Friday, April 25, 2014

அழகிய நம்பிராயர் திருக்கோவில் திருக்குறுங்குடி - புண்ணியம் தேடி

புண்ணியம் தேடிப் போறப்  பயணத்துல இந்த வாரம் நாமப் பார்க்கப் போறது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் திருக்கோவில். இது திருநெல்வேலி, நாகர்கோயில் வழித்தடத்தில் உள்ள வள்ளியூரில் இருந்து சுமார் 5 மைல் தொலைவில் இருக்கிறது இந்தத் திருத்தலம் .இங்கே உள்ளவர்களால் நம்பிகோவில் என அழைக்கப்படுகிற திருக்குறுங்குடி  அழகிய நம்பிராயர் திருக்கோவில்.
இந்த ஊரைப் பத்தினப் பெயர் காரணங்கள் சொல்லனும்னா திருபாற்கடலில் பள்ளிக் கொள்ளும் நாராயணன், வராஹ அவதாரம் கொண்டு, தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கிதனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் "குறுங்குடிஅப்படின்னு சொல்லப்படுகிறது.மேலும் திருமால், வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது அவரது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாகப் புராணத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள்  குறுகிய மன்னன் ஒருவன் குடி இருந்த இடம் என்பதால் ”குறுங்குடி” என்று பெயர் வந்ததாகவும், இந்த ஊர் தெய்வ ஸ்தலங்கள் அமைந்த இடமாக இருப்பதால்குறுங்குடிக்கு முன்னால் திரு சேர்த்து ”திருக்குறுங்குடி” என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தத் திருக்கோவில் சுற்றளவு மிகப்பெரியது. இது திருக்கோவிலின் நுழைவு வாயில். சுவர்கள் எல்லாம் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிலைகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அழகிய நம்பிராயர் கோவில், தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முந்தையதுன்னும் சொல்லப்படுகிறது. மேலும் 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று . மகேந்திரகிரியின் அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவில் ”திருமங்கை ஆழ்வார்” கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. 
நுழைவு வாயிலைத் தாண்டி உள்புறம் வரும்போது ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதன் பக்கவாட்டில் ஒரு குட்டி யானை கட்டபட்டு இருக்கு. அதையும் தாண்டி சித்திரகோபுரம் இருக்கு. இந்த சித்திரக் கோபுரத்தில் கல்லிலும், மரத்திலும் மிக நுட்பமான வேலைப்பாடுகளுடைய அமைப்பு காணப்படுகிறது.  அதுக்கு முன்னாடி ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் அழகிய பெரிய சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கு.  ராமாயணக் காலத்தில் ராமரும், லட்சுமணரும், ராவணனுடன் போர் புரிவதற்காக வானரப் படைகளுடன் தங்கிய இடம் இந்த மகேந்திரகிரி மலை என்று கூறப்படுகிறது.
யானையைக் கட்டி இருக்கும் மண்டபத்தின் முன்வாயில் இது. சிற்பங்களெல்லாம் பெரிய அளவில் துல்லியமாக ஒரு சிற்ப கூடத்திற்கு வந்ததுப் போல பிரமிப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கு. அதற்கு நேரே கோவிலின் இரண்டாம் நிலை பிரகாரம் இருக்கு. இந்தத் திருக்கோவில் ஜீயர் மடம் பராமரிப்பில் இருக்கிறது. 
இதுதான் இரண்டாம் நிலை நுழைவாயில். உள்ளே நுழையும் போது ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சதிலுள்ள அவருடைய தியான ஸ்லோகமான
 ஸ்ரீமத் க்யாத குரங்க நகரே திஷ்டந் ஸ்வபந் ஸஞ்சரந்
ஆஸீநச்ச தராதராக்ர விலஸத் தேவஸ்ஸ பூர்ணாஹ்வய:
தாத்ருங் மந்திர நாயிகாஞ்சந ஸரஸ் தீர்த்தம் சபஞ்சக்ரஹா
க்யாதம் தத்ர விமாந மீசகஜ யோஸ் ஸாக்ஷாத் க்ருத: ப்ராங் முக:
ன்னு உச்சரித்துக்கொண்டே உள் நுழைவோம்.

இதன் பொருள்  ”திருக்குறுங்குடி என்னும் இத்திவ்யத் தேசத்தில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, மலைமேல் நம்பி, பூர்ண நம்பி ஆகிய திருப்பெயர்களுடன் திகழும் எம்பெருமானே நமஸ்காரம். குறுங்குடிவல்லி நாச்சியாருடன், பஞ்சக்கிரஹ விமான நிழலில், அஞ்சன புஷ்கரணிக் கரையில் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் திகழும் பெருமாளே நமஸ்காரம். சிவபிரானுக்கும், கஜேந்திரனுக்கும் காட்சி கொடுத்தருளியதுபோல எங்களுக்கும் காட்சி நல்கி வாழ்வளிக்கும் பெருமாளே நமஸ்காரம்” என்பதுதான் அச்சுலோகத்தின் பொருள், மனதார ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டே பெருமாளை சேவிக்கஉள்ளே செல்லலாம்.
இதுதான் நம்பியை தரிசிக்கச் செல்லும் பிராதான வாயில். இங்கே  திருநம்பியை மூன்று வடிவில் தரிசிக்கலாம். நிற்கின்ற கோலத்திலும், அமர்ந்து இருக்கிற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசிக்கலாம். இந்த மூவர் தவிர, இங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாற்கடல் என்ற ஒரு தலம் உள்ளது. இங்கே திருப்பாற்கடல் நம்பி அருள்பாலிக்கிறார். ஒரு அரக்கன், தன்னை உணவுக்காகக் கொல்ல முயன்றபோது, அந்தணன் ஒருவன் அவ்வாறு செய்வது அதர்மம் என்று முறையிட்டான். ஆனால், ‘அதுதான் என் தொழில், என்னைப் பொறுத்தவரை அதுவே என் தர்மம்,’ என்று அரக்கன் வாதாடினான். இருவரும் இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தபோது, திருமால் ஒரு வேடனாக அவர்களிடம் வந்து, அவர்களை சமாதானப்படுத்தி, அவ்விருவருடைய கடமைகளை அறிவுறுத்தினார். இருவருக்கும் ஜன்ம சாபல்யம் கொடுக்க விரும்பிய அவர், அவர்களை திருப்பாற்கடலில் நீராடுமாறு பணித்தார். அவ்வாறே அவர்கள் செய்து மோட்சம் ஏகினார்கள். பெருமாளும் அங்கே கோயில் கொண்டார். இதுதான் திருப்பாற்கடல் நம்பியின் தலத்தின் புராணம். திருப்பாற்கடல் எனப்படும் இந்த ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறையும் அதன் மீது ராமானுஜர் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தப் பாறை வட்டப்பாறை என்றழைக்கப்படுகிறது.
நுழைவாயிலைத் தாண்டி இருக்கும் வாயிலின் சுவரில் செதுக்கப்பட்டு இருக்கும் சித்திரங்கள் இவை.  அதேப்போல ஐந்தாவது நம்பி திருக்குறுங்குடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் காணப்படும் ஒரு குன்றின் மீது அருள்பாலிக்கிறார். இவர் திருமலை நம்பி. இந்த ஐந்து நம்பிகளின் உற்சவ மூர்த்திகளை பிரம்மோற்சவ திருவிழாவின் போது ஒன்றாக .தரிசிக்கலாம்.  
சித்திரக் கோபுரத்தைத் தாண்டி சன்னதிக்குள் செல்லும் வழி இது. கோபுரத்தில்தான் எத்தனை வகையான நுணுக்கமான சிற்பங்கள்!!?? அதெல்லாம் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோபுரத்தைக் கடந்துச் சென்றால் கோயில் கொடிமரம்.  சன்னிதிகு நேராக இல்லாமல் பலிபீடத்தில் இருந்து நகர்ந்த நிலையில் இருக்கு. இது ”நம்பாடுவான்”ன்ற பக்தன், பெருமாளைத் தரிசனம் செய்ய இடையூறாக இருப்பதைக் கண்டு விலகி நின்ற கொடிமரம், இன்னமும் அப்படியே இருக்கு. இது கோவில் முதல்நிலை உள்பிரகாரம் ஆகும்.  இந்த திருஸ்தலத்தை பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், பிள்ளைப்பெருமாள்  தவிர, புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தரும்கூட இந்தத் திருக்குறுங்குடித் தலத்தைப் பற்றி பாடல்கள் பாடி இருக்கிறார்கள்.
     
இது மணவாள மாமுனிகள் சன்னதி. பொதுவாக சிவன் கோவில்களில்தான் சித்தர்கள் காட்சியளிப்பார்கள். இங்கே அதிசயிக்கும் வகையில் இககோவிலினுள்ளும், மலைமேலும் பல்வேறு சித்தர்களின் சிலைகள் இருக்கு. அங்கே இருப்பதாகவும் சொல்லபடுகிறது மணவாள மாமுனிகள் சன்னதியில்  உள்புறம் ஒரு பெரிய மண்டபம் இருக்கு. அதன் தூண்களஎல்லாம் சிற்ப வேலைபாடுகளுடன் அழகாக இருக்கு இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்யவதம் நுணுக்கமான சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .   
பெருமாள் கோவிலில் காணமுடியாத பல அம்சங்கள் இந்த திருக்கோவிலினுள் காணலாம். இங்கே ஈசானிய மூலையில் ஊர் எல்லைக் காளியாக ”குறுங்குடி அம்மன் சன்னதி” இருக்கு. மேலும், இந்த திருகுறுங்குடியைப் பற்றி சொல்லும்போது  வராகரின் மடியில் அமர்ந்தபடி, கைசிக புராணத்தை வராகர் சொல்லக்கேட்டுப் பெரிதுவந்து, தானும் பூலோகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பரந்தாமனின் புகழ் பரப்ப வேண்டுமென்று விரும்பினார் தாயார். அதனாலேயே ஸ்ரீவில்லிப்புத்தூரில், பூமித்தாயின் குழந்தையாக, ஆண்டாளாக அவதரித்தார் ஆகவே ஆண்டாளின் பிறப்புக்கு இந்த திருகுருங்குடியே காரணம் என்றும் சொல்லபடுகிறது
சிவபெருமானுக்காக இங்கே ஒரு தனி சன்னதியே இருக்கு. மகேந்திர மலையின் அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் மகேந்திரகிரீஸ்வரர் ன்னு அழைக்கபடுகிறார். இந்த சன்னதி,  நின்ற நம்பி சன்னதிக்கும், கிடந்த நம்பி சன்னதிக்கும் இடையில் இருக்கிறது. இந்தக் கோயிலில் இருக்கும் மடப்பள்ளியில் பெருமாள், பரமசிவன் இருவருக்கும் சேர்த்தே நிவேதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றதாம். பெருமாள் பிரசாதங்கள், சிவ பக்தர்களுக்கும். சிவன் பிரசாதங்கள் பெருமாள் பக்தர்களுக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும் வழக்கம் இருப்பது இந்த கோவிலின் மேலும் ஒரு சிறப்பு.
இந்தத் திருக்கோவில் மிகவும் பிரம்மாண்ட அளவில் இருக்கிறது. கோவிலின் முதல் வெளிப்பிரகாரச் சுற்றிலே திருக்குளம் அமைந்து இருக்கிறது.  இது மகேந்திரகிரீஸ்வரர் சன்னதியின் முன்பக்கம். இங்கிருந்து பார்த்தால் தெரிவது சித்திரக் கோபுரம். இப்பொழுது அதில் பராமரிப்பு பணிகள் நடந்துகிட்டு இருக்கு. அடுத்து நாம தரிசிக்கப்போறது இந்த ஸ்தலதின் வயதான யானை.  
இதற்கு சுமார் 25 வயது இருக்கலாம்னு சொல்லப்படுகிறது . மகேந்திரகிரீஸ்வரர் சன்னதிக்கு பக்கத்தில் இருக்கிறது இந்த யானை. அழகாக திருநாமம் இடப்பட்டு சாதுவாக காட்சியளித்தது பொதுமக்கள் இந்த யானையை பார்வை இடும்போது வாழை பழங்கள் போன்ற பொருட்களை கொடுக்கின்றனர். யானைகளை கேமராவில் படம் பிடிக்கும்போது, பிளாஷ் இட்டு படம் எடுக்காதீர்கள் யானை மிரளும் வாய்ப்பு உண்டு. அமைதியாகப் பார்த்துவிட்டு செல்வோம். இனி  பிரகாரம் வலம் வரத் தொடங்கும் முன் இந்த திருக்கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்....,
உள்பிரகாரத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கு. அதைவிட அதன் கலைநுணுக்கம ஆச்சர்யமளிக்கும் விதமா இருக்கு.  இந்த ஸ்தல புராணத்தின் சிறப்பு இசையாலும் இறைவனை அடையலாம் என்ற வராக புராணத்தின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த திரு ஸ்தலத்திற்கு மேற்கே இருக்கும்  ”மகேந்திரகிரி”அடிவாரத்தில் வசித்து வந்த பாணர் குடியில் பிறந்த ”நம்பாடுவான்” இந்த ஸ்தலத்து பெருமாள் மீது மிகவும் பக்தியுடையவனாக இருந்தாராம். இவர் எப்பொழுதும்  ”கைசிகம்” என்ற பண்ணை இசைத்து ஆண்டு தோறும் கார்த்திகை மாதம்,  சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டு எம்பெருமானை பாடிப்பரவசித்து வந்து, தொழுது செல்வதையே தொண்டாகக் கொண்டு இருந்தாராம். 


அப்படி பாடித் தொழுவதற்கு ”மகேந்திரகிரி” மலை காட்டுப்பாதையை கடந்து வரும்போது அங்கிருந்த பிரம்மராட்சசன் ஒருவன் ”நம்பாடுபவனைப்” பிடித்துக்கொண்டு சாப்பிட முயற்சித்தானாம். அதற்கு நம்பாடுவான் நான் தற்போது விரதம் பூண்டுள்ளேன். விரதம் முடித்துப் பெருமாளை வணங்கிவிட்டு மீண்டும் இவ்வழியேவரும்போது உனக்கு உணவாகிறேன் என்று சொல்ல ராட்சசன் இதை நம்ப மறுத்த போது  நான் திருமாலின் தூய பக்தன் பொய் சொல்லமாட்டேன் என்று சத்தியம் பண்ணிக்கொடுக்க அவனும் சம்மதித்து அனுப்பினான் .
திருக்கோவில் பிரகாரங்களை வலம் வந்தவாறே ஸ்தல புராணத்தை தொடர்ந்து பார்க்கலாம்.., அப்படி ”நம்பாடுவான்” பிரம்ம ராட்சஷனுக்கு கொடுத்த வாக்குப்படி இதுவே நமக்கு கடைசி யாத்திரை என எண்ணி பாணர் இனத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பதால் வழக்கம் போல கோவிலின் கொடிமரத்து முன்பு இனி இந்த ஸ்தலத்து எம்பெருமானைப் பார்க்கமுடியாதே என்ற வருத்தத்தில்  ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தபோது திடீரென துவஜஸ்தம்பம் விலகி, எம்பெருமான் காட்சி தெரிய பரவசப்பட்டு விரதம் முடித்து சந்தோஷமாக ”நம்பாடுவான்” திரும்பினான். நம்பாடுவனுக்காக விலகிய நகர்ந்த கொடிமரம் இன்னமும் அப்பயே விலகி இருப்பதை இங்கு காணலாம்.
அப்படி தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது பிரம்மராட்ஷசனை பார்க்க செல்லும் காட்டு வழியில் ”திருக்குறுங்குடி” பெருமான் ஒரு கிழ பிராமண  வேடம் கொண்டு இந்த வழியே செல்லவேண்டாம் இங்கே ஒரு பிரம்மராட்ஷசன் இருக்கிறான். நீ சென்றால் அவன் உன்னை பிடித்து தின்று விடுவான் என சொன்னார். அதற்கு நம்பாடுவான் இறைவன் பெயரால் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறேன். நான் சத்தியம் தவறமாட்டேன் என சொன்னாராம் ”நம்பாடுவான்”.  அப்பொழுது மாயக்கண்ணன் தன மாயலீலையாக ”நம்பாடுவானிடம்” ஆபத்து நேரிடும் காலங்களிலும் பெண்களுக்கு விவாகம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும் பொய் சொன்னாலும் சத்தியம் செய்து கொடுத்தாலும் அது பாவமாகாது என்று உபதேசிக்க ”நம்பாடுவானோ” உயிர் போகும் சந்தர்பத்திலும் கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என உறுதிப்பட சொல்ல அதைக்கண்டு மகிழ்ந்த  பெருமாள் தன் சுயரூபம் காட்டி மறைந்தாராம்.
பிறகு பிரம்ம ராட்சஷனை சந்தித்த நம்பாடுவான் தன்னை உணவாக உட்கொள்ளும்படி சொல்ல என்ன மாயம் செய்தாய் என் பசி என்னைவிட்டு போயிற்று எனக்கு பாவவிமோசனம் பெற நீ பெற்ற விரதத்தின் புண்ணியத்தின் கால்பாகமாவது கொடு என சரணடைந்தான்.  
அவனை அன்போடு அரவணைத்த நம்பாடுவான் உனக்கு ஏன் இந்த பிரம்மராட்சஷ உருவம் வந்தது எனக் கேட்க...,அந்த ராட்சஷன் தான் முற்பிறவியில் யோகஷர்மா என்னும்  பிராமணனாக இருந்தபோது யாகம் செய்வதை இழிவாக பேசியதாகவும், அதை உண்மையான பற்று இல்லாமல் செய்தமையாலும் இந்த கதிக்கு ஆளானேன். அதனால் இங்கே அலைந்து திரிந்து, உன்னைப்போன்ற உண்மையான பக்தர்களின் தரிசனத்தாலும், ஸ்பரிசத்தாலும் எனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்பதால் காத்திருந்தேன். நீ உண்மையான பக்தி உள்ளவன் என நிருபித்து விட்டாய். அதனால் நீதான் எனக்கு சாபவிமோசனம் கொடுக்கவேண்டும் என வேண்டி நிற்க...., ”நம்பாடுவானும்” மனமுவந்து நான் ”திருக்குறுங்குடி” நம்பியை கைசிகம் என்ற பண்ணினால் பாடி தொழுதேன். அதனால் நான் பெற்ற பலத்தில் பாதியை உனக்குத் தருகிறேன் என்று சொல்ல அப்பொழுதே பிரம்மராட்ஷனின்  சாபம் நீங்கியதாம்.  இந்த வரலாற்றை வராக மூர்த்தியே தன மடியில் இருக்கும் பிராட்டியிடம் சொல்வதாக கைசிக புராணத்தில் கூறப்படுகிறது.
இது வெளிப்புறம் இருக்கும் மண்டபத்தின் தூண்கள்.  எல்லாம் நுணுக்கமாக செதுக்கப்பட்ட பிரமாண்ட சிலைகள். இங்கே மிகவும் சிறப்பு அம்சம் என்னானா எங்கேயும் பார்க்கமுடியாத சில அதிசயங்கள் இந்த திருகோவிலில் இருக்கு.


உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது அளவில் பிரமாண்டமாக இருக்கும் காலபைரவர் பெரும்பாலும் சிவன்கோவில்களில் மட்டுமே காலபைரவர் அருளாட்சி புரிவார். இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்கவகையில் இருக்கிறார். இந்த திருமேனி முக்கால்பாகம் கல்லினாலும், கால்பாகம் சுதையினாலும் உருவாக்கப்பட்ட  இச்சிலை 300 வருடங்களுக்கு முன்னால் மூலிகை வண்ணத்தால் அழகுப்பட வண்ணம் தீட்டியது இன்னமும் மெருகுக் குலையாமல் அழகாக இருக்கிறது. திருமண வரம் வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும் இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கிறதாம். இவருக்கு தயிரன்னமும், வடமாலையும், பூசட்டையும் படைக்கப் படுகிறது.
இதைவிட இங்கே பெரிய அதிசயம் என்னனா,  இவருக்கு இடதுபக்கத்தில் இருக்கும் விளக்கு, தூணில் மேல்பகுதியில் ஒரு விளக்கு, கீழ் பகுதியில் ஒரு விளக்கு. இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கு. இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாக காட்சியாளித்தாலும்,  மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசையும் இது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூசை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூசு விடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவது காலபைரவரின் மூச்சு காற்று ஏற்படுத்தும் அசைவு . எங்கேயும் காற்று வருவதற்கான வாய்ப்பு இல்லாத அமைப்புக் கொண்டது இவ்விடம். 
இதையும் தாண்டி நாம உள்பிரகாரம் சென்றால் அங்கே இன்னும் ஒரு அதிசயம் காத்து இருக்கு. உள்பிரகாரத்தில படம் எடுக்க அனுமதி இல்ல மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் விமானம் பஞ்சகேத விமானம்ன்னு சொல்லப்படுது.  இங்கே மோட்சம்  வேண்டி நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை  செய்யப்படுகிறது. ஆனா எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய அதிசயம் அது இங்கே இருக்கும் மூலவரை தரிசனம் செய்வது ஒரு உயிரோட்டமான தரிசனமாக இருக்கும்.  பட்டர் அந்த சிலையின் முகத்தில் தீபாராதனை காட்டும்போது அந்த விழிகள் அப்படியே அசைவது போல தோற்றமளிக்கும் காட்சி அதிசயத்திலும் அதிசயம்.


இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக தீபம் காட்டுவதற்கேற்ப அந்த விழிகள் அசையும். அதை பார்க்கும்போதுஉயிரோட்டமாக இருக்கிறது. அது தீபத்தின் அசைவினால் அப்படி தெரிகிறது எனவும், இல்ல சிலை அமைப்பு அப்படி வடிவமைக்கப்பட்டது எனவும் இரு வேறு பேச்சுக்கள் நிலவுது. ஆனால் எனக்கென்னவோ உண்மையில் எம்பெருமான் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என தோன்றுகிறது.  அவர் அருட்பார்வை பூரணமாக கிடைக்கும் என்ற எண்ணம் நமக்குள் வருகிறது  .
இங்கே மற்றொரு சிறப்பு அம்சம் என்னனா இங்குள்ள அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு "குறை ஒன்றும் இல்லை' என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இந்த சம்பிரதாயம் இன்னமும் நடைமுறையில் இருக்கு.


தாயார் ”குறுங்குடி வல்லி நாச்சியார்” என்ற பெயரில் தனியே சன்னதி  கொண்டிருக்கிறார். மேலும் குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இங்கே வந்து வழிபாடு செய்ததால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயரும்  உண்டு என சொல்றாங்க. அடுத்து நாம கோவில் சுற்றுக்குள்ளேயே இருக்கும் தீர்த்தக்குளத்தை பார்க்கலாம்.
இங்கு இருக்கும் தீர்த்தகுளம் திருப்பாற்கடல் மற்றும் பஞ்சதுறை என்று அழைக்கபடுகிறது.   இந்த ஸ்தலத்தைப் பற்றி சொல்லும் திருமழிசையாழ்வார் 
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு 
வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய் திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துண்ணையே எனக் குறிப்பிடுவார்
கறவையினங்கள் (பசுக்கூட்டங்கள்) நிறைந்து விளங்கும் பொய்கையில்,
அப்பொய்கை கரையோரத்தே வளர்ந்தோங்கியுள்ள கரிய தோற்றமுடைய
பனைமரங்களிலிருந்து பனம்பழங்கள் வீழ்கின்றன. அவ்வாறு வீழும் பனம்பழங்களை அப்பொய்கையில் வாழும் வாளைமீன்கள் பிடித்து தின்பதன் பொருட்டு எகிறிப் பாய்கின்றன. இத்தகைய வளம்வாய்ந்த குறுங்குடியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே! திரண்ட தோள்களை உடைய இரண்யனை இரண்டு கூறுகளாக பிளந்து போட்ட நரசிங்கனும் நீதானே! என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
இது கோவிலின் உத்திரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஒரு ஜீயரின் சிலை. இங்கே இருக்கும் ஜீயர் மடத்தை நிறுவியவர் ”ராமானுஜர்”. ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் வைஷ்ணவதை போதிக்க திருவனந்தபுரம் சென்றாராம். அப்பொழுது அவரால் தன் தொழிலுக்கு ஆபத்து வரும் என அஞ்சிய நம்பூதிரிகள் அனந்தபத்பனபனிடம் முறையிட, அவரும் தன எதிரே இருந்த கருடாழ்வாரை நோக்கி, இவரைக் கொண்டு சென்று திருக்குறுங்குடியில் விட்டு வா! எனச் சொல்ல, கருடனும் அவரை திருக்குறுங்குடியில் விட்டாராம். அதனால்தான் இன்றும் திருவனந்தபுரம் அனந்தபத்பநாபபுரம், ஷேத்திரத்தில் கருடன் இல்லை என சொல்லப்படுகிறது.

ராமானுஜரும் காலையில் பார்த்தபோது திருகக்குறுங்குடியில் இருந்ததால் இது அவன் லீலை என நினைத்து தன் சீடன் ”வடுகநம்பியை”தின பூஜைக்காக அழைத்தாராம். திருக்குறுங்குடி எம் பெருமானே வடுகநம்பியாய் வந்தாராம். பின்பு, இராமானுஜரும் திருமண் காப்பிட்டு விட்டு, திருமண் பெட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு வடுகநம்பி இராமானுஜரின் பின்னேவர, பெருமாளை வணங்க திருக்குறுங்குடிக்கு வந்தாராம். கோவிலின் உள்ளே நுழைந்ததும் துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு, இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டாராம். அப்பொழுது வடுகநம்பிக்கு ராமாநனுஜர் இட்ட திருமண் பெருமாளுடைய நெற்றியில் இருப்பது கண்டு வடுகநம்பி வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என நினைத்து இப்பெருமானுக்கு வடுகநம்பி என அழைத்தாரம் இராமானுஜர். இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்த வடுகநம்பியின் கனவில் தோன்றிய பெருமாள் இராமானுஜர் திருக்குறுங்குடியில் இருப்பதாக உணர்த்தினார் என்றும் இப்பெருமாளின் அற்புதங்களை சொல்வார்கள் 
இத்திருகோவிலுக்கு  உதயமார்த்தாண்ட வர்மா என்னும் சேர மன்னன், ராமவர்மா என்னும் அரசன் மற்றும் திருவிதான்கோட்டு மன்னர்கள் இந்த திருக்கோவிலுக்கு பல நன்கொடைகள் மற்றும் களப்பணிகள் எல்லாம் செய்து இருகின்றனர். நம்பாடுவான் வேடமும், கிழபிரமணன் வேடமும் இட்டு இயல், இசை, நாடக அம்சங்கள் நிறைந்த கைசிக புராணம் இன்றும் நாடகமாக நடிக்கப்படுகிறது. இதில் நடிப்பவர்கள் அதற்கு முன் 45 நாட்கள் கடுமையான விரதத்தை அனுசரித்து அப்புறம்தான் நடிப்பார்களாம். இனியும் நிறைய பல பெருமைகளைக் கொண்ட இந்தத் திருத்தலத்தின் சிறப்புகளை எழுதினால் இந்த பதிவு நீண்டதாக ஆகிவிடும் என்பதால் இங்கிருந்து விடைபெற்று மலைமேல் இருக்கும் நம்பியைக் காண அடுத்தவாரம் செல்லாம்....,

27 comments:

  1. ஷப்பா.. கோவில் குளம் போற வயசு வரலேன்னாலும் அந்த பீல் வந்துடுது அக்கா உங்க கட்டுரையா படிச்சா..

    ReplyDelete
    Replies
    1. கோவில், குளம் போக வயசு முக்கியமில்ல ஆவி! மனசும், நேரமும்தான் முக்கியம்.

      Delete
  2. இந்தக் கோயிலுக்கு சென்றதில்லை... அந்தக் குறை இந்தப் பகிர்வின் மூலம் தீர்ந்தது சகோதரி... நன்றி...

    படங்கள் அனைத்தும் பிரமாதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா! வாய்ப்பு கிடைப்பின் அவசியம் சென்று வாங்கண்ணா!

      Delete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. காலபைரவர் மூசசுகாத்து அதிசயம் மேலும் இங்கே நடக்கும் கலைநிகழ்ச்சிகள் திருவிதாங்கூர் சம்பிரதாய முறைப்படி இருக்கும் மலை மேல் இருக்கும் நம்பி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று சொல்லபடுவதுண்டு நீளும் அந்த ஊரை சுற்றியும் நிறைய கோவில்கள் இருக்கு அதுபற்றிய பதிவுகளையும் இடுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. கடவுள் அனுக்கிரகமும் வாய்ப்பும் கிடைப்பின் கண்டிப்பாய் பதிவிடுகிறேன் அமிர்தாக்கா!

      Delete
  5. சமீபத்தில் சென்று வந்தோம். அற்புதமான கோவில். நிறைய விவரங்களை உங்கள் கட்டுரையிலிருந்து தெரிந்துகொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கோவில் பற்றி அறிந்தமைக்கும் நன்றி !

      Delete
  6. வணக்கம்

    கோயிலுக்கு செல்லாமல் சரினம் கிடைத்தது போல ஒரு உணர்வு.. கோயில் வரலாற்றை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  7. அறியாத கோவிலைப் பற்றி அறியக் கொடுத்தீர்கள் அக்கா...
    சிற்பங்கள் அனைத்தும் அழகு...
    படங்கள் அனைத்தும் அம்சமாய் இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. அறியாதக் கோவில் பற்றி அறிந்தமைக்கு நன்றி சகோ!

      Delete
  8. திருக்குறுங்குடி சென்றதில்லை! கேள்விப்பட்டு இருக்கிறேன்! விவரமான தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைப்பின் ஒரு முறை சென்று வாருங்கள் சகோ!

      Delete
  9. தெரியாத ஒரு புது கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தக்து. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இண்டியா வரும்போது வாய்ப்பு கிடைப்பின் அவசியம் பாருங்க சகோ!

      Delete
  10. எங்கள் சொந்த ஊரைப் பற்றி அருமையாக எழுதியதற்கு மிக்க நன்றி! அதில் அந்த மலை நம்பி கோவிலுக்கு முன்பெல்லாம் நடந்துதான் செல்ல வேண்டும். 5 மணி ந்றம் ஆகும்.....வழியில் ஏரி அதன் பின் அணைக்கட்டு வரும் அங்கு கட்டிக் கொண்டுவரும் காலை ஊனவை முடித்துக் கொண்டு ஏறுவோம்...கோவிலின் அருகே ஆறு தெள்ளத் தெளிவாக ஓடும்....படிக்கட்டுகள் இண்டு அங்கிருதுதான் பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவருவார்கள். ...கொஞ்சம் தள்ளி பாறைகளின் மீது ஏறிச் சென்றால் ஒரு சிறு அருவி.....அருவியில் குளிக்க அங்கு 40 அடி ஆழம் உள்ள சுனையில் நீந்திச்செல்ல வேண்டும். பாறையின் மீது ஏறிச் சென்றால் மேலே செல்ல செல்ல அங்கு பெரிய அருவி உண்டு. எல்லாம் அனுபவித்தது பல வருடங்கள் முன்.....சிறு வயதில். இப்போது 7 வருடங்களுக்கு முன் சென்றதுண்டு...சுனை அருவி வரை நீந்து சென்று குளித்துவிட்டு வந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று! இப்போது கோவில் அருகில் வரை ஜீப் செல்லுகின்றது. என்றாலும் நாங்கள் ட்ரெக்கிங்க் செல்லுவதையே விரும்புகின்றோம். மலை நம்பி கோவில் நன்றாக பளிசென்று இப்போது விரிவாக்கி உள்ளாரிகள்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாங்களும் முதலில் மலையில் செல்வதற்கு ஜீப்பில் தான் செல்வதாக பிளான் பண்ணினோம் அப்படி சென்றால் இயற்கை அழகை ரசிக்கவும் பதிவிடவும் முடியாது மேலும் அந்த சத்தத்தில் மிருகங்கள் பாகத்தில் கூட வராது அதனால் பாதயாதிரையாகதான் சென்றோம் (உண்மை என்னன்னா ஜீப் டிரைவர் மலையில் செல்வதற்கு 800 ரூபாய் கேட்டதுனால ) அப்ப வித விதமான் உயரினங்கள் பார்க்க முடிஞ்சது சிலதை போட்டோ எடுக்கும் முன்பு எஸ்கபே ஆகிவிட்டன மேலும் நாங்கள் கோவில் செல்லும் போது 4 மணி ஆனதுனால அருவி பக்கம் போகவேண்டாம் என் சொல்லிடாங்க ..திரும்பி போகும்போது காட்டு மிருகங்கள் தொந்திரவு இருக்கும்ன்னு சொன்னங்க ஏன்னா நாங்கள் சென்ற நாளின் முந்தைய இரவுதான் ஒரு சிறுத்தை அந்த பாதையில் நடமாடியதை வன இலாகா ஊழியர்கள் பார்த்துனால பயம் காரணமா அருவி மட்டும் மிஸ்ஸிங் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து அங்கே செல்லும் போது நிச்சயம் பதிவிடுகிறேன் சகோ

      Delete
  11. http://blogintamil.blogspot.fr/2014/04/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாச்சு! பார்த்தாச்சு!

      Delete
  12. வள்ளியூர் வரை சென்றிருக்கிறேன், இந்தக் கோவில் சென்றதில்லை. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது சென்று வருகிறேன்...

    ReplyDelete
  13. சிறப்பான கோவில் எனத் தெரிகிறது..... நம் ஊரில் தான் எத்தனை எத்தனை கோவில்கள். எல்லாவற்றிற்கும் செல்ல ஆசை தான்..... ஆனாலும் தலைநகரில் இருந்து கொண்டு கிடைக்கும் கொஞ்சமான விடுமுறையில் எல்லா இடங்களையும் பார்ப்பது கடினம்.... உங்கள் பதிவு மூலம் இவ்விடங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. அழகான படங்கள்.அருமையான பதிவு.

    மிகவும் தொன்மையும், வரலாறும் கொண்ட கோயில். காலபைரவர் மூச்சுக்காற்றால் ஆடும் தீபம் உண்மையில் அதிசயமும், ஆச்சரியமும்தான்...மார்த்தாண்ட வர்மா மன்னரால் அளிக்கப்பட்ட் மிகப் பெரிய மணி ஒன்று சன்னதிக்குள் நுழையும் இடத்தில் தொங்க விடப்பட்டு உள்ளதே பார்த்தீர்களா... படம் எடுத்தீர்களா...

    TVS நிறுவனத்தாரின் சொந்த ஊர் இதுவே ஆகும். ' T ' என்பது திருக்குறுங்குடியையே குறிக்கும்

    ReplyDelete
  15. மிக விரிவாகவும் அழகாகவும் சொல்லி உள்ளீர்கள். மிக்க நன்றி. ஒரு முறை தரிசித்த திருத்தலத்தை மீண்டும் தரிசிக்க தூண்டும் விதமாக அமைந்துள்ளது. ஒரு சிறு விளக்கம் தேவை. பொதுவாக பெருமாள் கோவில் சடாரிக்கு "சடகோபன்' என்று நம்மாழ்வாரைக் குறிப்பதுண்டு. திருக்குருகூர் நம்பியின் சடாரிக்கு என்று ஏதாவது தனி பெயர் உள்ளதா? நன்றி

    ReplyDelete
  16. மிக விரிவாகவும் அழகாகவும் சொல்லி உள்ளீர்கள். மிக்க நன்றி. ஒரு முறை தரிசித்த திருத்தலத்தை மீண்டும் தரிசிக்க தூண்டும் விதமாக அமைந்துள்ளது. ஒரு சிறு விளக்கம் தேவை. பொதுவாக பெருமாள் கோவில் சடாரிக்கு "சடகோபன்' என்று நம்மாழ்வாரைக் குறிப்பதுண்டு. திருக்குருகூர் நம்பியின் சடாரிக்கு என்று ஏதாவது தனி பெயர் உள்ளதா? நன்றி

    ReplyDelete
  17. அருமையான பதிவு. சிறப்பான புகைப்படங்கள். அழகிய எழுத்துநடை. வாழ்த்துகள்.

    ReplyDelete