Thursday, January 18, 2018

இந்தியாவின் விசித்திர உணவுகள்-கலாச்சாரம்

அருவருக்கத்தக்க உணவுகள்ன்ற தலைப்பில் உலகத்தின் பல்வேறு நாடுகளின் உணவு பழக்கத்தை  பதிவா போட்டு,  உங்க  முகம் சுளிக்க வைத்த ராஜி, அன்னிக்கே சொன்னேன், இந்த உணவு பதிவு வரும். ஆனா வேற ரூபத்தில்ன்னு.. சீரியல்ல வருமே! இனி அவருக்கு பதில் இவர்ன்னு.. அதுமாதிரி...   இந்தியாவிற்கும் விசித்திரமான பழக்க வழக்கத்திற்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்குறதால, இங்க இனம், நிறம், மொழி, கலாச்சாரம், கல்வி, கடவுள்ன்னு வித்தியாசங்களுக்கு குறைவில்ல. எல்லாத்துலயும் வித்தியாசம் இருக்குற மாதிரி உணவு பழக்கத்துலயும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.  அந்த மாதிரியான வித்தியாசமான உணவு வகைகளை இன்னிக்கு பார்க்கலாம்..
நாமெல்லாம் தவளையை பார்த்தால் தலைதெறிக்க ஓடுவோம். ஆனா இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலம் பக்கம் போனா அந்த தவளை போனா, அதான் தலைதெறிக்க ஓடும். காரணம் இந்த மாநிலத்தில் தவளைக்கால்கள் மிகவும் பிரமாதமான உணவு. அதுவும் பண்டிகை காலங்களில் சிக்கிம் பக்கம் போனீங்க தவளை கால் பிரை,  சூப், கிரேவின்னு விதவிதமா சமைச்சு அசத்திடுவாங்க. அதுக்கு அவங்க சொல்லுற காரணம், தவளைக்கால் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராதாம். அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கிறவங்க சிக்கிம் பக்கம் ஒரு விசிட் அடிக்கலாம் . 
அடுத்து நாம பார்க்கபோறது கோரிஷா என்பது மூங்கில் தளிர்களை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ, அஸ்ஸாம் பகுதி மக்கள் சாப்பிடுவார்களாம். மேலும் இது அப்பகுதியில் மிகவும் பிரலமான ஓர் சைவ உணவும் கூட. மேலும் இதனை அசைவ உணவை தயாரிக்கும் போதும் சேர்ப்பார்களாம்.  இதனை சமைக்கும் முறை வித்தியாசமாக இருந்தாலும், சுவையாக இருக்குமாம். இதோடு  பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து சிக்கன் கறிப்போல செய்தாலும் அதே சுவை வருமாம். ஊறுகாயாக, சாப்பாட்டுக்கு குழம்பாக என  இதை செய்வார்களாம்.  வாய்ப்பு கிடைக்குறவங்க சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.
அடுத்து நாம சட்டீஸ்கர் மாநிலத்துக்கு போகலாம். பொதுவாக வீட்டில் எறும்பு வந்திட்டா, உடனே எறும்பு பொடி போடுவோம். இல்லன்னா, சீமஎண்ணெய் ஊத்துவோம்.  ஆனா சட்டீஸ்கர் மாநிலத்தில் இதுக்குலாம் வேலையே இல்ல. அங்க ஸ்பெஷல் உணவே சிவப்பு சுள்ளெறும்பு தான் ,இதன் முட்டைகளை கொண்டு இனிப்பு பதார்த்தம் செய்வாரர்களாம் ,இந்த எறும்புகளை கூட மிளகுப்பொடி சேர்த்து சட்னியாக அரைத்து சாப்பிடுவர்களாம்! காடுகளுக்கு சென்று சுள்ளெறும்புகளை பிடித்து அவற்றின், முட்டைகள் மற்றும் எறும்புகளை வெயிலில் நன்றாக உலர்த்தி, தக்காளி, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய், உப்பு மற்றும் சர்க்கரை.சிறிது சேர்த்து அரைத்த இந்த சட்னிக்கு பெயர் சப்ரா. நம்மூர்ல,  எதாவது சாப்பாட்டுல எறும்பு இருந்து, அம்மா, பாட்டிக்கிட்ட சொன்னா, எறும்பை சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும்டான்னு சொல்வாங்க. அப்படி சாப்பிட்டும் நான் ஏன் கண்ணாடி போட்டிருக்கேன்னு தெரில. பயபுள்ளைக பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டுதுக .
நம்மூர்ல கூழ் விக்கிற மாதிரி இது ரோட்டோரங்கள்ல கூட வச்சு விற்பாங்களா., சட்னியில் நமக்கு தேவையான புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைய இருக்கு. நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் இதுல நிறைய இருக்கு. இந்த சுள்ளெறும்பு சட்னியை சாப்பிட்டா உடல் சுறுசுறுப்பாகவும் ,நினைவாற்றலை பெருக்கவும் செய்யுமாம் .
கோவா சுறாமீன் குழம்பு மற்றும் சுறாமீன் வறுவல். இந்த வகையான உணவுகள் நாவில் எச்சில் ஊறவைக்குமாம். இந்த குழம்பை சுவைக்கவே உலகின் பலபகுதிகளில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவார்களாம். இது அந்த இடத்தின் பாரம்பரிய உணவாகும். பொதுவா குட்டி சுறாமீன்களே இந்த உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றனர்.  இதெற்கென நிறைய செய்முறைகள் இருக்கின்றன.  
அடுத்து நாம பார்க்கபோறது  மேகாலயாவின் காரோ. காரோ என்னும் பழங்குடியினர் வசிக்கும் கரோ மலைபகுதில் இருக்கும் ஒருவிதமான பாரம்பரிய உணவான கருவாடு, சாம்பல் மற்றும் காய்கறிகளைக் கொண்டு மிக்ஸிங் செய்த குழம்பு செய்து சாப்பிடுவார்களாம். இவர்களுக்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. மன்னர்கால வரலாற்றில் நடந்த யுத்தத்தில் மலைக்குகைகளில் வசித்து சண்டைபோட்டு பிறகு சிறு,சிறு குழுக்களாக வசிக்க தொடங்கினர் என்றும் சொல்லப்படுவதுண்டு. இவர்களின் பாரம்பரிய உணவே இந்த சாம்பல் குழம்பு. இதன் செய்முறை வித்தியாசமாக இருப்பதோடு, இதன் சுவையும் வித்தியாசமாக இருக்குமாம். இந்த ஊர் ஆளுங்க செம அழகாம். அவங்களை பத்தி  ஒரு பதிவு போடனும்.
அடுத்து நாம பார்க்கபோறது ஒரு அருவருப்பான உணவு. பிடிக்காதவங்க கொஞ்சம் ஸ்கிப் பண்ணிட்டு போய்டுங்க. சில மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மிசோரம் பகுதியில் .நாயை உணவாக உட்கொள்கின்றனர். இது சீனாவின் பரவலாக காணப்படும் ஒரு விஷயமாகும். .இதைவிட கொடுமை என்னனா சீனாவில் உணவு தட்டுபாட்டு காலங்களில் வீட்டு நாயும் உண்ணப்படுவதுண்டு. நாகாலாந்து மிசோரம் போன்ற இடங்களில் வசிக்கும் பழங்குடியினர் நாய்களை விரும்பி உணவார்களாம் .. நாய்க்கறியும், மனுசக்கறியும்தான் எதுக்கும் உதவாதுன்னு நினைச்சுட்டிருந்தேன்.

பொதுவாக சாப்பாட்டில் கிடைக்கும் கருப்பு அரிசிகளை பொருக்கி வீசிடுறது நம்ம வழக்கம். ஆனா, அதே கருப்பு அரிசியை மட்டும் விரும்பி சாப்பிடுபவர்கள் நம் இந்தியவில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 1970 ன் கடைசிகளில் 80 தொடக்கத்தில்  என நினைக்கிறேன். வருஷம் சரியாக ஞாபகம் இல்லை அந்த சமயம் மூன்று ஆண்டுகளா மழை பெய்யவில்லை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.  அந்த நாளிலெல்லாம் கருப்பு அரிசி நிறைய வந்தன. சாப்பாடு அப்படி கசக்கும். அதை சாப்பிட்ட அனுபவம் உண்டு வேறு அரிசி கிடையாது .வெளிநாடுகளில் இருந்து கோதுமை ,அரிசி எல்லாம் இறக்குமதி செய்து கொடுத்தனர். அது ஒரு பஞ்ச காலம். ஆனா அப்ப இருந்த அரிசியை உணவாக ரசித்து உண்ணும் இடம் மணிப்பூரில் சில இடங்களில் இருக்கிறது. சமைத்தபின் ஊதா நிறத்தில் மாறிவிடுமாம். இதற்கென தனி ரெசிபி இருக்கிறது .அதைவிட விஷேசமான தகவல் என்னனா இந்த அரிசி ஆன்லைன் ல கூட கிடைக்கிறது. .
அடுத்து நாமப்பார்க்கபோறது பட்டுப்புழு அஸ்ஸாம் பகுதியில் வாழும் மக்கள் பட்டுப்புழுவை சமைத்து சாப்பிடுவார்களாம். அதுவும் இந்த பட்டுப்புழுவை அறுவடை செய்து, அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளான பட்டு நூலை எடுத்துவிட்டு, எஞ்சியுள்ள புழுவை சமைத்து சாப்பிடுவார்கள்.என்ன அஸ்ஸாம்க்கு  ஒரு டிக்கெட் எடுத்திடலாமா .. 
அடுத்து நாம பார்க்கபோறது ஒரு வித்தியாசமான அதுவும் பலராலும் ஒதுக்கப்படும் எருமையின் மண்ணீரல் கொண்டு செய்யப்படும்  ஒருவகையான ரெசிபியை பூனேவிலுள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவார்களாம் மேலும் பண்டிகைக் காலங்களில் அப்பகுதி மக்களால் சமைத்து சாப்பிடப்படுமாம். மேலும் பூனேவில் உள்ள ஹோட்டல்களில் இந்த ரெசிபி கிடைக்குமாம் .இதில் இரும்பு சத்து அதிகம் இருக்காம் .

இனியும் நிறைய வித்தியாசங்களுடன் ,வினோத கொண்டாட்டங்களுடன் நாம் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம் 
நன்றியுடன்,
ராஜி.

Tuesday, January 16, 2018

முக்தியடைய சூல விரதம்

சிவப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது சூல விரதம். தை  மாத அமாவாசையன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுது. கடவுளை வணங்குமளவுக்கு, கடவுளின் எண்ணத்திற்கேற்ப செயல்படும் அவரது வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு நாம் அதிகமா முக்கியத்துவம் தருவதில்லை.  சிவப்பெருமானின் கையிலிருக்கும் சூலத்தின் மனக்குறையை போக்க இப்படியொரு விரதம். 


சிவப்பெருமான் மற்றும் அம்மனின் கைகளில் இருக்கும் மூன்று கூர்முனை கொண்ட ஆயுதத்தின் பெயர் சூலாயுதம்.   பக்தர்களின் கர்மவினைக்கேற்ப, அழிக்கவும், காக்கவும் செய்யும் இந்த சூலாயுதம்.  இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவற்றை உணர்த்தும் புற அடையாளமாக திரிசூலம் விளங்குது. திரிசூலத்தின் ஒருமுனை ஆசைகளைத் தூண்டுவதும், மறுமுனை அதனை செயல்படுத்துவதும், நடுவில் இருக்கும் கூர்முனை அந்த செயலை செய்யலாமா?! கூடாதா என யோசிக்கும் ஞானத்தை தருவதாகவும் அமைந்துள்ளது.



 ஒருமுறை, சிவன் கையிலிருக்கும் சூலம் மன வாட்டம் கொண்டிருந்ததாம். பக்தர்களின் மனசில் என்ன இருக்குன்னு உணரும் சக்தி கொண்ட பெருமான், சதாசர்வக் காலமும் தன் கையிலிருக்கும் சூலக்குழந்தையின் மனவாட்டத்தை உணராமலா இருப்பார்?! என்னவென சூலத்திடம் விசாரிக்க,  எப்பவாவது தங்களை சுமக்கும் பாக்கியம் கொண்ட நந்திபகவானுக்கு பிரதோஷ காலங்களில் சிறப்பு செய்யப்படுது. ஆனா, சதாசர்வக்காலமும் தங்களுடனும், அன்னையுடனும் இருக்கும் எனக்கு எந்த சிறப்பும் செய்யப்படுவதில்லை, அதேப்போல, பாவிகளை அழிக்க என்னை தாங்கள் பயன்படுத்தி, பாவிகளின் ரத்தம் படிந்ததால் எனக்கு பாவம் வந்து சேருமோவென அச்சமா இருக்கு என சூலம் தன் கவலையை சிவனிடம் சொன்னது.


கோபம், காமம், பதற்றமில்லாம அதேநேரம் சோம்பியிராமல் சாந்தமும், பிரியமுமாய் நல்ல குணத்துடன் இருப்பது சத்வ குணம்.  மிகுந்த பதட்டம், காமம், சட்டென்று உணர்ச்சிவயப்படும் குணத்துடன் இருப்பது ரஜஸ், சோம்பல், எதையும் எளிதில் புரிந்து கொள்ளாமை, மந்தபுத்தியுடன் இருப்பது தாமஸ குணம்.  சத்வ, ரஜஸ், தாமச குணங்களை உந்தன் மூன்று கூர்முனை  குறிக்கின்றது. சிவபெருமான் இந்த மூன்று குணங்களையும் கடந்த, நிர்குண பிரம்மம் என்பதையே இந்த மூவிதழ் சூலமாகிய நீ சுட்டிக்காட்டுகிறாய். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய செயல்களையும் ஒழிக்ககை என் கையிலும், பார்வதி கையிலும் இருக்கிறாய். எங்கள் இருவர் கையிலும் மட்டுமில்லாமல் தீமையை அழிக்கும் எல்லா கடவுளின் கைகளிலும் பாச, அங்குசத்தோடு நீயும் இருப்பாய். அத்தனை சிறப்பு வாய்ந்த உன்னை பாவம் பீடிக்குமா?! உன் மனக்குறையை போக்க, தைமாத அமாவாசையன்று சூலாயுதம் தரித்த சிவசக்தி ரூபத்தை வழிபடுபவர்களுக்கு முக்தியை அளிப்போம் என அருளினார்.  



தை அமாவசை அன்று காலையில் எழுந்து நீராடி பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி திருநீறு அணிந்து, பின்னர் மனத் தூய்மையுடன் திரிசூலத்தை ஏந்தியிருக்கும் சிவனை மனதில் நிறுத்தி, பார்வதியுடன் இருக்கும் ஈசனின் மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் சிவாலயத்திற்குச் சென்று சிவலிங்கத்தை தரிசிப்பதுடன், ஈசனின் அடியவர்களுக்கு தட்சணை அளித்து, அவர்களுடன் இணைந்து ஒருவேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். இவ்விரதத்தை முறையாக பின்பற்றினால் செல்வம் சேரும். இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் சுகமான இறைவனின் திருப்பாதங்களை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.


மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு இந்த விரதமிருந்து காலநேமின்ற கொடிய அரக்கனை அழித்தார் என்கிறது புராணங்கள். ஒருமுறை மகா விஷ்ணுவுக்கு ஏற்பட்ட தலைவலியும்  இந்த விரதத்தை அனுஷ்டித்த காரணத்தால் விலகியது. பிரம்மதேவரும் இந்த விரதத்தை மேற்கொண்டு, தனக்கு ஏற்பட்ட வயிற்றுவலியை தீர்த்துக் கொண்டார். பரசுராமர், இந்த விரதத்தை மேற்கொண்டுதான், ஆயிரம் கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜூனனை வெற்றி கொண்டார் என நம் புராணங்கள் சொல்லுது. 


திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சூல விரதம் கொண்டாடப்படுது. அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்படும். கோவில் தீபவெளிச்சத்தில் மிதக்கும். 


தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் இருக்கிறது அலங்காரவல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில். இங்கு தை அமாவாசை அன்று சூல விரத வழிபாடு விமரிசையாக நடைபெறும். இந்த ஆலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றுக்கும்  சிறப்பு மிக்க ஆலயமாகும். அஸ்திரதேவர் எனப்படும்  திரிசூல தேவர், திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும், தான் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற வரத்தை இறைவனிடம் பெற்ற தலம் இது.. சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்ட ஆலயம் இது. ஆலயத்தின் வெளிவாசலில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார். அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை சுத்தம் செய்து கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னதானம் வழங்குதல், தான தர்மங்கள் செய்தல், திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி போன்றவற்றை செய்து வந்தால், உலகத்தில் யாரும் செய்திராத தவப்பயனும், ஒப்பற்றயாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிடைக்கும் என்று சொல்லப்படுது.


 இன்றைய தினம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முக்கியம்.  இந்த விரதத்தை அனுஷ்டித்தால் எதிரிகளின் தொல்லை அகலும், விளையாட்டில் சிறந்து விளங்கலாம். முக்தி கிடைக்கும்.


நன்றியுடன்,
ராஜி.
.

Monday, January 15, 2018

கணவன் மனைவி சண்டைக்கெல்லாமா திருவிழா?! - திருவூடல் திருவிழா


கணவன் மனைவி சண்டை வந்தா, அதை நாலு சுவத்துக்குள் முடிச்சுக்கனும்.  அதைவிட்டு அடுத்தவங்களுக்கு தெரியுற மாதிரி சண்டை போட்டா அது கேலிக்குரியதா மாறி, அவமானப்பட நேரிடும். இது சாதாரண மானிடருக்கு ஏற்படும் நிலை. அதுவே, உலகத்தை இயக்கி ஆளும் அம்மையப்பனுக்கிடையில் சண்டை வந்தா என்னாகும்?!  ஊரே திருவிழாக்கோலம் பூணும். அவங்க சண்டையிலிருந்து நமக்கு ஒரு பாடமும் கிடைக்கும். சரி என்ன சண்டை, அதிலிருந்து நமக்கு என்ன பாடம்ன்னு பார்க்கலாமா?!


பிருங்கி மகரிஷி சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லைன்ற நினைப்பு கொண்டவர். அதனால, சிவனை மட்டுமே வழிபடுவார். அருகிலிருக்கும் அம்பாளைகூட ஒரு பொருட்டா நினைக்க மாட்டார். இதனால், உள்ளுக்குள் பிருங்கி மகரிஷிமீது ஒருவித காழ்ப்புணர்ச்சியில் இருந்தார் அம்பாள்.  ஒவ்வொரு வருசமும் தை மாதம் 3ம் நாள் பிருங்கி முனிவருக்கு கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பது வழக்கம். தன்னை மதிக்காத பிருங்கிக்கு காட்சியளிக்கக்கூடாதுன்ற எண்ணத்துல அம்பாள் இருந்தாள். 


பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்கும் நாள் வந்ததும்   உடல் முழுக்க நகைகளைப் போட்டுக்கிட்டு, கிரிவலம் போகத் தயாராகிறார் அண்ணாமலையார்.  இதைக்கண்ட அன்னை உண்ணாமுலையம்மன்,  ‘ஊரெல்லாம் திருட்டு பயம். அதிலும் கிரிவலப்பாதை  காடுகளால் ஆனது. இப்படி பொட்டிக்குள் இருக்குற  நகைகளெல்லாம் போட்டுக்கிட்டு போகாதீங்க’ ன்னு கணவனுக்கு  அம்மன் அவரை தடுக்குறாங்க,  ஏதேதோ சொல்லி, மனைவியை சமாதானப்படுத்திட்டு   அண்ணாமலையார்,  நகையை போட்டுக்கிட்டு கிரிவலம் போய்ட்டார்.  




கிரிவலம் முடித்து, மறுநாள் காலையில் இறைவன் வரும்போது அம்பாள் அனுப்பிவித்த மாயையால்  நகைகள் திருடு போயிருந்தன. இதை சக்கா வச்சு. ‘ நான் சொன்னதை கேட்காததால பார்த்தீங்களா?!, நகைகள் திருடு போயிடுச்சு. சவரன் என்ன விலை விக்குதுன்னு சொல்லி, நகை இல்லாம வீட்டுக்குள்ள வராதீங்க’ ன்னு கடிஞ்சுக்கிட்டு உற்சவ மூர்த்தியின் அறையைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டாங்க. அருணாச்சலேஸ்வரர் குமர கோவிலில் தங்கி அன்றிரவை கழித்தார்.  மறுநாள் காலை, அம்பாளை, அண்ணாமாலையார்  சமாதானப்படுத்த, அண்ணாமலையாருக்கு துணையாய் தேவாதி தேவர்கள், அவரது பக்தர்களோடு, சுந்தரமூர்த்தி நாயனாரும் இறைவனுக்காக பரிந்து பேசுறாங்க. ஒருவழியா அம்மனும் சமாதானமாகி, பிரிஞ்சிருந்த குடும்பம் ஒன்னு சேர்ந்தது. 

இந்த ஊடலும், கூடலுமான அற்புத நிகழ்வை நாமும் கண்டு களிக்கனும்ன்னு, வருசா வருசம், திருவண்ணாமலையில் தைமாதம் 2ம்நாள், அதாவது மாட்டுப்பொங்கல் அன்னிக்கு கோலாகலமா கொண்டாடப்படுது.  உண்ணாமுலையம்மனிடம் , சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானப்படுத்த, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனின் உற்சவமூர்த்திகள் இரண்டும் குறுக்கும் நெடுக்குமாக   நகர, பக்தர்கள் சூழ திருவூடல் நிகழ்ச்சி நடைப்பெறும். அன்றிரவு, அண்ணாமலையார் கிரிவலம் செல்வார்.  மறுநாள் காணும் பொங்கலன்று காலை கோயிலில் உள்ள கருவறை மண்டபத்தில் உள்ள உற்சவமூர்த்தி சன்னதியில் மறுஊடல் என்ற உற்சவம் நடைபெறும்.


திருவண்ணாமலையில் 2016ல் நடைப்பெற்ற திருவூடல் நிகழ்ச்சியின் காணொளி காட்சி.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பின், திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுது. இந்த உற்சவம் மாட்டுப்பொங்கல் அன்னிக்கு மாலை 6 மணிக்கு நடக்கும்.  இந்த உற்சவத்தில் கலந்துக்கிட்டா, பிரிஞ்சிருக்கும் கணவன், மனைவி ஒன்றுப்படுவர்.  கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். கணவன் செய்யுற எதையும் மனைவி காரண காரியமில்லாம் எதிர்க்க கூடாது. அதேப்போல, மனைவிக்கு பிடிக்காத எதையும் கணவனும் செய்யக்கூடாது. அதுக்காக, அவ சொல்றதை அப்படியே ஏத்துக்கக்கூடாது. காரண காரியம் ஆராய்ஞ்சி அவளுக்கு எடுத்து சொல்லி இருவருமா சேர்ந்து அந்த காரியத்தை செய்யனும்.

இது 900வது பதிவு.. என்னைய வாழ்த்துங்க சகோ’ஸ்

தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


நன்றியுடன்,
ராஜி.

Saturday, January 13, 2018

புது மனிதனாய் அவதாரமெடுக்க உகந்த நாள் - போகி பண்டிகை


பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரங்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.  இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. 



போகி அன்னிக்கு நம்மோட பித்ருக்கள் நம் வீட்டுக்கு வருவதா சாஸ்திரம் சொல்லுது. அதனால, அவர்களுக்குப் பிடித்த உணவைப்   படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்கனும்.  இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட வழக்கம். ஆனா, இப்ப அதிகாலையில் எழுந்து குப்பைகளை கொளுத்துவதோடு முடிஞ்சு போச்சுது. வெறும் குப்பைகளை மட்டும் எரிக்குறதில்லை இந்த பண்டிகையின் நோக்கம்.   இன்றைய தினத்தில் நம் தீய எண்ணங்கள், குணங்கள் எரித்து,   தைப் பிறக்கும் நாள் புதிய எண்ணங்களுடன் ஒரு புதிய மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்பதே இப்பண்டிகையின் நோக்கம். 




இந்திரனுக்கு 'போகி' என்றொரு பேரு இருக்கு. இந்திரன் மழைக்குரிய கடவுளா நம் புராணங்கள் சொல்லுது. அதனால,  அவரை வழிப்பட்டால், மழை பொழிந்து பயிர்கள் செழிக்கும் என  மக்கள் நம்பினர். நீரின்றி அமையாது உலகுங்குறதால, உலக இயக்கத்துக்கு முக்கிய காரணியான வருணபகவானுக்கு முதல் நாள் நன்றி சொல்லி கொண்டாடுகின்றனர். 


 பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து வாங்கி வருவதுன்னு சகலரும்  பிசியா இருப்பாங்க. விவசாயிகள் விளைப்பொருட்களின் அறுவடையிலும், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்வோர், நகை செய்வோர்ன்னு சகலரும் தங்கள் தொழிலை கூடுதல் நேரமெடுத்து செய்வதால் அவர்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது



போகி பண்டிகை கொண்டாடும் வழக்கம், நம்ம ஊர், ஆந்திரா, தெலுங்கானா, வடநாடுகளிலும் உண்டு. இன்றைய தினத்தில் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூவை சொருகி வைப்பர். வைகறையில் 'நிலைப்பொங்கல்' வைப்பாங்க.  வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றை நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். இதை வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் செய்து படைப்பாங்க. ஒருசிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்தும் வழிபடுவாங்க.  போகி எரிக்கும்போதும், நிலைப்பொங்கல் வைக்கும்போதும் சிறுவர்கள் பறை மாதிரியான மேளத்தை அடிப்பாங்க. 

ஆனா, இன்னிக்கு பண்டிக்கைக்கான நோக்கம் மறைந்து வெறும் கொண்டாட்டமே மிச்சம் நிக்குது. போகி கொண்டாடுகிறேன்ன்னு சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துறது வழக்கமாகி போச்சு. இப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி, ஈகோ இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம்.   போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறாம பார்த்துப்போம்.  நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கலாம்.  போனது போகட்டும். இனி வரும் காலம் நல்லதாய், சந்தோசமாய் அமையட்டும். 

எல்லோருக்கும் போகி தின வாழ்த்துகள்.

நன்றியுடன்,
ராஜி.

Friday, January 12, 2018

ஆஞ்சநேயரின் தசாவதாரம் - புண்ணியம் தேடி....

அனுமனின் பிறப்பு, உருவ அமைப்பின் காரணம்லாம் அனுமன் ஜெயந்தி பதிவில் பார்த்திருக்கோம். சிவன், விஷ்ணு, வினாயகர், அம்பாள் மாதிரி அனுமனுக்கும் பல வடிவங்கள் எடுத்ததா புராணங்கள் சொல்லுது. அனுமன் எடுத்த பல்வேறு வடிவங்களில்  மிக முக்கியமானதான 9 வடிவங்கள்தான் பெரும்பான்மையான கோவில்களில் காட்சியளிப்பார். அதனாலதான், இவருக்கு  நவ வியாக்ரண பண்டிதன் என்ற பேரு உண்டாச்சுஅந்த ஒன்பது வகையான வடிவ அமைப்புகளின் பெயர், காரணம் பத்தி இன்றைய ஆன்மீக பதிவில் பார்க்கலாம்....





பஞ்சமுக ஆஞ்சநேயர்...

ராவணனுக்கும், ராமனுக்குமிடையேயான போரில் ராவணன் நிராயுதபாணியனான். எடுத்த எடுப்பிலேயே எந்த தெய்வமும் தண்டனை கொடுத்துடாது. அதனால், ராவணன் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்த ராமன், இன்று போய் நாளை வான்னு அவனை அனுப்பினார். ஆனா, ராவணன் அரக்கன் வம்சமாச்சே! அவனாவது திருந்துறதாவது?! அதனால, மயில் ராவணன்ன்ற இன்னொரு அசுரனனோடு கைக்கோர்த்துக்கிட்டு போருக்கு கிளம்பினான். அந்த மயில்ராவணன் ஒரு கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான். அந்த யாகம் நடந்தா ராம லட்சுமணர் உயிருக்கு ஆபத்து வரும்ன்னு உணர்ந்த விபீஷ்ணன் ,யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும்முன் நரசிம்மர்ஹயக்கிரீவர்வராகர் ,கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற, தங்களின்  சக்தியை அனுமனுக்கு அளித்தனர்.   ஆஞ்சநேயரும் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார் .  இவரை  வழிபட்டால்,  நரசிம்மனின் அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி லட்சுமி கடாட்சமும் ஹயக்கிரீவர் அருளால் அறிவாற்றலும்வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான ஆபத்து விலகும் தன்மையும்ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி ,சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை .


நிருத்த ஆஞ்சநேயர்...

போருக்கு கிளம்பும் பாவனையோடு இருப்பவர்.  ராம-ராவணனுக்கு இடையேயான போரில், ராமனின் பக்கமிருந்து கடுமையாய் போரிட்டவர் அனுமன். அப்படி உக்கிரமாய் போரிட்ட அனுமனின் தோற்றத்தை வணங்கினால்  வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும், எதிரிகள் தொல்லை நீங்கும். இனம்புரியாத பய உணர்ச்சி நீங்கும். தைரியம் பிறக்கும்.


கல்யாண ஆஞ்சநேயர்....
ஆஞ்சநேயர் பிரம்மச்சாரியாதான் நமக்கு தெரியும். ஆனா, அவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் உண்டு. சஞ்சீவி மலையினை கொண்டு வரும் சமயம், கடல்மேல் பறந்துக்கொண்டிருந்த அனுமனின் வியர்வை கடலில் சிந்தி, கடலிலிருந்த கடல்கன்னி ஒருத்தி அதை பருக, அதனால் அவளுக்கு ஒரு மகன் பிறந்ததாகவும், ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும், அவளை மணந்ததாகவும் ஒரு கதை உண்டு.  அனுமனின் மனைவி பெயர்  சுவர்ச்சலா, அவர் மகனின் பெயர் மகரத்வஜன். மனைவியுடன் அனுமன் இருக்கும் தோற்றமே கல்யாண ஆஞ்சநேயர். இவரை வணங்கினால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். திருமணப்பேறு கிடைக்கும். அனுமன் கல்யாண கதை பத்திய இன்னொரு கதை இங்க இருக்கு. 



பால ஆஞ்சநேயர்....
கிருஷ்ண பரமாத்மா போல ஆஞ்சநேயரும் பலவித சேட்டைகள் செய்தாராம். அவர் தாய் அஞ்சனையுடன் இருக்கும் சிறுவயது தோற்றமே  பால ஆஞ்சநேயர். இவரை வணங்கினால் குழந்தைப்பேறு கிடைக்கும். 



வீர ஆஞ்சநேயர்...
குறும்புத்தனம் நிறைந்த சிறுவயது ஆஞ்சநேயர் ஒருமுறை, தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்களின் தவத்தை கலைத்தார். அதனால் கோவம்கொண்ட முனிவர்கள் சாபமிட்டனர். சாபத்தின் காரணமாக தனது சக்தி என்னவென்பதை மறந்தார். ராமர் சந்திப்பு நிகழ்ந்து, கடல் கடந்து இலங்கைக்கு சென்று சீதையை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அனுமனிடம் கொடுக்கப்பட்டது. தன்னால் இது முடியுமாவென அவர் மலைத்திருக்கும்போது,  ஜாம்பவான், ஆஞ்சநேயர் பிறப்பு பற்றி கூறி அவரது சக்தியினை அவருக்கு எடுத்துச்சொல்ல, தனது சக்தியினை உணர்ந்த ஆஞ்சநேயர் எடுத்த விஸ்வரூப தோற்றமே வீர ஆஞ்சநேயர். இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை அகலும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும்.



 பக்த ஆஞ்சநேயர்....

கடவுளை மனிதர்கள் வணங்குவது  இயல்பு. ஆனா, தன்னை வணங்க வரும் பக்தர்களை வணங்குவது ஆஞ்சநேயர் மட்டுமே! அப்படி ஏன் வணங்குறார்ன்னா, ஆஞ்சநேயரை வணங்க வந்தாலும் ராமஜெயம் சொல்லித்தான் பக்தர்கள் வணங்குவர். ராமரை   ஒலி, ஒளி வடிவில் என எங்கு கண்டாலும் கேட்டாலும் ராமரே அவர்முன் தோன்றுவதாய் ஆஞ்சநேயரது நம்பிக்கை. ராமருக்கு மரியாதை செய்யும் விதமா ஆஞ்சநேயர் வணங்குவார். அவரது கண்ணோட்டத்தில் ராமநாமம் உச்சரிக்கும் நாமும் ராம அவதாரமே! அதனாலதான் நம்மையும் வணங்கும் தோற்றம் உண்டாச்சு. இந்த தோற்றத்துக்கு பக்த ஆஞ்சநேயர் என்று பேரு. இந்த கோலத்திலிருக்கும் அனுமனை பரவலா அதிகம் பார்க்கலாம். இவரை வணங்கினால் எத்தனை பெரிய பதவி வந்தாலும் பணிவோடு நடக்கும் குணத்தை தரும்.

யோக ஆஞ்சநேயர்....
ராமாயணத்தின் முடிவில், தங்களது அவதார நோக்கம் முடிந்ததென ராமர், லட்சுமணர், சீதை உட்பட அனைவரும் தங்களது பூத உடல் நீங்கி வைகுண்டம் சென்றனர். ஆனால், அனுமன் மட்டும் அப்படி போகலை. ராமநாம பூலோகவாசிகளால் உச்சரிப்பதை கண்டு, இங்கயே தங்கியிருந்து மகிழ்ந்திருக்க தான் வரவில்லையென அவர்களோடு செல்ல மறுத்துவிட்டாராம்.  ராம நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். அவ்வாறு யோகத்தில் இருக்கும் அவரது தோற்றமே யோக ஆஞ்சநேயர் ஆகும். ராம நாமம் சொல்லி இவரை வணங்கினால் கேட்ட வரம்  கிடைக்கும். 
சிவ பிரதிஷ்டை ஆஞ்சிநேயர்.....
ராவணனை கொன்றதால ராமருக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்தது. அதனை போக்க, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் வைத்து பூஜிக்க வேண்டி, அனுமனிடம் காசிக்கு சென்று சிவலிங்கத்தை எடுத்து வரச்சொன்னார்.  ஆனா, அனுமன் லிங்கம் கொண்டு வர நேரமானதால், சீதை கடல் மண்ணால்  சிவலிங்கத்தை உண்டாக்கி பூஜை செய்து முடித்தனர். காலம் கடந்து வந்த ஆஞ்சநேயர் தன்னால் நேரத்துக்கு வரமுடியவில்லையென தன்னைத்தானே நொந்துக்கொண்டார்.  அவரது வாட்டத்தை போக்க எண்ணிய ராமர், ஆஞ்சநேயர் கொண்டு வந்த சிவலிங்கத்தையும் வைத்து பூஜித்தார். ராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ஆஞ்சநேயர் வணங்கும் கோலமே சிவபிரதிஷ்டை ஆஞ்சநேயர். இவரை வணங்கினால், சகல தோஷமும் நீங்கும்.

சஞ்சீவி ஆஞ்சநேயர்...
ராவணுடனான போரில்  ராவணன் விட்ட அம்பு கக்கிய நஞ்சால், ராம லட்சுமணன் மயக்கமுற்றனர். அவர்களது மயக்கத்தை தீர்க்க, சஞ்சீவி மலையிலிருக்கும் குறிப்பிட்ட மூலிகையை பறித்துக்கொண்டு வர ஆஞ்சநேயரை அனுப்பினார் விபீஷ்ணர். சஞ்சீவி மலைக்கு சென்ற ஆஞ்சநேயர் மூலிகை எதுவென தெரியாமல் குழம்ப, நேரம் கடந்து செல்வதை உணர்ந்து, சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்தார். அப்படி மலையும் கையுமாம் இருக்கும் தோற்றமே சஞ்சீவி ஆஞ்சநேயர். இந்த தோற்றமும் பரவலா எல்லா இடத்திலயும் நாம் பார்க்கலாம். இவரை வணங்கினால் நோய் நொடிகள் அண்டாது. 

மேற்சொன்ன 9 வடிவங்கள் மட்டுமில்லாம தன் நெஞ்சை கிழித்து ராமர் சீதை இருப்பதை உணர்த்தும் தோற்றமும் பரவலா நாம காண்பது.   இன்னிக்கு பதிவில் அனுமனின் தோற்றக்காரணமும், அத்தோற்றத்தை வணங்கினால் என்னேன்ன பலன் கிடைக்கும்ன்னு பார்த்தோம். அனுமனது பிறப்பு பத்தி ஏற்கனவே போட்ட பதிவை படிக்காதவங்க இங்க போய் பார்த்துக்கிடுங்க.


ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்...

ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாய
லங்கா வித்வம்ஸனாய; அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய, 
ஸாகினீடாகினீவித்வப்ஸனாய, கிலகிய பூபூ காரினே
விபீஷணாய, ஹனுமத் தேவாய, ஓம் ஐம்
ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா

அனுமனை வணங்குவோம்... எல்லா நலன்களும் பெறுவோம்...


நன்றியுடன்,
ராஜி.