Wednesday, June 18, 2014

ஞாபகம் வந்ததே! ஞாபகம் வந்ததே! - மௌனச்சாட்சிகள்

இதுவரைக்கும் மௌனச்சாட்சிகளில்  புகழ்பெற்ற  மன்னர்களின் கோட்டை கொத்தளங்கள், கல்லறைகள், புராண மாந்தர்களின் நினைவிடங்கள் முதற்கொண்டு வருங்காலத்தில் சென்னை நகரை மேலும் அழகாக்கும் மெட்ரோ ரயில் வரைப் பார்த்தோம். இன்னிக்கு பதிவில் நாமப் பார்க்கப் போகும் இடம் இது எல்லாத்தையும்விட மிக முக்கியமான இடம். வருங்கால தமிழகப் பொன்னேட்டில் பொறிக்கப்படப் போகுமிடம். அதனால, மிஸ் பண்ணாதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க!

சஸ்பென்ஸ் வச்சது போதும் எந்த இடம்ன்னு சொல்லு ராஜின்னு நீங்க கெஞ்சு(மிரட்டு)றது தெரியுது.  அதனால, என்ன இடம்ன்னு சொல்லிடுறேன். நான் ஒண்ணு முதல் எட்டாவது வரை படிச்ச பள்ளியும், ஊரும்..,  என்ன்ன்ன்ன்ன்னாது நீ எட்டாவது வரை படிச்சிருக்கியான்னுலாம் யாரும் சந்தேகப்படாதீங்க. அப்புறம் நான் டிசி, மார்க் ஷீட்லாம் ஃபோட்டோ எடுத்து பதிவாக்கிடுவேன்.


நான் பிறந்தபோது அப்பா அருப்புக்கோட்டை கமுதிக்கு பக்கத்திலிருக்கும் நீராவின்ற ஊர்லதான் வேலைப் பார்த்து வந்தார். அப்புறம் அங்கிருந்து மாற்றலாகி அரக்கோணம் பக்கத்தில் இருக்கும் “வளர்புரம்”ன்ற ஊருக்கு வந்தார். இங்குதான் எட்டாவது வரை படிச்சேன். இன்றுவரை இந்த ஊர் மக்களுக்கு நான் செல்லப் பிள்ளைதான். நான் அங்கிருந்து வந்து கிட்டத்தட்ட 25வருசமாகிடுச்சு. ஆனாலும் அவங்க வீட்டு விசேசங்களுக்கு அழைப்பு வரும். கெட்டச் செய்தி பற்றிய தகவலும் வந்துடும். அப்படிதான் போன வாரம் என்னை வளர்த்தவரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம்ன்னு போன் பண்ணி கூப்பிட்டார். அந்த ஊருக்குப் போயும் கிட்டத்தட்ட 15 வருசமாச்சு. பழைய நினைவுகள் நெஞ்சில் அலையாட, சில தோழிகளை சந்திக்க இதான் சான்ஸ்ன்னு சின்ன பொண்ணைக் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டேன். திருத்தணில இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தணிகைப்போளூர்ன்ற ஊரில் இறங்கி பத்து கி.மீ தூரம் உள்ளே போனால் இந்த ஊர் வரும்.

இது நான் படிச்ச ஆரம்ப பள்ளிக்கூடம். இங்க 5 வரை படிச்சேன். அப்போலா பள்ளியில் சேர, ஒரே தகுதி..., தலைமீது வலது கைவைத்தால் இடதுகாது கைக்குப் படனும்ங்குறதுதான். இப்ப மாதிரி ஏ,பி,சி.., 10 திருக்குறள், கலர்ஸ், பழங்கள், காய்கறிகள்லாம் சொல்லனுங்குறது தகுதியாய் இருந்திருந்தா நான் பள்ளியிலேயே சேர்ந்திருக்க மாட்டான்.

இந்த ஊருக்கு வரும்வரை தமிழ் பேசத் தெரியாது. அதனால், அப்பாதான் பள்ளிக்கு கூட்டிப் போய் வருவார். மொழி தெரியாததால யார்கூடவும் சேராம ஒத்தைக் குரங்காய் உக்காந்திருக்கும் என்னைக் கண்டு எதிர் வீட்டு கார்த்திதான் முதன் முதலில் நட்புக்கரம் நீட்டியவன். அது முதல் அவன் இறப்பு வரை நாங்க திக் ஃப்ரெண்டஸ். 

பகிர்ந்துக் கொள்ள ஆளில்லாம என்னைப் பற்றிய பல நினைவுகளை இவ்விடம் மௌனமாய் தனக்குள் அசைப் போட்டு இத்தனை  நாள் தாங்கிட்டு இருந்திருக்கும் போல. நான் போனதும் அத்தனை கதைகளையும் கொட்டித் தீர்த்தது. ஓட்டுக்கூரைன்றதால இப்போ  ஒதுக்கி விடப்பட்டிருக்கும் அந்தக் கூரையின் கீழ்தான் அ, ஆ,இ..., கற்றுக் கொண்டது.  தோழியின் சத்துணவு சாப்பாட்டை வீட்டுக்கு தெரியாம ருசிப் பார்ப்பது. நண்பனின் சில்லு மூக்கை உடைத்தது,அஞ்சாம் வகுப்பு ஆண்டு விழாவுக்காக பரத நாட்டிய உடை மேல் கொண்ட மோகத்துக்காக ஹெட்மாஸ்டர்க்கிட்ட கெஞ்சி கேட்டு ஒப்புதல் வாங்கி, ஒத்திகையின் போது கீழ விழுந்து பல் உடைஞ்ச இடமும் இதான்.


வீட்டுக்கு எதிர்க்கவே ஆரம்ப பள்ளி, ஆறாம் வகுப்புக்கு ஒரு கிமீ தூரத்துல இருக்கும் இந்த உயர்நிலை(அப்போ)  பள்ளிக்கு வரும்போது என்னமோ பிட்ஸ்பிலானில படிக்கப் போற மனநிலை.  ஒரு பக்கம் எலுமிச்சை தோப்பு, ஒரு பக்கம் தென்னையும், கொய்யாவும் சேர்ந்த தோப்பு. அப்பா தரும் 25காசுக்கு அணில் கடிச்ச கொய்யாக்களை கைநிறைய வாங்கி சாப்பிட்டுக்கிட்டே நடப்போம். 

ஆறாவது வகுப்பு சேர்ந்ததும் காதலும் வந்திட்டுது. அழகு, வயசு, சாதி, இனம், கல்யாணமாச்சான்னுலாம் அந்தக் காதலுக்கு தெரியல.  கீழ விழுந்த என்னை தூக்கி, “பாப்பா! நிதானமா வரக்கூடாதா!? இப்ப விழுந்திட்டே பாரு!ன்னு சொல்லி உடை மீதிருந்த மண்ணை தட்டி விட்டதுதான் அக்காதலுக்குண்டான ஒரே தகுதி.. ஒரு ஆசிரியராய் அவர் கடமையை அவர் செய்தார். ஆனா, நாம யாரு!? காதலிக்க ஆரம்பிச்சாச்சு! அந்த காதல் ஒரு மாசம் கூட நிலைக்கல. அவருக்கு மாற்றல் வந்து வேற ஊர் போயிட்டார். விவரம் தெரிஞ்சப் பின் தான் தெரிஞ்சது அப்போ அவருக்கு வயசு 35. என் வயசுல அவருக்கு ஒரு மகன் இருந்ததுலாம். தப்பிச்சார் எங்க பி.ஈ.டி சார்ன்னு நினைச்சுக்கிட்டேன். 

இப்பத்திய பள்ளி  போலலாம் கிடையாது அப்போ. தினமும் காலையில் தமிழ்தாய் வாழ்த்து, திருக்குறள் சொல்றது, கொடியேற்றுதலோடு வகுப்பு தொடங்கி, ஜனகன மண பாடி, கொடியிறக்கி பள்ளி முடியும். பிரேயர் போது பேசவோ, அசையவோ கூடாது. அப்படி எதாவது சேட்டை செஞ்சா வரலாறு ஆசிரியர் பிரம்புதான் பேசும். இன்னிக்கு வாரம் ஒரு முறைக்கூட இப்பத்திய பள்ளிகளில் கொடியேற்றமும், பிரேயரும் கிடையாது. நான் படிச்ச போதுதான் இந்த மேடையை கட்டுனாங்க. அப்போ என் உயரத்துக்கு இருந்துச்சு, இங்கதான் சைக்கிள் பழகப் போயி இந்த மேடையில் இடிச்சு  முட்டிக்கால் பெயர்ந்துச்சு. 

ஆறு, ஏழு, எட்டாவது என மூணு வருசம்  படிச்ச இடம். ஆஸ்பெட்டாஸ் கூரைக்கு கீழ் வகுப்பறைகள் இருக்கக் கூடாதுன்ற அரசாங்க ஆணைக்கேற்ப இந்த இடம் இப்போ வாகனங்கள் நிறுத்துமிடமாகிட்டிருகு. திடீர், திடீர்ன்னு அக்காக்களை வீட்டுக்கு அனுப்புவதன் மர்மம் புரியாம குழம்பி, காரனம் புரிய வந்து நாம எப்போ வீட்டுக்குப் போவோம்ன்னு ஏங்கிய இடம். 
தப்பு செஞ்சாலோ, பாடத்தில் ஃபெயிலானாலோ எதிர்பாலினத்தவர் கையால் குட்டுப் படனுமேன்னு சேட்டைப் பண்ணாம ஒழுங்கா படிச்ச இடம். தோழி எதிரியாகிவிட, அவள் மேல் கொண்ட கோவத்தால், கண்டிப்பான தமிழாசிரியரிடம் அவள் அடிவாங்கனும்ன்னு நல்லெண்ணம் கொண்டு, பரிட்சையின்போது அவளோட தமிழ் புத்தகத்தை எடுத்து எலுமிச்சை தோப்பில் விசிறி அடித்து, மீண்டும் அவள் தோழி ஆன போது, மன்னிப்புக் கேட்ட இடமும் இதே.

நான் படிச்சுக் குப்பைக் கொட்டிய இடமின்று நானில்லாமலே குப்பையாய் கிடக்கு. எல்லா வாத்தியார்களின் செல்லப் பெண்ணாய் முடிசூடா இளவரசியாய் அம்மா  அமர்ந்த வகுப்பறையில் இன்று மகள். 

ஒரே பொண்ணுங்குறதால வீட்டில் கூடுதல் கவனிப்பு.  வேகமா நடந்தாலே திட்டு விழும். ஆனா, இங்க வந்தா ஒரே கொண்டாட்டம்தான். கபடி, கோகோ, ஓட்டம்ன்னு விளையாடி பரிசு வாங்கி இருக்கேன். சட்டைலாம் கிழிச்சுக்கிட்டு போய் கூடுதல் பரிசா அம்மாக்கிட்ட அடியும் வாங்கியிருக்கேன்.  கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட இடம்லாம் இன்று கட்டிடங்களாய் இருக்கு.

நடுநிலை பள்ளில  இருந்து கொஞ்சம் தள்ளி இந்தப் பெருமாள் கோவில் இருக்கு. நான் பள்ளியில் சேரும்போது அப்போதான் கட்டிடங்கள்லாம் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அதனால, இங்கதான் வகுப்பு நடக்கும். இங்கதான் லஞ்ச் சாப்பிட வருவோம். கூடவே விளையாட்டும்..., இந்த இடம் இன்று இடிஞ்சு குட்டிச் சுவராய் இருக்கு. 

கோவில் பக்கத்துலயே குளம். அந்தா தெரியுது பாருங்க அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்துதான் லஞ்ச் சாப்பிடுவோம். கூடவே அரட்டையும் நடக்கும். சிலுசிலுன்னு காத்து செமயா இருக்கும். கரைகளில் இருக்கும் நாலு வீடும் கோவில் குருக்களோடது. அவங்கக்கிட்டலாம் அப்பா சொல்லி வச்சிருப்பார். என் பொண்ணு வந்தா விரட்டுங்க. தப்பித் தவறி குளத்துல விழுந்துடப் போகுதுன்னு..  நான் போனாலே அந்த வீட்டு மாமி விரட்டி விடுவாங்க.  இன்று என்னை விரட்ட ஆளில்லாம வெறிச்சோடிப் போயிருக்கு அந்த இடம்!!

நாங்க நாலு பேர், எங்களுக்கு பயம்ன்னா என்னன்னு தெரியாதுன்னு காக்க, காக்க” படத்துல சூர்யா சொல்வார். அதுப்போலதான் நாங்க நாலு பேரும். அந்த ஊர் முழுக்க எங்க காலடி படாத இடமே இருக்காது. அதனால ஊருக்குள்ள எங்களுக்கு பேரு அரட்டை கோஷ்டி.  இதுல ரெண்டு பேரு டீச்சர், ஒருத்தி நர்ஸ். வீணாப்போனது நான் மட்டும்தான் :-(.

அடுப்புக்கு முள் வெட்டி வர ஏரிக்கு போய், ஒரு ஆட்டம் போட்டு வருவோம். உடல்மேல் படிஞ்சிருக்கும் சேறு வீட்டில் காட்டிக் கொடுக்க செம மாத்து வாங்குவோம். தினமும் சாயந்தரத்தில் கோவில் போய் வருவோம். அதுக்கு காரணம் பக்தி இல்ல ஊர் சுத்த ஒரு சான்ஸ். பள்ளி விடுமுறைகளில் வள்ளலார் கோவிலுக்கு போய் கஞ்சி வாங்கிக் கொடுப்போம்.

இப்போ போலலாம் ஆண், பெண் பேதம்லாம் கிடையாது. பள்ளிக்கு போக ஆண் நட்புக்கள் பாதுகாப்பாய் உடன் வருவாங்க. குட் டச், பேட் டச்லாம் அம்மா சொல்லித் தந்ததில்ல ஆனா பேட் டச் எங்க உடம்புல பட்டதுமில்ல. உனக்கு பிடிச்ச நூடுல்ஸ் செஞ்சு பேக் பண்ணி இருக்கேன். யாருக்கும் கொடுக்காம சாப்பிடுன்னு சொன்னதில்ல. அதுக்கு பதிலா, புளிசாதம் செஞ்சிருக்கேன். பசங்களுக்குலாம் கொடுத்துட்டு நீ பட்டினியா வராம அவங்க சாப்பாட்டை ஷேர் பண்ணி சாப்பிடுன்னுதான் சொல்லியிருக்காங்க.

எதாவது எங்களுக்குள் சண்டை வந்து ஆண் பிள்ளைகள் எங்களை விட்டு வந்துட்டா ரெண்டு வீட்டு ஆளுங்களால லட்சார்ச்சனை வாங்க வேண்டி வரும். அதென்ன பொட்டப் புள்ளைய விட்டுட்டு தனியாய் வர்றது!? எலுமிச்சை தோப்புல கண்ணுசாமி பேய் சுத்துது. வயசு பொண்ணைக் கண்டா விடாது. நாமதானேடா பத்திரமா கூட்டி வரனும்ன்னு அக்கறை இல்லியாடான்னு பொளந்து கட்டி இருக்காங்க.

 ஊஞ்சல் கட்டி விளையாடிய குளத்தங்கரை வேப்ப மரம், கழுதை வாலைப் பிடிக்கப் போய் உதை வாங்கி கால் ஒடிஞ்ச நாகாத்தம்மன் கோவில், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை நேரத்துக்கு ஒலிக்க விடும் பஞ்சாயத்து சங்கு. தண்ணி வற்றிய கிணத்தில் நீர் சொட்டி இறைச்சதுன்னு எத்தனையோ சொல்லிக்கிட்டு போகலாம் அந்த ஊரு நினைவுகளை...,

தாயக்கட்டை விளையாடிய
எதிர்வீட்டு அக்கா...,
ஆண்பிள்ளைகளுக்கு சரிசமமாய்
விளையாட வெட்டிய
 கோலிக்குண்டு  குழி...,

மீனென தவறாய் நினைத்து
பிடித்து வீட்டு கிணத்தில்
விட்ட தலைப்பிரட்டை..,
வாலில் பூச்சுற்றி,
நெற்றியில் பொட்டு வைத்து
பேர் வைத்த நாய்க்குட்டி..,

பனங்காய் வண்டி, சிங்கப்பூர்
போன ரயில் வண்டி...,
கெட்ட ஆட்டம் போட்ட திடீர் மழை..,
தேள்கடிக்கு உதவும் என பொறுக்கி
வைத்த ஆலங்கட்டி மழைக் கற்கள்..,

உலுக்கியெடுத்த நாவல் மரம்
கண்டும் காணாமல் விட்ட
கோடி வீட்டு அத்தை..,
குளத்தங்கரை தாமரை..., முதன் முதலாய்
ஊருக்குள் வந்த பேருந்து...,

வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா..,
பப்பரமிட்டாய், சாயம் பூசிய வேசதாரிகள்..,
களைக்கட்டும் தேர்தல்,
அரசியல் சண்டை.., தோத்தவனும்,
ஜெயித்தவனும் ஒரே திண்ணையில் சாராயக்குடி.

நல்லதோ, கெட்டதோ அன்றைய
இரவில் போடப்படும்
சரஸ்வதி சபதம், விதி,
சம்சாரம் அது மின்சாரம்.

விசம் குடிச்ச கதிர்வேல் அண்ணா,
கிணற்றில் விழுந்த ஜோதி மாமி,
பிரசவத்துக்கு துடிச்ச மாலதி அத்தை
பக்கவாதத்தில் துவண்ட கோபால் தாத்தா
என சுமந்த அப்பாவின் வண்டி...,

என என் மனது அந்த ஊரில் எதை எதையோ தேடியது. ஆனா, நினைவுகளின் நிழல் மட்டும்தான் அங்கு நான் கண்டது. நிஜம்!? எங்கே தொலைந்தது நான் பார்த்து வளர்ந்த ஊர்!?

டிஸ்கி: யார் கண் பட்டதோ!! என் கேமரா மெமரி கார்டு எர்ரர் காட்டியதால் பல புகைப்படங்களை இணைக்க முடியல. கடவுள் அருள் கிடைச்சா மீண்டும் அந்த ஊருக்கு போய் நினைவுகளை மீட்டெடுக்கனும். அடிக்கடி இல்லன்னாலும், எப்பவாவது ஒருமுறையாவது அங்கு போய் வரனும்ன்னு ஆசை.

இதை ஒரு தொடர் பதிவாக்கனும்ன்னு ஆசை. புகைப்படமில்லன்னாலும், சமீபத்தில் சொந்த ஊர் இல்லன்னா வளர்ந்த ஊருக்கு போய் வந்தவங்க அந்த நினைவுகளை பகிர்ந்துக்கலாம்.

எனக்கு தெரிஞ்சு இப்ப சொந்த ஊருக்கு போய் வந்தது
ஸ்பை,
சீனு

இப்போதைக்கு நான் இந்த ரெண்டு பேரையும் தொடர அழைக்கின்றேன்.

12 comments:

 1. வாசிப்பவரின் இதயங்களில் பொறிக்கும் உங்க பழைய ஊர் அனுபவம் அருமை மா .....

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அட அட மலரும் நினைவுகள் அருமை ராஜி. வளர்ந்த ஊர்க்கு போக உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே..வாழ்த்துகள்!
  படங்களும் அருமை, தோழிகளுடன் உங்கள் படம் மிக அருமை.

  ReplyDelete
 4. அடடா, இப்படி கோர்த்து விட்டுட்டீங்களே அக்கா..... நான் உங்களை மாதிரி ஸ்கூலுக்குப் போய் போட்டோ எடுத்துக்கலையே! என்ன செய்வேன்!

  ReplyDelete
  Replies
  1. ஃபோட்டோஸ் முக்கியமில்ல. உணர்வுதான் முக்கியம்ன்னு சொல்லி இருக்கேனே ஸ்பை.

   Delete
 5. நீங்கள் படித்த பள்ளியின் நினைவுகளை ந்ன்றாகவே விவரித்தீர்கள்! நான் ஒரு ப்ளாக்கர் என்று ஸ்கூல் டீச்சர்கள் யாரிடமும் நீங்கள் சொல்லவே இல்லையா?

  வண்ணப் படங்கள் எனது பள்ளி நாட்களை நினைவுபடுத்தின. குளம் நன்கு சுத்தமாக குப்பை கூளம் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

  த.ம.5

  ReplyDelete
 6. சொல்லி இருந்த விதம் உங்களது மனதில் இருந்த ஏக்கங்களை அழகாக சொன்னது, சிறு பிள்ளை பருவம் என்பது ஒரு வரமே..... நீங்கள் மீண்டும் மீண்டும் அதை அங்கு சென்று அனுபவித்து மகிழ வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 7. இனிய நினைவுகள் சகோதரி + ஆதங்கத்துடன்....

  ReplyDelete
 8. ஆஹா, இந்த பதிவைப் படித்தவுடன், நானும் என்னுடைய பள்ளி நாட்களை நினைக்க ஆரம்பித்து விட்டேன்.

  பரவாயில்லை உங்கள் தோழிகளை கண்டுப்ப்டிச்சு அவர்களுடன் புகைப்படமும் எடுத்து விட்டீர்கள்.

  நல்ல அருமையான நினைவலைகள்.

  ReplyDelete
 9. ஊர் நினைவுகள் அருமை! நீங்க ஏன் உருப்படாம போனீங்க! தினம் தினம் வலைப்பூவில் பல்சுவை தகவல்கள் தந்து அசத்தறீங்களே அதுவே போதும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. மலரும் நினைவுகள். சமீபத்தில் தோழிகளை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி..

  ReplyDelete
 11. இனிமையான மலரும் நினைவுகள்......

  இதுவும் தொடரப் போகுதா... நல்லது!

  ReplyDelete