Monday, December 12, 2011

பணமென்னும் சுழலில்......


பணம் சம்பாதிக்க
கற்றுக்கொள்ளுங்கள்
மௌனமான நேரங்களில் கூட ..
பணம் பேசும் ……

கடவுளே உனக்கு ஒரு
அன்பு கட்டளையிடுகிறேன் ..
ஆயிரம் கஷ்டங்களை கொடு ..
பல்லாயிரம் சோதனைகளை கொடு ..

ஆண் பிள்ளையாய் பிறந்த என்னை
அழவைத்து விடாதே ..!
ஏனென்றால், கல்லை விட
கடினமான என் மனது ..

ஒரு பூவை விட மென்மையாகிவிட்டது..
சிறு கஷ்டங்களை கூட ..
தாங்க முடியவில்லை ..
ஏனோ கண்கள் கலங்கி கொண்டே ..
இருக்கிறது ..

பணம் ஒரு பொருட்டல்ல
என்பதை என்னை சுற்றி
இருப்பவர்கள் உணரும் வரை ..
நான் உயர்வாய் வரவேண்டும் ..

ஒன்று மட்டும் உண்மை ..!
வாழ்க்கை பாதையில் ,
கஷ்டங்களால் வரும் கண்ணீரை விட,
காதலால் வரும் கண்ணீரே அதிகம்!?

கண்ணீர் என தெரிந்தும் , ஏனோ
அதை சுகமாய் ஏற்றுக்கொள்கிறேன் … 
 


Wednesday, December 07, 2011

உன் சமையலறையில் நீ சமர்த்தா?...,

                                         
1. வீட்டைப் பளிச்சென்று வைத்துக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது? இதோ.. உங்கள் சமையலறையை சூப்பர் சுத்தமாகப் பராமரிக்க டிப்ஸ்!
.........................................
2. காய்கறி, பழங்களை நறுக்கியவுடன் குப்பைகளை உடனே குப்பைத் தொட்டியில் கொட்டி விடுங்கள். மேடையிலேயே சேர்த்து வைத்தால், அதன் மேல் ஈ மற்றும் பூச்சிகள் மொய்த்து நம்மை அறியாமலேயே வியாதிகளை பரப்பி விடும்.
..........................................
 3. இஞ்சி, தேங்காய் மூடி, காய்கள், இட்லி மாவு போன்றவற்றை அதன் உபயோகம் முடிந்த உடனேயே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அவை கெட்டுப் போகாது என்பதுடன், மேடையும் சுத்தமாகவே இருக்கும்.
................................................
 4. பால் (அ) சாம்பாரை கொதிக்கவிடும்போது வழிந்து பர்னரில் அடைத்துக் கொள்ளும். இதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
..................................................
5. அடுப்பின் ‘நாப்’-ஐ அணைத்து, பர்னரை தடிமனான துணியால் கழற்றுங்கள். இதைத் தண்ணீர்க் குழாயின் கீழே காட்டினால், அடைப்புகள் நீங்கி விடும். பர்னரிலிருந்து சொட்டும் தண்ணீர் வடிந்த பிறகு, இதை எரிந்து கொண்டிருக்கிற மற்றொரு பர்னரின் மேல் தலைகீழாக வைத்தால், நிமிடத்தில் உலர்ந்து விடும்.
                       

6.வாரம் ஒருமுறை, சுவரில் உள்ள ஒட்டடையை அகற்றி, ஜன்னல் கம்பிகளைத் துடையுங்கள். சமையல் பொருட்கள் வைத்திருக்கும் டப்பாக்கள், பாட்டில்கள் போன்றவற்றை ஒரு உலர்ந்த துணியால் துடைத்து பிசுக்கை அகற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் கிச்சன் எப்போதும் கிளாசிக்தான்.
..................................................
 7. சமையல் முடித்தவுடன் கொதிக்கும் வெந்நீரை மேடையின் மேல் விட்டு, ஒரு துணியால் நன்றாக அழுந்தத் துடையுங்கள். மேடை பளபளக்கும்.
.......................................................
8. மாதம் ஒருமுறை கிச்சனில் இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன், பல்புகள், கடிகாரம், மின்சார சிம்னி முதலியவற்றில் உள்ள தூசுகளை உலர்ந்த துணியால் துடைத்துவிடுங்கள். பிறகு ஈரத்துணியால் அவற்றை சுத்தம் செய்தால், பளிச்சென்று இருக்கும்.

 கிச்சன் மேடையிலேயே மாவு சலிப்பது, சப்பாத்தி இடுவது, காய், கீரைகளை நறுக்குவது என்று சகலமும் செய்பவரா நீங்கள்? ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதன் மேல் வைத்துக் கொண்டு வேலைகளை செய்தால், மேடை சுத்தமாக இருக்கும்.
...........................................................
9. மீந்த குழம்பு, ரசம் போன்றவற்றை அப்படியே ‘சிங்க்’கில் கொட்டினால், அடைத்துக் கொள்ளும். இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கலக்கி ஒரு பெரிய துளையுள்ள வடிகட்டியால் வடிகட்டினால், சக்கையைத் தனியே குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். சிங்க்கில் எதுவும் அடைக்காது.

10.சமையலறையில் கண்களைக் கவரும் வண்ணப் படங்கள், இயற்கைக் காட்சிகள் கொண்ட காலண்டர்கள், காய்கறிகள், பழங்களின் படங்களை ஒட்டி வையுங்கள். முடிந்தால், நல்ல படங்கள் பதித்த டைல்ஸ்களையே சமையலறைக்கு உபயோகியுங்கள். சுத்தத்துக்கு சுத்தம். மனசுக்கும் சந்தோஷம்!
.................................................................
11.எல்லோரும் பாத்திரங்களை கழுவி, ஈரம் போக துடைத்துதான் அடுக்கி வைக்கிறோம்.. ஆனால், மறுபடியும் உபயோகிக்கும்போது அப்படியேதான்  பயன்படுத்துறோம். அப்படியல்லாமல், கழுவிட்டு பயன்படுத்துங்க. முக்கியமா, பருப்பு கடையும் மத்து, கல்சட்டி, பூரிக்கட்டை, பூரிமனை..., இப்படி
.............................................................
12. காய்கறி வெட்டுவதற்கு முன்பும், வெட்டிய பின்பும் அறிவாள்மனை அல்லது கத்தியை கழுவிட்டு வெட்டுங்க. பயன்பாடு முடிந்ததும் குழந்தைகள் கைகளில் படாத இடத்தில் வைக்கவும்.
                                            
13. ஈக்கள் மொய்க்கும் காலங்களில் சாப்பாட்டு மேஜை அதிகம் ஈ நாடாமல் இருக்க வேண்டுமா? கொஞ்சம் புதினா அல்லது கறிவேப்பிலையை மேஜை மீது போட்டு வையுங்கள். ஈக்கள் பக்கத்திலேயே வராது!
                                                   
14. ஸ்டீல் பாத்திரங்கள் கறைப்பட்டால், அரை கப் தண்ணீரில் 3 ஸ்பூன் வினிகர் கலந்து ஊற்றி, சூடாக்கி, முழுவதும் ஆவியான பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கழுவுங்கள். பாத்திரம் பளிச்சிடும்!
..........................................................
15.  வாழை இலை வாங்கி வந்து இரண்டு நாட்கள் வீட்டில் வைத்திருந்தாலே பழுத்து விடும். இலையை சுருட்டிக் கட்டி, படுக்கையாக வைக்காமல், செங்குத்தாக நிமிர்த்தி வைத்துப் பாருங்கள்.. நான்கு நாட்கள் ஆனாலும் இலை பழுக்காது!
             


16. புது எவர்சில்வர் பாத்திரம் வாங்கி வந்து, அதில் உள்ள ஸ்டிக்கர்ஸ் லேசில் பிரிக்க வராது. அப்படியே பிரித்தாலும் அதை ஒட்டிய பசை கறை பாத்திரத்தில் அப்பிடியே இருக்கும். அப்படி அவஸ்தை படாமலிருக்க சுலப வழி. ஸ்டிக்கர் இருக்கும்  பாத்திரத்தின் மறுபக்கத்தை லேசா சூடாக்கி ஸ்டிக்கரை பிரித்தால் சுலபமா வந்துடும்.
..............................................,
17. ஃபிரிட்ஜை மாதம் ஒரு முறை, அதற்குண்டான லிக்குவிட் போட்டு துடைத்து,  மீண்டும், எலுமிச்சை பழம் பிழிந்த நீரில் துடைத்து, ஈரம் காய்ந்தபின் உள்ளிருக்கும் டிரேக்களை கழுவி ஈரம் போக துடைத்து அடுக்கவும்.
...............................................
18. காய்கறிகளை வாங்கி, கழுவி ஈரம் போன பின் பிளாஸ்டிக கவரில் போட்டு தனித்தனியா வைத்தால் எடுக்கும்போது ஈசியா இருக்கும்.
.........................................................
டிஸ்கி: வீடு கட்டும்போது எல்லா இல்லத்தரசிகளும் கிச்சன் அப்பிடி வேணும், டைனிங் டேபிள் இப்படி வேணும், பாத்திரம் வேணும்ன்னு பார்த்து செய்வாங்க. ஆனால், அதை சரியா பராமரிக்காம சில மாதங்களிலேயே கிச்சன் பார்க்க சகிக்காது. சுவரில், பிசுக்கு, ஒட்டடை, பொருட்களை கலைஞ்சு இருக்கும். அப்படியில்லாம மாசம் ஒருதடவையாவது பாத்திரங்களை துடைத்து, ஒட்டடை அடித்து வைக்கனும்.
சமையலறை சுத்தமா இருந்தால்தான் சமைக்கும் உணவு சுவையாவும் ஆரோக்கியமாவும் இருக்கும்.

Tuesday, December 06, 2011

அன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,

”திருமலை”யில் வாழும் ஏழுமலையானின் அருளால் பிறந்தவன் நீ!
சகோதரிகளுக்கு சிறந்த  ”காவலன்” நீ!
வீட்டில் போடும் செல்ல சண்டையின் ”வேட்டைக்காரன்” நீ!
உடன் பழகும் பிள்ளைகளுக்கு உற்ற ”நண்பன்” நீ!
நீ பயிலும் பள்ளியில் ”மாண்புமிகு மாணவன்” நீ!
விளையாட்டில் ”கில்லி” நீ!
”சச்சினின்” தீவிர ”ரசிகன்” நீ!
சில சமயங்களில் மொக்கை போடுவதில் “திருப்பாச்சி” அருவாள் நீ!
சைக்கிள் ஓட்டும் வேகத்தில் “சுறா” நீ
வீட்டில் அனைவருக்கும் ”அழகிய தமிழ் மகன்”  நீ!
எதையும் “நேருக்கு நேர் ” எதிர் கொள்வதில் ”வேலாயுதம்” நீ
எங்களுடன் ”ஒன்ஸ்மோர்” அடுத்த ஜென்மத்திலும் பிறக்க வேண்டும்.
 
 சகோதரன் என்பவன் குழந்தை பருவத்தின் ஒரு பகுதி.  
அவ்வரம் அமைய பெற்றவர்கள், 
யாரும் அதை இழக்ககூடாது. 
சகோதரிகள் எங்களுக்காக  நீ 
பிறந்ததற்கு எங்கள்  நன்றி! 
 
சகோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு. 
உன்னை எங்களுக்கு சகோதரனாய் தந்ததற்கு
கடவுளுக்கு எங்கள் நன்றி.
உன்னைப் போன்ற சகோதரன் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

சகோதரன் என்பவன் ஒரு 
உற்றத் தோழன் வாழ்க்கையில்,
உன்னை எங்கள் சகோதரனாய் 
அடைந்ததற்கு பெருமைக் கொள்கிறோம்.
 
டிஸ்கி: அம்மா கொஞ்சம் பிஸி என்பதால் எங்கள் அன்பு சகோதரன் பிறந்த நாள் பதிவை நாங்கள் போடுகிறோம். அனைவரும் அவனை வாழ்த்த வேண்டுகிறோம். அவனுக்கு இது 12வது பிறந்த நாள். அவன் விஜயின் ரசிகன். அதனால் 12 வரிகளில், விஜய் படம் வருமாறு கவிதை எழுத முயற்சி செய்தோம்.
இப்படிக்கு 
தூயா, 
இனியா.


Monday, December 05, 2011

உன்னை ஒன்று கேட்பேன்..., ராமா! உண்மை சொல்ல வேண்டும்...,



என் தவம் முடிந்தது.....
என் கவலை தீர்ந்தது.....
இன்று என் மணாளனோடு நான் வாழ
அவரை சேரும் அந்த தருணம்
அதற்காகவே இன்னும் தொடருது என் பயணம்......

வந்தது அந்த இனிய நிமிடம்.....
அவர் அருகில் நான் இருக்க
பக்கத்தில் இருக்கும் சபை எனக்கு தெரியவில்லை....
அவர் அருகாமையில் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்தேன்......

சபையில் சலசலப்பு.....
சிலருக்கு சந்தேகம்.
எனக்குள் ஒரு தவிப்பு,
ஆனாலும் நான் திடமாய்
என் ராமன், என்னை சந்தேகிப்பாரா.....
அவருக்கு தெரியும், சீதையை பற்றி....
என் முகம் அவர் முகத்தை ஏறிட,
என்ன உள்ளது அவரது எண்ணத்தில்
 !?என்று தேட..
காத்திருந்தேன் அவர் வார்த்தைகளுக்காக....

என் சீதை, களங்கமற்றவள்....
அவளை நான் அறிவேன்....
இப்படி சொல்வார் என்று நினைத்தேன் .

உங்கள் திருப்திக்காக என்று சொல்லி
என்னை தீக்குளிக்க வைத்துவிட்டார்.
ஒடிந்து போனேன்...
நான் மனம் நொறுங்கி போனேன்....

அன்று ராவணனிடம்
சண்டை போட இருந்த பலம்
இன்று என் மனதில் ஏன் இல்லை!?
சந்தேக தீ உன்னையும் சுட்டதா, ஏ ராமா!
என்று கத்தவென்றும் போல் ஓர் எண்ணம்

உடனே மாற்றிக் கொண்டேன்
கத்தி என்ன பிரயோஜனம்....
சந்தேகம் என்ற தீ வந்த பின்னே,
அதை அணைக்காமல் விட்டால்
அஃது என் காதலையும் சேர்த்து அல்லவா எரித்து விடும்....

காதல் இல்லாமல் வாடும் பூவாய் வாழ
மனமில்லால்
அந்த மனதை கொன்று கொண்டேன்....
அவன் சந்தேகத்தை தீர்த்துக் கொடுத்தேன்....
நான் தீயினில் இறங்கினேன்.....


ஒரு நொடி, ஒரே ஒரு நொடி,,,
ஏ ராமா, நான் காட்டினில் இருந்தேன்
நீ நாட்டினில் இருந்தாய்...
ஏன் நான் களங்க பட்ட  மாதிரி
நீயும் களங்க படலாம் அல்லவா.....

உன்னால் நிரூபிக்க முடியுமா?
என்று கேட்டிருந்தால்......
எப்படி தீர்த்து வைத்திருப்பாராம்..
என் சந்தேகத்தை????

டிஸ்கி: சீதையின் உள்ளம் பேசி கொண்ட மாதிரி எனக்கு நேற்று ஒரு கனவு.... அந்த கனவை தான் இங்கே சொல்ல நினைத்தேன்.... இதில் எந்த மதத்தையும் நான் அவமதிக்க விரும்பவில்லை .

Friday, December 02, 2011

பழம் நீயப்பா! பழனியப்பா! -மூன்றாம் படைவீடு


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படைவீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை, பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.
தல அறிமுகம்:
மூலவர்:குழந்தை பாலதண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி
தல விருட்சம்: நெல்லி மரம்
தீர்த்தம்: சண்முக நதி
புராணகால பெயர்கள் :திருஆவினன்குடி, தென்பொதிகை
ஊர்:பழநி 
மாவட்டம்: திண்டுக்கல்,  
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்: அருணகிரிநாதர் திருப்புகழ் , நக்கீரர்

தல சிறப்பு:
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

                 
பெயர் காரணம்:
பழனி என்பது இங்குள்ளா மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்ற அழைக்கப்படுகிறது. சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை “ஞானப் பழம் நீ” என அழைத்த்தால், “பழம் நீ” என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே “பழனி” ஆகிவிட்டது.இதேப்போல மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்கு கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். எந்த பற்றும் அற்ற ஆண்டி கோலத்தில் காணப்பட்டார். மகனின் நிலையறிந்த சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு, “பழம் நீ” என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி “பழனி” என்றழக்கப்பட்டது என இக்கோயில் தல வரலாறு கூறுகிறது.
தல பெருமை
தண்டாயுதபாணி சிறப்பு: விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.
                   
இடும்பன் வரலாறு:
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்து போரிட்டு வீழ்ந்தான். இடும்பனின் மனைவியும், அகத்திய முனிவரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து,அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். 
மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார்."தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.

சித்தர் போகர் :
இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர்.சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும்.சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.
               
முருகன் கையில் அருணகிரியார்!:
மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன் காட்சி தருகிறார்.

தம்பியை காத்த அண்ணன்: 
சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.
மூன்றாம் படை வீடு:
முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருஆவினன்குடி சிறப்பு:
குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், "திருஆவினன்குடி' என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம்.இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.
பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.

முருகனுக்கு அன்னாபிஷேகம்:
பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

முதல் வணக்கம் இடும்பனுக்கே...!:
 தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.
இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

தைப்பூச விழா சிறப்பு: 
தைப்பூசத்திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள். இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது.
தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.
                        
எப்போதும் அபிஷேகம்:
இந்த படைவீட்டில் அவர் அபிஷேக பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்றா திருத்தலங்களைப்போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல்  இரவு பூஜை வரை பன்னீர் சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என கருதப்படுகின்றன.
 தண்டாயுத பாணி சுவாமியை மொட்டை ஆண்டி கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும் இவர் சடாமுடியுடன் தான் விளங்குகிறார் என்பதை அபிஷேக காலங்களில் உணரலாம்.
                    
பங்குதாரராக முருகப்பெருமான் : மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக்கொண்டுள்ளனர்.தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கூடுதல் தகவல்கள்:
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் முக்கிய தலம்.
அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார்
தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம்.
அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம்.
தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது.
பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது.
மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம்.
தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான்.

திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு. வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் செல்ல ”மலை ரயில்” வசதியும், “ரோப் கார்” வசதியும் உண்டு.
           



கோயில் திறந்திருக்கும் நேரம்
 காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்:


அருள்மிகு பெருவுடையார் கோவில் - மானூர்
அருள்மிகு இடுமபன் கோவில் - பழனி
அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சனேயர் கோவில்- மேட்டுப்பட்டி. சின்னாளபட்டி,
அருள்மிகு மாரியம்மன் கோவில்- நத்தம்

அருள்மிகு பத்மகிரீஸ்வரர்(காளஹஸ்தீஸ்வரர்)கோவில் திண்டீச்சுரம்

டிஸ்கி: முதல் படைவீடான திருப்பரங்குன்றம் பற்றி அறிய.., 
இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் பற்றி அறிய..,
நன்றி: படங்களுக்காக கூகுளுக்கும், மேலதிக தகவல்களுக்காக தினமலர் ஆன்மீக மலருக்கும் நன்றி உரித்தாகுக.