Tuesday, August 20, 2013

மரணம் கூட இனிக்கும்!! - படித்ததில் பிடித்தது
அடி வயிற்றை பிசைந்து, 
நாட்கள் தள்ளிப் போய் 
கண்கள் இருண்டு, செய்தி ஒன்றை சொன்னது... 
தாயாக வேண்டி

மாதங்களை ரசிக்க துவங்கினேன்... 

ஆசைகள் கோடி சேர்த்து வைத்து 
மகளாய் உன்னை பெத்தெடுத்தேன்...
முதல்முதலாய் உன்னை பார்த்த போது
ரோஜா குவியல் ஒன்று 
என் அணைப்புக்காக அழுதது...!

ராத்தூக்கம் மறந்திருந்தேன்...
உன்னை மார் மேலே தூங்க வைத்தேன்...
அழுகையோடு நீ விழித்தால் 
வாரியணைத்து அமுதூட்டினேன்...

தரை மீது உன் பாதம்தான்  பட்டது!!
ஆனால், நடை பயின்றது நான் தான்!!
உன்னோடு சேர்ந்து ஊர்ந்துக் கொண்டே 
நிலவை பிடிக்க கை நீட்டினேன்...

கண்மணிக்குள் வைத்து உன்னை அடைகாத்தேன்... 
ஒரு எறும்பு உன்னை தீண்டினால் உயிர் வெறுத்தேன்...
அம்மா என்றாய், சிந்தை மறந்தேன்...
அப்படியே சுவர்க்கத்தில் ஒரு சுற்று போய் வந்தேன்... 

வளர்ந்து கொண்டே இருந்தாய், 
நான் உன் குழந்தையாய் மாறிக்கொண்டே இருந்தேன்... 
எனக்காக ஒரு தோழி என்னோடு உறைகிறாள்....
பால்யம் நோக்கி என் நாட்கள் 
நகர்ந்துக் கொண்டே இருந்தது... 

தண்ணீர் பானை உடைத்தாய், 
மண் அள்ளி வாயில் போட்டு கொண்டாய்... 
அடிக்க விரட்டினால் ஓடி வந்து 
என்னிடமே அடைக்கலம் தேடி
என் கோவத்தை கொஞ்சலாய் மாற்றினாய்... 

அம்புலி மாமா கதை கேட்டாய், 
நான் அன்னை தெரசா கதை சொன்னேன்... 
அலிபாபா திருடர்களுக்கிடையில் 
உன்னை ஜான்சி ராணியாய் உலவ விட்டேன்...

நீ பள்ளி சென்றாய், நான் அரிச்சுவடி படித்தேன்...
நான் தான் உன் வாசலென்றாய்... நீயே உலகமானேன்...
நீ பருவம் அடைந்த நாளில் 
நான் பொறுப்பு கொஞ்சம் உணர்ந்தேன்.. 
என் மறுஜென்மம் உன் வயிற்றில் 
இடம்பிடித்துப் போட்டது... 

பூக்கள் கொய்ய நீ யோசித்தாய்...
முட்களோடு உன்னை தோழியாக்கினேன்...
தேன் குடிக்க நீ பயந்தாய்...
தேனீ கூட்டத்தில் உன்னை ராணியாக்கினேன்....

கூட்டுப்புழு வாழ்க்கை உடைத்து உன்னை 
பட்டாம்பூச்சியாய் பறக்க விட்டேன்...
திசை மாறி பறந்திடாமல் 
என் அன்பை மட்டும் விசையாய் வைத்தேன்... 

உன்னை எனக்கு கொடுத்து 
நெஞ்சில் பால் வார்த்த இறைவன், 
ஒருநாள் எரிக்கல் குழம்பு நீட்டினான்... 
நீ உயிரூற்றி வளர்க்கும் செடி வாட போகிறதென 
எனக்கோர் எச்சரிக்கை விடுத்துச் சென்றான்... 

காலத்தின் கோலத்தை என்னவென்பது?
மரணம் என்பது அழிவில்லாதது...
எனக்கு முன்பே அது உனக்கென்றால் 
எப்படி நானும் அதை ஜீரணிப்பேன்?

என் மகள் அபரிதமானவள் என்றேன்...
உன் மூளையும் அபரித வளர்ச்சி கண்டதோ? 
இதற்கு தானா உன்னை பெற்றெடுத்தேன்?
ஆசை ஆசையாய் உயிர் வளர்த்தேன்?

வாடிய மலராய் உன்னை பார்த்தேன்... 
வாடாதே என எனக்கே நான் ஆறுதல் கொண்டேன்...
அடுத்த கட்டங்கள் யோசித்தேன்...
இறைவன் ஊற்றிய அக்னிக்குள் 
உன்னை அக்னி குஞ்சென வெளியெடுத்தேன்.. 

யாருக்கு இல்லையடி மரணம்? 
அந்த எமனை நீ ஜெயித்திடு...
ஆயிரம் வேலைகள் உனக்கிருக்கு... 
அதற்குள் உன் விடியல் புதைந்திருக்கு... 
புன்னகையால் அதை விடிய விடு...

உன் வலிகளை நான் தாங்கி,
அவற்றை எதிர்க்கும் திறனை உனக்கு கொடுத்தேன்... 
மீண்டும் எழுந்து வா....
உன்னை வெல்ல எமனுக்கே 
அதிகாரமில்லையென்று சவால் விடு...

பூக்கள் வாடலாம் செல்லமே, 
நீ வாசனையாய் உறைந்து விடு... 
பருத்திசெடிகள் அழிவதில்லை கண்ணே 
நீ ஆடைகள் தந்து விட்டுப் போ...
செல்லும் இடங்கள் அத்தனையிலும் 
நீ அன்பை விதைத்து விட்டுப் போ... 
வாழ்வியல் இதுதானென்று புதிதாய் 
பாடங்கள் படி...

இதோ, இன்று இயற்கை, இன்னுமோர் 
பரீட்சை உனக்கு வைத்தது...
இம்முறை பகடையாய் நான்.... 
வாகன உருவில் என்னை சாய்த்து விட்டுப் போகிறது... 

வீழ்கிறேன், கைகள் உன்னைப் பற்றிக்கொள்ள துடிக்கிறது...
காற்றில் அலைபாயும் என்னுயிர் 
உன்னை தான் தேடுகிறது...
இதோ நீ வருகிறாய்... 
கண்மணிக்குள் உறைகிறாய்...
இங்கு நீ போராட,
என் மரணம் உனக்கு கற்றுத் தரும்... 

இன்னமும் உன்னை சுற்றிக் கொண்டிருக்கிறேன்
உன் உயிரை தாங்கிக் கொண்டிருக்கிறேன்.. 
மரணம் கொடியதல்ல மகளே 
உனக்காக அது ஆகி போனால்.... டிஸ்கி: முகநூல்ல படிச்சேன்!! படிச்சதும் பிடிச்சு போச்சு. அங்கங்க பட்டி டிங்கரிங் பார்த்து பதிவா போட்டாச்சு!!16 comments:

 1. தரை மீது உன் பாதம்தான் பட்டது!!
  ஆனால், நடை பயின்றது நான் தான்!!

  பூக்கள் கொய்ய நீ யோசித்தாய்...
  முட்களோடு உன்னை தோழியாக்கினேன்...
  தேன் குடிக்க நீ பயந்தாய்...
  தேனீ கூட்டத்தில் உன்னை ராணியாக்கினேன்....

  சந்தோஷமாய் வாசித்துக் கொண்டே வர கடைசியில்..

  இங்கு நீ போராட,
  என் மரணம் உனக்கு கற்றுத் தரும்...

  கடவுளே.. ஏதேனும் ஒரு நிகழ்வின் பாதிப்பா.. உலுக்கிப் போடுகிறது முழுக் கவிதையும்.

  ReplyDelete
  Replies
  1. நான் எழுதலை. நிஜமா?!ன்னும் தெரியலை !!

   Delete
 2. முகநூல்ல படிச்சேன்!! படிச்சதும் பிடிச்சு போச்சு. அங்கங்க பட்டி டிங்கரிங் பார்த்து பதிவா போட்டாச்சு!!

  யார் எழுதினதுன்னு போட்டிருந்தா.. கை குலுக்கி இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. முகநூல்ல ”உணர்வுகள்”ன்ற ஒரு பக்கத்துல இருந்துச்சு. ஆனா, லிங்க் எடுத்து வைக்காம விட்டுட்டேன்

   Delete
 3. மனதைத்தொட்டது... பட்டி டிங்கரிங் பார்த்து நல்லதொரு படைப்பை படிக்கும், ரசிக்கும் வாய்ப்பை தந்துள்ளீர்கள் அக்கா..

  ReplyDelete
  Replies
  1. கவிதையை படித்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி தம்பி

   Delete
 4. "அடிக்க விரட்டினால் ஓடி வந்து
  என்னிடமே அடைக்கலம் தேடி
  என் கோவத்தை கொஞ்சலாய் மாற்றினாய்... "
  நல்லதொரு படைப்பை படிக்கும், ரசிக்கும் வாய்ப்பை தந்துள்ளீர்கள்

  ReplyDelete
 5. மரணம் கொடியதல்ல மகளே
  உனக்காக அது ஆகி போனால்....
  .........நல்ல வரிகள் ...சிந்தனைக்குரியது

  ReplyDelete
 6. அப்பா.. உணர்ச்சிமயமாய் இருந்தது..

  ReplyDelete
 7. கலங்க வைத்தது சகோதரி...

  முகநூல் இணைப்பையும் கொடுக்கவும்...

  ReplyDelete
 8. ஆதலால் பயணம் செய்வீர்...! Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

  ReplyDelete
 9. ஆழமான உணர்வு பூர்வமான
  அருமையான கவிதை மொழிமாற்றம் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. நல்ல கவிதை! யாராவது வந்து காப்பிரைட் அது இதுன்னு சொல்லப்போறாங்க! நல்ல விஷயங்கள நாலு பேருக்கு பரப்புவது ஒன்னும் குற்றமில்லை!

  ReplyDelete
 11. படித்த ஒரு நல்ல கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள். அருமையான கவிதை தந்தமைக்கு..

  ReplyDelete
 13. நல்லாத்தான் டிங்கரிங் பார்த்திருக்கிறீங்க. த.ம.7

  ReplyDelete