Friday, January 25, 2019

சுவாரசியமான பிரம்மகிரி மலை பயணம் - ஷீரடி பயணம்

கடந்த வாரம் மும்மூர்த்திகளும் வழிபட்ட திரிம்பகேஸ்வரர் கோவில் பற்றி பார்த்தோம். தரிசனம் முடிந்து வெளிய வரும்போது திரிம்பகேஸ்வரரை வழிபட்டதினாலோ என்னவோ எங்கள் பயணக்குழு மூன்று பிரிவாக பிரிந்து நின்றனர். பிரம்மகிரி மலைமேல் கோதாவரி உற்பத்தியாகிற இடத்திற்கு செல்லலாம்ன்னு ஒரு பிரிவும், அனுமன் பிறந்த இடமான அஞ்சனா புத்ரு ஹனுமான் கோவிலுக்கு போகலாம்ன்னு ஒரு பிரிவும், அடுத்த பிரிவோ ஜோதிர்லிங்க ஸ்தலமான கிரிஸ்னேஸ்வர் கோவிலுக்கு போகலாம்ன்னு ஆளுக்கொரு யோசனை சொன்னனர். சூழ்நிலை இப்படி இருக்கும்போது எங்கள் வழிகாட்டி அண்ணா ஒரு யோசனை சொன்னார். இத்தலத்தில்தான் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் அந்த ஆதிபரம்பொருளான ஆதிசிவனை ஒற்றுமையாக இணைந்து வணங்கினர். அதுபோல் நாமும் தனித்தனி எண்ணம் கொள்ளாமல் மூன்று இடங்களுக்கும் செல்லலாம் என்று யோசனை கூறினார். அனைவரும் ஒருமனதாக அவர்கூறியதை ஏற்றுக்கொண்டு பிரம்மகிரி மலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து வண்டியை பிரம்மகிரி நோக்கி திருப்பினோம் .
பிரம்மகிரிய பத்தி சொல்லனும்னா திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு தென் கிழக்கு திசையிலே இருக்கும் மேற்கு தொடர்ச்சி  மலைத்தொடரில் உள்ள முக்கியமான இடம். இந்த இடத்துக்கு மற்றுமொரு சிறப்பு என்னென்னா மலைகளுக்கு மேலே, பல கோவில்களும், சிலைகளின் பீடங்களும் இருக்கு. முக்கியமா சொல்லணும்ன்னா இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பிரம்மகிரி மலையின் கோதாவரி உற்பத்தியாகிற இடத்தை பார்க்காம போவதில்லை. திரியம்பகேஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலிருக்கும் இந்த மலைக்கு செல்லும் அடிவார இடம், போற இடம்லாம் பசுமையா, பார்க்க அழகா இருக்கு. 
குறைந்தது ஒருமணிநேர பயணம்.  முதல் 2 மணி நேரத்திற்குள்ளாகவே சென்று விடலாம். அதேசமயம் குழந்தைகள், வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர் இந்த பயணத்தை தவிர்ப்பது நலம். ஏன்னா படிக்கட்டுகள்,  கரடு முரடான பாதைகள், பாறைகள் மேல் பயணம்ன்னு மலையேறுதல் பெறும் சவாலா இந்த பயணம் அமையும்.  அதேசமயம் வயதானவர்களை தூக்கிச்செல்ல கட்டணம் வசூலிச்சு, தூக்கிட்டு போறவங்களும் இருக்கிறாங்க. ஆனா என்னை பொறுத்தவரையில் இப்படி போறதும் ஆபத்தானதான். செங்குத்தான பாறைகளிலும், சில அபாயாகரமான வளைவுகளிலும் நம்மால் பயணம் செய்யமுடியுமாவென யோசித்து பயணத்தை மேற்கொள்ளனும் இல்லைன்னா திரும்பிடுறது நல்லது.
போகிற பாதையில் லெமன் சோடா, வட இந்திய ஸ்னாக்ஸ், சாய்லாம் கிடைக்கும். அங்கங்கே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்திட்டும் போகலாம். சிலர் இந்த பிரம்மகிரி மலைமீது ஏறுவதை தவிர்ப்பங்களாம். ஏன்னா சிவபெருமானின் தலையில் இருந்துதான் கங்கை உற்பத்தியாகிற இடம் என்பதால் அந்த மலையே சிவனின் உருவம், சிவனை மிதிப்பதற்கு ஒப்பானதென சொல்லி மலைமேல் ஏறுவதை சிலர் தவிர்ப்பார்களாம்.  ஆனா இப்பொழுது பொழுதுபோக்கிற்காவும், மலைப்பயணத்திற்க்கவும்தான் மலைமேல் ஏறிச்செல்கின்றனர் . உண்மையான பக்தியெல்லாம் இப்ப இல்ல. ஊர் சுற்றி பார்க்கும் எண்ணம் மட்டுமே பலருக்கு உண்டு.
கொஞ்சம் கஷ்டப்பட்டு வந்தாலும்,  மலைமேலிருந்து பார்க்கும்போது நகரின் அழகு பார்பதற்கே கண்கொள்ளாக்காட்சியா இருந்தது. முக்கியமான விஷயம் நாம கொண்டுபோற பைகளை கவனமாக வைத்திருக்கனும். இங்க குரங்குகளின் தொல்லைகள் அதிகம். ஆகையால் தோளில் மாட்டி இருக்கும் பைகளை எடுத்துட்டு போகனும். கைகளில் பைகளை கொண்டுபோனால் நம் கைகளிலிருந்து பைகளை குரங்குகள் பிடுங்கிக்கும்.போறவழியில் ஒரு தீர்த்தம் இருக்கிறது.  இது ராமபிரான் அம்பினால் ஏற்படுத்திய தீர்த்தம் ன்னு சொல்றாங்க. அதையும் தண்டி போனால் கோலம்பிகா மா மந்திர் வருகிறது. இந்த மலைப்பாதையில் சிறியதும் பெரியதும பல கோவில்களை பார்க்கலாம் .
இங்கிருந்து செல்லும்பாதை இரண்டுவழிகளில் செல்கிறது.  ஒன்று பிரம்மகிரி செல்லும் பாதை. மற்றொன்று கங்காட்வர் செல்லும் பாதை இந்த இரண்டும் ஓரிடத்தில சந்திக்கின்றன. நமக்கு நேரமிருந்தால் இந்த இரண்டு இடங்களுக்குமே செல்லலாம். நாங்கள் பிரம்மகிரி செல்லும் வழியாக சென்றோம்.  மற்றோரு பாதை வழியாக சென்றால் துர்க் பாண்டர் கோட்டை இருப்பதாக சொல்றாங்க. அதன் வரலாறு பற்றித்தெரியலை. ஆனா இந்தவழி குறுகலான வழுக்கும் பாறைகளை கொண்டதுன்னு சொன்னதால நாங்க அந்தப்பக்கம் போகல.
இந்த இடம்தான் கோதாவரி உற்பத்தியாகும் இடம்ன்னு சொல்லப்படுது நிறையபேர் பாட்டில்ல தண்ணி பிடிச்சிட்டுப்போனாங்க. இந்த கோதாவரி நதியானது, பிரம்மகிரி மலைமீது உற்பத்தியாகி மலைமீதே மூன்று திசைகளில் ஓடுகிறது. கிழக்கு நோக்கி ஓடும் ஆறு கோதாவரி என்றும், தெற்கு நோக்கிச்செல்லும் ஆறு வேதாரேனா என்றும் ,மேற்கு நோக்கி ஓடும் ஆறு மேற்குகங்கை என்றும் சொல்லப்படுது. இந்த நதி சக்ரா தீர்த்தத்திற்கு அருகே கோதாவரி நதியில் இணைகிறது.   இதேப்போல் திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு அருகே ஓடும் அகல்யாநதி,  கோவிலுக்கு முன்பக்கமே கோதாவரியுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமத்தில் குழந்தை இல்லாதவங்க நீராடி இங்குள்ள இறைவனை வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது .
பச்சைப்பசேலென்ற மலைகளைகளையும், நீர்வழிந்து கால்வழுக்கும் பாறைகளையும் கடந்து செல்லும் பயணம் மனதிற்கும், உடலுக்கும் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தந்தது. ஓரிடத்தில், இந்த இடத்தை பத்தி அறிவுப்பு பலகை வச்சிருந்தாங்க. சரி, நமக்கு புரியலைன்னாலும் பரவாயில்லை,  பதிவை படிக்கிற இந்தி தெரிஞ்சவங்க அர்த்தம் சொல்லமாட்டாங்களான்னு ஒரு ஆசையில இந்த அறிவிப்பு பலகையையும் கிளிக்கிவிட்டேன். இப்ப கீதாக்காவும், வெங்கட் அண்ணாவும் இதுக்கு விளக்கம் சொல்வாங்க. இங்க, சின்னசின்னதாய் பல கோவில்கள் இருக்கு. எல்லா இடத்துக்கும் போயிட்டு வரணும்னா பொழுது சாய்ஞ்சிடும் .
சரி எல்லா கோவிலுக்கும் போகவேண்டாமென முடிவெடுத்தால், பக்கத்துலதான் சிவ ஜடா மந்திர் இருப்பதா சொன்னாங்க. சரி, இதுவரை வந்திட்டோம். அங்கேயும் போயிட்டு வந்திடுவோம்ன்னு நடக்க ஆரம்பித்தோம். ஆனா, கோவில்கோவிலா சுத்தினது போக இப்படி மலை மலையா சுத்தவிட்டுட்டியே ஏன் மகாதேவா?! என புலம்பிக்கிட்டே பயணத்தை தொடர்ந்தோம் .
இதுதான் சிவ ஜடா மந்திர் உள்பக்கம் சிறிய குகைபோன்ற அமைப்பில் ஜடைமுடிபோல் வரிவரியாக பாறையில் இயற்கையாக அமைந்ததா?! இல்லை முன்னமே செதுக்கினார்களா?!ன்னுதான்தெரியலை. இன்னும் நிறைய கோவில்கள் இருப்பதாக சொன்னாலும் நம்மால் இதுக்குமேல முடியாதுன்னு சொல்லிட்டு  மலையை விட்டு இறங்க தொடங்கினோம் .
இதுபோன்ற இடங்களுக்கு போகும்போது திடீர்ன்னு பிளான் செய்யாம முதல்நாளே பிளான் செய்து, உள்ளூர் கைடு ஒருவரின் துணையுடன் போனால் நாம நிறைய இடங்கள் பார்க்கலாம். வர வழியில கூட ஒரு ரூட் மேப் வச்சிருக்கிறாங்க, ஏற்கனவே மலையேறி சென்ற அனுபவம் உள்ளவங்களை கூட்டிச்செல்வது நல்லது. 
போகிறவழியில் கவுதம -அகல்யை முனிவரின் சந்நிதி இருந்ததது. சரி அவர்களையும் தரிசித்து விட்டு செல்வோம்ன்னு அங்கே  போனோம். வட இந்தியாவில் ஒரு நன்மை என்னன்னா நாமளே பூஜை செய்துகொள்ளலாம் இந்தஇடத்தின் வரலாறை தெரிந்துகொள்ளுமளவு நேரம் கிடைக்கவில்லை தரிசனம் செய்துவிட்டு கிளம்பிவிட்டோம்.
இது சந்நிதியில் தெளிவான தோற்றம்.  கவுதம ரிஷி தன் ரிஷிபத்னியுடன் பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றார்.
வருகிற வழியெல்லாம்கூட சிறியதும் பெரியதுமான பல கோவில்கள் இருக்கு. ரொம்ப தூரம் வரும்போது ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு விநாயகர் கோவில் இயற்கை அழகையும், ஆற்று நீரோட்டத்தையும் தன்னுள் கொண்டு பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. அங்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் மலை இறங்க தொடங்கினோம் .
ஒருவழியாக ஒரு பாதை செல்லும் இடத்தை அடைந்தவுடன் எங்கள் குழுவில் இருந்து வந்தவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. மலையைவிட்டு இறங்கிவிட்டோம்ன்னு சொன்னதும் சரியா எந்த இடத்தில இருக்கிறோம்ன்னு பக்கத்தில் இருப்பவரிடம் வழிகேட்க அவரும் எங்க டிரைவருக்கு வழிசொல்ல எங்களை சிறிது தூரம் வந்து காத்து இருக்கும்படி சொன்னாங்க.  திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு செல்பவர்கள் சுவாரசியமான இந்த பிரம்மகிரி மலைப்பயணத்தை மிஸ் பண்ணாதீங்க. ஆனா உள்ளூர் வழிகாட்டி அவசியம் எப்ப சென்றாலும் குழுவாக செல்வது நலம். அடுத்து எங்க போலாம்ன்னு கேட்டப்ப அடுத்த பிரிவின் முடிவான அனுமன் பிறந்த இடமான  அஞ்சனாத்திரி மலைக்கு செல்லலாம்ன்னு முடிவாகி கார் இராமாயண காலதொடர்புடைய அந்த இடத்திற்கு சென்றது .
திரும்பவும் ஒரு மலைப்பாதையில் கொண்டு விட்டார் அந்த உள்ளூர் டிரைவர் சுமார் 700 படிகள் மேலே ஏறி செல்லணுமாம். மறுபடியும் முதலில் இருந்தா?! எனச்சொல்லி என்கூட பிரம்மகிரி மலையேறினவங்க தயங்க,  சரி என்ன செய்யலாம்ன்னு யோசனையா இருந்தோம். இந்த மலையின் உச்சியில்தான் அனுமனின் தாயார் வசித்து வந்ததாகவும், அனுமன் இந்த இடத்தில்தான் பிறந்ததாகவும் சொல்றாங்க. அஞ்சனாதேவி மலை நாளடைவில அஞ்சனாத்திரி மலைன்னு மாறி இருக்கனும். .சரி என்ன செய்யலாம்ன்னு யோசிச்சப்ப ,அந்த உள்ளூர் டிரைவரே  இதுக்கும் தீர்வை சொன்னார். அதாவது பக்கத்தில சித்தி ஹனுமான் குன்று இருக்கு. இளமையான அனுமான் சிலை அங்கு இருக்கு. அனுமன் சாந்தசொரூபியா தவக்கோலத்தில் இருக்கும் இடம்ன்னு சொன்னார். சரி அங்க போகலாம்ன்னு முடிவெடுத்து அங்க போனோம் .
சின்ன குன்றுதான். கோவிலுக்குகார் பக்கத்துலயே கார் போகுமளவுக்கு வசதி இருக்கு. நம்ம ஊர்போலவே மாலைவாங்கு, சூடம்வாங்குன்னு ஒருகூட்டம் சின்னக்குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அங்குவரும் வெளியூர் ஆட்களை இனங்கண்டு விடாம துரத்துறாங்க. உள்ளூர்காரர்கள் அவர்கள் பக்கமே போகலை .சரி நாமளும் ஏதாவது அனுமனுக்கு வாங்கி செல்வோம்ன்னு மலையையே தூக்கியவருக்கு நம்மால் முடிஞ்ச சிறிய மாலையை வாங்கிச்செல்வோமென வாங்கி சென்றோம். இந்த படிகளை ஏறி சென்றால் உள்ளே பெரிய ஹனுமான் சிலை இருக்கு .
வழக்கமான கோவில்களில் இருப்பதுபோல இங்கேயும் புகைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது என்ற போர்ட் இருந்தாலும், எப்பயும்போல எல்லோரும் போட்டோ எடுத்துகிட்டுதான் இருந்தாங்க .
இந்த அனுமான் பெயர் சித்தி ஹனுமான்ன்னு சொல்கிறாங்க ,சிலர் இளமையான அனுமன் என்கிறார்கள். முழுவதும் செந்தூரம் பூசி பார்பதற்கே அழகாக காட்சிதருகிறார். பண்டிகை காலங்களில் இந்த பெரிய அனுமனுக்கு அலங்காரம் செய்வார்களாம். இவரை பற்றிய வரலாற்றினை  சரியா தகவல் திரட்டமுடியலை. இருந்தாலும் பார்ப்பதற்கு அமைதியான உருவத்தில் ஹனுமான் சிலை இருந்தது. தரிசனம் எல்லாம் முடிந்தவுடனே அடுத்து எங்கே செல்லலாம்ன்னு எங்களுடன் வந்த வழிகாட்டி அண்ணாவை கேட்டபோது வீருல்ங்கிற இடத்தில இருக்கிற 12 வது ஜோதிர்லிங்கமான ஸ்ரீகிரிஸ்னேஸ்வர் கோவிலுக்கு போகிறோம்ன்னு சொன்னார்.அடுத்தவாரம் ஸ்ரீகிரிஸ்னேஸ்வர் கோவிலிலிருந்து உங்களை சந்திக்கிறேன் .
நன்றியுடன்
ராஜி 

14 comments:

  1. சுவாரஸ்யம். இயற்கையே பெரிய கடவுள். அதன் பிரம்மாண்டத்தின் முன் நாமெல்லாம் எங்கே?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரிதான் சகோ. கடவுள்ன்னு தனியே இல்ல. இயற்கையே கடவுள். இப்படி சொல்லவும் ஒரு பிரிவினர் இருக்காங்க.

      Delete
  2. அந்த தகவல் பலகை பற்றி விவரம் அறிய மீண்டும் வருவேன்...

    சென்று வந்த பின் உடம்பு இளைத்ததா...?

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வாங்க. ஆனா, வெங்கட் அண்ணா, கீதாக்கா வந்து போனப்பின் வாங்க. அவங்க வந்துதான் விவரம் சொல்லனும்.

      இது இளைக்கிற உடம்பா என்ன எங்கப்பா,பாலும்,தயிரும் கொடுத்து வளர்த்த உடம்பு.ஒரிரு நாளில் மலை ஏறி இறங்கிட்டா உடல் இளைச்சுடுமா என்ன?!

      Delete
  3. ராஜி இந்த அருமையான இடங்கள் எனக்குப் பிடித்தது ஆறும் மலையும் தான்...அவற்றின் அழகே அழகு,...

    ஹனுமார் படம் சூப்பர்...

    ஹிந்தி எழுத்துகள் புரியலியே ராஜி. ப்ரம்மகிரி மட்டும்தான் வாசிக்க முடியுது மத்தது வாசிக்க முடியலை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்க போய்வந்ததுனால உங்களுக்கு இந்த மலையின் அருமை தெரியும் கீதாக்கா,ஆனா போர்டை வாசிக்க முடியாததற்கு இரண்டு காரணம் இருக்கும்.ஒன்று எழுத்துக்கள் தெளிவா இல்லை.இரண்டாவது ,இந்த மொழி மராத்தியா கூட இருக்கலாம்.ஆனா இது ஹிந்தியா இல்ல மராத்தியான்னு கூட எனக்கு தெரியாது.

      Delete
  4. பிரம்மகிரி...அற்புதம் ராஜி க்கா..

    பார்க்கவும் படிக்கவும் மிக சுவாரஸ்யம் ...

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும் கருத்துக்களுக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றிங்க அனுராதா...

      Delete
  5. நமக்கெல்லாம் சுற்றுலா என்பதே கோவில்களைக் காண்பதில்தானே

    ReplyDelete
    Replies
    1. மலைமேல் இருக்கும் கோவில்களுக்கு செல்வதே ஒரு இனிய சுற்றுலா அனுபவம் ,இதேமாதிரி ஒரு மலையேற்ற பயணம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன் அதுபற்றிய விவரங்கள் இங்கே ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிப்பா ..

      பர்வதமலை பயணம் இங்கே ...

      http://rajiyinkanavugal.blogspot.com/2016/10/blog-post.html


      http://rajiyinkanavugal.blogspot.com/2016/12/blog-post.html

      Delete
  6. திட்டம் சரியா போட்ட மாதிரி தெரியலை.

    ஆனா நிறைய மலைகள் ஏறியிருக்கீங்க. கஷ்டப்பட்டதற்கு திருப்தி கிடைத்ததா?

    ஜிலு ஜிலு தண்ணிலயாவது கால் வைத்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இடமும் தெரியாது,வழியும் தெரியாது,பாஷையும் தெரியாது.அதுவும் திடீர்ன்னு எடுத்த முடிவு.ஆகையால்தான் எல்ல இடத்திற்கும் செல்லமுடியவில்லை.அதேசமயம் எங்கள் குழுவில் வந்த பெரியவர்கள் எல்லாம் எங்களுக்காக மலையடிவாரத்தில் காத்துஇருக்க,சீக்கிரம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் மலையேறியதால் எங்களால் இயற்கையை ரசித்து மலை ஏறமுடியவில்லை.

      Delete
  7. அருமையான சுற்றுலா.

    படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்கள் இங்கு சென்றதுண்டா,செல்லவில்லையெனில் அவசியம் அண்ணியையும் கூட்டிட்டு ஒரு எட்டு போய்ட்டுவாங்க,அருமையான மலையேற்ற பசுமை பயணம்....

      Delete