Tuesday, December 19, 2017

சனி பகவானை கண்டு பயப்படனுமா?!

எட்டு எட்டா மனுச வாழ்க்கையை பிரிச்சு வாழச்சொன்னார் சூப்பர் ஸ்டார். ஆனா, இரண்டரை வருசம், வருசமா பிரிச்சு வாழ்க்கையை வாழ வைக்குறார்  இங்க ஒரு சூப்பர் ஸ்டார்.  அந்த சூப்பர் ஸ்டார் யார்ன்னு பார்த்தா தி கிரேட் மிஸ்டர் சனி பகவான். நம்மாளுங்க கொட்டி கொடுத்தா கூழைக்கும்பிடு போட்டு வழிவாங்க. தப்பை தட்டிக்கேட்டா பயந்துக்கிட்டு இருப்பாங்க. அதனாலதான் சனி பகவானை கண்டா நம்மாளுங்க அலறி கட்டுறது.  அவர் சன்னிதி இருக்கும் பக்கம் போகமாட்டாங்க. அவருக்கு நேரா நின்னு கும்பிட மாட்டாங்க. கையெடுத்து கும்பிடமாட்டாங்க.. சனியன்னு உச்சரிக்கவும் பயம்..  இப்படி தினுசு தினுசா பயம் தொடருது.  ஆனா, கூப்பிட்டதும் வராத கடவுள்களைவிட சனியன்னு உச்சரிச்சாலே வரும் சனி பகவான் எவ்வளவோ மேல்ன்னு நினைக்குறேன்.

சனியை போல கொடுப்பாருமில்ல. கெடுப்பாருமில்லைன்னு சொல்வாங்க. அப்படி புகழ்வாய்ந்த சனிபகவானை பத்தி தெரிஞ்சுக்கலாம்.  ஆதிக்கடவுளான சூரியனுக்கு சுகவர்கலாதேவின்னு ஒரு மனைவி உண்டு. இருவருக்கும்  வைவஸ்தமனு, எமதர்மராசன்(நம் உயிரை பறிக்கும் எனமேதான்) என்ற மகன்களும்,  யமுனை என்ற மகளும் இருந்தனர். என்னதான் கருத்தொருமித்து சந்தோசமா சூரியனுடன் இருந்தாலும், அவருடைய வெம்மையை தாங்கிக்கொள்ள சுகவர்கலாதேவியால் முடியல.  அதனால,   இழந்த தன் சக்தியை மீட்க, தவம் மேற்கொள்ள பூலோகம் செய்ய முடிவெடுத்து,  தன் நிழலை தன்னைப் போலவே பெண்ணாய் மாற்றி, அவளுக்கு சாயாதேவின்னு பெயரிட்டு , அவளிடம், நான் தவமியற்ற செல்லபோகிறேன். நீ என்னிடத்திலிருந்து என் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள். இவ்விசயம் சூரியன் அறியாமல் பார்த்துக்கொள் எனவும் கட்டளை இட்டாள்.  அதற்கு சாயாதேவி, சூரியனுக்கு மனைவியாகவும், தங்கள் குழந்தைகளுக்கு தாயாகவும் தங்கள் சொற்படியே நடக்குறேன். ஆனா சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை’ ன்னு சொல்ல, சரின்னு . சொல்லி சுவர்க்கலா தேவி தவம் செய்ய பூலோகம் வந்தாள்.
யாரும் அறியா வண்ணம், குதிரை உருவம் கொண்டு சுவர்க்கலாதேவி தவம் செய்ய, அவளிடத்திலிருந்து, சூரியனையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு இல்லறம் நடத்தினாள் சாயாதேவி.  அதன் விளைவாக,  கிருதத்வாசி, கிருதவர்மா ன்னு இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் பிறந்தார்கள். நிழலே பெண்ணானதால், அவளுக்கு பிறந்த குழந்தைகளில் கிருதவர்மா மட்டும் கருமை நிறம் கொண்டவராக பிறந்தார்.  இதில் கிருதவர்மா தான் இன்றைய கதைநாயகன் சனிபகவான்.  அவரது சகோதரி தபதி, நதியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறாள். கருமை நிறம் கொண்டதால் தந்தையாலும், மற்ற சகோதரர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டார். 
சனி பகவான் கருமை நிறம் கொண்டதால,  சனிபகவானது செயல்கள் அனைத்தும் சூரியனுக்கு எதிராக இருந்ததால இருவருக்கும் அப்பனுக்கும் மகனுக்கும் சதாசர்வ காலமும் சண்டைதான். இப்படியே இருந்தால் என்னாவது என எண்ணிய, சாயாதேவி, தன் மகனை அழைத்துக்கொண்டு ஈஸ்வரினிடம் சென்று முறையிட்டாள். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுக்கு தகுந்தாற்போல பலன்களை அளிக்கும் பதவியை கிட்டத்தட்ட தன்னுடைய கிளார்க் மாதிரியான பதவியை ஈசன் அருளினார். இதனால், சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி உண்டானது.  சனிபகவானுக்கும் தேஜஸ்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது.  நீண்ட நெடுங்காலம் ஆனாலும் இருவருக்கும் குழந்தைப்பேறு இல்லாமல் தேஜஸ்வி மனம் நொந்திருந்தாள். ஒருமுறை, சனிபகவான், விஷ்ணு பகவனை நோக்கி தவம் செய்யும் வேளையில் அங்கு வந்த தேஜஸ்வி, தனக்கு குழந்தை வரம் தரச்சொல்லி கணவனை வேண்டி நின்றாள். நீண்ட நேரம் கால்கடுக்க நின்றும் சனிபகவான் தன் மனைவியை கண்விழித்து பாராததால், கோபங்கொண்ட  தேஜஸ்வி, நீ யாரை நேருக்கு நேராய் பார்க்கிறாயோ! அவர்கள் அழிந்துபோவார்கள் என சாபமிட்டாள். அன்றிலிருந்து சனிபகவான் யாரையும் நேராய் பாராமல் கீழ்பார்வையுடன் தலைகுனிந்தவாறுதான் இருப்பார்.

சிவ, பார்வதி தம்பதியருக்கு பெருமாள் அம்சத்தோடு கூடிய வினாயகர் ஜனித்தபோது தேவாதி தேவர்களை அழைத்து விருந்து வைத்து, பிள்ளையை ஆசீர்வதிக்க வேண்டினர். அங்கு வந்த சனிபகவான் வினாயகரை தன் சாபத்தின் காரணமாய் நேருக்கு நேராய் பார்க்காம ஓரப்பார்வையில் பார்த்தார். இதைக்கண்ட பார்வதி, என்ன ஏதுன்னு சனிபகவானிடம் விசாரிக்க, தனக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை பத்தி சொன்னார். இதனால், பார்வதிதேவியும் அவள் தோழிகளும் சிரித்ததோடு அதுலாம் சும்மா, நீ என் குழந்தையை நேருக்கு நேர் பார் ஒன்றுமாகாதுன்னு சொல்ல, சனிபகவானும் அப்படியே பார்க்க, அந்த வினாடியே, குழ்ந்தையின் தலை காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியுற்று பார்வதிதேவி மயங்கி விழ, தங்கையின் நிலை கண்ட பெருமாள் உடனே இந்திரனின் வஞ்ராயுதத்துடன் சென்று, யானையின் தலையை கொய்து வந்து குழந்தைக்கு வைத்தார். இதனால் கோபங்கொண்ட பார்வதிதேவி, என் பிள்ளை, ஊனமானது போல நீயும் ஊனமாகக்கடவது என சபிக்க சனிபகவானின் கால் ஊனமானது.
சிறு வயதில் எமதர்ம ராஜாவும்,  சனிபகவானும் விளையாடிக்கொண்டிருந்தபோது, தம்பிமீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாய், தன் கையிலிருந்த கதாயுதத்தால் ஓங்கி அடிக்க, சனிபகவான் கால் ஊனமானது. இதேமாதிரியான இன்னொரு கதை, சிவன் அவதாரத்தின்ப்போது கங்காவை மணந்து அதை மறைத்து, கௌரி என்ற பெண்ணை மணக்க இருந்தபோது உண்மை தெரிஞ்சு கௌரி ஆற்றில் பாய அப்போது முதலை ரூபத்தில் வந்து சிவனை பற்றிக்கொண்டார் சிவன். தன் கணவனை மீட்க கௌரி ஓங்கி அடிக்க, முதலை கால் ஊனமாகி சிவன் விடுபட்டார். இதனால், என்னையே நீ இந்த பாடு படுத்துகிறாயே! அதனால் உன் வேகம் மட்டுப்பட உன் கால் சிறிது ஊனமாய் தவறில்லை என சிவன் பணித்தார். அதன்படி சனிபகவான் ஊனமானார்.


என்னதான் நடுநிலை தவறாமல் அனைவரையும் சரிசமமாய் எமனை போலவே தானும் நடந்துக்கொண்டாலும் அப்பாவும், கூட பிறந்தவர்களின் அலட்சியமும் மாறாததால, ஆதி அந்தம் இல்லாத சிவனுக்கு சரிசமமாய் எமனைப்போல தானும் மாற வேண்டுமென உறுதிக்கொண்டு தாயிடம் ஆசிப்பெற்று காசிக்கு சென்று, அங்கு ஒரு லிங்கத்தை உண்டாக்கி பல ஆண்டுக்காலம் கடும்தவம் செய்தார். அவரது பக்திக்கு மெச்சிய  சிவன்  என்ன வரம் வேண்டுமென வினவ, `எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்’ `உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆகனும்,  `இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்’ என்றும் வரம் கேட்டார் சனிபகவான். அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு `சனீஸ்வரர்’ என்ற பெயர் விளங்க அருள் பாலித்தார்.

 சனீஸ்வரன் என்ற பட்டம் மட்டும் போதாது,  நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லாம், தங்கள் பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான். சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.  கருங்குவளை மலர், கருப்பு எள், கருமை நிறத்துக்கு சொந்தக்காரன், மந்தபுத்தி கொண்டவன். ஆனால், அன்பானவன், சனி கொடுப்பதை அந்த சர்வேஸ்வரனாலும் தடுக்க முடியாதென பெயரெடுத்தவன். 

இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள் சுருக்கமாய்...
மேஷம் - அஷ்டம சனி முடிவடைகிறது.
ரிஷபம் - அஷ்டம சனி ஆரம்பம்.
மிதுனம் - கண்டக சனி.
கடகம் - சனியின் பாதிப்பு இல்லை.
சிம்மம் - அர்த்தாஷ்டம சனி முடிவு.
கன்னி - அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்.
துலாம் - ஏழரை சனி முடிவு.
விருச்சகம் - பாத சனி.
தனுசு - ஜென்ம சனி.
மகரம் - விரய சனி.
கும்பம் - சனியின் பாதிப்பு இல்லை.
மீனம் - சனியின் பாதிப்பு இல்லை
சனிபகவான் மூல மந்திரம்..

ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்

ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்

ஸ்லோகம்

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
தேவாதி தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான ஒரு குணம் அடக்குவது அல்லது அடங்கி போவது. சனீஸ்வரனை அடக்க நம்மால் ஆகாது.  அதனால அடங்கி போகலாம். காலையில் குளித்து முடித்து சில உலர்ந்த திராட்சைகளை காகத்துக்கு வச்சுட்டு அடுத்த வேலை பாருங்க. சனியின் உக்கிரத்தை குறைக்க உதவும். அதேப்போல எள் கலந்த சாதத்தையும் காகத்துக்கு வைப்பதை பழக்கமாக்கிக்கோங்க. இதும் சனிபகவானை கூல் பண்ணும்... சனி பகவானை கூல் பண்ண, இதோ எங்க ஊர் பக்கத்திலிருக்கும்  சனிபகவான் எந்திர ரூபமாய் இருக்கும் ஏரிக்குப்பத்துக்கு போறேன்.. உங்களுக்காகவும் வேண்டிக்குறேன்...


நன்றியுடன்,
ராஜி.

11 comments:

  1. எத்தனை தகவல்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. பார்வதியே பார்க்கச் சொல்லிவிட்டு, அப்புறம் சாபமும் கொடுப்பது என்ன நியாயம்!!!! சுவாரஸ்ய தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. சனி பகவானின் பேச்சில் நம்பிக்கை இல்லாம பார்வதி தன் குழந்தையை பார்க்க சொல்றாங்க. எல்லாமே காரணம் காரியத்தோடுதான் நடக்கும்.

      Delete
  3. அறியாத தகவல்கள் எல்லாம் அறிந்து கொண்டேன். எங்களுக்கும் சேர்த்தே பிரார்த்தனை செய்யுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் யாரை பார்த்து வேண்டிக்க சொன்னீங்கன்னு பாருங்க. சாமிக்கிட்ட போனால் எல்லாமே மறந்து போய் சும்மா நிப்பேன்.

      Delete
  4. சனி பகவானைக் கண்டு பயப்படவேண்டாம். அவன் சனீஸ்வரன்தானே?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா, மனுசனை தள்ளி வைக்குறதும்,தண்டனை கொடுப்பதும் கடவுளின் வேலை இல்லை

      Delete
  5. எத்தனை விதமான கதைகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா, அதனாலாயே சில சமயம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாம போயிட்டுது

      Delete
  6. சனி பகவானை கனவில் பார்த்தால் என்ன பலன் சொல்லுங்கள்

    ReplyDelete