Showing posts with label வேர்க்கடலை. Show all posts
Showing posts with label வேர்க்கடலை. Show all posts

Tuesday, May 22, 2018

கொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்

இப்ப கொத்தவரைங்காய் சீசன் ஆரம்பிச்சிட்டுது. கொத்தவரங்காயில் உசிலி, கூட்டு, வத்தல், புளிக்குழம்புன்னு செய்யலாம்.  எங்க ஊர் பக்கம் வேர்க்கடலை பருப்பு பொடி போட்டு செய்யும் பொரியல் சுவையாவும் வித்தியாசகாவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்..
கொத்தவரங்க்காய் 
வெங்காயம்
தக்காளி
பூண்டு
கடுகு
கடலைபருப்பு
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு 
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
புளி(தேவைப்பட்டால்)
கொத்தவரங்காயை பொடிபொடியாய் நறுக்கி உப்பு போட்டு வேக வச்சு தண்ணிய வடிச்சுடனும். கொத்தவரங்காயை நறுக்க வெசனப்பட்டா, பிடிக்காத புருசன், இல்லன்னா நாத்தனார், மாமியார், மாமனார்கிட்ட கொடுத்து நறுக்க சொல்லுங்க.


வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்கவிட்டு, வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்குங்க. 

பொடியா நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்குங்க. 
உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வெங்காயம் தக்காளி வெந்துடும்...
மிளகாய் தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்குங்க. 
கொஞ்சமா தண்ணி சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும்வரை கொதிக்க விடனும். புளி தண்ணி தேவைப்பட்டா இந்த நேரத்தில் சேர்த்துக்கலாம். 
தண்ணி சுண்டி வரும் நேரத்தில் வடிகட்டி வச்சிருக்கும் கொத்தவரங்காயை கொட்டி வதக்கவும்.

தண்ணி நல்லா சுண்டியதும் பொடி செஞ்சிருக்கும் வேர்கடலை பொடியை சேர்த்து, சுருள கிளறிக்கனும்.


கொத்தவரங்காய் பொரியல் ரெடி. வேர்கடலையோடு எண்ணெயில் வறுத்தெடுத்த காய்ந்த மிளகாயை சேர்த்து பொடி செஞ்சும் போடலாம். முன்னலாம் அம்மில வச்சு பொடிக்கும்போது கடைசியா பூண்டு போட்டு நசுக்கி அம்மா சேர்ப்பாங்க. வாசமாவும் இருக்கும். 

கொத்தவரங்காய்க்கு சீனி அவரைக்காய்ன்னும்  பேரு. இதன் காய்கள் செடியில் கொத்து கொத்தாகக் காய்க்குறதால   இதுக்கு கொத்தவரங்காய்ன்னு பேர்  வந்தாம். இது தீவனப்பயிராவும் பயன்படுது. இதில் நார்சத்து, புரதம், போலிக் ஆசிட்ன்னு இருக்கு. . இதை ஒரே நேரத்தில் அதிகமா சாப்பிட்டா ஜீரணக்கோளாறு ஏற்படும். 
நன்றியுடன்,
ராஜி

Tuesday, November 07, 2017

பிடிக்கருணைக்கிழங்கு, வேர்க்கடலை குழம்பு - கிச்சன் கார்னர்

 கருணைக்கிழங்கில் ரெண்டு வகை இருக்கு(எனக்கு தெரிஞ்சு)..  பெருசா முட்டைக்கோஸ்  போல  உருளையா இருக்கும் ஒரு வகை கருணைக்கிழங்கும், கொழுக்கட்டை போல இருக்கும் பிடிக்கருணைக்கிழங்குன்னு ரெண்டு வகை  எனக்கு தெரியும். ஆமா, இதுக்கு ஏன் கருணைக்கிழங்குன்னு பேர் வந்திருக்கும்ன்னு சின்னதா ஒரு ஆராய்ச்சி பண்ணதுல நான் புரிஞ்சுக்கிட்டது.. இந்த கருணைக்கிழங்கை பறிச்சதும் உடனே செய்ய முடியாது. கொஞ்சம் தண்ணிலாம் வத்தினப்பிறகுதான் சமைக்கமுடியும். இல்லன்னா சாப்பிடும்போது காரும்..  வெட்டும்போது கை அரிக்கும்.  அதனால, அப்படிலாம் இல்லாம சமர்த்தா இருக்கனும், கருணை காட்டுன்னு யாராவது கேட்டதால இந்த பேரு வந்திருக்கலாம்ன்னு விடை கிடைச்சது.  இது சரியா?! தப்பான்னு நீங்கதான் சொல்லனும்..

 தேவையான பொருட்கள்....
பிடிக்கருணைக்கிழங்கு
வேர்க்கடலை,(பச்சை வேர்க்கடலையை உரிச்சுக்கலாம். இல்லன்னா வேர்க்கடலை பருப்பை 5 மணி நேரத்துக்கு முந்தி ஊற வச்சுக்கனும்)
வெங்காயம்,
பூண்டு,’
தக்காளி,
மிளகாய்தூள்
புளி
உப்பு
எண்ணெய்
கடுகு
கரிவேப்பிலை
 15 இல்ல 20 நாளான பிடிக்கருணைக்கிழங்கை மண் போக நல்லா கழுவி வேக வச்சுக்கனும்... ஒருவேளை கிழங்கு புதுசா இருந்தா கொஞ்சம் புளி சேர்த்து வச்சுக்கிட்டா காராது, இல்லன்னா கையும், நாக்கும் அரிக்கும். வெந்த கிழங்கை வீட்டுக்காரர் தோலை உரிக்குற மாதிரி தோல் எடுத்து வெட்டிக்கனும்... வெங்காயம் தக்காளியை பொடியா நறுக்கிக்கனும். பூண்டை உரிச்சு தட்டி வச்சுக்கனும். புளியை ஊறவச்சுக்கனும்.
 
அடுப்பை பத்த வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிய விட்டு பூண்டை போட்டுக்கனும்.

அடுத்து வெங்காயம் போட்டு பொன்னிறமா வதக்கி கறிவேப்பிலை சேர்த்துக்கனும்...


வெங்காயம் வதங்க உப்பு சேர்த்துக்கனும்...


வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்துக்கனும்...

ஊற வச்சிருக்கும் வேர்க்கடலைய சேர்த்துக்கனும்....

எல்லாம் வதங்கினப்பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க.


மிளகாய் தூள் வாசனை போனதும் புளித்தண்ணிய சேர்த்துக்கனும்..

நல்லா கொதிச்சு புளி வாசனை போனதும் நறுக்கி வச்ச கருணைக்கிழங்கை போட்டு கொதிக்க விடுங்க. 


நல்லா கொதிச்சு வந்ததும் கொத்தமல்லி தழை போட்டு இறக்கிடுங்க...



குண்டுடல் பெற உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைய கருணைக்கிழங்குன்னு ஒரு சொலவடை உண்டு... இது மூலநோயை குணப்படுத்தும்.  மாதவிடாய் போது வரும் இடுப்பு வலி, உடல் வலியை போக்கும்.  மாரடைப்பு, கேன்சர் வருவதை தடுக்கும். ஈரலுக்கு பலம் கொடுக்கும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1477216

நன்றியுடன்,
ராஜி.

Tuesday, March 11, 2014

வேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்த பக்கத்து வீட்டு பொண்ணு இந்தக் குழம்பை செய்வா. அதன் ருசி பசங்களுக்குப் பிடிச்சுப் போகவே அவக்கிட்ட கேட்டு அதே மாதிரி சில மாற்றங்களுடன் நான் செய்ய ஆரம்பிச்சேன். தூயா எப்போ வீட்டுக்கு வந்தாலும் இந்தக் குழம்பு கண்டிப்பா அவளுக்குச் செஞ்சு கொடுத்துடனும்.

தேவையானப் பொருட்கள்:
சின்ன சின்னதான பிஞ்சுக் கத்திரிக்காய்- 4
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
எண்ணெய் - 2  டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா வெட்டிக்கோங்க, புளியை ஊற வைங்க. கத்திரிக்காயை முழுசா இருக்குமாறு நீள வாக்குல வெட்டி தண்ணில போட்டுக்கோங்க. இல்லாட்டி கத்திரிக்காய் கறுத்துடும். வேர்க்கடலையை அப்படியே மிக்சில போட்டு தண்ணி விட்டு கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்கோங்க.

வாணலில ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி கத்திரிக்காய்களை வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.


மீண்டும் வாணலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க.

வெட்டி வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.

தக்காளி சேர்த்து வதக்குங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.

அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து லேசா வதக்குங்க.


மிளகாய்தூள் சேர்த்து லேசா வதக்குங்க.


மிளகாய்தூள் வதக்கித் தேவையான அளவு தண்ணி, கத்திரிக்காய் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.



மிளகாய் தூள் வாசனை போனதும் புளிக்கரைசலை ஊத்தி, கறிவேப்பிலை சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.


கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி. இது கொஞ்சம் திக்கா இருந்தாதான் நல்லா இருக்கும். தேவைப்பட்டா பூண்டு சேர்த்துக்கலாம்.

கோடைக்காலம் வந்திடுச்சே! கஞ்சி வத்தல்லாம் விட்டு வச்சுக்கிட்டா உபயோகமா இருக்கும்ல. அதனால, கஞ்சி வத்தல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்.