Showing posts with label கத்திரிக்காய். Show all posts
Showing posts with label கத்திரிக்காய். Show all posts

Tuesday, March 11, 2014

வேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்த பக்கத்து வீட்டு பொண்ணு இந்தக் குழம்பை செய்வா. அதன் ருசி பசங்களுக்குப் பிடிச்சுப் போகவே அவக்கிட்ட கேட்டு அதே மாதிரி சில மாற்றங்களுடன் நான் செய்ய ஆரம்பிச்சேன். தூயா எப்போ வீட்டுக்கு வந்தாலும் இந்தக் குழம்பு கண்டிப்பா அவளுக்குச் செஞ்சு கொடுத்துடனும்.

தேவையானப் பொருட்கள்:
சின்ன சின்னதான பிஞ்சுக் கத்திரிக்காய்- 4
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
எண்ணெய் - 2  டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா வெட்டிக்கோங்க, புளியை ஊற வைங்க. கத்திரிக்காயை முழுசா இருக்குமாறு நீள வாக்குல வெட்டி தண்ணில போட்டுக்கோங்க. இல்லாட்டி கத்திரிக்காய் கறுத்துடும். வேர்க்கடலையை அப்படியே மிக்சில போட்டு தண்ணி விட்டு கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்கோங்க.

வாணலில ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி கத்திரிக்காய்களை வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.


மீண்டும் வாணலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க.

வெட்டி வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.

தக்காளி சேர்த்து வதக்குங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.

அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து லேசா வதக்குங்க.


மிளகாய்தூள் சேர்த்து லேசா வதக்குங்க.


மிளகாய்தூள் வதக்கித் தேவையான அளவு தண்ணி, கத்திரிக்காய் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.



மிளகாய் தூள் வாசனை போனதும் புளிக்கரைசலை ஊத்தி, கறிவேப்பிலை சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.


கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி. இது கொஞ்சம் திக்கா இருந்தாதான் நல்லா இருக்கும். தேவைப்பட்டா பூண்டு சேர்த்துக்கலாம்.

கோடைக்காலம் வந்திடுச்சே! கஞ்சி வத்தல்லாம் விட்டு வச்சுக்கிட்டா உபயோகமா இருக்கும்ல. அதனால, கஞ்சி வத்தல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்.

Tuesday, December 17, 2013

வேர்க்கடலை, கத்திரிக்காய் காரக்குழம்பு -கிச்சன் கார்னர்

சாம்பார், கூட்டு, பொறியல்ன்னு கத்திரிக்காய் எந்த ரூபத்துல என் பசங்களுக்கு பிடிக்கும். அதுலயும் வேர்க்கடலை அரைச்சு ஊத்தி செய்யும் காரக்குழம்புன்னா நிமிசத்துல காலி ஆகிடும். 

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - கைப்பிடி
பிஞ்சு கத்திரிக்காய் - 5(குட்டி, குட்டி காயா இருந்தா நல்லது)
வெங்காயம் - 1
தக்காளி- 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சீர்கம் - சிற்து
கடுகு- சிறிது
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் 2 டீஸ்பூன்
மஞ்சப்பொடி - சிறிது

வறுக்காத வேர்க்கடலையை தோலோடு மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க.

கத்திரிக்காய் சின்ன, சின்னதா இருந்தா காம்பை மட்டும் கட் பண்ணிட்டு நாலா கீறி முழுசாவும், கத்திரிக்காய் பெருசா இருந்தா நீள வாக்குல கீறி எண்ணெயில வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.

கடாயில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் சீரகம், கடுகு போட்டு பொறிய விடுங்க.

கடுகு, சீரகம் பொறிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமா வதக்கிங்கோங்க.
அடுத்து தக்காளி போட்டு வதக்கிக்கோங்க. 

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேருங்க.

உப்பு சேர்த்துக்கோங்க.

அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை போட்டு வதக்குங்க.


வேர்க்கடலை பச்சை வாசனை போனதும் தேவையான அளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து,  மிளகாய் தூள் வாசனை போகும் வரை வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க.
கத்திரிக்காய் சேர்த்து கொதிக்க விடுங்க. 

கத்திரிக்காய் நல்லா வெந்ததும் புளிக் கரைச்சு ஊத்திக் கொதிக்க விடுங்க.

காரசாரமான கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி.சூடான சாதத்துல நெய் சேர்த்து சாப்பிட செமயா இருக்கும். வேர்க்கடலை போட்டிருக்குறதால ருசி கூடுதலா இருக்கும். சட்டுன்னு அடிப்பிடிச்சுக்கும். அதனால, அப்பப்ப குழம்பை கிளறி விடுங்க. உங்களுக்கு முடியாட்டி சமைக்குறது பெண்களா இருந்தா வூட்டுக்காரரை கிளறி விடச்சொல்லுங்க. சமைக்குறது ஆண்களா இருந்தா வேற வழியே இல்ல குழம்பு கொதிச்சு இறக்கும் வரை நீங்களே கிளறிவிடுங்க.

வேற ஒரு ரெசிபியோட அடுத்த வாரம் பார்க்கலாம்!! இப்ப டாட்டா! பை பை! சீ யூ.

Wednesday, November 09, 2011

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??


மல்டிநேஷனல் கம்பெனில வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க பாஸுங்க்கிட்ட நல்ல பேர் வாங்கி என்னைப் போல ஆளுண்டா?!ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க.  ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க. 
அதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க. 
கத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா? கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்...., இப்படி எத்தனை எத்தனையோ..., ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, சக ஆண்பதிவர்களுக்கு இந்த டிப்ஸ்.
இதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல பாஸாகுங்க. 
*முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!
* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.
*தேங்காய் ஆட்டி பார்த்து உள்ளே நல்லா தண்ணி இருக்குற காயா பார்த்து வாங்கணும்
*முட்டைகோஸ் இலை பிரியாம கொஞ்சம் பச்சை நிறமா இருக்குறதை வாங்கணும்.

                     
*வெங்காயம் வாங்கும்போது, மேற்பாகமும், கீழ்பாகமும்  அதிகம் வளராமலும், நீள்வாக்க்கில் இல்லாமல் உருளையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
*கத்திரிக்காய் வாங்கும்போது அழுத்தி பார்த்து கல் போலில்லாமலும், காம்புகள் நீளமாகவும், மேல்தோல் காயைவிட்டு பிரியாமலும் இருக்க வேண்டும்.

      
அசைவ பிரியர்களுக்கு:
*மீன் கடையில் பச்சை கலர் பெரிய ஈ சுத்தக்கூடாது . வயிற்றுப்பகுதி வீக்கமாகவோ உடைந்தோ இருக்க கூடாது

*எந்த மீனுமே புதிதானால் கவுச்சி வாடை இருக்காது . செவுலும் கண்ணும் பாத்து வாங்கனும்.  மீனின் மேற்பரப்பு பள பளன்னு வழு வழுப்புடன் இருந்தாலே புதிதாக இருக்கும்
*தேளி, கெண்டை, கெளுத்தி மீன், போன்றவை வறுக்க நல்லா இருக்கும்.
*டேம் கெளுத்தி, ஜிலேபி, விரால், போன்ற மீன்கள் குழம்பு வைக்க நல்லது.
ஆட்டுகறி வாங்கும்போது  கால் தொடைக்கறி வாங்குனா நல்லாருக்கும்(ரம்பா, தொடை அது இதுன்னு கமெண்ட் போட்டால்.. அவங்க தளத்துல மைனஸ் ஓட்டு போடப்படும் என்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.)

டிஸ்கி: சொந்தமா யோசிச்சீங்க போல இருக்குன்னு யாரும் கமெண்ட் போட வேணாம். இது சொந்தமா யோசிச்சு போட்ட பதிவல்ல. சொந்த அனுபவங்களை வச்சு போட்ட பதிவு. என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.