Friday, April 25, 2014

அழகிய நம்பிராயர் திருக்கோவில் திருக்குறுங்குடி - புண்ணியம் தேடி

புண்ணியம் தேடிப் போறப்  பயணத்துல இந்த வாரம் நாமப் பார்க்கப் போறது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் திருக்கோவில். இது திருநெல்வேலி, நாகர்கோயில் வழித்தடத்தில் உள்ள வள்ளியூரில் இருந்து சுமார் 5 மைல் தொலைவில் இருக்கிறது இந்தத் திருத்தலம் .இங்கே உள்ளவர்களால் நம்பிகோவில் என அழைக்கப்படுகிற திருக்குறுங்குடி  அழகிய நம்பிராயர் திருக்கோவில்.
இந்த ஊரைப் பத்தினப் பெயர் காரணங்கள் சொல்லனும்னா திருபாற்கடலில் பள்ளிக் கொள்ளும் நாராயணன், வராஹ அவதாரம் கொண்டு, தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கிதனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் "குறுங்குடிஅப்படின்னு சொல்லப்படுகிறது.மேலும் திருமால், வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது அவரது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாகப் புராணத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள்  குறுகிய மன்னன் ஒருவன் குடி இருந்த இடம் என்பதால் ”குறுங்குடி” என்று பெயர் வந்ததாகவும், இந்த ஊர் தெய்வ ஸ்தலங்கள் அமைந்த இடமாக இருப்பதால்குறுங்குடிக்கு முன்னால் திரு சேர்த்து ”திருக்குறுங்குடி” என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தத் திருக்கோவில் சுற்றளவு மிகப்பெரியது. இது திருக்கோவிலின் நுழைவு வாயில். சுவர்கள் எல்லாம் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிலைகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அழகிய நம்பிராயர் கோவில், தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முந்தையதுன்னும் சொல்லப்படுகிறது. மேலும் 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று . மகேந்திரகிரியின் அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவில் ”திருமங்கை ஆழ்வார்” கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. 
நுழைவு வாயிலைத் தாண்டி உள்புறம் வரும்போது ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதன் பக்கவாட்டில் ஒரு குட்டி யானை கட்டபட்டு இருக்கு. அதையும் தாண்டி சித்திரகோபுரம் இருக்கு. இந்த சித்திரக் கோபுரத்தில் கல்லிலும், மரத்திலும் மிக நுட்பமான வேலைப்பாடுகளுடைய அமைப்பு காணப்படுகிறது.  அதுக்கு முன்னாடி ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் அழகிய பெரிய சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கு.  ராமாயணக் காலத்தில் ராமரும், லட்சுமணரும், ராவணனுடன் போர் புரிவதற்காக வானரப் படைகளுடன் தங்கிய இடம் இந்த மகேந்திரகிரி மலை என்று கூறப்படுகிறது.
யானையைக் கட்டி இருக்கும் மண்டபத்தின் முன்வாயில் இது. சிற்பங்களெல்லாம் பெரிய அளவில் துல்லியமாக ஒரு சிற்ப கூடத்திற்கு வந்ததுப் போல பிரமிப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கு. அதற்கு நேரே கோவிலின் இரண்டாம் நிலை பிரகாரம் இருக்கு. இந்தத் திருக்கோவில் ஜீயர் மடம் பராமரிப்பில் இருக்கிறது. 
இதுதான் இரண்டாம் நிலை நுழைவாயில். உள்ளே நுழையும் போது ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சதிலுள்ள அவருடைய தியான ஸ்லோகமான
 ஸ்ரீமத் க்யாத குரங்க நகரே திஷ்டந் ஸ்வபந் ஸஞ்சரந்
ஆஸீநச்ச தராதராக்ர விலஸத் தேவஸ்ஸ பூர்ணாஹ்வய:
தாத்ருங் மந்திர நாயிகாஞ்சந ஸரஸ் தீர்த்தம் சபஞ்சக்ரஹா
க்யாதம் தத்ர விமாந மீசகஜ யோஸ் ஸாக்ஷாத் க்ருத: ப்ராங் முக:
ன்னு உச்சரித்துக்கொண்டே உள் நுழைவோம்.

இதன் பொருள்  ”திருக்குறுங்குடி என்னும் இத்திவ்யத் தேசத்தில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, மலைமேல் நம்பி, பூர்ண நம்பி ஆகிய திருப்பெயர்களுடன் திகழும் எம்பெருமானே நமஸ்காரம். குறுங்குடிவல்லி நாச்சியாருடன், பஞ்சக்கிரஹ விமான நிழலில், அஞ்சன புஷ்கரணிக் கரையில் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் திகழும் பெருமாளே நமஸ்காரம். சிவபிரானுக்கும், கஜேந்திரனுக்கும் காட்சி கொடுத்தருளியதுபோல எங்களுக்கும் காட்சி நல்கி வாழ்வளிக்கும் பெருமாளே நமஸ்காரம்” என்பதுதான் அச்சுலோகத்தின் பொருள், மனதார ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டே பெருமாளை சேவிக்கஉள்ளே செல்லலாம்.
இதுதான் நம்பியை தரிசிக்கச் செல்லும் பிராதான வாயில். இங்கே  திருநம்பியை மூன்று வடிவில் தரிசிக்கலாம். நிற்கின்ற கோலத்திலும், அமர்ந்து இருக்கிற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசிக்கலாம். இந்த மூவர் தவிர, இங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாற்கடல் என்ற ஒரு தலம் உள்ளது. இங்கே திருப்பாற்கடல் நம்பி அருள்பாலிக்கிறார். ஒரு அரக்கன், தன்னை உணவுக்காகக் கொல்ல முயன்றபோது, அந்தணன் ஒருவன் அவ்வாறு செய்வது அதர்மம் என்று முறையிட்டான். ஆனால், ‘அதுதான் என் தொழில், என்னைப் பொறுத்தவரை அதுவே என் தர்மம்,’ என்று அரக்கன் வாதாடினான். இருவரும் இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தபோது, திருமால் ஒரு வேடனாக அவர்களிடம் வந்து, அவர்களை சமாதானப்படுத்தி, அவ்விருவருடைய கடமைகளை அறிவுறுத்தினார். இருவருக்கும் ஜன்ம சாபல்யம் கொடுக்க விரும்பிய அவர், அவர்களை திருப்பாற்கடலில் நீராடுமாறு பணித்தார். அவ்வாறே அவர்கள் செய்து மோட்சம் ஏகினார்கள். பெருமாளும் அங்கே கோயில் கொண்டார். இதுதான் திருப்பாற்கடல் நம்பியின் தலத்தின் புராணம். திருப்பாற்கடல் எனப்படும் இந்த ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறையும் அதன் மீது ராமானுஜர் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தப் பாறை வட்டப்பாறை என்றழைக்கப்படுகிறது.
நுழைவாயிலைத் தாண்டி இருக்கும் வாயிலின் சுவரில் செதுக்கப்பட்டு இருக்கும் சித்திரங்கள் இவை.  அதேப்போல ஐந்தாவது நம்பி திருக்குறுங்குடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் காணப்படும் ஒரு குன்றின் மீது அருள்பாலிக்கிறார். இவர் திருமலை நம்பி. இந்த ஐந்து நம்பிகளின் உற்சவ மூர்த்திகளை பிரம்மோற்சவ திருவிழாவின் போது ஒன்றாக .தரிசிக்கலாம்.  
சித்திரக் கோபுரத்தைத் தாண்டி சன்னதிக்குள் செல்லும் வழி இது. கோபுரத்தில்தான் எத்தனை வகையான நுணுக்கமான சிற்பங்கள்!!?? அதெல்லாம் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோபுரத்தைக் கடந்துச் சென்றால் கோயில் கொடிமரம்.  சன்னிதிகு நேராக இல்லாமல் பலிபீடத்தில் இருந்து நகர்ந்த நிலையில் இருக்கு. இது ”நம்பாடுவான்”ன்ற பக்தன், பெருமாளைத் தரிசனம் செய்ய இடையூறாக இருப்பதைக் கண்டு விலகி நின்ற கொடிமரம், இன்னமும் அப்படியே இருக்கு. இது கோவில் முதல்நிலை உள்பிரகாரம் ஆகும்.  இந்த திருஸ்தலத்தை பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், பிள்ளைப்பெருமாள்  தவிர, புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தரும்கூட இந்தத் திருக்குறுங்குடித் தலத்தைப் பற்றி பாடல்கள் பாடி இருக்கிறார்கள்.
     
இது மணவாள மாமுனிகள் சன்னதி. பொதுவாக சிவன் கோவில்களில்தான் சித்தர்கள் காட்சியளிப்பார்கள். இங்கே அதிசயிக்கும் வகையில் இககோவிலினுள்ளும், மலைமேலும் பல்வேறு சித்தர்களின் சிலைகள் இருக்கு. அங்கே இருப்பதாகவும் சொல்லபடுகிறது மணவாள மாமுனிகள் சன்னதியில்  உள்புறம் ஒரு பெரிய மண்டபம் இருக்கு. அதன் தூண்களஎல்லாம் சிற்ப வேலைபாடுகளுடன் அழகாக இருக்கு இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்யவதம் நுணுக்கமான சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .   
பெருமாள் கோவிலில் காணமுடியாத பல அம்சங்கள் இந்த திருக்கோவிலினுள் காணலாம். இங்கே ஈசானிய மூலையில் ஊர் எல்லைக் காளியாக ”குறுங்குடி அம்மன் சன்னதி” இருக்கு. மேலும், இந்த திருகுறுங்குடியைப் பற்றி சொல்லும்போது  வராகரின் மடியில் அமர்ந்தபடி, கைசிக புராணத்தை வராகர் சொல்லக்கேட்டுப் பெரிதுவந்து, தானும் பூலோகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பரந்தாமனின் புகழ் பரப்ப வேண்டுமென்று விரும்பினார் தாயார். அதனாலேயே ஸ்ரீவில்லிப்புத்தூரில், பூமித்தாயின் குழந்தையாக, ஆண்டாளாக அவதரித்தார் ஆகவே ஆண்டாளின் பிறப்புக்கு இந்த திருகுருங்குடியே காரணம் என்றும் சொல்லபடுகிறது
சிவபெருமானுக்காக இங்கே ஒரு தனி சன்னதியே இருக்கு. மகேந்திர மலையின் அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் மகேந்திரகிரீஸ்வரர் ன்னு அழைக்கபடுகிறார். இந்த சன்னதி,  நின்ற நம்பி சன்னதிக்கும், கிடந்த நம்பி சன்னதிக்கும் இடையில் இருக்கிறது. இந்தக் கோயிலில் இருக்கும் மடப்பள்ளியில் பெருமாள், பரமசிவன் இருவருக்கும் சேர்த்தே நிவேதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றதாம். பெருமாள் பிரசாதங்கள், சிவ பக்தர்களுக்கும். சிவன் பிரசாதங்கள் பெருமாள் பக்தர்களுக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும் வழக்கம் இருப்பது இந்த கோவிலின் மேலும் ஒரு சிறப்பு.
இந்தத் திருக்கோவில் மிகவும் பிரம்மாண்ட அளவில் இருக்கிறது. கோவிலின் முதல் வெளிப்பிரகாரச் சுற்றிலே திருக்குளம் அமைந்து இருக்கிறது.  இது மகேந்திரகிரீஸ்வரர் சன்னதியின் முன்பக்கம். இங்கிருந்து பார்த்தால் தெரிவது சித்திரக் கோபுரம். இப்பொழுது அதில் பராமரிப்பு பணிகள் நடந்துகிட்டு இருக்கு. அடுத்து நாம தரிசிக்கப்போறது இந்த ஸ்தலதின் வயதான யானை.  
இதற்கு சுமார் 25 வயது இருக்கலாம்னு சொல்லப்படுகிறது . மகேந்திரகிரீஸ்வரர் சன்னதிக்கு பக்கத்தில் இருக்கிறது இந்த யானை. அழகாக திருநாமம் இடப்பட்டு சாதுவாக காட்சியளித்தது பொதுமக்கள் இந்த யானையை பார்வை இடும்போது வாழை பழங்கள் போன்ற பொருட்களை கொடுக்கின்றனர். யானைகளை கேமராவில் படம் பிடிக்கும்போது, பிளாஷ் இட்டு படம் எடுக்காதீர்கள் யானை மிரளும் வாய்ப்பு உண்டு. அமைதியாகப் பார்த்துவிட்டு செல்வோம். இனி  பிரகாரம் வலம் வரத் தொடங்கும் முன் இந்த திருக்கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்....,
உள்பிரகாரத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கு. அதைவிட அதன் கலைநுணுக்கம ஆச்சர்யமளிக்கும் விதமா இருக்கு.  இந்த ஸ்தல புராணத்தின் சிறப்பு இசையாலும் இறைவனை அடையலாம் என்ற வராக புராணத்தின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த திரு ஸ்தலத்திற்கு மேற்கே இருக்கும்  ”மகேந்திரகிரி”அடிவாரத்தில் வசித்து வந்த பாணர் குடியில் பிறந்த ”நம்பாடுவான்” இந்த ஸ்தலத்து பெருமாள் மீது மிகவும் பக்தியுடையவனாக இருந்தாராம். இவர் எப்பொழுதும்  ”கைசிகம்” என்ற பண்ணை இசைத்து ஆண்டு தோறும் கார்த்திகை மாதம்,  சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டு எம்பெருமானை பாடிப்பரவசித்து வந்து, தொழுது செல்வதையே தொண்டாகக் கொண்டு இருந்தாராம். 


அப்படி பாடித் தொழுவதற்கு ”மகேந்திரகிரி” மலை காட்டுப்பாதையை கடந்து வரும்போது அங்கிருந்த பிரம்மராட்சசன் ஒருவன் ”நம்பாடுபவனைப்” பிடித்துக்கொண்டு சாப்பிட முயற்சித்தானாம். அதற்கு நம்பாடுவான் நான் தற்போது விரதம் பூண்டுள்ளேன். விரதம் முடித்துப் பெருமாளை வணங்கிவிட்டு மீண்டும் இவ்வழியேவரும்போது உனக்கு உணவாகிறேன் என்று சொல்ல ராட்சசன் இதை நம்ப மறுத்த போது  நான் திருமாலின் தூய பக்தன் பொய் சொல்லமாட்டேன் என்று சத்தியம் பண்ணிக்கொடுக்க அவனும் சம்மதித்து அனுப்பினான் .
திருக்கோவில் பிரகாரங்களை வலம் வந்தவாறே ஸ்தல புராணத்தை தொடர்ந்து பார்க்கலாம்.., அப்படி ”நம்பாடுவான்” பிரம்ம ராட்சஷனுக்கு கொடுத்த வாக்குப்படி இதுவே நமக்கு கடைசி யாத்திரை என எண்ணி பாணர் இனத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பதால் வழக்கம் போல கோவிலின் கொடிமரத்து முன்பு இனி இந்த ஸ்தலத்து எம்பெருமானைப் பார்க்கமுடியாதே என்ற வருத்தத்தில்  ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தபோது திடீரென துவஜஸ்தம்பம் விலகி, எம்பெருமான் காட்சி தெரிய பரவசப்பட்டு விரதம் முடித்து சந்தோஷமாக ”நம்பாடுவான்” திரும்பினான். நம்பாடுவனுக்காக விலகிய நகர்ந்த கொடிமரம் இன்னமும் அப்பயே விலகி இருப்பதை இங்கு காணலாம்.
அப்படி தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது பிரம்மராட்ஷசனை பார்க்க செல்லும் காட்டு வழியில் ”திருக்குறுங்குடி” பெருமான் ஒரு கிழ பிராமண  வேடம் கொண்டு இந்த வழியே செல்லவேண்டாம் இங்கே ஒரு பிரம்மராட்ஷசன் இருக்கிறான். நீ சென்றால் அவன் உன்னை பிடித்து தின்று விடுவான் என சொன்னார். அதற்கு நம்பாடுவான் இறைவன் பெயரால் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறேன். நான் சத்தியம் தவறமாட்டேன் என சொன்னாராம் ”நம்பாடுவான்”.  அப்பொழுது மாயக்கண்ணன் தன மாயலீலையாக ”நம்பாடுவானிடம்” ஆபத்து நேரிடும் காலங்களிலும் பெண்களுக்கு விவாகம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும் பொய் சொன்னாலும் சத்தியம் செய்து கொடுத்தாலும் அது பாவமாகாது என்று உபதேசிக்க ”நம்பாடுவானோ” உயிர் போகும் சந்தர்பத்திலும் கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என உறுதிப்பட சொல்ல அதைக்கண்டு மகிழ்ந்த  பெருமாள் தன் சுயரூபம் காட்டி மறைந்தாராம்.
பிறகு பிரம்ம ராட்சஷனை சந்தித்த நம்பாடுவான் தன்னை உணவாக உட்கொள்ளும்படி சொல்ல என்ன மாயம் செய்தாய் என் பசி என்னைவிட்டு போயிற்று எனக்கு பாவவிமோசனம் பெற நீ பெற்ற விரதத்தின் புண்ணியத்தின் கால்பாகமாவது கொடு என சரணடைந்தான்.  
அவனை அன்போடு அரவணைத்த நம்பாடுவான் உனக்கு ஏன் இந்த பிரம்மராட்சஷ உருவம் வந்தது எனக் கேட்க...,அந்த ராட்சஷன் தான் முற்பிறவியில் யோகஷர்மா என்னும்  பிராமணனாக இருந்தபோது யாகம் செய்வதை இழிவாக பேசியதாகவும், அதை உண்மையான பற்று இல்லாமல் செய்தமையாலும் இந்த கதிக்கு ஆளானேன். அதனால் இங்கே அலைந்து திரிந்து, உன்னைப்போன்ற உண்மையான பக்தர்களின் தரிசனத்தாலும், ஸ்பரிசத்தாலும் எனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்பதால் காத்திருந்தேன். நீ உண்மையான பக்தி உள்ளவன் என நிருபித்து விட்டாய். அதனால் நீதான் எனக்கு சாபவிமோசனம் கொடுக்கவேண்டும் என வேண்டி நிற்க...., ”நம்பாடுவானும்” மனமுவந்து நான் ”திருக்குறுங்குடி” நம்பியை கைசிகம் என்ற பண்ணினால் பாடி தொழுதேன். அதனால் நான் பெற்ற பலத்தில் பாதியை உனக்குத் தருகிறேன் என்று சொல்ல அப்பொழுதே பிரம்மராட்ஷனின்  சாபம் நீங்கியதாம்.  இந்த வரலாற்றை வராக மூர்த்தியே தன மடியில் இருக்கும் பிராட்டியிடம் சொல்வதாக கைசிக புராணத்தில் கூறப்படுகிறது.
இது வெளிப்புறம் இருக்கும் மண்டபத்தின் தூண்கள்.  எல்லாம் நுணுக்கமாக செதுக்கப்பட்ட பிரமாண்ட சிலைகள். இங்கே மிகவும் சிறப்பு அம்சம் என்னானா எங்கேயும் பார்க்கமுடியாத சில அதிசயங்கள் இந்த திருகோவிலில் இருக்கு.


உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது அளவில் பிரமாண்டமாக இருக்கும் காலபைரவர் பெரும்பாலும் சிவன்கோவில்களில் மட்டுமே காலபைரவர் அருளாட்சி புரிவார். இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்கவகையில் இருக்கிறார். இந்த திருமேனி முக்கால்பாகம் கல்லினாலும், கால்பாகம் சுதையினாலும் உருவாக்கப்பட்ட  இச்சிலை 300 வருடங்களுக்கு முன்னால் மூலிகை வண்ணத்தால் அழகுப்பட வண்ணம் தீட்டியது இன்னமும் மெருகுக் குலையாமல் அழகாக இருக்கிறது. திருமண வரம் வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும் இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கிறதாம். இவருக்கு தயிரன்னமும், வடமாலையும், பூசட்டையும் படைக்கப் படுகிறது.
இதைவிட இங்கே பெரிய அதிசயம் என்னனா,  இவருக்கு இடதுபக்கத்தில் இருக்கும் விளக்கு, தூணில் மேல்பகுதியில் ஒரு விளக்கு, கீழ் பகுதியில் ஒரு விளக்கு. இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கு. இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாக காட்சியாளித்தாலும்,  மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசையும் இது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூசை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூசு விடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவது காலபைரவரின் மூச்சு காற்று ஏற்படுத்தும் அசைவு . எங்கேயும் காற்று வருவதற்கான வாய்ப்பு இல்லாத அமைப்புக் கொண்டது இவ்விடம். 
இதையும் தாண்டி நாம உள்பிரகாரம் சென்றால் அங்கே இன்னும் ஒரு அதிசயம் காத்து இருக்கு. உள்பிரகாரத்தில படம் எடுக்க அனுமதி இல்ல மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் விமானம் பஞ்சகேத விமானம்ன்னு சொல்லப்படுது.  இங்கே மோட்சம்  வேண்டி நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை  செய்யப்படுகிறது. ஆனா எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய அதிசயம் அது இங்கே இருக்கும் மூலவரை தரிசனம் செய்வது ஒரு உயிரோட்டமான தரிசனமாக இருக்கும்.  பட்டர் அந்த சிலையின் முகத்தில் தீபாராதனை காட்டும்போது அந்த விழிகள் அப்படியே அசைவது போல தோற்றமளிக்கும் காட்சி அதிசயத்திலும் அதிசயம்.


இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக தீபம் காட்டுவதற்கேற்ப அந்த விழிகள் அசையும். அதை பார்க்கும்போதுஉயிரோட்டமாக இருக்கிறது. அது தீபத்தின் அசைவினால் அப்படி தெரிகிறது எனவும், இல்ல சிலை அமைப்பு அப்படி வடிவமைக்கப்பட்டது எனவும் இரு வேறு பேச்சுக்கள் நிலவுது. ஆனால் எனக்கென்னவோ உண்மையில் எம்பெருமான் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என தோன்றுகிறது.  அவர் அருட்பார்வை பூரணமாக கிடைக்கும் என்ற எண்ணம் நமக்குள் வருகிறது  .
இங்கே மற்றொரு சிறப்பு அம்சம் என்னனா இங்குள்ள அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு "குறை ஒன்றும் இல்லை' என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இந்த சம்பிரதாயம் இன்னமும் நடைமுறையில் இருக்கு.


தாயார் ”குறுங்குடி வல்லி நாச்சியார்” என்ற பெயரில் தனியே சன்னதி  கொண்டிருக்கிறார். மேலும் குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இங்கே வந்து வழிபாடு செய்ததால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயரும்  உண்டு என சொல்றாங்க. அடுத்து நாம கோவில் சுற்றுக்குள்ளேயே இருக்கும் தீர்த்தக்குளத்தை பார்க்கலாம்.
இங்கு இருக்கும் தீர்த்தகுளம் திருப்பாற்கடல் மற்றும் பஞ்சதுறை என்று அழைக்கபடுகிறது.   இந்த ஸ்தலத்தைப் பற்றி சொல்லும் திருமழிசையாழ்வார் 
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு 
வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய் திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துண்ணையே எனக் குறிப்பிடுவார்
கறவையினங்கள் (பசுக்கூட்டங்கள்) நிறைந்து விளங்கும் பொய்கையில்,
அப்பொய்கை கரையோரத்தே வளர்ந்தோங்கியுள்ள கரிய தோற்றமுடைய
பனைமரங்களிலிருந்து பனம்பழங்கள் வீழ்கின்றன. அவ்வாறு வீழும் பனம்பழங்களை அப்பொய்கையில் வாழும் வாளைமீன்கள் பிடித்து தின்பதன் பொருட்டு எகிறிப் பாய்கின்றன. இத்தகைய வளம்வாய்ந்த குறுங்குடியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே! திரண்ட தோள்களை உடைய இரண்யனை இரண்டு கூறுகளாக பிளந்து போட்ட நரசிங்கனும் நீதானே! என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
இது கோவிலின் உத்திரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஒரு ஜீயரின் சிலை. இங்கே இருக்கும் ஜீயர் மடத்தை நிறுவியவர் ”ராமானுஜர்”. ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் வைஷ்ணவதை போதிக்க திருவனந்தபுரம் சென்றாராம். அப்பொழுது அவரால் தன் தொழிலுக்கு ஆபத்து வரும் என அஞ்சிய நம்பூதிரிகள் அனந்தபத்பனபனிடம் முறையிட, அவரும் தன எதிரே இருந்த கருடாழ்வாரை நோக்கி, இவரைக் கொண்டு சென்று திருக்குறுங்குடியில் விட்டு வா! எனச் சொல்ல, கருடனும் அவரை திருக்குறுங்குடியில் விட்டாராம். அதனால்தான் இன்றும் திருவனந்தபுரம் அனந்தபத்பநாபபுரம், ஷேத்திரத்தில் கருடன் இல்லை என சொல்லப்படுகிறது.

ராமானுஜரும் காலையில் பார்த்தபோது திருகக்குறுங்குடியில் இருந்ததால் இது அவன் லீலை என நினைத்து தன் சீடன் ”வடுகநம்பியை”தின பூஜைக்காக அழைத்தாராம். திருக்குறுங்குடி எம் பெருமானே வடுகநம்பியாய் வந்தாராம். பின்பு, இராமானுஜரும் திருமண் காப்பிட்டு விட்டு, திருமண் பெட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு வடுகநம்பி இராமானுஜரின் பின்னேவர, பெருமாளை வணங்க திருக்குறுங்குடிக்கு வந்தாராம். கோவிலின் உள்ளே நுழைந்ததும் துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு, இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டாராம். அப்பொழுது வடுகநம்பிக்கு ராமாநனுஜர் இட்ட திருமண் பெருமாளுடைய நெற்றியில் இருப்பது கண்டு வடுகநம்பி வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என நினைத்து இப்பெருமானுக்கு வடுகநம்பி என அழைத்தாரம் இராமானுஜர். இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்த வடுகநம்பியின் கனவில் தோன்றிய பெருமாள் இராமானுஜர் திருக்குறுங்குடியில் இருப்பதாக உணர்த்தினார் என்றும் இப்பெருமாளின் அற்புதங்களை சொல்வார்கள் 
இத்திருகோவிலுக்கு  உதயமார்த்தாண்ட வர்மா என்னும் சேர மன்னன், ராமவர்மா என்னும் அரசன் மற்றும் திருவிதான்கோட்டு மன்னர்கள் இந்த திருக்கோவிலுக்கு பல நன்கொடைகள் மற்றும் களப்பணிகள் எல்லாம் செய்து இருகின்றனர். நம்பாடுவான் வேடமும், கிழபிரமணன் வேடமும் இட்டு இயல், இசை, நாடக அம்சங்கள் நிறைந்த கைசிக புராணம் இன்றும் நாடகமாக நடிக்கப்படுகிறது. இதில் நடிப்பவர்கள் அதற்கு முன் 45 நாட்கள் கடுமையான விரதத்தை அனுசரித்து அப்புறம்தான் நடிப்பார்களாம். இனியும் நிறைய பல பெருமைகளைக் கொண்ட இந்தத் திருத்தலத்தின் சிறப்புகளை எழுதினால் இந்த பதிவு நீண்டதாக ஆகிவிடும் என்பதால் இங்கிருந்து விடைபெற்று மலைமேல் இருக்கும் நம்பியைக் காண அடுத்தவாரம் செல்லாம்....,

Thursday, April 24, 2014

கண்ணாடி மணி தோரணம் - கிராஃப்ட்

இப்ப முழு ஆண்டு பரிட்சை லீவு விட்டாச்சு. அப்பு கிளம்பி பாட்டி வீட்டுக்குப் போய்ட்டான். இனியாதான் பாவம். துணைக்கு தூயாவும், சண்டை போட அப்புவும் இல்லாம விடுமுறைல தனியாய் தவிக்குறா. அதனால, கொஞ்சம் கண்ணாடி மணிகள் வாங்கிக் கொடுத்து எதாவது கிராஃப்ட் செய்ன்னு சொல்லி, எப்படி செய்யலாம்ன்னு ஐடியாவும், பதிவு தேத்த கேமராவையும் கொடுத்துட்டேன். இரண்டு அறைகளுகிடையில் இருக்கும் ஆர்ச்ன்னு சொல்ற இடத்துல அழகா ஒரு தோரணம் செஞ்சு அசத்திட்டா. இப்ப வீட்டுக்கு வர்றவங்க கண்ணுலாம் அது மேலதான். எங்க வாங்கினீங்க!? எவ்வளவ்ன்னு கேள்விகளோடு....,

இங்க இருக்கும் பொருட்கள்லாம் வெறும் மாதிரிக்குதான். இதுப்போல நிறைய வடிவத்துல, வண்ணத்துல கிடைக்குது. உங்களுக்குப் பிடிச்சதை வாங்கி பிடிச்ச மாதிரி செஞ்சு வீட்டை அழகாக்கிக்கோங்க.

தேவையானப் பொருட்கள்:
வெவ்வேறு கலர் மீடியம் சைஸ் உருண்டை வடிவ கண்ணாடி மணிகள்,
சின்ன சைஸ் கலர் முத்து
குஞ்சலம் போல தொங்க விட எதாவது ஒரு வடிவத்துல கண்ணாடி மணி(என் பொண்ணுக்கு பிடிச்சது கதாயுதம் வடிவத்துல இருக்கும் மணி)
கத்தரிக்கோல்
நரம்பு இல்ல திக்கான நூல்

எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க.

முதல்ல கதாயுதம் வடிவத்துல இருக்கும் மணியை கோர்த்து முடிப் போட்டுக்கிட்டா.
அதுக்கடுத்து அவ அக்காக்குப் பிடிச்ச கலரான கத்திரிப்பூ கலர் சின்ன சைஸ் முத்தைக் கோர்த்துக்கிட்டா.

அதுக்கடுத்து தனக்குப் பிடிச்ச கலரான ஸ்கைப்ளூ கலர் மணியை கோர்த்துக்கிட்டா. இப்படியே தனக்குப் பிடிச்ச மாதிரி மணிகளைக் கோர்த்துக்கிட்டா.


இடையிடையே கோல்டன் கலர் திலக வடிவ மணிகளையும் கோர்த்துக்கிட்டா.

எல்லாத்தையும் கோர்த்து ஒரு சரத்தை ரெடி பண்ணிக்கிட்டா.

நடுவில் சின்ன சரம். அதுக்கடுத்து கொஞ்சம் பெரிய சரம், அதுக்கடுத்து இன்னும் கொஞ்சம் பெரிய சரம்ன்னு அழகா கோர்த்து அவளே ஆணி அடிச்சு மாட்டியும் விட்டுட்டா.

அழகான  தோரணத்தை செஞ்சு, அம்மா பதிவுப் போட படமும் எடுத்தாச்சு.  இப்பதான் இந்த இடமே சூப்பரா இருக்கும்மான்னு அவ அப்பாக்கிட்ட ஒரு சர்டிஃபிக்கேட்டும் வாங்கியாச்சு. இப்ப அவ அம்மாவோட சகோஸ்கள் கமெண்டுக்காக காத்திருக்கா!? 

சீக்கிரம் சொல்லிடுங்கப்பா! குழந்தையை ரொம்ப காக்க வைக்காதீங்க!!

இன்னிக்கு தேர்தல். அதனால பொது விடுமுறையை அரசாங்கம் விட்டிருக்கு. இன்னிக்கே இந்த மணிலாம் வாங்கி பசங்கக்கிட்ட கொடுக்கலாம்ன்னு நினைச்சு கிளம்பிடாதீங்க. எங்கப் போறதா இருந்தாலும் ஓட்டுப் போட்டுட்டுப் போங்க. நான் ஓட்டுப் போட்டாச்சு!! அப்போ நீங்க!?

Wednesday, April 23, 2014

செஞ்சிக்கோட்டை இதுவரை பார்த்திடாத சில இடங்களின் தொடர்ச்சி -மௌன சாட்சிகள்

கடந்த சில வாரங்களாகக் கோட்டையினுள்ளேயும், வெளியேயும்  உள்ள பல இடங்களைப் பார்த்தோம்.. இனி செஞ்சிக் கோட்டையை ஒட்டியுள்ள சில இடங்களைப் பார்க்கலாம்.....,
ராஜகிரி கோட்டையை விட்டு வெளியே வரும்போது, கிழக்குபக்கமாக இருப்பது இந்த சததுல்லாகான் மசூதி.  இந்த மசூதி கி.பி 1717 இல்ல கி.பி 1718 ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டு இருக்கலாம்னு சொல்றாங்க.  இப்ப தொல்லியல் துறையினர் பாதுகாத்து வருவதால் யாரும் செல்ல அனுமதி கொடுக்கவில்லை.  பூட்டியே இருக்கிறது. 

அடுத்து நாம பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்று வெங்கட்ரமணர் ஆலயம். இது, ராஜகிரி கோட்டையின் கிழக்கு பக்க்தில் இருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான,  ஒரு காலத்தில் பூஜைகளும், புனஷ்காரங்களும் நடந்த இந்த கோவில் இன்று வெறும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் இடங்களாக மட்டுமே இருப்பது வேதனையளிக்கும் விஷயமாகும்.  சரி, நாம இந்த கோவிலைப் பத்திப் பார்க்கலாம்....,

முத்தியாலு நாயக்கரால் கி.பி 1540- 1550 ஆண்டுக்குள் கட்டப்பட்டு இருக்கலாம் என் கருதப்படுகிறது. செஞ்சியை ஆட்சிச் செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் செஞ்சியைச் கோட்டையை சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர். இதில் முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. இதன் கோபுரம் மிகவும் பிரமாண்டம்மாக அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.  இது, கோவிலின் முன்பக்கம். 

ஒரு பெரிய கல்தூண் கொடிமரம் போன்ற அமைப்பில் இருக்கிறது. அதில் ஆஞ்சநேயர், கருடன் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து ஒரு பெரிய இடம் பள்ளமாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் இரண்டு மண்டபங்கள் இருக்கிறது. அதில் ஒரு பக்க மண்டபம் முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது.

இது கோவில் நுழைவாயிலின் சுவரில் உள்ள தசாவதார சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. சில இதிகாசக் கதைகளும், சில அவதார கதைகளும் சிற்பமாக செதுக்கபட்டுள்ளது.
  
இதைப்போல் இருபக்கங்களிலும் உள்ள நுழைவாயில் சுவர்களில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.  ராமர் பட்டாபிஷேகம், பாற்கடலில் அமுதம் கடைவது இவையெல்லாம் தத்ரூபமாக செதுக்கபட்டுள்ளன.

முழுவதும் கல்மண்டபங்களால்  செதுக்கப்பட்ட இந்தக் கோவிலின் அழகு முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளில் வெகுவாக சிதைக்கபட்ட்டுள்ளது என வரலாற்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் உள்ள சிலைகள் எல்லாம் உருக்குலைந்து காணப்படுகின்றன. கோபுர உச்சிக்கு செல்ல வழிகள் எல்லாம் அழாகாக அமைக்கப்பட்டுள்ளன கலைநயம் மிக்க இந்த கோவில் இப்பொழுது உருக்குலைந்து காணப்படுவது வேதனை அளிக்கிறது.

மாலை மயங்கும் மஞ்சள் வெயிலில் இந்த மண்டபத்தின் அழகு பார்ப்பதற்கு எத்தனை அழகாக இருக்கிறது!?  இது கல்யாண உற்சவ மண்டபம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், திருவிழாக் காலங்களில் இறைவனது வாகனங்கள் இங்கே வைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தூண்கள் நிறைந்த மண்டபத்தின் பின்னால் தெரியும் மேடையில் திருவிழாக் காலங்களில் உற்சவர் அலங்காரத்துடன் வைக்கப்படும் இடமாம்.  தூண்களில் எல்லாம் சிற்பங்களும், சிற்பவேலைபாடுகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
அழிந்த நிலையிலும்கூட அதன் அழகு ஜொலிக்கிறது என்றால் அதன் முழுமையான தோற்றம் எப்படி இருந்திருக்கும்!? முஸ்லிம் மன்னர்கள் மட்டுமின்றி, ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள் எல்லாம் செஞ்சியின் அழகை சிதைத்து இருக்கிறார்கள்.  இதில் கொடுமை என்னனா,  ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால் தென்னிந்தியாவில் பிரஞ்சுகாரர்களின் ஆட்சியில் இருந்த செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளதாம்.


கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது. இந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் எல்லாம் சிதைக்கப்பட்டன.  நாம் பார்ப்பது எல்லாம் அதனுடைய எச்சங்களாகும்.

அதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதனிடையே 1781-ம் ஆண்டு பிரஞ்சுகாரர்கள் கோவிலின் முன் இருக்கும் தூண்களை எல்லாம் இங்கிருந்து கடத்தி, பாண்டிச்சேரியிலுள்ள துப்ளே சிலையை சுத்தி அமைத்திருக்கின்றனர்
இந்த கலைநயம் மிக்க தூண்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது!?  ராஜா தேசிங்கிற்கு பிறகு, செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இங்கே தூண்களில் இருக்கும் சிற்பங்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு தொண்டு செய்த ஆழ்வார்களின் சிலைகள் எனவும் சொல்லப்படுகிறது. இதேப்போல சீதாராமர் கோவிலும்சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன. 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிப்பாடு நடக்காமல் இருந்த காலத்திலும்இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும்சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்ததாம்.

இது இங்க இருக்கும் துவார பாலகர்கள் சிலை. இது மூலவர் சன்னதியாகும். ஆனால் மூலவர் இல்லை. இப்பொழுது ஊர் மக்கள் சார்பில் வழிபாடு நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு நிலை கோபுரங்களும், மூலவர் கோபுரமும், தாயார் சன்னதியும்,  உள்பிரகாரம் வெளிப்பிரகாரம், மண்டபங்கள், தூண்கள், கல்லினால் ஆன யாகக்குண்டங்கள் என பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன.

பெரிய, பெரிய பிரகாரங்களும், கோவில் தெப்பக்குளமும் உடைந்து கிடக்கிற அன்னப்பறவை  சிலைகளும் கலைநயம் மிக்க தூண்களும், பெரிய துவாரபாலகர்களும், தீர்த்தக் கிணறும் தொடர்ந்து பதிவேற்றினால் பதிவு நீளம் கருதி கனத்த இதயத்துடன் அழிந்துவிட்ட ஒரு பெரிய கோவிலின் எச்சங்களைப் பார்த்துவிட்டு அடுத்த இடத்திற்கு செல்லலாம்.
இங்கே இருப்பது ஒரு சிவன் கோவில். இங்கே கோவிலை விட செடிகள் நிறைய வைத்து பராமரிகின்றனர். பக்தர்களுக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். இங்கேயும் காதல் ஜோடிகளின் தொல்லை அதிகம். இதன் கிழக்காக இருப்பது ஒரு அம்மன் கோவில். அதுபற்றி இனி பார்க்கலாம்...,
இந்த அம்மன் கோவிலின் மேல்பாகத்து கற்கள் எல்லாம் உடைக்கப்பட்டு வெறும் தூண்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், சிதைவுற்ற நிலையிலும் கோவிலின் எழில் குறையவில்லை. அடுத்து நாம பார்க்கப்போறது பாண்டிச்சேரி வாயில். 

வெங்கட்ரமணர் கோவிலுக்கு போகும் வழியில்  சததுல்லாகான் மசூதிக்கு கிழக்கு பக்கத்தில் ஒரு மண்டபம் இருக்கு  பாண்டிச்சேரியை பார்த்தவாறு கட்டப்பட்டு இருப்பதால் இதற்க்கு பாண்டிச்சேரி வாசல்ன்னு சொல்கிறாங்க இதனுள் பாரசீக எழுத்துக்களால் சில குறிப்புகள் இருப்பதாகவும் சொல்லபடுகிறது ஆனா எப்பவும் இந்த இடம் பூட்டியே இருக்கிறது
இந்த வாசலில் தான் ஆற்காடு நபாப் சதத்துல்லாகான் பற்றி புகழ்ந்து எழுதப்பட்டு இருப்பதாவும் சொல்லபடுகிறது இந்த வட்டவடிவ மண்டபத்தின் பின்பக்கம் தெரிவது குத்தரிசி மலைன்னு சொல்வாங்க ஆனா அங்கே எல்லாம் யாரும் செல்வதில்லை யாரும் தனியாக இங்கே செல்லவேண்டாம் ஏன்னா குடிமக்கள் மட்டும் தான் இங்கே வருவார்களாம் அதற்க்கு ஏற்றார் போல் உடைந்த மது பாட்டில்களும் இங்கே சிதறி கிடக்கின்றன
தென்பக்கத்தில் இருக்கிற குத்தரிசி மலையில் கீழ் பாகத்தில் வடக்குபார்த்த அமைப்பில் இருக்கு இந்த சிவன் கோவில் செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும் இது ஒரு குகை கோவில் ஒரு பெரிய கோவிலினுள் இருக்கிற எல்லா அம்சங்களும் இங்கே இருக்கு காலபைரவர் தன வாகனத்துடன் இருக்கும் சிலை அழக்காக செதுக்கப்பட்டுள்ளது நந்திவாகனம் கிழக்குநோக்கிய ஆவுடையார் திருமேனி எல்லாம் பர்ற்பதற்கு நல்லா இருகிறது இபோழுதும் இங்கே பூஜை செய்கிற அடையாளங்கள் காணபடுகிறது
கிழக்கு பார்த்த கருவறை வாசலின் முன்பு அர்த்த மண்டபம் கட்டப்பட்டு இருக்கு இந்த லிங்கம் இணைப்புகள் உழலாமல் அங்கிருக்கும் பாறையிலேயே செதுக்கி இருகிறாங்க அது ஒரு விசேஷ அமைப்பு இங்கே இருக்கும் வெளி தூண் சுற்றுகளில் ஆஞ்சேநேயர் சிவலிங்கம் யாழி அன்னபறவை கண்ணப்ப நாயனார் வேடுவ பெண் விநாயகர் முருகர் பூதகணங்கள் பைரவர் விழணு யானை எல்லாம் இங்கே வெளியே இருக்கிற தூண்களில அற்புதமா செதுக்கப்பட்டு இருக்கு எல்லாம் அழிவுறும் நிலமையில இருக்கு இனி இந்த கோவிலின் மேலே இருக்கிற மண்டபத்தை பாப்போம்
நெல்லை குத்தி அறிசியாக்கும் மாண்டபம் இங்கே இருந்ததால் இதற்க்கு குத்தரிசி மலைன்னு பெயர் வந்ததா சொல்கிறாங்க இங்கே தெரிகிறதுதான் இந்த குத்தரிசி மண்டபம் இது சுண்ணாம்ம்பு கலவை கொண்டு செங்கற்களால் வலுவாக கட்டப்பட்ட நான்கு தூண்களுடன் நான்கு நுழைவாயிலை கொண்டு வட்டவடிவ பாறையில் சதுர மண்டபமாக கட்டப்பட்டு இருந்ததாம் இபொழுது செங்கல் சுவர்களெல்லாம் விழுந்து நான்கு தூண்கள் மட்டுமே நிற்கின்றனது இந்த மண்டபத்தில்தான் இயந்திரங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் ஏற்றம் போன்ற அமைப்பில் மரத்தாலான உலக்கையை கயிறுகட்டி நெல்மணியை குத்தி அரிசியை பிரிதெடுத்தனராம் இங்கிருந்துதான் கோட்டைக்கு மற்றும் மக்களுக்கு தினசரி வாழ்க்கைக்கு அரிசி கொடுக்கப்பட்டதாக சொல்லபடுகிறது அதுபோல எல்லா கோட்டைகளிலும் தானிய கழஞ்சியங்கள் இருக்கு இந்த குத்தரிசி மண்டபம் போல் எங்கும் காணப்படவில்லை ஒருவேளை இங்கே நெல்மணியை குத்தி அரிசியாக சேமித்தனாரா என தெரியவில்லை     
ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டைகளில் இருப்பது போல் இங்கேயும் பாதுகாப்பு கருதி சுழலும் பீரங்கிமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடை குத்தரிசி மண்டபம் பக்கத்தில் உள்ளது.   

இங்கே தூரத்தில் தெரிவது பெருமாள் கோவில். இந்தக் கோவில் செஞ்சி நாயக்கமன்னர்களால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலின் தூண்கள், சிற்பங்கள் எல்லாம் சிதைந்து காணப்படுகிறது. கட்டிடங்கள எல்லாம் மிகுந்த நுட்பத்துடன் அழகாக கட்டப்பட்டுள்ளன. பதிவின் நீளம் கருதி அதை இணைக்கவில்லை. கோவில் நுழைவு வாயில் தெற்கு நோக்கியும், கர்ப்பகிரக வாயில் கிழக்கு நோக்கியும் இருக்கு. இங்கே வெளிப்புற மண்டபம் விசலாமாக மேடைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அது படைவீரர்கள் மற்றும் பணி செய்பவர்கள் மழை வெயில் காலங்களில் இளைப்பாறவும் பயன்பட்டு இருக்கலாம் என சொல்றாங்க. அதேமாதிரி இந்த கோவிலுக்கோ, மண்டபதிற்கோ செல்ல வேண்டாம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தான் இருக்கு. இப்படியே சென்றால் பாண்டிச்சேரி நுழைவாயிலுக்கு சென்று விடலாம்.
   
இங்கே இடது ஓரத்தில் தெரிவது காவலர் கூண்டு. இதுப் போன்று கோட்டை சுவர்களை ஒட்டியும், படிக்கட்டுகள் செல்லும் இடங்களின் உச்சியிலும் அமைக்கபட்டுள்ளது. மழை, வெயில் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பில் இருக்கும் படைவீரர்கள் இளைப்பாருவதற்காக கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் காவல் கூண்டு, சுழலும் பீரங்கி மேடை, குத்தரிசி மண்டபம், பெருமாள் கோவில், சிவன்கோவில் எல்லாம்  ஒரே படத்தில் இருக்கு.

ஒருவழியா குத்தரிசி மலையில் இருக்கிற இடங்கள் எல்லாம் பார்த்தாச்சு. முக்கியமான விஷயம் என்னன்னா இந்த குத்தரிசி மலை, சந்திரகிரி என சொல்லப்படுகிற சக்கிலிதுர்கம் மலைக்குலாம் யாரும் செல்வதில்லை. அதனால யாரும் இங்கத் தனியாகச் செல்லவேண்டாம். இனி, நாமப் பார்க்க வேண்டியது நேரே தெரிகிற கிரிஷணகிரி என சொல்லப்படும் ராணி கோட்டை. இனி அடுத்தவாரம் இந்த கிருஷ்ணகிரி என சொல்லபடுகிற ராணி கோட்டையின் வரலாறு சிறப்பு முதலியவைகளை பார்க்கலாம்.............,  

Tuesday, April 22, 2014

பால் பாயாசம் - கிச்சன் கார்னர்

தமிழர்கள் விருந்தோம்பல் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்ல. தமிழர்களின் விருந்துகளில் பாயாசத்துக்கு முக்கிய இடமுண்டு. தமிழர் வீட்டு விசேசங்களில் அது நல்ல விசேசமானாலும் சரி, கெட்ட விசேசமானாலும் சரி பாயசம் கண்டிப்பா இருக்கும். கடவுளுக்குப் படைக்கப்படும் படையலிலும் பாயாசம் கண்டிப்பா இருக்கும்.

என் பெரிய பொண்ணுக்கு பால் பாயாசம் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவசியம் செஞ்சுக் கொடுக்கனும். வீட்டுக்காரருக்கும், பையனுக்கும் பாயாசத்தோடு சில வடைகளைக் கொடுத்துட்டாப் போதும். போட்டிப் போட்டுக்கிட்டு காலிப் பண்ணிடுவாங்க. மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு பால் பாயாசம் செய்யுறது இஷ்டமும், ஈசியும்..., ரொம்ப ஈசியா கால் மணி நேரத்துல பாயசம் ரெடிப் பண்ணிடுவேன்.

தேவையானப் பொருட்கள்:
சின்ன ஜவ்வரிசி -  ஒரு கப்
பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி,
சேமியா - ஒரு கைப்பிடி
சர்க்கரை - ஒரு கப்
பால் - ஒரு கப்
உப்பு - சிறிது
முந்திரி, திராட்சை - கொஞ்சம்
ஏலக்காய் பொடி - சிறிது
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


பாசிப்பருப்பை கழுவி நல்லா வேக வச்சுக்கோங்க.

பாசிப்பருப்பு வெந்ததும், அதுலயே சின்ன ஜவ்வரிசியைக் கழுவிப் போட்டு வேக வைங்க. தண்ணிக் கொஞ்சம் தாராளமாவே இருக்கட்டும். 
ஜவ்வரிசி நல்லா வெந்ததும் சேமியாவை சேர்த்து வேக விடுங்க. சேமியாவை சேர்த்தப் பின் ரொம்பவும் கொதிக்க வேணாம். கரண்டிப் போட்டு அதிகம் கிளறவும் வேணாம். அப்படி கிளறினா பாயாசம் கொழ கொழன்னும் கெட்டியாவும் ஆகிடும்.

உப்பு சேர்த்துக்கோங்க.

ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க.
சர்க்கரை சேர்த்து அது கறையும் வரை கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கிங்கோங்க.

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக்கோங்க.

பாயாசம் ஓரளவுக்கு ஆறினதும் காய்ச்சுன பால் சேர்த்துக்கோங்க. பால் குறைவா இருக்குற மாதிரி தோணினால் மிக்சில போட்டு ஒரு சுத்து சுத்தி பாயாசத்துல சேர்த்துக்கோங்க. சூடான பாயசத்துல பால் சேர்த்தால் பால் திரிஞ்சுப் போய்டும்.
சுவையான பால் பாயாசம் ரெடி. நைஸ் வடைன்னு அப்புவால பேர் சூட்டப்பட்ட உளுந்து வடையும், க்றிஸ்ப்பி வடைன்னு பெரியவளால பேர் சூட்டப்பட்ட கடலைப்பருப்பு வடையும் இந்த பாயாசத்துக்கு ஏத்த ஜோடிங்க. கடலைப் பருப்பு வடை எப்படி செய்யுறதுன்னு இங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க.