Friday, February 22, 2019

சோட்டாணிக்கரை பகவதி அம்மன்-புண்ணியம் தேடி

புதன்கிழமை அன்னிக்கு ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கல் வச்சத டிவில பார்த்தேன். அடடா! முன்னமயே தெரிஞ்சிருந்தா ஒரு பதிவை தேத்தி இருக்கலாமே! இப்ப ஒரு பதிவு போச்சுதேன்னு வெசனப்பட்டு கெடக்கும்போதுதான் பண்(பைம்)பொழியில் இருக்கும் திருமலை முத்துக்குமாரசுவாமி கோயிலை பார்க்கப்போகும்போது,  அப்படியே செங்கோட்டை வழியாக கேரளாவுக்குள் தென்மலை, புனலூர் பாதையில் சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசிக்க போனது நினைவுக்கு வந்துச்சு. சரி, அதை வச்சு ஒரு பதிவு தேத்தலாமேன்னு வெசனப்பட்டுக்கிடந்த மனசை பதிவையும் தேத்தியாச்சு.  இன்னிக்கு நாம பார்க்கபோற கோவில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில். 
பொதுவா கேரளாவில் பகவதி அம்மன் வழிபாடு மிகவும் பிரபலமானது. ஏன்னா திருவிதாங்கூர் சமஸ்தானங்களில் பகவதி அம்மனுக்கென்று பல விஷேச ஸ்தலங்கள் இருக்கு. பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானங்களும் அதன் கூட்டு ராஜ்யங்களும் இருந்த மங்களூர் முதல் கன்னியாகுமரிவரை பகவதி வழிபாடு கொல்லூர் மூகாம்பிகை முதல் கன்னியாகுமரி கன்னிகா பரமேஸ்வரியான பகவதி அம்மன் கோவில்வரை பிரசிஸ்த்தி பெற்ற பல கோவில்கள் இருக்கின்றன. தெய்வத்தின் சொந்த நாடு என்று சொல்லப்படுகிற கேரளத்தின் கலாச்சாரம், வாழ்க்கை முறைக்கேற்றவாறு இந்த கோவிலின் பூஜைகள் மற்றும் சடங்குகள் பின்பற்றப்பட்டு, பில்லி, சூனியம், வசியம் மாதிரியான தீய சக்திகளால் பாதிப்படைந்தவர்கள் அதிலிருந்து மீள வழிபடுவதற்கென்றே  கேரளாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற கோவில்தான்  நாம இப்ப பார்க்கப்போற “சோட்டாணிக்கரை பகவதி அம்மன்” கோவில்.
இதுதான் கோவிலுக்கு செல்லும் வழி,இந்த கோவில் எப்ப உருவாக்கப்பட்டதுன்னு  சரியான தகவல் இல்லன்னாலும் பல்வேறு கதைகள் இக்கோவில் பத்தி சொல்லப்படுது. புராணங்களின்படி  கேரளாவிலுள்ள  காலடியில் பிறந்து சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன் கேரளபூமியில் தோன்றி ஆதிபாரத கண்டம் முழுவதும் “அத்வைத” தத்துவத்தை பரப்பிய “ஸ்ரீஆதி சங்கரர்” தன் சொந்த நாடான கேரளத்தில் சரஸ்வதிதேவிக்கு ஒரு கோவில் இல்லையே என்று எண்ணி அந்த சரஸ்வதிதேவியை இங்கு கோவில் கொள்ள செய்வதற்கு கடும் தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இணங்கிய சரஸ்வதிதேவி இங்குவந்து கோவில் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கிழக்கு மண்டபமே கோயிலின் முக்கிய நுழைவு மண்டபமாகும். மண்டபத்தின் நடுவில் மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.
நாம் சென்றதும் நேரே கொடிமரம் காட்சியளிக்கிறது. அதிகாலை 4  மணிக்கே நடைதிறந்து விடுகிறார்கள். அப்பொழுது தரிசனம் செய்தால் கூட்டமில்லாமல் தரிசனம் செய்யலாம். இந்த இடத்தின் ஓரத்தில் பிரசாத கவுண்டர் இருக்கிறது. கோவிலின் வெளிப்பிரகார சுவர்களில் கம்பிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  திருவிழா மற்றும் விசேச காலங்களில் இந்த விளக்கை ஏறுவார்களாம். அதுபோல விளக்கு நேர்ச்சை என்றொரு வழிபாடு உண்டாம். அதற்கும் கட்டணம் செலுத்தி விளக்கு ஏற்றுவார்களாம். கொடிமரத்தின் வழியே நேராக சென்றால் பகவாதியம்மனை தரிசனம் செய்யலாம். அங்கே ஒரு மேடையின்மேலே பகவதி அம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். எல்லா கோவில்களையும் போல கருவறைக்குள் பிரசாதம் கொடுப்பதில்லை.  தீபாராதனை தட்டுகள்கூட வெளிப்பிரகாரத்தில் கும்பிடுவதற்காக கொண்டுவருகிறார்கள். அதேபோல் பிரசாதமும், தீர்த்தமும் அம்மனை தரிசித்து வெளியே வரும்போது பக்கத்திலிருக்கும் மண்டபத்தில் கொடுக்கிறார்கள் .
அம்மனை தரிசனம் செய்து வெளியேவரும்போது எதிரில் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. இதை நவராத்திரி மண்டபம்ன்னு சொல்றாங்க. வலதுபக்கம் ஒரு பெரிய பிரகாரம் இருக்கு. அந்த இடத்தில இருக்குற கொடிமரத்து பக்கத்திலயே நின்று கூட்டம் இல்லாதபோது தேவியை அழகாக தரிசனம் செய்யலாம் .அதுப்போல அடுத்திருக்கிற சரஸ்வதி மண்டபத்தில்  முதன்முதலில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் பூஜைகளை செய்கின்றனர்.  அந்த பிரகாரத்துலயே தென்மேற்கு மூலையில் கிழக்குநோக்கி அருள்பாலிப்பவர்.   சிவபரம்பொருள் அருகிலேயே கணபதி சந்நிதி. அங்கிருந்து தெற்குதிசையில்  இருப்பது நாகராஜா சந்நிதி இருக்கிறது. பிரகாரத்தின் நடுவில் யக்ஷி, ஜேஷ்டா பகவதி சந்நிதிகள் இருக்கு. தெப்பக்குளத்தின் கிழக்குக்கரையில் உக்ரகாளியான கீழ்க்காவு பகவதி சந்நிதி இருக்கு.  கீழ்காவு பகவதி அம்மனை சோட்டானிக்கரை பகவதியின் சகோதரி ன்னு சொல்வாங்க. சோட்டானிக்கரை பகவதியை தரிசிப்பவர்கள் இந்த அம்மனையும் கட்டாயம் தரிசக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரகார மண்டபத்தின் இடதுபக்கம் வெடிவழிபாடு கூடமும், மண்டபத்தின் வலதுபக்கம் தர்மசாஸ்தா சன்னிதியும், ஆஞ்சநேயர் சன்னதிகளும் இருக்கு. அதனையடுத்து  யானைகளை கட்டிப்போடும் யானைக் கொட்டிலும் இருக்கு. தினமும் காலை பூஜைக்கு இங்கிருந்துதான் யானைகளை அழைத்து கூட்டி வருவாங்க.
கீழ்க்காவு அம்மையை பிரதிஷ்டை செய்தவர் வில்வமங்கலம் சுவாமிகள் என சொல்லப்படுது. இந்த சன்னிதியின் இடதுபக்கம் பழமையான பலாமரம் இருக்கு. இந்த மரத்தின்மேல் நிறைய ஆணிகள் அடிச்சு வச்சிருக்காங்க. ஏன்னா இது இங்கே செய்யப்படும் ஒருவழிபாடாம். துர்தேவதைகளாலும், மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்களின் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கின்றனர். தினமும் இரவு 8 .45 மணிக்கு  ‘குருதி பூஜை’ செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் நடக்குமாம். நாங்கள் சென்ற நேரம் அதிகாலை என்பதால் எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.இந்த பூஜையானது ஒரு காலத்தில் இங்கு உயிர்ப்பலியும் ரத்த பூஜையும் நடந்திருக்காம். இப்ப அப்படி செய்யமுடியாது என்பதால் ,அந்த வழக்கத்தை மட்டும் நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து  இரத்தம் போல் ஆக்கி பூஜைகள் செய்து, அந்த இரத்த தீர்த்தத்தை துர்தேவதைகள் பீடித்திருக்கவுங்கமேல் தெளித்தால் அவைகள் அந்தக்கணமே விலகி ஓடிவிடுமாம். அந்த சமயத்தில் கோவிலில் துர் ஆத்மாக்கள் பிடித்தவர்கள் இடும் கூச்சல்கள் கேட்பவருக்கே கிலியா ஏற்படுத்துமாம். குருதி பூஜை முடிந்ததும் இந்தச் சிவப்பு நிற தீர்த்தத்தையே பிரசாதமாகத் கொடுக்கிறார்கள்.
கீழ்க்காவு அம்மையை தரிசனம் செய்யும்  வழியில் தெப்ப குளத்தின் வடக்குக்கரையில் பிரம்மராட்சசன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியில், சுற்றுச்சுவர், கூரை எதுவும் கிடையாது. திறந்தவெளியில் நான்கு கற்களைப் (வனதுர்க்கை, சாஸ்தா, பத்ரகாளி, ராட்சசன்) என பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்தக் கற்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரமும் ஏற்றுவார்கள். சோட்டாணிக்கரை கோயிலில் உபதேவதைகளுக்குப் பூஜை கிடையாது. நைவேத்தியம் மட்டுமே. மூலஸ்தானத்தில் நைவேத்தியம் முடிந்ததும் இந்த சன்னிதிகளிலும் நைவேத்யம் கொடுப்பாங்க. 12ஆயிரம் புஷ்பாஞ்சலி நடத்துவதும், சிவந்தபட்டு கொடுப்பதும் இங்கு முக்கிய வழிபாடாகும்.
இந்த கோவிலின் ஸ்தல வரலாற்றில் இந்த கோவிலின் பழையபெயர் யோதின்னக்கரை என இருந்ததாகவும், அது மருவி சோட்டாணிக்கரை என்று வழங்கப்படுவதாக சொல்லப்படுது. ஆனா, செவிவழி செய்தியாக வேறு ஒருகதை சொல்லப்படுது. ஒருகாலத்தில் இந்தப்பகுதி அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. அப்பொழுது இந்த காட்டில் வசித்துவந்த ஒரு வேடுவ பெண் தேவியை அரூபமாக வழிபட்டு வந்துள்ளாள். அவளின் பக்தியை மெச்சி பகவதிதேவி ஜோதிவடிவத்தில் அந்த வேடுவப்பெண்ணுக்கு காட்சி கொடுத்தாராம். அன்றுமுதல் தேவிக்காட்சி கொடுத்த அந்த இடத்தை "ஜோதியான கரை"என்று மக்கள் அழைத்து, அதுவே பின்னாளில் யோதின்னக்கரை  என்றாகி   ‘சோட்டாணிக்கரை’ யாகிட்டதாம்.. 
சோட்டாணிக்கரை அந்தகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாம்.  இந்தக்காட்டில் வேடர் இன மக்கள் குடும்பம் குடும்பமாக வசித்துவந்தனர். காட்டில் கிடைக்கும் தேன், காய் கனிகள், விறகு போன்ற பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு எடுத்துச் சென்று பண்டமாற்று வியாபாரம் செய்துவந்தனர். அவர்களில் கண்ணப்பன்ன்ற வேடன் ஒருவனும்  இருந்தான். அவன் மனைவியை இழந்தவன். அவனுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒரு மகள் மட்டும் இருந்தாள். அந்தச் சிறுமியின் பெயர் பவளம். தாயில்லாத அந்தக் குழந்தையை அவன் மிகுந்த அன்புடன் வளர்த்துவந்தான். கண்ணப்பன் தெய்வபக்தி மிக்கவன். அவனது குலதெய்வம், வனதேவதைன்ற பகவதியே. அனுதினமும் தனது குலதெய்வத்தை வணங்காமல் எங்கும் செல்லமாட்டான். வாரத்தில் ஒருநாள் ஒரு மாட்டை பகவதிக்குப் பலி கொடுப்பது அவன் வழக்கம். மாட்டை உயிர்ப்பலி கொடுக்கும்போது மகள் பவளம், “அச்சா மாட்டைக் கொல்ல வேண்டாம். என மன்றாடுவாள். ஆனால் அவன் அதை கேட்பதில்லை.
அப்படியிருக்கும் சமயத்தில் கண்ணப்பனின் வீட்டிலுள்ள மாடு ஒன்று, கன்றை ஈன்று பால்கொடுத்துவந்தது. அந்த கன்றுகுட்டியின்மீது மகள் பவளத்துக்கு அலாதிப்பிரியம் எப்போதும் அதை பிடித்துக்கொண்டுதான் விளையாடுவாள். ஒருநாள்  வனதேவதைக்குப் பலியிட எந்த மாடும் கிடைக்கவில்லை. அதனால், தன் வீட்டிலிருந்த மாட்டையே பலிகொடுப்பது என முடிவு செய்து அதை அவிழ்க்கச்சென்றான். அப்போது, கன்று, தாயின் பிரிவு தாளாமல் 'அம்மே' என அலறியது. இதைப் பார்த்ததும் மகள் பவளம் ஓடோடி வந்து கன்றுக்குட்டியைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். `அப்பா! என்னைப்போலவே இந்தக் கன்றும் தாயற்ற பசுவாக வேண்டுமா?' எனக் கேவிக்கேவி அழுதாள்.மகளின் அழுகை, கண்ணப்பனின் மனதை என்னவோ செய்தது. 'இனி ஒரு நாளும் உயிர்களைப் பலி கொடுக்க மாட்டேன்' என அழுது புலம்பி அரற்றினான். அதன்பிறகு அவன் உயிர்ப்பலியை நிறுத்திவிட்டான்.  அன்றிலிருந்து புலால் உணவை உண்ணாமல் வாழத் தொடங்கினான். ஆனாலும் கண்ணப்பன் முன்பு செய்த பாவம் காரணமாக அவரது அன்பு மகள் பவளம் ஒருநாள் திடீரென இறந்துவிட்டாள். புத்திர சோகத்தால் கண்ணப்பன் துடித்துப் போனான். தன்னிடம் இருந்த மாட்டையே தன் மகளாக எண்ணி வளர்த்தான்.
நாட்கள் செல்லசெல்ல மகள் இல்லாத வழக்கை கண்ணப்பனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் ஒருகாட்சி தோன்றியது. லோக மாதா ஜகதாம்பாள் கோடி சூரிய பிரகாசத்துடன், 'கண்ணப்பா, உன் மகளின் நேசத்துக்குரிய பசு சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்பதை அறிந்துகொள்' அதன் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்றுக்கூறி மறைந்தாள். படுக்கையிலிருந்து எழுந்த கண்ணப்பன் தொழுவத்தைப் பார்த்தான். அங்கே பசுவும் கன்றும் சிலைகளாக மாறியிருந்தன. தன் கூட்டத்தாரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்களும் அந்த இடத்தில் 'காவு' அமைத்து மரங்களாலான கோயிலை உருவாக்கி வழிபடத்தொடங்கினர்.  கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். அப்பகுதியில் உள்ளவர்களும் குடிமாறிப் போய்விட்டனர். கால ஓட்டத்தில் அந்தப்பகுதி முழுவதுமே இயற்கையின் ஆளுமைக்குச் சென்று மரங்களடர்ந்த பகுதியானது. அந்த இடமும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளும் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது.

பல நூற்றாண்டுகள் கழிந்தன. அந்தப்பகுதியை சுற்றிலும் கிராமங்கள் வந்தன. அந்த சமயத்தில் கிராமத்துப் பெண்னொருத்தி அந்த இடத்திற்கு வழக்கம்போல் புல் அறுக்க வந்தவள் அங்கிருந்த பாறையில் கத்தியைக் கூர் தீட்டினாள். அந்தக் கல்லில் இருந்து நெருப்புப் பொறியுடன் ரத்தமும் வந்தது. இந்தத் தகவலை ஊர்த்தலைவரிடமும் அந்தக்காலத்தில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விசயத்தை கூற . அப்போதே அந்தப்பகுதி சுத்தம் செய்து பழங்களும் பூக்களும் கொண்டுவந்து விளக்கேற்றி பூஜை நடத்தினார்பூஜை செய்தார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள். இந்த தகவல்கள் செவிவழி கதையாக சொல்லப்பட்டுவருவது . 
குழந்தை இல்லாதவர்கள் இந்த மரத்தில் தொட்டில்கட்டி நேர்ச்சை வழிபாடு செய்வது வழக்கம் . இதுப்போல இன்னொரு கதையும் சொல்லப்படுது. .கேரளாவில் உள்ள காலடியில்  பிறந்த ஆதிசங்கரர், மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக சரஸ்வதி அவர் முன் தோன்றினார். உடனே சங்கரர் தாயே! என்னுடன் நீங்கள் கேரள நாட்டிற்கு வந்து அருள்பலிக்க வேண்டும் என வேண்டினார். உடனே வாணியும் சரிமகனே! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே! - எனது சொல்லைமீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என தனது நிபந்தனையை கூறினாள். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒருநாள் காலையில், தான் கோவில் கொள்ளவேண்டிய இடம் வந்தது, கொலுசொலி எழாதவாறு வாணி நடந்துவர, பின்னால் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லயென சங்கரர் ஐயப்பாட்டுடன் திரும்பி பார்த்தார். பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். அவள் நின்ற இடம்தான் தற்போது கொல்லூர் மூகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மையே!  என்ன இதுவென கேட்க, சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலி கேட்டபடியேதான் முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒருவேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என வேண்டி தன்னோடு மீண்டும் புறப்படுமாறு வேண்டினார்
உடனே தேவி சங்கரரிடம் மகனே! நான் கொடுத்தவாக்கை நீ மீறிவிட்டாய். பரவாயில்லை. கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. (இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும்.) இதுவும் கேரள பூமி தான். நான் இங்குதான் இருப்பேன். நீ வேண்டியபடி உன் நாட்டிற்குதான் வந்திருக்கிறேன். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டுமெனவும்,   தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணிமுதல் ஏழரை மணிவரை சோட்டாணிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோட்டாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று வாக்குறுதி தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய்மொழியின்படி சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதிரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள்  கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரையான இன்று சோட்டாணிக்கரைன்ற பெயரில் விளங்குகிறது. எனவும் ஒரு கதை சொல்லப்படுது .இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோட்டாணிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
தேவியின் வலது பக்கத்தில் இரண்டு அடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலை உள்ளது. சோட்டாணிக்கரையில் அதிகாலை நான்கு மணிக்கு நிர்மால்ய தரிசனம். மூலஸ்தானத்தின் கதவு திறந்தவுடன் தீபாராதனையுடன், ‘அம்மே நாராயணா! லக்ஷ்மி நாராயணா! பத்ரே நாராயணா!’ என்று  மனமுருகி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தினமும் அன்னை பகவதி மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; நண்பகலில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; ‎மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, காளியாக,  ராஜராஜேஸ்வரியாகவும் கருநீல‎வண்ண உடையிலும், அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி, வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி  எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால்  வலதுகையை பாதத்தில் காட்டி, இடதுகையில் அருள்பாலிப்பது சிறப்பு. மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்துவந்து வழிபட்டால், அவர் நல்ல மனநிலையை அடைந்து நோய்குணமாகி செல்கின்றனர். சிலர் நோயின் தன்மையைப் பொறுத்து இங்கு சில நாள்கள் தங்கி வழிபட்டுச் செல்கிறார்கள். இக்கோவிலின் விசேஷமே “தீய ஆவிகள், ஏவல், செய்வினை” போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலின் பகவதி அம்மன் துர்கையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்போது தரிசித்து பின்பு இக்கோவிலின் வளாகத்திலுள்ள ஒரு மிகப்பெரிய அரசமரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முன்தலையில் இருக்கும் முடியை பிடுங்கி, ஒரு இரும்பு ஆணியில் சுற்றி அந்த மரத்தில் அடித்து விடுவதால், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவதாக இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆலயத்திற்கு கேரளத்திலிருந்து மட்டுமல்லாம தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்துகூட நிறைய பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.
தினமும் காலை 4 மணிமுதல் 12 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிமுதல் பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும்.இந்த கோவில்  எர்ணாகுளத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் இருக்கு. சென்னையிலிருந்தும்,  மதுரையிலிருந்தும் ரயில்மார்க்கமாக வழித்தடங்கள் இருக்கிறது. எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் டவுன் என இரண்டு ஸ்டாப்பிங் இருக்கிறது. சில பாஸ்ட் ட்ரைன் எர்ணாகுளம் டவுனல நிக்காது. ரயில்வே ஸ்டேஷன்லிருந்து கோவிலுக்கு செல்ல நிறைய பஸ் இருக்கு . அதேபோல திருப்புணித்துரா ரயில் நிலையத்தில் இறங்கினாலும் அங்கிருந்து சுமார் 7  கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோயிலின் நியதிகள், கட்டுப்பாடுகள் கடுமையானவை.. அதேபோல் கோவிலை சுற்றி தங்கும் விடுதிகள் பலதரப்பட்ட விலைகளில் கிடைக்கின்றன.இல்லை நமக்கு காலையில் குளிக்கமட்டும் வேண்டுமென்றாலும் அதற்கும் சில ஹோட்டல்களில் வசதி இருக்கிறது. ஒருவழியாக சோட்டாணிக்கரை பகவதியை தரிசனம் செய்து அவளருளை பெற்று அடுத்த கோவிலுக்கு கிளம்பத்தயாரானோம். மீண்டும் அடுத்தவாரம் இதேபோன்ற ஒரு பகவதி கோவிலை பத்தி பார்க்கலாம்...

ஆற்றுக்கால் பகவதி அம்மனை பார்த்து சோட்டாணிக்கரை பகவதி அம்மன் பதிவை தேத்தின அவசரத்துல இன்னிக்கு காரடையான் நோன்பாம். அதை மறந்துட்டேன். இருந்தாலும் கற்புக்காசியான சாவித்திரி தனது காதல்கணவன் சத்யவானை திருப்பி தந்த  காரடையான் நோன்பு பத்தி கணவன் மனைவி அன்னியோன்யம் பெருக -காரடையான் நோன்பு பதிவின் மூலம் தெரிஞ்சுக்கோங்க. 
நன்றியுடன் 
ராஜி 

28 comments:

 1. உயிர்ப்பலியும் ரத்த பூஜையும்... பயங்கரமா இருக்கே...!

  ReplyDelete
  Replies
  1. ஒருகாலத்தில் நடந்திருக்கிறதுங்கன்ணே,இப்பவும் சேவல் பலிகொடுக்கிறார்களா தெரியவில்லை,ஆனால் ஒருசிலர் சேவலை நேர்ந்து அந்த கோவிலில் விட்டு சேன்றதை பார்க்கமுடிந்தது.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. இப்ப பலி பூஜை கிடையாது, உங்களின் இப்பதிவு அருமை

   Delete
 2. கோவிலுக்கு ஒரே ஒரு முறை சென்றதுண்டு. இப்பதிவு மூலம் அங்கே மீண்டும் சென்ற உணர்வு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங்கண்ணே,எனக்கு இப்பதான் வாய்ப்பு கிடைத்தது .சரி நீங்க கோவிலுக்கு போனதை பதிவா எழுதினீங்களா இல்லையா..

   Delete
 3. கோவில் மட்டுமல்ல, பக்தர்களிடமும் மலையாள வாசனை அடிக்கிறது! கதைகள் வழக்கம்போல சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க அண்ணே,சாம்பிராணிப்புகைக்கு நடுவில் இருந்தால் சாம்பிராணி வாசனைதான் வரும்,கோவில் இருப்பது மலையாளநாட்டில் அப்ப வாசனை வருவது இயல்புதானே....

   Delete
 4. நான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் சென்றிருக்கிறேன். அங்கு காசு கொடுத்தால் நம்பெயர் சொல்லி வெடி வெடிப்பார்கள். வெடிப்பிரார்த்தனை!

  ReplyDelete
  Replies
  1. வெடிவழிபாடு என்பதன் நோக்கமே சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தையும் பயன்படுத்தி இறைவனை வணங்குவது.இப்பவும் செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் மூலவரை ,மின்னலை கொண்டு இந்திரன் வழிபடுவதாக ஐதீகம்,மழைக்காலங்களில் மூலவரின் மீது மின்னல் தாக்குவது நடக்கும் என்று முன்பே ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன்.
   http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post.html
   வெடி போடுவதும் வாணவேடிக்கை நடத்துவதும் இதுபோன்ற தார்பாரியங்களில்தான்.கேரளாவில் எல்லா கோவில்களிலும் இந்த வெடி வழிபாடு உண்டு.சோட்டணிக்கரையிலும் இந்த வெடிவழிபாடு உண்டு.அதேபோல் முன்பு கேரளாவில் இணைந்திருந்த கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு இணைந்த பின்னும் மக்கள் கேரள கலச்சாரத்துடன் ஒத்து வாழ்ந்து வந்தனர்.தற்போதும் கேரளாவில் நடக்கும் அனைத்து பண்டிகைகளும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நடக்கிறது . இதுபோல் கன்னியாகுமரியில் இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோயில்களும் கேரளா பாரம்பரியத்தை ஒட்டியே திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வெடிவழிபாடு பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயம்.அதேபோல குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மற்றும் மேலாங்கோடு சிவன் கோயில் ஆகிய இரு கோயில்களில் மட்டுமே பண்டையகால முறைப்படி வெடிவழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இப்பொழுது அது நிறுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான் ஏன்னா தங்கள் வீடுகளில் நல்ல நிகழ்வுகள் நடந்தாலோ, நோய் வாய்பட்டாலோ பக்தர்கள் நேர்ச்சையாக செலுத்தும் முக்கிய வழிபாடுகளில் ஒன்று இந்த வெடிவழிபாடு.அதேபோல குழித்துறை தாண்டி வரும் போது ஒருகோவிலில் வெடி வெடித்துக்கொண்டே இருப்பார்கள்.அது இன்றும் இருக்கிறது .

   Delete
  2. ராஜி அதே அதே....அதான் என் பழக்க வழக்கங்கள் அல்மோஸ்ட் முழுவதும் கேரளத்ததாக இருக்கும்....நீங்களே சொல்லிட்டீங்க...தகவல்கள்

   கீதா

   Delete
  3. நன்றி கீதாக்கா...என்னையும் ஒருநாள் உங்க ஊருக்கு கூட்டிட்டு போங்களேன்,திருவாழ்மார்பனையும்,ஜடாயுபுரம் இராமலிங்க ஸ்வாமியையும் ,ஆற்றின்கரை பிள்ளையாரையும்,புரவசேரி ஜடைநாதரையும் தரிசித்து வெகுநாட்கள் ஆகிவிட்டது.

   Delete
 5. சோட்டாணிக்கரை பகவதி அம்மன் தரிசனம் செஞ்சாச்சு உங்க மூலமா ராஜி க்கா...

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி அனு..இனியும் பயணம் இருக்கு..எல்லாம் எனக்காக இல்ல நம்ம சகோதர,சகோதரிகளுக்காகத்தான்....

   Delete
  2. ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும் ..

   Delete
 6. சோட்டானிக்கரை பகவதி கோவிலுக்கு முதன் முதல்ல் போனபோது சாயரட்சை பூஜைக்கு தீபாராதனை காட்டும்போதுசேவிக்க வந்திருப்பவர்கள் ஆடும் ஆட்டம் பயங்கரமாயிருக்கும் என் மூத்தமகனுடன் சென்றவன் (1970ல்) அவனது கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்தேன் மக்களின் அறியாமையை நம்பிக்கை என்னும்பெயரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. அப்பொழுது அறியாமையில் முழித்து இருக்கலாம்.இப்பொழுது அறிந்து விழித்துக்கொண்டீர்களே,சந்தோசம்பா ....ஒவ்வரு ஊருக்கும் ஒவ்வரு விதமான வழிபாடு ...

   Delete
 7. இந்த கோயிலுக்கு ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும் வீட்டு அம்மணியும் சென்று வந்திருக்கிறோம். இந்த பதிவை படித்து விட்டு அந்த கோயிலுக்கு சென்று வந்த அனுபவங்களை எல்லாம் மனது அசை போட ஆரம்பித்துவிட்டது

  ReplyDelete
  Replies
  1. அப்ப எல்லோரும் ஏற்கனவே போயிட்டு வந்துடீங்களா!வடிவேலு பாணியிலே சொல்லனும்னா ...இது தெரியாம நாம கொஞ்சம் ஓவராதான் பேசிட்டோமோ ...சரி இனி அடக்கி வாசிப்போம் .

   Delete
 8. போயிருக்கிறோம் இக்கோயிலுக்கு. உங்கள் தகவல்கள் சிறப்பு

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. அண்ணா என்ன சுவாரஷ்யம் இல்லாம போயிருக்கிறோம்ன்னு ஒத்தை வார்தையியில முடிச்சிட்டேங்க,கீதாக்க கோவில்ல அண்ணனை பேயோட்டிருக்கிறாங்க போல...எல்லாம் அந்த பகவதிக்கே வெளிச்சம்,அம்மே பகவதி நின்றே கொச்சின காத்து கொள்ளனே தேவி...

   Delete
 9. குருதி பூஜை கட்டணம் எவ்வளவு? பகிரவும், நன்றி.

  ReplyDelete
 10. குருதி பூஜை கட்டணம் எவ்வளவு? பகிரவும், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. 5000, 12000,25000 என்று பல கட்டணங்களில் நடைபெறுகிறது

   Delete
 11. குருதி பூஜை கட்டணம் எவ்வளவு? பகிரவும், நன்றி.

  ReplyDelete
 12. குருதி பூஜை கட்டணம் எவ்வளவு? பகிரவும், நன்றி.

  ReplyDelete
 13. ஸ்ரீ சைலம் கோயிலுக்கு சென்று அக்கோயில் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்

  ReplyDelete