Wednesday, May 01, 2019

உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லை...நாடானாலும், வீடானாலும் உழைப்பில்லாம உயர்வில்லை. டிப்டாப்பாய் ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஆஃபீஸ் போய் கம்ப்யூட்டருக்குள் தலையை விட்டுக்கிட்டு டார்கெட்டே வாழ்க்கையாய் இருக்கும் ஐடி ஊழியர் முதல் உலகத்துக்கே சோறு போடும் விவசாயி வரை....உழைப்புதான் மூலதனம்.  உழைக்காம பிச்சை எடுக்குறியேன்னு வசவு வாங்கும் பிச்சைக்காரன்கூட ஒரே இடத்தில் நாள் முழுக்க உக்காந்திருக்கனும் இல்ல தெரு தெருவா சுத்தனும்.  நம்மால முடியுமா?! கோடி கோடியா கொட்டும் சினிமா நட்சத்திரங்களை பார்த்து வாயப் பொளக்குறோம்.  அவங்களும், வாயக்கட்டனும், ஜிம்முக்கு போகனும், இரவு பகல் பாராம முழிச்சிருக்கனும், தண்ணில நனையனும், வெயில்ல காயனும், பனி படர்ந்த மலையில் ரெண்டு துண்டு துணியோடு ஆடனும். ஆகமொத்தம் எந்த வேலையானாலும் உடல் உழைப்புங்குறது முக்கியம்.  அம்மா, அப்பா, காசு, கடவுள் இல்லாமக்கூட இருந்திடலாம். ஆனா, அடுத்தவங்க உழைப்பு இல்லாம நாம் இல்லை. நமக்காக உழைக்கும் செருப்பு தைப்பவர், டீக்கடைக்காரர், கண்டக்டர், போலீஸ், டாக்டர், சிஎம், பி.எம்....ன்னு நமக்காக உழைக்கும் அத்தனை பேரையும் போற போக்கில் வசதியாய் மறந்திடுறோம். அப்படி மறக்கக்கூடாதுன்னும் உழப்பாளர்களுக்கு தக்க மரியாதை செலுத்தவும்தான் உழைப்பாளர் தினம் உண்டாக்கி வச்சிருக்காங்க.


எட்டு எட்டா மனுஷங்க வாழ்க்கைய பிரிச்சு வாழச் சொல்லுது சினிமாப்பாடல். இந்த எட்டு எதுக்கு பொருந்துதோ இல்லியோ உழைப்பாளர்களுக்கு முக்கியம். ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு நாளுக்கு எட்டு மணிநேர தூக்கம் முக்கியம். ஒரு மனிதன் தன் வாழ்வில் குறைஞ்சது லட்சம் பேரின் உழைப்பை அனுபவித்திருப்பான்னு கிரேக்க தத்துவம் சொல்லுது. முன்னலாம் ஒரு நாளைக்கு  பத்து முதல்  பதினாலு மணிநேரத்திற்கு மேல வேலை செஞ்சாங்க. அவங்களாம் போராடி, தங்களது வேலை நேரத்தை எட்டு மணிநேரமா மாத்த சொல்லி,  வேலை நிறுத்தம் செஞ்சு வெற்றியடைஞ்சதை குறிப்பிடும் தினம்தான் இந்த மே தினம்.  இந்த எட்டு மணிநேர வேலை நிர்ணயம் செய்யுறதுக்காக தங்கள் இன்னுயிரை இழந்தவர் பலர். அவங்களுக்கு நன்றி சொல்லும்விதமாவும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுது.

உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும்ன்னும், முதலாளிகள் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர்ன்னும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் இருக்குன்னும்  இதையெல்லாம் செய்வதற்கு, "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"  என்னும் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்கு எடுத்து முழங்கினார்  காரல் மார்க்ஸ். இவ்வாறு அவர் கூறி 42 ஆண்டுகள் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் தொழிலாளரின் எட்டு மணிநேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு போராட்டம் வெற்றிப்பெற்றது.

Reich President Paul von Hindenburg Delivers His Very First May Day Address, Berlin (May 1, 1933):


தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குது. தொழிலாளர்களின் உழைப்பின்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை தொழிலாளர்கள் உணர்ந்தனர்.  தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர். 1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்தும் முடங்கியது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மெச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு”ன்ற இயக்கம் உருவானது.  இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைக்குலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவுல நம்ம சென்னை மெரினா பீச்லதான் 1923ம் ஆண்டு தொழிலாளர் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் முதன்முதலா மேதினம் கொண்டாடப்பட்டது. அதோட நினைவாதான் பீச்ல உழைப்பாளர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை தேவி பிரசாத் ராய் சௌத்ரிங்குற சிற்பிதான் செஞ்சார்.
உழைப்பாளியின் வியர்வை காயுறதுக்குள் அவனுக்குண்டான கூலியை கொடுத்துடனும்ன்னு நம்மூர்ல சொல்வாங்க. பிள்ளைகளை விடுமுறை தினங்களில் தீம் பார்க் மாதிரியான இடங்களுக்கு கூட்டி செல்வதைவிட நெசவாளி வீடு, மண்பாண்டம் செய்வோர், விவசாயி மாதிரியான வாழ்க்கைக்கு அத்தியாவசிய பொருட்களை செய்து தருபவர்களோடு பழக விட்டு, அவங்க படும் கஷ்டத்தை நேரில் பார்க்க விடுங்க. அப்பதான் உழைப்பின் அருமையை குழந்தைகள் புரிஞ்சுப்பாங்க.  உழைப்பால் நாட்டை, நம்மை உயர்த்தும் உழைப்பாளியும் உயரனும்.  உழைப்பாளியை மதிப்போம்!
மீள்பதிவு...
நன்றியுடன்,
ராஜி

6 comments:

 1. அருமை
  மே தின வாழ்த்துகள் சகோதரியாரே

  ReplyDelete
 2. தொழிலாளிதின வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. தொழிலாளர் தின வாழ்த்துகள்.

  ReplyDelete