்விளக்கு போடுகின்றனர். முன்பெல்லாம் கோவிலை சுற்றி உள்பிரகாரத்திலையே வலம் வரலாம் இப்பொழுது அப்படியே வெளியே செல்லும் வழி வரைதான் செல்லமுடிகிறது. ஒருவழியாக பகவதி அம்மையை தரிசனம் செய்துவிட்டு வெளிப்பிரகாரத்தில் வந்தோம். அங்கதான் நவகிரக சன்னதியும் இருக்கிறது. இங்கே பிரசாத ஸ்டால் மற்றும் பகவதி அம்மனின் படங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். இங்கே விற்கப்படும் தாழம்பூ குங்குமம் நல்லவாசனையாக இருக்கிறது.எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கோவிலின் வெளிவாசலுக்கு வந்தோம்.
கோவிலின் வெளியே  மாடன் சுவாமி சிலை இருக்கிறது. அங்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன.மேலும் இங்கே ஒரே இடத்தில சூரிய உதயமும், அஸ்தமனமும் பார்க்கலாம்.இதற்காகவே தினம் காலை மாலை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 
மேலும்  முக்கடல் சங்கமிக்கும்  இடம் என்பதும் நம் நாட்டின் தெற்கு எல்லையாக இந்த கன்னியாகுமரி பகவதி அம்மை கோவில் இருக்கிறது என்பதும் ,சுனாமி நேரத்தில்கூட கோவிலை சுற்றி உள்ள இடங்களில் எல்லாம் ஆழிப்பேரலைகள் நாசமாக்கி சென்றுவிட்டபோதும் ,கோவிலை சுற்றி ஒரு பாதிப்புகூட இல்லாமல் இந்த பகவதி அம்மை காத்து அருளினாள். எது வந்தாலும் நான் இருக்கிறேன் என்று பக்தர்களை பார்த்து மெல்லிய சிரிப்புடன் கன்னியாகுமரி கடற்கரை ஓரம் கொலுவீற்றிருக்கும் இந்த பகவதி அம்மையை வணங்கி நாமும் விடைப்பெற்று மீண்டும் வேறு ஒரு கோவிலில் இருந்து உங்களை சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

நன்றியுடன்
ராஜி 

Friday, February 22, 2019

சோட்டாணிக்கரை பகவதி அம்மன்-புண்ணியம் தேடி

புதன்கிழமை அன்னிக்கு ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கல் வச்சத டிவில பார்த்தேன். அடடா! முன்னமயே தெரிஞ்சிருந்தா ஒரு பதிவை தேத்தி இருக்கலாமே! இப்ப ஒரு பதிவு போச்சுதேன்னு வெசனப்பட்டு கெடக்கும்போதுதான் பண்(பைம்)பொழியில் இருக்கும் திருமலை முத்துக்குமாரசுவாமி கோயிலை பார்க்கப்போகும்போது,  அப்படியே செங்கோட்டை வழியாக கேரளாவுக்குள் தென்மலை, புனலூர் பாதையில் சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசிக்க போனது நினைவுக்கு வந்துச்சு. சரி, அதை வச்சு ஒரு பதிவு தேத்தலாமேன்னு வெசனப்பட்டுக்கிடந்த மனசை பதிவையும் தேத்தியாச்சு.  இன்னிக்கு நாம பார்க்கபோற கோவில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில். 
பொதுவா கேரளாவில் பகவதி அம்மன் வழிபாடு மிகவும் பிரபலமானது. ஏன்னா திருவிதாங்கூர் சமஸ்தானங்களில் பகவதி அம்மனுக்கென்று பல விஷேச ஸ்தலங்கள் இருக்கு. பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானங்களும் அதன் கூட்டு ராஜ்யங்களும் இருந்த மங்களூர் முதல் கன்னியாகுமரிவரை பகவதி வழிபாடு கொல்லூர் மூகாம்பிகை முதல் கன்னியாகுமரி கன்னிகா பரமேஸ்வரியான பகவதி அம்மன் கோவில்வரை பிரசிஸ்த்தி பெற்ற பல கோவில்கள் இருக்கின்றன. தெய்வத்தின் சொந்த நாடு என்று சொல்லப்படுகிற கேரளத்தின் கலாச்சாரம், வாழ்க்கை முறைக்கேற்றவாறு இந்த கோவிலின் பூஜைகள் மற்றும் சடங்குகள் பின்பற்றப்பட்டு, பில்லி, சூனியம், வசியம் மாதிரியான தீய சக்திகளால் பாதிப்படைந்தவர்கள் அதிலிருந்து மீள வழிபடுவதற்கென்றே  கேரளாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற கோவில்தான்  நாம இப்ப பார்க்கப்போற “சோட்டாணிக்கரை பகவதி அம்மன்” கோவில்.
இதுதான் கோவிலுக்கு செல்லும் வழி,இந்த கோவில் எப்ப உருவாக்கப்பட்டதுன்னு  சரியான தகவல் இல்லன்னாலும் பல்வேறு கதைகள் இக்கோவில் பத்தி சொல்லப்படுது. புராணங்களின்படி  கேரளாவிலுள்ள  காலடியில் பிறந்து சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன் கேரளபூமியில் தோன்றி ஆதிபாரத கண்டம் முழுவதும் “அத்வைத” தத்துவத்தை பரப்பிய “ஸ்ரீஆதி சங்கரர்” தன் சொந்த நாடான கேரளத்தில் சரஸ்வதிதேவிக்கு ஒரு கோவில் இல்லையே என்று எண்ணி அந்த சரஸ்வதிதேவியை இங்கு கோவில் கொள்ள செய்வதற்கு கடும் தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இணங்கிய சரஸ்வதிதேவி இங்குவந்து கோவில் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கிழக்கு மண்டபமே கோயிலின் முக்கிய நுழைவு மண்டபமாகும். மண்டபத்தின் நடுவில் மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.
நாம் சென்றதும் நேரே கொடிமரம் காட்சியளிக்கிறது. அதிகாலை 4  மணிக்கே நடைதிறந்து விடுகிறார்கள். அப்பொழுது தரிசனம் செய்தால் கூட்டமில்லாமல் தரிசனம் செய்யலாம். இந்த இடத்தின் ஓரத்தில் பிரசாத கவுண்டர் இருக்கிறது. கோவிலின் வெளிப்பிரகார சுவர்களில் கம்பிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  திருவிழா மற்றும் விசேச காலங்களில் இந்த விளக்கை ஏறுவார்களாம். அதுபோல விளக்கு நேர்ச்சை என்றொரு வழிபாடு உண்டாம். அதற்கும் கட்டணம் செலுத்தி விளக்கு ஏற்றுவார்களாம். கொடிமரத்தின் வழியே நேராக சென்றால் பகவாதியம்மனை தரிசனம் செய்யலாம். அங்கே ஒரு மேடையின்மேலே பகவதி அம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். எல்லா கோவில்களையும் போல கருவறைக்குள் பிரசாதம் கொடுப்பதில்லை.  தீபாராதனை தட்டுகள்கூட வெளிப்பிரகாரத்தில் கும்பிடுவதற்காக கொண்டுவருகிறார்கள். அதேபோல் பிரசாதமும், தீர்த்தமும் அம்மனை தரிசித்து வெளியே வரும்போது பக்கத்திலிருக்கும் மண்டபத்தில் கொடுக்கிறார்கள் .
அம்மனை தரிசனம் செய்து வெளியேவரும்போது எதிரில் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. இதை நவராத்திரி மண்டபம்ன்னு சொல்றாங்க. வலதுபக்கம் ஒரு பெரிய பிரகாரம் இருக்கு. அந்த இடத்தில இருக்குற கொடிமரத்து பக்கத்திலயே நின்று கூட்டம் இல்லாதபோது தேவியை அழகாக தரிசனம் செய்யலாம் .அதுப்போல அடுத்திருக்கிற சரஸ்வதி மண்டபத்தில்  முதன்முதலில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் பூஜைகளை செய்கின்றனர்.  அந்த பிரகாரத்துலயே தென்மேற்கு மூலையில் கிழக்குநோக்கி அருள்பாலிப்பவர்.   சிவபரம்பொருள் அருகிலேயே கணபதி சந்நிதி. அங்கிருந்து தெற்குதிசையில்  இருப்பது நாகராஜா சந்நிதி இருக்கிறது. பிரகாரத்தின் நடுவில் யக்ஷி, ஜேஷ்டா பகவதி சந்நிதிகள் இருக்கு. தெப்பக்குளத்தின் கிழக்குக்கரையில் உக்ரகாளியான கீழ்க்காவு பகவதி சந்நிதி இருக்கு.  கீழ்காவு பகவதி அம்மனை சோட்டானிக்கரை பகவதியின் சகோதரி ன்னு சொல்வாங்க. சோட்டானிக்கரை பகவதியை தரிசிப்பவர்கள் இந்த அம்மனையும் கட்டாயம் தரிசக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரகார மண்டபத்தின் இடதுபக்கம் வெடிவழிபாடு கூடமும், மண்டபத்தின் வலதுபக்கம் தர்மசாஸ்தா சன்னிதியும், ஆஞ்சநேயர் சன்னதிகளும் இருக்கு. அதனையடுத்து  யானைகளை கட்டிப்போடும் யானைக் கொட்டிலும் இருக்கு. தினமும் காலை பூஜைக்கு இங்கிருந்துதான் யானைகளை அழைத்து கூட்டி வருவாங்க.
கீழ்க்காவு அம்மையை பிரதிஷ்டை செய்தவர் வில்வமங்கலம் சுவாமிகள் என சொல்லப்படுது. இந்த சன்னிதியின் இடதுபக்கம் பழமையான பலாமரம் இருக்கு. இந்த மரத்தின்மேல் நிறைய ஆணிகள் அடிச்சு வச்சிருக்காங்க. ஏன்னா இது இங்கே செய்யப்படும் ஒருவழிபாடாம். துர்தேவதைகளாலும், மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்களின் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கின்றனர். தினமும் இரவு 8 .45 மணிக்கு  ‘குருதி பூஜை’ செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் நடக்குமாம். நாங்கள் சென்ற நேரம் அதிகாலை என்பதால் எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.இந்த பூஜையானது ஒரு காலத்தில் இங்கு உயிர்ப்பலியும் ரத்த பூஜையும் நடந்திருக்காம். இப்ப அப்படி செய்யமுடியாது என்பதால் ,அந்த வழக்கத்தை மட்டும் நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து  இரத்தம் போல் ஆக்கி பூஜைகள் செய்து, அந்த இரத்த தீர்த்தத்தை துர்தேவதைகள் பீடித்திருக்கவுங்கமேல் தெளித்தால் அவைகள் அந்தக்கணமே விலகி ஓடிவிடுமாம். அந்த சமயத்தில் கோவிலில் துர் ஆத்மாக்கள் பிடித்தவர்கள் இடும் கூச்சல்கள் கேட்பவருக்கே கிலியா ஏற்படுத்துமாம். குருதி பூஜை முடிந்ததும் இந்தச் சிவப்பு நிற தீர்த்தத்தையே பிரசாதமாகத் கொடுக்கிறார்கள்.
கீழ்க்காவு அம்மையை தரிசனம் செய்யும்  வழியில் தெப்ப குளத்தின் வடக்குக்கரையில் பிரம்மராட்சசன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியில், சுற்றுச்சுவர், கூரை எதுவும் கிடையாது. திறந்தவெளியில் நான்கு கற்களைப் (வனதுர்க்கை, சாஸ்தா, பத்ரகாளி, ராட்சசன்) என பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்தக் கற்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரமும் ஏற்றுவார்கள். சோட்டாணிக்கரை கோயிலில் உபதேவதைகளுக்குப் பூஜை கிடையாது. நைவேத்தியம் மட்டுமே. மூலஸ்தானத்தில் நைவேத்தியம் முடிந்ததும் இந்த சன்னிதிகளிலும் நைவேத்யம் கொடுப்பாங்க. 12ஆயிரம் புஷ்பாஞ்சலி நடத்துவதும், சிவந்தபட்டு கொடுப்பதும் இங்கு முக்கிய வழிபாடாகும்.
இந்த கோவிலின் ஸ்தல வரலாற்றில் இந்த கோவிலின் பழையபெயர் யோதின்னக்கரை என இருந்ததாகவும், அது மருவி சோட்டாணிக்கரை என்று வழங்கப்படுவதாக சொல்லப்படுது. ஆனா, செவிவழி செய்தியாக வேறு ஒருகதை சொல்லப்படுது. ஒருகாலத்தில் இந்தப்பகுதி அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. அப்பொழுது இந்த காட்டில் வசித்துவந்த ஒரு வேடுவ பெண் தேவியை அரூபமாக வழிபட்டு வந்துள்ளாள். அவளின் பக்தியை மெச்சி பகவதிதேவி ஜோதிவடிவத்தில் அந்த வேடுவப்பெண்ணுக்கு காட்சி கொடுத்தாராம். அன்றுமுதல் தேவிக்காட்சி கொடுத்த அந்த இடத்தை "ஜோதியான கரை"என்று மக்கள் அழைத்து, அதுவே பின்னாளில் யோதின்னக்கரை  என்றாகி   ‘சோட்டாணிக்கரை’ யாகிட்டதாம்.. 
சோட்டாணிக்கரை அந்தகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாம்.  இந்தக்காட்டில் வேடர் இன மக்கள் குடும்பம் குடும்பமாக வசித்துவந்தனர். காட்டில் கிடைக்கும் தேன், காய் கனிகள், விறகு போன்ற பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு எடுத்துச் சென்று பண்டமாற்று வியாபாரம் செய்துவந்தனர். அவர்களில் கண்ணப்பன்ன்ற வேடன் ஒருவனும்  இருந்தான். அவன் மனைவியை இழந்தவன். அவனுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒரு மகள் மட்டும் இருந்தாள். அந்தச் சிறுமியின் பெயர் பவளம். தாயில்லாத அந்தக் குழந்தையை அவன் மிகுந்த அன்புடன் வளர்த்துவந்தான். கண்ணப்பன் தெய்வபக்தி மிக்கவன். அவனது குலதெய்வம், வனதேவதைன்ற பகவதியே. அனுதினமும் தனது குலதெய்வத்தை வணங்காமல் எங்கும் செல்லமாட்டான். வாரத்தில் ஒருநாள் ஒரு மாட்டை பகவதிக்குப் பலி கொடுப்பது அவன் வழக்கம். மாட்டை உயிர்ப்பலி கொடுக்கும்போது மகள் பவளம், “அச்சா மாட்டைக் கொல்ல வேண்டாம். என மன்றாடுவாள். ஆனால் அவன் அதை கேட்பதில்லை.
அப்படியிருக்கும் சமயத்தில் கண்ணப்பனின் வீட்டிலுள்ள மாடு ஒன்று, கன்றை ஈன்று பால்கொடுத்துவந்தது. அந்த கன்றுகுட்டியின்மீது மகள் பவளத்துக்கு அலாதிப்பிரியம் எப்போதும் அதை பிடித்துக்கொண்டுதான் விளையாடுவாள். ஒருநாள்  வனதேவதைக்குப் பலியிட எந்த மாடும் கிடைக்கவில்லை. அதனால், தன் வீட்டிலிருந்த மாட்டையே பலிகொடுப்பது என முடிவு செய்து அதை அவிழ்க்கச்சென்றான். அப்போது, கன்று, தாயின் பிரிவு தாளாமல் 'அம்மே' என அலறியது. இதைப் பார்த்ததும் மகள் பவளம் ஓடோடி வந்து கன்றுக்குட்டியைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். `அப்பா! என்னைப்போலவே இந்தக் கன்றும் தாயற்ற பசுவாக வேண்டுமா?' எனக் கேவிக்கேவி அழுதாள்.மகளின் அழுகை, கண்ணப்பனின் மனதை என்னவோ செய்தது. 'இனி ஒரு நாளும் உயிர்களைப் பலி கொடுக்க மாட்டேன்' என அழுது புலம்பி அரற்றினான். அதன்பிறகு அவன் உயிர்ப்பலியை நிறுத்திவிட்டான்.  அன்றிலிருந்து புலால் உணவை உண்ணாமல் வாழத் தொடங்கினான். ஆனாலும் கண்ணப்பன் முன்பு செய்த பாவம் காரணமாக அவரது அன்பு மகள் பவளம் ஒருநாள் திடீரென இறந்துவிட்டாள். புத்திர சோகத்தால் கண்ணப்பன் துடித்துப் போனான். தன்னிடம் இருந்த மாட்டையே தன் மகளாக எண்ணி வளர்த்தான்.
நாட்கள் செல்லசெல்ல மகள் இல்லாத வழக்கை கண்ணப்பனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் ஒருகாட்சி தோன்றியது. லோக மாதா ஜகதாம்பாள் கோடி சூரிய பிரகாசத்துடன், 'கண்ணப்பா, உன் மகளின் நேசத்துக்குரிய பசு சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்பதை அறிந்துகொள்' அதன் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்றுக்கூறி மறைந்தாள். படுக்கையிலிருந்து எழுந்த கண்ணப்பன் தொழுவத்தைப் பார்த்தான். அங்கே பசுவும் கன்றும் சிலைகளாக மாறியிருந்தன. தன் கூட்டத்தாரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்களும் அந்த இடத்தில் 'காவு' அமைத்து மரங்களாலான கோயிலை உருவாக்கி வழிபடத்தொடங்கினர்.  கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். அப்பகுதியில் உள்ளவர்களும் குடிமாறிப் போய்விட்டனர். கால ஓட்டத்தில் அந்தப்பகுதி முழுவதுமே இயற்கையின் ஆளுமைக்குச் சென்று மரங்களடர்ந்த பகுதியானது. அந்த இடமும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளும் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது.

பல நூற்றாண்டுகள் கழிந்தன. அந்தப்பகுதியை சுற்றிலும் கிராமங்கள் வந்தன. அந்த சமயத்தில் கிராமத்துப் பெண்னொருத்தி அந்த இடத்திற்கு வழக்கம்போல் புல் அறுக்க வந்தவள் அங்கிருந்த பாறையில் கத்தியைக் கூர் தீட்டினாள். அந்தக் கல்லில் இருந்து நெருப்புப் பொறியுடன் ரத்தமும் வந்தது. இந்தத் தகவலை ஊர்த்தலைவரிடமும் அந்தக்காலத்தில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விசயத்தை கூற . அப்போதே அந்தப்பகுதி சுத்தம் செய்து பழங்களும் பூக்களும் கொண்டுவந்து விளக்கேற்றி பூஜை நடத்தினார்பூஜை செய்தார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள். இந்த தகவல்கள் செவிவழி கதையாக சொல்லப்பட்டுவருவது . 
குழந்தை இல்லாதவர்கள் இந்த மரத்தில் தொட்டில்கட்டி நேர்ச்சை வழிபாடு செய்வது வழக்கம் . இதுப்போல இன்னொரு கதையும் சொல்லப்படுது. .கேரளாவில் உள்ள காலடியில்  பிறந்த ஆதிசங்கரர், மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக சரஸ்வதி அவர் முன் தோன்றினார். உடனே சங்கரர் தாயே! என்னுடன் நீங்கள் கேரள நாட்டிற்கு வந்து அருள்பலிக்க வேண்டும் என வேண்டினார். உடனே வாணியும் சரிமகனே! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே! - எனது சொல்லைமீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என தனது நிபந்தனையை கூறினாள். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒருநாள் காலையில், தான் கோவில் கொள்ளவேண்டிய இடம் வந்தது, கொலுசொலி எழாதவாறு வாணி நடந்துவர, பின்னால் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லயென சங்கரர் ஐயப்பாட்டுடன் திரும்பி பார்த்தார். பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். அவள் நின்ற இடம்தான் தற்போது கொல்லூர் மூகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மையே!  என்ன இதுவென கேட்க, சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலி கேட்டபடியேதான் முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒருவேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என வேண்டி தன்னோடு மீண்டும் புறப்படுமாறு வேண்டினார்
உடனே தேவி சங்கரரிடம் மகனே! நான் கொடுத்தவாக்கை நீ மீறிவிட்டாய். பரவாயில்லை. கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. (இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும்.) இதுவும் கேரள பூமி தான். நான் இங்குதான் இருப்பேன். நீ வேண்டியபடி உன் நாட்டிற்குதான் வந்திருக்கிறேன். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டுமெனவும்,   தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணிமுதல் ஏழரை மணிவரை சோட்டாணிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோட்டாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று வாக்குறுதி தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய்மொழியின்படி சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதிரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள்  கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரையான இன்று சோட்டாணிக்கரைன்ற பெயரில் விளங்குகிறது. எனவும் ஒரு கதை சொல்லப்படுது .இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோட்டாணிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
தேவியின் வலது பக்கத்தில் இரண்டு அடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலை உள்ளது. சோட்டாணிக்கரையில் அதிகாலை நான்கு மணிக்கு நிர்மால்ய தரிசனம். மூலஸ்தானத்தின் கதவு திறந்தவுடன் தீபாராதனையுடன், ‘அம்மே நாராயணா! லக்ஷ்மி நாராயணா! பத்ரே நாராயணா!’ என்று  மனமுருகி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தினமும் அன்னை பகவதி மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; நண்பகலில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; ‎மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, காளியாக,  ராஜராஜேஸ்வரியாகவும் கருநீல‎வண்ண உடையிலும், அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி, வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி  எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால்  வலதுகையை பாதத்தில் காட்டி, இடதுகையில் அருள்பாலிப்பது சிறப்பு. மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்துவந்து வழிபட்டால், அவர் நல்ல மனநிலையை அடைந்து நோய்குணமாகி செல்கின்றனர். சிலர் நோயின் தன்மையைப் பொறுத்து இங்கு சில நாள்கள் தங்கி வழிபட்டுச் செல்கிறார்கள். இக்கோவிலின் விசேஷமே “தீய ஆவிகள், ஏவல், செய்வினை” போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலின் பகவதி அம்மன் துர்கையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்போது தரிசித்து பின்பு இக்கோவிலின் வளாகத்திலுள்ள ஒரு மிகப்பெரிய அரசமரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முன்தலையில் இருக்கும் முடியை பிடுங்கி, ஒரு இரும்பு ஆணியில் சுற்றி அந்த மரத்தில் அடித்து விடுவதால், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவதாக இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆலயத்திற்கு கேரளத்திலிருந்து மட்டுமல்லாம தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்துகூட நிறைய பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.
தினமும் காலை 4 மணிமுதல் 12 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிமுதல் பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும்.இந்த கோவில்  எர்ணாகுளத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் இருக்கு. சென்னையிலிருந்தும்,  மதுரையிலிருந்தும் ரயில்மார்க்கமாக வழித்தடங்கள் இருக்கிறது. எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் டவுன் என இரண்டு ஸ்டாப்பிங் இருக்கிறது. சில பாஸ்ட் ட்ரைன் எர்ணாகுளம் டவுனல நிக்காது. ரயில்வே ஸ்டேஷன்லிருந்து கோவிலுக்கு செல்ல நிறைய பஸ் இருக்கு . அதேபோல திருப்புணித்துரா ரயில் நிலையத்தில் இறங்கினாலும் அங்கிருந்து சுமார் 7  கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோயிலின் நியதிகள், கட்டுப்பாடுகள் கடுமையானவை.. அதேபோல் கோவிலை சுற்றி தங்கும் விடுதிகள் பலதரப்பட்ட விலைகளில் கிடைக்கின்றன.இல்லை நமக்கு காலையில் குளிக்கமட்டும் வேண்டுமென்றாலும் அதற்கும் சில ஹோட்டல்களில் வசதி இருக்கிறது. ஒருவழியாக சோட்டாணிக்கரை பகவதியை தரிசனம் செய்து அவளருளை பெற்று அடுத்த கோவிலுக்கு கிளம்பத்தயாரானோம். மீண்டும் அடுத்தவாரம் இதேபோன்ற ஒரு பகவதி கோவிலை பத்தி பார்க்கலாம்...

ஆற்றுக்கால் பகவதி அம்மனை பார்த்து சோட்டாணிக்கரை பகவதி அம்மன் பதிவை தேத்தின அவசரத்துல இன்னிக்கு காரடையான் நோன்பாம். அதை மறந்துட்டேன். இருந்தாலும் கற்புக்காசியான சாவித்திரி தனது காதல்கணவன் சத்யவானை திருப்பி தந்த  காரடையான் நோன்பு பத்தி கணவன் மனைவி அன்னியோன்யம் பெருக -காரடையான் நோன்பு பதிவின் மூலம் தெரிஞ்சுக்கோங்க. 
நன்றியுடன் 
ராஜி