Friday, March 15, 2019

குகன் வழிபட்ட குகநாதீஸ்வரர் கோவில்-கன்னியாகுமரி.

போனவாரம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோவிலில் தரிசனம் முடிச்சுட்டு, அடுத்து எங்க போகலாம்ன்னு  பிளான் செய்யும்போது, வேறெங்க?!  கன்னியாகுமரி பகவதி அம்மனைதான் தரிசனம் பண்ணப்போறோம்ன்னு  வழிகாட்டி அண்ணா சொன்னார். எத்தனை முறைட் பார்த்தாலும் சலிக்காத அழகு கன்னியாகுமரியின் அழகு. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம், பகவதி அம்மன் கோவில்ன்னு நிறைய பார்த்தாச்சு. பலமுறை போயும் கன்னியாகுமரி பயணத்துல நான் அனுபவிக்காதது இரண்டே இரண்டுதான்.  ஒன்னு சூரிய அஸ்தமணம், இன்னொன்னு, இதுவரை கன்னியாகுமரி கடலில் கால் நனைச்சதில்லை. அலையின் சீற்றம் அதிகமா இருக்கும்ன்னு சொல்லி என் அப்பா எங்களை விடமாட்டார். அதுக்கு பதிலா திருச்செந்தூர், உவரில ஆட்டம் போட விட்டுடுவார். இப்பவாவது இந்த இரண்டும் நிறைவேறுமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கும்போதே,  தூரத்தில் ஒரு இடத்துல கூட்டமா ஆட்கள்  இருந்தாங்க. பச்சை தமிழச்சியாச்சே! கூட்டத்துல எட்டிப்பார்க்காம வந்தால் அன்றைய பொழுது சரிவர போகாதுன்னு முன்னோர்கள் வகுத்த நியதி இருக்குறதால  அங்க என்னவா இருக்கும் என எங்களுடன் வந்த உள்ளூர் ஆளிடம் விசாரிக்க,  ஓ! அதுவா?! அது இன்று  அஞ்சனகண்ட சாஸ்தா கோவிலில் ஏதோ விஷேசம்போல இருக்குன்னு சொன்னார். அது என்ன அஞ்சனகண்ட சாஸ்தா கோவில்?! மலையாள வாடை வீசுதேன்னு உள்ளுக்குள் ஆர்வம் அதிகரிக்க, அந்த கோவிலுக்கு போகலாம்ன்னு கேட்க, கூட வந்தவர்கள் அரைமனதுடன் சம்மதம் சொல்ல  வண்டியை அந்த கோவிலை நோக்கி திருப்பினோம்.
அங்கு சாமி, வீதி ஊர்வலம் வந்துகொண்டிருந்தார். வீட்டின் முன்பு பெண்கள் கும்பகலசத்துடன் காணிக்கையும் வைத்துக்கொண்டு சாமிக்காக காத்திருந்தனர். சிறிய கோவில்னாலும் மிகவும் பழமையான கோவில் என சொல்லப்படுகிறது. இங்க என்ன விஷேசம்னா கண் தெரியாத ஒரு பக்தருக்கு பார்வை கொடுத்த ஸ்தலமாம். அதனாலயே இந்த சாமிக்கு அருள்மிகு அஞ்சனம் எழுதிய அதிசய கண்டன் சாஸ்தா என்ற திருநாமம் வந்ததாம்.  போனவார பதிவில்  சொன்ன அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசுயாவுடன் இத்தலத்தில் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார். அதனால் இந்த இடம் ஆஸ்ரமம் என்றழைக்கப்படுது எனப் பார்த்தோம் அல்லவா?! அந்த ஆஸ்ரமத்தில்தான் இந்த கோவில் இருக்கு. இங்கிருக்கும் தெப்பக்குளமானது அத்ரி முனிவரின் யாக குண்டமாக இருந்தது என்றும், அதனால் இந்த தீர்ததகுளத்தை யாக குண்ட தீர்த்தகுளம் என்றும் அழைக்கிறார்கள்.
பொதுவா எல்ல கோவில்களிலும் சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனா இந்த கோவிலில் சாஸ்தா வித்தியாசமாக   பீடத்தில் அமர்ந்து, வலதுக்காலை குத்திட்டு, இடதுக்கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலதுக்கையில் கதாயுதம் ஏந்தியுள்ளார்.  மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்து, சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறெங்கும் சாஸ்தாவின் அமைப்பு இல்லை  என சொல்லலாம். அதேப்போல சிவனுக்குரிய வில்வமரமே இங்கு ஸ்தல விருட்சமாக இருக்கிறது. இங்கு மொத்தம் 3 வில்வமரங்கள் இருக்கு.  அந்த விலவமரமும் மூன்று இலை, ஐந்து இலை, ஒன்பது இலை என வெவ்வேறான எண்ணிக்கையில் கிளைவிடுது   இக்கோவிலின் சிறப்பாகும்.
பண்டையக்காலத்தில் இந்த இடத்தில வசித்துவந்த மக்கள் சாஸ்தாவுக்கென ஒரு கோவில் எழுப்பவேண்டும் என ஆசைப்பட்டு சாஸ்தாவை இங்கு பிரதிஷ்டை செய்தனர். நல்லபடியாக வழிபாடுகளும் பூஜை புனஷ்காரங்களும் நடைபெற்று கொண்டிருந்த சமயம், கண் தெரியாத பக்தர் ஒருவர், ஒரு இரவுப்பொழுதில் இந்த நடையில் தெரியாமல் குறுக்காக படுத்துவிட்டார். அப்பொழுது வெளியே வந்த சாஸ்தா, அந்த பக்தரின் அருகே வந்து அமர்ந்தார். தன் அருகில் யாரோ உட்கார்ந்து இருப்பதை அந்த கண் தெரியாத பக்தர் உணர்கின்றார். அப்பொழுது அருகில் இருந்த அந்த உருவம், இந்த பக்தரின் கண்களில் அஞ்சனத்தை(அஞ்சனம்  என்றால் கண்களில் தடவும் மை) எடுத்து தடவுவதை அவரால் உணர முடிந்தது. உடனே அந்த பக்தர் மனக்கண்ணால் சாஸ்தாவை வழிபட அவரது கண்ணில் கண்பார்வை கிடைத்தது. உடனே அவர்  சாஸ்தாவை வழிபட அங்கு சாஸ்தா காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் "அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா' (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன்) என்று பெயர் பெற்றார். பார்வை தந்த சாஸ்தா: அஞ்சனம் என்றால் கண்மை. ஒரு பக்தருக்கு பார்வை கொடுக்க ஆண்டவனே நேரில் வந்து மை தீட்டினார். அந்த மையால் கண்கள் அழகு பெற்றதோடு, இருண்ட கண்கள் ஒளியும் பெற்றது.  கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். இந்த கோவிலுக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் இத்திருக்கோயிலிலிருந்து நடந்துகூட செல்லலாம். அம்புட்டு கிட்டக்க, ரொம்ப சின்ன கோவில்தான். ஆனா மூர்த்தி சிருசுனாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்வாங்கல்ல! அதுமாதிரிதான்.. ஒருவழியா கோவில்ல தரிசனம் முடிச்சிட்டு நேராய் கன்னியாக்குமரி நோக்கி சென்றோம். இங்கேதான் மிகவும் பழமைவாய்ந்த பழையகாலத்து சிவன் கோவிலான குகநாதீஸ்வரர் கோவில் இருக்கு,
கன்னியாக்குமரியில் இருக்கும் பெரும்பாலோனோருக்கு இந்த கோவிலின் வரலாறு தெரியுமோ தெரியாதோ! ஏன்னா நான்கூட முதலில் இராமாயண காலத்தில் உள்ள குகன் இங்கே சிவனை வழிபட்டோரோ என்றுதான் நினைத்தேன். இங்கு வந்தபிறகுதான் விவரம் தெரிந்தது,

.உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

என்று கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் முருகனை குகனே எனப்பாடி இருப்பார். அந்த குகனாகிய முருகப்பெருமான் இங்கிருக்கும் ஈஸ்வரனை வழிபட்டதால் இந்த தலத்துக்கு குகநாதீஸ்வரர் கோவில்ன்னு பேர் வந்ததாம். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. ராஜராஜ சோழன் தஞ்சை பெரியக்கோவிலை கட்டும் முன்னரே இந்தக்கோவிலை கட்டியிருந்தான் என்றும் சொல்லப்படுகிறது.  அத்தோடு இல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்திலையே மிகப்பெரிய லிங்கத்திருமேனியைக் கொண்டது இந்த ஆலயத்து மூலவர் என்பது மேலும் ஒரு சிறப்பு .
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல கன்னியாக்குமரி ரயில்வே ஸ்டேஷன் தாண்டித்தான் போகணும். அந்த ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலதான்  இருக்கு இந்த கோவில். மரங்களும் செடிகளுமா பச்சைப்பசேலென இருக்கு இந்த திருக்கோவில். முப்பது வருஷங்களுக்கு முன்னேயெல்லாம் இந்த கோவிலுக்குள் செல்லமுடியாதாம் அவ்வுளவு செடி கொடிகளா,புதர்காடுபோல புற்கள் முளைத்து இருக்குமாம். அதைப்பார்த்து வேதனைப்பட்ட ரயில்வே ஊழியர் ஒருவர், தன்னுடன் வேலைப்பார்க்கும் ஆட்களை அழைத்துக்கொண்டு எல்லா செடிகொடிகளையும் வெட்டி பூஜைகள் செய்ய வழி ஏற்படுத்தி கொடுத்தாராம். அதன்பிறகுதான் ஆட்கள் அங்கு மெல்ல மெல்ல செல்ல ஆரம்பித்தனராம் .
கன்னியாகுமரி திருக்கோவில் ஸ்தலபுராணத்தில் இந்த கோவிலை குகன்(முருகன் )தன் தந்தையை (ஈஸ்வரனை )வழிபட்ட ஸ்தலம் ஆகையால் இந்த ஸ்தலத்து இறைவனுக்கு குகநாதீஸ்வரர் என்று திருநாமம் வந்தது என்று சொல்லும்விதமாக 

‘மகமெனும் குகன்தான் அந்த மகிமைசேர் குமரியங்கண்
அகமகிழ் தாதையான அரன்தனைத் தாபித்து 
அன்பால்தகைமைசேர் உபசாரங்கள் தம்மொடும் பூசைசெய்து 
குகன்தனை ஆண்ட ஈசன்

என்று கந்த புராணத்தில் இந்த ஸ்தலத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் இறைவன் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். இருந்தாலும் ,இக்கோயில் கருவறை குகை போன்று அமைந்துள்ளதாலும், பிராகாரம் குறுகியிருப்பதாலும், குகநாதீஸ்வரர் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். தாயார் பார்வதி அம்மன். சிவன் கோவிலில் இருப்பது போன்றே இங்கு வில்வமரம் ஸ்தல விருட்சமாக இருக்கிறது.
இந்த கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில்,  இந்த இறைவனை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்’ என்று நீண்ட அடைமொழிபெயரொடு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு .11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரி பகுதியில் நிலவியபோது இந்த குகநாதீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாக இந்த கல்வெட்டில் காணப்படுகிறது என்றும்,அதுனால கி.பி.10-ம் நூற்றாண்டுக்கு முன்பே இக்கோயிலில் வழிபாடுகள் நடந்திருக்கலாம்   ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர்.
மேலும் இந்த கோயிலில், முதலாம் ராஜேந்திரன்,  இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒரு கல்வெட்டில், ‘ஒரு செவ்வாய்க்கிழமையில் பூச நட்சத்திரத்தன்று கோயிலின் முக மண்டபத்தில் சபை கூடியது என்றும்,  பக்தர்களும் கூடினர். இவர்களின் முன்னிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவன் இத்திருக்கோயிலுக்கு நன்கொடை கொடுத்தான்’ என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு  நிலங்கள்  அளித்ததவர்கள் விவரமும் அந்த கல்வெட்டில் முழுமையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, நாட்டில் நல்ல மழைபெய்து கோடையின் தாக்கம் குறைய வேண்டி இக்கோயிலில் 1008 இளநீர் அபிஷேக பூஜை வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த சமயத்தில் மக்கள் கூட்டம்கூட்டமா இந்த பூஜையில் கலந்துக்குவாங்க. பூஜை முடிஞ்சதும்  அபிஷேகம் செய்யப்பட்ட இளநீரை பாட்டில்களில் பிடித்து, பக்தர்களுக்குப் பிரசாதமாக கொடுப்பாங்க. அதேப்போல ஒவ்வொரு வருசமும் புரட்டாசி மாதம், திருவாதிரை நட்சத்திரமன்று 1008 சங்காபிஷேகம் செய்வாங்க. அந்த நாள்ல கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜை எல்லாம் தொடர்ச்சியா செய்வாங்க. அது முடிஞ்சதும்  12.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் நடராஜர் , மேளதாளம் முழங்க கோயிலின் வெளிப்பிராகாரத்தைச் சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ரொம்ப விமர்சையா கொண்டாடுவாங்களாம்.
அதேபோல ஐப்பசி மாத பௌர்ணமில நடக்கும் அபிஷேகம் விஷேசமாம். அன்று விரதமிருந்து குகநாதீஸ்வரரை வழிபட்டால், குடும்ப பிரச்னைகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கட் கிழமை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்வாங்க. அப்போது கிரிதாரை, நெய் தாரை, இளநீர்தாரை போன்ற நேர்ச்சை அபிஷேகங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். பொதுவாக, ஆண்களைவிட பெண்களே இங்க அதிகளவில் வந்து வழிபடுகின்றனர் . பெண்களின் வேண்டுதல் நிறைவேறினாலே குடும்பம் தழைக்கும் என்பது இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
சிவபரம்பொருளால் அம்மையே என அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி சன்னிதி உண்டு. அதைப்போல இந்த குகநாதீஸ்வரர் கோவிலிலும் தனி சன்னிதி உள்ளது. வருடந்தோறும் ஆனிமாதம் வரும் பௌர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி அளிக்கும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று மாலை  சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில்  கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3முறை பவனி வரும் வைபவமும் உண்டாம். அதைத்தொடர்ந்து காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்குவாங்க. அப்ப  காரைக்கால் அம்மையார், வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி பவனி வரும் நிகழ்வும் நடக்குமாம். அந்தசமயத்தில் பக்தர்கள் கூடைகூடையாக மாம்பழங்களை இறைவன் வீதிய்லா போது வீசி அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்பிறகு சிவபெருமானுக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் சிறப்பு வழிபாடும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது. பின்னர் காரைக்கால் அம்மையாருக்கு படைக்கப்பட்ட மாங்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுமாம் .இந்த மாங்கனி திருவிழா கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் கொண்டப்படுவதை பற்றி பார்க்க நமது மாங்கனி திருவிழா பதிவுல போய் பார்திட்டுவாங்க
இங்க பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத்தாலி செய்வதற்காக தங்கக் காசுகள் வாங்கிக்கொண்டு வரும் போது, இந்த கோவில்ல சாமி கும்பிட்டுட்டு போகலாம்ன்னு வந்திருக்கிறார். அப்போது கவனக்குறைவுனால அவர் வச்சிருந்த தங்கக்காசுகளை தொலைச்சிட்டாரு. உடனே, அவர் இந்த ஸ்தலத்து மூலவரிடம் அழுது முறையிட்டு, மனமுருகி வேண்டினார். அடுத்த சிலமணி நேரத்தில், யாரோ ஒரு நபர் அந்தத் தொலைந்த தங்கக்காசுகளைக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்துட்டு போனார். உடனே, அர்ச்சகர் இவரை அழைத்து தங்கக்காசை அவர்கிட்ட கொடுத்தாராம். அன்றிலிருந்து, குகநாதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினால், நமது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. மேலும் கல்யாணத்தடை உள்ள பெண்கள் தொடர்ந்து  இங்குவந்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிட்டும் என்பது ஐதீகம். இவ்வளவு சிறப்புமிக்க இந்த குகநாதீஸ்வரரை வழிபட்டு வெளியேவந்தோம். அடுத்து எங்கே போகலாம்ன்னு கேட்டப்ப நேரமும் குறைவா இருக்கு பகவதி அம்மனை தரிசனம் செய்வதற்குமுன் இங்கே இருக்கும் சின்னச்சின்ன கோவில்களை முதலில் பார்த்துவிடலாம் என பக்கத்திலிருக்கும் கோவிகளுக்கு சென்றோம் .

இப்ப கன்னியாகுமரி போறவங்க கவனிக்கவேண்டிய ஒருவிஷயத்தை குறிப்பிட்டு சொல்லனும்.  பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறைய கோவில்கள் புதுசு புதுசா வந்துள்ளன. உதாரணமா பொற்றையடி என்னும் ஊர்ல கட்டப்பட்டிருக்கும் சாய்பாபா கோவில், மற்றும் கன்னியாகுமரி  ஊருக்குள்ள நுழையும்போது நகராட்சிமூலம் குத்தகை எடுத்திருக்கும் வசூல் நடைபெறும் ஆர்ச் பக்கத்திலேயே விவேகானந்த கேந்திரம் இருக்கு. இதில்லாம இங்க பார்க்கவேண்டிய முக்கியமான பல கோவில்கள் இருக்கின்றன/ எகரட்ச கணபதிகோவில் எல்லாம் புதுசா கட்டினாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கு 
விநாயகரை தரிசனம் செய்துட்டு வரவழியில திருப்பதிக்கு போய் வெங்கடாசலபதியை தரிசிக்க கஷ்டப்படுபவர்களுக்காக திருப்பதி ஏழுமலையானே பக்தர்களை தேடி கன்னியாகுமாரிக்கு வந்துவிட்டார். என்ன சொல்லுறேன்னு  புரியாம முழிக்காதீங்க  .
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி  விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்  5½ ஏக்கர் பரப்பில் ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில பிரமாண்டமா கட்டி இருக்கிறாங்க  திருப்பதி கோவிலில் உள்ளது போலவே இங்கு தேரோடும் 4 மாட வதிகள் கட்டி இருக்கிறாங்க. 
திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில் எத்தகைய ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறதோ, அவை அனைத்தும் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீதேவி-பூதேவி ஆலயத்திலும் கடைபிடிக்கிறாங்க.
திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தின் அழகில் அங்கயே கொஞ்சநேரம் இருந்தபொழுது அந்திசாய்ந்துவிட்டது. அங்கிருந்து பக்கத்திலயே இருக்கும் பாரதமாதா கோவிலுக்கு போகலாம்ன்னு முடிவெடுத்திட்டு அங்கே சென்றோம். இந்த பாரதமாதா கோவில் மிக அழகா அற்புதமா இருக்கு. இங்க நுழைவு கட்டணம் வசூலிக்கிறாங்க. பிரமாண்டமான ஆஞ்சேநேயர் சிலை இங்க இருக்கு. அதிலும் மாலைப்பொழுதில் இந்த இடத்திற்கு சென்றால் மனதுக்கு அவ்வுளவு அமைதியான இடம் .
பூங்காக்களும். அங்கே இருக்கும் சிலைகளும், மான், மயில், காளை என பலவிதமான சிலைகளை இங்கே புல்வெளிக்கு நடுவே வச்சிருக்காங்க. ஆஞ்சேநேயருக்கு பின்னால் இருக்கும் இந்த மண்டபத்தில் இரண்டு நிலைகளிலும் இராமாயண காவியத்தை சித்திரமாக வரைந்துள்ளனர் கண்ணாடி பளபளப்பில் பார்க்க அற்புதமா இருக்குது. 
இந்த இடத்தில் மட்டும் மொபைல் போன் அனுமதி இல்லை. அதேப்போல் எந்தவித இடையூறுமில்லாம சித்திரங்களை பார்க்கவேண்டும். இதனுள்ளேவரிசைவரிசையாக சித்திரங்களை அமைத்துள்ளனர். நாம் அமைதியாக பார்ப்பதென்றால் அரைமணி நேரத்துக்குமேல் பிடிக்கும் .
பல யானைகள் தாங்கிநிற்க சிவன் அவைகளுக்குமேல் கம்பீரமாக அமர்ந்து அரைக்கண் மூடியநிலையில் தபசு செய்கிறார். இந்த இடத்தை பொறுமையாக பார்த்துவந்தால் கண்களுக்கும், மனதிற்கும்  மிகுந்த மகிழிச்சியளிக்கும் இடமாகும் .
தியான நிலையில் இருக்கும் சிவனையும் வணாங்கிவிட்டு இந்த அனுமனையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு இந்த பாரதமாதா கோவிலைவிட்டு வெளியே வந்தோம். பாரதமதாவுக்கு இங்க பெரிய சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது .அடுத்தது  வட்டக்கோட்டைக்கு செல்லும் பாதையில் இருக்கும் வடநாட்டு கோவிலான ஸ்ரீநாராயண் மகாராஜ் தத்தா மந்திர், இவைலாம் கன்னியாகுமரியில் பார்க்கவேண்டிய புதிய இடங்கள். இந்தக்கோவில் வடஇந்திய பாணியில் கட்டப்பட்டிருக்கு.  கோவில் எல்லாமே மார்பிள் கற்களால் கட்டி இருக்காங்க. சிலைகள்லாம் அப்படியே தத்ரூபமாக இருக்கின்றன. 
நாங்கள் திரும்பி வரும் வழியில்தான் இந்த கோவிலை பற்றி கேள்விப்பட்டு சென்றோம். வட்டக்கோட்டையிலிருந்து ஒரு 3 கிமீ தொலைவு இருக்கலாம் மெயின் ரோட்டிலேயே இந்த கோவிலுக்கான அறிவிப்பு பலகை வச்சிருக்காங்க/ அகத்தியர் மற்றும் வேறு சிலைகள்லாம் வச்சிருக்காங்க எல்லாம் மார்பிளால் செய்யப்பட்டுள்ளதால் சிலைகள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கிறது.  சின்ன சின்ன சீரியல் பல்புகளை வச்சு அலங்காரம் பண்ணி இருக்கும் இக்கோவிலை இரவுவேளைகளில்  பார்க்க ரொம்ப அழகா இருக்கு. கன்னியாகுமரி போறவங்க இந்த கோவிலையும் பார்க்க தவறாதீங்க! ஆனா பகல்வேளையில் செல்லும்போது மார்பிள்கற்கள் வெயிலில் சூடு ஏறி  கால்களை பதம்பார்த்துவிடுமாம். அதற்காகவே பக்தர்கள் நடந்து செல்வதற்கு கயிற்றினால் ஆனா நீளமான மேட் போட்டு இருக்கிறாங்க .
இக்கோவிலில் ஒரு விஷேசம்னா இந்த கோவில் முழுக்க முழுக்க மார்பிளால் ஆனது மட்டுமல்லாமல் அவ்வளவு பெரிய இடத்தையும் தரைமட்டத்திலிருந்து மிக உயரமா கட்டி இருக்கிறாங்க. நாம செல்லணும்ன்னா படியேறிதான் செல்லணும். குறுக்கே நெடுக்கே என்று சீரியல் பல்பு வயர்களாக இருக்கும். நாம் கவனமாக நடந்து செல்ல என இருக்கும் பாதையில் மட்டும் செல்லவேண்டும். இந்த கோவிலில் நிறைய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பகல் வேளையில் செல்வது நல்லது. ஏன்னா மெயின் ரோட்டிலிருந்து இந்தக்கோவிலுக்கு செல்லும் பாதை சரியானதாக இல்லை. பள்ளமும் மேடுமாக தனிப்பாதையாக நீண்டு செல்கிறது.  ஒருவழியா கன்னியாகுமரியில் இருக்கும் பழமையான கோவில்களையும் ,புதியதாக தொடங்கப்பட்டுள்ள கோவில்களையும் தரிசனம் செய்தாச்சு.   இனி அடுத்தவாரம் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலிலிருந்து புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் உங்களை சந்திக்கிறேன் . 

நன்றியுடன்
ராஜி 

13 comments:

 1. அருமையா இருக்கு... அடுத்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. திருப்பதி கோவிலாகட்டும் ,விவேகந்தா கேந்த்ரா பாரதமாதா கோவில் ,விநாயகர் கோவில் ,தத்தாத்ரேயர் கோவில் எல்லாமே பார்ப்பதற்கு மிகவும் அழகுன்னே,வாய்ப்பு கிடைச்சா மீண்டும் ஒருமுறை சென்று வாங்க...

   Delete
 2. விவரங்களுக்கு நன்றி.

  திருப்பதி தேவஸ்தான கோவிலும், பாரதமாதா கோவிலும் மிக அழகாய்த் தெரிகின்றன.

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் இந்த கோவில்கள் எல்லாம் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளன.பிரமாண்டமான சிலைகள் ,பூங்காக்கள்,என அற்புதமான ஒரு வடிவமைப்பு,ஒளிஅலங்காரம் என அருமையாக அமைத்துள்ளனர் சகோ ..

   Delete
 3. படங்களும் பகிர்வும் அருமை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ..

   Delete
 4. அழகான கோவில் உலா...

  திருப்பதி கோவில் சமீபத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டது. இப்போது திருமலா திருப்பதி தேவஸ்தான் நாட்டின் பல பகுதிகளிலும் இப்படி கோவில்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வடக்கில் கூட நிறைய இடங்களில் திருப்பதி கோவில்கள் ஏற்கனவே அமைத்து விட்டார்கள் - குருக்ஷேத்திரம், தில்லி உட்பட!

  ReplyDelete
  Replies
  1. ஆமாண்ணே,இரண்டு விஷயங்களில் எடுத்துக்கொள்ளலாம்,அந்தக்காலத்தில் ஒரு மன்னனின் அவையில் உள்ள மந்திரி,மதுரையம்பதியில் மீனாட்சி அம்மனை ஒரு ஒருமுறை வழிபட்டாராம்,சிறந்த சிவபக்தரான அவர்,அன்னையின் அருளிலும் சொக்கநாதாரின் அழகிலும் மயங்கிவிட்டாரம்,அடிக்கடி வரமுடியாது என்பதால் தான் இருக்கும் இடத்தில அதேபோன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கட்டினாராம்.அதேபோல் திருநெல்வேலியில் கூட ,ஒரு சித்தர் ,தினம் தினம் அண்ணாமலையானை தரிசிக்காமல் இருக்கமுடியவில்லை என்பதற்காக,அங்கேஉள்ள பொன்னாக்குடி என்னும் ஊரில்,அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையாள் தாயாருக்கு ஒரு கோவில் அமைத்து வழிபட்டார்.வாய்ப்புக்கிடைத்தால் அதுபற்றிகூட நம் பதிவில் எழுதலாம் என்ற ஆசையும் உண்டு.இது பக்தி.ஆனால்,சென்னையில் பெருவாரியான கடைகள் ஒவ்வொரு மாவட்டங்களின் தலைநகர் வரை அமைத்துவிட்டார்கள்,இதுவியாபாரம் ,இந்த இரண்டில் எதை எடுத்துக்கொள்வது என்பது அவரவர் மனநிலயை பொறுத்தது ,இருந்தாலும் கடற்கரை ஓரத்தில் இந்த திருப்பதி தேவஸ்தான கோவில் அமைத்து இருப்பது,கொள்ளை அழகு என்றே சொல்லவேண்டும்.அதுவும் மாலை வேளைகளில் அங்கு அமர்ந்திருப்பது மனதுக்கும்,கடற்க்கரை காற்று உடலுக்கும்,ஒளி அமைப்பு கட்டிடகலை கண்களுக்கும் இனிமையாக இருக்கிறது.என்ன அங்கங்கே உட்கார்ந்து பேசி சிரித்து பேசும் இளசுகளை பார்த்து மனம் ஒருகணம் பெருமூச்சு விடத்தான் செய்கிறது,நம்ம ஊர்லயும் இப்படி ஒரு கோவில் நாம படிக்கிற காலத்தில இருந்திருந்த நல்லா இருக்குமே என்று.இருந்தாலும் அடிக்கடி திருப்பதி போகமுடியாமல் தவிக்கும் தென்கோடி மக்களை தேடிவந்தது அருள் பாலிக்கும்வெங்கடாசலபதியின் கருணையை எண்ணி வியக்கும் போது.அவரின் கருணை குருக்ஷேத்திரம், தில்லி போன்ற இடங்களுக்கும் விரிந்திருப்பதை உங்கள் மூலம் தெரிந்துகொண்டதை பார்க்கும் பொழுது வேங்கடசலபதி கொஞ்சம் ஓவராகத்தான் கருணை மழையை பொழிகிறார் போல...ஒரு 10 வருடங்களுக்கு முன்பு அங்கே திருக்கல்யாண வைபவம் நடத்தினார்கள்.அதில் நான் கலந்து கொண்டேன்.அன்று கூடிய கூட்டத்தை கண்டு,அப்பொழுதான் இந்த கோவிலை கட்ட முடிவு செய்தனர்.அதையும் விரிவாக ஒரு பதிவாக எழுதலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.எதுஎப்படியோ புரதமான கன்னியாகுமரி ஊரின் மகுடத்தில் ,இதுபோன்ற இடங்களும் ஒரு மாணிக்க கற்களே...

   Delete
 5. 2011ல் குகநாதீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன் (சிறிய கோவில்). அப்போதுதான் குமரியில் பெரிய வடநாட்டு பாணியில் ஒரு ஆலயம் கட்டிக்கொண்டிருந்தார்கள். தற்போது திருப்பதி கோவில். நிறைய கோவில்கள் நல்லதுதான்

  ReplyDelete
  Replies
  1. குகநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றது மகிழ்ச்சி சகோ..இப்பொழுது அதிக அளவு பக்தர்கள் வருகையால் நிறைய கோவில்கள் கட்டிவிட்டார்கள்,நீங்கள் சொல்வது தத்தாத்ரேயர் கோவிலாக கூட இருக்கலாம்.அந்த கோவில்தான் முழுக்க முழுக்க,வடநாட்டு கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டது.

   Delete
 6. நான் இருந்த வரை இந்தக் கோயில் எல்லாம் கண்ணுக்கே தெரியாதஅளவு காடு போல் இருக்கும் கோயில். நான் சென்றதில்லை. அதன் பின் வந்த கோயில்கள்,எதற்கும் சென்றதில்லை.

  படங்கள் எல்லாம் நல்லாருக்கு ராஜி. விவரங்கள் பார்த்துக் கொண்டேன். நாகர்கோவில் சென்றாலும் இதைப் பார்க்கச் செல்வேனா என்று தெரியவில்லை. என் அஜெண்டா வேறு.....சில அதிகம் பார்க்கப்படாத பீச்சுகள் மற்றும் கீரிப்பாறை அப்புறம் அழகியபாண்டிபுரம் அருகில் இருக்கும் உலக்கை அருவி. (இதுக்கு அப்பல்லாம் நம்ம வீட்டுப் பசங்க போவாங்க ஆனால் பெண்கள் எங்களை அழைத்துப் போகமாட்டாஅங்க. கஷ்டம் அப்படினு. இப்ப அப்படி இல்லை குழுவாகவே போகலாம் என்று அறிந்தேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதாக்கா உணமையில் நானும் புதியதாக வந்த கோவில்கள் தானே என்று நினைத்தேன்,ஆனால் அவை பார்ப்பதற்கு அழகு,அவ்வுளவு ஆடம்பரமாக தெரியவில்லை,எளிமையில் அழகு,திருப்பதி கோவில்,தத்தாத்ரேயர் கோவில் எல்லாம் உண்மையில் அழகு சிற்பங்கள் ஒருமுறை சென்று வந்து அதுபற்றி பதிவு செய்யுங்கள் கீதாக்கா,அதேசமயம் குகநாதீஸ்வரர் கோவில் பற்றி அங்குள்ளவர் சிலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு,இப்பொழுது பளிச் ..பளிச் என்று ஆக்கிவிட்டார்கள்.பக்தி மணம் முன்னைவிட இப்பொழுது மக்களிடம் நிறையவே வீசுகிறது.

   Delete
  2. அடுத்து நீங்கள் சொல்வது அநேகமாக சொத்தவிளை பீச் ஆக இருக்கலாம் கீதாக்கா,அங்கும் சில காதலர்கள் தொல்லைகள் இருக்கின்றன, கீரிப்பாறை உண்மையில் பார்ப்பதற்கு அழகு,அதேபோல் காளிகேசம் சென்றேன்,இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது.காளிஅம்மை கோவில்,அந்த மலைகளில் இருந்து வரும் அருவி வனங்களின் வழியாக ஓடி அம்மையின் கோவில் நடையில் ஓடி செல்வது சிறப்பு,அந்த கோவில் பற்றிய பதிவை விரைவில் எழுதுவேன்.மேலும் அங்கே அடிக்கடி யானைகள் கூட்டம்,கூட்டமாக வருவதால்,சிலநாட்களில் கவனமாக செல்லவேண்டும் .பாரஸ்ட்காரர்கள் தரவாக சோதனை செய்துதான் நம்மை வனப்பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்,அதிலும் வெள்ளி,செவ்வாய்,ஞாயிறு போன்ற நாட்களில் பயமில்லாமல் செல்லலாம்,ஏன்னா அந்த நாட்களில் நிறைய பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் செல்கிறாங்க,இப்பொழுது நிறையபேர் குடும்பம் குடும்பமாக செல்கின்றனர்,நாங்கள் செல்லும் போது கூட ஒரு கேரளா குடும்பத்தினர்,கோவிலின் முன் உள்ள சானலில் குளித்து கொண்டிருந்தனர்.நீங்கள் செல்லும் உலக்கை அருவிக்கும் ஒருநாள் செல்லவேண்டும் என்ற ஆசையும் உண்டு ,இறைவன் திருவருள் எப்படி என்று தெரியவில்லை.

   Delete