அது ஒரு பிஸ்கட் விளம்பரம். பள்ளியில் காலைல அசெம்ப்ளி கூடி இருக்கு. பிள்ளைகள்லாம் வரிசைல நிக்குறாங்க. தலைமை ஆசிரியர் பிள்ளைகளை பார்வையிட்டுக்கொண்டே வருகிறார். ஒரு பையன் ”டை” கட்டிக்கிட்டு வரல. உடனே, ஆசிரியர் கோவமாகி.., “கெட் டவுட்”ன்னு சொல்லிட்டு அடுத்த பையனை பார்க்குறார். அவனும் “டை”கட்டிக்கிட்டு வராமல் போகவே அவனையும் வெளில போகச் சொல்லிட்டு.., அடுத்த பையனை பார்க்குறார். அவனும் “டை”கட்டிக்கிட்டு வரல. கொஞ்ச நேரம் அவனை உத்து பார்த்துட்டு, அவன் பாக்கெட்டில் வெளியில் தெரியும் “டை”யை பாக்கெட்டுக்குள் தள்ளிவிட்டு சிரித்தப்படியே அவனையும் வெளில போகச்சொல்லிடுறார். பிள்ளைகள்லாம் சிரிச்சப்படியே பிஸ்கட் சாப்பிடுற மாதிரி அந்த விளம்பரம் போகுது. ஆசிரியரை ஏமாத்தி, வகுப்பை கட் பண்ணுற மாதிரி விளம்பரம் வந்தாலும், நண்பனுக்கு ஒரு துன்பம், அவமானம் வந்தால் துணைக்கு ஓடிப்போகும் நண்பன் ரசிக்க வைக்குறான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதித்யா சேனல்ல “கொஞ்சம் நடிங்க பாஸ்” ன்னு ஒரு நிகழ்ச்சி. சினிமாவுல வந்த ஃபேமசான பஞ்ச் டயலாக்” ஒண்ணை நேயர்கள்கிட்ட சொல்லி நடிக்க சொல்றார் நிகழ்ச்சி தொகுப்பாளர் “ஆதவன்”. பயிற்சி இல்லாததாலும், கேமரா முன் நிக்கும் கூச்சத்தாலும் பெரும்பாலானவர்கள் அந்த டயலாக்கை சொல்ல சொதப்புவாங்க. அந்த சொதப்பலுக்கு அவர் அடிக்கும் “கமெண்ட்”களும் நிகழ்ச்சியை சுவாரசியமாக்குது. எவ்வளவுதான் டென்சன்ல இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது நம்மையும் அறியாம சிரிச்சுடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
சத்தியம் தொலைக்காட்சில சமுதாய அக்கறைக்கு எடுத்துகாட்டா ”வர்ணஜாலம்”ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. ”புரியாத வார்த்தை இருந்தும் பயனில்லை, புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை”ங்குற மாதிரியான வாழ்க்கையின் பல தத்துவங்களை கோடிட்டு காட்டி இருக்கிற வாழ்க்கையை இன்னும் எப்படி அழகுபடுத்தி, சீர்படுத்தி, பண்படுத்தி சமுதாயத்திற்கும் நம்மை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் எப்படி பிரயோஜனமாய் வாழனும்ன்னு பல பயனுள்ள தகவல்களை தர்றாங்க. இந்த தொகுப்புல சிந்திக்க தூண்டுற பல சுவாரசியமான தகவல்கள், புதுபுது விஷயங்கள், கலகலப்பான குறும்படக்காட்சிகளுடன் ஞாயிறு தோறும் இரவு 8:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகுது “வர்ணஜாலம்”. இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய் தோறும் மாலை 3:30 மணிக்கு காணலாம்.
-------------------------------------------------------------------------------------------
மக்கள் தொலைக்காட்சியில் மார்கழி மாச சிறப்பை தினமும் மாலை 5.30க்கு “மாதர் போற்றும் மார்கழி”ன்ற தலைப்புல ஒளிப்பரப்பாகுது. இதில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல்களை பிரபல கர்னாடக பாடகர்கள் நிரஞ்சனா சீனிவாசன், யுவகலாபாரதி, வித்யா கல்யாணராமன்லாம் பாடி நம் மாலைப் பொழுதை பக்தி பரவசமாக்கிடுறாங்க.
---------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கான நிகழ்ச்சிகள்ன்னு “சினேகிதியே”, “பெண்கள் நேரம்” “லேடீஸ் சாய்ஸ்”, “மகளிர் மட்டும்”ன்னு ரகம், ரகமா நிகழ்ச்சி ஒளிப்பரப்பினாலும், பேருதான் மாறுதே ஒழிய, நிகழ்ச்சி கான்செப்ட்லாம் ஒண்ணைப்போலவே இருக்கு. சமையல், கிராஃப்ட், அழகு குறிப்பு, ஆரோக்கியம், ஷாப்பிங்க்ன்னு...,தான் இருக்குதே தவிர, விவசாயம், கட்டிடக்கலை, கம்ப்யூட்டர், வியாபாரம், ஷேர்மார்க்கெட்ன்னு இல்லையே! நாங்களும் அறிந்துக் கொள்ள வேண்டியதும், பகிர்ந்து கொள்ள வேண்டியதும் அதிகம் இருக்குன்னு எப்போ உணரப் போகிறீர்கள் சேனல்கார்ஸ்?!
எனக்கு டிவி பார்க்க பிடிக்காதுன்னு பதிவுக்கு பதிவு சொல்லனுமா?! தேவையில்லதானே?!