Showing posts with label மகள். Show all posts
Showing posts with label மகள். Show all posts

Tuesday, August 20, 2013

மரணம் கூட இனிக்கும்!! - படித்ததில் பிடித்தது




அடி வயிற்றை பிசைந்து, 
நாட்கள் தள்ளிப் போய் 
கண்கள் இருண்டு, செய்தி ஒன்றை சொன்னது... 
தாயாக வேண்டி

மாதங்களை ரசிக்க துவங்கினேன்... 

ஆசைகள் கோடி சேர்த்து வைத்து 
மகளாய் உன்னை பெத்தெடுத்தேன்...
முதல்முதலாய் உன்னை பார்த்த போது
ரோஜா குவியல் ஒன்று 
என் அணைப்புக்காக அழுதது...!

ராத்தூக்கம் மறந்திருந்தேன்...
உன்னை மார் மேலே தூங்க வைத்தேன்...
அழுகையோடு நீ விழித்தால் 
வாரியணைத்து அமுதூட்டினேன்...

தரை மீது உன் பாதம்தான்  பட்டது!!
ஆனால், நடை பயின்றது நான் தான்!!
உன்னோடு சேர்ந்து ஊர்ந்துக் கொண்டே 
நிலவை பிடிக்க கை நீட்டினேன்...

கண்மணிக்குள் வைத்து உன்னை அடைகாத்தேன்... 
ஒரு எறும்பு உன்னை தீண்டினால் உயிர் வெறுத்தேன்...
அம்மா என்றாய், சிந்தை மறந்தேன்...
அப்படியே சுவர்க்கத்தில் ஒரு சுற்று போய் வந்தேன்... 

வளர்ந்து கொண்டே இருந்தாய், 
நான் உன் குழந்தையாய் மாறிக்கொண்டே இருந்தேன்... 
எனக்காக ஒரு தோழி என்னோடு உறைகிறாள்....
பால்யம் நோக்கி என் நாட்கள் 
நகர்ந்துக் கொண்டே இருந்தது... 

தண்ணீர் பானை உடைத்தாய், 
மண் அள்ளி வாயில் போட்டு கொண்டாய்... 
அடிக்க விரட்டினால் ஓடி வந்து 
என்னிடமே அடைக்கலம் தேடி
என் கோவத்தை கொஞ்சலாய் மாற்றினாய்... 

அம்புலி மாமா கதை கேட்டாய், 
நான் அன்னை தெரசா கதை சொன்னேன்... 
அலிபாபா திருடர்களுக்கிடையில் 
உன்னை ஜான்சி ராணியாய் உலவ விட்டேன்...

நீ பள்ளி சென்றாய், நான் அரிச்சுவடி படித்தேன்...
நான் தான் உன் வாசலென்றாய்... நீயே உலகமானேன்...
நீ பருவம் அடைந்த நாளில் 
நான் பொறுப்பு கொஞ்சம் உணர்ந்தேன்.. 
என் மறுஜென்மம் உன் வயிற்றில் 
இடம்பிடித்துப் போட்டது... 

பூக்கள் கொய்ய நீ யோசித்தாய்...
முட்களோடு உன்னை தோழியாக்கினேன்...
தேன் குடிக்க நீ பயந்தாய்...
தேனீ கூட்டத்தில் உன்னை ராணியாக்கினேன்....

கூட்டுப்புழு வாழ்க்கை உடைத்து உன்னை 
பட்டாம்பூச்சியாய் பறக்க விட்டேன்...
திசை மாறி பறந்திடாமல் 
என் அன்பை மட்டும் விசையாய் வைத்தேன்... 

உன்னை எனக்கு கொடுத்து 
நெஞ்சில் பால் வார்த்த இறைவன், 
ஒருநாள் எரிக்கல் குழம்பு நீட்டினான்... 
நீ உயிரூற்றி வளர்க்கும் செடி வாட போகிறதென 
எனக்கோர் எச்சரிக்கை விடுத்துச் சென்றான்... 

காலத்தின் கோலத்தை என்னவென்பது?
மரணம் என்பது அழிவில்லாதது...
எனக்கு முன்பே அது உனக்கென்றால் 
எப்படி நானும் அதை ஜீரணிப்பேன்?

என் மகள் அபரிதமானவள் என்றேன்...
உன் மூளையும் அபரித வளர்ச்சி கண்டதோ? 
இதற்கு தானா உன்னை பெற்றெடுத்தேன்?
ஆசை ஆசையாய் உயிர் வளர்த்தேன்?

வாடிய மலராய் உன்னை பார்த்தேன்... 
வாடாதே என எனக்கே நான் ஆறுதல் கொண்டேன்...
அடுத்த கட்டங்கள் யோசித்தேன்...
இறைவன் ஊற்றிய அக்னிக்குள் 
உன்னை அக்னி குஞ்சென வெளியெடுத்தேன்.. 

யாருக்கு இல்லையடி மரணம்? 
அந்த எமனை நீ ஜெயித்திடு...
ஆயிரம் வேலைகள் உனக்கிருக்கு... 
அதற்குள் உன் விடியல் புதைந்திருக்கு... 
புன்னகையால் அதை விடிய விடு...

உன் வலிகளை நான் தாங்கி,
அவற்றை எதிர்க்கும் திறனை உனக்கு கொடுத்தேன்... 
மீண்டும் எழுந்து வா....
உன்னை வெல்ல எமனுக்கே 
அதிகாரமில்லையென்று சவால் விடு...

பூக்கள் வாடலாம் செல்லமே, 
நீ வாசனையாய் உறைந்து விடு... 
பருத்திசெடிகள் அழிவதில்லை கண்ணே 
நீ ஆடைகள் தந்து விட்டுப் போ...
செல்லும் இடங்கள் அத்தனையிலும் 
நீ அன்பை விதைத்து விட்டுப் போ... 
வாழ்வியல் இதுதானென்று புதிதாய் 
பாடங்கள் படி...

இதோ, இன்று இயற்கை, இன்னுமோர் 
பரீட்சை உனக்கு வைத்தது...
இம்முறை பகடையாய் நான்.... 
வாகன உருவில் என்னை சாய்த்து விட்டுப் போகிறது... 

வீழ்கிறேன், கைகள் உன்னைப் பற்றிக்கொள்ள துடிக்கிறது...
காற்றில் அலைபாயும் என்னுயிர் 
உன்னை தான் தேடுகிறது...
இதோ நீ வருகிறாய்... 
கண்மணிக்குள் உறைகிறாய்...
இங்கு நீ போராட,
என் மரணம் உனக்கு கற்றுத் தரும்... 

இன்னமும் உன்னை சுற்றிக் கொண்டிருக்கிறேன்
உன் உயிரை தாங்கிக் கொண்டிருக்கிறேன்.. 
மரணம் கொடியதல்ல மகளே 
உனக்காக அது ஆகி போனால்.... 



டிஸ்கி: முகநூல்ல படிச்சேன்!! படிச்சதும் பிடிச்சு போச்சு. அங்கங்க பட்டி டிங்கரிங் பார்த்து பதிவா போட்டாச்சு!!



Sunday, May 13, 2012

தெய்வத்தை விட மேலானவள்......

ன் உயிர் தந்து
என் உயிர்
வளர்த்த தாயே !!

தரணியில் நானும்
அவதாரம் எடுத்திட
துணையாய்
இருந்தவளே !!

ஈரைந்து மாதங்கள்
எனை கருவாய்
வயிற்றில்
சுமந்தவளே !!

பசியால் நீ
வாடிடும் போதும்
நான் பசியறியாது
செய்தவளே !!

நோயினால் நீ
வாடிய போதும்
என் மனம்
நோகாமல்
பார்த்தவளே !!

உன்னை
என்னவென்று
நான் சொல்வேன்...
நீ தெய்வம் என்று
சொன்னால் கூட
உனக்கு அது
இழுக்கு தான்...!!

நீ தெய்வத்துக்கு
மேலே தான்
என் மனதில்...!!
                                                               

ஒரு அன்னையாய் பொறுப்புணர்ந்து, என் அன்னைக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள தாய்மை குணம் கொண்ட அனைத்து  உயிரினங்களுக்கும்  “அன்னையர் தின வாழ்த்துக்களை” சொல்லிக்குறேன்.

Thursday, March 08, 2012

பெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்

                                    
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!
                                     

ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள்
பெண்!!!

செலவு செய்தாலும்
எதோ ஒரு வகையில்
சேர்த்து வைப்பவள்
பெண் ...!

தங்கமாய் வாங்கினாலும்
தன் மகள்
தாலிபாக்கியம் பெற
தந்து விடுகிறாள்
பெண்!!!

புடவை வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்க்கிறாள்
பெண்...!!!

தன் வயிறு காய்ந்தாலும்
மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள்
பெண்...!!!

கணவன் கயவன்
என்றாலும்
காரணம் இவள் என்று
கெட்ட பெயர்
வாங்கிக்கொள்கிறாள்
பெண் ...!!!

கொண்டவன்
குடிகாரன் ஆனாலும்
குடித்துவிட்டு அடித்தாலும்
குடும்பத்தை காக்கிறாள்
பெண்...!!!

பசி என்று
வரும் பிள்ளைக்கு
பச்சை தண்ணீராவது
தந்து விடுவாள்
பெண்...!!!

எப்போதும்...
பெருமையை
பிறருக்கு கொடுத்து
தான் மட்டும்
சிறுமை பெறுகிறாள்
பெண்...!!!
சுட்ட டிஸ்கி: 
                       
 இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மைமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தாராம், யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்களாம். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்... டிஸ்கி ஒரு வலைப்பூல சுட்டது. வலைப்பூவின் பெயர் நினைவில்லை. அவருக்கு என் நன்றி

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!