உணவில் புளிப்பு சுவை கூட்ட தக்காளி, எலுமிச்சைன்னு பயன்படுத்தினாலும் புளியம்பழத்தைதான் அதிகம் பயன்படுத்துறோம். அதிலும் தென்னிந்திய சமையலில் புளியம்பழம் அதிகம் இடம்பெறுது. இந்த புளியம்பழம் பேபேசி இனத்து முடிச்சு மரமாகும். நம்மூர்ல தேவை அதிகமிருக்குறதால அதிகமா பயிரிடப்படுதா இல்ல அதிகம் பயிரிடப்படுறதால நாம அதிகமா பயன்படுத்துறோமான்னு தெரில. தமிழகத்துல பரவலா இது விளையுது. அதிகம் நீரும், கவனமும் தேவை இல்லை.
புளியமரத்தின்கீழ் எந்த தாவரமும் வளராது. இரவில் புளிய மரத்தின்கீழ் உறங்கக்கூடாது. ஆடு, மாடுகளைக்கூட கிராமங்களில் கட்டமாட்டாங்க. ஏன்னா, புளியமரம் தன் சுற்றுப்புறத்தை சூடாக்கும் தன்மைக்கொண்டது. பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய்ன்னு சொல்வாங்க. புளி அதிகம் விளைந்தால் அந்த வருடம் மாங்காய் விளைச்சல் குறைச்சலா இருக்கும். புளி விளைச்சல் குறைவா இருந்தா மாங்காய் விளைச்சல் அதிகமாய் இருக்கும். புளி அதிகம் விளைஞ்சா அந்த வருசம் சுபிட்ஷமா இருக்கும்.
ஒன்னா இருந்தாலும் ஒட்டாத உறவை புளியம்பழமும் ஓடும்... போலன்னு உதாரணம் சொல்வாங்க. என்னதான் பிசுபிசுப்பா இருந்தாலும் புளி அதன் ஓட்டோடு ஒட்டுவதில்லை, அதுப்போல என்னதான் அன்பா இருந்தாலும் சில உறவுகள் நம்மோடு ஒட்டாமயே இருக்கும்.
புளியிலிருக்கும் சத்துகள்..
இதில் அதிகளவு இரும்பு சத்தும், கால்சியம், வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாது உப்புகளும் இருக்கு. புளியங்கொட்டையில் மாவுச்சத்தும், ஆல்புமினும், கொழுப்பு சத்தும் உண்டு. புளியங்கொட்டையை வறுத்து தோல் நீக்கி உப்பு தண்ணில ஊற வெச்சு சாப்பிடுவோம். சின்ன வயசு ஸ்னாக்ஸ்ல இதும் ஒன்னு.
புளிய இலையின் பயன்கள்...
இது வயிற்றை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியா செயல்படுது. புளிய இலை சித்த மருத்துவத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுது. இரைப்பை பிரச்சனை, செரிமான பிரச்சனைக்கும் இதயத்துடிப்பை பாதுகாக்கவும் இவ்விலை பயன்படுது. புளிய இலையை தேனீராக்கி குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். புளிய இலைகளை காஃபி கொட்டையோடு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும். இந்த காபி குழந்தைகளின் வயிற்றிலுள்ள பூச்சியை அழிக்கும். புளியங்கொழுந்துடன் துவரம்பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
புளியின் பயன்பாடு...
உணவுக்கு ருசியூட்டும் அதேவேளையில் மலமிலக்கியாகவும் பயன்படுது. கெட்டியாக கரைத்த புளிதண்ணியில் உப்பு, செம்மண் சேர்த்து பற்றுப்போட ரத்தக்கட்டு கரையும். புளித்தண்ணியோடு சுண்ணாம்பு கலந்து குழப்பி இளம்சூடாய் பற்றுப்போட தேள் விசம் இறங்கும். புளியம்பூக்களை துவையல் செய்து சாப்பிட்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.
நல்லதுலயும் ஒரு கெட்டது...
அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல என்னதான் மருத்துவ குணம் அதிகமிருந்தாலும் வயிற்றில் அமிலத்தன்மையை சுரக்க வைக்கும் கெட்ட குணமும் இதற்குண்டு. ரத்தத்தை சுண்ட வச்சிடும்ன்னு எங்கூர் பக்கம் சொல்வாக. அதனால புளிப்பு தூக்கலா இல்லாம பார்த்துக்கோங்க. இப்ப நாம யூஸ் பண்ணுற புளிய விட குடம் புளி நல்லது. இதைதான் கேரள மக்கள் அதிகம் யூஸ் பண்ணுவாங்க.
முன்னலாம் எங்காவது ஊர்பயணம் போகும்போது எடுத்துக்குற சோத்துமூட்டைல புளிசாதம்தான் முதல்ல இருக்கும். இதுக்கு மிக்சர், சிப்ஸ், அப்பளம்லாம் தொட்டுக்கிட்டா செம. இது எதுமே இல்லாட்டி புளிசாதத்துல இருக்கும் மிளகாயை கடிச்சுக்கிட்டாலும் செமயா இருக்கும். மூணுவேளை தின்னாலும் உடம்புக்கு ஒன்னும் பண்ணாது.
என்னதான் நம்ம வீட்டுல புளிசாதம் செஞ்சு சாப்பிட்டாலும் கோவில்ல கொடுக்கும் புளிசாதத்துக்கு தனி ருசி அதிகம். அது சாமி பிரசாதம்ங்குறதாலன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம்தான் இதன் செய்முறைய தெரிஞ்சு செஞ்சபோது கோவில் டேஸ்ட் வீட்டுலயே....
இனி கோவில் புளிசாதம் செய்யும் முறையை பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்..
புளி,
எண்ணெய்,
கடுகு,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு,
தனியா,
மிளகு,
வெந்தயம்,
எள்,
காய்ந்த மிளகாய்,
உப்பு,
பெருங்காயம்,
மஞ்சப்பொடி,
வெல்லம்.
உப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்சு ஆற வெச்ச சாதம்.
புளியை ஊற வச்சுக்கோங்க... புதுப்புளியா இல்லாம பழைய புளியா இருந்தா நல்லது. புளி ஊறினதும் கரைச்சு ஓடு, நார் இல்லாம வடிகட்டிக்கோங்க..
வெறும் வாணலி சூடானதும் எண்ணெய் இல்லாம ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்துக்கோங்க.
அடுத்து தனியாவையும் வறுத்து எடுத்துக்கோங்க.
அடுத்து மிளகை வறுத்துக்கோங்க....
அடுத்து மிளகாயை வறுத்து எடுத்துக்கோங்க.. அப்படியே எள்ளையும் வறுத்தெடுத்துக்கொங்க. நான் படமெடுக்க மறந்துட்டேன். நீங்க மறந்துடாதீக.
வறுத்த பொருட்கள்லாம் ஆறினதும் பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா தூளாக்கிக்கோங்க...
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலையை வறுத்துக்கோங்க. வசதி இருக்கவங்க முந்திரிப்பருப்பு சேர்த்துக்கலாம்.
வாணலி சூடானதும் எண்ணெய் ஊத்திக்கோங்க.
கடுகு போட்டு வெடிக்க விடுங்க...
கடுகு வெடிஞ்சதும் காய்ஞ்ச மிளகாயை போடுங்க...
மிளகாய் சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க...
கரைச்சு வெச்ச புளியை ஊத்துங்க...
மஞ்சப்பொடி சேருங்க..
உப்பு சேருங்க...
பெருங்காயம் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க...
மாமியார் மாமனார்க்கிட்ட கோவிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போகும் பொண்ணுபோல எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்துல வெல்லத்தை சேர்த்து இறக்கிடுங்க. வெளில இருந்தாலும் பத்து நாள் வரை இந்த குழம்பு தாங்கும். பொடி ரெண்டு மூணு மாசம் வரை தாங்கும்.
ஆறின சாதத்துல முதல்ல வறுத்த பருப்புகளை சேர்த்து எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி கிளறுங்க. அடுத்து பொடி சேர்த்து எல்லா இடத்துயும் இருக்குற மாதிரி கிளறி கடைசியா புளிக்குழம்பை ஊத்தி கிளறுங்க.. தேவைப்பட்டா கொஞ்சம் ந. எண்ணெய் சேர்த்துக்கலாம். எண்ணெயை சூடு செய்யனும்ன்னு அவசியமில்ல.
கமகமக்கும் கோவில் புளிசாதம் ரெடி. இந்த வாசத்துக்கு கடவுளே நம்ம வீட்டுக்கு வருவார். அப்படியும் வரலியா?! நாலு பேருக்கு இந்த சாதத்தை கொடுங்க. அப்ப கண்டிப்பா வருவாரு..
நன்றியுடன்,
ராஜி.
புளி தேவை தான்! அதுக்குன்னு, புளியில் முனைவர் பட்டம் வாங்கிணவாளுக்கே தெரியாத இவ்வளவு விஷயமா..!? அழகர் கோவில் புளி சாதம் சாப்பிட்டதுண்டா? பேஷா, நொம்ப நன்னா இருக்கும்!
ReplyDeleteஇங்கு சிலர் புளி நன்றாக விளைந்தால் அந்த வருடம் மழை இருக்காது என்கிறார்கள். இங்கு இரண்டு வருடங்களாக நல்ல விளைச்சல். புளி ஓட்டோடு ஒட்டாத தன்மைக்கான சொலவடை அழகு.
ReplyDeleteசிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது புளியங்காய் அப்புறம் புளியம்பழம்பொருக்கி எடுத்துக் கொண்டுபோய் வகுப்பில் வைத்துச் சாப்பிட்டதுண்டு!
ReplyDeleteமிளகு சேர்ப்பதுதான் கோவில் புளியோதரையில் முக்கியமான மாறுதல் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபுளிக்காய்ச்சல் நம்ம வீடுகளில் அடிக்கடிச் செய்வது ராஜி. புளிக்காய்ச்சல் ரெடியா இருக்கும் எப்ப வேணா கலந்துக்கலாம்.
ReplyDeleteஉங்க படங்கள் விளக்கம் எல்லாம் சூப்பர்.
புளியம் பழம் பள்ளி நாட்க்ளில் நிறைய சாப்பிட்டதுண்டு காயும் கூட.
இப்ப கூட சென்னைல வீட்டருகே புளிய மரம் உண்டு அங்கு புளியம் பழம் கீழ ஓட்டோடு விழுந்து கிடக்கும். சில சமயம் பொறுக்குவதுண்டு. ஹிஹிஹி..
கீதா
எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த புளி சாதம் வைப்பார்கள். பிறந்தஊர் கும்பகோணம் என்ற நிலையில் இளமைப்பருவத்தில் பல கோயில்களில் புளி சாதத்தை பிரசாதமாக ஏற்றதால் இன்னும் அதன்மேல் உள்ள ஆசை குறையவில்லை.
ReplyDeleteஇதை விட ஈசியாகவும் செய்யலாம்..எந்தக் கோவில் புளியோதரை பிடிக்குமோ அந்தக் கோவிலில் சாமி கும்பிட்டு பின் கோவில் பிரசாதக் கடையில் பாட்டிலில் கிடைக்கும் புளிகாய்ச்சலை வாங்கி வந்து வீட்டில் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம் :)..சும்மா ஜோக்கு...நன்றி
ReplyDeleteநம்ம வீட்டிலும் பிடிக்கும்.
ReplyDelete